புல்லாங்குழல் தள்ளாடுதே 19 11247 புல்லாங்குழல் தள்ளாடுதே 19 அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தனக்கே உரிய பரபரப்புடன் கண்களுக்கு விருந்தாக, கண்களில் பதிந்தது கருத்தில் நிற்கவில்லை கன்யாவுக்கு. அவளுக்கு வழங்கப்பட்ட அறை பால்கனியுடன் அமைந்திருக்க, அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரே விரிந்து கிடைக்கும் அந்த நகரத்தை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இங்கு வந்து ஒரு வாரம் முடிந்திருக்க, அவள் கச்சேரிக்கு ஒரு குறைவும் இல்லாமல் தனக்கு குறிப்பிட்ட நாட்களில் அழகாக பணியை முடித்து விடுகிறாள். அதற்காக அவள் பெரிதாக மெனக்கெட வேண்டி இருக்கவில்லை. தொழில் மேல் கொண்ட பக்தியாலும், காதலாலும் தங்கு தடையில்லாமல் அந்த வேலை மட்டும் நடந்து விடுகிறது. ஆனால் இது போல தனித்திருக்க நேரும் இரவு வேளைகள் அவளை மொத்தமாக விழுங்கி கொள்ள பார்க்கிறதே. அதற்கு என்ன செய்வாள் அவள்?? விழுங்குவது மொத்தமும் ஷ்யாமின் நினைவுகளாக இருக்க, கண்ணீரோடு புன்னகையும் சேர்ந்தே நிறையும் இதழ்களில். குரலின் பண் கெட்டுவிட கூடாது என்பதற்காக கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்பவள் புன்னகையை கட்டுப்படுத்துவதே இல்லை. அவன் நினைவுகள் தொடங்கும்போதே இப்போதெல்லாம் அழகாக ஒரு புன்னகையும் வந்து அமர்ந்து விடுகிறது அவளிடம். என்ன செய்து கொண்டிருப்பான் ?? என்று எண்ணம் ஓடினாலும் “வேண்டாம் மனமே” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாலும் கூட அவன் நினைவுகளை கடக்க முடிவதில்லை அவளால். வேதவதியிடம் இரண்டு முறை பேசி இருக்க சுரத்தே இல்லை அவர் குரலில். அவரை வருந்துவது புரிந்தாலும் அவருக்கு எந்த விதமான போலி நம்பிக்கையையும் கொடுக்க தயாராக இல்லை அவள். எனவே அவரிடமும் எட்டியே நிற்கிறாள் இன்றுவரை. மொத்தத்தில் எதற்காக வந்தாலோ அதை அழகாக செய்து கொண்டிருந்தாள். விலக நினைத்தவள் விலகி இருப்பதாக நடிக்க பழகி இருந்தாள். ஆனால் அதுவே அத்தனை வேதனை கொடுக்க, அத்தனையும் விழுங்கி கொண்டு எனக்கு என்ன? நல்லாத்தானே இருக்கிறேன்!! என்ற பார்வையை தான் அனைவர்க்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் அவளை அப்படியே விட்டுவிடவா அவன் இருக்கிறான். அவள் கிளம்பிய அடுத்த நாளே அவன் கிளம்ப நினைக்க அலுவலக வேலைகள் இழுத்துக் கொண்டது அவனை. இத்தனை நாட்கள் அவளை விட்டதே அதிகம் என்பதை போல அந்த நள்ளிரவு நேரத்தில் தூங்காமல் விமானத்தில் அமர்ந்திருந்தான் அவன். இன்னும் மிக நீண்ட இரண்டு மணி நேரங்கள் இருந்தது அவளைக் காண. அவனுக்கு பொறுமை போய் கொண்டு இருந்தது அந்த