“ஏ மச்சா! அந்த பொம்மை பேய் எதுக்குடா இந்த இடத்தை சூஸ் பண்ணி இருக்கும். ஒருவேளை அது ஃபிரண்ட் பேய்க்குலாம் பார்ட்டி கீர்ட்டி எதுவும் வைக்கப்போவுதோ.
     ஆனா ஒன்னுடா அது பார்ட்டி பண்ணுதோ இல்லையோ நம்மல நல்லா வச்சு பண்ணுதுடா. ஏன்டா இந்த பொருளை எல்லாம் நாம முன்னாடி வரப்பவே எடுத்துட்டு வர சொல்லிருக்கலாம்ல. இல்ல அதால இதையெல்லாம் கொண்டார முடியாதா நம்மல ஏர்லையே பறக்கவிட்ட ஆளுதானே அது. இப்ப எதுக்குடா நம்மல இப்புடி பல மைல் நடக்க விடுது”
     சங்கர் தன் மனம் கேட்காமல் அவன் கையில் இருந்த பொருட்களை பார்த்து பொருமியபடி மாதவனுடன் அந்த குகைக்குள் வந்துக் கொண்டிருந்தான்.
     “நான் என்னத்தடா கண்டேன். நானும் உன்கூட தானே சுத்திட்டு இருக்கேன். அந்த பேய் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சா இந்நேரம் அதுக்கு டேக்கா குடுத்துட்டு நேக்கா ஊரைவிட்டு ஓடிருக்கமாட்டேன். கடுப்ப கெளப்பாம பேசாம வாடா”
     பேசியபடி இல்லை இல்லை புலம்பியபடி வாயிலை தான்டி உள்ளே இருவரும் வர, அப்போது தூரத்தில் மெல்ல சில குரல்கள் கேட்டது.
     “டேய் மச்சா, உன் குடும்பத்து ஆளுவ எல்லாம் முழிச்சிட்டாங்க போலடா எதோ பேச்சு சத்தம் கேக்குது” என்றான் சங்கர். இருவரும் உள்ளே வர வர சத்தம் சற்று வேகமாகவே கேட்டது.
     “சித்து தம்பி என்னப்பா நடக்குது நம்மல சுத்தி, நம்மள எதுக்காவ இங்கன கடத்தி கொண்டாந்து வச்சிருப்பானுவன்னு நினைக்கிறீய?”
     “தம்பி நம்மல கடத்துன கட்டலைப் போனவன் யாரா இருக்கும்யா. எப்புடியா இங்கன இருந்து வெளியே போறது”
     “தம்பி ஒருவேளை நம்ம மலைல பூதம் இருக்கு பொதையலு இருக்குன்னு பொறலி கெளம்புச்சே அதனால எதுவும், ஊருகார பயலுவ எவனாவது இந்த வேலைய பாத்திருப்பானுவலோ”
     “யாரா இருந்தாலும் என் கையில கெடைக்கட்டும் கொளவி கல்லுல தேங்காய நசுக்குற மாதிரி என் கையி இடுக்குல வச்சு அரக்கிப்புடுறேன். பெரிய குடும்பத்து மேலையே கைய வக்கிறானுவனா எவ்ளோ தெகிரியம் இருக்கனும்”
     கார்மேகம் மற்றும் அலமேலுவின் குரல்கள் மாற்றி மாற்றி கேட்க, பொம்மையின் இரண்டாவது டாஸ்க்கை முடிக்க சென்றிருந்த மாதவன் மற்றும் சேகர், உள்ளே வந்ததில் இவர்கள் காதில் இது எல்லாம் விழுந்து வைத்தது‌.
     “என்னலே உங்க ஆத்தா நம்மல கட்டைல போவ சொல்லுது. அந்த பேய் கையில சாவ முன்னாடி உன் அம்மா கையில சிக்கி செத்துருவோம் போலையேடா”
     சங்கர் பீதியுடன் பேசியபடி வந்தான். மாதவன் சொல்லவில்லை என்றாலும் அவன் முகத்திலும் ஒரு மரண பீதி இருக்கத்தான் செய்தது.
     கடத்தியவர்கள் யாரென தெரியும் முன்னாலே இவ்வளவு கொலை வெறியில் இருப்பவர்கள், கடத்தியது இந்த இரண்டு டம்மி பீசென தெரிந்தால் என்ன ஆகுமோ என பயந்திருந்தனர்‌. அதுவும் மாதவனுக்கு அவன் தந்தையை எண்ணி வயிற்றை கலக்கியது உண்மையே.
