என்ன சார், நிற்கிறீர்கள்? வந்து உட்காருங்கள் பாலாவிடம் ரேணு சொல்ல,
ரேணு, நீ தான் என்னை பாலா என்று கூப்பிடுவாய் தானே?
சார் என்பதே போதுமானது.
என் மீது கோபமாக இருக்கிறாயா?
நான் எதற்கு சார் கோபப்பட போகிறேன்? என்ன? மாமா, ரகு அண்ணாவிற்கு பிறகு என்னால் உங்களை மட்டுமே தொட முடிந்தது. ஆனால் இனி அதற்கும் அவசியமிருக்காது.
ஏன் ரேணு இவ்வாறு பேசுகிறாய்?
சார், நான் உண்மையை தான் கூறுகிறேன். நீங்கள் காதலிக்கும் பெண்ணிற்கு என்னை பற்றி தெரிந்தால், அது சரிவராது. உங்களுக்கும் பிரச்சனையாகும். எனக்கும் பிரச்சனையாகும். நாம் நெருங்காமல் இருப்பது தான் நல்லது.
இல்லை ரேணு. இனி இவ்வாறு பேசாதே என்று கையை பிடித்தான். ஆனால் அவளுக்கு ஏதும் செய்யவில்லை. நீ என்னை நம்புகிறாய் தானே!
ஆமாம் சார், நான் நம்புகிறேன். அந்த பெண் உங்கள் மீது தவறில்லை என்று எங்கள் அனைவருக்கும் நிரூபித்து விட்டு தான் சென்றிருக்கிறாள்.
அவள் நிரூபித்தாளா?
ஆமாம், அவள் நினைத்திருந்தால் எங்களை பார்த்தவுடன் உங்கள் மீது தவறுள்ளது போல் காட்டியிருக்கலாம். அதாவது அந்த போட்டோவை வைத்துக் கொண்டு எங்கள் முன் கர்ப்பமாக உள்ளதை போலவோ, என்னை ஏமாற்றி விட்டான் என்று கூட நடித்திருந்தால், கண்டிப்பாக நம்பும் படி தான் அந்த போட்டோவை அருமையாக தயாராக்கி இருக்கிறாள். ஆனால் அவள் அவ்வாறு செய்யாமல் அவளது காதலை ஏற்றுக் கொள்ள கூறி தான் உங்களிடம் பேசினாள். அவள் உங்களை மறக்க முடியாமல் தான் திரும்ப திரும்ப வந்து தொந்தரவு செய்திருக்கிறாள்.
நான் என்ன செய்வது?
நீங்கள் அவளிடம் பேசிய விதம் தவறு. அனைவர் முன் பேசாமல் தனியே அழைத்துச் சென்று, உங்களுக்கு யார் மீது காதல் வந்ததோ அவர்களை பற்றியும், எதனால் வந்தது என்று கூறியும் புரிய வைத்திருக்கலாம்.
பிரச்சனை தான் முடிந்து விட்டதே? நாம் பழைய மாதிரியே பேசிக் கொள்வோம்.
யோசிக்கிறேன் என்றாள். பிரச்சனை உங்களுக்கு முடிந்தது. ஆனால் அவளுக்கு முடியவில்லை.
முடித்து விட பார்க்கிறேன் என்றான்.
பார்வதி உள்ளே வந்து, மருத்துவமனையில் ராஜாவிற்கு தலையில் காயமாம். யாரோ ஒரு கைதியை பார்த்துக் கொள்ள சென்று,கைதியை கொல்ல வந்தவர்களுடன் சண்டை போட்டதில் தலையில் அடிபட்டு அவனும் அங்கே இருக்கிறானாம்…கூற,
முதலில் நீ செல். அவன் தனியாக இருப்பான். நான் அவனது குடும்பத்திற்கும், சுந்தர், சூர்யாவிற்கு செய்தியை சொல்கிறேன்.
அதே மருத்துவமனை தான். பாதுகாப்பும் சரியாக இல்லை என்றவுடன் ரேணுவிடம் கூறி விட்டு விரைந்தான். பாலா சென்றவுடன் மற்ற நண்பர்களும் அங்கே வர, ராஜா குடும்பத்தினரும் அழுது கொண்டே வர, அவன் விழித்திருந்தான்.
