புதிய உதயம் -8

அத்தியாயம் -8(1)

தன்யஸ்ரீ வேலையை விட்டு சென்று விட்டாள் என அறிந்ததுமே ஜெய்க்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. உன்னை எப்படி வரவழைக்கிறேன் பார் என அவன் கறுவ ஜம்புலிங்கம் அழைத்து விட்டார்.

அதற்குள் அவரிடம் சொல்லி விட்டாளா என்ற நினைப்போடுதான் பேசினான்.

இயல்பாக அவனை விசாரித்தவர், “ஸ்ரீக்கு மேல படிக்கணுமாம் ஜெய், வேலைலேருந்து நின்னுக்கிறேன்னு சொல்லுது, உங்கிட்ட கான்ட்ராக்ட் இருக்காமே, எல்லா ஃபார்மாலிடியும் முடிச்சு ஸ்ரீயை ரிலீவ் பண்ணி விட்ரு ஜெய்” என்றார்.

‘இவரிடம் என்னை பற்றி குறை சொல்லவில்லையா அவள்?’ என ஜெய் யோசனையிலிருக்க, “நான் நாலு நாள்ல யூ எஸ் கிளம்பறேன்னு தெரியும்தானே உனக்கு? ஸ்ரீக்கு ஏதாவது உதவி வேணும்னா செஞ்சு தரணும் ஜெய்” என அன்புக்கட்டளை போட்டார்.

“இப்ப என்ன படிக்க போறாங்க ஸ்ரீ? அப்படியே படிக்கிறதா இருந்தாலும் உடனே சேர முடியாதே, அதுவரை இங்க வரட்டுமே ஸார்” என்றான்.

“எல்லாம் நான் சொல்லாமலா இருப்பேன் ஜெய்? மெரிட்ல சீட் கிடைக்க எக்ஸாம்ஸ் கிளியர் பண்ணனுமாம், பிரிப்பேர் பண்ண டைம் வேணும்னு சொல்லுது. அது சொல்றது கரெக்ட்தான்னு எனக்கும் தோணுது, படிக்கட்டும்” என அவர் சொல்லி விட, மேற்கொண்டு அவளை பற்றி அவனால் பேச முடியவில்லை.

அவர் வெளிநாடு செல்வது சம்பந்தமாக சொன்னவர் சைலஷின் ஒப்பந்தம் இவனுக்கே கிடைக்கட்டும் என வாழ்த்தி பேச்சை முடித்துக் கொண்டார்.

ஜம்புலிங்கமே சொன்ன பிறகு அவளை தொந்தரவு செய்யும் துணிவு அவனுக்கு இல்லாமல் போனது.

அவள் இனி இங்கு வரமாட்டாள் என்பதில் ஏமாற்றம் எழ அதனால் அவன் மீதே கோவமும் உண்டானது.

போனால் போ என வீம்பாக சொல்லி அவனுக்கு ஒன்றுமே இல்லை என அவனை அவனே நம்ப வைத்துக் கொண்டான்.

ஜம்புலிங்கத்திடம் கூறிய காரணத்தைதான் அம்மாவிடமும் சொன்னாள் ஸ்ரீ.

“இன்னும் படிக்கணுமா, கல்யாணம் பண்ணிட்டு படியேன் ஸ்ரீ” கெஞ்சலாக சொன்னார் ஜோதி.

“உன்னை எனக்கு புரியுதுமா, கல்யாணம் பண்ணி வச்சிட்டீனா உன் பொண்ணோட எதிர்காலம் பத்தின பயமில்லைனு நினைக்கிற, அதானே? கட்டுன புருஷன் என்னிக்கு வேணா விட்டுட்டு போவான், படிக்கிற படிப்பு மட்டும்தான் கடைசி மூச்சு வரை துணைக்கு வரும், அந்த வகைல என் எதிர்காலத்தை எப்பவோ ஸேஃப் ஆக்கிட்ட” என ஸ்ரீ சொல்ல, அனுபவ பட்ட ஜோதியால் அதை மறுக்க முடியவில்லை.

வளர்ந்த, படித்த, பக்குவமான பெண், அவளுக்கு எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கையில் மகளின் விருப்பத்துக்கே விட்டு விட்டார்.

மேலே படிப்பதா வேறு வேலைக்கு செல்வதா என்றே ஸ்ரீ இன்னும் முடிவு செய்திருக்கவில்லை. ஜெய்யை தவறாக சித்தரிக்காமல் ஜம்புலிங்கத்திடம் ஏதாவது சொல்ல நினைத்தே படிப்பை காரணமாக சொல்லி விட்டாள்.

