அத்தியாயம் -8(2)

எதற்காக வந்தேன் என ஜனா சொல்லவும் மறுத்தாள் ஸ்ரீ.

ஜோதியே மகளை கண்டனமாக பார்த்தார்.

“படிக்கன்னு வேலையை விட்டுட்ட சரி, உதவின்னு கூப்பிடும் போது போகலைனா நல்லா இருக்காது ஸ்ரீ. நாம அவங்களுக்கு செஞ்சு கொடுக்க கடமை பட்டவங்க” என்றார் ஜோதி.

ஸ்ரீ யோசனையாக இருக்க, “ஹையோ அத்தை! இந்த கடமை பட்டவங்க உரிமை பட்டவங்க வார்த்தைலாம் எனக்கு அலர்ஜி. இருங்க அக்காட்ட நான் பேசுறேன்” என்ற ஜனா, அவளின் கைகளை பிடித்துக்கொண்டான்.

ஸ்ரீ தர்ம சங்கடமாக அவனை பார்க்க, மருத்துவர் சொன்னதை கூறி, “அண்ணன் ரொம்ப பிடிவாதமா இருக்கார், நீங்க போகலைனா அவரே கிளம்பிடுவார். அண்ணனுக்கு ஏதாவதுன்னா…” அவனை பேச விடாமல் தடுத்தார் ஜோதி.

மகளை அதட்டி அவளை கிளம்ப சொல்லி விட்டார்.

“நான் வந்தாலும் உன் அண்ணன் பிளான் பத்தி எனக்கு என்ன எக்ஸ்பிளைன் பண்ண தெரியும்?” என மறுக்கத்தான் பார்த்தாள் ஸ்ரீ.

“ஐய… எதையாவது எக்ஸ்பிளைன் பண்ணுங்க, அட அது கூட வேணாம், சும்மா அங்க போயிட்டு வாங்க. கான்ட்ராக்ட் கிடைக்கணுங்கிறது அண்ணனோட கோல், எனக்கு கோல் அண்ணனை ரெஸ்ட்ல வச்சுக்கணும், அவர் ஃபுல்லா ரெகவர் ஆகணும், அது மட்டும்தான். நீங்க வந்தா மட்டும் போதும்” என சொல்லி, கையோடு அவளை அழைத்து வந்து விட்டான்.

ஸ்ரீ வருவாள் என ஜெய் சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. நலன் விசாரித்தவளுக்கு பதில் சொன்னான்.

ஜெய் அவசர வேலையாக வெளியூர் சென்று விட்டான் எனவும் தன் நண்பனுக்கு விபத்து அதனால் அவனுடன் இருக்கிறேன் எனவும் சொல்லி வீட்டினரை சமாளித்து விட்டான் ஜனா.

ஸ்ரீக்கு ஜெய் விளக்கம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க, அவன் ஓய்வில் இருக்க வேண்டும் என சொல்லி ஸ்ரீயை கிளம்ப சொன்னார் செவிலியர்.

ஜெய்யை பார்க்கும் மருத்துவரை அணுகினான் ஜனா. அதிகம் வருத்திக் கொள்ளாமல் பேசட்டும் என அனுமதி கிடைத்தது.

ஜெய்க்கு அதிக சிரமம் கொடுக்காமல் ஸ்ரீயே தனக்கு புரிந்ததை சொல்லி, தெரியாததற்கு மட்டும் விளக்கம் கேட்டுக் கொண்டாள்.

மறந்தும் அங்கிருந்த சசியிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை அவள்.

ஜனாவே ஸ்ரீயை வீட்டில் விட்டு வந்தான். திட்ட வரைவை தனக்கு மெயில் செய்து கொண்டே கிளம்பியிருந்தவள் இரவெல்லாம் அதனை ஸ்டடி செய்தாள்.

சிறிது நேரம் மட்டும் உறங்கி எழுந்தவள் காலையிலேயே தயாராகி முக்கத்து பிள்ளையாரை வழிபட்டு விட்டு ஜனாவுக்கு சிரமம் தராமல் அவளாகவே மருத்துவமனை வந்து விட்டாள்.

