பொம்மையின் கைவண்ணத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் மூஞ்சி முகரையெல்லாம் வீங்கி விழுந்து கிடக்க, ‘இவனுங்க யாருடா இடையில மலமாடு கணக்கா கெடக்குறானுங்க’ என கடுப்பாய் பார்த்து வைத்தான் மாதவன்.
அவனை சுற்றி, அந்த மாளிகையை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்னவென மாதவனுக்கு புரியவில்லை என்றாலும் எதோ பெரிய விஷயம் இதுக்கு பின்னால் இருக்கென அவனுக்கு புரிந்துதான் இருந்தது.
“ஹாஹாஆஆ…. மாதவன் இங்க என்ன பண்றீங்க, தூங்கலையா. ஆமா யாரு இந்த கும்பல் நம்ம வீட்டுக்கு நடுவுல மல்லாக்க படுத்து கெடக்குறாங்க”
கீழே கிடந்தவர்களை பார்த்திருந்த மாதவனுக்கு அருகில் ஒரு குரல் கேட்க, அந்த குரலை கேட்டு அதிர்ந்த மாதவன் பழைய இரும்பு பீரோவின் கதவை போல் தன் தலையை மெல்ல திருப்பி பார்த்தான்.
அங்கே தூக்ககலக்கத்தில் கொட்டாவி விட்டுக் கொண்டு கண்ணை தேய்த்தபடி நின்றிருந்தான் நம்முடைய ஹீரோ சித்தார்த். அவனை பார்த்ததும் மூளை நரம்புகள் எல்லாம் ஸ்தம்பித்துபோய் நின்று விட்டான் மாதவன்.
‘யாரு சாமி இவன் என்ன செஞ்சாலும் அசராம வந்து நிக்கிறான். மயக்கமருந்து அடிச்சு முழுசா ஒரு மணி நேரம் தான் இருக்கும். அதுக்குள்ள எந்திருச்சுட்டான் ஒருவேளை நாம இவன்மேல பாவம் பாத்து மருந்த கம்மியா அடிச்சிட்டமா?’
மைண்ட் வாய்சில் மாதவன் அதிர்ந்த நேரம் சித்துவின் பின்னால் மெல்ல வந்த அவன் நண்பன் சங்கர், சித்துவின் தலையில் ஒரு கட்டையை வைத்து டமாலென அடித்து அவனை மீண்டும் மயக்கமடைய செய்தான். அதனை வாயை பிளந்து பார்த்த மாதவன் மயங்கி விழுந்த சித்துவை தன் கையில் தாங்கியபடி
“டேய் சங்கரு ஏம்லே அவன் மண்டைய கட்டைய கொண்டு அடிச்சு? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட போவதுடா. அப்புறம் போலீசு கேசு ஆகிபுடும்டா” சித்துவிற்கு எதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் மாதவன் பதறினான்.
“பின்ன என்னடா நாமலே நம்ம உசுர அந்த சைத்தான் பொம்மட்ட இருந்து காப்பாத்த போராடிட்டு இருக்கோம். கொப்பமவனே இவன் என்னடான்னா மயக்கமருந்து அடிச்சும் எந்திரிச்சு வரான். எது பண்ண போனாலும் ‘நான்தான் கௌசிக்னு’ வந்து நிக்கிறான். மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்கான் உன்ற மாமா மவன்” மாதவனை சிறுதும் சட்டை செய்யாது குமுறினான் சங்கர்.
“அப்புறம் உன்ற மாமன் மவனுக்கு ஒன்னும் ஆவாது ராசா. நம்ம செத்து மேல போனாலும் அவன் திவ்யமா இருப்பான். வேணும்னா பாரு இந்த மயக்கத்தில இருந்தும் கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு உக்காந்துக்குவான். ஆனா அதுக்குள்ள வீட்ல இருக்க எல்லாரையும் நாம அங்க எப்படி பேக்கப் பண்ணி கொண்டு போறதுன்னு சொல்லித் தொல”
சங்கர் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. அரவிந்த் எனும் மனிதர் ஊருக்கே விபூதி அடித்து ஆட்டையைப் போடும் திறன் கொண்டவர் எனும்போது, அவருடைய புயூர் பிளட்டில் வந்த சித்து அவருக்கு சற்றும் சளைத்தவன் இல்லையே.
