அத்தியாயம் -9(2)
“நமக்காக ஆசைய விட துணிஞ்சு பெருந்தன்மையா இருக்காங்க பசங்க, இந்த பெத்தவங்கதான் செல்ஃபிஷா இருக்காங்க. இதுல அவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ?” என குத்தி பேசினான் ஜனா.
பெண்ணின் தந்தை அந்த பெண் இருந்த அறைக்குள் விரைந்தார், அடிக்கிறார் போல, சத்தம் கேட்டது.
பாட்டியின் கையை விட்ட ஜனா அங்கே விரைந்து சென்று பெண்ணின் தந்தையை தடுத்து நிறுத்தினான்.
“போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் ஸார்” என மிரட்டினான் ஜனா.
அந்த மனிதர் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். பாட்டி குரல் கொடுக்க ஜனா வெளியே வந்து விட்டான்.
கார் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. பாட்டியும் ஜனாவும் அந்த பெண், அவளின் பெற்றோர் பற்றி ஏதேதோ பேசிக் கொண்டு வந்தனர்.
அருகிலிருந்த பெரிய மகனின் முகத்தைதான் பார்த்திருந்தார் துளசி. இறுக்கமாக இருந்தான் ஜெய். அம்மா தன்னையே பார்ப்பது உணர்ந்து, “அதை விட்டுத் தள்ளுமா” என்றவன், “டீ சாப்பிடுறியா?” என அக்கறையாக கேட்டான்.
துளசி தலையாட்ட அடுத்து வந்த தேநீர் கடையில் நிறுத்தினான். தம்பியை மட்டும் இறங்க சொல்லி மூவருக்கும் தேநீர் வாங்கி வர பணித்தான்.
“நீ போனா என்ன? கடைக்குட்டின்னா உங்களுக்கெல்லாம் இனா வானா வா?” என்ற ஜனா இறங்காமல் பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டான்.
ஜெய் கோவமாக ஏதோ சொல்லப் போக, “நைட்லாம் கண்ணு முழிச்சு படிச்சு பாவம் டயர்டா இருக்கான்டா, நீதான் போயேன்” என்றார் பாட்டி.
“படிப்பு முடிஞ்சும் என்னத்த படிக்கிறான் இவன்?” எரிச்சலாக கேட்டான் ஜெய்.
“அறிவை விசாலமாக்க பெரிய பெரிய புஸ்தகமா படிக்கிறான், சும்மா அவனையே நோண்டாத” என்றார் பாட்டி.
“நீ கொடுக்கிற இடம்தான் அப்பயி” சத்தம் போட்ட ஜெய், “டேய்!” என தம்பியை அதட்ட சலித்துக் கொண்டே இறங்கி சென்றான் ஜனா.
கடையில் நல்ல கூட்டம், தம்பி வர நேரமானதால், “ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்ல, ஆனா எல்லா இடத்திலேயும் அதிகப்பிரசங்கி மாதிரி ஏதாவது பேசுறதுல மட்டும் ஸார் எக்ஸ்பர்ட்” என சொல்லிக் கொண்டே ஜெய்யும் இறங்கி சென்றான்.
தோழி ஒருத்தியின் வீட்டு விஷேஷத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஸ்ரீயும் அங்கே அந்தக் கடைக்கு வருவாள் என ஜெய்யும் ஜனாவும் எதிர்பார்த்திருக்கவில்லை.
“நீ வாங்கிட்டு இரு ண்ணா, இதோ வந்திடுறேன்” என்ற ஜனா கார் நோக்கி சென்று விட்டான்.
ஜனாவை பார்த்திருக்கவில்லை ஸ்ரீ. ஜெய் ஒரு வித பட படப்போடு அவளை பார்த்திருந்தான். பட்டுப் புடவையும் ஒப்பனையுமாக ஸ்ரீ வெகு ஜோராக இருந்தாள். சொல்லி வைத்தது போல இவனது சட்டையும் அவளது புடவையும் வெளிர் நீல நிறத்தில் இருந்தன.
அவளும் அவனை பார்த்து விட்டு என்ன எதிர் வினையாற்ற என திகைத்து பின் புன்னகை செய்தாள்.
சுற்றம் மறந்து போனான் ஜெய், அவளை நெருங்கி, “என்ன இங்க, தனியாவா வந்திருக்க?” எனக் கேட்டான்.
விவரம் சொன்னவள், “லைட்டா ஹெட் ஏக், அதான் டீ சாப்பிடலாம்னு வந்தேன்” என்றாள்.
