குருவிகள் கூக்குரல் எழுப்பிட அந்த இன்னிசையை கேட்டுக் கொண்டே களைந்து எழுந்து அமர்ந்தாள் அனுக்ஷ்ரா. இப்போது எல்லாம் இந்த குருவிகளின் கானத்தில் தான் துயில் எழுகிறாள்.
அனு ஹர்ஷாவின் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது. இந்த ஒரு வாரமும் அவர்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து வரும் குருவிகளின் கீச் கீச் ஒலி அவளின் நாளை இனிமையாக்கியது என்பது உண்மையே.
அதில் உதட்டில் புன்னகை அரும்ப சோம்பல் முறித்தவள் அருகில் படுத்து உறங்கி கொண்டிருந்த ஹர்ஷாவை பாசம் பொங்க பார்த்து வைத்தாள். இந்த ஒரு வார வாழ்க்கையில் ஹர்ஷாவின் புதிய புதிய பரிமாணங்களை பார்க்கிறாள் அனு.
அவள் நினைவு ஒரு வாரம் முன்னே சென்றது. ஹர்ஷா அனு இருவருக்கும் முதல் இரவுக்கு குடும்பத்தினர் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
அனுவும் பயந்துக் கொண்டே தான் அறைக்கு வந்தாள். ஆனால் அங்கே ஹர்ஷாவின் அறை எந்தவித அலங்காரமும் இன்றி இருக்க அதிலே கொஞ்சம் நிம்மதி அடைந்த அனு உள்ளே வந்தாள். அங்கே மெத்தையில் அமர்ந்திருந்த ஹர்ஷா கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
அவள் வரும் அரவம் உணர்ந்த ஹர்ஷா, அறைக்குள் வந்த அனுவை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவன் “வாடா அனு” என்றான்.
மனதில் உள்ள பதற்றத்தை அனுவின் முகம் அப்பட்டமாக காட்டிட அவள் கையை ஹர்ஷா பிடிக்க அவள் கை வேர்த்து போய் இருந்தது. “என்னடா டென்ஷனா இருக்கா?” என வினவிட ‘ஆம்’ என்று தயக்கமாய் தலை ஆட்டினாள்.
மெலிதாக புன்னகைத்த ஹர்ஷா “என்னை பார்க்க அவ்ளோ பயங்கரமா இருக்கா என்ன?” என்று கிண்டலாய் கேட்டவன் அவளை சாதாரணமாக்க
“உனக்கு எப்போடா செமஸ்டர் எக்சாம்ஸ் வருது?” என்றான். அனுவும் “இன்னும் டென் டேஸ் இருக்கு ஹர்ஷா” என்றாள்.
“ஓஓ! ஓகேடி. எக்சாம்க்கு பிரப்பேர் பண்ணிட்டியா? புக்ஸ் எல்லாம் இங்க எடுத்துட்டு வந்துட்டியா?” என கேள்விகளை அடுக்க “ம்ம் ஓரளவு பிரிப்பேர் பண்ணிட்டேன். புக்ஸ் எல்லாம் நாம ஈவ்னிங் அப்பா வீட்டுக்கு போய்ட்டு வந்தோமே அப்பவே எடுத்துட்டு வந்துட்டேன்” என்று ஒப்பித்தாள்.
அதற்கு ஹர்ஷா “சரிடா! அப்புறம் இன்னொரு விஷயம். நமக்கு இன்னைக்கு மேரேஜ் ஆச்சுன்றதால எல்லாமே இன்னைக்கே நடக்கனும்னு எந்த கம்ப்பள்ஷனும் இல்லடி புரியுதா.
நீ உன் எக்சாம்ஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணு. நமக்குள்ள இதெல்லாம் அதுவாவே நடக்கட்டும். ம்ம் ஓகே தானேடா” என்று பரிவாய் கேட்க இந்த ஹர்ஷாவை அவ்வளவு பிடித்து தொலைத்தது அனுவிற்கு. எனவே அவளும் மகிழ்வுடன் சரியென்று சம்மதித்தாள்.
ஹர்ஷாவின் மனதில் ‘படிக்கின்ற பெண் மனதை கெடுக்க வேண்டாமே’ என்ற எண்ணம் ஓடிட அந்த இரவை இனிமையாக பேசி கழித்தனர் இருவரும்.