ஒன்றுமில்லைம்மா, மஞ்சு அழுகிறாயா? கொஞ்சலாக பேசி அவர்களை சமாளிக்க,
பாலாவிடம் கையிலிருந்த ஒரு பர்சை காண்பித்தான். இங்கே ஏதோ இன்னும் சரியில்லை. அவர்கள் சென்றது போல் தெரியவில்லை.நல்ல வாய்ப்பு பிடித்துவிட்டால், இவனை காப்பாற்றி விடலாம். தேடுங்கள் என்றான்.
நீங்கள் இங்கே வந்தது சரியில்லை அம்மா? நிலைமை சரியில்லை நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் அம்மா ராஜா கூற,
உன்னை விட்டு நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று அம்மா கூற, நானும் வீட்டிற்கு செல்ல மாட்டேன் மஞ்சுவும் கூறினாள்.
இங்கே கொலைகாரர்கள் உள்ளனர். நம் அருகில் இருந்து கூட அவர்கள் நம்மை கண்காணிக்கலாம் கூற,சரியாக இருவர் ஒவ்வொறு பக்கமாக தாக்க, அம்மாவை சுந்தரும், மஞ்சுவை சூர்யாவும் பாதுகாக்க, மஞ்சுவோ மிகவும் பயந்து, அப்படியே நிற்க,
ஏய், செல்.. செல்…சூர்யா கத்த, மஞ்சுவோ கவனிக்காமலிருக்க, அவளை எப்படியோ ராஜாவிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் சண்டை நடக்க, அம்மாவும் ராஜா அருகே வர பின்னாலிருந்து வந்த பாலா இருவரையும் சுட்டு பிடிக்க, இடமே அமைதியானது.
ராஜா இனி இங்கே இருப்பது ஆபத்து. நீ வீட்டிற்கே சென்று விடு பாலா கூற, இவனை எப்படி விட்டு செல்வது? ராஜா கேட்க
அப்படியென்றால் இவனையும் அழைத்துச் என்று செல் கூற, இவனை எங்களது வீட்டிற்கா?
ஆமாம்,அப்பாவிடம் நான் சம்மதம் வாங்குகிறேன் பாலா கூற,
டேய் மஞ்சு இருக்கிறாள்.
நீயும் தானே இருக்கிறாய்? இவன் உயிரோடு உனக்கு வேண்டுமன்றால் இது தான் பாதுகாப்பு. இருவர் காவலர் உள்ள இடம் என்பதால் யோசிப்பார்கள். மூன்றே நாட்கள். பின் அவனுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை தேடுவோம்.
அப்பாவை எப்படியோ சம்மதிக்க வைக்க,அவனை அழைத்துக் கொண்டு ராஜா வீட்டிற்கு செல்ல,மஞ்சு அமைதியாகவே இருந்தாள்.
அவளுக்கு கைதி வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை. ராஜாவிற்கு இடையிடையே தலைவலி வந்தது. அவன் யாரிடமும் கூறாமல் விட்டு விட்டான்.
ரேணு வீட்டிற்கு வெளியே வந்தாள். ஒரு பெண் அங்கே வந்து ரேணு கையில் ஒரு சி.டியை வைத்து விட்டு ஓடினாள்.அதை உள்ளே வந்து போட,அனைவரும் வந்து பார்த்தனர்.
நான் கவிதா தான் . அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். உங்களது வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டேன். சார் முதலில் நீங்கள் என்னிடம் அதிக அக்கறை காட்டியது தான் எனக்கு உங்களை பிடிக்க ஆரம்பித்தது. உங்களை பின் தொடர்ந்து வந்து பார்த்தால், உங்களை சுற்றி நிறைய ஆட்கள் இருந்தனர். தனிமையில் இருந்ததனால் அதுவும் பிடிக்க உங்களை காதலித்தேன். உங்களுடன் இருந்தால் நிறைய சொந்தங்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். நீங்கள் காதலிக்கும் பெண்ணையும் பார்த்தேன். என்னை விட பெரியவர், அழகானவர், பொறுப்பானவராகவும் இருக்கிறார். முதலில் அவர் மீது கோபம் இருந்தாலும் இப்பொழுது இல்லை. உங்களுக்கு ஏற்றவள் நானில்லை என்று அழுது கொண்டே கூறி விட்டு, அவர் தான் உங்களுக்கு சரியானவர். சீக்கிரம் காதலை கூறி அவர்களை உங்களுடையவளாக ஆக்கி கொள்ளுங்கள்.இனி உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.