அடுத்த அடியை நிதானமாக எடுத்து வைக்க நினைத்தவள் தற்காலிகமாக அம்மாவுக்கு சிறு சிறு உதவிகள் செய்வதில் மட்டும் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தாள்.

சசி தன்னிலை விளக்கம் சொல்வதற்காக பல முறை அவளை தொடர்பு கொள்ள முயன்று விட்டான். ஜெய் மற்றும் அவனுடைய சம்பந்த பட்டவர்களின் சகவாசமே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தவள் சசியை தவிர்த்து விட்டாள்.

ஸ்ரீ வேலையிலிருந்து நீங்கிய விவரம் இன்னும் ஜனாவுக்கு தெரியாது.

ஒரு வாரம் சென்று அந்த மாதம் நிறைவுக்கு வந்தது. அவள் பணி செய்த நாட்களை கணக்கில் கொண்டு சம்பள பணம் அவளது வங்கிக் கணக்குக்கு வந்திருந்தது.

பிரத்யேகமாக அதை அறிவித்து மெயில் செய்திருந்தான் ஜெய். பணத்தை ஏற்றுக்கொண்டவள் அவனுக்கு பதில் மெயில் அனுப்பவில்லை, அவசியமில்லை என்றே கருதினாள்.

ஜெய்க்குள் குற்ற உணர்வு, ஆனால் அவனை தவிர யாருக்கும் தெரியவரவில்லை.

சைலேஷ் கேட்டிருந்த திட்ட வரைவை தயார் செய்வதில் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டு தன்யஸ்ரீயின் நினைவுகளை புறந்தள்ளினான். எத்தனை பிஸியாக அவன் அவனை வைத்துக்கொண்ட போதும் ஒரு ஓரத்தில் ஸ்ரீ தொந்தரவு செய்து கொண்டேதான் இருந்தாள்.

சரியான உறக்கமின்மை, ஒரு வித மன உளைச்சல் ஆகியவற்றால் பைக் ஓட்டுகையில் கவனம் பிசகி விபத்தில் சிக்கிக் கொண்டான் ஜெய்.

தகவல் கிடைத்து ஜனாதான் மருத்துவமனை சென்றான். தலையில் சின்ன இரத்தக் கசிவு, சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லி விட்டனர்.

அண்ணனின் அறிவுறுத்தலின் படி அம்மாவுக்கும் பாட்டிக்கும் சொல்லாமல் ஜனாதான் துணைக்கு இருந்தான். சசிக்கு மட்டும் விவரம் சொல்லி வேலைகளை பார்த்துக் கொள்ள சொன்ன பிறகுதான் அறுவை சிகிச்சை அரங்கம் சென்றான் ஜெய்.

 மாலையில் சசியும் அங்கு வந்து விட்டான்.

அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்ததும் அடுத்த நாளே சென்று விடலாம் எனதான் நினைத்திருந்தான் ஜெய். ஆனால் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் முழு ஓய்வில் எங்கள் மருத்துவ கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என சொல்லி விட்டார் மருத்துவர்.

சைலேஷ் சொல்லியிருந்த காலக்கெடு மூன்று நாட்களில் முடிவடைய போகிறது. நன்றாக இருந்திருந்தால் நாளையே சைலேஷை சந்தித்து தனது திட்டத்தை விளக்கியிருப்பான் ஜெய். இப்போதும் ஒன்றும் கெடவில்லை, கால அவகாசம் இருக்கிறதே, ஆகவே மருத்துவரின் ஆலோசனையை மீறி கிளம்புகிறேன் என்றான்.

“விளையாடுறீங்களா? கபாலத்துல ஓட்டை போட்ருக்குங்க உங்களுக்கு. நாங்க சொல்றத கேட்கலைனா உங்க ஓன் ரிஸ்க்தான்” என ஜெய்யிடம் கோவ பட்ட மருத்துவர் ஜனாவை பார்த்து, “எதாவதுன்னா எங்களை கேட்க கூடாது. இவர் போறதா இருந்தா டிஸ்சார்ஜ் அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ்லதான் அனுப்புவேன்” என சொல்லி சென்று விட்டார்.

இங்கேயே இரு என ஜனாவும் தான் பார்த்துக் கொள்வதாக சசியும் சமாதானம் சொல்லி பார்த்தனர். ஜெய் ஒத்துக் கொள்ளவே இல்லை.

