காலையில் அழைப்பு மணி ஒலிக்க, உறங்கிக்கொண்டிருந்த தர்ஷினி எழுந்து, கீழே தரையில் படுத்து கிடந்த இன்பாவைத் தாண்டி சென்று கதவைத் திறந்தாள். லட்சுமி, பத்மினி, நூர்ஜஹான் மூவரும் புடவை மடிப்பு கலையாமல் வந்து நின்ற தர்ஷினியை பார்த்துவிட்டு, அவர்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன எல்லாரும் இப்படி பாக்கறீங்க?” என தர்ஷினி கேட்க, அவளை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தார் பத்மினி. மற்ற இருவரும் பின்னால் வந்தனர்.
“என்னம்மா ஏன் பிடிச்சு இழுத்துட்டு வர, கை வலிக்குது விடு?”என்றாள் தர்ஷினி.
“நைட் இன்பா கூட சண்டை போட்டியா?” எனக்கேட்டார் பத்மினி.
“இல்லையே” என்றாள் தர்ஷினி.
மூவரும் அறையின் பக்கம் பார்க்க கதவு திறந்து இருந்தது. இன்பா பட்டு, வேஷ்டி சட்டையில் வெறும் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
“ஆ…” என உடல் நெளித்தாள் தர்ஷினி.
“என்ன பண்ணுது தர்ஷினி?” எனக் கேட்டார் லட்சுமி.
“அது நைட்டு…”
“நைட்டு….” என கோரஸாக இவர்கள் கேட்க,
“அந்த காட்டுப்பூச்சி மூஞ்சியை பார்க்கக்கூடாதுன்னு திரும்பி அந்தப் பக்கமா படுத்தேனா…? அப்படியே தூங்கிட்டேன். ஒரே பக்கமா படுத்ததுல இந்த பக்கம் ஒரே வலி” என தன் இடது கை தோள்பட்டையை அழுத்திக் கொண்டே கூறினாள்.
“தர்ஷினி நீ ஒன்னும் சின்ன பிள்ளை கிடையாது. இன்பா உன் புருஷன். மரியாதையா பேசி பழகு” என கண்டிக்கும் விதமாக கூறினார் பத்மினி.
“உடனே எல்லாத்தையும் மாத்திக்க முடியாது. ட்ரை பண்றேன். இப்போ நீ சூடா டீ போட்டு தா” என கூறி விட்டு அறைக்குள் சென்றாள் தர்ஷினி.
“என்ன அண்ணி இது?” என பத்மினி கவலையாய் கேட்க,
“ஒரு அளவுக்கு மேல நாம அவங்க விஷயத்தில் தலையிட முடியாது. இன்பாவுக்கு தர்ஷினி மேல இஷ்டம்தான். இவதான் ஏதோ தகராறு பண்றான்னு நினைக்கிறேன்” என்றார் லட்சுமி.
தர்ஷினி பல் துலக்கி விட்டு வர, இன்பாவும் எழுந்து கொண்டான். அவளை முறைத்துக் கொண்டே அவனும் பல் துலக்கி விட்டு வந்தான். கைப்பேசியை எடுத்து நசீருக்கு அழைத்தான்.
தூங்கிக்கொண்டிருந்த நசீர் எடுத்துப் பேச “உடனே கிளம்பி மொட்டைமாடிக்கு வாடா” என்றான்.
உறக்கம் கலையாத நசீர் “என்ன விஷயம்?” எனக் கேட்டான்.
“இன்னும் ரெண்டு நிமிஷத்துல நீ என் வீட்டு மொட்டை மாடியில இருக்க” எனக்கூறி வைத்துவிட்டான்.
பட்டு வேஷ்டி சட்டையுடனே இன்பா வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருக்க, தூக்கம் கலையாமல் அப்படியே எழுந்து வந்து நின்றிருந்தான் நசீர்.
“ஃபெலிஸ் யாருடா?” எனக் கேட்டான்.
“மாடப்புறா” என பதிலளித்தான் நசீர்.