     ஊரார் சொத்துக்கு ஆசைப்படாத நியாயமான மனிதரான கார்மேகத்திற்கு அவர் பெத்த முத்தே தங்களை கடத்தியது என தெரிந்தால் பெல்ட்டை எடுத்து விலாசி விடுவாரே, அந்த பயமும் சேர்ந்தது. ஆனால் இதற்குமேல் பின்வாங்க முடியாதே. அப்புறம் பொம்மையிடம் இருவரும் வாங்கிகட்ட வேண்டும்  என்பது தெரிந்து‌ இருவரும் என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என முன்னேறி சென்றனர்.
     உள்ளே மாட்டி எப்படி வெளியே போவது என தெரியாமல் குழம்பிபோய் நின்றிருந்த அனைவருக்கும் கொஞ்சம் தொலைவில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் வந்ததில், அந்த வழியே உற்று பார்த்தனர்.
     எப்படியும் அவர்களை கடத்தியவர்களே வருவார்கள் என்ற நம்பிக்கையில் பார்க்க, நம் டூஸிடியட்ஸை கண்டதும் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு விதமாய் மாறியது. அதுவும் கார்மேகத்தின் முகம் ‌நாலு டாபர்மேனை அவுத்து விட்டதைப் போல் உர்ரென ஆகிவிட, அதை பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கிய படி வந்தான் மாதவன்.
     “ஏன்டா நாசமா போன எடுபட்ட பயலே! இது எல்லாம் உன் வேலதானா. உனக்கு இந்த சொத்துமேல அப்புடி என்னலே வெறி. அப்பைல இருந்து இந்த சொத்து பத்து மேல உனக்கு ஒரு கண்ணுதானல. அது முடிவுல இப்புடி வூட்டுல உள்ள எல்லாரையும் கடத்துற அளவு போயிட்டியா. நீயெல்லாம் வெளங்குவியாடா வென்னமவனே”
     அவன் உள்ளே வந்தும் வராததுமாய் கார்மேகம் அவன் மேல் பாய, ‘நானாயா நானா’ என மாதவனின் மனதிற்குள் இருந்த குழந்தை கையை காலை நீட்டி கதறி அழுக, வெளியே கரண்ட் அடித்த காக்கா போல் உரைந்து நின்றுவிட்டான் மாதவன்.
     “என்னலே நான் இந்த கத்து கத்துறேன் எதையோ முழுசா முழுங்குன மாதிரி அப்புடியே நிக்கிற”
     கோவத்தில் வெறி பிடித்ததுப்போல் கார்மேகம் மாதவனிடம் கத்திவிட்டு சங்கரிடம் திரும்பினார் “எலேய் சங்கரு இங்க என்னதான் நடக்குதுன்னு நீயாவது சொல்லி தொலைடா பைத்தியக்காரா”
     கார்மேகம் எவ்வளவு கத்தியும் மாதவனும் சங்கரும் பிடித்து வைத்த பிள்ளையாரை போலவே நின்றனர். இவர்கள் கலவரத்தில் கலக்காத சித்துவோ, என்றும் இல்லா திருநாளாய் இன்று தன் மூளையை உபயோகப்படுத்தினான்.
     ‘இவனுங்க ரெண்டு பேரையும் பார்த்தா கடத்தி பணம் பறிக்கிற கும்பல் மாதிரி தெரியலையே. நாம பழகுன வரைக்கும் பார்த்தா இதுங்க ரெண்டும் டம்மி பீசுங்க. அதுமட்டும் இல்லாம நம்ம நைனாவையே லாக் பண்ற அளவுக்கு எல்லாம் இவனுங்க ஒர்த்து இல்ல. இங்க வேற என்னமோ நடக்குது. முதல்ல இவங்கள எல்லாரையும் வீட்டுக்கு பத்திரமா அனுப்பி வச்சிட்டு நைனாவ வேற காப்பாத்தனும். சோ சித்து வேகமா வேலைய பாருடா’ தனக்கு தானே பேசி ஒரு முடிவுக்கு வந்த சித்து
     “அங்கிள் நாம எது பேசறதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இங்க எதுவும் பேச வேணாம். மொதல்ல இந்த இடத்தை விட்டு வெளியே போவோம். மாதவன் வெளிய போக வழிய நீங்கதான் வந்து காமிக்கனும் வாங்க”
     மற்ற யாரையும் பேசவிடாது அனைவரையும் அங்கிருந்து அவசரமாய் வெளியே நகர்த்தப்பார்த்தான் சித்து. ஆனால் இவ்வளவு நேரம் அமைதியாக நடந்த அனைத்தையும் பார்த்திருந்த பொம்மை ‘ம்ம் இவ்ளோ தூரம் நான் கஷ்டப்பட்டு உங்களை எல்லா அள்ளி போட்டு வந்தா தப்பிக்கவா பாக்குறீங்க. பாக்குறேன் எப்புடி போறீங்கனு’ என சீரியல் வில்லி போல் தன் ஆட்டத்தை ஆட தயாராகியது.
