ஸ்ரீதர் அனுவிடம் சண்டையிட்டு முடித்து ஒரு வாரம் கடந்திருக்க, இன்று வரை அவனை வந்து பார்த்திருக்க வில்லை அவள். அன்று அத்தனை கோபமாக கத்திவிட்டு வைத்தவனும் அவளுக்கு மீண்டும் அழைக்கவே இல்லை.
அவள் வராததில் அத்தனை ஆத்திரம் வந்தாலும், நீ செய்த வேலைக்கு அவள் உன் போனை எடுத்ததே பெரிய விஷயம்” என்று அவன் மனசாட்சி அவனை இடித்துரைக்க, “ஏன் நான் தப்பு பண்ணிட்டா என்கிட்டே பேசமாட்டாளா? என்று தன்னையே கேட்டுக் கொண்டவன் மேஈண்டும் அவளுக்கு அழைக்க முயற்சிக்க அழைப்பு செல்லவே இல்லை.
எழுந்து நடக்கும் நிலையில் இருந்து இருந்தால் அடுத்த நொடியே அவளிடம் விரைந்து இருப்பான். ஆனால் காலில் இருந்த காயம் அவனை அந்த அறையில் கட்டி போட்டிருக்க, அனு அவனை முழுவதுமாக தேட வைத்திருந்தாள்.
அவளிடம் பேசிவிட்ட பிறகே பேசியதை உணர்ந்தான் அவன். அவன் இயல்பே அதுவாக இருக்க யாரை நொந்து கொள்ள முடியும் அவன். ஆனால் ஏதோ ஒரு மூலையில் அவள் வருவாள் என்று மனம் மொழிந்து கொண்டே இருக்க, அவனின் அந்த நம்பிக்கையை முற்றாக துடைத்தெறிந்தாள் அனு.
அவன் அழைப்பை துண்டித்த நிமிடம் அவனிடம் பதில் பேச முடியாத தன் நிலையை எண்ணி, ஆத்திரம் கொண்டவளாக அவள் அலைபேசியை தூக்கி சுவற்றில் வீசி இருக்க, அது தன் உயிரை விட்டிருந்தது. வாய்க்கு வந்தபடி அவனை திட்டி தீர்த்தவள் “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்??” என்று கண்ணீர் விட்டவளுக்கு மனதே விட்டுப் போனது.
நான் என்ன பொம்மையா ? இவன் அழைத்தாள் வருவதற்கும், வேண்டாமென்றால் விலகுவதற்கும் என்று யோசித்தவளுக்கு ஸ்ரீதரை நினைத்து முழு ஆத்திரம்தான். என்ன செய்து விட்டேன் நான்?? இவனை பேசியது தான் தவறு என்றால் என்னை பேச வைத்தவன் அவன் தான், நானாக எதையுமே ஆரம்பிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டவள் இனி எதுமே செய்வதாக இல்லை தங்கள் உறவை பொறுத்தவரை.
“என்னவானாலும் சரி.. இனி நானாக அவனை தேடி செல்லப் போவதுமில்லை… அவனையும் என்னை நெருங்க விடுவதாக இல்லை…நடப்பது நடக்கட்டும்” என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டவள் தன் வழக்கமான வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டாள்.
ராகவன் மகளின் மாற்றங்களை கவனித்த போதும் எதுவும் கேட்டு அவளை காயப்படுத்த விரும்பாமல் அமைதியாகவே இருந்து வர, அவளின் அன்னைக்கு அந்த அளவு பொறுமை இல்லை. மகளிடம் நேரடியாகவே அவர் தன் கோபத்தை வெளிப்படுத்த தொடங்கி இருந்தார் இப்போதெல்லாம்.
அவருக்கு மகள் அன்று தங்களிடம் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்றதே அதிர்ச்சி என்றால் அவளின் கண்ணீரும், அதன் பின்னான அவளின் வேதனை முகமும், இப்போதைய உணர்ச்சிகளற்ற முகமும் அத்தனை மன உளைச்சலை கொடுத்தது.
