புதிய உதயம் -9

அத்தியாயம் -9(1)

“என்ன ராஜாம்பா… காலங்காத்தால கோயிலுக்கு போயிட்டு வந்திருப்ப போலயே, நெத்தியில இவ்ளோ பெரிய பட்டைய போட்ருக்க. வா வா ஒரு செல்ஃபி எடுப்போம்” பாட்டியின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்தான் ஜனா.

“என்னடா போன் புதுசா இருக்கு, பழசுக்கு என்ன கேடு வந்துச்சுனு இப்போ இது?” எனக் கேட்டார் பாட்டி.

“உண்மையை சொன்னா உன் இதயம் தாங்குமா?”

“அவனுக்கு அடி பட்டு ஆபரேஷன் வரைக்கும் நடந்திருக்கு, எங்ககிட்ட மறைச்சு நீயே எல்லாம் பார்த்திருக்க, அதையே தாங்கிட்டேன், அதை விட அதிர்ச்சி தர போறியா? என்ன… போனை காணாடிச்சிட்டியா?”

“ஃபோன்லாம் பத்திரமா இருக்கு, இது வேற. நீ கேட்க ரெடின்னா சொல்லு, சொல்றேன்” என்ற ஜனாவின் பேச்சை துளசியும் ஆர்வமாக பார்த்தார்.

ஸ்ரீ அக்காவோடு அண்ணனுக்கு சண்டை, இருவரையும் சமாதானம் செய்து வைத்ததற்காக அண்ணன் வாங்கிக் கொடுத்தது என்றான்.

“தேவையில்லாம பேசாத” சத்தமிட்டது பாட்டியல்ல, துளசி.

“தேவையோடுதான் பேசுறேன், அண்ணனுக்கு ஒண்ணுன்னா ஸ்ரீ அக்கா துடிக்கிறதும் அக்கா கோச்சுக்கிட்டா அண்ணன் தவிக்கிறதும்…”

ஜனாவின் பேச்சு பிடிக்காமல் துளசி எழுந்து செல்ல, அறை வாயிலில் நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஜெய்.

ஜனாவும் பாட்டியும் மும்முரமாக பேசிக் கொண்டனர். ஜெய் சாப்பிட வரும் போது ஸ்ரீ பற்றிய பேச்சை எடுத்தார் பாட்டி.

அம்மாவின் கண்களில் தெரிந்த வேதனைதான் ஜெய்யின் நினைவில் வந்து போனது.

“ஜனா சொல்றதையெல்லாம் நம்பலாமா வேணாமான்னு உனக்கே தெரிய வேணாமா அப்பயி? நான் திட்டினேன்னு அவ வேலைய விட்டுட்டு போயிட்டா, அப்பவும் எனக்காக பெரிய ஹெல்ப் பண்ணினா. அதுக்காக தேங்க்ஸ் சொல்லத்தான் அவளை வரவச்சேன், இவன் சொல்றது இல்ல நிஜம்” என்றான் ஜெய்.

பாட்டி ஜனாவை முறைக்க, “நீ ஓல்டு லேடி அப்பயி. அண்ணன் மனசுல உள்ளதை இளைஞனா இருக்க என்னாலதான் ஸ்மெல் பண்ண முடியும்” என்றான் ஜனா.

“இதுக்கு மேல இப்படி ஏதாவது பேசினீனா சும்மா இருக்க மாட்டேன் டா. இந்த வருஷ படிப்பு முடியறப்போ ஒரு அரியர் விழுந்தாலும் வீட்டுல சோறு கிடையாது உனக்கு. தறுதலை, தண்டசோறு! கண்டதையும் பேசிக்கிட்டு…” அளவுக்கதிகமாக கோவப்பட்ட ஜெய் பாதி உணவுலேயே எழுந்து போய் விட்டான்.

பாட்டியால் ஜெய்யின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிப் போய் அவனை நிறுத்த முடியவில்லை. அலுத்துக் கொண்டே மீண்டும் சின்ன பேரனிடம் வந்து நின்றார்.

எப்போதும் அண்ணனிடம் திட்டு வாங்குபவன்தான் ஜனா. ஆனால் இப்படி சோறு போட மாட்டேன் என்றெல்லாம் சொன்னதில்லை. இந்த வார்த்தைகள் ஜனாவை வெகுவாக பாதித்து விட்டது. அவனது கண்கள் கலங்குவது போலாக, அவனும் பாதி உணவுலேயே எழப் போனான், ஆனால் பாட்டி விடவில்லை.

