அத்தியாயம் 20

ஸ்வேதா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். மது விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஒரே சத்தம்.

ஸ்வேதா….ஸ்வேதா……. என்று கத்திக் கொண்டே ரகு கையில் ரியாவை பிடித்துக் கொண்டு வேகமாக வர, ராஜம்மாவும் உடன் வந்திருந்தார்.

தம்பி…கத்தாதீர்கள்! வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார்.

என்ன ஆயிற்று? பார்வதியம்மா கேட்க,

ராஜம்மாவை பார்த்து, வாருங்கள் …ஸ்வேதா அழைத்து விட்டு ரியா குட்டி…..என்று அவளருகே ஸ்வேதா வர, ரகு ரியாவை அவனது கைக்குள் இழுத்து வைத்துக் கொண்டு, என் குழந்தை அருகே வராதே! கத்தினான்.

நீ யார்? எங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?

நான் யார் ? ஸ்வேதா தான்.

இது எப்படி உன்னுடைய கைப்பைக்குள் வந்தது? ஒரு போட்டோவை அவள் மீது தூக்கி எறிந்தான்.

அதில் மித்து, ரகு, ரியா சேர்ந்து இருந்ததை பார்த்தவுடன், எதுவும் கூறாமல் அமைதியானாள்.

என்ன, கண்டுபிடித்து விட்டேனே! என்று பயப்படுகிறாயா? நீ தானே எங்களை கொல்ல பார்த்தாய்?

அவள் கண்கலங்க, நான் உங்களை கொல்ல பார்க்கிறேனா?

ஆமாம்.அதனால் தான் எங்களை சுற்றி சுற்றி வந்தாய்?

இல்லை. நான் அதற்காக வரவில்லை.

வேறெதற்காக வந்தாய்? கூறு? என்று கத்தினான்.

என்ன சத்தம்? என்று பாலா கீழே வர, பார்வதியம்மா ரியாவையும் மதுவையும் ஒர் அறைக்குள் அழைத்துச் சென்றார்.

நான் கூறுகிறேன் தம்பி ராஜம்மா கூற, வேண்டாம்மா.. நீங்கள் கூறக் கூடாது ஸ்வேதா கெஞ்சினாள்.

பாலா கோபமாக, நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

கூறி விடு…

அண்ணா! நீயுமா?

எத்தனை நாட்கள் தான் மறைத்து வைக்க முடியும்? அவருக்கும் தெரியட்டுமே! பாலா கூற,ராஜம்மா பேச ஆரம்பித்தார்.

தம்பி  உங்களுக்கும், உங்கள் மனைவி மித்ராவிற்கும் திருமணம் முடிவான போது, உங்களது அம்மா எனக்கு போன் செய்து, எனக்கு பெண்ணை பிடிக்கவில்லை. கல்யாணத்தை நிறுத்த கூறி கேட்டார்.

எதற்காக அம்மா, இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், அவள் ஒரு அனாதை, வசதி இல்லாதவள், பணத்திற்காக என் மகனை மயக்கி விட்டாள். என் மகனை திருமணம் செய்ய விடக் கூடாது. அவளுக்கு என்ன அருகதை உள்ளது என் வீட்டிற்கு வருவதற்கு, அவளை கொல்லாமல் விட மாட்டேன் என்றார்கள்.

நான் முடியாது என்றதால் என்னையும் வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள். நான் கொஞ்ச நாட்கள் கோவிலில் தான் தங்கினேன். எனக்கென்று வேறு யாரும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். பின் உங்கள் மனைவி இறந்து விட்டதால் என்னை கூப்பிட்டார்கள். நான் வர மாட்டேன் என்றேன். நீங்கள் உடைந்து போனதாக கூறினார்கள். அதனால் தான் நானும் வந்தேன்.

ஸ்வேதா அப்படியே கீழே உட்கார்ந்து அழ, ரகு மீண்டும் கத்தினான். என் அம்மா இப்படியெல்லாம் பேச மாட்டார்கள்.

ராஜம்மாவிடம், ஸ்வேதா உண்மையிலே அவ்வாறு தான் பேசினார்களா? என்னை மன்னித்து விடும்மா என்று அவளை அணைத்துக் கொண்டு, நீ வருத்தப்படுவாய் என்று தான் இதை மறைத்தேன்.

அம்மா, நீங்களும் என்னை அவ்வாறு தான் நினைக்கிறீர்களா?

ராஜம்மா அவளை கட்டிக் கொண்டு, நீ சொக்க தங்கம் தாயி….என்றார்.