கணவரிடம் பேசி பயனில்லை என்று முடிவெடுத்து விட்டவர் அவ்வபோது மகளிடமே தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தார். அன்று காலை அவள் உணவு உண்ண வந்து அமர்ந்தபோதும் கூட, அவளுக்கு தட்டை எடுத்து வைத்துவிட்டு அவர் விலகி சென்று சோஃபாவில் அமர்ந்துவிட, அன்னையின் இந்த செயலில் உண்ணாமலே கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள் மகள்.
ஆம்.. அனு இப்போது கல்லூரி செல்ல தொடங்கி இருந்தாள். தங்கள் வீட்டு காரிலேயே அவள் கல்லூரிக்கு சென்று வர, டிரைவர் அவளை காத்திருந்து மதியம் அழைத்து வந்துவிடுவார். அன்றைய விபத்துக்கு பிறகு மகளை தனியே விட மனமில்லாமல் ராகவன் செய்த ஏற்பாடு இது.
அவள் ஏறி அமர்ந்து கார் புறப்படவும், அதுவரை இருந்த கோபம் மறைந்து போக அந்த இடத்தில் ஆற்றாமை வந்து அமர்ந்து கொண்டது தேவியிடம். மகளை நினைத்து வெகுநேரம் கண்ணீர் விட்டு கொண்டிருந்தவர் ஷ்யாமை அலைபேசியில் அழைத்து பேசிக் கொண்டிருக்க, அவன் என்ன சொன்னானோ சற்று நேரத்திற்கெல்லாம் அவர் முகம் தெளிவானது.
அவர் நிம்மதியாக அழைப்பை துண்டித்துவிட்டு தன் வேலைகளை பார்க்க, இங்கே தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்த ஷ்யாம் நெற்றியில் தன் ஆட்காட்டி விரலால் கோலமிட்டுக் கொண்டே அமர்ந்திருந்தான். ஸ்ரீதர்- அனு வின் விஷயம் மருத்துவமனையிலேயே அவன் கேள்விப்பட்டு இருந்தாலும், தன் தங்கை தன்னிடம் ஏதும் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்தில் அவளிடம் அப்போது எதுவுமே கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
அடுத்த நாள் அவன் செல்லும்போது அவள் தான் அங்கே இல்லையே. இவர்கள் விஷயம் கூட கன்யா கூறியது தான் அவனுக்கு. தங்கையாக வரட்டும் என்று அவன் காத்திருக்க, அழைப்பு சித்தியிடம் இருந்து வந்திருந்தது இப்போது. என்ன தான் நடக்கிறது இவர்களுக்குள்?? என்று சில நிமிடங்கள் யோசித்தவன், ராகவிடம் அன்றைய வேலைகளை ஒப்படைத்துவிட்டு கன்யாவின் வீட்டுக்கு கிளம்பி இருந்தான்.
அவன் கன்யாவின் வீட்டுக்குள் நுழைந்த நேரம் கன்யா அவள் பள்ளிக்கு சென்று இருக்க, வேதா அருகில் இருந்த கோவிலுக்கு சென்று விட்டிருந்தார். அன்னம்மா இவனை வரவேற்று அமர வைத்தவர் அவனிடம் தகவல் சொல்ல, மௌனமாக தலையசைத்துக் கொண்டவன் ஸ்ரீதரின் அறைக்குள் நுழைந்து இருந்தான்.
