மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(2)

அத்தியாயம்- 6(2)

தர்ஷினி ஒரு புறத்தில் இருந்து நெட்டை அவிழ்த்து கொண்டிருக்க மறுபக்கம் நின்று அவிழ்த்தான் இன்பா. நெட்டை மடித்து வைக்க உதவி செய்தான். தர்ஷினி எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.

“கையை விடு” என்றாள் தர்ஷினி.

“என்னை அவாய்ட் பண்ணாதடி.. கஷ்டமா இருக்கு” என்றான்.

“நீ பண்றதெல்லாம் மட்டும் எனக்கு சந்தோசமா இருக்கு” என்றாள்.

“நான் அந்த ஃபேக்டரி ஓனர்கிட்ட தெளிவா பேசிட்டேன். எல்லாத்தையும் சரி செஞ்சுடுவான்” என்றார்.

“அப்படியா?” என ஏளனமாக சிரித்தாள் தர்ஷினி.

“நான் செய்றது பிடிக்கலைன்னா வாய்விட்டு திட்டு, சண்டை போடு, இப்படி பண்ணாத… ஹர்ட்டிங்கா இருக்கு…” என்றான்.

“உனக்கா…? இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய பெரிய கேஸை எடுத்து நடத்தி பெரிய கோடீஸ்வரனா மாறப்போற. நான் உன் ஞாபகத்துல கூட இருக்காத பத்திரிக்கையில் வேலை பார்க்குற சாதாரண ரிப்போர்ட்டர். சிட்டியோட லீடிங் கிரிமினல் லாயரா மாறப்போறவர் நான் பேசாம போனா ஹர்ட் ஆவாரா என்ன?” எனக் கேட்டாள்.

“ஏன் உனக்கு தெரியாதா…?”

“உன்னைப் பத்தி இப்பதான் தெரிஞ்சிகிட்டேன். கையை விடு” என்றாள்.

அப்போது தர்ஷினியின் பெற்றோர் பத்மினியும் முருகேசனும் வர, அவர்களைப் பார்த்ததும் இன்பா தர்ஷினியின் கையை விட்டான். தர்ஷினி உள்ளே சென்றுவிட்டாள். இருவரையும் வரவேற்று அவர்களுடனே இன்பாவும் உள்ளே சென்றான்.

இன்பாவையும் உட்கார வைத்துக் கொண்டே பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். தர்ஷினி லட்சுமியின் அருகில் அமர்ந்திருந்தாள்.

“தர்ஷினிக்கு வயசு 24 ஆகுது. இப்ப இவளுக்கு கல்யாணம் பண்ணினாதானே அடுத்தவளுக்கு சேர்க்க முடியும். இப்ப வேண்டாம் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் அவகிட்ட சொல்லுங்க” என்றார் பத்மினி.

“ஆமாம் நீங்க சொன்னா கேட்டுப்பா” என லட்சுமியை பார்த்து கூறினார் முருகேசன்.

“கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டீங்களா?” என கேட்டார் லட்சுமி.

“ஆமாம்” என்றார் பத்மினி.

“நான் ஒன்னு சொல்லட்டுமா?” என கேட்டார் லட்சுமி.

“என்ன அண்ணி? தயங்காம சொல்லுங்க” என்றார் பத்மினி.

“நான் இன்னும் இன்பா அப்பாக்கிட்ட கூட இதைப்பத்தி சொல்லலை” என பீடிகை போட்டார் லட்சுமி.

எல்லோரும் அவரையே பார்த்திருக்க, “தர்ஷினிய ஏன் வேற இடத்தில கொடுக்கணும்? நம்ம இன்பாவுக்கும் தர்ஷினிக்குமே கல்யாணம் பண்ணி வச்சா என்ன?” என கேட்டே விட்டார்.

இன்பாவே இதை எதிர்பார்க்கவில்லை. பத்மினி லட்சுமியின் கைகளை மகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டார்.