“ஆல் தீ பெஸ்ட் சார்….” முடித்திருந்தாள். ரேணு வருத்தமடைந்தாள். பாலா யாரை தான் விரும்புகிறான்? மனதினுள் நினைத்தாள். இப்படியே இரண்டு நாட்கள் சென்றது.
மருத்துவமனைக்கு சென்று,சமரையும் அவனது குடும்பத்தையும் அழைத்து அவனது வீட்டிற்கு வந்தான்.உள்ளே அழைத்து செல்ல, சமையற்கட்டில் சமைக்க தேவையான சைவ,அசைவ பொருட்களும், குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்கள்,விளையாட்டு சாமான்கள்,வீடியோ கேம்ஸ், புத்தகங்கள் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.
உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஏற்பாடு செய்துள்ளேன்.பத்து நாட்கள் மட்டும் இங்கே இருங்கள். உங்கள் உயிரை காப்பாற்ற தான் இப்படியொரு ஏற்பாடு. உங்களது போனை மட்டும் கொடுத்து விடுங்கள்,இல்லையெனில் கண்டறிந்து விடுவார்கள்.
ரொம்ப நன்றி சார். என்ன தான் ஊருக்கு கிளம்பினாலும் கொல்ல வந்து விடுவார்களோ? அஞ்சினேன் சமர் கூற,
கண்டிப்பாக… என்றான்.
என்ன! அப்படியென்றால் ஏற்கனவே கொல்ல வந்தார்களா? பாலா தலையசைக்க,
நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று அவர்களது போனை எடுத்து கொடுத்தான். இங்கே ரகசிய சொற்களை வைத்து தான் கதவை மூடுவேன். அதை மறுபடியும் கூறினால் தான் நீங்கள் வெளியே வர முடியும்.
சரிங்க சார். நீங்கள் செல்லுங்கள் என்றவுடன் ரேணுவின் வீட்டிற்கு வந்து, ரியாவும், அம்மாவும் ரெடியா?
இன்னும் இரண்டு நாட்கள் இருக்கட்டுமே? ரேணு கூற,
ரகுவிற்கு சந்தேகம் வந்து விடும். உனக்கு பரவாயில்லையா?
இல்லை.
ரியாவும், மதுவும் பாலா மீது கோபமாக திரும்பி உட்கார்ந்திருக்க,
ஹாய் டெடி,பாலா கூப்பிட மது திரும்பிக் கொண்டாள்.
ரியாம்மா….பாலா அழைக்க,
அங்கிள், இன்றே கிளம்ப வேண்டுமா?
நீங்கள் அப்பாவை பார்க்க வேண்டாமா?
பார்க்கணும். நீங்கள் எல்லாரும் எங்களது வீட்டிற்கு வரலாமே!
நேரம் வரட்டும் வருகிறோம். டெடியிடம் சென்று அடுத்த முறை ரியா இங்கே வரும் போது உன்னுடனே இருப்பாள் கூற, அவனிடம் ஏதும் பேசாமல் ரியாவிடம் வந்து, உனக்காக காத்திருப்பேன் .பத்திரமாக சென்று வா என்று அவளது கையில் ஒரு சிகப்பு கயிற்றை கட்டி விட்டு, அதை நீ என்றும் அவிழ்க்க கூடாது கூறினாள்.
ரியா மதுவை கட்டிக் கொண்டு, சென்று வருகிறேன் அனைவரிடமும் கூறி விட்டு ராஜம்மாவும்,ரியாவும் கிளம்ப, மதுவும் ரேணுவும் அழுதனர்.குழந்தைகளின் பாசம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
“அன்பை
விதை போட்டு
வளர்க்க
தேவையில்லை.
செயலாலே
உருவாகும்.
நம்மை
விட்டு
நீங்காதிருக்கும்
உயிராகும்.