எனவே இவன் எழுவதற்குள் எல்லாரையும் கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவு செய்தான் மாதவன். ஆனால் எப்படி என்பதுதான் மிக குழப்பமாக இருக்க, தன் முன்னால் கிடந்த தடியன்கலை பார்த்தான்.
சற்று யோசித்தவன் பின் திரும்பி சங்கரை பார்த்தான். மீண்டும் தடியன்கலை பார்த்து, டூ டூ சார் போர் எனக் காற்றிலே ஒரு கணக்கை போட்டு ஒரு முடிவுக்கு வரும் நேரம் அவன் முகம் ஆயிரம் நிலவின் பிரகாசத்தை பெற்றுவிட்டது.
“ஹாஹாஹா…” மனதிற்குள் சிரிப்பதாய் நினைத்து வெளியே சிரித்து வைத்த தன் நண்பன் மாதவனை தற்போது பயத்துடன் பார்த்தான் சங்கர்.
இங்கே நடக்கும் குழப்பத்தில் மாதவனுக்கு எதுவும் ஆகிவிட்டதோ என ஒரு நிமிடம் பயந்துவிட்டான் அவன். ஆனால் தன் சிரிப்பை நிறுத்தாத மாதவனின் மூளைக்கும் ஒரு விசித்திர யோசனை வந்துவிட, அதை அப்படியே லபக்கென கேட்ச் செய்து விட்டான். அது அப்படி என்ன பெரிய லாட்லபக்தாஸ் யோசனைன்னு இப்போ பார்ப்போம்!
*****************
“மச்சா முடியலைடா மூச்சு வாங்குது. இன்னும் எவ்ளோ தூரம்டா இருக்கு. இப்படி பாதை யாத்திரையாவே கூட்டிட்டு போறியே, ஒரு வாடகை ஆட்டோவாவது புடியேன்டா”
ரேபிஸ் வந்த நாய் போல் மூச்சு வாங்கிய சங்கர் ‘என்ன விட்டா நான் இப்படியே ஓடிருவேன்’ என்ற நிலையில் இருந்தான். அவன் இப்படி அலறுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஊரின் வடக்கு கடைசியில் இருக்கும் இவர்கள் மினி அரண்மனையிலிருந்து தென் கடைசியான ஊரின் எல்லைவரை, கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் நடக்கவைத்தே கூட்டி வந்தால் அவனும் தான் என்ன செய்வான்.
பார்ப்பதற்கு வத்தலக்குண்டின் இந்த கிராமம் சிறிய ஊராக தெரிந்தாலும் அதன் பரப்பளவு சற்று அதிகம்தான். அதுவும் இவர்கள் வருவது ஊரின் சார்ட்கட்களை பிடித்தே. அப்படியும் ஐந்து கிலோமீட்டரை தொட்டுவிட்டது தூரம்.
தனியாக நடந்து வந்திருந்தால் ஒருவேளை இந்த தூரம் எதுவும் பெரிதாய் தெரிந்திருக்காதோ என்னவோ, இவர்கள் வருவதோ ஒரு மினி படையுடன் எண்கையில் கொஞ்சம் சிரமமாக போனது.
ஆமாம் நம் மாதவன் மூளையில் அத்தி பூத்தது போன்ற உதித்த அந்த யோசனை பெரிதாக ஒன்றும் இல்லை. அங்கு அடிவாங்கி கிடந்த அப்ரசென்டுகளை பிடித்து, வீட்டிலிருந்த அவன் குடும்பத்து ஆட்களை ஆளுக்கு ஒரு ஆளாக அவர்கள் கையில் கொடுத்து தூக்கிக் கொண்டு வர வைத்துவிட்டான்.
அவன் சொல்லும் பேச்சை அவர்கள் மீறினால், எங்கிருந்து அடிவிழுகிறது என தெரியாமல் இவ்வளவு நேரம் அடி வாங்கியது போல் இனியும் தர்ம அடி விழும் என பயமுறுத்தி அந்த ஆட்களை அழைத்து வந்திருந்தான்.
பணத்திற்காக இவ்வளவு தூரம் வந்திருந்த ஆட்கள், இப்போது உசுரை மட்டுமாவது காப்பாத்தி ஊர் போய் சேர மாதவன் சொன்னதிற்கு எல்லாம் தலையை ஆட்டி அவன் சொன்ன வேலையை செய்ய ஒத்துக் கொண்டனர். அதன்படி இப்போது சித்து, வீரா, கதிர், கார்மேகம் மற்றும் அலமேலு என வீட்டிலிருந்த ஐவைரயும் ஐந்து நபர்கள் தூக்கிக் கொண்டு வந்தனர்.
