அத்தியாயம் – 11

“ம்ம்” என்ற போதும் உடனே அவந்திகா பேசவில்லை.

சிறிது நேரம் கழித்து, “7 வருடத்திற்கு முன்பு அந்தக் காட்டு வழி பாதையில் நீங்கச் சென்று கொண்டிருக்கும்போது காட்டு யானைகளால் நீங்கச் சென்றுகொண்டிருந்த தானூர்தி தூக்கி வீசப்பட்டது. உங்களுக்கு அந்த நிகழ்வு மறக்க வாய்ப்பில்லைதானே?!’ என்றுவிட்டு செல்வத்தைப் பார்த்தாள்.

ஆமாம் என்பதுப் போல் ‘இதுகுறித்து அதிகம் அவந்திகாவிடம் தாங்கள் பேசவில்லையே எப்படி சிறுபிள்ளையான இவளுக்கு அது தெரிந்தது’ என்று பெற்றோர்கள் இருவரும் திகைப்பு குறையாமல் தலையசைத்தனர்.

அவர்களின் திகைப்பை உணர்ந்தப் போதும் தொடர்ந்து, “அப்போது அந்தக் காட்டில் நானும் இருந்தேன். அந்த விபத்தில் உண்மையில் உங்க குழந்தை இறந்துவிட்டாள். அந்த இழப்பைத் தாங்க முடியாமல் அம்மா அழுததைப் பார்த்துப் பரிதாபமுற்று நான் தற்காலிகமாக உங்க துயர் நீக்க உங்க மகளின் உடலில் நுழைந்துவிட்டேன்.

நான் உண்மையில் மனித உயிர் அல்ல. நான் ஒரு யாளி. என்னுடைய உலகம் 7 மேலுலகங்களில் ஒன்றான மஹர்உலகம். யாளி உலகில் நான் இறந்துவிட்டேன். என்னுடைய யாளி உடலும் முற்றிலும் அழிந்துவிட்டது. எனக்கு ஏற்பட்ட விபத்தில் என் உயிர் மறுஜென்மம் அடைய முடியாதப்படி முற்றிலும் சிதறுண்டு இறைந்து(scatter) போயிருக்க வேண்டும்.

ஆனால் என் ஆன்மா அழியாமல் முழுமையாக இருந்ததே ஆச்சரியம் என்றால், பாதாள உலகம்(1) சென்று பாவ புண்ணிய கணக்கிற்காகக் காத்திருக்காமல் என் ஆன்மா பூமிக்கு கீழ் செல்லாமல் இங்கேயே நின்றுவிட்டது. நான் இந்த மும்பை காட்டில் ஆன்மாவாகச் சுமார் 400 வருடங்கள் இருந்தேன். என்னையும் அறியாமல் உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற உந்துதலில் நான் உங்கள் மகளாக மாறினேன்.

உங்கள் முதல் குழந்தையின் இழப்பு மறக்க வேண்டுமென்றால் உங்களுக்கென்று மற்றொரு குழந்தை பிறக்க வேண்டும். அதனால் மற்றொரு குழந்தை பிறக்கும் வரை நான் காத்திருந்தேன். இப்போது அருணும் பிறந்துவிட்டான். இனி நேர்மையற்று உங்க மகளின் உடலில் நான் இருப்பதும், உண்மை மறைத்து உங்களை ஏமாற்றுவதும் சரியாகாது. அதனால் நான் மீண்டும் ஆன்மாவாக மாறலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடன் 7 வருடங்கள் இருந்த உங்களிடம் சொல்லாமல் செல்வது நியாயமாகது. அதனால் உங்களிடம் இந்த உண்மையை நான் சொல்லிவிட்டேன். அதனோடு நான் ஆன்மாவாக மாறிவிட்டால் உங்க மகளின் உடல் சடலமாக மாறிவிடும்.

அந்தச் சமயம் நீங்க என்னவென்று புரியாமல் தவித்துவிடலாம். அதனால்தான் உண்மையை உங்களிடம் முழுமையாக சொல்லிவிட்டேன். நாளை நான் கிளம்புகிறேன். நீங்க மனதை தயார் செய்துக் கொள்ளுங்க. ” என்று கோர்வையாகச் சொல்லி முடித்தாள்.