அன்பு
உறவின் முதற்படி
உடம்பின்
உயிரோட்டமாக திகழும்.
கண்ணிற்கு இமை
எவ்வளவு
அவசியமோ!
அது போல் உயிர் வாழ
அன்பும் அவசியம்.
ஒருவனது
வாழ்வில் அன்பு
கிடைக்காதென்றால்
அவ்வாழ்வு
பாலைவனமாகும்.
சோலையாக மலராது.
அன்பு என்னும்
ஊற்றில்
அனைவரும்
இன்பமாக
குளிருவோமாக!”
அம்மா, நான் கல்லூரிக்கு கிளம்புகிறேன் மஞ்சு செல்ல,வா அழைத்து செல்கிறேன் என்று வண்டியை அவள் முன்பு நிறுத்தினான் ராஜா.
அவள் ஏறி விட்டு, உனக்கு என்ன ஆயிற்று? என்னை பலமாக கவனிப்பது போல் உள்ளது.
அப்படியென்றால் கீழே இறங்கு என்றான்.
இல்லை அழைத்து செல். இருவரும் கல்லூரிக்கு வர உள்ளே அதே கல்லூரியில் கவிதாவிடம் தோழிகள்
நீ எதற்காக இரண்டு நாட்களாக வரவில்லை கேட்க, அவள் அமைதியாகவே இருந்தாள்.
ஏய், உன்னிடம் தான் கேட்கிறோம் என்றனர்.
அவள் எதற்கும் பதிலளிக்காமலிருக்க, அவளை திட்டி விட்டு நகர்ந்து சென்றனர்.
பின் ராஜாவும்,மஞ்சுவும் கல்லூரிக்கு வந்தனர்.அவனை பார்த்து விட்டு,
ஹே, அங்கே பாருங்கடி,மஞ்சுவின் அண்ணன். அழகாக இருக்கிறார் என்று ராஜாவை ரசித்துக் கொண்டிருக்க, அவரது தலையில் அடிபட்டிருக்கிறது. பாருங்களேன்! ஒருத்தி கூற, கவிதாவும் திரும்பி பார்த்தாள்.
ராஜாவை பார்த்து விட்டு,இவர் மஞ்சுவின் அண்ணனா? என்று கேட்க,
மற்றவர்கள் அவள் பக்கம் திரும்பி நாங்கள் எத்தனை முறை உன்னை கூப்பிட்டோம் என்று முறைக்க, ஒருத்தி மட்டும் ஆமாம் இவர் தான் மஞ்சரியின் அண்ணன் கூற, கவிதா விழித்துக் கொண்டிருந்தாள்.
அவருக்கு தற்பொழுது சஸ்பெண்ட் பண்ணி இருக்கிறார்களாம்! ஒரு பெண்ணிற்கு உதவுகிறேன் என்று கைதியை தலையில் அடித்து பலத்த காயமாக்கி விட்டாராம்!
என்ன சஸ்பண்டா? கேட்டாள் கவிதா.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க மஞ்சு அங்கே வந்து, கவிதாவை சரமாரியாக திட்டினாள்.
உனக்கு எத்தனை முறை போன் செய்வது? எடுக்க முடியாதா? இவள் கத்துவதை ராஜா வெளியே இருந்து பார்த்தான். கவிதா திரும்பி உட்கார்ந்து இருந்ததால் அவனுக்கு கவிதா அங்கே இருப்பது தெரியவில்லை.அவன் கிளம்பினான்.
கவிதா, மஞ்சு பக்கத்தில் இருந்த மூவரும் தோழிகள் தான். மஞ்சு திட்டிக் கொண்டிருக்க, உன் அண்ணனின் வேலை பிரச்சனை என்னால் தான் என்று கூறினாள் கவிதா.
என்னடி சொல்ற? அவனை உனக்கு தெரியுமா?
ம்ம்…தலை கவிழ்ந்து கொண்டே, கைதி அவளிடம் காதலை கூறிய அந்த கலவரத்தை பற்றி கூறினாள்.