இதில் ஹைலைட் என்னவென்றால் பொம்மையின் உபயத்தால் கேசவன் ஏரில் மிதந்து வந்ததுதான்.
“ஏன் மச்சான் இந்த ஆளு கேசவன பறக்க வச்சு கூட்டியார மாதிரி, அந்த பொம்ம இவங்களையும் தூக்கிட்டு போயிருக்க வேண்டிதானேடா. ஏன்டா நம்ம ஜீவன வாங்குது” சங்கர் தன் புலம்பலை தொடர்ந்தபடி வந்தான்.
“டேய் சங்கரு! உன் திருவாய மூடிட்டு கொஞ்சம் பேசாமதா வாயேன்டா. உன் பேச்சு சத்தத்தை கேட்டு ஊருல இருக்க எவனாவது முழிச்சு தொலைக்க போறான். அப்புறம் நம்ம பண்ற வேலைய பாத்து ஒடனே போலீசுக்கு போன போட்டுப்புடுவான்”
மாதவனின் அதட்டலில் “நீ வேற ஏன்டா நம்ம நிலைமை தெரியாத மாதிரி பேசுற. ஊருகாரனுங்க முழிக்க முன்னாடி உன்ற மாம மவன் முழிச்சுப்புடுவானோன்னு எனக்கு பக்கு பக்குங்குதுடா. அதான் வேகமா போயி சேர ஒரு வண்டி கிண்டி புடிச்சு இருக்கலாம்னு ஒரு கவலைல சொன்னேன்டா”
சங்கர் சொன்னதில் நியாயம் இருக்கவும் “அது என்னவோ சரிதான்டா. ஆனா நான் இந்த நடுராத்திரில வண்டிக்கு எங்கடா போவேன்” என பாவமாய் கையை விரித்தான் மாதவன்.
இவர்களை எப்படி மயக்கமடைய செய்வது என்பதிலையே முழு கவனத்தையும் வைத்த நம் டூ இடியட்ஸ் எப்படி டிராவல் செய்ய போகிறோம் என பிளான் பண்ணாது விட்டுவிட்டனர்.
அதன் வெளிப்பாடாக இப்போது தஸ்சு புஸ்சென வாயில் மூச்சை வெளியேற்றியபடி, ஒரு வழியாய் அவர்களை பொம்மை வர சொல்லிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அந்த இடம் வேறு எதுவும் இல்லை, பல உயிர்களை காவு வாங்கியிருக்கும் அந்த ஊர் எல்லையில் இருக்கின்ற தண்ணீர் இல்லா வட்டகிணறு தான்.
“அந்த பொம்மை பேய் சொன்ன எல்லை கெணத்துக்கு வந்தாச்சு. இதுக்கு மேல எங்கடா போறது” என்னவோ பேய் தான் செய்யப்போவது அனைத்தையும் மாதவனிடம் சொல்லிவிட்டு செய்வதைப் போல் சங்கர் அவனிடம் கேட்டு வைத்தான்.
இவர்கள் எல்லாரையும் இந்த கிணற்றிற்கு அருகே கொண்டு வர சொல்லி பொம்மை பேய் சொல்லியிருக்க அதே போல் சரியாக வந்துவிட்டனர். அதற்குமேல் எங்கே போகவென தெரியாது இவர்கள் முழித்து நிற்கும் நேரம்
“டேய் சொல்லாக்குட்டிகளா! வந்துட்டீங்களா. சபாஷ்டா சபாஷ்! என் வேலைய சரியான ஆளுங்கள நம்பிதான் தந்திருக்கேன்னு இப்ப நம்புறேன். இப்ப என்ன பண்றீங்க அப்படியே அந்த கெணத்துக்கு உள்ள எறங்குங்க. நான் இருக்க இடத்துக்கு வரதுக்கு வழி தானா தெரியும்”
திடீரென அசரீரியாக வந்து பொம்மை சொல்லி செல்ல மாதவனுக்கும் சங்கருக்கும் மாரடைப்பு வராத குறைதான். ஏனெனில் இந்த வட்டக்கிணறு எத்தனை உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என கண்கூடாக கண்டவர்களே இருவரும்.