“எனக்கு கூட ஆசைதான் அண்ணி. இவ கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு சொல்லிட்டா நானே கேட்கலாம்னு இருந்தேன்” என்றார்.

முருகேசனும் சாரங்கபாணியும் கூட மகிழ்ச்சியாக இருந்தனர்.

“இது நம்மளுக்கு தோணலை. இவங்களுக்கு தோணியிருக்கு பாருங்களேன் முருகேசன்” என்றார் சாரங்கபாணி.

“ஆமாம் தள்ளிப்போட வேண்டாம். நாள் பார்த்திடலாமா?” என்றார் முருகேசன்.

“அப்பா…” என ஆட்சேபிக்கும் குரலில் அழைத்தாள் தர்ஷினி.

“என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா? நீங்களே எல்லாத்தையும் முடிவு பண்ணிப்பீங்களா? எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை” என்றாள்.

“சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பேசாத தர்ஷினி. உன் லட்சுமி அத்தை வீட்ல அவங்க மருமகளா இருக்க உனக்கு கசக்குதா?” எனக் கேட்டார் பத்மினி.

“நீ இன்பா வம்பு பண்ணிக்கிட்டே இருக்கான்னு நினைக்காதடா. கல்யாணத்துக்கு அப்புறம் எந்த வம்பும் பண்ணமாட்டான். அப்படி பண்ணினா அவனுக்கு சோறு போட வேண்டாம்” என்றார் லட்சுமி.

“ஆமாம் இன்பா மட்டும்தான் வம்பு பண்றானா? உங்க மருமக ஒண்ணுமே செய்றது இல்லையா?” என்றார் பத்மினி.

“சரின்னு சொல்லுடா” என அவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கேட்டார் லட்சுமி.

“இல்ல அத்தை எங்களுக்குள்ள எதுவும் ஒத்துப்போகாது” என்றாள் தர்ஷினி.

இன்பா தர்ஷினியைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னம்மா இப்படி சொல்ற? கொஞ்சம் யோசிச்சு சொல்லுமா” என்றார் சாரங்கபாணி.

“இல்ல மாமா இதுல யோசிக்க எதுவும் இல்லை. எனக்கும் உங்க பையனுக்கும் எப்போதுமே ஒத்துவராது. என்னை வற்புறுத்தாதீங்க” எனக் கூறி எழுந்து வெளியே சென்று விட்டாள்.

அவள் பின்னாலேயே கோவமாக எழுந்து சென்றான் இன்பா.

வேகமாக நடந்து கொண்டிருந்த அவளை தடுத்து நிறுத்தினான்.

“எங்க என்னை பார்த்து சொல்லுடி என்னை பிடிக்கலைன்னு” எனக் கேட்டான்.

அவனது முகத்தை நேருக்கு நேராக பார்த்து தெளிவாக “பிடிக்கலை போதுமா?” எனக் கூறினாள்.

“நான் உனக்கு வேண்டாமா?” என கேட்டான்.

“வேண்டாம்”

“போடி… நீ என்ன என்னை வேணாம்னு சொல்றது. நான் சொல்றேன், நீ எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்” என்றான்.

“ச்சீய் போடா”

“நீ போடி”

“போகத்தான் போறேன் கையை விடு”

தான் பிடித்துக் கொண்டிருந்த அவளது கையை பார்த்தான். கோவமாக இருந்ததில் வேகமாக மூச்சுகள் வெளியே வந்தன.

கையை விடாமல் இறுக்கிப் பிடித்தான்.

“விடுடா”

“ஐ லவ் யூ தர்ஷினி” என்றான்.

தர்ஷினி கோவமாக இன்பாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான் உன்னை லவ் பண்றேன். அதுக்காக நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது” என்றான்.

“ஐ ஹேட் யூ” என்றாள்.

“பொய். எனக்கு தெரியும். நீயும் என்னை லவ் பண்ற”

“அப்படின்னு நீயா நினைச்சுக்கிட்டா..? உன்னை எனக்கு பிடிக்கல. என் கையை விடப் போறியா இல்லையா?”