அந்த அறையின் கட்டிலில் விட்டத்தை வெறித்து கொண்டு அமைதியாக படுத்திருந்தான் அவன். அவன் முகம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாகவும் இல்லை என்று குறித்துக் கொண்டவன் அருகே செல்ல, அவன் வரவை உணர்ந்தவனாக கட்டிலில் சாய்ந்தவாறு எழுந்து அமர்ந்தான் ஸ்ரீதர். அவன் முகத்தையே ஷ்யாம் கூர்மையாக பார்க்க “என்ன ஆச்சு மாமா ?? என்ன பேசணும்?? உங்க பொண்டாட்டியை பத்தியா, இல்ல உங்க தங்கச்சியை பத்தியா?? என்று அவன் இயல்பாக விசாரிக்க,
“ஆகா ரெண்டு பேரையும் விட்டு வைக்கல நீ” என்று ஷ்யாம் நக்கலாக கேட்டுவிட,
“நான் என்ன செஞ்சேன் அவங்களை. அவங்க தான் என்னை வச்சு செஞ்சிட்டு இருக்காங்க…”
“அப்படியா ஸ்ரீதர்… சரி சொல்லு என்ன பிரச்சனை உனக்கும் அனுவுக்கும்…”
“ஏன் மாம்ஸ்… உங்க தங்கச்சி சொல்லலையா உங்ககிட்ட…”
“அவ சொல்லி இருப்பான்னு உனக்கு தோணுதா ஸ்ரீதர்..”
“அப்புறம் நான் மட்டும் சொல்வேன்ன்னு எப்படி எதிர்பார்க்கிறிங்க மாம்ஸ்…” என்று அவன் கேட்டுவிட,
“அதுவும் சரிதான்.. சொந்த தங்கச்சியே அவ காதலை என்கிட்டே சொல்லல, நீ சொல்வ ன்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்….” என்று ஷ்யாம் வருத்தமாக சொல்லிவிட
“மாம்ஸ்.. அவ சொல்லக்கூடாது ன்னு எல்லாம் நினைக்கல… நாந்தான் அவ ஸ்டடிஸ் முடியிற வரைக்கும் யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம் ன்னு சொல்லி இருந்தேன். கிட்டத்தட்ட ப்ராமிஸ் மாதிரி…” ஸ்ரீதர் அவசரமாக இடையிட்டு கூற
“ஓகே.. அது உங்களோட விஷயம்.. நான் அதை பத்தி பேச இங்கே வரல ஸ்ரீ… அனுவோட அம்மா எனக்கு கால் பண்ணி இருந்தாங்க.” என்று அவன் சிறிதாக இடைவெளிவிட்டு ஸ்ரீதரின் முகம் பார்க்க, அவன் எதிர்பார்த்த உணர்வு அங்கே பிரதிபலிக்கவும் “அனு சரியா இல்லை ஸ்ரீதர்… எப்பவும் எதையோ பறிகொடுத்தது போல இருக்கா… உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு நான் கேட்க கூடாது ஓகே ….. ஆனா அவளுக்கு ஒண்ணுன்னா பார்த்திட்டு சும்மாவும் என்னால இருக்க முடியாது… அதையும் ஞாபகம் வச்சிக்கோ…” என்று ஷ்யாம் அழுத்தமாக கூற
“மாம்ஸ் நீங்க இப்படி மிரட்டற அளவுக்கு இங்க ஒரு பிரச்சனையும் இல்ல. நாந்தான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். என்மேல கொலைவெறில இருக்கா… போன் எடுக்கல.. நேர்ல கூப்பிட்டாலும் வரல… ஆனா எல்லாத்துக்கும் நாந்தான் காரணம் மாம்ஸ். அவளை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்.
“அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கறதா கன்யா சொல்லி ஏத்தி விடவும், அதுக்கும் அவளையே போட்டு படுத்திட்டேன். நிச்சயமா கொஞ்சம் டைம் எடுக்கும் மாம்ஸ். இந்த கால் வேற சதி பண்ணுது…. நான் அவளை சரி பண்ணிடுவேன்.. என்னை நம்புங்க மாம்ஸ்..” என்று பவ்யமாக கூறி முடித்தான் ஸ்ரீதர்.