இந்த ஒரு வாரமும் நண்பர்கள் சொந்தகாரர்கள் வீட்டில் விருந்து என அமோகமாக செல்ல மீதம் இருந்த நேரத்தில் அனுவை படிக்க சொல்லி பாடாய்படுத்தினான் ஹர்ஷா. அதை செல்லமாக அலுத்துக் கொண்டாலும் அனு ஹர்ஷாவின் இந்த செய்கையை எல்லாம் ரசித்துப் பார்ப்பாள்.
இப்போதும் அதே போல் ஹர்ஷாவை அனு மெய்மறந்து ரசித்து கொண்டிருக்க “என்னடி நான் அவ்ளோ அழகா இருக்கனா என்ன? இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குற” என திடீரென கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட்டது அனுவிற்கு.
அனு ஹர்ஷாவை பார்த்த போதே விழித்துவிட்டான் ஹர்ஷா. இப்போது விழித்த அனு “ஆஆ.. நான் ஒன்னும் உங்களை பார்க்கலையே. சும்மா அ.. அங்க ஹான். குருவி சௌன்ட் ரொம்ப பிளசன்ட்டா இருந்தது. அதான் அதை கேட்டு கொஞ்சம் ரசிச்சிட்டு இருந்தேன்” என்று சமாளித்தாள்.
“ம்ஹூம்! அப்படியா!” என்று வாய்க்குள் சிரித்த ஹர்ஷா “நம்பிட்டேன்டி” என்றவனின் கண்கள் ‘நான் உன்னை நம்பவில்லை’ என்று சிரித்தது.
அதற்கு அழகாய் வெட்கப்பட்ட அனு “போங்க சும்மா கிண்டல் பண்ணாதீங்க. நான் குளிக்க போறேன்” என்று குளியல் அறைக்குள் புகுத்துக் கொண்டாள். அனு இந்த ஒரு வாரத்தில் அந்த குடும்பத்தில் ஒரு நபராகவே மாறி விட்டாள்.
எத்தனை பெண்கள் இந்த காலத்தில் அனுவை போல் இருக்கிறார்கள் என அவளை நினைத்து சிரித்துக் கொண்டே எழுந்து அமர்ந்த ஹர்ஷாவின் மனம் நிறைவாய் இருந்தது.
ஹர்ஷா அனு இருவரும் கிளம்பி கீழே வர அவர்கள் ஜோடி பொருத்தத்தை கண்டு பூரித்த பார்வதி அவர்களை இன்முகத்துடன் பார்த்தார். ஹர்ஷா சென்று ஷோபாவில் விக்ரம் அருகில் அமர்ந்து கொள்ள அனு பார்வதியை நோக்கி சென்றாள்.
அங்கே உம்மென்று அமர்ந்திருந்த விக்ரமை விசித்திரமாக பார்த்த ஹர்ஷா “என்னடா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி சோகமா உக்காந்து இருக்க. ஏதாவது பிரச்சினைல மாட்டிக்கிட்டியா?” என்று அக்கறையாக வினவ
அவனை முறைத்த விக்ரம் “ஏன்டா நான் சும்மா இருந்தா கூட பிரச்சினையில இருக்கேன்னு தான் நினைப்பியாடா” என்றான் ஆதங்கமாய்.
“பின்ன என்னடா எங்க போனாலும் பிரச்சினையில வான்ட்டட்டா போய் மாட்டுறது நீதானே. என் மேரேஜ் அப்போ கூட எனக்கு வந்த பாலை நீ குடிச்சு பிரச்சினைய இழுத்து வைக்கல” என்று நக்கலாக கேட்டான் ஹர்ஷா.
அதில் மேலும் நொந்து போன விக்ரம் “ஏன்டா நீயுமா? உன் தம்பி செய்றது பத்தாதுன்னு நீயும் இப்படி செஞ்சா எப்படிடா?” என்றான் பாவமாய். ஏனெனில் அபி அந்த வீடியோவை வீட்டு நபர்கள் அனைவரின் எண்ணுக்கும் அனுப்பி வைத்துவிட்டான்.
அதை பார்த்த ராஜசேகரே “ஏன் விக்ரம் நீ உண்மையாவே ஹர்ஷாவ லவ் பண்றியா என்ன?” என்று அதிர்ந்து கேட்டுவிட, மற்றவர்களை பற்றி கேட்கவும் வேண்டுமா! விக்ரமை கதற வைத்து விட்டனர். அதுவே அவன் சோகத்திற்கு முழுமுதற்காரணம்.