இதில் உன் தவறு ஏதுமில்லை. வருத்தப்படாதே? அவன் எப்பொழுதும் அப்படிதான். யாருக்காவது உதவி விட்டு பின் அவன் பிரச்சனையில் மாட்டிக் கொள்வான்.என்ன! இம்முறை ஸ்டேசனில் வைத்து நடந்ததால் வேலைக்கு பிரச்சனையாகி விட்டது. இதனால் அவனுக்கு எங்கள் அப்பாவிடம் தினமும் திட்டு விழுந்து கொண்டே இருக்கிறது என்று கூறவும் கவிதாவின் முகம் வாடியது.
அட, இதற்கெல்லாம் வருத்தப்படாதே! எப்படியும் இருவருக்கும் சண்டை நடப்பது சகஜம் தான். அதெல்லாம் பெரிய விசயமே இல்லை.
ஏன்டி, அது என்னடி கட்டு? என்று ஒருத்தி கேட்க, நடந்ததை கூறி, அந்த கைதி அவளது வீட்டில் தான் இருக்கிறான் கூறினாள்.
உங்களுடைய வீட்டிலா?
அவனுடைய பாதுகாப்பு என் அண்ணனிற்கு முக்கியம் தானே!
நீ இருக்கும் இடத்தில் இப்படி ஒருவனை தங்க வைக்கலாமா?
இடம் கிடைக்கவே இல்லை. என்ன செய்வது?
கவிதா யோசித்து விட்டு, இடம் கிடைத்தால் அவனை வீட்டிலிருந்து கிளப்பி விடுவார்கள் தானே?
ஆமாம்,ஆனால் அண்ணனும் சேர்ந்து செல்லும் படியாகுமே!
கொஞ்ச நாட்கள் தானே? கவிதா கேட்க,
என் அண்ணன் மற்றவர்களிடம் கூட நன்றாக நேரத்தை கழிப்பான். வீட்டிற்கு வந்தால் நேராக அறைக்கு செல்வான். வெளியே செல்வான்,வருவான். நாங்கள் சேர்ந்து கூட சாப்பிட்டது இல்லை. அவனுடன் வெளியே எங்கேயும் சென்றதில்லை. ஆனால் இப்பொழுது நன்றாகப் பேசுகிறான். அவனது செயல்கள் அனைத்தும் மாறி விட்டது. வகுப்பு ஆரம்பித்தது. அனைவரும் உள்ளே சென்றனர்.
வகுப்பு முடிந்து வெளியே வர,ராஜா மஞ்சுவை அழைத்து செல்ல வந்தான். அனைவரும் வெளியே ராஜா அருகே வந்தனர். மற்றவர்கள் அவனிடம் பேச,
ஹே, கவி எங்கடி? மஞ்சு கேட்க, நம்முடன் தான் வந்து கொண்டிருந்தாள். போன் வந்தது. பேசிக் கொண்டிருப்பாள் ஒருத்தி கூற, இதோ வந்து விட்டாள் மற்றவள் கூற,
ராஜா அவளை பார்த்து விட்டு, நீயும் இங்கே தான் படிக்கிறாயா?
அவள் தலையை மட்டும் அசைத்து விட்டு, போனை நீட்டினாள்.
என்ன?
பேசுங்கள் கூறினாள். அவன் யாரென்று கேட்க வார்டன் தான் பேசினார்கள்.
கவிதா எல்லாவற்றையும் கூறினாள். இங்கே வீடு ஒன்று என்னுடையது தான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காலியானது. நீங்கள் வேண்டுமென்றால் எடுத்து கொள்ளுங்கள். அவன் கவிதாவை பார்த்து முறைத்து விட்டு, நான் என் நண்பனிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று துண்டித்தான்.
நீ எதற்காக எனக்கு உதவ வேண்டும்?
முதலில் என்னை மன்னித்து விடுங்கள் நடந்த பிரச்சனை அனைத்திற்கும்.
உன் தவறு என்ன உள்ளது? மஞ்சு கேட்க,
என் மீதும் தவறு உள்ளது ஒத்துக் கொண்டாள் கவிதா.
எனக்கு தேவையில்லை என்றான் ராஜா.
நீங்கள் உதவி செய்தீர்களே! அதற்கு பதிலாக என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
முடியாது என்றான்.
உங்களுக்கு தேவைப்படாது. என்னுடைய தோழிக்கு தேவைப்படும்.