எதற்காக இவள் அழுகிறாள்? என்று ரகு தலையை பிடித்துக் கொண்டு கத்த, ஸ்வேதா கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனருகே வந்து அவன் தலையில் வைத்திருந்த கையை உரிமையாக எடுத்து விட, அவன் அவளை கீழே தள்ளி விட்டு, நீ என்னை தொடாதே! என்று சத்தமிட்டான்.

அவள் தொடாமல் வேறு யார் தான் உங்களை தொடுவார்கள்.

என்ன பேசுகிறீர்கள்? அவன் ராஜம்மா பக்கம் திரும்பினான்.

இவள் ஸ்வேதா இல்லை. உங்கள் மனைவி மித்ரா தான் என்றார் ராஜம்மா.

ரகு பயங்கரமாக சிரித்து விட்டு, இவள் என் மித்துவா? முதலில் என் அம்மாவை தவறாக கூறினீர்கள்? இப்பொழுது இவளை என் மனைவி என்கிறீர்களே! வேறெதும் உள்ளதா?

ஆமாம் என்று.. மித்து அனுபவித்த அத்தனையையும் கூறி விட்டு உங்களையும்,குழந்தையையும் காப்பாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஸ்வேதாவாக வந்திருக்கிறாள்.

என் மித்து அருகே இருந்தால் என்னால் உணர முடியும்.

அப்படியென்றால் உங்களால் என்னை உணர முடியவில்லையா? ஸ்வேதா கேட்டாள்.

ச்சீ….நீ என்ன கேட்கிறாய்? எல்லா ஆண்களிடமும் இவ்வாறு தான் பேசுவாயா? எல்லாம் செய்வாயோ? கேட்க,

மித்து மிகவும் உடைந்து போய் விட்டாள். அழுது கொண்டே அவளது அறைக்கு ஓட, பாலா ரகுவை அடிக்க இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ரேணுவின் அத்தை வீட்டினுள் நுழைய, ரேணுவும் எழுந்து வெளியே வந்தாள். மித்து அழுது கொண்டு ஓடுவதும் ராஜம்மாவும், பார்வதியும் அவள் பின்னே செல்வதை பார்த்து, அவர்களை கூப்பிட, அதற்குள் உள்ளே சென்று அறையை பூட்டிக் கொண்டு அழுதாள் ஸ்வேதா. அவர்கள் கதவை தட்டிக் கொண்டிருக்க, கீழே எட்டிப் பார்த்தாள் ரேணு. இருவரும் சண்டை போடுவதை பார்த்து அத்தை நடப்பது புரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

ரேணு வேகமாக ஓடி வந்து இருவரையும் தடுக்க, ரகு ரேணுவையும், அத்தையையும் அதிர்ச்சியுடன் பார்த்தான்.

ரேணு பாலாவை திட்ட, நிறுத்துகிறாயா? அவன் உன் மித்துவை தவறாக பேசி விட்டான்.

தவறாகவா?

ரகு பேசியதை பாலா கூறினான்.

ரேணு ரகுவினருகே வந்து, அண்ணா..நீங்க பேசினீர்களா? சத்தமிட்டாள்.

அந்த ஸ்வேதா என்று ரகு பேச ஆரம்பிக்க, அவள் ஸ்வேதா இல்லை. மித்து தான் என்று கத்தி விட்டு ரேணுவும் மேலே சென்றாள்.

அத்தை கோபமாக அவனை அடித்து விட்டு, உன்னுடைய பொண்டாட்டியை பற்றி நீயே இவ்வளவு கேவலமாக பேசி இருக்கிறாய்? அந்த பொம்பளை நினைத்ததை சாதித்து விட்டாள்.அவன் புரியாமல் விழிக்கவே, உன்னுடைய அருமை அம்மாவை தான் கூறினேன் என்றவுடன் அவன் கோபமாக அத்தையை பார்த்தான்.

ஓ…உனக்கு கோபம் வருகிறதா? உனக்காக அவள் கஷ்டப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எவ்வளவு வேதனையை அனுபவித்தால் தெரியுமா? ஆனால் நீ இப்படி செய்து விட்டாயே! ச்சே……இனி எங்களது முகத்தில் விழிக்காதே! என்றும் அவரும் சத்தம் போட்டு விட்டு மித்துவை பார்க்க சென்றார்.

ராஜம்மா ரகுவிடம், நீங்கள் பெரிய தவறிளைத்து விட்டீர்கள்! இங்கிருந்து சென்று விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து நான் ரியாவை வீட்டிற்கு அழைத்து வருகிறேன்.