விக்ரமின் பாவமான முகத்தை பார்த்து “சரி விடுடா” என்ற ஹர்ஷா “இப்போ என்னாச்சுன்னு இப்படி கப்பல் கவுந்த மாதிரி தலைய தொங்கப் போட்டுட்டு உக்காந்து இருக்க. அதை முதல்ல சொல்லுடா?” என்று வினவினான்.
அப்போது வந்த அபியை முறைத்த விக்ரம் “இந்தா வரான்ல உன் உடன்பிறப்பு அவனால வந்த வினைடா. அவன் எதுக்குடா அந்த வீடியோவை வீட்ல இருக்க எல்லாருக்கும் அனுப்புனான்” என்று அபியின் மீது பாய்ந்தான்.
அதை தூசு போல் தட்டிவிட்ட அபி “அத்தை இன்னைக்கு என்ன டிபன்?” என்று கத்தினான். பார்வதி என்ன உணவென்று கூற “ஓஓ சூப்பர் அத்தை!” என்று மீண்டும் கத்தி சொன்னவன் விக்ரமிடம் திரும்பி “ஆமா என்னமோ பேசிட்டு இருந்தியே அத்தான். என்ன பேசுன?” என்றான் ஒன்றும் அறியாதது போல்.
அதில் விக்ரம் கடுப்பாக ஏதோ பேசிவர ஹர்ஷா முந்திக் கொண்டு “அபி ஏன்டா! கொஞ்சம் சும்மா இரேன்டா” என்றுவிட்டு விக்ரமை பார்த்து “விடுடா அவன் சின்ன பையன்டா” என்றான். அதற்கு “ஆமா பச்சை பிள்ளை” என வாய்க்குள் முனகிய விக்ரம் அமைதி காத்தான்.
அதேநேரம் அபியிடம் திரும்பிய ஹர்ஷா “என்ன அபி அதை யார் செஞ்சாங்கன்னு தெரிஞ்சுதா?” என்று கேட்டான். அபி அதற்கு “இல்லை” என சோகமாக தலை அசைத்தான். பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ஹர்ஷா “ம்ம் விடுடா பார்த்துக்கலாம்” என்றுவிட்டான்.
ஆம் அன்று மருத்துவமனையில் ஹர்ஷா அனுப்பிய சாம்பிலை அவர்கள் ஆய்வு செய்து மறுநாளே அதில் போதை மருந்து கலந்திருந்ததை சொல்லிவிட்டனர்.
திருமணம் அதன் பின்னான வேலைகளில் அதை யார் தந்தது என பிறகு கண்டுபிடித்து கொள்ளலாம் என தள்ளிப்போட்டுவிட்டு இப்போது இரண்டு நாட்களாக தான் அதன் முயற்சியில் இறங்கினர்.
எனவே அபி அங்கே திருமணம் மற்றும் முதல் நாள் ரிஷப்ஷனில் நடந்த நிகழ்வுகளின் வீடியோக்கள் புகைப்படங்களை புகைப்பட கலைஞரிடம் சென்று வாங்கி வந்துவிட்டான். ஆனால் சாட்சி சொல்ல வேண்டிய அந்த சமையல் நபரோ ஆளை காணவில்லை.
முதல் நாள் மண்டபத்தில் இரவு நடந்த நிகழ்வுகளை அங்கே இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியலாம் என மண்டபம் சென்றதில் அந்த இரவு நடந்த எல்லா நிகழ்வுகளும் கேமராவில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. ராம் தான் அதை அடுத்த நாளே ஆட்களை வைத்து அழித்து விட்டாரே!
இதில் அதிகம் குழம்பி போன அபி அதை ஹர்ஷாவிடம் கூறிவிட அவனுக்கு ‘ஒருவேளை அந்த கொலை சம்பவத்திற்கும் இந்த நிகழ்விற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ’ என காரணமே இல்லாமல் அவன் உள்மனம் கூறியது.
அது ஏன் என அவனுக்கும் சுத்தமாக புரியவில்லை. ஆனால் அதை அப்படியே விடவும் அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் அந்த சமையல் நபர் கிடைத்தால் தான் ஏதாவது தெரியவரும் என்பதால் என்ன செய்வது என யோசித்த ஹர்ஷா இதை அப்படியே அந்த கொலை முயற்சி வழக்கை விசாரிக்கும் ஏ.சிக்கு தெரியப்படுத்தி விட்டான்.