விமானத்தின் வேகத்தில். பறந்து செல்ல இத்தனை மணி நேரம் தேவையா என்று கேள்வி எழுப்பும் நிலையில் இருந்தான் அவன். விடுமுறைக்காக காத்திருக்கும் மாணவனை போல் இருந்தது அவன் நிலை. ஏதோ இன்றுதான் அவளை முதல் முறை பார்க்க போவதை போல் உள்ளம் ஆர்ப்பரிக்க, என்ன செய்வாள் என்னை கண்ட நிமிடம்?? என்று ஒரு குறுகுறுப்பு வேறு நெஞ்சின் ஓரத்தில். அவள் செயல்கள் அத்தனையும் இப்போது யோசித்து பார்க்கும் போது சிறுபிள்ளை தனமாக தோன்றியது அவனுக்கு. “என்னை பிடிச்சும் இருக்கு, ஆனா ஒத்துக்க பயமாவும் இருக்கு” என்று ஓரளவுக்கு அவளை சரியாகவே கணித்திருந்தான் அவன். அவனுக்கும் இந்த ஒளிந்து விளையாடும் ஆட்டம் சுவாரசியமாக தான் இருந்தது. ஆனால் அதே சமயம் ஒரு சங்கடம் என்றால் என்னிடம் வராமல் இப்படி அமெரிக்காவிற்கு ஓடி வருவாளா இவள்?? என்று ஆத்திரமும் வர, இனி இப்படி சொல்லாமல் செல்லும் எண்ணம் அவளுக்கு வரவே கூடாது என்பதுதான் அவன் நோக்கமாக இருந்தது அந்த நொடிகளில். தன்னிடம் ஆறுதல் தேடுமளவுக்கு கூட நான் இவளுக்கு நம்பிக்கை தரவில்லையா ?? என்று யோசித்தவனுக்கு சற்று வருத்தமும் இருந்தது அவளின் இந்த நடவடிக்கையில். இவ்வாறாக சிரிப்பு, கோபம், வருத்தம் என்று தன்னையே அலைக்கழித்துக் கொண்டவன், தன்னைமீறி கண்ணயர, பாவம் அவன் உறக்கத்திற்கு ஆயுள் குறைவு போல. அவன் உறங்க ஆரம்பித்த பதினைந்து நிமிடத்தில் விமானம் தன் இயக்கத்தை நிறுத்தி தரையிறங்கி விட்டது. ஏற்கனவே அவளை பற்றிய அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தவன், தனக்கான வேலைகளையும் முடித்திருக்க, இதோ அவன் வெளியில் வருமுன்னமே அவனுக்காக காத்திருந்தது அவனுக்கான கார். அதன் ஓட்டுநர் நட்பாக புன்னகைத்துவிட்டு காரை நேராக கன்யா தங்கி இருந்த ஹோட்டலுக்கு விட்டார். அந்த பெரிய ஹோட்டலின் லாபியில் அமர்ந்தவன் நிதானமாக அவனுடைய இன்டர்நேஷனல் சிம்மை இயக்கினான். அதில் சிக்னல் கிடைத்துவிடவும் கன்யாவின் எண்ணுக்கு அழைக்க, நீண்ட நேரமாக ஒலித்தது அலைபேசி. அழைப்பின் முடிவில் தூக்கம் சுமந்த அவள் குரல் “ஹலோ” என்று கூற இந்த குரலுக்காகவே இன்னும் பத்து முறை கூட அமெரிக்கா வரலாம் என்றுதான் தோன்றியது அவனுக்கு. அவன் சிந்தனையில் அவன் இருக்க, எதிர்முனையில் இதற்குள் மீண்டும் இரண்டுமுறை “ஹலோ.. ஹலோ..” என்றிருந்தாள் அவனின் அவசரக்காரி. அவளுக்கு பதிலாக “கன்யா” என்று அமர்த்தலாக, அழுத்தமாக அவள் பெயரை மட்டும் அவன் உச்சரிக்க, அதுவே போதுமானதாக இருந்தது அவளுக்கு. இதயம் ஒரு நொடி நின்று மீண்டும் துடிப்பது போல் ஒரு எண்ணம். அடுத்த நொடி மீண்டும் மௌனம் தான். வார்த்தைகளே தேவையிருக்காத மூச்சுகளின் சத்தம் மட்டுமே சங்கீதம் படித்துக் கொண்டிருந்த மிக அழகான ஒரு நெடிய நிமிடம். அந்த நிமிடத்தின் முடிவில் “நீ என்ன செய்வியோ தெரியாது, நான் இப்போ உன்னை பார்க்கணும் கன்யா. இந்த நிமிஷம்” என்று அதே அழுத்தத்துடன் அவன் உரைக்க எப்படி சாத்தியம் இது? என்று யோசித்தவளுக்கு அவனின் இந்த குரலுக்கு பதில் கூறவும் தெரியவில்லை.”