ரகு ஏதும் பேசாமல் நின்று, ஸ்வேதாவை சந்தித்தது, ரியா அவளிடம் சென்றவுடன் அழுகையை நிறுத்தியது, அவள் இல்லாமல் அழுது அழுது காய்ச்சல் வந்தது,அவளை பிரிய மாட்டேன் என்று ரியா கூறியது, ரகுவிற்கும் ஒரு கட்டத்தில் அவள் மீது உணர்வுகள் தோன்றியது, ரகுவிற்காக அடிபட்டது, அவனுக்கு பிடித்ததை செய்து கொடுத்தது, ரகு மீதும் ரியாவின் மீதும் அதிக அக்கறையுடன் நடந்து கொண்டது அனைத்தையும் யோசித்துக் கொண்டே மித்து அறையின் அருகே வந்தான்.

அனைவரும் கதவை தட்டி மித்துவை அழைக்க, அவளது அழுகுரல் மட்டும் கேட்டது.பாலா சற்று சிந்தித்து விட்டு,

மித்து, நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உன்னை கொலை செய்ய நினைத்தது திலீப் இல்லை. அவனை துரும்பு சீட்டாக உபயோகப்படுத்தி உன்னை கொல்ல சொல்லி, அதை வீடியோ எடுத்து, அவனை மிரட்டி அவனது மருத்துவமனையை பிடுங்கி வைத்துக் கொண்டு, அவனையும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். அவன் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை என்று பாலா கூறியவுடன் கதவை திறந்து,

என்ன கூறுகிறாய்? இது உண்மையா?

ஆமாம். உண்மை தான். அதுமட்டுமல்ல என்று பாலா தயங்கி கொண்டே ரகுவை பார்த்து, அந்த திலீப், ரகுவின் உடன்பிறந்த தம்பியே இல்லை. உங்களை கொல்ல துடிப்பவனது மகன் தான்.

அப்படியென்றால் ரகு அண்ணா இந்த குடும்பமே இல்லையா? அவனும் இந்த குடும்பம் தான், திலீப்பும் இந்த குடும்பம் தான். இருவருக்கும் அம்மா ஒருவர். அப்பா இருவர்..

ரகு பாலாவின் சட்டையை பிடித்து கோபமாக, உன்னால் எப்படி இப்படி பேச முடிகிறது? கத்திக் கொண்டே பாலாவை அடித்தான். பின் இருவரையும் மற்றவர்கள் விலக்கி விட, அங்கே ஒரு குரல் கேட்டது.

ரகு அய்யா, அவர்கள் கூறுவது உண்மை தான். உங்களது அம்மா தான் மித்தும்மாவை கொலை செய்ய பார்த்தது.

அனைவரும் திரும்பி பார்க்க, மரகதம் வீட்டில் வேலை செய்யும் சாந்தி வந்திருந்தாள். மித்து அம்மாவை கொலை செய்ய சொன்னது உங்களது அம்மா தான். அன்று பெங்களுர் செல்லும் முன் என்னிடம் மித்தும்மாவை  பார்த்துக் கொள்ள விட்டு சொன்னீர்களே! உங்களுடைய அம்மா என்னிடம் இரண்டு நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். நானும் சென்றேன். பின் என்னுடைய பணப்பையை மறந்து விட்டு சென்றதால் மீண்டும் வீட்டிற்கு வந்தேன். வீட்டில் அழும் சத்தம் கேட்டது. ஒளிந்து நின்று கவனித்தேன். உங்களது தம்பி திலீப்பிடம் மித்தும்மாவை கொல்ல சொல்லி அனுப்பியதை பார்த்தேன். அந்நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன். திலீப் மித்தும்மாவை கை,கால்களை கட்டிய நிலையில் காரினுள் தள்ளுவதை பார்த்து, அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஆட்டோவில் பாதி தூரம் பின் தொடர்ந்தேன். அவர்களை காணாமல் தேடும் போது தான் அவர் பள்ளத்தின் விளிம்பில் பல காயங்களுடன் உயிருக்கு போராடுவதை பார்த்து, அவர்களை போல் ஒரு பிணத்தை தயார் செய்து, அவர் இறந்ததை போல் போட்டு விட்டு, மித்தும்மாவை நான் தான் தூரமாக அழைத்து வந்து மருத்துவமனையில் போட்டு விட்டு சென்றேன்.