அன்று முழுவதும் அங்குதான் இருந்தாள். ஜெய் வராததற்கு என்ன காரணம் சொல்ல என அவள் கேட்க உண்மையையே கூற சொல்லி விட்டான்.

அன்றைய நாளின் முடிவில் புறப்பட தயாராக இருந்தவளிடம், “நல்லா பிரசன்ட் பண்ற, பயமில்லாம இப்படியே செய். சசி துணைக்கு வருவான்” என்றான் ஜெய்.

“இல்ல வேணாம், நானே போயிப்பேன்” ஜெய் அடுத்து எதுவும் பேச முடியாத படி கடினத் தொனியில் கூறினாள்.

ஜெய்யின் முகமும் மனமும் சுணங்கியது. ஆழ்ந்த மூச்சு விட்டவன், “ஆல் த பெஸ்ட்!” என்றான்.

அளவாக சிரித்து விட்டு கிளம்பி விட்டாள். அடுத்த நாள் காலையில் சைலேஷை பார்க்க வந்தவள் ஜனாவுக்கு அழைத்தே அவள் அங்கு வந்து விட்டதை கூறினாள்.

ஜெய்க்கு சற்று பதட்டமாகத்தான் இருந்தது.

ஜெய் வராமல் ஸ்ரீ வந்ததில் சைலேஷுக்கு அதிருப்தி. அவனை உணர்ந்து கொண்டவளாக நிலைமையை சொன்னாள்.

பொதுவாக இப்படியான சமயங்களில் கட்டுமான நிறுவனர்கள் தாங்கள் நன்றாக இருப்பதாகத்தான் காட்டிக் கொள்வார்கள். அதையும் வாடிக்கையாளர் பார்ப்பார்தானே?

விசாரித்தால் தெரியதானே போகிறது என்பதால் உண்மையை சொல்ல சொல்லியிருந்தான் ஜெய். ஆனால் அந்த உண்மைத் தன்மை சைலஷை கவர்ந்து விட்டது.

ஜெய்யின் திட்டம் அத்தனை நேர்த்தி என்றால் ஸ்ரீயின் விளக்க உரை சைலேஷை வெகுவாக ஈர்த்தது. அவன் கேட்ட பெரும்பாலான சந்தேகங்களை தீர்த்து வைத்தவளுக்கு சிலவற்றுக்கு சரியாக விளக்கம் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் பதற்றமின்றி, “ஜெய் ஸார் கண்டிப்பா உங்க டவுட்ஸ்க்கு எக்ஸபிளநேஷன் கொடுப்பார்” என்றே சொல்லி விட்டாள். சைலேஷின் குணத்துக்கு தெரியாத ஒன்றை தெரிந்தது போல உளறிக் கொட்டியிருந்தால் நிச்சயமாக எரிச்சல் அடைந்திருப்பான்.

அவனுக்கு திருப்திதான், ஆனாலும் தன் முடிவை பின்னர் அறிவிக்கிறேன் என சொல்லியே ஸ்ரீயை அனுப்பி வைத்தான்.

ஜனாவுக்கு அழைத்த ஸ்ரீ விவரம் சொல்லி, “நான் செய்ய வேண்டியதை செஞ்சிட்டேன், என் வேலை முடிஞ்சதுன்னு உன் அண்ணன்கிட்ட சொல்லிடு” என்றாள்.

அண்ணனிடமே சொல்லுங்கள் என அவன் சொன்னதற்கு அவசியமில்லை என சொல்லி விட்டாள். அருகிலிருந்த ஜெய்க்கு முகம் கறுத்துப் போனது.

“என்ன அண்ணா செஞ்சு வச்ச? கோவத்துல கை நீட்டிட்டியா என்ன?” எனக் கேட்டான் ஜனா.

“போடா” எரிச்சல் பட்டான் ஜெய்.

“இதே மாதிரி அக்காட்டேயும் பிஹேவ் பண்ணியிருப்ப” சலித்துக் கொண்டான் ஜனா.