ஷ்யாம்… இ.. இப்போ எப்படி” என்று அவள் திணற “ஹோட்டல் லாபில இருக்கேன் கன்யா.. ரிசப்ஷனுக்கு கூப்பிட்டு சொல்லு” என்று கட்டளையாக கூறியவன் அழைப்பை துண்டித்து விட்டான். அதற்கு மேல் யோசிக்கவே இல்லை கன்யா. அவன் அழைப்பை துண்டித்த அடுத்த நிமிடம் ரிசப்ஷனுக்கு அழைத்து அவள் விவரம் சொல்லி காத்திருக்க, அடுத்த ஆறாவது நிமிடம் அவள் அறைக்கதவு தட்டப்பட்டது. ஷ்யாமும் அவளுக்கு அழைத்துவிட, எழுந்து சென்று கதவை திறந்தவளுக்கு கைகள் நடுங்கி கொண்டு இருந்தது மெல்லியதாக. அவள் அறைக்கதவை திறக்கவும், அங்கு நின்றிருந்த ஹோட்டல் ஊழியர் அவளிடம் அவன்தானா என்று உறுதி படுத்திக் கொண்டு நகர்ந்துவிட, அவளை கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைந்துவிட்டான் ஷ்யாம். தன் கையிலிருந்த பெட்டியில் இருந்து தனக்கான உடையை எடுத்துக் கொண்டவன் எழுந்து குளிக்க சென்றுவிட்டான். சிறுபிள்ளை போல் தன்னையே பார்க்கும் அவள் முகம் வருத்தத்தை கொடுத்தாலும், “சொல்லாம தானே கிளம்பி வந்தா… இப்போ மட்டும் என்ன, அதுவும் நானா வெட்கமே இல்லாம தேடி வந்தபிறகு..” என்று தோன்றிவிட நிதானமாகவே குளித்து முடித்தான். தலையை துவட்டிக் கொண்டே அவன் வெளியில் வர, அந்த பால்கனியில் இருந்த நாற்காலியில் மீண்டும் தஞ்சம் அடைந்திருந்தாள் அவள். அவளை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த தொலைபேசியின் மூலம் தனக்கு உணவை ஆர்டர் செய்தவன் தன் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்து விட்டான். கன்யாவிற்கு அவன் செயல்கள் கோபத்தை தான் கொடுத்தது. அவன் அமெரிக்கா வந்தது தனக்காகத் தான் என்று புரிந்தாலும், அவன் இப்படி கண்டுகொள்ளாமல் இருக்க அவன் நெருங்க விரும்பியது பெண்மனம். விலகினால் விரும்புவது தானே இந்த சக்தியின் ஈர்ப்புவிசை. கன்யா அறையினுள் வரவே இல்லை. அவனும் கட்டிலைவிட்டு நகரவே இல்லை. ஆனால் உணவு சரியாய் நேரத்திற்கு வந்துவிட, வாசலில் இருந்த அழைப்புமணி ஒலித்தது. ம்ஹும் அப்போதும் அசையவே இல்லை ஷ்யாம். கன்யாதான் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தவள் அவன் அசையாமல் இருக்கவும், அவனை முறைத்து விட்டு சென்று உணவை வாங்கி வந்தாள். சற்று பெரிய முறையாகவே இருக்க ஒருபுறம் வரவேற்பு போல் தடுக்கப்பட்டு