புதிய உதயம் -10
அத்தியாயம் -10(1)
அடுத்து வரும் நல்ல நாளில் ஸ்ரீயின் வீட்டுக்கு சென்று திருமண தேதியை குறித்து வரலாம் என ஜெய்யிடம் சொன்னார் பாட்டி.
இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்க்கு உணவு தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.
“இனியும் தள்ளி போட வேணாம் ஜெய், புதன் கிழமை போலாமா? ஏன்னா ஞாயித்துக் கிழமை நாள் நல்லா இல்ல, ஸ்ரீக்கு அன்னிக்கு லீவ் போட்டுக்க முடியும்தானே? அது பாட்டுக்கும் படிப்பு முடிஞ்சப்புறம்தான் கல்யாணம்னு சொல்லிட போகுது, நீ சொல்லி வை” என்றார் துளசி.
“சின்னவன் மச்சான் பொண்ணு கல்யாணம் கிட்டத்துல வருது, ரெண்டும் இடிச்சிக்காம தேதி பார்த்து குறிக்கணும். எல்லாம் பேசி வச்சிகிட்டு போய் அவனை பார்த்தா போதும், ஆனா அவன் பொண்டாட்டிகிட்ட நீ போன்ல பேசிடு, அவ வர மாட்டா இருந்தாலும் ஒரு வார்த்தை வான்னு கூப்பிட்டு வை” தன் சின்ன மகன் குடும்பம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.
மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த அண்ணன் மீதே கவனம் வைத்திருந்தான் ஜனா.
“அரே ஸ்டாப் லேடிஸ்! இங்க என்னமோ ஓடிட்டு இருக்கு. ஐ திங்க்… ஸ்ரீ அக்காவோட திரும்பவும் ஏதோ பஞ்சாயத்து போல. ஓஹ்! என்னால முடியாதுடா சாமி, என்னமோ பண்ணிக்கோங்க, இவங்கள சேர்த்து வைக்கிறேன்னு என் மூளை கரைஞ்சு போயிடும் போல” சாப்பாட்டு தட்டோடு எழுந்த ஜனா தள்ளிப் போய் அமர்ந்து கொண்டான்.
“என்னடா சண்டையா?” சலிப்பாக பாட்டி கேட்க, “பொறுமையா நடந்துக்க கூடாதா ஜெய்?” என்றார் துளசி.
“ஐயோ அம்மா! ஸ்ரீ மேல எனக்குதான் விருப்பம், அவளுக்கு அப்படி இல்ல, நானும் சொன்னது இல்ல. உண்மையை சொல்லணும்னா என்னை அவளுக்கு பிடிக்காது, அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா” என்றான் ஜெய். இரண்டு பெண்மணிகளும் அதிர்ச்சியாக பார்க்க, ஜனாவுக்கு புரையேறிக் கொண்டது.
இத்தனை தூரம் ஆன பிறகு ஒளித்து பேசி பிரயோஜனம் இல்லை என்பதால் ஜம்புலிங்கம் சிபாரிசு செய்ததால் அவளை வேலைக்கு எடுத்தது, அவள் மீது அனாவசியமாக கோவப்பட்டு திட்டியது, அவள் மீது நம்பிக்கை வராமல் சசியை கொண்டு சோதித்தது என அனைத்தையும் சொல்லி விட்டான் ஜெய்.
பேரனை என்ன சொல்லி திட்டுவது எனத் தெரியாமல் ஒரு கிளாஸ் தண்ணீரை பருகிய பாட்டி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார். ஏன் இப்படியெல்லாம் நடந்து கொண்டாய் என மகனை கடிந்தார் துளசி.
“அடப்பாவி அண்ணா! கடைசில இந்த ஜனா கால்குலேஷன் தப்பா போச்சே” என வாய் விட்டு சொன்ன ஜனா, உணவு மேசைக்கு வந்து இன்னும் இரண்டு இட்லிகள் எடுத்து வைத்து சாம்பார் சட்னி எல்லாம் நன்றாக போட்டுக் கொண்டு அங்கேயே அமர்ந்தான்.
பாட்டி சின்ன பேரனை பார்க்க, “இன்னிக்குன்னு பார்த்து வெங்காய சாம்பார் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு. அண்ணன் பிராப்லம் சால்வ் ஆகலாம், இதே டேஸ்ட்ல சாம்பார் திரும்ப வைக்க முடியுமா உன்னால? நான் எதார்த்தவாதி அப்பயி” என்றான் ஜனா.
“உன்னை ஒண்ணும் கேட்கலையே நான், இந்தா இன்னும் கொஞ்சம் போட்டுக்க. தள்ளி போவாம இவன் சொல்லிட்டு இருக்க கதையை கேட்டுட்டு இங்கேயே உட்காரு. வேதாளம் சொன்ன கடைசி கதைக்கு கூட விடை தெரிஞ்சிடும், இவன் கல்யாணம் நடக்குமா நடக்காதாங்கிற கேள்விக்கு யாருக்குத்தான் விடை தெரியுமோ?” பேசிக் கொண்டே ஜனாவின் தட்டில் மேலும் சாம்பார் ஊற்றினார் பாட்டி.