ஆனால் அடுத்து நடந்த எதையும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அன்றே உங்களிடம் சொல்ல நினைத்தேன். உங்கள் அம்மா உங்களிடம் அளந்த கதையை நினைத்து, இவர்களுக்கு நான் உதவி செய்தது தெரிந்தால் என்னை ஏதும் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் சொல்லாமல் மறைத்து விட்டேன். நீங்கள் உங்கள் மனைவியை இழந்த துக்கத்தில் இருந்த போது, உங்கள் அம்மா அந்த ராமச்சந்திரனுடன் இருந்ததை என் கண்ணாலே பார்த்தேன். அன்று தான் எனக்கு ஒரு நினைவு எழுந்தது.

உங்களது அப்பா இறக்கும் தருவாயில் எதையோ கை காண்பித்தார். அதை தெரிந்து கொள்ள, உங்கள் அம்மா வீட்டில் இல்லாத சமயம் அவர் காட்டிய இடத்தில் தேடினேன். இந்த போன் கிடைத்தது. போனை காண்பிக்க, பாலா அதை வாங்கிக் கொண்டான். ஒரு மாதத்திற்கு பின் மித்தும்மாவை தேடி அதே மருத்துவமனைக்கு வந்தேன். அவர்கள் அங்கே இல்லை. மருத்துவமனை முழுவதும் தேடினேன். ஒரு அறையில் பேச்சு சத்தம் கேட்டது. மித்தும்மா யாரிடமோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி பிடிவாதம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அது எனக்கு சரி என்று பட்டது. அவர் வேறொரு வாழ்க்கையை தேடி நிம்மதியாக வாழட்டும் என்று அங்கிருந்து சென்று விட்டேன். நீங்கள் இங்கே கிளம்பி வந்தவுடனே, உங்களுடன் ஒரு பெண் உள்ளது. அவளை கொன்று விட வேண்டும் இல்லையென்றால் மித்துவை போல் தொந்தரவு செய்வாள் என்று பல முறை முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த பெண் மித்தும்மாவாக இருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை.

என்ன! அப்படியென்றால் ஸ்வேதா தான் மித்து என்று அவர்களுக்கு தெரியாதா? பாலா கேட்டான்.

தெரியாமல் தான் இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது. இதனால் அந்த ஆள் இன்னும் இரண்டு நாட்களில் இங்கே வரப் போகிறான். அதுமட்டுமல்ல உங்களது சொத்து முழுவதும் இப்பொழுது அவன் பெயரில் உள்ளது. இப்பொழுது உங்களுக்கென்று ஏதும் இல்லை.

இருக்காது….ரகு கூற, அதுவும் உண்மை தான் என்று அதற்கான எல்லா காகிதத்தையும் பாலா எடுத்து காண்பித்து விட்டு, சாந்தி கொடுத்த போன் பாலாவை அனுமதிக்கவில்லை. ரகு கொடுத்த ரகசிய எழுத்தினால் உள்ளே சென்றது. அதில் அந்த ராமச்சந்திரன் ரகுவின் அப்பாவுடன் சண்டை போட்டு ஏதோ ஊசி போடுவதும், இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது என்று மரகதம் சிரிப்பது போலவும், அப்பாவின் உயிர் செல்வதையும், மேலும் அவர்கள் செய்யும் அனைத்தும், சாந்தி அங்கே வந்தவுடன் இருவரும் நடிப்பதையும் பார்த்தனர்.

ரகு தாங்க முடியாமல் அழுதான். மற்றவர்கள் அவனுக்கு ஆறுதல் கூற, அவன் மித்துவை பார்த்தான். அவள் ஏதும் பேசவே இல்லை. கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்தான்.

இனியும் உங்களது அம்மாவை நம்பாதீர்கள். அவர்களது பழக்கம் அப்பாவிற்கு தெரிந்திருக்கிறது. அம்மா மீது வைத்திருந்த பாசத்தினால் தான் அவர் எதையும் கேட்காமல் இருந்ததால் அநியாயமாக கொன்று  விட்டார்கள்.

நீங்கள் அவ்வாறு இருந்து விடாதீர்கள்….என்று சாந்தி கூற, ரகு மீண்டும் மித்துவை பார்த்தான்.

அக்கா, ரொம்ப பெரிய உதவி செய்திருக்கிறீர்கள். நன்றி…என்று மித்து கூறினாள்.  உங்கள் குணத்திற்கு எல்லாம் நன்மையாகவே முடியும் அவர் கூறினார். அவள் மீண்டும் அறையினுள் சென்று விட்டாள்.

