அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சுமி எழுந்தாலும் தாமதமாகவே பத்மினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவர்கள் வந்தபோது இன்பா தர்ஷினி இருவருமே எழுந்து குளித்துவிட்டு வெளியில் அமர்ந்து தேநீர் பருகி கொண்டிருந்தனர்.
இருவரையும் பார்த்த தர்ஷினி, “வர வர ரெண்டுபேரும் சோம்பேறிங்க ஆயிட்டீங்க. மணி என்னாகுது? இதுதான் எழுந்துவர நேரமா?” எனக் கேட்டாள்.
அவள் காதைப் பிடித்து திருகிக் கொண்டே இன்பாவை பார்த்து, “என்னடா உன் பொண்டாட்டி என்னையவே கேள்வி கேட்கிறா. பேசாம வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” என கேட்டார்.
“நீதானே மகாலட்சுமி, என் கண்ணு, என் தங்கம், அவ மட்டும் எனக்கு மருமகளா வரலை உன்னையே தள்ளி வ ச்சிடுவேன் அப்படி எல்லாம் மிரட்டின…? இப்ப என்கிட்ட வந்து குறை சொன்னா…? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றான்.
“நீ நல்லா வருவடா” என்றார் லட்சுமி.
சிரித்த பத்மினி, “சரி காலை சாப்பாடு அங்கதான் ரெண்டு பேரும் அங்க வந்துடுங்க” என்றார்.
“அம்மா எனக்கு பூரி வேணும்” என்றாள் தர்ஷினி.
“செஞ்சி தரேன் டி” என்றார் பத்மினி.
“இன்பாவுக்கு கேசரி வேணுமாம்” என்றாள்.
“எல்லாம் செய்றேன்” எனக் கூறிக் கொண்டே லட்சுமியுடன் உள்ளே சென்றார்.
“உனக்கு வேணும்னா டைரக்டா நீ கேளுடி. என்னை எதுக்கு இழுத்து விடுற…? எனக்கு கேசரி எல்லாம் வேண்டாம். நீதான் வேணும்” என்றான்.
அவன் தலையில் செல்லமாய் கொட்டியவள், “என்னை பார்த்து கண்ணு வச்சுடுவாங்க. அப்புறம் என்னால சரியா சாப்பிட முடியாது. அதான் நீ கேட்டதா சொன்னேன்” என்றாள்.
“என் பொண்டாட்டி ரொம்ப ரொம்ப புத்திசாலி…” என்றான்.
அங்கிருந்து சில பொருட்களை எடுத்து கொண்டு லட்சுமியும் பத்மினியும் மீண்டும் பத்மினி வீட்டிற்கு சென்று விட்டனர்.
காலை விருந்து பத்மினியின் வீட்டில் நடந்தது. மதியம் ரஹீம் பாய் வீட்டில் விருந்து. மாலையில் சிறியவர்கள் எல்லோரும் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தனர். தர்ஷினியையும் இன்பாவையும் விளையாட அழைத்தனர்.
தர்ஷினியும் ரவியும் ஒரு அணியாகவும், ரம்யாவும் இன்பாவும் மற்றொரு அணியாகவும் விளையாட மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
எப்பொழுதுமே இன்பா விளையாடும் அணி வெற்றி பெற்றுவிடும். அன்று முதல் முறையாக தோற்றுப்போனது.
ரவியும் தர்ஷினியும் வெற்றிக்களிப்பில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
“என்னண்ணா நீ…? உன்னாலதான் தோத்துட்டோம்” என ரம்யா குறைபட்டுக் கொண்டாள்.
“இனிமே நீ ஜெயிக்கணும்னா இன்பா கூட சேர்ந்து விளையாடாத. உன் அண்ணி கூட சேர்ந்து விளையாடு. ஜெயிச்சுடுவ” என ரம்யாவிடம் கூறினான் பஷீர்.
“டேய் சும்மா இருடா நீ. அடுத்த முறை ஜெயிச்சிடலாம் ரம்யா” என்றான் இன்பா.
“அப்படிங்கிற… நீ ஜெயிப்பியா?” என சந்தேகமாக கேட்டான் பஷீர்.