அவன் பேச்சு திருப்தியாக இருந்தாலும் “அவ இந்த அளவுக்கு கோபப்படணும்ன்னா, நிச்சயமா நீ பெருசா ஏதோ செஞ்சிருக்கணும் ஸ்ரீ. எனக்கு தெரியும், அனு தேவையில்லாம கோபப்பட மாட்டா”
“நிச்சயமா மாம்ஸ். ரொம்ப பேசிட்டேன்… ஆனா அதுக்காக அவளை விட்டு விலகி எல்லாம் நிற்க முடியாது என்னால… நிற்கிறதாவும் இல்ல…”
“நான் உன்னை விலகவும் சொல்லல ஸ்ரீதர்… அனு எனக்கு தங்கை.. நீ கன்யாவோட தம்பி… கிட்டத்தட்ட எனக்கும் நீ தம்பி மாதிரி தான்.. என்னால உங்க ரெண்டு பேரையும் விட்டு கொடுக்க முடியாது. ஒருவேளை எங்க கல்யாணத்துக்கு பிறகும் நீ இப்படி நடந்துக்கிட்டா நிச்சயமா அது கன்யாவையும், என்னையும் பாதிக்கும்.
“அப்படி என்ன கோபம் ஸ்ரீதர் உனக்கு… அதுவும் உனக்கு சொந்தமானவங்க கிட்ட… அவங்களை காயப்படுத்துறது தான் உன்னோட பாசமும், உரிமையுமா… நீ கன்யாவை நிச்சயமா ஏதோ பேசி இருக்க, எனக்கு தெரியும். ஆனா நீ என்ன பேசினேன்ன்னு அவ இதுவரைக்கும் என்கிட்டே கூட சொன்னதில்லை.
“அதே போலத்தான் அனுவும்.. இத்தனை விஷயத்துக்கும் உன்னை பத்தி ஒரு வார்த்தை கூட அவ குறையா இதுவரைக்கும் பேசவே இல்ல. ஆனா நீ என்ன பண்ணிட்டு இருக்க… உனக்கே தெரியுது நீ எங்கே தப்பு பண்ற ன்னு. ஆனா சரி பண்ணிக்க தான் தைரியம் இல்ல உனக்கு.”
“கண்டிப்பா நீ மாறியே ஆகணும் ஸ்ரீதர். இல்ல எல்லாரையும் இழந்திடுவ நீ…. உன்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு. இந்த கொஞ்ச நாட்கள்ல ஏதோ ஒரு பாண்ட் உன்னோட… நீ கெட்டவன் எல்லாம் இல்ல.”
“ஆனா ஏதோ ஒரு ஈகோ உனக்குள்ள… உன்னை சேர்ந்தவங்க கிட்ட உன் ஈகோவ காட்டி என்ன செய்ய போற நீ” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான் ஷ்யாம்.
அவன் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் மௌனமாக தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். முழுதாக இரு நிமிடங்கள் கடந்த பின்னும் அவன் அமைதியாகவே இருக்க, “ஓகே ஸ்ரீதர்… நான் கிளம்புறேன்” என்றவன் நடக்க தொடங்க
“மாம்ஸ் ” என்று அழைத்தவன் ஷ்யாம் நின்று திரும்பி பார்க்கவும் “சாரி மாம்ஸ்..” என்று கூற, ஷ்யாம் அசையாமல் பார்க்கவும் “நான் எல்லாத்தையும் சரி பண்ணுவேன் மாம்ஸ்” என்று நம்பிக்கையாக கூற, புன்னகையுடன் தலையசைத்து அவனிடம் விடைபெற்றான் ஷ்யாம்.
ஷ்யாம் ஸ்ரீதரின் அறையிலிருந்து வெளியேறி வெளிப்புறமாக நடக்க, அவனுக்கு எதிரே வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தாள் கன்யா. ஷ்யாமை பார்க்கவும் அவள் நின்ற இடத்தில நின்றுவிட, அவள் வருகை தனக்காக என்று புரிந்து போனது ஷ்யாமுக்கு.
