மணிப்புறாவும் மாடப்புறாவும்-15

அத்தியாயம் 15

இன்பா தர்ஷினி இருவரையும் எதிர்பார்த்து வாயிலிலேயே காத்திருந்தார் லட்சுமி.

இரவு ஒன்பது மணிக்கு இருவரும் சேர்ந்து ஒரே வண்டியில் இறங்க லட்சுமி ஆச்சரியமாக பார்த்தார்.

“உன் வண்டி என்னாச்சி தர்ஷினி?” என கேட்டார்.

“ம்… பங்க்சர்” என முந்திக்கொண்டு பதில் சொன்னான் இன்பா.

“தானா ஆயிடுச்சா…? இல்லை நீ எதுவும் பண்ணிட்டியா?” எனக்கேட்டார்.

“ம்மா… எனக்கு வெளியிலிருந்து யாரும் எதிரிங்க வேண்டாம். நீ ஒரு ஆளே போதும்” என்றான்.

“பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு என்னையவே குறை சொல்லு” என்றவர் எழுந்து உள்ளே சென்றார்.

தர்ஷினியிடம் இன்பா ஏதோ சொல்ல வாயை திறக்க, “தர்ஷினி இங்க கொஞ்சம் வா” என குரல் கொடுத்தார் லட்சுமி.

“போடி உன் மாமியாருக்கு மூக்குல வேர்த்துட்டு” எனக் கூறி அவன் அறைக்குள் சென்று விட்டான்.

உள்ளே சென்று லட்சுமியிடம் “என்ன அத்தை?” என கேட்டாள் தர்ஷினி.

“பத்மினி அண்ணி சப்பாத்தியும் கடப்பாவும் எல்லோருக்கும் செஞ்சு கொடுத்தனுப்பியிருக்காங்க. அப்புறம் நாளைக்கு நாள் நல்லா இருக்கு… நாளைக்கே சடங்கு வச்சிடலாம். இன்னைக்கு ரம்யா ரூமிலேயே தங்கிக்க” என கூறினார்.

கடப்பாவை கரண்டியால் ஒரு கிண்டு கிண்டியவள், “என்ன அத்தை… அம்மா பட்டாணி எல்லாம் போடவே இல்லை” என்றாள்.

“இருந்திருக்காது. அடுத்த முறை செய்யும்போது பட்டாணி போட்டு நான் செஞ்சு தரேன். நீ போய் நான் சொன்னத உன் புருஷன் கிட்ட போய் சொல்லிட்டு வா” என்றார்.

“இப்போ சாப்பிடும்போது அவனுக்கே என்ன டின்னர்னு தெரிய போகுது. ஏன் முன்னாடியே போய் உங்க பிள்ளைகிட்ட மெனு எல்லாம் சொல்லிட்டு வரனும்?” என கேட்டுக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.

“உன்னை வச்சுக்கிட்டு என் பிள்ளை என்ன பாடுபடப் போறானோ..?” என லட்சுமி கேட்க,

‘இப்ப என்ன கேட்டுட்டேன்னு இவங்க இப்படி சொல்றாங்க?’ என தனக்கு தானே கேட்டுக் கொண்டு தர்ஷினி அறைக்கு சென்றாள்.

இன்பா உடை மாற்றி விட்டு சட்ட புத்தகத்தை விரித்து வைத்திருந்தான்.

“இன்பா இன்னைக்கு டின்னர் சப்பாத்தியும் கடப்பாவும்”என்றாள்.

புத்தகத்தை மூடியவன் “சாப்பாட்டு ராமி… எப்ப பாரு சாப்பாடு நினைப்புதானா?” எனக் கேட்டான்.

“உன் அம்மாதான் சொல்ல சொன்னாங்க.. சொல்லிட்டேன்” என்றாள்.

“ஹ… அம்மா சொல்ல சொன்னாங்களா…? என்ன சொன்னாங்க அப்படியே சொல்லு” என்றான்.

லட்சுமி சொன்னதை வார்த்தை பிசகாமல் எல்லாவற்றையும் அப்படியே கூறினாள்.

சிரித்தவன், “இப்பவாவது என் அம்மாவுக்கு உன்னை நான் எப்படி சமாளிக்க போறேன்னு தோணியிருக்கே…” என்றான்.

தர்ஷினி முறைத்துக் கொண்டு நிற்க, அவளிடம் தன் தாய் கூறியதை விளக்கிக் கூறினான்.