“கண்டிப்பா… ஏன்னா எங்களுக்கு எதிரா நீயும் நசீரும்தான விளையாட போறீங்க…” என்றான்.
“ம்ஹூம்… நான் இல்லைன்னா நசீர் யாராவது ஒருத்தவங்கதான். கூட இன்னொரு ஆள் தர்ஷினி… நீ ஜெயிப்ப…?” என பஷீர் கேட்க,
“ஓஹோ… கதை அப்படி போகுதா?” என ரம்யா கூற,
“டேய் சின்ன பிள்ளைங்க முன்னாடி என்ன பேசுறதுன்னு தெரியாது..? வாடா இப்படி” என அவனைத் தள்ளிக் கொண்டு சென்றான் இன்பா.
எல்லோரும் இருக்கும் பொழுது, ரகசியமாய் இன்பா தர்ஷினியை பார்க்க, யாருமறியாமல் அவளும் இன்பாவை தேடினாள். கண்களால் காதல் பேசிக்கொண்டார்கள். இருவருமே காதலில் திளைத்து போயிருந்தனர்.
இன்பாவின் அத்தை பூரணி மட்டும் வீட்டிற்கு வந்தார். பிள்ளைகள் இல்லாத அவருக்கு இன்பா என்றால் மிகவும் இஷ்டம். பிரபஞ்சன் கோவமாக இன்பாவிடம் பேசியது அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவரது பேச்சு எல்லாம் பிரபஞ்சனிடம் எடுபடாது. மனதுக்கு கேட்காமல் கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு இங்கு வந்து விட்டார்.
தன் அண்ணன் மகனின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதே விட்டார்.
“அத்தை அழறதை நிறுத்துங்க. என்னைக்கும் நான் உங்க பிள்ளை தான். மாமா மேல கூட எனக்கு கோவம் இல்லை. அவருக்கு என்னை பேச எல்லா உரிமையும் இருக்கு. அவருக்கு கோவம் குறையட்டும். நான் வீட்டுக்கு வரேன். அதுவரைக்கும் நீங்க என்னை வந்து பாத்துட்டு போங்க” எனக்கூறி சமாதானம் செய்தான். அதன்பிறகுதான் தெளிவடைந்து பூரணி அவரது வீட்டிற்கு சென்றார்.
அன்றிரவு தனிமையில் தர்ஷினி இன்பாவிடம், “உங்க அத்தை ரொம்ப அழுதுட்டாங்கலல்ல… என்னால தான் நீ உன் மாமாகிட்ட இருந்து பிரிஞ்சிட்டியா?” என கேட்டாள்.
“நீ என்ன அவர்கிட்ட போய் பிரச்சனை பண்ண சொன்னியா? உன்னால எல்லாம் ஒன்னும் இல்லை. அப்புறம்… நான் என் மாமாகிட்ட இருந்து பிரியவும் இல்லை. கொஞ்ச நாள்ல அவருக்கு கோவம் குறைஞ்சதும் திருப்பி எப்பவும்போல என்கிட்ட பேசிடுவார். நீ வொர்ரி பண்ணிக்காத” என்றான்.
“என் மண்டைக்குள்ள உன் அத்தை அழுததுதான் ஓடிகிட்டு இருக்கு” என்றான்.
“தப்பாச்சே… எல்லாத்தையும் நான் மறக்கடிக்கவா?” என கேட்டுக்கொண்டே, தர்ஷினியை ஆட்கொண்டான். சொன்னதுபோலவே அவனையன்றி வேறு எதுவும் தர்ஷினியின் நினைவில் இல்லாமல் செய்தான்.
காலை வேளையில் சமையல் செய்து கொண்டிருந்தாள் சுப்ரியா. அழைப்பு மணி ஒலிக்க யாராக இருக்கும் என எண்ணிக்கொண்டே கதவை திறந்தாள். கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தான் சரவண பாண்டியன்.
அவனை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே “வாங்க…” என்றாள்.