இறுதிக் கட்டத்தில் ஜெய்க்கு நேர்ந்த விபத்து அவனுக்கு லேசான சறுக்கலை ஏற்படுத்தியிருந்தாலும் அதன் பின் அவனது நேரம் நன்றாக அமைந்தது எனதான் சொல்லவேண்டும்.

இல்லையென்றால் இவன் முகத்திலேயே விழிக்க கூடாது என அத்தனை உறுதியாக இருந்த ஸ்ரீ இறங்கி வந்து உதவியிருக்க மாட்டாள், அதை விட அன்று மாலையே ஜெய்யை பார்க்க மருத்துவமனைக்கே வந்திருக்க மாட்டான் சைலேஷ்.

முதலில் நலம் விசாரித்தவன், விபத்து ஏற்பட்டு படுக்கையில் இருந்த போதும் மனம் தளராமல் ஒரு சின்ன பெண்ணை தயார் செய்து அசத்தி விட்டீர்கள் என பாராட்டினான்.

ஜெய்யால் நம்பவே முடியவில்லை.

கட்டிடப் பணியை அவனது நிறுவனத்துக்கே வழங்கப் போவதை உறுதி செய்து விட்டுத்தான் கிளம்பினான் சைலேஷ்.

ஜெய்க்கு மகிழ்ச்சிதான் என்றாலும் முழு மனதிலும் அந்த உற்சாகம் பரவவில்லை.

இது சாத்தியமானது ஸ்ரீயினால்தானே, அவளுக்கு நன்றி சொல்ல மனம் விழைந்தது. தான் அழைத்தால் வர மாட்டாள் என தெரியும்.

தம்பியை அழைத்தவன், “ஐ ஃபோன் வேணுமாடா உனக்கு?” எனக் கேட்டான்.

“வாவ்! எதுக்கு இப்போ? ஹாஸ்பிடல்ல இருந்து உனக்கு ஆயா வேலை பார்த்ததுக்கா? ஆசை படுற வாங்கிக் கொடு” என்றான் ஜனா.

“ஸ்ரீயை பார்க்கணும் நான், என்ன சொல்வியோ செய்வியோ அழைச்சிட்டு வா, வாங்கி தர்றேன்” என்ற ஜெய்யை பார்த்து குறும்பாக சிரித்து கண்களை சிமிட்டிய ஜனா, அடுத்த நொடியே புறப்பட்டு விட்டான்.

மகளுக்கு ஜெய்யோடு பிரச்சனை என ஜோதிக்கு தெரியாதே, அவரை வைத்தே ஸ்ரீயை ஜெய்யிடம் அழைத்து வந்து விட்டான் ஜனா.

வழியிலேயே சைலேஷ் வந்து போன கதையையெல்லாம் அவளுக்கு சொல்லியிருந்த ஜனா அவர்களை தனியே விட்டு வெளியே சென்று விட்டான்.

ஜெய்யின் பார்வை அவள் முகத்தை அளவிட, நெற்றி சுருக்கி முகம் சுளித்து தன் பிடித்தமின்மையை உணர்த்தினாள்.

உடனே சுதாரித்து வேறு பக்கம் பார்த்து அவளின் தரிசனத்தில் மறந்து போயிருந்த, அவளிடம் பேச நினைத்ததை எல்லாம் நினைவு படுத்திக் கொள்ள முயன்றான்.

“என்ன பேசணுமோ சொல்லிட்டீங்கன்னா கிளம்புவேன்” ஆளை விடுடா சாமி எனும் ரீதியில் சொன்னாள்.

ஆழ் மனதிலிருந்து, “தேங்க்ஸ்!” என்றான் ஜெய்.

“பரவாயில்லை ஸார்” என மட்டும் சொன்னாள் ஸ்ரீ.

“ஸாரி!” என்றான்.

சிறு புன்னகையோடு, “இட்ஸ் ஓகே, சீக்கிரம் நல்லாகி வேலையை ஆரம்பிங்க. எனக்கு கிளம்பனும்” என்றாள்.