அங்கு சோஃபா ஒன்று இருந்தது அந்த அறையில். அதற்குமுன்பு இருந்த டீபாயில் உணவை வைத்துவிட்டவள் மீண்டும் பால்கனிக்கு செல்ல முற்பட, “அதை இங்கே கொண்டு வா கன்யா” என்று கூறி இருந்தான் அவன். அவன் புறம் திரும்பியவள் அசையாமல் அவனை பார்க்க, மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவன் அவளை அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான். “உன்கிட்ட இப்போ சண்டை போடக்கூட தெம்பு இல்லை எனக்கு. அவ்ளோ டயர்டா இருக்கேன். எடுத்துட்டு வா” என்று மீண்டும் கூற அமைதியாக அந்த உணவை எடுத்துச் சென்று அவனிடம் நீட்டினாள் அவள். வாங்கி கொண்டவன் அப்போதும் அவள் முகம் பார்க்காமல் உணவை உண்பதில் கவனம் செலுத்தினான். அவள் அங்கேயே நின்றது கூட தன்னை பாதிக்காதது போல் அவன் காட்டிக் கொள்ள, அவனின் இந்த செயலில் சிறுபிள்ளையாய் சுருண்டு கொண்டது மனது. அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள் அவள். உண்டு முடித்தவன் அந்த கட்டிலில் படுத்து உறங்கிவிட, கன்யாவிற்கு தூக்கம் தொலைந்தது. இவன் எப்படி இப்படி இருக்கலாம்?? என்று கோபம் கொண்டு எழுந்தவள் அவன் அருகில் சென்று பார்க்க, உண்மையாகவே அசந்து உறங்கி கொண்டிருந்தான் அவன். அவனின் பயண நேரம் அப்போதுதான் நினைவுக்கு வர, உறங்கட்டும் என்று நினைத்துக் கொண்டவள் அவனுக்கு அருகில் இருந்த ஒரு தலையணை, போர்வையை எடுத்துக் கொண்டு அந்த சோஃபாவில் சென்று முடங்கினாள். இப்படி அவனுடன் ஒரே அறையில் இருப்பது வேறு குறுகுறுக்க, இருவர் மீதும் இருந்த நம்பிக்கை அதை துடைத்து எறிந்தது. தன் அம்மாவிடம் சொல்வதாக நினைத்து “நான் ஸ்ரீரஞ்சனியோட பொண்ணும்மா.. தப்பு செய்யமாட்டேன். எனக்காக வந்து இருக்காங்கமா. என்னால அவங்களை விட முடியாது மா. ப்ளீஸ்” என்று மனதோடு சொல்லிக் கொண்டவள் அமைதியாக கண்களை மூடிக் கொண்டாள். கண்கள் மூடிக் கொண்டாலும், உறக்கம் வரவே இல்லை. அவளை அரை தூக்கத்தில் எழுப்பி அமர வைத்தவனோ அங்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.இதற்குமேல் முடியாது என்று கண்களை திறந்து விட்டவள் அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த இரவில். இத்தனைக்கும் விடிவிளக்கின் மெல்லிய ஒளியில் அவன் வடிவம் மட்டுமே தெரிந்தது. அப்போதும் அவனையே பார்த்தவள் எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கி இருந்தாள். அடுத்தநாள் காலை நன்கு வெளிச்சம் வந்தபிறகே விழிப்பு வந்தது ஷ்யாமுக்கு. மெதுவாக உறக்கத்திலிருந்து அவன் விழித்துக் கொள்ள, கன்யா ஏற்கனவே குளித்து முடித்து அந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் கையில் அவளது