ஜெய்க்கு பதிலாக சைலேஷிடம் சசி செல்லட்டுமே என யோசனை சொன்னான் ஜனா. சசி சொல்வதை அப்படியே செய்வான், அதிலும் ஆயிரம் சந்தேகங்கள் வரும் அவனுக்கு. அவனால் இந்த காரியத்தை திறம்பட செய்ய இயலாது என்பதை நன்கறிந்திருந்த ஜெய் தம்பியிடமும் அதையே சொன்னான்.

“சசி ஸார் இல்லைனா வேற யாரையாவது அனுப்பு, ஸ்ரீ அக்கா இருக்காங்கல்ல? அவங்களை அனுப்பு ண்ணா, நீ போக கூடாது, நான் விடவும் மாட்டேன்” என அடமாக சொல்லி விட்டான் ஜனா.

ஜெய் மௌனமாகி விட்டான். ஸ்ரீயால் முடியுமா என்ற கேள்விக்கு சொல்லிக் கொடுத்தால் செய்வாள் என்றே அவனுக்கு தோன்றியது.

ஒன்றுமே செய்யாமல் இருப்பதை காட்டிலும் ஸ்ரீயை அனுப்பி பார்க்கலாம்தான், ஆனால் அவள்தான் இப்போது இவனிடம் இல்லையே.

“என்ன ண்ணா ஸ்ரீ அக்காவை வர சொல்லவா?” கேட்டுக் கொண்டே கைப்பேசியை எடுத்தான் ஜனா.

வேணாம் என கை சாடை மூலமாக சொன்ன ஜெய் சோர்வாக கண்களை மூடிக் கொண்டான். அண்ணனை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து விட்ட ஜனா, ஸ்ரீ பற்றி சசி மூலம் அறிந்து கொண்டான்.

ஜெய்க்கு சாதகமாக ‘படிக்க நினைத்துதான் வேலையை விட்டு விட்டாள்’ என்றே கூறினான் சசி.

சற்று நேரம் கழித்து அறையை எட்டிப் பார்த்த ஜனா அண்ணன் விழித்துக் கொண்டிருப்பதை கண்டு விட்டு வேகமாக சென்று ஸ்ரீ பற்றிய பேச்சை எடுத்தான்.

“சசிக்கு அவ பெட்டர்தான், ஆனா வர மாட்டா” என்றான் ஜெய்.

“அதெப்படி உனக்கு இவ்ளோ பெரிய பிராப்லம்ங்கிறப்போ அக்கா வராம இருப்பாங்களா? ஸ்ரீ அக்கா அப்படி கிடையாது” என ஜனா சொல்ல, மறுப்பாக தலையசைத்தான்.

“என்ன எதுவும் சண்டையா உங்களுக்குள்ள?” என தம்பி கேட்டதற்கு வாயே திறக்கவில்லை ஜெய்.

“லவ்வர்ஸ்னாலே முட்டி மோதிகிட்டுத்தான் இருப்பாங்க போல” முணு முணுத்துக் கொண்டே வெளியேறிய தம்பியை ஜெய் கண்டனமாக பார்த்ததை அவன் கவனித்தால்தானே?

சசியை இங்கு பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு புறப்பட்ட ஜனா, ஸ்ரீயின் வீட்டில் போய்தான் நின்றான். யாரென தெரிந்து வரவேற்றார் ஜோதி.

ஜெய்க்கு விபத்து எனவும் ஸ்ரீயும் ஜோதியும் வருத்தப் பட்டனர். பயப்பட தேவையில்லை என்றான் ஜனா.

“ஹ்ம்ம்… நல்ல வேளையா பெருசா ஏதும் ஆகலை. உன் அண்ணன் ரொம்ப ஃபாஸ்ட்டாதான் பைக் ஓட்டுறார், சொன்னாலும் கேட்டுக்க மாட்டார். இனியாவது கவனமா இருக்க சொல்லு” என்றாள் ஸ்ரீ.

“உங்களுக்கு எப்படிக்கா தெரியும்?” என விசாரித்தான் ஜனா.

அன்று தன்னை அழைக்க இங்கு வந்தது ஜெய் என ஜோதிக்கு தெரியாதே, இனியும் அதை தெரியப் படுத்த விரும்பாதவள் உள்ளே காபி போட்டுக் கொண்டிருந்த அம்மாவை எட்டிப் பார்த்துக் கொண்டே சின்ன குரலில், “அவரோட பைக்ல போயிருக்கேன்” என்றாள்.

வழக்கம் போல தானாக ஒன்றை கற்பனை செய்து கொண்டான் ஜனா.