அதனைக் கேட்டதும் அதிர்ந்த செல்வமும் கனிதாவும் இவை உண்மையா என்பதுப் போல் சில வினாடிகள் பிரமைப்பிடித்து இருந்தனர்.

‘என்ன ஆன்மா!? என்ன யாளி?! என்ன பாதாள உலகம்? என்ன மறுஜென்மம்?!’ அவர்கள் இருவரின் மண்டைக்கு மேல் ஆயிரம் கேள்வி குறிகளுடன் கதிகலங்கி திரு திருவென அவளது பெற்றோர்கள் இருவரும் விழித்தனர்.

அவர்களைப் பார்க்கப் பாவமாக உணர்ந்த அவந்திகா, தன் கைப்பற்றியிருந்த தன் தந்தையின் கைமீதும் அவளது மற்றொரு கையைப் பொதித்து தைரியம் சொல்வதுப் போல் ஒரு அழுத்தம் கொடுத்து நிறுத்தினாள்.

தன் பெரிய கை, தன் மகளென்று எண்ணியிருந்த அவந்திகாவின் சின்ன சிறுக்கைகளுக்குள் அடங்கி மனம் ஆறுதல் அடைவதை ஆச்சரியமாக உணர்ந்தார் செல்வம்.

ஆனால் கனிதாவின் பதப்பதைத்தது. “அவந்தி. என்ன பேசிகிறாய். ஏதேனும் கெட்ட கனவு கண்டாயா?” என்று செல்வம் அருகிலிருந்து எழுந்து வந்து அவந்திகாவின் அருகில் அமர்ந்து அவளது தலையினை தடவி விட்டுக் கேட்டாள்.

அவந்திகா பதில் சொல்லுமுன்னரே தெடர்ந்து “யாளி என்றால் என்ன? என்ன உளருகிறாய்? ஏதாவது கதையில் படித்தாயா? என்ன பேசுகிறோமென்று புரியாமல் ஆன்மாவாக மாறப் போகிறேன் என்று பிதற்றுகிறாய்?” என்று மகள் சொன்ன கதை உண்மை என்று உணர்ந்தப் போதும் நம்ப மறுத்து, ‘சும்மா விளையாடினேன் என்று சொல்லமாட்டாளா தன் மகள்’ என்று மிரட்டும்விதமாக, தவிப்பாகக் கேட்டாள் கனிதா.

கனிதாவிடம் பதிலாக எதுவும் பேசாமல், தன் தலை மீதிருந்த கனிதாவின் கையினை எடுத்துத் தன் இரு உள்ளங்கைக்கு இடையில் வைத்து, “அம்மா” என்று மென்னகையிட்டாள் அவந்திகா.

லேசாகக் கலக்கமுற்று சிவந்திருந்த கனிதாவின் கண்கள் அவந்திகாவின் விழிகளையை பார்த்தது. அவளது அழைப்புக்கு, “ம்ம்?” என்றாள்.

“பயப்பட வேண்டாம். இங்கே பாருங்கள்” என்று தன் கண்ணால் தன் கையினை காட்டினாள். அவந்திகாவின் கையிலிருந்து வெள்ளை நிற நாடா(Ribbon) மாயம் போல் வெளியில் வந்து அவர்களின் முன் நீளவாக்கில் நின்றது.

திடிரென்று எங்கிருந்தோ உயிருள்ளதைப் போலத் தானாக அவர்கள் எதிரில் வந்து நின்ற அந்த நாடாவைப் பார்த்ததும் பேச்சு மூச்சற்று செல்வம் கனிதா இருவருமே விதிர்விதித்து போயினர்.

கனிதாவின் முகத்தையை பார்த்திருந்த அவந்திகா அவர்களின் அதிர்ச்சையை எதிர்பார்த்தே இருந்ததால் நிதானமாக, எதிரில் இருந்த நாடாவைக் காண்பித்து, “இந்த நாடாவின் பெயர் கொடி(2). இதனை என்னுடைய பெற்றோர்கள் இறந்தப்போது என் பாதுகாப்பிற்காக என் ஆன்மாவுடன் இணைத்துவிட்டு சென்றனர்.

நீங்க என்னை நம்புவதற்காக என் கொடியை வெளியில் வரச் சொன்னேன்.” என்று நிறுத்தி அவளது பெற்றோர்கள் எதுவும் கேட்கக் கூடுமென்று ஒரு நொடி தாமதித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் இன்னமும் பேசும் சக்தியற்று இருப்பதை உணர்ந்து தொடர்ந்து பேசலானாள்.