அவன் கோபமாக,நான் தான் தேவையில்லை என்கின்றேனே? விட வேண்டியது தானே!
நான் பாலா சாரிடம் பேசிக் கொள்கிறேன் மனதில் உள்ள சங்கடத்தை மறைத்துக் கொண்டு,
என்ன? அவனிடம் பேசுவாயா? அவன் முகத்திலாவது விழிக்க முடியுமா? உனக்கு அசிங்கமாக இல்லை.ஒன்று செய் அந்த வீடியோ போல் ஏதாவது செய்து அவனிடம் பேசுவாயா? கத்தி கேட்டு விட, அவளது கண்ணிலிருந்து நீர் சிந்தினாள்.
என்னடா பேசுகிறாய்? என்ன வீடியோ? மஞ்சுவும் தோழிகளும் கேட்க, அப்பொழுது தான் புரிந்தது. என்ன பேசி விட்டோம்? இவளிடம் என்ன கூறுவது? பார்க்க, கவிதா அழுது கொண்டே அங்கிருந்து ஓடினாள்.
ஏய் நில்லுடி,…தோழிகள் கத்த, அவள் அழுதவுடன் மஞ்சுவிற்கு ஏதோ தவறாக உள்ளது என்று புரிந்து,
என்னடா நடக்கிறது? என்ன வீடியோ? என்று கேட்க, அவனோ கவிதாவை பார்க்க, அவள் கண்ணிலிருந்து மறைய அவனுக்கு பயம் உண்டானது.
தோழிகளில் ஒருத்தி, அவள் இரண்டு நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை.இன்றும் வந்ததிலிருந்து ஏதும் பேசாமல் தான் இருந்தாள்.
மஞ்சுவின் அண்ணன் நீங்கள் என்றவுடன் தான் பேச ஆரம்பித்தாள். மஞ்சுவிற்கும் பதில் கூறினாள். உங்களுக்கு நடந்தவற்றிற்கு அவள் தான் காரணம் என்று மஞ்சுவிடம் கூட மன்னிப்பு கேட்டாள்.
நீங்கள் உங்கள் தங்கையின் பாதுகாப்பிற்காக செய்ய வேண்டியதை, அவள் தோழிக்காக செய்தாள். அதில் தவறேதும் இல்லை. ஏற்கனவே உங்களுக்கு தெரிந்து அவள் தவறிளைத்திருந்தால்,அதனை இவ்விடத்தில் காட்டக் கூடாது ஒருத்தி சினமுடன் கூற, மஞ்சுவை வண்டியில் ஏற்றிக் கொண்டு நேராக விடுதிக்கு சென்றான்.
விடுதியில் கவிதாவின் அறை தோழிகள் பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் கவிதா எங்கே? என்று ராஜா கேட்க, அவள் இன்னும் வரவில்லையே?
இன்னும் வரவில்லையா? என்று மஞ்சு பதட்டப்பட,
அவளுக்கு என்ன ஆயிற்று? எதற்கு பதறுகிறீர்கள்? என்று கேட்க,
அவள் வருத்தமாக இருந்தால்,எங்கே செல்வாள்?
பூங்கா,கோவில் என்று கூறினார்கள்.மறுபடியும் அவர்கள் கேட்க, ராஜா மஞ்சுவை இழுத்துக் கொண்டு வேகமாக வண்டியில் ஏற, அந்த பெண்களுக்கு புரிந்தது. உடனே வார்டனிடம் கூறி விட்டு அவர்களும் அவளை தேடி கிளம்பினார்கள்.
ராஜாவும்,மஞ்சுவும் கோவிலில் இறங்கி உள்ளே முழுவதும் தேடி விட்டு வந்தனர். அங்கே அவள் இல்லாததனால் பூங்காவிற்கு கிளம்பினார்கள்.
அவள் அங்கே தான் ஊஞ்சலில் வெறித்தனமாக ராஜா கூறியதை நினைத்து நினைத்து ஆட ஒரு கட்டத்தில் கீழே விழுந்து அழுதாள். அனைவரும் அவளை வேடிக்கை பார்க்க மேலும் அழுதாள்.