ஸ்ரீதரின் விபத்துக்கு பிறகு அவர்கள் சந்தித்ததே இரண்டு முறை தான். அதுவும் சுற்றிலும் அத்தனை பெரியவர்களும் இருக்க சரியாக பார்த்துக் கொள்ள கூட முடியாத நிலை தான். இன்று அன்னம் ஷ்யாம் வந்திருப்பதாக கூறவும், பள்ளியிலிருந்து உடனே கிளம்பி வந்திருந்தாள் அவள்.
ஷ்யாம் அவளை நெருங்கியவன் அவள் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டு, அவள் முகம் பார்த்து புன்னகைக்க அப்போதுதான் அவளுக்கு இருக்குமிடம் நினைவு வந்தது. அவனிடம் இருந்து விலகி நிற்க அவள் முயற்சிக்க, அதை புரிந்தவனாக “அன்னம்மா..” என்று அழைத்தவன் அவர் தலை தெரியவும் “உங்க ஸ்ரீமாவ நான் கடத்திட்டு போறேன். ஈவினிங் வந்திடுவா…” என்று கூறி விட்டு பற்றிய கைகளை விலக்காமல் அவளை அழைத்து சென்று தன் காரில் ஏற்றினான்.
கன்யாவோ நீண்ட நாட்கள் சென்று கிடைத்த அந்த தனிமையை மிகவும் விரும்ப, எங்கே அழைத்து செல்கிறான் என்று கூட கேட்கவில்லை அவள். காரில் ஏறி அமர்ந்ததும் அவள் வலக்கையை தன் கையில் எடுத்து லேசாக முத்தமிட்டவன் காரை கிளப்பி இருந்தான்.
அவன் சென்று நின்ற இடம், ECR சாலையில் இருந்த ஒரு தனிவீடு. அருகில் வீடுகள் இருந்தாலும் கூட, அமைதியாகவே இருந்தது அந்த சூழல். காரை வீட்டினுள் சென்று நிறுத்தியவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவளை அங்கிருந்த சோஃபாவில் அமர்த்திவிட்டு, கிச்சனுக்குள் நுழைந்து கையில் காஃபியோடு அவன் வெளியில் வர, அவனை பார்த்து புன்னகைத்தாள் அவள்.
“என்ன சிரிப்பு” என்று கேட்டுக் கொண்டே காஃபியை அவளிடம் கொடுத்தவன் அவள் அருகில் அமர, “ஒன்றுமில்லை” என தலையசைத்தாள். அவன் சந்தேகமாக பார்க்க “வழக்கமா நாங்க தான் காஃபி கொடுப்போம் இல்லையா… இங்க மாப்பிளை கொடுக்கவும் சிரிப்பு வந்துடுச்சு” என்று கூறி சிரித்தாள் அவள்.
“பயமே இல்லை உனக்கு… மாப்பிள்ளை பார்க்கிறியா..” என்று அவள் காதை அவன் பிடிக்க, அப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருந்தாள். அவள் தோள்மீது கையை போட்டு அணைத்து கொண்டவன் காஃபியை குடிக்க, இருவரும் குடித்து முடிக்கவும் அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான் அவளை.
அவன் அழைக்கவும் உடன் நடந்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே வர அவள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது எதிரே புலப்பட்ட காட்சி. பச்சை நிறத்தில் பந்தல் ஒன்று ஒளி ஊடுருவும் வகையில் அந்த இடத்தை மூடி இருக்க, அந்த பெரிய மொட்டைமாடி முழுவதும் பலவகை செடிகள், சிறிய அளவிலான மரங்கள், கொடி வகைகள் என்று அந்த இடம் இயற்கையால் நிறைந்து இருந்தது.
ஒரு புறம் லவ் பேர்ட்ஸ், கிளிகள் என்று இரண்டு மூன்று கூண்டுகள் வேறு இருக்க, அவைகளின் இனிமையான ஒலி அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. அந்த செடிகளுக்கு நடுவில் சிமெண்டில் அமைக்கப்பட்ட இரண்டு பாத்திகளில் வண்ண மீன்கள் அழகாக நீந்தி கொண்டிருக்க, நிச்சயம் கொள்ளை கொண்டது அந்த மாடித்தோட்டம்.