“நாங்க. அதாவது யாளிகள் கிட்டத்தட்ட பல லட்ச வருடங்களுக்கு முன்பு பூமியிலும் இருந்தோம். தென்னிந்திய இந்து கோவிலகளில் எங்களின் உண்மை உருவம் சிலைகளாகப் பதிய பட்டிருக்கும்.

பின் பூமியில் ஏற்பட்ட ஆழி பேரலைகளாலும், பனிப்புயல்களாலும், பூகம்பகளாலும், எரிமலை வெடிப்புகளாலும், டைனசர்களைப் போல யாளிகளும் பூமியிலிருந்து முற்றிலும் அழிந்துவிட்டனர்.

பூமியில் எப்படி மனிதர்கள் ஆதிக்கமோ, அதுப் போல மஹர் உலகில் யாளிகள்தான் பெரும்பான்மை. சாதாரண மிருக உருவில் இருந்த நாங்க, பல ஆயிர வருடங்கள் எங்க முன்னோர்கள் தவம் செயததன் பலனாக இப்போது மனித உருவம்(shape shifting) அடைய முடிகிறது.

மனிதர்களைப் போல் அல்லாமல் எங்களால் மிருக உருவிலும் இருக்க முடியும் மனித உருவிற்கும் உருமாற முடியும். அதனோடு பூமியில் மாயம் என்று சொல்லக் கூடியது எங்கள் உலகில் ஒவ்வொராலும் அவர்களின் ஆன்மீக ஆற்றலுக்கு (spiritual Energy) ஏற்ப வெவ்வேறு நிலையில் எளிதில் செயல் படுத்தக்கூடிய ஒன்று.

நான் இப்போது எந்த வித தவமும் செய்யாததால் என் உயிருடன் இணைந்திருந்த என் கொடியை மட்டுமே நீங்க நம்புவதற்காக என்னால் உங்களுக்குக் காண்பிக்க முடிந்தது. ஆனால் நான் ஒரு யாளி. என்னால் மனிதனாக வாழ முடியாது. மனிதர்களின் எல்லா பழக்க வழக்கங்களையும் என்னால் அப்படியே ஏற்று நடக்க முடியாது. என் முடிவிற்கான காரணத்தை நீங்கப் புரிந்துக் கொள்ளுங்க” என்று அவ்வளவுதான் என்பதுப் போல் கூறி முடித்தாள் அவந்திகா.

அவந்திகா சொன்னதையும் கண்டதையும் ஜீரணிக்க கணவன் மனைவி இருவருக்குமே பல நிமிடங்கள் ஆனது. அவர்களின் நிலை அறிந்து அவர்கள் மனம் அமைதிக்கு வர நேரம் கொடுக்க எண்ணி, அவள் அமர்ந்திருந்த மெத்தை தையித்த(sofa) இருக்கையிலிருந்து எழுந்து தண்ணீர் எடுத்து வர எழுந்தாள்.

பின், “கொடி என்னிடம் வா” என்றாள். அதுவரை அமைதியாக நின்றிருந்த கொடி, சிறு சிணுங்களுடன்(whining)(3) அவந்திகாவின் கை மணிக்கட்டில் வந்து சுருண்டுக்கொண்டது. பின் இருக்கும் இடம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

தண்ணீரை கொண்டு வந்த அவந்திகா கனிதாவிடமும் செல்வத்திடமும் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளறை சென்று விட்டாள்.

கணவன் மனைவி இருவரும் சில நிமிடங்களுக்குப் பின் நினைவுக்கு வந்து அவர்களுக்குள் பேசலாயினர். இருவருக்கும் உண்மை புரிந்தப்போதும் அவந்திகா யாளியாக இருந்தப் போதும் ஏழு வருடங்கள் மகளாக வளர்ந்த அவளை இழக்க மனம் வரவில்லை. இருவரும் தீர்மானம் கொண்டவர்களாக அவந்திகா முன்பு சென்ற அறைக்குச் சென்றார்கள்.

படுக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த அவந்திகா, அவளது பெற்றோர்களைப் பார்த்ததும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள். ஏழு வயது சிறுமிபோல் அல்லாமல் தெளிவான விழிகளில் அவர்களைக் கேள்வியாகப் பார்த்தாள் அவந்திகா.

