அப்படி அந்த புதையலை அந்த புண்ணியவான் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என அங்கிருந்தவர்கள் எல்லாரும் மண்டையை பிய்த்து கொள்ள, “எனக்கு ஒரு ஐடியா இருக்கு” என்று சொல்லி எல்லோர் மனதிலும் லிட்டர் கணக்கில் பாலை ஊற்றினாள் வீரா.
“என்ன ஐடியா வீரா பாப்பா”
புதையல் அப்படி எங்க தான் போனதோ என ஆர்வத்தில் கண்ணாத்தா பேய் ஆளுக்கு முன் கேட்க,
“இருங்க பாட்டி சொல்றேன்” என கிழவியை ஆஃப் செய்து வீரா முன்னே சென்று அந்த அறையை சுற்றி பார்த்தாள்.
“இந்த ரூம்ல உள்ள எல்லா இடத்தையும் நாம சுத்தி பார்த்துட்டோம், நாம பாக்காத இடம் எது சித்து” ஓரத்தில் நின்ற சித்துவிடம் வீரா கேட்க
“எல்லா இடத்தையும்தான் நாம சுத்தி பாத்துட்டோமே, வேற எதை வீரா கேக்குற” அயர்ந்து போன குரலில் சொல்லி நின்றான் சித்து.
“இல்ல சித்து இங்க நாம பாக்காத சில இடம் இல்லை சில பொருள் இருக்கு. நான் போய் அந்த சிலைல எதாவது இருக்கான்னு பாக்குறேன், நீங்க அந்த பெட்ல எதாவது இருக்கான்னு பாருங்க சித்து” என்றவாறு முன்னேறிய வீரா அந்த சிலைகளை சுற்றி சுற்றி பார்த்தாள் அதில் ஏதேனும் இருக்கிறதா என்று.
அவர்கள் பார்க்காத அந்த சில பொருட்கள் இதுதானே. அதை உணர்ந்த சித்துவும் பெட் போன்று இருந்த அந்த இடத்தை திறக்க முடிகிறதா என்று பார்த்தான். கையை வைத்து தடவி தடவி பார்த்தவனுக்கு அதன் அடியில் ஒரு ஓரத்தில் என்னவோ கையில் தட்டுபட அதை அழுத்து பார்க்க ஒன்றும் ஆகவில்லை. சரி இழுத்துதான் பார்க்கலாமே என அதை சித்து இழுத்ததில், பழைய இரும்பு பீரோ கதவை திறக்கும் சத்தம் ஒன்று கேட்க பெட்டின் டாப் தனியாக அசைந்தது.
அப்போதுதான் சித்துவுக்கு புரிந்தது அது பெட் இல்லை அந்தகால பொட்டியென. ஆனால் அவனால் ஒற்றையாக இழுக்க முடியவில்லை, மிகவும் ஸ்ட்ராங்காகவே இருந்தது அந்த பெட்டி. துணைக்கு மாதவன் சங்கர் என இருவரையும் அழைத்து மூவரும் சேர்ந்து அந்த சங்கிலியை இழுக்க, இப்போது அந்த பெட்டி முழுவதுமாய் திறந்துக் கொண்டது.
பெட்டி திறந்ததும் ஆர்வமிகுதியில் எட்டி பார்த்த கண்ணாத்தா மற்றும் அரவிந்துக்கு விட்டால் கண் ரெண்டும் வெளியே தெரித்துவிடும் போல் விரிய, அதிலேயே மற்றவர்களுக்கு புரிந்து போனது உள்ளே புதையல் இருக்கிறதென.
“ஹப்பாடா புதையல் கிடைச்சிருச்சு” பெரும் மகிழ்வுடன் இப்போது எட்டி பார்த்த மற்ற மூவரும் உள்ளே இருந்தவற்றை கண்டு பயத்தில் தானாகவே இரண்டடி பின்னால் நகர்ந்தனர்.