அவள் காதுகருகில் நெருக்கமாக “பிடிச்சிருக்கா” என்று அவன் குரல் எதிரொலிக்க, அமைதியாக தலையசைத்தவள் அந்த இடத்தின் பிரமிப்பிலிருந்து வெளிவரவே இல்லை. அங்கே நீந்தி கொண்டிருக்கும் மீன்கள் அருகே கையை நீட்டி அவள் விளையாடிக் கொண்டிருக்க, அந்த பாத்தியின் ஓரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவன் பார்வை குறுகுறுக்க “என்ன… அப்படி பார்க்கிறிங்க” என்றவளிடம், “இதுவரைக்கும் ஒரு ஐலவ்யூ கூட சொல்லல என்கிட்டே… ஆனா இதையெல்லாம் இவ்ளோ ரசிக்கிறா என் பொண்டாட்டி.. அதுவும் நான் பக்கத்துல இருக்கும்போதே..” என்று அவன் கடுப்பாக கூறவும், சத்தமாக சிரித்துவிட்டவள் “என்ன சொல்லணும் இப்போ” என்று கேட்டே விட்டாள்.
“அதையும் நானே சொல்லி கொடுப்பேனா… போடி ” என்றவன் முகத்தை திருப்பி வேறு புறம் பார்க்க,
என்று சட்டென அவள் பாடி விட, நொடியில் திரும்பி அவளை பார்த்தான் அவன். ஆனால் அவன் பார்க்கவும், தலையை குனிந்து கொண்டவள் மௌனமாகிவிட “ஹேய் கன்யா ப்ளீஸ்… ஏமாத்தாத” என்று அவன் கெஞ்சலாக கேட்க
என்று பாடிக்கொண்டே அவள் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி எடுத்து வைக்க, அவள் பாடலின் பொருள் உணர்ந்தவன் அவள் அருகில் நெருங்கி கொண்டிருந்தான்.
அங்கிருந்த ஒரு இரும்பு கம்பத்தில் மோதியவள் அதிலேயே சாய்ந்து நின்றுவிட, அவளுக்கு ஓரடி இடைவெளி விட்டு நின்றிருந்தான் அவன்.
“ம்ஹூம்.. விழவே இல்ல… எனக்கு தேவையானத இன்னும் நீ பாடவே இல்ல.” என்று அவன் புருவம் உயர்த்திக் கூற, தலையை குனிந்து கொண்டவள் “இப்படி பார்த்தா எப்படி பாடறது.. இன்னொருநாள்….” என்று சொல்லும்போதே
“நோ” என்றுவிட்டவன் ” எனக்கு இப்போ கேட்கணும் கன்யா ப்ளீஸ்… நான்மட்டும்தானே இருக்கேன்” என்று கொஞ்சலாக கேட்க, அவன் பார்வையில் எங்கிருந்தோ வெட்கம் தான் வந்து சேர்ந்தது. பாடல் எங்கோ ஓடிவிட்டது.
ஆனால் அவன் பிடிவாதமாக நிற்க “ஷ்யாம் ப்ளீஸ்..” என்ற போதும் அவன் அசையாமல் நின்றுவிட, கண்களை மூடிக் கொண்டவள்
ச ரி க ம ப தா ப ம க ரி
ச ரி கசரிக ச ரி க
ச ரிக தத்தித்தோம்
என்று நிறுத்தி
என் கண்ணனே வா
உன் மீராவை நீ இங்கு பாராயோ
காதல் வேதனை அது என்னனென்பது
இனி எங்கு சொல்வது..
ஐ லவ் யூ..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..
என்று முடிக்கும்போது அவளின் கடைசி வார்த்தைகளை அவன் மென்று கொண்டிருந்தான். கண்களை அகல விரித்தவளும், அவனை தனக்குள் அடக்கி விழிகளை மூடிக் கொண்டாள் இதமாக…..