பூங்கொத்தை அவளிடம் நீட்டி ஒன்றும் சொல்லாமல் வசீகரமாய் சிரித்தான். சுப்ரியா வாங்கிக்கொள்ளாமல் “எதுக்கு இது?” என கேட்டாள்.
“வாங்கிக்க சொல்றேன்” என்றான்.
அவன் ஒருமையில் பேசியதை குறித்துக் கொண்டே கையில் வாங்கினாள்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என பட்டென கேட்டான்.
“என்ன?” என அதிர்ந்து போய் கேட்டாள் சுப்ரியா.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன்”
“நீங்க கிளம்புறீங்களா?” என கேட்டுக் கொண்டே அவன் கொடுத்த பூங்கொத்தை அவனிடமே நீட்டினாள்.
“எனக்கு இது வேண்டாம்… வேற வாங்கித்தா. வாங்கிக்கிறேன்” எனக்கூறி அவன் முன் நீண்டிருந்த அவள் கையை கீழே இறக்கி விட்டான்.
“என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? கல்யாணம் பண்ணிக்க கேக்குறீங்க?”
“நீ சுப்ரியா. வயசு 24. ஜர்னலிஸ்ட். லாஸ்ட் இயர் உன் பேரண்ட்ஸ் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. சொந்தக்காரங்க யாரும் இல்லை. தர்ஷினி நசீர்ன்னு 2 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. உன் ஆஃபீஸ்ல ராபர்ட்ன்னு இன்னொரு ஃப்ரெண்ட் இருக்கான். டெய்லி மார்னிங் ஃபைவ் தேர்ட்டிக்கு ஜாகிங் போற. வீட்ல மாவு அரைக்கிறது இல்லை. வர்ற வழியில இருக்குற மஹா மாவு கடையில ரெண்டு நாளைக்கு ஒரு தடவை மாவு வாங்கி யூஸ் பண்ற. நேத்து கடைக்குப் போய் கிரீன் கலர்ல ஒரு சுடிதாரும், பிரவுன் கலர்ல ஒரு சாரியும் வாங்கின. அப்புறம்…” எனக் கூறிக் கொண்டே போக,
“போதும்” என்றாள்.
“இன்னும் இருக்கு. உனக்கு போதும்னா ஓகே. அப்படியே என்னை பற்றியும் சொல்றேன் கேட்டுக்க. இப்போ எனக்கு வயசு 30. என் அம்மா வயித்துல ஒரு மாத கருவாக நான் இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அம்மாதான் என்னை வளர்த்தது. அப்பா இறந்ததும் அம்மா வேலைக்குப் போனதனால என்கூட ரொம்ப எல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. அதனாலேயே கொஞ்சம் முரடனா வளர்ந்துட்டேன். நான் அடாவடியா என்ன பண்ணினாலும் அம்மா கண்டிப்பாங்க. நான் வேலைக்கு போனதுக்கு அப்புறம் கூட கோபத்துல நான் ஏதாவது செஞ்சு ஏதாவது பிரச்சனை வரும். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க. என் மருமக வந்துதான் உன் அடாவடி எல்லாம் கண்டிச்சு மாத்தணும் அப்படின்னு அடிக்கடி சொல்வாங்க”
“அப்புறம் மூணு வருஷம் முன்னாடி அவங்களும் ஒருநாள் என்னை விட்டுட்டு போய்ட்டாங்க. என்னமோ உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்த உடனே என் அம்மா சொன்ன பொண்ணு நீதான்னு மனசுக்கு பட்டது. உன்னை பார்த்ததுக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணவே செஞ்சது” என்றவன், மீண்டும் அவளிடம் “என்ன.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” எனக் கேட்டான்.
“எனக்கு போலீஸ்ன்னாலே பிடிக்காது” என்றாள்.
“எனக்கு கூடதான் பத்திரிக்கை காரங்களை பிடிக்காது. உன்னை பிடிக்கலை. என்கூட பழகிப் பாரு கண்டிப்பா என்னை பிடிக்கும்” என்றான்.