அவனை முறைத்த இன்பா, “அந்தப் புறாவுக்கு யார் ஞாபகமாவோ ஃபெலிஸ்ன்னு பேர் வச்சிருக்கா. அந்த ஃபெலிஸ் யாரு?”
“அது எனக்கும் தெரியாதுண்ணா. அவளோட ஃப்ரெண்ட்ன்னு மட்டும் சொல்லியிருக்கா”
“ம்ஹூம்… எனக்கு யாருன்னு தெரியாது. தர்ஷினிய கேட்டா தெரிஞ்சிட்டு போகுது. இதுக்கு எதுக்கு அண்ணா காலையிலேயே போன் போட்டு என்னை வரச் சொன்னீங்க? போங்கண்ணே…. நான் போய் தூக்கத்தை கண்டினியூ பண்றேன்” எனக்கூறி நசீர் சென்றுவிட்டான்.
இரண்டு தேநீர் கோப்பைகளுடன் மாடிக்கு வந்தாள் தர்ஷினி. இன்பாவிடம் ஒரு தேநீர் கோப்பையை நீட்டினாள். வாங்கிக் கொண்டவன் அவளை முறைத்துக் கொண்டே பருக ஆரம்பித்தான்.
“என்னைத் தவிர வேறு யாருக்கும் என் ஃபெலிஸ் யாருன்னு தெரியாது. நீ எவ்வளோ ட்ரை பண்ணினாலும் நானா சொல்லாம என் ஃபெலிஸ் யாருன்னு உன்னால கண்டுபிடிக்க முடியாது” என்றாள்.
“உன் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்” என்றான் இன்பா.
“வெரி குட். அந்த கேஸை விடப் போறியா?” எனக் கேட்டாள்.
அவளை உற்றுப் பார்த்தவன் காலி கோப்பையை அவளிடம் கொடுத்து விட்டு, “இன்னும் 24 மணி நேரத்துல அந்த ஃபெலிஸ் யாருன்னு கண்டு பிடிக்கல… நான் ஆம்பளையே இல்லடி” எனக்கூறி கீழே செல்ல நடந்தான்.
“ஹலோ மிஸ்டர் இன்பசாகரன். இப்போ டைம் ஏழு இருக்குமா? நாளைக்கு காலையில ஏழு மணி வரைக்கும் உங்களுக்கு டைம். முடிஞ்சா கண்டுபிடிங்க சார்” என்றாள்.
“கண்டுபிடிக்கிறேண்டி… கண்டுபிடிச்சு இப்படி சவடால் பேசுற வாய…. ம்ஹூம்…. இனிமே எதையும் சொல்ல மாட்டேன். ஆக்சன்தான்” எனக் கூறி கீழே சென்றான்.
பின்னர் இருவருமே அவரவர் வேலைக்கு சென்றுவிட்டனர். அன்று மாலை தர்ஷினி வீடு திரும்பும்போது பத்மினி அங்குதான் இருந்தார். தர்ஷினி இரவு உணவு செய்ய அவளுக்கு உதவி செய்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே,
“இங்க பாருடி… அதையும் இதையும் பேசி சண்டை போட்டுக்கிட்டு வாழ்க்கையை கெடுத்துக்காத. ஒழுங்கா இன்பா மனசு கோணாம நடந்து எனக்கு நல்ல பேரு வாங்கி கொடு” என்றார்.
“ஏன்…? பத்மினிங்குற பேரே நல்லாதானே இருக்கு. வேற என்ன நல்ல பேரு வாங்கி தரனும் உனக்கு?” எனக் கேட்டாள் தர்ஷினி. தலையிலடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார் பத்மினி.
இரவு உணவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றனர். நேரம் 9 ஆகியிருக்க, “அவன் வந்தா நீ பார்த்துக்க தர்ஷினி” எனக் கூறிவிட்டு லட்சுமியும் சென்றுவிட்டார்.