தன் தலையில் தட்டிக்கொண்ட தர்ஷினி, “அவங்க சொன்னாங்கதான். இருந்தாலும் சாப்பாட்டு மேட்டர் பதியிற மாதிரி இதெல்லாம் பதிய மாட்டேங்குது” என்றாள்.

“நான் பதிய வைக்கிறேன்டி. காலையிலேயே கேட்கணும்னு நினைச்சேன். நமக்குள்ள ஒன்னும் நடக்கலைங்கிறது எல்லாம் அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது? ” என்றான்.

“அதை அவங்களை தான் கேட்கணும்”

“என்ன அவங்கள கேட்குறது? நீதான் ஏதாவது உளறி வச்சிருப்ப. ஒன்னும் நடக்கலைனாலும் நேத்து நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்லதானே இருந்தோம். இன்னைக்கு மட்டும் என்ன வந்துதாம் அவங்களுக்கு?”

“நான் வேணும்னா கேட்டு சொல்லவா?”

“ஒன்னும் வேண்டாம். இன்னும் ஒரு நாள் தானே” என்றான்.

“இப்போ நான் டிரஸ் மாத்தணும். நீ வெளியில போ” என்றாள்.

“ஒரு ட்ரெய்லர்.. வேண்டாம்.. ஒரு டீசர் கூட கிடையாதா இப்போ..?” எனக் கேட்டான்.

“ம்… உண்டே…” என்றவள் குங்ஃபூ பாணியில் கைகளை மடித்து நிற்க,

“பாண்டா கரடி” என கூறி விட்டு வெளியேறினான் இன்பா.

இரவு உணவின்போது சாரங்கபாணி “பிரபஞ்சனிடம் ஏன் சண்டை போட்ட?” என கேட்டார்.

நடந்ததை விளக்கிக் கூறியவன், “சண்டை நான் போடலை அவர்தான் போட்டார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். அதுக்காக அவர் சொல்றது படியே நடக்கணும்னு இல்லை. நான் அவர்கிட்ட கோச்சுகிட்டு தனியா வரலை. எனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேண்டாமா? அதான் வந்துட்டேன். இதை நீங்க விடுங்க.. நான் பார்த்துக்கிறேன்” என கூறிவிட்டான்.

சாரங்கபாணியும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இன்பா அவனது அறைக்கு செல்ல, தர்ஷினி ரம்யாவின் அறைக்கு சென்றுவிட்டாள்.

தர்ஷினியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வர, எடுத்துப் பார்த்தாள்.

‘உனக்கென உருகுகிறான் இன்பா’ என செய்தி அனுப்பியிருந்தான்.

‘நீ என்ன மெழுகுவர்த்தியா?’ என சிரித்துக்கொண்டே பதில் செய்தி அனுப்பினாள்.

‘நீ இல்லா நொடிகள் தீயாய் சுடுகிறது’ என செய்தி அனுப்பினான்.

‘போய் ஷவர்ல நில்லு’ என பதில் செய்தி அனுப்பினாள்.

‘என் உறக்கம் திருடிய காரிகை நீ’ என்ற செய்தி வந்தது.

‘கொசு தொல்லை தாங்க முடியலையே….’ பதிலுக்கு அனுப்பினாள் தர்ஷினி.

அடுத்த செய்தி அனுப்ப இன்பா கைப்பேசியில் டைப் செய்ய, கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று கதவை திறந்தான். ரம்யா நின்றிருந்தாள்.

“நீ தர்ஷினி அண்ணிகிட்ட ஃபோன் வேணும்னு கேட்டியாம். இந்தா வச்சுக்கோ” என அவன் கையில் தர்ஷினியின் கைப்பேசியை வைத்தாள். இன்பா திகைத்துப்போய் பார்க்க, “அப்புறம் அண்ணி தூங்கிட்டேன்னு சொல்ல சொல்லுச்சு” என்றாள். பெரியவர்கள் சொல்லி சொல்லி, ரவியும் ரம்யாவும் தர்ஷினியை அண்ணி என்றுழைக்க ஆரம்பித்திருந்தனர்.

தூக்கம் வராவிட்டாலும், படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான் இன்பா.

அடுத்த நாள் காலையில், நசீர் தன்னுடன் வரும்படி தர்ஷினியை அழைத்தான்.

“இன்னைக்கு சனிக்கிழமைதானே… நான் வீட்லதான் இருக்கேன். நானே கொண்டு வந்து விடுறேன்” என்றான் இன்பா.