அவளைப் பார்த்ததும் தயங்கி தயங்கி செல்வமே முதலில் பேசத் தொடங்கினார், “வந்து… அவந்திமா. நீ சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். நீ யாளியாகவே இருந்தாலும் பரவாயில்லை. நீ என் மகளாக எப்படியோ இந்த உடலில் வந்துவிட்டாய்.

அதனால் எங்களுடன் நாங்க வாழும் வரை இருந்துவிட்டு போயேன். ஏழு வருடமே என்ற போதும் உன்னை இழக்க எங்களுக்கு மனமில்லை. அதனால்…” என்று முழுதும் கேட்காமல் நிறுத்தினார்.

அதற்குப் பதிலாகப் புன்னகைத்தை அவந்திகா, “அப்பா. உண்மையில் என் ஆன்மாவிற்கு எப்போது பாதாள உலகம் செல்ல அழைப்பு வருமென்று எனக்குத் தெரியவில்லை. அப்போது திடீரென்று செல்வதற்கு இப்போதே நான் விலகுவது சரியாகும் அதனால் என்னை வற்புறுத்த வேண்டாம்.

அதிக காலம் என்னை வளர்த்தப்பின் என்னைப் பிரிவதென்றால் உங்களுக்கு இன்னமும் வருத்தம் அதிகமாகும். புரிந்து கொள்ளுங்க” என்றாள் அழுத்தமாக.

அதுவரை பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டிருந்த கனிதாவின் கண்கள், அவந்திகாவின் பதிலில் கண்கள் ஈரம் பனித்தது.

உடனே பதறி ஓடிச்சென்று அவந்திகாவை இறுக அணைந்துக்கொண்டு “அவந்திமா. என்னை விட்டுப் போய்விடாதேடா. குழந்தை இல்லாமல் பல வருடங்கள் துன்புற்ற என் துயர் நீக்க வந்த நீ எனக்குக் கடவுளைப் போல. என்னால் உன் பிரிவைத் தாங்க முடியாது.

எந்தக் காரணம் சொல்லியும் என்னை விட்டுப் போய்விடாதேடா.கண்ணம்மா. என் செல்வமே. நீ சடலமாக என் கண் ஆகப் போகிறேன் என்று சலனமற்று சொல்கிறாயே. பெற்ற என் வயிறு காந்துகிறது. உனக்குத் தெரியவில்லையா?

நீ எங்களுடன் இருக்க என்ன நிபந்தனை விதித்தாலும் நானும் அப்பாவும் தவறாமல் செய்கிறோம். எங்களை விட்டுப் போய் விடுவதாக மட்டும் சொல்லாதே கண்ணாமா” என்று தேம்ப ஆரம்பித்தாள்.

கனிதாவின் முரட்டுதனமாக அணைப்பிலும், தவிப்பான பேச்சிலும் ஒரு நிமிடம் அவந்திகா பிரமித்துப் போனாள். அவளையும் அறியாமல் அவளது விழிகளிலும் கண்ணீர் ஓசையற்று கன்னத்தைக் கடந்திருந்தது. மறுத்துப் போனதாக(numb) எண்ணியிருந்த அவளது உணர்வுகள் துளிர் விட்டதுப் போல அவளது கண்ணீர் அவளை நினைவுக்குக் கொணர்ந்தது.

செல்வமும் எதுவும் சொல்லவில்லை என்றப் போதும் மனம் தாளாமல் தன் மனைவியுடன் சேர்த்து அவந்திகாவையும் தன் கை வளைவுக்குள் அணைத்துக் கொண்டார். கண்ணீர் வரவில்லை என்றப்போதும் அவரது கண்களும் கலங்கி சிவந்திருந்தது.

கனிதா பேசி முடித்துச் சில நிமிடங்களுக்குப் பின்னரும் விசும்பும் சப்தத்தை தவிர வேறேதுவும் கேட்கவில்லை. அவந்திகாவே முதலில் சுற்றம் உணர்ந்து, தேம்பிக் கொண்டிருந்த தன் தாயின் முதுகை வருடினாள்.