     குகை‌ வாயிலை நோக்கி அனைவரும் திரும்பி நடக்க தொடங்கிய நிமிடம் “நில்லுங்க” என தன் கட்டை குரலில் கத்தியது பொம்மை.
     கேட்ட சத்தத்தில் சித்து திரும்பி பார்க்க அங்கே அவன் தந்தை மட்டுமே கோலத்தின் நடுவே அமர்ந்திருந்தார்‌. வந்த சத்தத்தை கண்டுக்காமல் எல்லாரையும் வெளியேற்ற எண்ணி சித்து “ஏன் நிக்கிறீங்க முன்னால போங்க” என கடிந்தபடி நகர்ந்தான்.
     ஆனால் மீண்டும் “எலேய் அரவிந்து மவனே நான் நிக்க சொல்லிட்டே இருக்கேன் எங்கடா போற நில்லுடா” என சித்துவை பாய்ண்ட் அவுட் செய்து பொம்மை கூப்பிட, அனைவருக்கும் தூக்கிவாரி போட டபக்கென திரும்பி பார்த்தனர்.
     ‘சத்தம் மட்டும் கேட்குது ஆளுங்க யாரும் இல்லையே’ என உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே தைரியமாய் காட்டிக் கொண்ட சித்து
     “யாருயா அது ஒழிஞ்சு நின்னு பேசறது. தைரியம் இருந்தா என் முன்னாடி நின்னு பேசுங்க பாப்போம். இந்த சித்தார்த் யாருன்னு தெரியாம இப்புடி பண்ணீட்டிங்கனு நினைக்கிறேன். இதோட எங்களை விட்டீங்கனா போனா போகுதுன்னு பேசாம போவேன். இல்ல நடக்குறதே வேற”
     தான் இருக்கும் நிலையை மறந்து சித்து கத்த, வீரா கடுப்பில் அவன் முதுகிலே ஒரு அடியை போட்டு “ஐயோ சித்து உங்க வாய கொஞ்சம் மூடுங்க. நாம என்ன நிலமைல இருக்கோம் இந்த இடத்துல கூட வாய அடக்க மாட்டீங்களா” டைமில் அவனை அடக்கினாள் வீரா.
     “ஹாஹாஹா… வீரசுந்திரி பேருக்கு ஏத்த மாதிரி நல்ல தைரியமா அழகா இருக்கம்மா. என் இரத்தத்தின் இரத்தமாச்சே. அதான் இவ்ளோ அறிவாளியாவும் இருக்க”
     இப்போது அந்த குரல் கூறியதை கேட்டு அனைவரும் குழம்பி போயினர்‌. அதுவும் அவர்களின் ரத்தம் என சொல்லியதில் வீராவே குழம்பிவிட்டாள். ஏனெனில் அவளுக்கு நினைவு தெரிந்தது முதல் அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை எனும் போது எங்கிருந்து இந்த புது ரத்த பந்தம் வந்தது என புரியவில்லை.
     “இங்க பாருங்க நான் யாரு என்னன்னு தெரியாம உங்க இஷ்டத்துக்கு உளறாதீங்க. மொதல்ல நீங்க மறைஞ்சு நிக்கிற இடத்தை விட்டுட்டு எங்க முன்னால வந்து எதுக்காக இப்படியெல்லாம் பண்ணீட்டு இருக்கீங்க. உங்களோட மோட்டிவ் என்ன, உங்களுக்கு என்னதான் வேணும்.
     இது எல்லாத்தையும் ஒன்னொன்னா சொல்லிடுங்க அது எங்களால செய்ய முடியிற விஷயமா இருந்தா நாங்க செஞ்சு தரோம். இல்லைனா எங்களை அதாவது நீங்க அடைச்சு வச்சிருக்குற எல்லாரையும் போக விடுங்க. நான் குறிப்பாக யாரை சொல்றேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்”
     அரவிந்தையும் சேர்த்து விடுவிக்கும்படி சற்று அழுத்தியே வீரா சத்தமாய் சொல்லி நிறுத்த, இவ்வளவு நேரம் நடக்கும் கூத்தை தேமே என பார்த்திருந்த அரவிந்த்
     “என் மருமவளா கொக்கா நம்ம மேல நிறைய பாசம் இருக்கு நம்ம மருமவளுக்கு. என்ன பத்தி எவ்ளோ யோசிச்சு பேசுறா. நான் பெத்த தண்டகருமமும் இருக்கே அவன் மட்டும் தப்பிச்சா போதும்னு கெளம்ப பாக்குறான். இவன பெத்ததுக்கு ஒரு அம்மி கல்ல பெத்திருந்தா வகை வகையா சட்னியாவது அரைச்சு தின்னுருப்பேன். கூறுகெட்ட கிறுக்கன் இவன பெத்து நான் என்ன சுகத்த கண்டேன்”
     சித்து கேட்கவேண்டும் என்றே சத்தமாய் அரவிந்த் சலித்துக் கொள்ள ‘இந்தாளு வேற நேரம் காலம் இல்லாம நான்சிங்ல பேசி நம்மட்ட மல்லுக்கு நிக்கிது. இப்ப சத்தமா திட்டக்கூட முடியலையே’ என மனதிற்குள் பொறுமி தள்ளினான்.