தன் லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு, வேலை செய்து கொண்டிருந்தாள். நேரம் பதினொன்றை தாண்ட அழைப்பு மணி ஒலித்தது. இன்பாதான் வந்திருந்தான். அவளைத் தாண்டி இன்பா உள்ளே நுழைய, அவனிடமிருந்து வந்த வாடையில் முகம் சுளித்த தர்ஷினி,
“குடிச்சிட்டு வந்திருக்கியா?” எனக் கேட்டாள்.
“ஆமாண்டி” என்றான்.
“அறிவில்ல உனக்கு…? வீட்டுல படிக்கிற பசங்க இருக்காங்க. உன் அம்மாவுக்கு இப்பதான் ஆபரேஷன் ஆகி வந்திருக்காங்க. கொஞ்சம் கூட மண்டையில மசாலா இல்லாம குடிச்சுட்டு வந்திருக்க…?”
“அவங்களுக்கு தெரியலைனா நீ செய்கிறது கரெக்ட்டா?” என தர்ஷினி கேட்க, பதில் கூறாமல் அறைக்கு செல்ல நடந்தான்.
“சாப்பிட்டு போ” என்றாள்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம் போடி”
“நல்லா குடிச்சிட்டு இப்படி சாப்பிடாமல் படுத்தா லிவர் கெட்டுப் போய்டும். வந்து சாப்பிடு”
“ரொம்பதான் என் மேல அக்கறை… போடி”
“உன் மேல எனக்கு என்ன அக்கறை? இப்படி வெறும் வயித்துல படுத்து, எதையாவது இழுத்து வச்சுகிட்டீனா… அப்பவும் நான்தான் கஷ்டப்படணும். ஒழுங்கு மரியாதையா வந்து சாப்பிடு. இல்லைனா மாமாவை கூப்பிடுவேன்” என்றாள்.
“எடுத்து வை… வந்து தொலைக்கிறேன்” எனக் கூறிவிட்டு, கை கால் கழுவி, உடை மாற்றிக் கொண்டு வந்தான்.
முட்டை தோசை ஊற்றி கொடுத்து “சாப்பிடு” என்றாள்.
சாப்பிடாமல் அவள் இரு கைகளையும் தன் இரு கைகளால் பிடித்துக்கொண்டு அவன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
“எனக்கு தெரியும்டி. நான்னா உனக்கு ரொம்ப பிடிக்கும். என் மேல உனக்கு லவ்ஸோ லவ்ஸ். என் மேல உள்ள கோவத்துல, என்னை வெறுப்பேத்ததான ஃபெலிஸ லவ் பண்றதா பொய் சொல்ற…? அப்படி யாருமே கிடையாதுதானே…?” எனக் கேட்டான்.
“ஒழுங்கா சாப்பிடு” என்றாள் தர்ஷினி.
“சொல்லுடி… தர்ஷினி லவ்ஸ் இன்பாதானே..?” எனக் கேட்டான்.
“நீ சாப்பிடு சொல்றேன்” என்றாள்.
இன்பா சாப்பிட்டுவிட்டு கை கூட கழுவாமல் தர்ஷினியிடம் மீண்டும் கேட்க, “தர்ஷினி லவ்ஸ் ஃபெலிஸ்” எனக் கூறி எழுந்து சென்றாள். சாப்பிட்ட தட்டை தூக்கி விட்டெறிந்தான் இன்பா. அது தரையில் விழுந்து சத்தம் எழுப்ப சாரங்கபாணி வெளியில் வந்தார்.
“மாமா ஒன்னும் இல்லை… கைத்தவறி பாத்திரம் கீழே விழுந்துட்டு” எனக்கூறி சமாளித்தாள் தர்ஷினி.
மகன் மீது கோவம் வந்தாலும் நேரத்தை பார்த்துவிட்டு, “காலையில அவன்கிட்ட நான் என்னன்னு கேட்கிறேன். இப்ப உள்ள அழைச்சிட்டு போம்மா” எனக்கூறி அறைக்குள் சென்றுவிட்டார்.