ரகு கோபமாக வெளியே செல்ல, பாலா அவனை தடுத்து நிறுத்தி, நீங்கள் அவர்களை சந்திப்பது நல்லதல்ல. கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள். அப்புறம் மித்து, ரியாவின் நிலை என்னாவது? இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டாள் உங்களது மனைவி. அன்று கூறினீர்களே! உங்கள் மனைவியை கொன்றவர்களை பழி வாங்காமல் விட மாட்டேன் என்று. நீங்கள் பழி வாங்கலாம் வேண்டாம். உங்கள் மனைவி உயிரோடு இருக்கிறாள். அவளுடன் சேர்ந்து வாழுங்கள். என் கீதாவை போல் நீங்கள் இருவரும் பிரிந்து கஷ்டப்பட விட மாட்டேன். உங்களது அம்மாவிடம் பேசும் சந்தர்ப்பம் அமையும். அப்பொழுது பேசுங்கள்.

ரகு வேகமாக மித்துவின் அறைக்கு செல்ல, அவள் கோபமாக படுத்திருந்தாள். அவன் ஏதும் பேசாமல் அவளருகே படுத்து, அவள் மீது கையை போட, அவள் அவனது கையை தட்டி விட்டு எழுந்தாள்.

வெளியே போகிறீர்களா?

நீ என்னுடைய மித்துவா? பேசிக் கொண்டே அவளருகே வர,

பக்கத்தில் வராதீர்கள் என்று பின்னே செல்ல, சுவற்றில் இடித்துக் கொண்டாள். அவன் சிரித்து விட்டு, அவளது கன்னத்தை கிள்ளி விட்டு, அவளை உற்று பார்த்துக் கொண்டிருந்தான். பின் அவளை அணைத்துக் கொண்டான்.

நீ ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாய். என்னை மன்னித்து விடு. அம்மா மீது இருந்த குருட்டு நம்பிக்கையினால் உன்னை இழந்திருப்பேன்.

நல்ல வேலை சாந்தி அக்கா உன்னை காப்பாற்றி விட்டார்.

நீ என்னிடம் முதலிலே சொல்லி இருக்கலாம் என்று கூற, நீங்கள் என்னை நம்பி இருப்பீர்களா? இல்லை,நம்பி இருக்க மாட்டீர்கள்.

அதனால் நம் காதல் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போய் விடும். அதை என்னால் தாங்கவே முடியாது. அதற்கு இதுவே பரவாயில்லை.

அப்படியெல்லாம் பேசாதே! நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது இந்த குறிப்பிட்ட காலத்தில் எனக்கும் புரிந்தது. உனக்கும் புரிந்திருக்கும். என்னை மன்னித்து விடு மித்து.

நீங்கள் என்னை வேரொரு பெண்ணாக நினைத்து தானே அப்படி பேசினீர்கள்? நீங்கள் என்னுடைய கணவனாக சரியாக இருந்திருக்கிறீர்கள். ஆனால் நான் கோபப்பட்டு விட்டேன். உங்களிடம் கூறாமலே சர்ஜரி செய்து கொண்டேன். அதற்கும் என்னை மன்னிக்க வேண்டும்.

அதனால் ஒன்றுமில்லை.நீ உயிரோடு என்னுடன் இருக்கிறாயே! அதுவே போதும். உன்னால் எப்படி இதையெல்லாம் தாங்கி கொள்ள முடிந்தது?

ஏன் முடியாது? என் உலகமே நீங்களும், ரியாவும் தான். நம் பிரிவு தான் மிகவும் வலித்தது. ரியா அருகிலே வர கூட விட மாட்டீர்கள், இருந்தும் அவளை பார்க்கும் போது மனம் மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளலாட்டம் போடும். அவளுள் தோன்றிய உணர்வை மித்து ரகுவிடம் வெளிக்காட்டினாள்.

         “என்னுயிர்

           என்னை விட்டு

           பிரியும் தருவாயில் கூட

           நுழைவு வாயிலாய்

           ஏற்றுக் கொண்டேனே

           உனக்காகவே!

           என்

           அடையாளத்தை மாற்றி

           உன்னுயிர்

           காத்தேன்

           உனக்காகவே!

            என்

            தாய்ப்பாசம்

            கட்டியிழுத்த போதும்

            துவலாதிருந்தேன்

            உனக்காகவே!

            என்னுயிரையும்

            அர்ப்பணிப்பேன்

            உன்

            உறவுக்காகவே!”