“ஏன் என்னாச்சு?” லேசாக பதறிப் போய் கேட்டான்.
நேற்று நள்ளிரவு வரை படித்திருந்தாள், இன்றும் காலையில் சீக்கிரம் கிளம்பியது படுத்தி விட்டது அவளை. சொன்னவள் சைலேஷுக்கு இவன் செய்யும் வேலை எப்படி போகிறது என விசாரித்தாள். சொன்னவன் அவளது படிப்பு எப்படி போகிறது என விசாரித்தான்.
ஸ்ரீயை யாரென அம்மாவுக்கு அடையாளம் காட்டினான் ஜனா. துளசி எதுவும் சொல்லாமல் இருந்தார், ஆனால் அவரின் கண்கள் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்தே இருந்தன.
“என்னத்தடா பேசிக்கிறாங்க?” எனக் கேட்டார் பாட்டி.
“எங்க போயிட்டு வர்றீங்கன்னு ஸ்ரீ அக்கா கேட்க, டீ குடிக்கலாம்னு வீட்லேருந்து கிளம்பினேன். நான் போன இடத்துல டீ ஆறிப் போச்சு, அதான் சூடா குடிக்கலாம்னு இங்க வந்தேன். பார்த்தா டீ கடைல சாரல் மழைங்கிறார் அண்ணன்” என்றான் ஜனா.
துளசி மகனை முறைக்க, பாட்டியோ, “பார்த்தா அப்படி தெரியலையே, அந்த பொண்ணு விட்டா ஓடிப் போயிடும் ரேஞ்சுக்கு இல்ல நிக்குது” என்றார்.
“பவர் செக் பண்ணி கண்ணாடியை மாத்து அப்பயி. அது நான் இருக்கையிலவேற பொண்ணு பார்க்க போனியான்னு அக்கா சண்டை போடுறாங்க, அண்ணன் சமாதானம் செய்றார். அவருக்கு பல்லு இருக்குன்னு நமக்கெல்லாம் காட்டியிருக்காரா? டூத் பேஸ்ட் விளம்பரத்துல வர்றவன் மாதிரியே அக்காட்ட எல்லா பல்லையும் எப்படி காட்டுறார் பார்?” என்றான் ஜனா.
“ எங்கடா அவன் பல்ல காட்டுறான்? அவன் முதுகுதான் தெரியுது எனக்கு?” பாட்டி சொல்ல, “அதெல்லாம் என்னை மாதிரி பரந்த பார்வை தொலைநோக்கு பார்வை உள்ளவனுக்குத்தான் தெரியும், உன்னை மாதிரி மாலைக்கண் உள்ளவங்களுக்கு புலப்படாது” என்றான் ஜனா.
பாட்டி ‘கிட்ட வா வைத்துக் கொள்கிறேன்’ என சைகை செய்தார். அவரை கண்டு கொள்ளாமல் அம்மாவிடம், “பார்த்துக்க ம்மா, இப்படி ஒரு பொண்ணை அண்ணாக்கு பார்த்திடுவியா நீ? அக்காட்ட பேசும் போது அண்ணனை கவனி, இந்த சந்தோஷத்தை கொடுத்திடுவியா அவருக்கு? உன் வீட்டுக்கார் அடுத்து என்ன செய்யலாம்னு யோசனையில்லாம போய் சேர்ந்திட்டார், கோழை மகன்னு என்னை சொல்லும் போது எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்” என்றான்.
மகனை பேசவும் பொறுத்துக் கொள்ளாமல் அதட்டினார் பாட்டி.
“உண்மையை சொன்னா பொத்துக்கிட்டு வருதா உனக்கு? சும்மான்னு இரு அப்பயி, ஃபளோ மிஸ் ஆகுது எனக்கு” என்ற ஜனா மீண்டும் அம்மாவை பார்த்தான்.
“அதே மாதிரிதான் அக்காவை நீ ஒதுக்க நினைக்கிறதும் தப்பு. உன் மனசாட்சிக்கு தெரியுதுதானே ஸ்ரீ அக்கா மேல எந்த தப்பும் இல்லைனு? சொல்ல போனா உன் பாடு பரவாயில்லை, அப்பயி முதுகுல மூட்டை ஏத்தி விட்டுட்டு, போனவரை நினைச்சு அழுது அழுதே பொழுதை போக்கிட்ட. ஜோதி அத்தை நிலைமை ரொம்ப மோசம். நீ விலகி இருக்கிறது உன் விருப்பம், அண்ணனை தண்டிக்காத” என்றான்.