“பழகினாலும் இந்த முரட்டு போலீசை எனக்கு பிடிக்காது”
“நான் கொஞ்சம் முரடன்தான் ஒத்துக்குறேன். கெட்டவன் கிடையாது”
“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு விருப்பம் இல்லை. நீங்க கிளம்பலாம்”
“சரி… என்னை கல்யாணம் பண்ணி என்னை நல்லா பார்த்துக்க” என்றான்.
“வம்பு பண்ணாம வெளியில போங்க” என்றாள்.
அங்கிருந்த நாட்காட்டியில் தன் பெயரை எழுதி கைப்பேசி எண்ணை எழுதி வைத்தான். அருகில் ஒரு ஸ்மைலியின் படம் வரைந்தான்.
“என்ன இது?”
“என் மொபைல் நம்பர். உனக்கு பேசணும்னு தோணும் போது நம்பர் இல்லைன்னு நீ தேடக்கூடாது பாரு… அதுக்கு தான் எழுதி வச்சிருக்கேன்”
“அப்படி எல்லாம் எனக்கு ஒன்னும் தோணாது”
“கண்டிப்பா தோணும்”
“நான்… எனக்கு… லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சு” என்றாள்.
ஒரு நொடி திகைத்தவன், “அதான் ஃபெயில் ஆகிடுச்சுல்ல. அதை மறந்திடு. என்னை லவ் பண்ணு கண்டிப்பா பாஸ் ஆகிடும்” எனக் கூறி சிரித்தான்.
சுப்ரியாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“என்ன… என்னை லவ் பண்றியா?”
“அதான் நம்பர் கொடுத்திருக்கீங்களே… லவ் வந்தா கண்டிப்பா சொல்றேன்” என்றாள்.
“சீக்கிரமா சொல்லிடு. அப்புறம் லேட் ஆச்சுன்னா… இவ்வளவு நாள் வேஸ்ட் பண்ணிட்டோம்ன்னு நீதான் வருத்தப்படுவே” என்றான்.
“நீங்க ஒரு கார்ட்டூன் பீஸ்” என்றாள்.
“என்னை எல்லாரும் டெரர் பீஸ்ன்னு சொன்னா உன் கண்ணுக்கு நான் கார்ட்டூன் மாதிரி தெரியறேனா?” எனக்கூறி சிரித்தவன், ஆழ்ந்த குரலில் “உன் சம்மதத்துக்காக காத்துகிட்டு இருப்பேன்” எனக் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
அஜந்தா கெமிக்கல் ஃபேக்டரி பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது.
தொழிலாளர்கள் நலனைப் பற்றியும், தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டதையும் கூறி அவர்கள் கையெழுத்திட்டு தந்த மனுவை சமர்ப்பித்தார் பிரபஞ்சன். தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் பல கோடிகள் நஷ்டம் ஆகிவிட்டதாகவும், இதனால் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். எல்லாவற்றையும் கவனமாக சரி செய்து விடுவதாக மனிஷ் பாண்டே உறுதியளித்தான்.
இறுதியாக தற்காலிகமாக தொழிற்சாலை திறந்து கொள்ளலாம். ஒரு மாதத்தில் மீண்டும் ஆய்வு நடைபெறும். அந்த ஆய்வறிக்கையின் முடிவில் தொழிற்சாலை தொடர்ந்து நடத்தலாமா இல்லையா என்பதை நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிடும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அலுவலகத்தில் அன்றைய தினசரியை விரித்து வைத்துக்கொண்டு ஆற்றாமையுடன் அமர்ந்திருந்தாள் தர்ஷினி. ஸ்ரீ ரூபானந்தா ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டு காட்சியளிக்க, அந்த ஆசிரமத்தைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது.
தொழிற்சாலைக்கு ஆதரவாக வந்த தீர்ப்பில் ஏற்கனவே கோவமாக இருந்த தர்ஷினி இதைப் பார்த்து இன்னும் கோவமானாள். வேலை செய்ய மனம் ஒத்துழைக்காததால் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்.