“ஏன் இன்பா உனக்கு அலைச்சல்? நான் நசீரோடவே போய்க்கிறேன்” என்றாள் தர்ஷினி. இன்பா இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.

“நீ எனக்கு இன்பா அண்ணாகிட்ட இருந்து அடி வாங்கி கொடுக்காம இருக்க மாட்ட போலிருக்கு. நான் கிளம்புறேன்” எனக்கூறி அவன் சென்று விட்டான்.

“எனக்கு அலைச்சல்… கஷ்டமா இருக்கு அப்படின்னு உன்கிட்ட சொன்னேனா? நானும் பார்த்துட்டே இருக்கேன்… நீ உண்மையாவே என்னை லவ் பண்றியா?” எனக் கேட்டான்.

சிரித்த தர்ஷினி, “நம்ம என்ன டீனேஜ் பசங்களா? கொஞ்சம் மெச்சசூர்டா பிஹேவ் பண்ணு” என்றாள்.

“நைட் நான் மெசேஜ் அனுப்புனா, நீ பதிலுக்கு மெசேஜ் கூட அனுப்ப வேண்டாம். போனை என்கிட்டயே கொடுக்க சொல்லுவியா?”

“லூசு மாதிரி பேசாத இன்பா. ரம்யா ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தா. நான் என்ன தனி ரூம்லயா இருக்கேன். நீ சொன்னாலும் புரிஞ்சுக்க போறது இல்லை. அதான் உன் கிட்டேயே கொடுக்க சொல்லிட்டேன்” என்றாள்.

அவள் என்ன கூறினாலும் இன்பாவின் மனம் அவளின் செய்கையை கண்டு முரண்டு பிடித்தது. நெருடலாகவே இருந்தது.

இன்பாவே தர்ஷினியை அலுவலகத்தில் விட்டான்.

“ஏய் தர்ப்பூசணி ஈவினிங் சீக்கிரம் வந்துடுடி. உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்றான் இன்பா.

“நான் மதியம் பெர்மிஷன் போடுறேன். சரியா நாலு மணிக்கெல்லாம் வீட்ல இருப்பேன். நீ வண்டியை கவனமா ஓட்டிட்டு போ. ஏதாவது நினைப்புல யார் மேலயாவது விட்டுடாத” என்றாள்.

“வாய கழுவுடி. நான் கிளம்புறேன்” எனக் கூறி இன்பா கிளம்பிவிட்டான்.

லிங்கேஷ் அமெரிக்காவில் இருந்த அந்த மருத்துவமனையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். மனம் முழுவதும் குழப்பமும் குற்றவுணர்ச்சியும் நிறைந்திருந்தது. வெகு நேரம் யோசித்தான். அந்த இரவு நேரத்திலேயே தன்னுடைய மேனேஜருக்கு அழைத்தான். இந்தியா திரும்ப அடுத்த வாரத்தில் டிக்கெட் போட சொல்லிவிட்டு, நல்ல முடிவு எடுத்த திருப்தியுடன் உறங்க ஆரம்பித்தான்.

தர்ஷினியால் நினைத்தது போல மாலையில் சீக்கிரமாக வீடு திரும்ப முடியவில்லை. லட்சுமிக்கு அழைத்து வர தாமதமாகும் என்று கூறிவிட்டாள். இன்பாவிடம் இருந்தும் எந்த அழைப்பும் அவளுக்கு வரவில்லை. தர்ஷினி வீட்டிற்கு வரும்பொழுது நேரம் எட்டு முப்பது ஆகியிருந்தது. இன்பா கோவமாக இருப்பான் என நினைத்துக் கொண்டே வீட்டின் உள்ளே வந்தாள். கண்கள் அவனைத் தேட, அவன் வீட்டில் இல்லை. அன்று ஏனோ அவனைப் பற்றி கேட்கவும் தர்ஷினிக்கு ஒரு மாதிரியாக இருக்க கேட்காமல் விட்டு விட்டாள்.

ரவி, ரம்யா கூட வீட்டில் இல்லை. சென்ற முறை போலவே பத்மினியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். தர்ஷினி குளித்து வந்தாள். பத்மினி ஒரு பட்டுப்புடவையை கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னார். புடவை அணிந்து கொண்டு, அறையை விட்டு வெளியில் வந்தவள், “அம்மா பசிக்குது” என்றாள். உண்மையில் மதியம் சாப்பிட்டது அவளுக்கு மிகவும் பசியாக இருந்தது.