ஸ்ரீயோடு சேர்ந்துதான் தேநீர் பருகினான் ஜெய், தான்தான் பணம் கொடுப்பேன் என அவன் சொல்லிக் கொண்டிருக்க, செயலில் சூரப்புலியாக இருந்த ஸ்ரீ பணத்தை செலுத்தி விட்டு மின்னல் வேகத்தில் கிளம்பியிருந்தாள்.
பார்வையிலிருந்து அவள் மறைந்ததும்தான் தன் குடும்பத்தினரின் நினைவு ஜெய்க்கு வந்தது. அவனுக்கு ஒரே வெட்கம் வெட்கமாக போய் விட்டது. மானசீகமாக தலையில் கை வைத்துக்கொண்டான்.
மூன்று தேநீர் ஒரு ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு கார் நோக்கி வந்த ஜெய்யின் முகக் கலவரத்தை பார்த்து ஜனாவுக்கு சில்லென இருந்தது.
பாட்டியின் கோவப்பார்வை, அம்மாவின் கேள்விப் பார்வை, ஜனாவின் கேலிப் பார்வை எதையுமே எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்த வண்ணம் மூவருக்கும் தேநீரை வழங்கினான்.
“அப்பயி… நீங்கல்லாம் என்ன பொண்ணு பார்க்க அழைச்சிட்டு போனீங்க? நம்ம வீட்டு பெரிய மனுஷன் ரோட்ல வச்சு எப்படி பொண்ணு பார்த்தார் பார்த்தீங்களா, நீங்களும் நல்லா பார்த்துகிட்டீங்களா?” எனக் கேட்டான் ஜனா.
தம்பியை கெஞ்சலாக பார்த்த ஜெய் வாயை மூடிக் கொண்டிருக்கும் படி பார்வையால் மன்றாடினான்.
“என்னை வாய மூட சொல்லி என்ன பிரயோஜனம்? நான் வெறும் டீசர் போட்டா நீ ட்ரெய்லர் காட்டலாம், இப்படியா முழு படத்தையும் ஓட்டி காட்டுவ?” என்றான் ஜனா.
சின்ன மகனை அதட்டி அடக்கிய துளசி பெரிய மகனை காரெடுக்க சொன்னார்.
அதன் பின் காருக்குள் அமைதியோ அமைதி.
மேலும் ஒரு மாதம் கடந்தது. சுரேகாவுக்கு அவளது கணவனோடும் கணவனின் வீட்டினரோடும் பெரிய பிரச்சனையாம், அவன் நல்லவனே இல்லையாம். வீட்டோடு வந்து விட்டதாக தகவல் கிடைத்தது.
ஒரு நாள் ஜெய்யின் பெரிய மாமாவும் மாமியும் ஜெய் வீட்டுக்கு வந்திருந்தனர். சாதாரணமாக துளசியை பார்க்க வந்தது போலதான் காட்டிக் கொண்டனர். போக போகத்தான் சுரேகாவுக்கு விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் விஷயத்தை சொன்னார்கள்.
“அந்த பையன்கிட்ட பெரிய குறை, நம்ம சுரேகா வாழவே இல்ல துளசி. அவளை உன் மகனுக்கு தரலைன்னு உன் மனசு எவ்ளோ கஷ்ட பட்டிருக்கும், அதான் உன் கண்ணீர்தான் அவளை வாழ விடலை. எல்லாம் கெட்ட நேரம். அதையெல்லாம் மறந்திடுவோம். இன்னும் ஜெய்க்கு எந்த இடமும் முடியலைதானே?” என்ற மாமி, அடுத்து தன் கணவரை பேசும் படி சாடை காட்டினார்.
பெரிய மாமா பேசுவதற்காக குரலை செருமினார்.
சுதாரித்துக் கொண்ட துளசி “இல்லையே அண்ணி, அவனுக்கு பேசி முடிச்சாச்சு. ஜெய் விருப்ப பட்ட பொண்ணு, அவன் சித்தப்பாக்கு கூட சொல்லியாச்சு, ஜெய்க்கு நேரம் ஒழியவும் உங்களை நேர்ல பார்த்து சொல்லலாம்னு இருந்தோம்” என்றார்.