அப்படி இருக்க இந்த பொம்மை பேய் இவர்களை உள்ளையே நுழைய சொல்லியதில் இருவரும் திடமாக நின்றது அதிசயமே. ஆனால் இந்த கிணற்றின் பூலோகம் தெரியாத அந்த ஐந்து அப்ரசென்டுகள் அவர்கள் கையில் இருந்தவர்களுடன் கடகடவென கிணற்றில் இறங்கிவிட்டனர். அவர்கள் சென்றதை பார்த்து அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்று உறுதி செய்த பின்னரே இந்த இருவரும் உள்ளே இறங்கினர்.
என்னே அதிசயம் இத்தனை நாட்கள் முள்ளும் புதறுமாய் கிடந்த பாளும் கிணறு, இப்போது இவர்கள் செல்லும் அளவுக்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாது அங்கே இரண்டு ஆட்கள் உள்ளே நுழையும் அளவு பெரிய துவாரம் அந்த கிணற்றின் அடியில் இருந்தது.
இது எல்லாம் அந்த பேயின் வேலை என உணர்ந்த மாதவனும் சங்கரும் ஆவென வாயை பிளந்தனர். ஏனெனில் அவர்கள் பார்த்த செட்டப் அப்படி. அந்த துவாரத்தின் உள்ளே சென்றால் எதோ ஒரு குகையை போன்ற அமைப்பாய் தெரிந்தது. மேலும் இவர்கள் எங்கே போக வேண்டும் என வழிகாட்டும் வண்ணம் ஆங்காங்கே தீபந்தங்கள் சொறுகபட்டிருந்தது.
கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இவர்கள் உள்ளே நடக்க, ஒருவழியாக பொம்மை இருந்த இடம் வந்து சேர்ந்தது. கலர்கலராக தரையில் கலர்பொடிகள் கொட்டியிருக்க, அந்த அசிங்கத்தை சற்று உற்று பார்த்தால் தெரிந்தது அது கோலத்தின் கேவலமான வெர்ஷன் என.
எதோ பில்லி சூனிய பூஜை நடக்கும் இடம் போல் சில பல செட்டப்புகள் வேறு. அதை கண்டு பயமாக வந்தது நண்பர்கள் இருவருக்கும்.
அந்த அகண்ட இடத்தில் ஒரு ஈ கொசு கூட இல்லை. அது வேறு இன்னும் அமானுஷ்யத்தை கூட்ட, வெளியே சொல்லவில்லை என்றாலும் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
ஆனால் அதை எதையும் கண்டுக் கொள்ளாத அந்த ஐந்து அப்ரெசென்டுகளோ தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையின் ஒரு பாகமாக அந்த ஐவரின் கை கால்களை எல்லாம் கட்டி போட்டுவிட்டு, மாதவன் சங்கர் இருவருக்கும் ஒரு பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு அப்படியே வந்தவழி கிளம்பிவிட்டனர்.
“ஆஹா ஆஹா டேய் அலமேலு மவனே மாதவா! எனக்கு இருக்க புத்தில கொஞ்சூண்டு உனக்கும் இருக்கும் போல ஜமாய்ச்சிட்டடா”
அங்கு சென்டராய் ஜம்மென அமர்ந்திருந்த பொம்மையின் பேச்சில் வந்த கோவத்தை மென்று முழுங்கி மாதவன் நிற்கும் நேரம்
“எலேய் மாதவா! அப்புறம் இன்னோரு விஷயத்தை நான் முன்னையே சொல்லன்னு நெனச்சேன், ஆனா மறந்துட்டேன். எனக்கு சில பல பொருள் தேவைபடுது, அப்புடியே போயி அதை சட்டுப்புட்டுனு ரெண்டு பேரும் வாங்கிட்டு வாங்கடா” என ஒரு லிஸ்டை எடுத்துவிட்டது.
அதை கேட்ட மாதவனுக்கும் சங்கருக்கும் ‘இவ்ளோ தூரம் மறுபடியும் போயிட்டு வரனுமா’ என கண் ரெண்டு நட்டுவிட்டது. அந்த பேயை கொள்ளும் அளவு மனதுக்குள் கோவம் வந்தது இருவருக்கும். ஆனால் அதை அந்த பொம்மை பேயிடம் காட்ட முடியாதே. எனவே தங்கள் கண்ணிலிருந்து வராத கண்ணீரை துடைத்தபடி மீண்டும் வெளியே சென்றனர்.
-ரகசியம் தொடரும்