“வீரா ஏய் உள்ள எலும்புக்கூடா கெடக்குதுடி”
அரண்டு போய் சித்து அலறினான். சித்து சொன்னது உண்மையே அந்த பெட்டியினுள் எலும்புகள்தான் கிடந்தது. அதை வந்து பார்த்த வீராவுக்கும் ஒரு மாதிரி ஆக அப்படி பின்னால் நகர்ந்து விட்டாள்.
“இதுக்குள்ள எப்படி எலும்பு வந்தது. எந்த கூமுட்டியாவது இந்த பெட்டியில படுத்து தூங்கி, ஒரேதா தூங்கிட்டானா. என்னடா இது விசித்திரமா இருக்கு”
சித்து பயத்தில் பினாத்திதள்ள கண்ணாத்தாவின் முகத்தில் இந்த கேள்விக்கான பதில் தெரிந்ததைப்போல் ஒரு ஒளி வந்தது. அதை கவனித்துவிட்ட வீரா “பாட்டி உங்களுக்கு இங்க என்ன ஆச்சுன்னு தெரியுமா” என்றாள்.
“தெரியுந்தான்னு நினைக்கிறேன் கண்ணு. இந்த பொதையல வச்ச ஆளு இந்த எடத்தை யாரும் கண்டுப்புடிக்க கூடாதுன்னு என்னவோ உயிர்பலி தந்து இந்த எடத்துக்கு காவலு வச்சதா என் மாமனாரு சொன்னாரு, ஒருவேள அது இதுவா இருக்குமோ. இந்த எலும்ப பாத்தாலும் எதோ மிருகத்தோட எலும்பு மாரிதேன் தெரியுது”
சந்தேகத்துடன்தான் கண்ணாத்தாவும் சொல்லி நிறுத்தியது. நடந்ததும் கூட அதுவே, அப்படி அந்த ஆள் வைத்திருந்த காவலாலே பல உயிர்கள் அந்த கிணற்றுக்குள் பலியாகிதும்.
“அ…அப்ப நாம சூன்யகார பேமிலியா நைனா”
அந்த எலும்புகளை பார்த்த அதிர்ச்சியில் அடிவாங்கிய ஆந்தைப்போல் சித்து கேட்டு வைக்க “ச்சே ச்சே நாம ராயல் பேமிலிடா. ஜமீன்தார் வம்சம்” என்றார் அப்போதும் அரவிந்த் பெருமிதத்துடன்.
அரவிந்தின் பதில் வந்தவுடன் டக்கென தலையை திருப்பி அவரை பார்த்த சித்து “யோவ் நைனா வாயில அசிங்க அசிங்கமா வந்திரும் சொல்லிட்டேன். இவ்ளோ பிளேஸ் பேக்கு, இந்த குகை, அந்தா அங்க இருக்குதே எலும்புக்கூடு இதை எல்லாத்தையும் பாத்தும்கூட எவ்ளோ தைரியமா பெருமை பீத்தற. தயவு செஞ்சு வாய மூடிறு, இல்ல கொலகாரனா மாறிருவேன்” வெறி வந்தவன் போல் அரவிந்தை கொதறி எடுத்து அமைதியானான் சித்து.
“ம்க்கும் உண்மைதான்ங்க சித்து. நானும் பாத்தாலும் பாத்தேன் இப்புடியொரு குடும்பத்த என் வாழ்க்கையில பாத்ததே இல்ல. சரியான சூனியக்கார குடும்பம். என்ன பண்ணி தொலைக்க நானும் இந்த குடும்பத்துல பொறந்து தொலைச்சிடுடேனே, இதெல்லாம் வெளியே கூட சொல்ல முடியாது. எவனாவது கேட்டா கேவலமா காரி துப்புவானுங்களே”
தலையில் அடித்துக் கொண்டு மாதவன் ஒருபுறம் புலம்பி தள்ளினான்.