மொபைல். அவளை பார்த்து புன்னகைத்தவன் இப்போதும் அவளிடம் பேசாமல் தான் பாட்டிற்கு தயாராகி வந்துவிட்டு தனக்கான காஃபியை ஆர்டர் செய்து கொண்டிருக்க, கன்யாவின் பொறுமை பறந்துவிட்டது. என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன்?? என்று நினைத்தவள் “என்ன செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க.” என்று கத்த “என்ன செஞ்சேன். காஃபி ஆர்டர் பண்ணேன். இதுல என்ன, புரியலையே எனக்கு” என்று அவன் கேள்வியாக பார்க்க “இங்க இந்த ஊர்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க ன்னு கேட்டேன். எதுக்கு வந்திங்க” என்று எகிற “ஏன் அமெரிக்காவும் உன் அப்பா வீட்டு சொத்தா??” என்று நக்கலாக கேட்டவன் அவள் கேள்விக்கு பதிலாக “நிச்சயமா உன்னை பார்க்க வரல.” என்றும் சேர்த்து கூற “அப்போ ஏன் எனக்கு கூப்பிட்டிங்க. ஏன் என்கூட இருக்கீங்க” என்று கோபமாக கேட்க “ஹான்… வேண்டுதல்…” என்று கூறியவன் “கேட்கிறாப்பாரு” என்று முணுமுணுத்துக் கொண்டு சத்தமாக “இந்த ஊர்ல ஒரு பிசினஸ் மீட். அதுக்குதான் வந்திருக்கேன் உன்கூடவே தங்கிட்டா, ஹோட்டல் செலவு மிச்சம் பாரு… அதான் உனக்கு கூப்பிட்டேன்..போதுமா” என்று கூற, அவன் தன்னை நக்கல் செய்வது புரிந்தாலும், எங்கோ வலித்தது அவளுக்கு. பேச வேண்டுமே என்பதற்காக “அதுக்கு என்னோட அனுமதி வேண்டாமா.. ” என்று கேட்க “ஓஹ்… இன்னும் நீ அனுமதி கொடுக்கவே இல்லையா. சரி ஓகே, சொல்லு .. வெளியே போ ஷ்யாம்ன்னு சொல்லு. இல்ல அது வேண்டாம். நாந்தான் யாருமே இல்லையே உனக்கு அப்புறம் என்ன ஷ்யாம், வெளியே போடா ன்னு சொல்லு. கிளம்புறேன் ” என்று அவன் நிற்க, ‘சொல்லித்தான் பாரேன்‘ என்று மிரட்டியது அவன் பார்வை. ‘உனக்காகத்தான் வந்தேன்‘ என்ற ஒரு வார்த்தையில் அவள் அடங்கி விடுவாள். ‘உன்னை தேடினேன்‘ என்ற ஒரு ஒப்புக்கொடுத்தலில் அவன் அடங்கி விடுவான். ஆனால் இருவருக்குமே அதற்கு மனமில்லாமல் போக சிலிர்த்துக் கொண்டு நின்றனர் இருவரும். கன்யா அவனை முறைத்துக் கொண்டே நிற்க, “வேற வேலை இல்லையா உனக்கு.. கச்சேரி பண்ணத்தானே வந்த… போ .. போய் அந்த வேலையை பாரு..” என்று அவன் கூற “அதுதான் முடிஞ்சு போச்சே” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவள் அமைதியாக நின்றாள். “இப்போகூட வாயை திறக்கிறாளா பாரேன்” என்று நினைத்துக் கொண்டவன் அமைதியாக சென்று பால்கனியில் நின்றுவிட்டான். அவளின் அமைதி அவனுக்கு உவப்பாக இல்லை. அவனுக்கு வந்த தகவல்களின் படி நேற்றோடு கச்சேரி முடிந்திருந்தது. இனி அவளுக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை. பிறகு தான் சொன்னவுடன் பதிலே பேசாமல் ஏன் இவள் மௌனமாக