“வீட்ல நம்ம மட்டும் இல்லை. நினைவு வச்சுக்கிட்டு வந்து படு” என்றாள் தர்ஷினி. கை கழுவி விட்டு அறைக்குள் வந்தவன் அப்படியே படுக்கையில் விழுந்தான். “தர்பூசணி என்னைதான் லவ் பன்றேன்னு சொல்லுடி…. ஐ லவ் யூ டி தர்பூசணி” என அவன் தனியே பேசிக் கொண்டிருக்க,
“உயிரை வாங்காம ஒழுங்கா தூங்குடா” என்றவள், தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டாள்.
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டான் இன்பா. முன்தினம் அவன் விட்ட சவால்தான் நினைவுக்கு வந்தது. அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாய், தர்ஷினியை பார்த்துக்கொண்டே நடந்தான். யோசித்து யோசித்து அவனுக்கு மண்டை வெடிப்பது போல இருந்தது.
தர்ஷினியும் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள். எழுந்தவுடன் அவளுக்கும் அந்த சவால்தான் நினைவுக்கு வந்தது.
தேநீர் குடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இன்பா. தர்ஷினி எழுந்ததை பார்த்தவன், “தர்ஷினி டார்லிங்… குட்மார்னிங்” என்றான்.
“என்ன… உனக்கு இன்னும் தெளியலையா?”
“நேத்து நைட் அடிச்சது இன்னுமா தெளியாம இருக்கும்?”
“அடுத்த முறை எனக்கும் வாங்கிட்டு வந்து கொடு. நைட் குடிச்சு பாத்துட்டு காலையில போதை இருக்குமா இருக்காதான்னு சொல்றேன்” என்றாள்.
“இன்னொரு தடவை நீ குடிச்சுட்டு வா… நான் உன் எலும்பை உடைக்கிறேன்” என்றாள்.
“எல்லாத்துக்கும் எதிர்த்து எதிர்த்து பேசாத. உனக்கும் சேர்த்து டீ போட்டு ஃப்ளாஸ்க்ல வச்சிருக்கேன். பல்ல தேச்சுட்டு டீ குடிச்சிட்டு தெம்பா வா. கொஞ்ச நேரத்தில அந்த ஃபெலிஸ் யாருன்னு நீ சொல்லப்போறல்ல…. இல்ல… இல்ல சொல்ல வைக்கப் போறேன். சொல்றதுக்கு உனக்கு எனர்ஜி தேவைப்படும்” என்றான்.
“அப்படியா….? ஆல் த பெஸ்ட் டா காட்டுப்பூச்சி” எனக் கூறி எழுந்து சென்றாள். சில நிமிடங்களில் தேநீர் எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தாள். அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்துக்கொண்டே அருந்தி முடித்தாள். அவள் டீ பருகும் வரை அமைதியாக இருந்தவன், பருகி முடித்ததும், கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான்.
“விடுடா… விடுடா…” என தர்ஷினி சத்தமிட, எல்லோருமே எழுந்து விட்டனர். வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தவன் கேட்டை திறந்து கொண்டு இழுத்துச் சென்றான். ரஹீம் பாய் வீட்டின் கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றான். ரஹீம் பாயும், நூர்ஜஹானும் அங்குதான் நின்றிருந்தனர். இன்பா வீட்டிலிருந்து எல்லோரும் வந்துவிட்டனர். சத்தம் கேட்டு பத்மினி வீட்டிலிருந்தும் வந்துவிட்டனர்.
தர்ஷினியை இழுத்துவந்து புறா கூண்டுக்கு அருகில் நிறுத்தினான். ஃபெலிஸ் இருந்த கூண்டைத் திறந்தவன், அந்த மாடப்புறாவை கையில் எடுத்துக் கொண்டான்.
“சொல்லுடி… எவண்டி அந்த ஃபெலிஸ்? இப்போ நீ சொல்லல… இந்த புறா கழுத்தை பிடிச்சி திருகிடுவேன்” என்றான்.