ரகுவும், மித்துவும் கையை கோர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, நான் உள்ளே வரலாமா? பாலா கேட்டான்.

வாருங்கள் என்று மித்து ரகுவின் கையை கோர்த்து காண்பிக்க, ரொம்ப சந்தோசம் என்று அவளது தலையில் கை வைக்க, அடிபட்ட இடத்தில் லேசாக இரத்தம் வருவதை கவனித்தான் பாலா. வேகமாக கையை இறக்கி விட்டு,

பிரச்சனை முடியும் வரை எல்லாரும் ஒரே வீட்டில் இருப்பது தான் நல்லது. நீங்களும் இங்கேயே இருங்கள் ரகு என்று பாலா கூறினான்.

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நானும் செய்கிறேன் ரகு கேட்டான்.

ஆமாம், உதவி வேண்டும். இனி என் தங்கை அழவே கூடாது. அவள் அழுதால் உங்கள் கதை என்னால் தான் முடியும் என்றான் கராரான குரலில்.

அய்யோ! உங்கள் தங்கையை யார், என்ன செய்ய முடியும்? அவள் தான் என்னை வச்சு செய்வாள்.

என்னங்க?…..மித்து புருவத்தை உயர்த்தினாள்.

பாலா சிரித்துக் கொண்டே வெளியே வந்தான். அவர்களும் வந்தனர் . அனைவரும் சாப்பிட வாருங்கள் என்று அத்தை அழைக்க, அனைவரும் சாப்பிட்டனர். பாலா சாப்பிட்டு விட்டு, ரியா மது அருகே சென்று,

ரியா, உன்னுடைய பரிசு தயாராக உள்ளது என்றவுடன் மதுவும், ரியாவும் ஆர்வமாக  கவனிக்க, மித்துவை அவர்கள் முன் நிறுத்தி, உன்னுடைய அம்மா உன்னிடமே வந்து விட்டார்கள்.

இவள் ஸ்வேதா, அம்மா இல்லை என்றவுடன் மித்துவிற்கு மனது கனமானது. குழந்தையால் உடனே அம்மா என்று ஏற்றுக் கொள்ள முடியாது. கொஞ்சம் பொறுத்திருங்கள் என்றார் பார்வதி.

மித்து அழுதாள். இதை பார்த்தவுடன் ரகு மித்துவை சமாதனப்படுத்த, ரியாவிற்கு என்ன தோன்றியதோ, ரகு மித்துவை கட்டிக் கொண்டு அம்மா, அப்பா என்றாள். மித்துவிற்கு அளவுகடந்த சந்தோசம். ஸ்வேதா என்று நினைத்து அழைத்தாளா? இல்லை மித்து என்று நினைத்து அழைத்தாளா? என்று தெரியாமல் அனைவரும் குழம்ப,

அவள், என்னை அம்மா என்று அழைத்ததே போதும் என்று ரியாவை கட்டிக் கொண்டாள் மித்து. இவர்களது குடும்பம் இணைந்து விட்டது. அதை பார்க்க தான் நானும் இத்தனை நாட்களாக காத்திருந்தேன் என்று சாந்தி கூறி விட்டு, அங்கே நடப்பதை என்னால் முடிந்த அளவு கூறுகிறேன் என்று பாலாவிடம் கூறி விட்டு சென்றார்.

மித்து மனதில் இருந்த அனைத்து வலிகளும் பறந்தோடியது. மனம் லேசானது. தன் கணவரும், குழந்தையும் கிடைத்தது அவளுக்கு எல்லாம் கிடைத்ததை போன்ற உணர்வு எழுந்தது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

பாலா கையில் லேசாக வந்த இரத்தம், கீழே சிந்தும் அளவிற்கு போகவே, அனைவரும் அவனை பார்த்து பதறினர். வா மருத்துவமனைக்கு போகலாம் என்று மித்து அவனை கூப்பிட்டாள்.

நீ இங்கேயே இரு. நான் அழைத்துச் செல்கிறேன் ரகு கூற, வீட்டில் ஆண்கள் இருப்பது தான் நல்லது. நீங்கள் இருங்கள். நானே பார்த்துக் கொள்கிறேன் அவன் கூற, நானும் வருகிறேன் என்று பார்வதி கூற,

இது சரி வராது என்று ரேணு பாலாவின் மறு கையை பிடித்து இழுத்துச் சென்று காரில் இருவரும் ஏற, ரேணுவே காரை ஓட்டினாள்.பாலா கண்ணிமைக்காது ரேணுவை பார்த்துக் கொண்டே வர, அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டது.