இதற்கு மேலும் அங்கு வேலை செய்ய முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. வேலையை விட்டு விடலாம் என முடிவு செய்து கொண்டாள். யாருக்கும் அஞ்சாமல் உண்மையை நடுநிலையுடன் சொல்வதுதான் பத்திரிக்கை தர்மம். இங்கு உண்மையையும் சொல்ல முடியவில்லை. போதாததற்கு பொய்யான தகவல்கள் தர வேண்டியிருக்கிறது. இவ்வாறு வேலை செய்ய அவளது மனசாட்சி அவளுக்கு இடம் தரவில்லை.
அன்று மாலையே தான் எடுத்த முடிவு பற்றி இன்பாவிடம் கூறினாள்.
“உனக்கு பிடிக்காததை எப்பவும் செய்யாத.. பிடிக்கலைனா வேலையை விட்டுடு” என்றான்.
“நான் எவ்ளோ நேசிச்ச வேலை தெரியுமா இது? என்னால இதுல ஒண்ணுமே செய்ய முடியலை” என்றாள்.
“இங்க பாரு தர்ஷினி… வேற பத்திரிக்கையில் ஜாயின் பண்ணிக்கோ. ஒரு இடம் இப்படி இருக்குன்னா எல்லா இடமுமே இப்படி இருக்காது” என்றான்.
“போற இடத்துல எனக்கு எழுத்து சுதந்திரம் கிடைக்குமா?” என கேட்டாள்.
“ஏன் கிடைக்காது? கண்டிப்பா கிடைக்கும்” என்றான்.
“அப்போ இப்பவே ரெஸிக்னேஷன் மெயில் பண்ணிடவா?”
“நல்லா யோசிச்சிட்டீல..?”
“ம்…”
“அப்ப யோசிக்காத கையோட அனுப்பிடு” என்றான்.
செங்கதிர் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியருக்கு ராஜினாமாவை மெயில் அனுப்பினாள்.
பத்து நிமிடங்களில், முதன்மை ஆசிரியர் வெங்கட்ராகவனிடம் இருந்து மெயில் வந்திருந்தது.
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப் படவில்லை எனவும் நாளை அலுவலகத்தில் நேரில் பேசலாம் எனவும் அனுப்பியிருந்தார்.
இன்பாவிடம் இது பற்றிக் கூறினாள் தர்ஷினி. “நேர்ல போய் நாளைக்கு உன் ப்ராப்ளத்தை சொல்லி அங்கேயே ரெஸிக்னேஷன் கொடுத்துட்டு வந்துடு” என்றான்.
அடுத்த நாள் காலையில் செங்கதிர் பத்திரிகை அலுவலகத்தின் முதன்மை ஆசிரியர் வெங்கட்ராகவனின் அறையில் இருந்தாள் தர்ஷினி.
எதனால் வேலையை ராஜினாமா செய்கிறாள் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தாள். சாம்பசிவம் பற்றி எல்லாம் கூறினாள்.
“ஒரு பத்திரிக்கையோட ஜீவனே அதோட உண்மையிலதான் இருக்கு. சர்குலேஷனுக்காக சில ஜிகினா வேலைகள் செய்ய வேண்டியிருக்கு… நான் ஒத்துக்குறேன். ஆனா அதுக்காக பொய் நியூஸ் எல்லாம்… உண்மையாவே இந்த ரூபானந்தா விஷயம் எல்லாம்…. ஐ ஆம் அஷேம்டு ஆஃப் மை செல்ஃப். பத்திரிகைக்கு அவர் நிறைய பணம் கொடுத்து இருக்கார். நேத்து இதப்பத்தி கேட்கும் போது எம்டி சொன்னார்” என்றார்.
“எனக்கு இங்க வேலை பார்க்க என் மனசாட்சி இடம் தரலை சார்” என்றாள் தர்ஷினி.
“நீங்க வேலையை விட்டு போனா எனக்கு மனசாட்சி உறுத்தும்மா. உங்க மனசாட்சிப்படி உண்மை செய்திகளை எழுதுங்க. இனிமே நீங்க என்கிட்ட நேரடியா ரிப்போர்ட் பண்ணுங்க. எவ்ரி சண்டே நியூஸ் பேப்பர்ல செகண்ட் பேஜ் எக்ஸ்க்ளூஸிவா உங்களுக்கு. நீங்களே எழுதுங்க” என்றார்.