“டேய் ஃபெலிஸை ஒன்னும் செஞ்சிடாத. என் கிட்ட கொடுத்திடு” என்றாள் தர்ஷினி.
“டேய்… என்னடா வம்பு பண்ணிக்கிட்டு இருக்க?” என சாரங்கபாணி அதட்டினார்.
“அஞ்சு நிமிஷம் யாரும் எதுவும் வாயை திறக்கக் கூடாது” என அழுத்தம் திருத்தமாகக் கூறினான். மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்களும் அங்கேதான் குழுமி நின்றனர். தெருவைச் சேர்ந்த சிலர் கூட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நீ இப்போ ஃபெலிஸ் யாருன்னு சொல்லலை… இந்தப் புறா சாவுறது நிச்சயம்” என்றான்.
தர்ஷினி அப்பொழுதும் எதுவும் சொல்லவில்லை.
“என்ன செய்ய மாட்டேன்னு நினைச்சியா…? கண்டிப்பா செய்வேன். நீ ஒழுங்கா யாருன்னு சொல்லிடு” என்றான்.
தர்ஷினி எதுவும் சொல்லாமல் அவனை முறைத்துக் கொண்டு நிற்க, கோவமாக புறாவின் கழுத்தருகே தன் மற்றொரு கையை எடுத்துச் சென்றான்.
“நீதாண்டா இடியட் ஃபெலிஸ்… நீதான் ஃபெலிஸ்” என கத்தினாள் தர்ஷினி.
இன்பா உட்பட எல்லோருமே வியந்துபோய் தர்ஷினியைப் பார்க்க, தர்ஷினி அவன் கையிலிருந்த மாடப்புறாவை வாங்கிக்கொண்டாள். அதனை மென்மையாக தடவிக் கொடுத்தவள், “பயந்துட்டியா?” என அதனிடம் கேட்டாள். அது கண்களை உருட்டி உருட்டி பார்த்தது.
“போ… சீக்கிரம் தண்ணி எடுத்துட்டு வா” என இன்பாவிடம் கட்டளை போல தர்ஷினி கூற, ரஹீம் பாய் அவனுக்கு முன்னர் எடுத்து வந்து தண்ணீரை இன்பாவின் கையில் கொடுத்தார். மாடப்புறாவுக்கு தண்ணீர் வைத்தாள். அது அருந்திவிட்டு கூண்டின் மேலே ஏறி அமர்ந்து கொண்டது.
“நான் எப்படி டி ஃபெலிஸ்?” என உள்ளே சென்ற குரலுடன் கேட்டான் இன்பா.
“போர்ச்சுகீஸ் லாங்குவேஜ்ல ஃபெலிஸ்ன்னா ஹாப்பின்னு மீனிங். உன் பேர் என்ன? இன்பா. இன்பம். அப்போ உன் பேருதானே ஃபெலிஸ்?” எனக் கேட்டாள்.
எல்லோர் முகமும் புன்னகையில் விரிந்தது. கோவமெல்லாம் மறைந்து முகம் முழுக்க மலர்ச்சியுடன் தர்ஷினியை நெருங்கிய இன்பா, “எதுக்குடி இப்படி சுத்தி வளைச்சு… டைரக்டா இன்பான்னே வச்சிருக்கலாம்தானே…?” எனக் கேட்டான்.
“அப்படி வச்சா எல்லாருக்கும் தெரிஞ்சிடாதா..? முக்கியமா உனக்கு தெரிஞ்சிடாதா…?” எனக் கேட்டாள்.
“இந்த மாடப்புறா இங்க வந்து அஞ்சு வருஷம் இருக்கும். அப்பவே என் பேரு இதுக்கு வச்சிருக்கீனா…? அப்போ நீயும் என்னை மாதிரியே ரொம்ப வருஷமா என்னை லவ் பண்றியா? ரெண்டு நாளா எவ்வளவு டென்ஷன் பண்ணிட்ட … தர்பூசணி…” என்றவன் அவளை நெருங்கி வந்து “சாரிடி” எனக் கூறி அவள் கையைப் பிடித்தான்.