அவளைப் பார்த்து முறைத்த பத்மினி, “சாப்பாடு எல்லாம் டைனிங் டேபிள்ள இருக்கு. நாங்க இப்ப கிளம்பிடுவோம். இன்பாவோட சேர்ந்து சாப்பிடு” என சொல்லிக்கொண்டே மல்லிகையை தலையில் சூட்டி விட்டார்.

“இன்பா எங்கே?” எனக்கேட்டாள்.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட” என சிரித்துக்கொண்டே சொன்னார் லட்சுமி.

“எங்கன்னு சொல்லுங்க” என்றாள் தர்ஷினி.

“மாடியில இருக்கான். கோவமா இருக்க மாதிரி இருக்கு. நீயே பேசி சமாதானம் பண்ணு” என்றார் லட்சுமி.

“இவளை இன்னைக்கு ஆபீசுக்கு போக விட வேண்டாம்னு நான் சொன்னேன்… நீங்க கேட்டீங்களா? இதுக்கு மேலயும் இவங்க ரெண்டு பேர் கிட்டயும் நம்மளால கஷ்டப்பட முடியாது. அவங்களாச்சு அவங்க வாழ்க்கை ஆச்சு. வாங்க போலாம்” எனக்கூறி லட்சுமியை அழைத்து கொண்டு சென்றுவிட்டார் பத்மினி.

மாடிக்கு சென்றாள் தர்ஷினி. சாதாரண வேஷ்டி சட்டையில் கைகளைக் கட்டிக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் இன்பா. தர்ஷினி தலையில் சூடி இருந்த மல்லிகையின் மணம் இன்பாவை திரும்பி பார்க்க வைத்தது.

“சாரிடா வேணும்னு பண்ணலை. கொஞ்சம் வேலை.. அதான் லேட்” என்றாள்.

“நீ லேட் ஆனதுக்கு நான் கோவப்படலை தர்ஷினி. அதை என் கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணலைல..?”

“நான்தான் அத்தைகிட்ட சொன்னேனே. உன்கிட்ட சொல்லலையா?”

“ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டேன்”

“அது….” என இழுத்தாள்.

“உனக்கு தோணலைல…?”

“நீ வீட்லதானே இருந்த… அத்தை உன்கிட்ட சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன்”

“ஏன் எனக்கு சொன்னா நான் அம்மாகிட்ட சொல்ல மாட்டேனா?”

“சின்ன விஷயம் இன்பா இது பெருசு பண்ணாத”

“ஆமாம் ரொம்ப சின்ன விஷயம். என் பொண்டாட்டி எதுக்கும் என்னைத் தேட மாட்டேங்குறா… அது ரொம்ப சின்ன விஷயம்தான்” என்றான்.

“நீயா எதுவும் நினைச்சுக்காத. காலையிலேயே நீ ரொம்ப எதிர்பார்ப்போட சீக்கிரம் வரசொன்ன. அது முடியலைன்னும் போது உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு ஒரு தயக்கம். நீ எதுவும் கோவமா பேசிட்டா எனக்கு அங்க வேலை எதுவும் ஓடாது. இன்னும் லேட் ஆகும். அதான் அத்தைகிட்ட சொன்னேன். இப்ப கூட எவ்வளவு பசி தெரியுமா? உனக்கே தெரியும் நான் பசி பொறுக்க மாட்டேன்னு… ஆனா… அதைக்கூட பொறுத்துக்கிட்டு உனக்காகத்தான் உன்னை சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

இன்பா சிரித்துவிட்டான். “உன்கிட்ட பெரிய சண்டை போடலாம்னு இருந்தேன். புஸ்ஸுன்னு போயிடுச்சு” என்றான்.

“உனக்கு 27 வயசாகுது இன்பா. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்க. சின்னப்புள்ளத்தனமா எனக்கு ஏன் போன் பண்ணி சொல்லல, என்னை பார்த்து ஏன் சிரிக்கல, நான் கடிச்ச வடையை ஏன் கடிக்கலன்னு எல்லாம் சண்டை போடாத” என்றாள்.

“நான் எங்கடி அப்படி எல்லாம் சண்டை போட்டேன்?”

“நீ போடுவ அதான் முன்னாடியே சொல்லிட்டேன்”

“நீ நினைக்கிற மாதிரி இல்லடி தர்பூசணி. நான் உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கேன். நான் உன் நிலையில இருந்தா உனக்குதான் போன் பண்ணி சொல்லியிருப்பேன். நீ லேட்டா வந்தது கோபம் இல்லை. என் பொண்டாட்டி என்னை தேடாம இருக்கான்னு உன் மேல வருத்தம். உன்னை தேட வைக்காம விட்டுட்டேன்னு என் மேலதான் கோவம்” என்றாள்.

