அத்தியாயம் -10(2)

அதற்கு மேலும் அவளிடம் கெஞ்சவோ விளக்கம் சொல்லவோ அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை, என்ற போதும் எதிர் பார்ப்போடு வெளியில் அமர்ந்திருக்கும் தன் குடும்பத்தினரை நினைத்து பார்த்தவன், “என்னை நீ நம்பணும்னா என்ன செய்யணும் நான்? டைம் எடுத்துக்கோ, யூ கேன் டெஸ்ட் மீ” என்றான்.

“ஓ தர பரிசோதனை ஹ்ம்ம்…! எப்படி சசி ஸாரை வச்சு என்னை டெஸ்ட் பண்ணினது மாதிரியா?” நக்கலாக கேட்டாள்.

“யாரையும் நம்ப முடியாத நிலைக்கு என்னை ஆளாக்கிட்டாங்க” எனும் போதே அவனது குரலில் எரிச்சல் வெளிப்பட்டது.

“வேணும்ங்கிற ஒண்ணதான் டெஸ்ட் பண்ணி எடுத்துப்பாங்க, வேணவே வேணாங்கிறேன், என் மனசு ஸ்ட்ராங்கா சொல்லுது, இது… ஹையோ நீங்க என் ஹஸ்பண்ட்… மை காட்!” என்ன கற்பனை செய்தாளோ அதை தாள முடியாது எனும் படி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவள் விழிகளை திறக்கையில் ஜெய் அங்கு இல்லை. ஹால் வந்தவன் வெளி வாயிலை நோக்கி நடந்து கொண்டே, “எனக்கு இந்த பொண்ணு வேணாம்” என்றான்.

மற்ற நால்வரும் திகைப்பும் திடுக்கிடுதலுமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஐயோ அண்ணா! சொதப்பல் மன்னா!” கத்திக் கொண்டே ஜெய்யை நோக்கி ஓடினான் ஜனா.

கார் சாவியை தம்பியின் கையில் திணித்தவன், “அம்மா அப்பயியை வீட்டுக்கு அழைச்சிட்டு போ, நான் சைட் போறேன்” என்றான்.

“ஸ்ரீ அக்கா…” ஜனா ஏதோ பேச ஆரம்பிக்க, “நம்மள ஒருத்தி வேணாம்னு சொல்ற வரை அவ முன்னாடி நிக்கிறது கேவலம். அந்த கேவலத்தையும் இன்னிக்கு பட்டுட்டேன், இனி…” என்றவன் இடைவெளி விட்டான்.

அண்ணனின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் கவலையானாலும் அவன் மீதுள்ள அக்கறையில் “தப்பு உன் பேர்ல ண்ணா, அக்காட்ட பத்து நிமிஷம் கூட பொறுமையா பேச முடியாதா? அப்புறம் எப்படி உன்னை அவங்களுக்கு பிடிக்கும்? போ ண்ணா, சான்ஸ் கிடைச்சும் தவற விடுற யூஸ்லெஸ் நீ” என்றான் ஜனா.

தம்பியை அடிக்க கை ஓங்கி விட்ட ஜெய், கடைசி நொடியில் நிதானித்து அடிக்காமல், “எவளுக்கும் என்னை பிடிக்கணும்னு அவசியம் இல்ல, வீடு போயிட்டு மெசேஜ் பண்ணு” என சொல்லி நடந்து விட்டான்.

அண்ணன் மீது வண்டி வண்டியாக ஏற்பட்ட கோவத்தில் அவன் பின்னால் செல்லாமல், “எக்கேடோ கெட்டு போ!” என சொல்லிக் கொண்டே ஸ்ரீயின் வீட்டுக்குள் வந்தான் ஜனா.

தெரு முனையில் ஆட்டோ பிடித்து கிளம்பி விட்டான் ஜெய்.

ஸ்ரீயிடம் என்ன நடந்தது என பாட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ அமைதியாக இருக்க, “இந்த கல்யாணம் அவ்ளோ சுலபம் கிடையாது, என் அண்ணனுங்கலாம் எதிர்ப்பாதான் இருப்பாங்க, ஜெய் சித்தப்பா கூட என்ன சொல்வாருன்னு தெரியலை. சின்னதிலிருந்து எதுவும் வேணும்னு கேட்டது கிடையாது அவன். பதினேழு வயசுல குடும்பத்தை பொறுப்பெடுத்துகிட்டவன், அவன் ஆசை பட்டது உன்னைத்தான், ஏம்மா ஏன் அப்படி சொல்லிட்டு போறான்? எனக்கு தெரியும் அவன் மனசுலிருந்து சொல்லலை, என்னடா பிரச்சனை? அவன் நல்லவன் ஸ்ரீ” என பொறுமையாக பேசினார் துளசி.

அவளோ துளசியின் கைகளை வாஞ்சையாக பிடித்துக்கொண்டாள்.

“பல வருஷம் கழிச்சு என் துளசி அத்தை கூட பேசுறேன், உங்க வார்த்தையை மறுத்து சொல்ற சங்கடத்தை எனக்கு தரக் கூடாது” என்றாள் ஸ்ரீ.