“உண்மையாதான் சொல்றீங்களா?”
“ஆமாம் எம்டி கிட்ட நான் பேசிக்கிறேன். ஆனா உங்க ஐடென்டிட்டி தெரிய வேண்டாம். வேற ஏதாவது பெயரில் எழுதுங்க. வர சண்டேயிலிருந்து ஸ்டார்ட் பண்ணுங்க. இப்போதைக்கு ரூபானந்தா மேட்டர் வேண்டாம். ஆஹா ஓஹோன்னு நம்மலே எழுதிட்டு அடுத்த வாரமே மாத்தி நியூஸ் போட்டா பிரச்சினையாகும்” என்றார்.
“வேற பேர்ல ஏன் சார் எழுத சொல்றீங்க?”
“உங்க பாதுகாப்புக்காகதாம்மா. உண்மை நியூஸை எழுதும்போது நாம எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். உங்க சேஃப்டி எனக்கு ரொம்ப முக்கியம். வேற ஏதாவது பெயர் யோசிச்சு சொல்லுங்க. நாளைக்கே விளம்பரம் பண்ணிடலாம்” என்றார்.
தர்ஷினிக்கு சட்டென அந்த பெயர்தான் நினைவுக்கு வந்தது.
“சார் நான் மணிப்புறாங்கற பேர்ல எழுதுறேன்” என்றாள்.
“மணிப்புறா…? இன்ட்ரெஸ்டிங். நீங்க ஆர்ட்டிகல் ரெடி பண்ணுங்க. ரெடி பண்ணிட்டு எனக்கு அனுப்புங்க” என்றார்.
தர்ஷினி நன்றி உரைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்தாள்.
ஞாயிறு தோறும் மணிப்புறாவின் மடல்கள் வரும் என்ற வாசகத்துக்கு கிழே மணிப்புறாவின் படம் ஒன்று பெரிதாக போடப்பட்டு, அதன் காலில் சுருட்டிய காகிதம் ஒன்று கட்டப்பட்டு, அந்த காலத்தில் ரகசிய செய்திகள் எடுத்து செல்வது போல, நாளைய தினசரியில் விளம்பரம் கொடுக்க சொல்லி அப்பொழுதே சொல்லிவிட்டார் வெங்கட்ராகவன்.
சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தான் லிங்கேஷ். அவனது கார் வந்திருக்க அதில் புறப்பட்டு வீட்டிற்கு சென்றான். தான் செய்யவேண்டியதை மனதில் குறித்துக் கொண்டான். எப்படி செய்ய வேண்டும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தான்.
மாலையில் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய தர்ஷினி, மணிப்புறா என்ற பெயரில் தான் சுதந்திரமாக எழுதப் போவதை இன்பாவிடம் பகிர்ந்துகொள்ள காத்திருந்தாள்.
புதிதாக எடுத்து நடத்திய வழக்கில் வெற்றி பெற்றதற்காக நடைபெற்றுக்கொண்டிருந்த மது விருந்தில் இருந்தான் இன்பா. எப்பொழுதும் அளவாக சாப்பிடுவது போலதான் ஆரம்பித்தான். பேசிக்கொண்டே அளவுக்கு மீறி விட்டது.
இரவு உணவுக்கான நேரம் கடந்தும், அவன் வராததால் இன்பாவின் கைப்பேசிக்கு அழைத்தாள் தர்ஷினி. அவளிடம் பேசினால் கண்டுபிடித்து விடுவாள் என்று நினைத்து, அரை மணி நேரத்தில் வந்து விடுவேன், நீ தூங்கு என குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.
வண்டியில் தனியாக செல்ல முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. பஷீருக்கு அழைத்து விவரத்தைக் கூறி, அழைக்க வருமாறு கேட்டுக் கொண்டான். பஷீருக்காக காத்துக் கொண்டிருந்தான்.
வாசலிலேயே அமர்ந்து அவனுக்காக காத்துகொண்டு இருந்தாள் தர்ஷினி.