மருமகளின் சாதுர்யத்தை மனதுள் மெச்சிக் கொண்ட பாட்டி, “சுரேகாவோட மனக்காயம் ஆற டைம் கொடுக்காம அவசர படாதீங்க. வேற இடம் அமையும், கொஞ்ச காலம் போகட்டும்” என நல்ல விதமாகவே சொன்னார்.
‘ஜெய் விருப்ப பட்ட பெண்’ என்பதை துளசி அழுத்தி சொல்லியிருக்க வந்த காரியம் நிறைவேறாமல் போனதில் ஏமாற்றமாக உணர்ந்தார் மாமி.
மாமாதான் பெண் யாரென விசாரித்தார். துரைசாமியின் மகள் எனவும் கோவப்பட்டார். அதெப்படி அந்தாள் மகளை கொண்டு வருவீர்கள் என மாமியும் கேட்டார்.
இன்னும் ஜெய்யின் சித்தப்பாவுக்கும் இந்த விஷயம் தெரியாது. அண்ணனிடம் மன வருத்தம் ஏற்படுத்திக் கொள்ளாமல் மகனுக்கும் நல்லது செய்ய நினைத்து தங்கள் பக்கம் பலம் பெற ஜெய்யின் சித்தப்பா பெயரை இழுத்து விட்டார் துளசி.
தன் சின்ன மகனை தான் பார்த்துக் கொள்வேன் என நம்பிக்கை கொண்ட பாட்டி, ஜோதியை பற்றி நல்ல விதமாக சொல்லி, “அவ என்ன பண்ணுவா பாவம். நீதான் பெரியவனா இருந்து ஜெய்க்கு நடத்தி தரணும்” என துளசியின் அண்ணனிடம் கேட்டுக் கொண்டார்.
தங்கையின் மீது அன்பு கொண்டவர்தான் அவர், ஆனாலும் வாழ்க்கை இழந்து வந்து நிற்கும் தம்பியின் மகளை மனதில் வைத்து யோசித்தார். உறுதியான பதில் சொல்லா விட்டாலும் அதன் பின் கோவமாக ஏதும் பேசாமல் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
வேடிக்கை பார்த்திருந்த ஜனா பாட்டியை அணைத்துக் கொண்டான்.
“நான் பேச சான்ஸ் தராம போயிட்டீங்க, இட்ஸ் ஓகே, வாட் நெக்ஸ்ட்?” எனக் கேட்டான் ஜனா.
“பொண்ணு பார்க்க போகணும்டா” என்றார் பாட்டி.
“அந்த சம்பிரதாயம்தான் ஏற்கனவே டீ கடைல வச்சே முடிஞ்சிடுச்சே, விஷயத்தை இழுக்காம அடுத்த கட்டம் நோக்கி மூவ் பண்ணு அப்பயி” என ஜனா சொல்ல, சம்மதமாக சிரித்தார் ராஜாம்பாள் பாட்டி.
பாட்டியின் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்ட ஜனா, அண்ணனுக்கு அழைத்து, “எனக்கு நீ ‘ஹார்லே டேவிட்சன் X440’ வாங்கிக் கொடுக்கிற நேரம் வந்திடுச்சு ண்ணா” என்றான்.
“ஏதோ கோவத்துல ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு ஒம்போது மாசமா மூஞ்சு தூக்கி வச்சிட்டு திரிஞ்ச, இப்போ என்ன திடீர்னு பைக் கேட்குற? என் கூட வேலைக்கு வர போறியா?” தம்பி தன்னிடம் பழைய படி பேசி விட்ட உற்சாகத்தில் கேட்டான் ஜெய்.
“நான் உங்கிட்ட வரணும்னா கல்கி இப்போவே அவதாரம் எடுக்கணும்” என்றான் ஜனா.
“என்னடா சொல்ற?”
“ம்ம்… கலி முத்தினாதான் நீ சொன்னது நடக்கும்னு சொல்றேன்”
“அப்புறம் என்னதுக்குடா பைக் உனக்கு?” எனக் கேட்டவனுக்கு அவன் தம்பி தந்த பதிலில் மூச்சடைப்பு ஏற்பட்டது போலானது.
ஜனா பேசி முடித்த பின்பு, ‘எல்லாம் சரி, ஸ்ரீ எப்படி இதற்கு ஒத்துக் கொள்வாள்?’ என்ற கேள்வி ஜெய்யின் மனதில் எழவும் அதற்கான விடை அவனுக்கே தெரிந்திருக்க, அவனது முகம் இரத்தம் வற்றி வெளுத்துப் போனது.