“தொடாத…” என அவன் கையை உதறியவள், “இப்பவும் சொல்றேன் உன்னை நான் லவ் பண்ணலை. நான் காதலிச்ச இன்பா நீ இல்லை. என் இன்பா என்னை கஷ்டப்பட விட மாட்டான். நான் கஷ்டப் படுறேன்னா உடனே ஓடி வருவான். ஆனா நீ…? இந்தக் கேஸ் நீ எடுத்த நடத்துறதுல எனக்கு எவ்வளவு மனக் கஷ்டம் தெரியுமா? என்னோட இன்பா தப்பு செய்யக்கூடாது. தப்புக்கு துணை போகக் கூடாதுன்னு நினைக்கிறது தப்பா…? போடா…” எனக் கூறிவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றாள்.
எல்லோரும் இன்பாவை முறைத்துக் கொண்டு நின்றனர். அவனது முகம் இறுகிப் போயிருந்தது. அவனருகில் வந்த ரஹீம் பாய், “என் பேட்டியோட காதல் உனக்கு வேணும்னா… அவ காதலிச்ச பழைய இன்பாவா மாறு” எனக்கூற, அவரைப் பார்த்து சிரித்தான்.
“பஷீர் உன் ஃபோன் கொடுடா” என்றான். பஷீர் அவனது கைப்பேசியை கொடுக்க, பிரபஞ்சனுக்கு அழைத்தான். அவர் அழைப்பை ஏற்கவும்,
“மாமா அந்த ஃபேக்டரி கேஸ் எனக்கு வேண்டாம். நீங்களே பாத்துக்கோங்க. தப்பா எடுத்துக்காதீங்க… எனக்கு இப்ப பேச நேரமில்லை. கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வரேன்” எனக் கூறி, அழைப்பை துண்டித்து பஷீரிடம் கைப்பேசியை கொடுத்தான்.
மாடப்புறாவின் அருகில் சென்று, அதனை தடவிக்கொடுத்துக் கொண்டே, “உன்னை பயமுறுத்தினதுக்கு சாரி. சும்மா அவளை உண்மை சொல்ல வைக்கதான் அப்படி பண்ணினேன். உன்னை எதுவும் பண்ணியிருக்க மாட்டேன். திரும்பவும் சாரி” என்றான். புறா அதன் சிறகுகளை அடித்துக் கொள்ள, சிரித்துக்கொண்டே வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.
“எங்கடா போற?” எனக்கேட்டார் லட்சுமி.
“என் தர்ஷினிக்கு பிடிச்ச இன்பாவா மாறிட்டேன். அவகிட்ட சொல்லப் போறேன்” எனக் கூறிக்கொண்டே அவனது வீட்டை நோக்கி நடந்தான்.
“நல்ல புள்ளைங்க…” என்றார் பத்மினி .
“ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்ளோ அன்பு வச்சுகிட்டு வெளியில பிடிக்காத மாதிரி எவ்ளோ சண்டை…?” என்றார் நூர்ஜஹான்.
“டேய்.. நீ தர்ஷினியோட ஃப்ரெண்ட்… நான் இன்பாவோட ஃப்ரெண்ட். இவங்க ரெண்டு பேரும் கமுக்கமா ரொம்ப வருஷமா லவ் பண்ணியிருந்திருக்காங்க. நம்ம ரெண்டு பேருக்குமே தெரியலை” என பஷீர் நசீரிடம் கூறினான்.
“அவங்களுக்கே தெரியலை. அப்புறம் நமக்கு எப்படி தெரியும்?” என்றான் நசீர்.
அறையில் தலையணையில் முகம் புதைத்து படுத்திருந்தாள் தர்ஷினி. கோவத்தில் முகம் சிவந்து போயிருந்தது. மனமோ கடந்து போன நிகழ்வுகளை நினைக்க ஆரம்பித்தது.