இவர்களின் இந்த சலசலப்பை டீலில் விட்ட வீரா அந்த சிலைகளில் எதாவது கிடைக்குமா என மீண்டும் தேட சென்றாள். சில நிமிடங்களின் தேடலுக்கு பிறகு எல்லா சிலைகளிலும் ஒரு ஒற்றுமை இருப்பதை வீரா கவனித்தாள். உடனே சித்துவை அருகே அழைத்தவள்,
“சித்து இந்த சிலைலா எதோ ஒரே பேட்டரன்ல இருக்க மாதிரி இல்ல” வீரா சொன்னதை கேட்டு அந்த ஆறு சிலைகளையும் பார்த்த சித்துவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்ற வீரா எனக்கு எதுவும் புரியலையே” தலையை சொறிந்தபடி சித்து கேட்கவும், அவன் பொடனியிலே ஒன்று போட்ட அரவிந்த்
“உனக்கு என்னதான்டா புரிஞ்சிருக்கு புத்தியில்லாதவனே. எனக்கு புள்ளைன்னு பொறந்திருக்க பாரு, வாய மூடிட்டு என்ற மருமவ எதுவோ கண்டுபுடிச்சிருக்கா அதை மட்டும் கவனி” என்றார்.
அரவிந்த் சொன்னதில் உடன்பாடு இல்லை என்றாலும் வீரா சொன்னதை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தான் சித்து.
“இங்க பாருங்க சித்து இந்த ஆறு சிலைலையும் அந்த கை சிம்பல் வர மாதிரி ஐஞ்சு சிலைல ஐஞ்சு விரல், ஆறாவது சிலைல உள்ளங்கை மாதிரி இருக்கு பாருங்க. ஒருவேளை இதை எல்லாம் ஒன்னா சேர்த்தா எதாவது நடக்கலாம்” என்று சொன்ன பின்னரே அதை மற்றவர்கள் கவனித்தனர்.
வீரா சொன்னதைப்போல் ஆறு சிலைகளையும் இணைத்தால் அந்த கை சிம்பல் வருமாறு அந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
“சித்து மாதவன் சங்கர் நீங்க மூனு பேரும் அந்த சிலைய நகத்தி பாருங்க. சித்து முன்னாடி நீங்க அந்த சிலைல இருந்த கைய கால தானே அசைச்சீங்க, என் கெஸ் கரெக்ட்னா இப்ப அந்த சிலைய முழுசா நகத்துனா எல்லாம் கண்டிப்பா நகரும்னு எனக்கு தோனுது”
வீரா சொன்னதில் இருந்த பாயிண்டை கேட்டு சரியென தலையசைத்த மற்ற மூவரும் ஆளுக்கு ஒரு சிலையை பிடித்து நகர்ந்த, என்னே அதிசயம் வீரா சொல்லியதைப்போல் அந்த சிலைகள் எல்லாம் அழகாய் நகர்ந்தது.
மூவரும் அந்த ஆறு சிலைகளையும் நகர்த்தி அந்த கை சிம்பல் வரும்படி ஒன்றாய் வைக்க, “சித்து அந்த கை சிம்பல்ல உங்க கைய வைச்சு அழுத்தி பாருங்க எதாவது நடக்குதான்னு” என்றாள் வீரா.
சித்துவும் கையை வைத்து மெல்ல அழுத்த அந்த கை அப்படியே கீழே இறங்கியது. அந்த சிலைகளுக்குள் கற்கள் நகருவதைப்போல் எதுவோ மாறும் சத்தம் கேட்க, இப்போது அந்த சிலைகள் தானாக பின்னால் நகர்ந்துவிட அந்த சிலைகளுக்கு நடுவே ஒரு கதவு திறந்தது.
அங்கே நடப்பதை எல்லாம் வாயை பிளந்து அவர்கள் அனைவரும் பார்த்து வைக்க, இந்த சிலைகள் நகர்ந்ததில் கிளம்பிய புகை எல்லாம் மெல்ல மெல்ல அடங்கி அந்த இடம் அனைவரின் கண்களுக்கும் தெரிய சிறிது நேரமானது. இப்போது உள்ளே எட்டிப்பார்த்த எல்லோரும் ஆவென்று ஆச்சரியத்தில் வாயை பிளந்துவிட்டனர்.