     “வீரா அந்தாள வாய மூட சொல்லுடி இல்ல யாரு இருக்காங்க என்னனுலா நான் பாக்க மாட்டேன் பாத்துக்க” சித்து வீராவிடம் பல்லை கடித்தான்.
     “ந்தா டேய் தவளை வாயா அங்க என்ற மருமவட்ட என்னடா பல்ல கடிக்கிற. எதுவா இருந்தாலும் நேரா என்கிட்ட டீல் பண்ணுடா என் வெண்ணமவனே”
     சித்தவிடம் சண்டைக்கு வாடா என புல்பாமில் நின்றார் அரவிந்த். முழுதாய் ஒருநாள் அவர் பிள்ளையிடம் வம்பிழுக்காது இருந்தது வேறு அவர் மனதை பிராண்ட களத்தில் குதித்தார் மனிதர்.
     ‘இவங்க ரெண்டு பேரும் இத்தனை வருஷம் எப்படி ஒரே வீட்டுல இந்த அடிதடிக்கு நடுவுல உயிரோட இருந்திருப்பாங்க’ என வீராவிற்கு இந்நேரம் ஒரு பெரிய சந்தேகமே வந்துவிட்டது.
     அப்போது எல்லாம் சண்டை வரும் போது தந்தை மகன் யாராவது ஒருவர் சூழ்நிலைக்கு ஏற்ப பாதியில் கழன்டு கொள்ளுவது வழக்கம். ஆனால் வீரா வந்ததில் இருந்து பஞ்சாயத்து பண்ண ஒரு ஆள் கிடைத்த குஷியில், தந்தை மகனின் வாய் தகராறு வாய்க்கால் தகராறாக மாறியது பாவம் வீரா அறியவில்லை.
     கதிருக்கோ ‘ஐயோ போச்சு ஆரம்பிச்சிட்டுடாங்களா!’ என அந்த இடத்தின் பயத்தோடு சேர்ந்து இவர்கள் செயல் மேலும் பயத்தை தந்தது.
     இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் சித்துவின் பொறுமை எருமைமீது ஏறிவிடும். அதற்குள் அரவிந்தை எப்படி அடக்க என் ஒன்றும் புரியாது முழித்தாள் வீரா. அவள் கண்ணை காட்டி இவ்வளவு நேரம் கெஞ்சி பார்த்தும்விட்டாள். ஆனால் பலன் இல்லையே.
     அவள் அப்படி முழித்திருக்கும் நேரம் “ஏய் அரவிந்தா வாய மூடுடா! எப்ப பாரு ஓட்ட பானைல ஓலைய விட்ட மாறி நசநசன்னு பேசிட்டே இருக்க. என்ன என்னன்னு நினைச்சீங்க அப்பன் மவன் ரெண்டு பேரும்” என பொம்மையே பொறுமை இழந்து கத்த
     யாருக்கும் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. அப்போது வரை அமைதியாக நின்றிருந்த மாதவன்
     “பேசறது வேற யாரும் இல்லை அந்த பொம்மைதான். எல்லாம் கொஞ்சம் கீழ பாருங்க” என இப்போது காட்ட பார்த்த அனைவருக்கும் ‘ஏதே இதுவா’ என ஆகிவிட்டது.
     “என்னலே கலர் கலரா கதை கட்டுற. பொம்மை போய் எங்கையாவுது பேசுமா பையித்தியகார” கார்மேகம் மாதவனின் பிதற்றல் கேட்டு அவன் மீது பாய போக
     “ஐயோ அப்பா நீ என்ன கொன்னே போட்டாலும் அதுதான் உண்மை” என பாவம் போல் சொல்லி நின்றான். அப்போதும் யாரும் நம்பாத பார்வை பார்க்க “அட உன் மவன் சொல்றது நெசந்தான் கார்மேகம்” என டைமில் பேசி மாதவன் கூறியது உண்மை என புரூவ் செய்தது பொம்மை.
     இனி அந்த அரை லூசு மரபொம்மையின் ஆட்டத்தை எப்படி அனைவரும் எதிர்க்கொள்ள போகிறார்களோ இறைவனுக்கே வெளிச்சம்.
-ரகசியம் தொடரும்