வேண்டும் என்று யோசித்தவனுக்கு எதுவோ இடிக்க, அவசரமாக அறைக்குள் வந்தவன் அந்த அறையின் கப்போர்டிலிருந்து அவள் கைப்பையை வெளியில் எடுத்து அவளின் பாஸ்போர்ட், டிக்கெட் விவரங்களை அவன் ஆராய முற்பட,கன்யா வேகமாக அவன் கையிலிருந்து தன் கைப்பையை பிடுங்கியவள் தன் டிக்கெட்டை அவனிடம் இருந்து பறிக்க முற்பட அவளை ஒரே கையால் கட்டிலில் தள்ளிவிட்டவன் அவள் டிக்கெட்டை சோதித்து முடித்திருந்தான். இன்னும் ஒருமாதம் கழித்து வந்த ஒரு தேதியில் டிக்கெட் இருக்க, அவளை திரும்பி முறைத்தவன் அப்போதே அந்த டிக்கெட்டை ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்துக்கு அழைத்து அதை ரத்து செய்துவிட்டான். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவளை முறைத்துக் கொண்டே மீண்டும் யாருக்கோ அழைத்தவன் அடுத்தநாள் விமானத்தில் அவளுக்கு டிக்கெட்டை உறுதி செய்ய சொல்லிவிட்டு தான் மொபைலை அணைத்தான். கன்யா அவன் தள்ளி விட்டதிலேயே அதிர்ந்து பார்த்திருக்க, அடுத்தடுத்த அவன் செயல்களில் வாயை பிளந்து விட்டாள். “என்ன செய்றான் இவன்?? என் விருப்பம்ன்னு ஒன்னும் இல்லையா. என்ன ஆகிடும் ஒரு மாசம் கழிச்சு போனா ” என்று அவள் எண்ணமிட “என்ன நினைச்சுட்டு இருக்கா இவ, நான் அமைதியா இருந்தா என்ன வேணா செய்வாளா ?? என்று கோபம் கனன்றது அவனுக்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் தன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். அந்த நாள் முடியும் தருவாயில் தான் அவன் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தது. கன்யா அமைதியாக கதவை திறந்துவிட்டு அறைக்குள் செல்ல, உள்ளே நுழைந்தவன் இன்று தான் அந்த சோஃபாவில் படுத்துக் கொண்டான். கன்யா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க கண்டுகொள்ளவே இல்லை அவளை. அடுத்த நாள் காலை முதலில் எழுந்து கொண்டவன் அவளை எழுப்பி, மிரட்டி கிளம்ப வைத்து ஒருவழியாக அவளை ஏர்போர்ட்டிற்கு கடத்தி விமானத்தில் ஏற்றிவிட்டிருந்தான். அவன் இப்படி தன்னை கட்டாயமாக அழைத்து செல்வது கோபம் வந்தாலும், அவன் அருகாமை பிடிக்கவே செய்தது அவளுக்கு. அவனோடு தோளோடு தோள் உரசும்படி அருகமர்ந்து கொண்டு, பஞ்சுபொதியாய் வெளியே தெரியும் மேகக்கூட்டத்தையும்,நீல வானத்தையும் ரசித்துக் கொண்டு இனிமையான பயணமாகவே அமைந்தது அந்த பயணம். அவன் தோள் சாய்ந்து நிம்மதியாக ஒரு உறக்கம் கூட உறங்கி எழுந்து விட்டாள் அவள். அவள் மனநிலை சற்று உற்சாகமாகவே இருந்தது அந்த நொடிகளில். ஆனால் விமானத்தை விட்டு கீழே இறங்கியதும், ஷ்யாமின் செயல்களில் எப்படி மாறிப் போவாளோ ?? என்ன செய்வாளோ ?? யாரறிவார்…