ஏனெனில் கிட்டத்தட்ட ஐந்தடி அகலத்தில் இருந்த அந்த பெட்டியினுள் தங்கம் வைரம் வைடூரியம் என வகைவகையாய் கலர்கலராய் நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் என அந்த பெட்டி முழுவதும் நிரம்பி இருக்க அங்கே நின்றிருந்த ஒருவரின் வாய் கூட மூடவில்லை. இவ்வளவு ஏன் எப்போதும் லொடலொடவென பேசும் நம் கண்ணாத்தா பேய் மற்றும் அரவிந்த் கூட திறந்த வாய் மூடாது பார்த்து நிற்க, அனைவரையும் சுயத்திற்கு வரவைத்தாள் வீரசுந்தரி.
“ஒரு நிமிஷம் வானத்துல பறக்குற எல்லாரும் மறுபடியும் கொஞ்சம் பூமிக்கு வந்தீங்கனா ரொம்ப நல்லாருக்கும்” மிகமிக எல்லளாகதான் வீரா சொன்னது.
ஆனால் அதை எல்லாம் சிறிதும் கண்டுக்கொள்ளாத சித்து “ஆனா நைனா அந்த முன்னோர் மூளைய மியூசியத்துல தான் வைக்கனும். பாரேன் அந்த ஆளை தவிர வேற எவனும் இந்த புதையல எடுக்கக்கூடாதுன்னு பிளான் பண்ணி புதையல மறைச்சு வச்சிருப்பான் போல. எவ்ளோ டுவிஸ்டு டர்ன்ஸ்” நெஞ்சை பிடித்தவாறு சித்து இவ்வளவு நேரம் நடந்த நிகழ்வுகளை வைத்து புலம்ப, அவன் சொன்னதுதான் நடந்த உண்மையே என யாருக்கு தெரியப்போகிறது.
“அது என்னவோ உண்மைதான் மவனே! ஆனாலும் என்ற மருமவ இல்லாம போயிருந்தா இந்நேரம் நீ அந்த கத்தியில குத்து வாங்கி செத்து என்னோட பரலோகம் வந்திருப்படா”
அரவிந்த் அவர் மகனை வாரிவிட்டதில், சித்து அவரை முறைத்துக் கொண்டு சண்டைக்கு போக “தயவு செஞ்சு ரெண்டு பேரும் அப்படியே அமைதி ஆகிருங்க” என ஆரம்பத்திலே ஆப் செய்துவிட்டாள் வீரா.
“இதுக்கு மேல நாம இங்க இருக்கிறது ஆபத்துனு எனக்கு தோனுது. உள்ள இருக்க நகை எல்லாத்தையும் சீக்கிரம் வெளிய எடுத்து அங்க இருக்க பாக்ஸ்ல போடுங்க. நாம சீக்கிரம் வெளிய போயே ஆகனும்”
வீரா அழுத்தம் திருத்தமாக சொல்லி நிறுத்த அங்கிருந்த மற்றவர்கள் அவள் சொன்னபடி வேகவேகமாக நகைகளை வெளியில் இருந்த பெட்டிக்குள் எடுத்து போட்டனர்.
ஒரு குண்டு மணி தங்கத்தை கூட உள்ளே விடாது சுத்தமாய் வழித்து போட்டு ஒருமுறைக்கு இரண்டு முறை கண்பார்ம் செய்த பின்னரே சித்துவின் கேங் வெளியேறியது.
ஆளுக்கு ஒரு பெட்டியாக தம் கட்டி ஆண்கள் மூவரும் தூக்கிகொண்டு போக, இன்னொரு பெட்டியை அரவிந்த் ஏறில் பறக்க வைத்துக் கொண்டு வந்தார். மற்ற பெட்டிகளையும் பறக்க வைத்தே கொண்டு வந்திருக்கலாம், ஆனால் அந்த அளவு மசாலா எல்லாம் நம் அரவிந்தின் மூளைக்குள் எதிர்ப்பார்க்க முடியுமா.
அனைத்தையும் அள்ளிப்போட்டு மற்றவர்கள் இருந்த குகையின் எண்ட்ரன்சை அனைவரும் அடைய, போனவர்களை இன்னும் காணோமே என பயத்தில் இருந்த மற்றவர்களுக்கு இப்போதுதான் உயிரே வந்தது.