“அவன் கெடக்கிறான் ராஸ்கல், அவன் என்ன உனக்கு சோறு போடுறது? பழைய வீட்ட வித்தானே, அது என் சொத்து. அவனுக்கு பங்கே இல்ல, எல்லாம் உன்னோடது. இன்னொரு முறை இப்படி பேசினா அவன் வாய்லேயே போடுறேன், நீ சாப்பிடுடா தங்கம்” என்றார் பாட்டி.

பாட்டியின் வயிற்றோடு கட்டிக் கொண்டான் ஜனா. அரை நிமிடம் சென்று விலகியவன், “அந்த சொத்து எனக்குதானே, இன்னிக்கே அமௌன்ட் வாங்கி கொடுத்திடு அப்பயி. நாம தனியா போயிடலாம், உன்னை ராஜாத்தி மாதிரி வச்சிக்கிறேன்” என்றான்.

“எங்கடா போறது? அதான் பேலஸ் கணக்கா வீடு கட்டுறான்ல, அங்க போவோம்”

“வில்லி! வாயாலேயே சொத்து தர்றியா எனக்கு?” பாட்டியிடம் வம்பாக பேசினாலும் சாப்பிடவே இல்லை. அவனிடம் வாயாடிக் கொண்டே பேரனுக்கு உணவை உட்செலுத்தி விட்டார் பாட்டி.

கிளம்புவதற்கு முன் பாட்டியை தீவிரமாக பார்த்தவன், “அந்த நடிப்புக்கார நாட்டுத்துப்பாக்கி மனசுல ஸ்ரீ அக்காதான் இருக்காங்க. யார் நம்பாட்டாலும் ஏன் அந்த வெங்காய வெடி மருந்தே நம்பாட்டாலும் இதுதான் நிஜம். இனிமே அக்கா பத்தின பேச்சை எடுக்க மாட்டேன். எல்லாருக்கும் பட்டாதான் புத்தி வரும்” என சொல்லியே சென்றான்.

மாமியாரிடம் வந்த துளசி, “உண்மை எது பொய் எதுன்னுலாம் ஆராய வேணாம். தரகர் தந்த போட்டோலாம் இருக்குதானே, எடுங்க, நானே அவனுக்கு பொண்ணு முடிவு பண்றேன். நாம சொன்னா ஒத்துக்குவான்” என்றார்.

பாட்டி மறுக்கவில்லை. அவராலும் முழு மனதாக ஸ்ரீயை ஏற்க முடியவில்லையே.

சைலேஷின் கட்டிட பணியில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் ஜெய்.

மேலே படிக்கலாம் என முடிவு செய்து அதற்காக தன்னை தயார் செய்ய ஆரம்பித்தாள் ஸ்ரீ.

அண்ணனின் ‘சோறு போட மாட்டேன்’ என்ற வார்த்தை அதிசயமாக ஜனாவை படிப்பில் கவனம் வைக்க செய்தது.

மூன்று மாதங்களில் சுரேகாவுக்கு திருமணம் நடைபெற்றது. குடும்பத்தோடு சென்று வந்தனர். ஜனா தேர்வுகளை சிறப்பாக இல்லா விட்டாலும் சுமாராக எழுதி விட்டான்.

 மேற்படிப்பிற்கு மெரிட்டில் இடம் கிடைத்து விட திருச்சியிலேயே கல்லூரியில் சேர்ந்து விட்டாள் ஸ்ரீ.

மஹதி பனிரெண்டாம் வகுப்புக்கு சென்று விட்டாள்.

நல்ல முகூர்த்த நாளில் புது வீட்டுக்கு குடி பெயர்ந்து விட்டனர் ஜெய் குடும்பத்தினர்.

ஜெய் இப்போது செய்யும் ஏழு மாடி கட்டிட பணியும் அரண்மனை போன்ற வீடும் சொந்தங்களை மலைக்க வைத்தன.

விஷேஷம் முடிந்த அன்று மாலையில் தன் இரண்டு பேரன்களையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார் பாட்டி.