“என்னதான் டி மா காரணம்?” என்றார் பாட்டி.

“எங்களுக்குள்ள செட் ஆகவே ஆகாது பாட்டி. இந்த கல்யாணம் எல்லா வகையிலும் எல்லாருக்குமே பிரச்சனையதான் உண்டு பண்ணி கொடுக்கும். ஸாரி பாட்டி, ஸாரி அத்தை” என சமாதானம் போல சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.

உள்ளே வந்த ஜனா, “அண்ணா நடந்தே போயிட்டார், ஸ்ரீ அக்கா மனசு மாறணும்னு பாத யாத்திரை” என்றான்.

அவனது பாட்டியும் அம்மாவும் சுட்டெரிப்பது போல அவனை பார்த்து வைத்தனர்.

ஜோதிக்கு சரிவர எதுவும் புரியவில்லை, அவர்கள் கிளம்பியதும்தான் மகளிடம் விசாரிக்க வேண்டுமென நினைத்து அமைதி காத்தார்.

டியூசன் சென்றிருந்த மஹதி வந்து சேர்ந்தாள். வந்தவர்களை வாங்க என அழைத்து, அம்மாவின் அருகில் சென்று, “அம்மா டைம் ஆகிடுச்சு ஜடை போட்டு விடு”என சின்ன குரலில் சொன்னாள்.

“கிளம்புங்க காத்து வரட்டும்னு ஒரு சின்ன புள்ள சொல்ற அளவுக்கு வச்சிக்கிற ராஜாம்பா” என்றான் ஜனா.

“ஐயோ அப்படி சொல்லலை நான்” பதறிய மஹதி, ஜனாவை முறைத்து வைத்தாள்.

“ஹே ஹே கூல், ஜஸ்ட் கிட்டிங் மா” என சமாதானம் செய்த ஜனா, அவர்கள் வாங்கி வந்திருந்த இனிப்புகளில் இருந்து லட்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

மஹதி வாங்க மறுத்து நிற்க, “லட்டு பிடிக்காதோ? ஜிலேபி, மைசூர்பாக் என்ன பிடிக்கும்?” எனக் கேட்டான்.

அவள் ஏதும் சொல்லாமல் உள்ளே ஓடி சென்று விட்டாள். அந்த லட்டை அவனே சுவைத்து சாப்பிட பாட்டியும் துளசியும் எழுந்து கொண்டனர். வெளியில் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர் ஜோதியும் ஸ்ரீயும்.

ஜனா சாதாரணமாக கார் ஓட்டிக் கொண்டிருக்க, “கவலையே இல்லையாடா உனக்கு? உன் மாமாகிட்ட கூட இதுதான் பொண்ணுன்னு சொல்லிட்டேன், அவனுக்கு ஒரு நல்லது எப்பதான் நடக்குமோ?” புலம்பினார் துளசி.

“ம்மா… நிறைய சமயம் என் உள்ளுணர்வு சொல்றது நடந்திருக்கு, ஜெய் அண்ணாக்கும் ஸ்ரீ அக்கா… ச்சே… ஸ்ரீ அண்ணிக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும். நீயும் அப்படியே நம்பு” என்றான் ஜனா.

“என் தங்கம்! உன் வார்த்தை பலிக்கட்டும்” என்ற பாட்டி, கண்ணுக்கு தெரிந்த முருகன் கோயில் கோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டார்.

பணியிடம் வந்து விட்ட ஜெய் கடு கடு என இருந்தான். அம்மா, பாட்டியின் அழைப்பை ஏற்கவில்லை. மதிய உணவுக்கு வீடு செல்லவில்லை.

அன்றைய இரவு தாமதமாக வந்த ஜெய்க்காக அனைவரும் காத்திருந்தனர். யாரும் ஏதும் கேட்கவில்லை, ஆனால் அவனது முகத்தை அடிக்கடி பார்த்தனர். அமைதியாக உண்டு முடித்தவன், தரகர் கொடுத்திருந்த வரன்களின் ஜாதகம் மற்றும் புகைப்படம் இருந்த கோப்பை எடுத்து வரும் படி ஜனாவிடம் சொன்னான்.

“வேலை ஏவ ஆரம்பிச்சிட்டார்” அலுத்துக் கொண்டே போய் எடுத்து வந்தான் ஜனா.

கோப்பை திறந்து கைக்கு அகப்பட்ட ஜாதகத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்த ஜெய், “இந்த இடத்தை பேசி முடி” என சொல்லி அறைக்கு செல்ல நடந்தான்.

துளசியும் பாட்டியும் அதிர்ச்சியோடு ஜெய் செல்லும் திசையை பார்த்திருக்க, அம்மாவின் கையிலிருந்த ஜாதகத்தை பறித்த ஜனா சத்தமாக சிரித்தான்.

“இவன் வேற…” துளசி கடிந்தார்.

“ம்மா… இந்த பொண்ணுக்கு போன வாரமே கல்யாணம் ஆகிடுச்சு, உன் ஃபோனுக்கு தரகர் அனுப்பிருந்த மெசேஜ் நான்தானே படிச்சு பார்த்து சொன்னேன். அண்ணன் விவரமான ஆளுதான்” என சொல்லி சிரிப்பை தொடர்ந்தான்.