ஜெய்யின் முகத்தில் வேதனை படர்ந்தது. அவள் செல்ல எத்தனித்தாள்.

“திரும்ப வேலைக்கு வர்றியா?” எனக் கேட்டான்.

அவள் முகத்தை சுருக்கிக் கொண்டு பார்த்தாள்.

“யாரையும் நம்ப முடியாத படி…” என்றவன் இடைவெளி விட்டு, “நீ இவ்ளோ கோவ படுவேன்னு நினைக்கல. ரியலி ஸாரி, இனிமே நமக்குள்ள நல்ல ஹெல்தியான ரிலேஷன்ஷிப் இருக்கும், திரும்ப கசப்பான சூழல் வந்தா உன்னை தடுத்து நிறுத்த மாட்டேன், இப்போ…” திணறலாக அவளுக்கு சொல்ல வேண்டியதை புரிய வைத்தான்.

“நீங்க இப்படி பேசுறதை நம்பவே முடியலை, எனி வே தேங்க்ஸ். ஆனா திரும்ப சேரனும்னு எனக்கு தோணல. தள்ளியே இருப்போம், அதான் நமக்கு நல்லது” என்றாள்.

“உடனே சொல்லாத, யோசிச்சி…”

“இல்ல, நான் கோவத்துலேயோ வருத்தத்திலேயோ சொல்லலை. இதுதான் சரின்னு எனக்கு ஸ்ட்ராங்கா தோணுது. இப்போ உங்களுக்கு செஞ்ச ஹெல்ப் எனக்கு இருக்கிற பாவக் கணக்க ஓரளவு நேர் செய்றதுக்காகன்னு நான் எடுத்துக்கிறேன். ஆமாம் பாவக்கணக்குதான், அவர் இன்ஷியலைதானே யூஸ் பண்ணிட்டு இருக்கேன்?”

தான் பேசிய பேச்சின் வீரியம் புரிய தலை குனிந்து கொண்டான்.

இருக்கிறேன் என சொல்ல மாட்டாளா என அவனுக்கு தவிப்பாக இருக்கிறது. ஆனால் அவனால் வேறு எதுவும் அவளிடம் பேச முடியவில்லை.

இனி உன்னிடம் வரப் போவதே இல்லை என்பதை தெளிவாக அவனுக்கு உணர்த்தி விட்டு சென்று விட்டாள்.

ஜனா அறைக்குள் வந்தான். சோகமாக இருந்த அண்ணனை பார்த்து, “ஸாஃப்ட்டான ஸ்ரீ அக்காவே முறுக்கிக்கிற அளவுக்கு என்ன ண்ணா பண்ணி வச்ச? சுரேகா மாதிரியே இதுவும் புட்டுகிட்டா?” எனக் கேட்டான்.

“ஜனா! ஸ்டாப் ஜனா. இதெல்லாம் விளையாட்டு இல்ல. நீ உளர்ற மாதிரி எங்களுக்குள்ள எதுவும் இல்ல. அவ போயிட்டா, இனிமே வர மாட்டா. போ, நாளைக்கே வீட்டுக்கு போலாமான்னு கேட்டுட்டு வா. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றான் ஜெய்.

நம்பிட்டேன் நம்பிட்டேன் என மனதில் நினைத்துக் கொண்ட ஜனா, “என்ன நிறைய வேலை இருக்கு உனக்கு? நாலு வாரம் ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாது நீ” என்றான்.

“எல்லாம் தெரியும்டா, நீயும் போட்டு படுத்தாம போ”

“நானும்னா… வேற யார்… யாரு போட்டு படுத்துறா உன்னை?”

பதில் சொல்லாமல் தம்பிக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்தான் ஜெய்.

“எல்லாரையும் படுத்துறவர் இவராதான் இருப்பார், இவரை படுத்துறாங்களாம்” சத்தமாக முணு முணுத்த ஜனா, “உன் சோக கீதத்துல அந்த ஐ ஃபோன் மறந்திடாத” என சொல்லி சென்றான்.