“அக்கா மாமா” அழுதபடி வந்து தங்களை கட்டிப்பிடித்த கதிரை அணைத்துக் கொண்ட சித்துவுக்கும் வீராவுக்கும் பயத்தில் அவன் உடல் உதறுவதை கண்டு பாவமாய் போனது.
சின்ன பையன் மிகவும் பயந்து விட்டான் என புரிந்து “ஒன்னும் இல்ல கதிர் அதான் நாங்க வந்திட்டோம்ல. பயப்படக் கூடாது என்ன” நல்ல மாமனாக சித்து ஆறுதல் தந்து அவனை தேற்றினான்.
“வாங்க எல்லோரும் கெளம்புவோம் இதுக்கு மேல இங்க இருக்கவே வேணாம்” சித்து அனைவரையும் கிளப்ப
“ஏன் அங்கிள் அந்த ஒரு பாக்ஸ நீங்க தூக்கிட்டு வரமாதிரி எல்லா பாக்ஸையும் நீங்களே தூக்கிட்டு வரவேண்டியது தானே”
அழுது தெளிந்த கதிர் தம்கட்டி மற்ற மூவரும் அந்த பெட்டியை தூக்கி நிற்பதை கண்டு அரவிந்திடம் சொல்ல, அதன்பின்னரே ‘அட ஆமால்ல அவரையை தூக்க வச்சிருக்கலாமே’ என்ற எண்ணம் மூளையை முட்டுசந்தில் விட்ட அந்த முட்டாள்களைக்கு தாமதமாகதான் தோன்றியது.
அதன்படி எல்லா பெட்டியையும் சூம்மந்திரகா என ஒரு நிமிஷத்தில் ஏறில் பறக்க விட்டு தன் வீட்டுக்குள் இறக்கிவிட்டார் மனிதர்.
“ஏய் கெழவி ரிட்டர்ன் போறதுக்கு ரொம்ப தூரம் ஆகும் எங்க எல்லாரையும் நீயே கூட்டிட்டு போ” என இப்போது அவர்கள் போக சித்து வழிசொல்ல, தன் முன்னால் இருந்தவர்களை பார்த்து முழித்தது கிழவி.
“அது நானே இந்த பொதையல எடுக்க வந்து சாபத்துல செத்துட்டனா. அதனால இந்த குடும்பத்து வாரிசு அப்புறம் அவனுக்கு துணைக்கு உள்ளவங்களை என்னால தொட முடியலை. அதேன் வாரப்பக்கூட இவனுங்கல ஆளு ஏற்பாடு பண்ணி உங்கல தூக்கியார சொன்னேன்” என கிழவி நிறுத்த
“அப்ப உன்னால என்னதான் கிழிக்க முடியும். பக்கம் பக்கம் வசனம் மட்டும் பேச முடியும்ல” சித்து பிடித்துக்கொண்டான் கிழவியை. அவன் பேசி முடித்த நேரம் புதையலை வீட்டில் சேபாக்கிய அரவிந்த் மீண்டும் இங்கு வந்து சேர்ந்தார்.
“நைனா இந்த பல்லு போன கெழவி எதுக்கும் யூஸ் ஆகாத வேஸ்டு பீஸா இருக்கு. நீ சீக்கிரமா எங்க எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ” வந்த தந்தையிடம் ஒன்னாங்கிளாஸ் பிள்ளைப்போல் ரிப்போர்ட் சித்து வாசிக்க
அரவிந்தும் அங்கே மூலையில் இருந்த கேசவன் முதற்கொண்டு அனைவரையும் அள்ளி கொண்டு போய் வீட்டில் சேர்த்த நேரம், அந்த ஆதவன் தன் வேலையை ஆரம்பிக்க பூமியினுள் நுழைந்திருந்தான். ஆக இரவு நேரம் முடிந்து அடுத்த நாளுக்கான விடியல் வந்திருந்தது. அது அந்த குடும்பத்துக்கான விடியலா பார்ப்போம்!