ஆனால் இதை வீட்டினர் யாரிடமும் அவன் பகிர்ந்து கொள்ளாது மறைந்தான். அவர்களை பயம்முறுத்த வேண்டாம் என தன் மனதிற்குளே வைத்துள்ளான்.
தன் யோசனையில் இருந்து வெளிவந்த ஹர்ஷா இன்னும் சோகமாக அமர்ந்திருந்த விக்ரமை கண்டு வந்த புன்னகையை அடக்கியவன் “இன்னும் என்னடா?” என்றான்.
அதற்கு “ஒன்னும் இல்லடா. எனக்கே என்னை நினைச்சு ஒரு மாதிரி இருக்குடா. நானா அப்படி பேசுனேன்னு” என்று வருத்தப்பட “ஹைய்யோ என்ன விக்ரம் அத்தான் நான் என்னமோ உன்னை பெரிய டான் ரேஞ்சுக்கு நினைச்சா நீ என்ன இதுக்கே இப்படி சொங்கி மாதிரி ஆகிட்ட.
விடு அத்தான்! நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே. நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு நம்மல பத்தி நல்லா தெரியும். நீ சும்மா போதைல உளறினதை யாரும் தப்பாலா எடுத்துக்கலை” என்று சமாதானப்படுத்தினான்.
ஹர்ஷாவோ ‘என்னடா இது என் தம்பியா இப்படி பேசறது?’ என சந்தேகமாக பார்க்க அபி தொடர்ந்தான் “நீ எவ்ளோ நல்லவன் தெரியுமா. இப்போ உன் தங்கச்சியை நான் அவுட்டிங் கூட்டிட்டு போனாக்கூட நீ எதுவும் சொல்ல மாட்ட.
அதுவும் எனக்கு தெரியும். ஏன்னா நீ ரொம்ப ரொம்ப நல்லவன் விக்ரம் அத்தான்” என்று நல்ல பிள்ளை போல் சொல்லி முடித்தவன் அம்முவை நோக்கி சென்றான். ‘அதானே! என் தம்பியாவது விக்ரம் கிட்ட நல்லா பேசறதாவது’ என நினைத்த ஹர்ஷாவும் சிரித்துவிட்டான்.
அந்த சத்தத்தில் திரும்பிய விக்ரம் “ஏன்டா! உன் தம்பி திருந்தவே மாட்டானா?” என்று ஆதங்கமாக பேச “வாய்ப்பில்லை ராஜா! வாய்ப்பில்லை” என்ற சத்தம் அபியிடம் இருந்து வந்தது.
“டேய்..! பக்கி” என கடுப்பில் விக்ரம் கத்த “அத்தை நானும் அம்முவும் அவுட்டிங் போறோம். சோ வெளிய சாப்டுக்கிறோம். பாய்!” என கத்தியபடி அம்முவை இழுத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
அம்முவும் “பாய் ம்மா! நான் அபி அத்தான் கூட அவுட்டிங் போறேன். பாய் ண்ணா!” என் விக்ரமை அவள் பங்கிற்கும் வெறுப்பேற்றி விட்டே சென்றாள்.
இதையெல்லாம் நொந்து பார்த்த விக்ரம் “டேய் நானும் சீக்கிரமே ஒரு பொண்ணை உசார் பண்ணி கூட்டிட்டு வந்து உன்னை வெறுப்பேத்துறேன்டா. இது எங்க ஆத்தா பார்வதி மேல சத்தியம்டா” என்று கத்தி சபதமே போட்டு அமர்ந்தான். அந்த நிமிடம் ததாஸ்து தேவதைகள் ‘அப்படியே ஆகட்டும்’ என்றனர் போல்.
ஆனால் என்ன ஒன்று விக்ரம் தான் அவன் காதல் வயப்படப் போகும் பெண்ணிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தை படப்போகிறான் என அவன் அப்போது அறியவில்லை பாவம்.
பார்வதியோ “நான் என்னடா பண்ணுனேன். எதுக்கு எம் மேல சத்தியம் செஞ்ச” என்று அதிர்ந்து போய் கேட்க அதை கண்டுக் கொள்ளாது “எம்மா டிபன் வைமா” என உண்ண அமர்ந்துவிட்டான் விக்ரம். இவர்கள் ரகளையை வீட்டில் இருந்தவர்கள் சிரிப்புடன் பார்த்துவிட்டு உணவை உண்ண அவர்களும் சென்றனர்.