தன்னுடன் சரியாக பேசாத தம்பியை வம்பிழுத்து எப்படியாவது தன்னுடன் பேச வைக்க நினைத்தான் ஜெய். ஆகவே, “நல்லா சுத்து அப்பயி, தம்பி ஸார் ஒரு வழியா பாஸ் பண்ணிட்டாரே, அவன் ப்ரொஃபஸர்ஸ் எல்லாரும் இந்த மிராக்கிள் எப்படி நடந்துச்சுன்னு இவன் மேல ஒரே கண்ணு” என்றான் ஜெய்.

“சோத்துக்கு பிச்சை எடுப்பேனோன்னு பயம்தான் வேறென்ன?” குத்தலாக ஜனா சொல்ல, ஜெய்யின் முகம் விழுந்து விட்டது.

திருஷ்டி கழித்த பிறகு ஜனாவை கடிந்து கொண்டார் துளசி.

“அவர் என்னை சொன்னது உனக்கு தெரியும்தானே, அப்ப உன் மகனை எதுவும் சொல்லலை, இப்போ என்னை திட்டுவியா? பார்ஷியாலிட்டி காட்டாதம்மா” என ஜனா சொல்லவும், அவர் மறுத்து பேசினார்.

ஜனா அம்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அவனை திட்டினான் ஜெய். கோவித்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் ஜனா.

“அவனுங்க ஏதோ பேசிகிட்டா விடாம… பாரு நல்ல நாளும் அதுவுமா அவன் போயிட்டான்” மருமகளை குறை சொன்னார் பாட்டி.

“அப்பயி, உன்னை மாதிரி அம்மா ஸ்டராங் கிடையாது, ரொம்ப சென்சிடிவ், உள்ள போ” என பாட்டியை உள்ளே அனுப்பி வைத்த ஜெய் அம்மாவிடம், “அவன் வந்திடுவான் மா, ரெஸ்ட் எடு போ” என அக்கறையாக பேசினான்.

எப்போதும் எங்கேயும் தன்னை விட்டுத் தராத தன் மகனை நினைத்து துளசிக்கு பெருமிதமாக இருந்த அதே சமயம் இன்னும் இவனுக்கு திருமணம் அமைந்து வரவில்லையே என கவலையாகவும் இருந்தது.

இந்த வருடத்துக்குள் மகனுக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டுமென உறுதியாக தீர்மானித்த துளசி வரன் தேடுவதில் ஒரேயடியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பலனாக ஜாதக பொருத்தம், அழகு, அறிவு, குடும்ப பாரம்பரியம் என அனைத்து வகையிலும் திருப்திகரமான ஒரு வரனையும் தேர்வு செய்தார்.

பெண் பார்க்க ஜெய்யை அழைத்த போது நீங்களே முடிவு செய்யுங்கள் என சொன்னான்.

“எப்படி வருவாரு? ஸ்ட்ராங்கா இருக்க தெரியாதவருக்கு எதுக்கு லவ்?” ஜனா சின்ன குரலில் சொல்ல, துளசியின் முகம் வாடியது.

தம்பியின் பிடரியில் வலிக்க அடித்த ஜெய், “உள்ள போ” என அதட்டினான்.

“அதென்னடா வளந்த புள்ள மேல கை வைக்கிற? நானும்தான் கேட்குறேன், கல்யாணம்னா ஒரு ஆசை இருக்க வேணாம்? எல்லாம் நீங்க பாருங்க நீங்க செய்ங்கன்னா என்னடா அர்த்தம்? உன் மனசுல என்னதான் இருக்குன்னு சொல்லித் தொலை” சீற்றமாக சொன்னார் பாட்டி.

“எதுவும் இல்ல, எப்ப எங்க வரணும்னு சொல்லுங்க, வந்து தொலைக்கிறேன்” என சொல்லி அறைக்குள் நுழைந்து கொண்டான் ஜெய்.

 தன் நினைவில் ஸ்ரீயே நிறைந்து இருக்கிறாள் என்பதை அவனால் சொல்ல முடியவில்லை. கடந்த சில மாதங்களில் அவளை எதேச்சையாக பார்க்க நேரிட்ட போதெல்லாம் உள்ளே பரவும் ஏமாற்ற உணர்வை யாரிடமும் பகிர முடியவில்லை. அம்மாவுக்கு விருப்பமில்லை என அறிந்து பிறகு அவளை நெருங்கவே பயமாக இருக்கிறது. இப்படியே விட்டு விடலாம் என ஒதுங்கி விட்டான்.