அதற்குள் பெரியவர்கள் எழுந்து வெளியே வந்துவிட்டனர்.

“என்னடா பண்ற.. திருப்பி வம்பு பண்றியா அவகிட்ட? கையை விடு முதல்ல” என்றார் லட்சுமி.

கையை விட்டவன் முருகேசனிடம் வந்தான்.

“மாமா உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கலையாம். மத்தபடி கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டா” என்றான் இன்பா.

“இவன் பொய் சொல்றான். வக்கீல் சார் கிட்ட சொல்லுங்க, கோர்ட்ல மட்டும் பொய் பேச சொல்லி” என்றாள் தர்ஷினி.

“அப்போ அவளுக்கு வேற மாப்பிள்ளை பாருங்க” என்றான் இன்பா.

முருகேசன் தர்ஷினியின் முகத்தைப் பார்க்க, “இன்னும் ரெண்டு வருஷத்துக்கு எனக்கு கல்யாண பேச்சே எடுக்கக்கூடாது” எனக் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல திரும்பினாள்.

“நான் உன் மனசுல இருக்கிறதாலாதானே இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?” எனக் கேட்டான் இன்பா.

அவள் அப்பாவிடம் வந்து, “எனக்கு இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் கல்யாணம். மத்தபடி இவன் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைன்னு அவன்கிட்ட சொல்லிடுங்க” என்றாள்.

“இதெல்லாம் சும்மா மாமா. அவ மனசுல நான்தான் இருக்கேன். என் மேல கோவமா இருக்கிறதால வேண்டாம்னு சொல்றா. என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க அவளால முடியாது. அதான் இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றா” என்றான் இன்பா.

“இங்க பாருடி. நம்ம எல்லாம் மிடில்க்ளாஸ் குடும்பம். காலாகாலத்துல எல்லாத்தையும் பண்ணி வச்சாதான் அடுத்தடுத்து என்னன்னு நாங்க பார்க்க முடியும். கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு” என்றார் பத்மினி.

“அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்திடு. எப்படி அவன் நீ சொல்றதை கேட்காம போவான்னு நானும் பார்க்கிறேன்” என்றார் லட்சுமி

“ம்மா… நீ கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இருந்தா நல்லா இருக்கும்” என்றான் இன்பா.

“எனக்கு கல்யாணம் வேண்டாம். மீறி எல்லாரும் வற்புறுத்தினா நான் ஏதாவது ஹாஸ்டல் போயிடுவேன்” எனக்கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள் தர்ஷினி.

“எல்லாம் இவனாலதான். அந்த கேஸை எடுத்து நடத்தாமல் இருந்தாதான் என்னவாம்?” எனக் கோவமாகக் கேட்டார் லட்சுமி.

“இப்போ இதை வேண்டாம்னு சொல்லுவா? அப்புறமா ஒன்னொன்னா வேண்டாம்னு சொல்லி, கடைசில வக்கில் வேலையே வேண்டாம் விட்டுடுன்னு சொல்லுவா. அவ பேச்சுகெல்லாம் என்னால் ஆட முடியாது. உங்களுக்கெல்லாம் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம். கொஞ்சநாள் அமைதியா இருங்க” எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான் இன்பா.

கோவமாக வெளியேறிய தர்ஷினி ரஹீம் பாய் வீட்டின் வெளியே நின்றிருந்தாள். ஃபெலிஸ் பறந்து வந்து அவள் தோள் மீது அமர்ந்து கொள்ள, தன் புறங்கையில் எடுத்துக் கொண்டு முகத்திற்கு நேராக வைத்துக்கொண்டாள்.

தர்ஷினியின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

“லவ் யூ… ஐ லவ் யூ ஃபெலிஸ்… லவ் யூ ஸோ மச் ஃபெலிஸ் ” என்றாள்.

ஃபெலிஸ் பறந்து சென்றது. அது பறந்து செல்வதை வெறித்துப் பார்த்து நின்று கொண்டிருந்தாள் தர்ஷினி.