ஒரு பாட்டி அருகே வந்து அவளை தூக்கி விட்டு, எதுவும் பிரச்சனையாம்மா? பிரச்சனையை எதிர் கொள்வது தான் புத்திசாலித்தனம் என்று வெளியே அழைத்து வந்தார். அவர் கையில் அழகான குட்டி நாய் ஒன்று வைத்திருந்தார். அதன் காலில் கட்டு போட்டு இருந்தது. அதை கையில் வாங்கி விளையாட ஆரம்பித்தாள்.அது கீழிறங்கி அவளுடன் விளையாடிக் கொண்டே ரோட்டிற்கு வந்தது. கார் அதனை மோத வர அதே நேரம் ராஜாவும், மஞ்சுவும் வந்தனர்.
கவிதா நாயிற்கு அடி பட்டு விடும் என்று பயந்து காரை நோக்கி வர, அவர்கள் தவறாக புரிந்து வண்டியை சட்டென நிறுத்தி இருவரும் ஓடி வந்தனர். கார் மோதும் சமயம் குறுக்கே கவிதா வந்து நாயை பிடித்து பயத்தில் அப்படியே உட்கார்ந்தாள். காரை ஓட்டியவர் அவளை பார்த்ததனால் காரை திருப்ப உயிர் பிழைத்தாள். காரில் இருந்தவன் உள்ளிருந்து வந்து அவளை திட்ட வருவதற்குள், அவளது கன்னத்தில் அறை விழுந்தது. ராஜா தான் கோபத்தில் அறைந்து விட்டான். அவள் ஒரு கையை கன்னத்திலும், மறு கையில் குட்டி நாயை பிடித்தவாறு எழுந்தாள்.
டேய், அண்ணா! எதற்கு டா அவளை அடித்தாய்? கேட்டுக் கொண்டே அவளை பார்க்க நாயின் காலில் போட்டிருந்த கட்டிலிருந்து இரத்தம் வர, பாட்டியிடம் ஓடி சென்று இவனை வைத்திருங்கள் வருகிறேன் மருந்து வாங்கி அதற்கு போட்டு விட, இருவருக்கும் அப்போது தான் புரிந்தது நாயை காப்பாற்ற தான் இடையே சென்றிருக்கிறாள்.
அய்யோ போச்சு! இப்பொழுதும் தவறு செய்து விட்டேனே! அவளுக்கு எதிரே நின்று ராஜா பார்த்துக் கொண்டிருக்க, மஞ்சுவும் அங்கேயே நின்றாள்.
எதற்குப்பா, அந்த பெண்ணை அடித்தாய்? பாட்டி கேட்க,
அவன் என்ன கூறவென்று தெரியாமல் திகைக்க, அவள் தவறான முடிவெடுத்து விட்டாளோ! என்று எண்ணி தான் அடித்து விட்டான் என்று கூறி விட்டு,
கவி, வா போகலாம் மஞ்சு அழைக்க, அவள் எதுவும் கூறாமலிருக்க, ராஜா முன்னே வந்து உன்னிடம் நான் அவ்வாறு பேசி இருக்க கூடாது. அடித்ததற்கும் சேர்த்து மன்னித்து விடு கூற,அவள் பேசவே இல்லை. அவனுக்கு ஒரு மாதிரி இருக்கவே…அவளை பார்த்தவாறே நின்றான்.
கவியிடம் பாட்டி, நான் இவனை பார்த்து கொள்கிறேன். முதலில் அவர்களிடம் பேசு.
பாட்டி அவர்களிடம் பேச ஏதுமில்லை. நான் யார் அவர்களுக்கு? எனக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கூற,
என்ன! எந்த சம்பந்தமும் இல்லையா? நம்முடையது மூன்று வருட நட்பு. எவ்வளவு சாதாரணமாக கூறுகிறாய்? கோபித்துக் கொண்டாள் மஞ்சு. இங்கே பார். உனக்கும், என் அண்ணனுக்கும் என்ன பிரச்சனை என்று கூட தெரியாது. அவன் மேல் உள்ள கோபத்தை என் மீது காட்டாதே?
கவிதா அவளை கட்டிக் கொண்டு மன்னித்து விடு. இனி அவ்வாறு கூற மாட்டேன் கூறி விட்டு, ராஜாவிடம் திரும்பினாள்.