“வக்கீல் சாருக்கு பேசவா சொல்லி தரணும்? எனக்கு பசிக்குது வா போகலாம்” என்றாள்.

“எப்படி ஃபீல் பண்ணி பேசிகிட்டு இருக்கேன்… பசிக்குது பசிக்குதுன்னு அதையே சொல்லிட்டு இருக்கா” என கூறிக் கொண்டே கீழே இறங்கினான்.

“நீ சாப்பாடு எடுத்து வை.. வரேன்” எனக்கூறி, கேட்டை பூட்டு போட்டு பூட்டி விட்டு, முன் கதவு, பின் கதவு இரண்டையும் பூட்டி விட்டு வந்தான்.

இட்லியும் தக்காளி சட்னியும் இருந்தது.

“என்ன சடங்கு சடங்குன்னு சொல்றாங்க. வெரைட்டி வெரைட்டியா இருக்கும்ன்னு பார்த்தா வெறும் இட்லியும் ஒரே ஒரு தக்காளி சட்னியும் மட்டும்தான் இருக்கு” என்றாள்.

“இந்த வெட்கம் வெட்கம்ன்னு ஒன்னு சொல்லுவாங்களே… அப்படின்னா என்னன்னு தெரியுமா உனக்கு?” எனக் கேட்டான் இன்பா.

“பொண்ணுங்க மட்டும் வெட்கப்பட்டு நாணி கோணி நெளியனும். பசங்க மட்டும் கெத்தா இருக்கணும. எந்த ஊர் நியாயம் இது?” என கேட்டுக் கொண்டே சாப்பிட்டாள்.

“அடிப்பாவி…” என வாயில் கை வைத்தான் இன்பா.

“சாப்பிடு சாப்பிடு சூடு ஆற போகுது” என்றாள்.

“நீ விஷயம் எதுவும் தெரியாமதான் இப்படி லூசு மாதிரி இருக்கன்னு நினைச்சா எல்லாம் தெரிஞ்சுதான் சாதாரணமா இருக்கியா? வெட்கம் வேண்டாம்… பயம் கூட இல்லையா?” எனக் கேட்டான்.

“ஏன் உனக்கு பயமா இருக்கா?” எனக்கேட்டு இன்பாவை தடுமாற வைத்தாள்.

“சத்தியமா முடியலைடி” என்றான்.

“எதுக்கு நான் பயப்படனும்? உன்னை எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். என்னை கிண்டல் பண்ணுவ, வம்பிழுப்ப தேவை இல்லாம சண்டை போடுவ. ஆனா எனக்கு ஏதாவது கஷ்டம்னா உடனே நீ தான் வருவ. நீ போய் என்னை எதுவும் கஷ்ட படுத்துவியா? வெட்கம் வருமான்னு தெரியலை. நீ முடிஞ்சா வரவை. ஆனா உன்கிட்ட எனக்கு பயம் இல்லை” என்றாள்.

தர்ஷினி உணர்ந்துதான் பேசுகிறாளா என இன்பாவுக்கு தெரியவில்லை. சற்றுமுன் அவள் மனம் தன்னை தேடவில்லை என வருத்தப்பட்டது எல்லாம், அவள் சொன்ன வார்த்தைகள் மூலம் துடைத்தெறிந்திருந்தாள். அவளுக்கு எதுவும் என்றால் இன்பா உடனே வருவான் என்ற அவளது நம்பிக்கையில் தர்ஷினி தன் மீது வைத்திருக்கும் காதலை உணர்ந்தான். உயிர் உள்ளவரை தர்ஷினியின் இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி கொண்டான்.

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் சமையலறையில் எடுத்து வைத்தாள் தர்ஷினி. அவளுக்கு இன்பாவும் உதவி செய்தான். பின்னர் இருவரும் அறைக்கு சென்றனர்.

அவர்களது அறையில் படுக்கையில் புது விரிப்புகள் போடப்பட்டு, மலர்கள் தூவப்பட்டிருந்தன. வைத்த கண் எடுக்காமல் தர்ஷினியைதான் பார்த்துக்கொண்டிருந்தான் இன்பா. மென்மையான பட்டில், அன்று போல் அதிக அலங்காரம் எதுவும் இன்றி, எளிமையாக இருந்தாள்.