“அத்தை! இந்த நேரத்துல என்ன விளையாட்டு?” கடிந்து கொண்டார் துளசி.
“விளையாட்டா? சரிதான், உன் பெரிய புள்ளதான் வந்த பொண்ணுகிட்ட இஷ்டத்துக்கு விளையாண்டுருக்கான். சின்ன தங்கத்துக்கு இருக்க புத்தியில கொஞ்சம் இருந்திருக்க கூடாதா இவனுக்கு?” என்றார் பாட்டி.
“அப்பயி…” கெஞ்சலாக அழைத்தான் ஜெய்.
“நீ முதல்ல ஸ்ரீகிட்ட பேசி சம்மதம் வாங்கு, அப்புறம் போய் நாங்க கல்யாணம் பத்தி பேசுறோம்” என்றார் பாட்டி. துளசியும் அதுவே சரி என்றார்.
ஸ்ரீ சம்மதிப்பாள் என ஜெய்க்கு நம்பிக்கை இல்லை. ஆகவே அவர்களை விட்டே ஸ்ரீயின் அம்மாவிடம் பேச சொன்னான்.
எப்படி சரியாக வரும் என அவர்கள் தயங்கியதற்கு, “எனக்கு அவளை பிடிச்சிருக்கு, ஆனா என்ன சொல்லி கன்வின்ஸ் பண்ணன்னுலாம் சுத்தமா தெரியலை. அவ அம்மா சொன்னா கண்டிப்பா கேட்டுப்பா” என ஏதேதோ பேசியே அவர்களை ஒத்துக் கொள்ள செய்து விட்டான்.
புதன் கிழமை காலையிலேயே ஸ்ரீ கல்லூரி புறப்பட்டு செல்வதற்கு முன்னரே அவளின் வீட்டிற்கு சென்று விட்டனர் ஜெய் குடும்பத்தினர். ஜோதிக்கு ஒன்றும் புரியாத நிலை, பாட்டிதான் பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
மஹதி டியூசன் சென்றிருக்க ஸ்ரீ குழம்பிய நிலையில் இருந்தாள். பெண் கேட்டு வந்திருக்கிறோம் என உடைத்து சொன்னார் பாட்டி. ஜோதி திகைக்க, ஸ்ரீயோ கேள்வியாக ஜெய்யை பார்த்தாள்.
ஜெய்க்கு ஸ்ரீயை பிடித்திருக்கிறது, இரண்டு குடும்ப உறவு நிலை சீராக இல்லாமல் இருப்பதால் இத்தனை நாட்கள் எங்களிடமே சொல்லாமல் இருந்திருக்கிறான், இப்போது ஒரு வழியாக சொல்லி விட்டான் என்ற பாட்டி, “ஸ்ரீக்கு கல்யாண வயசுதானே? ஜெய் பத்தி நான் சொல்லித்தான் தெரியணுமா உனக்கு? ஸ்ரீய எங்க பொண்ணா பார்த்துக்கிறோம்” என்றார்.
மகளின் முகத்தை பார்த்து நின்றார் ஜோதி.
பெரியவர்களின் மனம் நோகாத படி, “படிப்பு முடிய ஒன்றரை வருஷம் இருக்கு பாட்டி, கல்யாணம் பத்தி அப்புறம்தான் யோசிக்கணும்” என்றாள் ஸ்ரீ.
ஜெய்யின் பட படப்பு அடங்கிப் போனது, ஏமாற்றம் வியாபித்தது. கிளம்ப தயாரானது போலிருந்தது அவனது உடல்மொழி.
“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமாம் அண்ணன், எங்க போக சொல்ல க்கா?” என்றான் ஜனா.
ஜெய் தன் தம்பியை முறைக்க, “ஸாரி ண்ணா, வந்த உடனே கேட்டு மீட்டிங் அரேஞ் பண்ணிதர சொன்ன? அத்தையோட காபி டேஸ்ட்ல மறந்து போயிட்டேன். எழுந்திரி ண்ணா, அந்தா அந்த கிட்சன்ல போய் பேசிட்டு வாங்க” என்றான் ஜனா.
ஸ்ரீ எதுவும் மறுப்பாக சொல்வதற்கு முன் அவளின் கையை உரிமையாக பிடித்துக் கொண்டான் ஜனா.
“விடு ஜனா, உனக்கு நிறைய விஷயம் தெரியாது” என்றாள் ஸ்ரீ.
“வாங்க க்கா, நடந்ததெல்லாம் எனக்கு லேட்டாதான் தெரிய வந்துச்சு. நாலு அடி கொடுத்தா கூட வாங்கிக்கிற நிலைமைக்கு வந்திட்டார், எட்டு அடி கூட போடுங்க, நல்ல முடிவுக்கு வாங்க” என சொல்லிக் கொண்டே சமையலறையில் அவளை விட்டு வந்தவன், இன்னும் நாற்காலியில் அமர்ந்தே இருந்த அண்ணனை கண்டு விட்டு இடுப்பில் கை வைத்து முறைத்தான்.