பின் “சரி… கவலை படாதீங்க அம்மா. நான் இப்போது போகவில்லை. தானாக என் ஆன்மா பாதாள உலகம் செல்லும் வரை நான் இந்த மனித உடலை விட்டுச் செல்லவில்லை. ஆனால் நான் மனிதன் அல்ல என்பதால் என்னால் ஒரு மனிதரைத் திருமணம் செய்துக் கொள்ள முடியாது.

அதனால் நான் உங்கள் மகளாக இருந்தப் போதும் வேறொருவருக்கு மனைவியாக என்னால் வாழ முடியாது. இதற்குச் சம்மதமென்றால் நான் இப்போது செல்லவில்லை” என்றாள் அவந்திகா.

அதனைக் கேட்டதும் போன உயிர் வந்ததுப் போல விழுக்கென்று அவந்திகாவினை அணைப்பிலிருந்து விலக்கி அவளது முகத்தை நேராகப் பார்த்து, “உண்மையாகவா?” என்று தேம்பிய குரலிலே கேட்டாள் கனிதா.

குழந்தையாக மாறியிருந்த தன் தாயின் கண்ணீரை துடைத்தவண்ணம் புன்னகையுடன், “உண்மையாக.” என்றாள் அவந்திகா.

அவந்திகாவின் பதிலில் செல்வம் கனிதா இருவருமே நிம்மதியுற்றனர். எதுவும் இல்லாததற்கு இதுமேல் என்பது போல, செல்வம் மகளின் தலையை வருடி, “அவந்திமா, நீயாகத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லாதவரை நாங்க உன் திருமணம்பற்றிப் பேசமாட்டோம். நீ எங்களுடன் இருந்தால் மட்டும் போதும்” என்று முடித்தார்.

மென்னகையுடன், “ம்ம்…” என்றாள் அவந்திகா.

பெருந்துயரம் வந்து மீண்டதுப் போலப் பெருமூச்சுவிட்டு, “நான் போய் அவந்திக்கு பிடித்த பால் பாயசம் செய்கிறேன். என்னுடன் இருக்கிறேன் என்று சொன்ன கண்மணிக்கு இனிப்பு தந்தால்தான் எனக்கு நிம்மதி” என்று விட்டுச் சமையல் அறைப்பக்கம் சென்றாள் கனிதா.

அவள் செல்வதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்ன பேசுவதென்று தெரியாமல் செல்வம் அவந்திகாவின் அருகில் அமைதியாக வந்து மெத்தை மேல் அமர்ந்தார்.

அமைதியை உடைத்து அவந்திகாவே முதலில் பேச ஆரம்பித்தாள். “அப்பா… நான் என் கொடியை மனித உடலில் இருக்கும் வரை பயன்படுத்துவது நல்லதல்ல. அதனோடு. எதிர் பாராத நேரத்தில் கொடி வெளிப்பட்டுவிட்டால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும்.

அதனால் என் கொடியையும் என் யாளி உயிர் தொடர்பான சில பொருட்களையும் நான் முன்பு இருந்த காட்டுக்குள் புதைத்து மந்திரத்தால் பூட்டிவிட்டு வரலாமென்று நினைக்கிறேன். நாளை மாலைப் போல அந்தக் காட்டுக்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா?” என்றாள்.

அவந்திகாவைப் பற்றி முழுதும் அறிந்ததாலும், மாயம் தவறுதலாக வெளிப்பட்டால் ஏற்படக்கூடிய விபரீதங்களை உணர்ந்ததாலும் அதிகம் யோசிக்காமல், “சரிமா. நீ சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. நாளைப் போகலாம். இப்போது நீ ஓய்வெடுத்துக் கொள். நான் போய் உன் அம்மாவைப் பார்கிறேன்.” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியில் சென்றார் செல்வம்.

Author note:

(1) பாதாள உலகம் (Netherworld/Underworld) – இது பூமிக்கு கீழ் உள்ள ஏழு உலகங்களில், கடைசியான ஏழாவது உலகம். இங்கதான் இறந்ததும் ஆன்மாக்கள் வரும். As per the queue, each and every soul will wait for their judgment. Based on judgment it will rebirth in another body.

(2) கொடி – வன்னியின் பெற்றோர்கள் இருவரும் விட்டுச் சென்றது என்பதால் இதனை ஆணினமாகவும் சொல்லவில்லை. பெண்ணினமாகவும் சொல்லவில்லை.

(3) சிணுங்கள்- it sounds like little puppy whining.