“நமக்கு மட்டும் ரெண்டு தடவை ஃபர்ஸ்ட் நைட்” என கூறிக்கொண்டே இன்பாவை பார்த்தாள்.

“என்ன இப்படி பார்க்குற?” என கேட்டாள். இன்பா அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, படுக்கையில் அமர்ந்து கொண்டு, தர்ஷினியை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

தலையணைக்கு கீழே மறைத்து வைத்திருந்த அந்த கிஃப்ட்டை எடுத்து அவளிடம் நீட்டினான். ஆசையாக பிரித்தாள் தர்ஷினி.

ஒரு மரத்தின் கிளையில் மணிப்புறாவும் மாடப்புறாவும் அமர்ந்து கொண்டிருந்தன. முழுவதும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்த அதை ரசித்து பார்த்தாள் தர்ஷினி.

“பிடிச்சிருக்கா” எனக்கேட்டான் இன்பா.

“ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

கிளையில் அமர்ந்திருந்த அந்த புறாக்கள் அங்கும் இங்கும் நகர்த்தும் வண்ணம் பொருத்தப்பட்டிருந்தன. இன்பா மாடப்புறாவை மணிப்புறாவின் அருகில் நகர்த்தி வைத்தான். இரு புறாக்களும் முத்தமிடுவது போல இருந்தது. தர்ஷினி அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் விழிகளைத் தாழ்த்தி கொண்டாள்.

“என்னை பாருடி” என்றான் இன்பா.

“ம்ஹூம்… என்னால பார்க்க முடியலை” என கிசுகிசுப்பாய் தர்ஷினியின் குரல் ஒலிக்க, அவளின் காது மடலில் தன் உதடுகள் உரச, “என் தர்ஷினி வெட்கப்படுறா” என்றான்.

தர்ஷினிக்கு எழுந்த உணர்வலைகளில் பிடிமானத்திற்காக இன்பாவின் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டாள். தர்ஷினியின் இடுப்பை வளைத்தவன் அவள் உதடுகளை உரசினான். இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது.

இன்பாவிடம் தர்ஷினிக்கு பயமில்லை. ஆனால் தயக்கங்கள் இருந்தன. காதல் மொழி பேசி அவள் தயக்கத்தைப் போக்கினான்.

இன்பாவிடம் விட்டுக் கொடுக்க மறுத்தாள் தர்ஷினி. சற்றும் அசராமல் போராடி அவளை தன்னிடம் ஒப்புவிக்க செய்தான்.

தன் கட்டுக்கடங்கா காதலை அவளுக்கு கொடுத்து, பதிலுக்கு அவளிடம் இருந்து எடுத்து என இன்ப சாகரத்தில் தர்ஷினியை மூழ்கடித்தான் இன்பா.

கடந்து போன நிமிடங்களின் இனிமையில், இருவரும் ஒருவரது அணைப்பில் மற்றவர் இருக்க, இன்பாவின் இடதுபக்க நெஞ்சில் இருந்த அந்த தீக்காய தழும்பை தடவி அதில் முத்தமிட்டாள் தர்ஷினி.

“ரொம்ப வலிச்சுதா?” என கேட்டாள்.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட” என்றான்.

“உன்னை நான் காதலிக்க காரணம் இருந்துச்சு. என்னை ஏன் நீ காதலிச்ச? உனக்கு எப்படி என் மேல லவ் வந்துச்சு?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“உண்மை சொல்லட்டா?”

“ம்..”

“விதி வலியது. யாரையும் விட்டு வைக்காது. எப்படிடா ஒரு கஷ்டமும் இல்லாம ஜாலியா சுத்திக்கிட்டு இருக்க…? இந்தா மாட்டிக்கோ அப்படின்னு கடவுள் சொன்னார். நான் உன்கிட்ட மாட்டிக்கிட்டேன்” என்றான்.

அவன் நெஞ்சில் இரண்டு அடி வைத்தாள்.

“சீரியஸா சொல்றேன் டி. வலிக்குது… இனிமே அடிக்காத…” என்றான்.

“இன்பா…” என சிணுங்கினாள்.

“என்னடி…?”

“எனக்கு பசிக்குது” என தர்ஷினி கூற, சத்தமாக சிரித்தான் இன்பா. அவனுடன் சேர்ந்து தர்ஷினியும் சிரிக்க, இருவரது சிரிப்பு சத்தமும் சுவர்களில் மோதி எதிரொலித்தது.

இந்த சந்தோஷம் என்றும் தொடருமா….???