ஜெய் அடித்து பேசியிருந்தால் மகனுக்காக துளசியும் மனம் இறங்கி வரக்கூடுமோ என்னவோ?

“அந்த பொண்ணை பிடிச்சிடுமா இவருக்கு? வேஸ்ட் ஆஃஃ டைம், வேஸ்ட் ஆஃப் எனர்ஜி. என்னை அடிச்சிட்டார்ல? இனி இவரா என் வழிக்கு வர்ற காலம் வரும், அப்போ பேசிக்கிறேன்” என்றான் ஜனா.

அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமையில் பெண் பார்க்கவென கரூர் சென்றனர். வீட்டினுள் நுழைந்த போதே அங்கே யாரின் முகமும் சரியில்லை, ஏதோ சங்கடமாகவே நடந்து கொண்டனர். பெண்ணை அழைத்து வர சொன்னார் பாட்டி.

அறைக்குள் பெண் அழுவதும் வர அடம் பிடிப்பதும் காதில் விழுந்தது. மல்லுகட்டி அவளை அழைத்து வந்து விட்டனர். அப்போதே ஏதோ சரியில்லை என ஜெய் வீட்டினருக்கு புரிந்து விட்டது.

சுடிதார் அணிந்திருந்த பெண்ணை யாரோ பெண்மணி வற்புறுத்தி அழைத்து வந்து நிறுத்தினார். இந்த ஏற்பாட்டில் அவளுக்கு விருப்பமில்லை என்பதை அவளின் கோலமே சொன்னது.

ஜெய் தன் பாட்டியை முறைத்தான். அந்த பெண் அரை நிமிடம் கூட அங்கே நின்றிருக்கவில்லை, கேவி அழுது கொண்டே உள்ளே ஓடிச் சென்று விட்டாள்.

பெண்ணின் தந்தையை கோவமாக பார்த்தவாறு எழுந்து நின்ற ஜெய், “கிளம்புங்க எல்லாரும்” என இரைந்தான்.

கையெடுத்துக் கும்பிட்ட பெண்ணின் தந்தைக்கு வார்த்தையே வரவில்லை.

“மேல படிக்க ஆசை படுறா, நாங்கதான் கல்யாணம் செஞ்சுகிட்டு படின்னு சொன்னோம். அந்த கோவத்துல…” பெண்ணின் அம்மா சப்பைக் கட்டு கட்டினார்.

“நம்பிட்டோம் நம்பிட்டோம்…” கடுப்பாக சொன்னான் ஜனா.

“என்னடா பேச்சு உனக்கு? வா போலாம்” என்ற ஜெய் விடு விடுவென வெளியேறி விட்டான்.

பாட்டிக்கு வேகமாக நடக்க முடியாது என்பதால் அவரின் கையை பிடித்துக்கொண்டு உதவினான் ஜனா. துளசியும் மாமியாருடன் இணைந்தே நடந்தார்.

பெண்ணின் தந்தையை கடக்கும் போது, “உங்க குடும்ப விஷயம் உங்களோட இருக்கட்டும், இவ்ளோ தூரம் மெனெக்கெட்டு வந்த எங்களை யோசிச்சு பார்த்தீங்களா? முன்னாடியே உங்க பொண்ணு பிடிவாதம் பிடிக்கிறது உங்களுக்கு தெரியும்தானே? வீடு வரை வரவச்சிருக்க வேணாம், வேற காரணம் சொல்லியாவது எங்களை நிறுத்தியிருக்கலாம்” ஆதங்கமாக சொன்னார் பாட்டி.

அவர் என்ன சொல்லவென கறுத்து போன முகத்தோடு நின்றிருந்தார். “ஸார் காலம் முழுக்க நீங்களா உங்க பொண்ணுக்கு துணை வர போறீங்க, இல்லைதானே? அவங்க ஆசை பட்டவங்க நல்லவங்களா கெட்டவங்களா அதை மட்டும் பாருங்க. கண்டதையும் பார்த்து பாவம் அவங்க வாழ்க்கைய நாசம் பண்ணாதீங்க?” என்றான் ஜனா.

மகனின் பேச்சில் துளசியின் மனம் குறு குறுப்படைந்தது.