ஜோதியை சங்கடமாக பார்த்துக் கொண்டே எழுந்தான் ஜெய்.
“அத்தை அடிச்சு ஒண்ணும் துரத்திடலையே நம்மள, அட பேசிட்டு வா ண்ணா” அண்ணனை பிடித்து சமையலறை பக்கமாக தள்ளி விட்டான் ஜனா.
“ஐயோ நீங்க என்ன வெளியாளுங்களாப்பா, நான் ஏன் துரத்த போறேன்? ஆனா ஸ்ரீ முடிவுதான் என் முடிவும்” என ஜோதி சொல்லிக் கொண்டிருப்பதை காதில் வாங்கிக் கொண்டே ஸ்ரீயிடம் சென்றான் ஜெய்.
இவனது வரவுக்கு காத்திருந்தது போல, “என்ன ஸார் இதெல்லாம்? நீங்களாவது நம்புற மாதிரி எதையாவது சொல்றீங்களா?” எனக் கேட்டாள் ஸ்ரீ. வெளியில் கேட்டு விடக்கூடாது என்பதால் மெல்லிய குரலிலேயே பேசினாள்.
இப்படி இவளிடம் தனியாக பேச வேண்டி வரும் என்றெல்லாம் முன்னரே யோசித்திருக்கவில்லை ஜெய். ஆனால் இந்த வாய்ப்பை விடக்கூடாது என தீர்க்கமாக மனதில் நினைத்துக்கொண்டே கண்களை மூடித் திறந்தான்.
“அழகான பொண்ண பார்த்தா வர்ற சாதாரண ஈர்ப்புன்னு நினைச்சேன் ஸ்ரீ. உன் அப்பா…” எனும் போதே எழுந்த வெறுப்பை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டவன், குரலை கணைத்து சரி செய்து கொண்டான்.
“அவர் மேல உள்ள கோவம் உன் மேலேயும் வந்தது, அதை ஓவர் ஷேடோ பண்ற மாதிரி உன்னோட எல்லாமே என்னை அட்ராக்ட் பண்ணிச்சு. அதை உணர்ந்தும் வீம்பா அப்படிலாம் இல்லைனு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்”
“அதெப்படி ஒரே பொண்ண பிடிக்கவும் செய்யும், வெறுக்கவும் முடியும்னு சத்தியமா எனக்கு தெரியலை ஸ்ரீ. நீ கூட இருந்த வரை பெருசா தெரியலை, என்னை விட்டு நீ போனதுக்கு அப்புறம்தான் என்னை எனக்கு புரிஞ்சுது. அந்த வெறுப்பு அர்த்தமே இல்லாதது, உன் மேல உள்ள விருப்பம்தான் உண்மை…” என்றவன் அவளுக்கு புரியும் படி எப்படி சொல்வேன் என அவளை கூர்ந்து பார்த்தான்.
முகத்தில் சலனமே இல்லாமல் சுவாரஷ்யம் இல்லாத கதையை கடமைக்காக கேட்கும் பாவத்தில் நின்றிருந்தாள் ஸ்ரீ.
“இதுதான் காரணம்னு சரியா சொல்ல தெரியலை ஸ்ரீ. உன்னை மாதிரி ஒரு பொண்ணை யாருக்குத்தான் பிடிக்காது? நடந்த தவறுக்கெல்லாம் சேர்த்து வச்சு மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றான்.
“எனக்கு அப்படி எந்த ஃபீலிங்ஸும் இல்லை” முகத்தில் அறைந்தது போல சொன்னாள்.
“தெரியும். பொண்ணு பார்க்க வந்து அப்போ அந்த பையனை ஓகே பண்றது இல்லயா? அப்படி யோசி ஸ்ரீ. இனி நீ பார்க்காத ஜெய்யா நான் இருப்பேன், இனி நீதான் பதில் சொல்லணும்” என்றவன் அவளது பதிலுக்காக ஆவலாக அவளை பார்த்தான்.
“நீங்க சொன்ன லவ் ஸ்டோரியை எப்படி நம்புறதுன்னே தெரியலை, அதை விடுங்க, இனிமே நல்லா நடப்பீங்கன்னு எதை வச்சு நம்புறது நான்? எப்போ எப்படி மாறுவீங்க எந்த செகண்ட் உங்க நாக்கு சாட்டைய சுழட்டும்னு பதட்டத்தோட இருக்க முடியாதுன்னுதான் உங்ககிட்ட திரும்பி வேலைக்கு வரலை நான், எப்படி ஸார் என் லைஃப் தூக்கி உங்க கைல கொடுக்கிறது?” எனக் கேட்டாள்.
“என் கூட வாழ்ந்து பார்த்துதான் தெரிஞ்சுக்கணும் ஸ்ரீ”
“அவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல ஸார் நான்” என அவள் சொல்லும் போதே அவனது முகம் கடினமானது.