வேகமாக வந்த ஜெய் தம்பியின் கையிலிருந்த காகிதத்தை பறித்து எறிந்தான்.

மூவரும் அவனையே பார்த்திருக்க, கோப்பை மீண்டும் கையில் எடுத்த ஜெய், இன்னொரு பாயோடேட்டாவை எடுத்து, “அது இல்லைனா இது” என்றான்.

“இதுவும் இல்லைனா…” கையில் இருந்த அந்த காகிதத்தையும் தரையில் வீசியவன் மற்றொன்றை எடுத்து, “இன்னொன்னு… ஊர்ல அவளை விட்டா வேற பொண்ணே இல்லயா?” கோவமாக கேட்டான்.

அசராத ஜனா, “ஓ நிறைய இருக்காங்களே, உன் மனசுக்கு பிடிக்கணும்ல?” என்றான்.

“மனசு… ம**…ன்னுட்டு. எவளுக்கு தாலி கட்டுறேனோ அவளை பிடிக்கும் எனக்கு, எப்படி வாழ்ந்து காட்டுறேன்னு உங்களோட சேர்த்து அவளும் பார்க்கத்தான் போறா” என இரைந்தான்.

“ண்ணா… லைஃப் விஷயத்துல வீம்பு பார்க்காத, நான்…”

“ஷட் அப் ராஸ்கல்! படிப்பு முடிஞ்சுதுல்ல? அடுத்து என்ன கிழிக்கணுமோ போய் கிழி, என் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்” ஜனாவை பேச விடாமல் சத்தம் போட்டவன் அறைக்கு சென்று விட்டான்.

பாட்டியும் துளசியும் கவலையாக இருந்தனர்.

“உள்ள உள்ள வலிய மறைக்க போடுற வேஷம்தான் இந்த கோவம். ஆற போடுங்க, ஸ்ரீ அக்கா இல்லாம வாழறது கஷ்டம்னு இவரே ரியலைஸ் பண்ணுவார்” என்ற ஜனா உடனே அம்மாவை பார்த்து விரல் நீட்டி, “ஆனா உன் பையன் இன்னொருதாட்டி என்னை மட்டம் தட்டி பேசினார்னு வை, பங்காளிரத்து பண்ணிடுவேன் சொல்லிடு” என சொல்லி அவனது அறைக்கு சென்றான்.

ஜோதி மகளிடம் தோண்டி துருவி விசாரிக்க, அம்மாவை பயப்படுத்த விரும்பாத ஸ்ரீ அவளுக்கும் ஜெய்க்குமான எந்த பிரச்சனை பற்றியும் சொல்லவில்லை.

“எனக்கு வேணாம்னு தோணிச்சு, சொல்லிட்டேன். பெருசா காரணம் இல்லம்மா” என்றே சொன்னாள்.

“அவங்களா வீடு தேடி வந்திருக்காங்கன்னா எவ்ளோ நம்பிக்கையா வந்திருப்பாங்க? நீ யோசிச்சு சொல்லியிருக்கலாம்” என்ற ஜோதிக்கு, ஜெய் வீட்டினரை அவமதிப்பு செய்து விட்டோமோ என தோன்றியது. மிகவும் வருந்தினார்.

ஜெய் சொன்ன காதல் கதையை இன்னுமே ஜீரணிக்க முடியாத ஸ்ரீக்கு அவஸ்தையாக இருந்தது.

அன்று யாருக்கும் சரியான உறக்கமே இல்லை.

ஜெய்க்கு அன்றிருந்த ஆத்திரத்தின் அளவு அடுத்த நாள் சற்றே குறைந்திருந்தது.

அம்மாவையும் பாட்டியையும் அமர வைத்து ஸ்ரீ பற்றிய பேச்சு இனி வேண்டாம், வேறு இடம் பாருங்கள் என பொறுமையாக சொன்னான்.

துரைசாமியின் மகளை தவிர்த்து விட்டனர் என செய்தி அறிந்து சுரேகா பற்றிய பேச்சோடு வந்தனர் ஜெய்யின் மாமா வீட்டினர்.

ஜெய் நேரடியாக கோவப்பட்டு விட்டான். அப்படியும் ‘யோசித்து சொல்’ என சொல்லி விட்டு சென்றனர்.

சுரேகாவுக்கு விருப்பம் இருந்தும் பெற்றோரின் பேச்சை கேட்டுக் கொண்டு ஜெய்யை மறுத்திருந்த காரணத்தால் அவளை இங்கு யாருக்கும் பிடிக்கவில்லை.

அவசரமாக ஜெய்க்கு பெண் தேடினார்கள். ஒரு பெண்ணை பேசி முடித்தார்கள், எல்லாம் வேக வேகமாக நடந்தது.

ஆனால் திருமண நாளன்று மேடையில் ஜெய்யின் பக்கத்தில் மணப் பெண்ணாக அமர்ந்திருந்ததோ தன்யஸ்ரீ.