புதிய உதயம் -7(2)

கொண்டு வந்து விட்டதற்காக அவளிடமிருந்து ‘தேங்க்ஸ்’ எனும் வார்த்தையை எதிர் பார்த்தவனுக்கு அவளின் மௌனம் கோவத்தை உண்டாக்கியது.

பைக்கின் உறுமல் சத்தம் கேட்டு திரும்பியவளின் கண்கள் கலங்கிப் போயிருப்பதை கண்டவன் பைக்கை அணைத்தான்.

“நம்மளோட பிறப்பை யாராலேயும் மாத்த முடியாது ஸார், நான் தன்யஸ்ரீ, நம்பிக்கை துரோகியோட பொண்ணுங்கிற அடையாளத்தோடதான் காலத்துக்கும் என்னை பார்ப்பீங்கன்னா நான் என்ன பண்ண முடியும்? ட்ராப் பண்ணினதுக்கு தேங்க்ஸ்!” என்றாள்.

அவனது தொண்டையில் நிற்கிறது ‘ஸாரி’ எனும் வார்த்தை, வெளி வரத்தான் சண்டித் தனம் செய்கிறது.

அவன் கிளம்பாமல் இருப்பதால் அவளும் கேள்வியாக அங்கேயே நின்றிருந்தாள்.

மனது வந்தவனாக, “பிலேட்டட் பர்த்டே விஷஸ்!” என்றான்.

எதிர் பாராத திடுக்கிடுதலோடு அவள் பார்த்திருக்க, கிளம்பி சென்று விட்டான் அவன்.

அண்ணனை காண மருத்துவமனை வந்த ஜனா, “யாரையும் நம்பாமல் அவரே ஸ்ரீயை கூப்பிட போனார், கொண்டு போய் விடவும் அவரேதான் போவேன்னு போயிருக்கார்” என்ற சசியின் கூற்றை கேட்டு விட்டு தன் கற்பனைக் குதிரையை கட்டவிழ்த்து விட்டான்.

அன்றிலிருந்து ஸ்ரீயை கவனமாக கையாண்டான் ஜெய். அவனை மீறி வார்த்தை தாக்குதல் செய்ய நாக்கு தயாராகும் போதெல்லாம் அவனுக்கு அவனே வாய்ப்பூட்டு போட்டுக் கொள்கிறான். மனம் அவளின் பால் செல்லாமல் மனப் பூட்டையும் சேர்த்தே போட்டுக் கொண்டான்.

ராஜாம்பாள் பாட்டிக்கு ஜெய்யின் மாமா மூலமாக வந்திருந்த வரன்களின் மேல் பிடித்தம் ஏற்படவே இல்லை. சரி பேரனாக யாரையும் பிடிக்கிறது என சொல்வான் என பார்த்தால் அவனோ இந்த விஷயத்தில் உங்களிஷ்டம் என்பதை தாண்டி எந்த ஈடுபாடும் காட்டவில்லை.

ஜனாவோ, “எல்லாம் ரிஜெக்ட்டட்” பாட்டியிடம் சொல்லி, காரணமே குறிப்பிடாமல் ஜாதகங்களை மாமாவுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டான்.

மாமா பெண்ணின் திருமணத்துக்கு குடும்பமாக சென்றிருந்தனர். சுரேகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், மூன்று மாதங்களில் அவளுக்கும் திருமணம் என சொன்னார்கள்.

ஜெய்க்கு தவிர்க்க முடியாத வேலை, அதன் காரணமாக தாலி கட்டி முடித்தவுடன் உணவை கூட தவிர்த்து விட்டு, அம்மாவையும் பாட்டியையும் அழைத்து வரும் பொறுப்பை தம்பியிடம் ஒப்படைத்து கிளம்பி விட்டான்.

“இவன் ஏன் டா இப்படி ஓடிப் போறான்? நீ என்னமோ அந்த ஸ்ரீய இவனுக்கு பிடிச்சிருக்குனு சொன்ன, இங்க சுரேகாவ பார்த்திட்டு ஏன் போகணும்? என்னடா இருக்கு இவன் மனசுல?” ஜனாவிடம் ரகசியமாக கேட்டார் பாட்டி.

“அப்பயி… இது கூட புரியலையா உனக்கு? இந்த அழுகுணிக்கு முன்னாடி மேரேஜ் பண்ணிக்கணும்னு நினைக்கிறார். ஸ்ரீ அக்காவை பத்தி உங்ககிட்ட சொல்லவும் முடியலை, நீங்க சொல்ற பொண்ணுங்களை ஓகே பண்ணவும் முடியலை. இப்பலாம் சரியா தூங்குறது கூட இல்லை போல, அவர் மூஞ்ச பார்த்தா தெரியலை. சுரேகாவை சிங்கிலா ஃபேஸ் பண்ண முடியாமதான் கிளம்பிட்டார்.. ஸ்ரீ அக்கா பக்கத்துல இருந்திருந்தா கெத்து காட்டியிருப்பார்” என்றான் ஜனா.

இது உண்மையா என அழுத்திக் கேட்டார் பாட்டி. இட்டு கட்டி கதைகள் சொல்லி ஆமாம் என அடித்து சொன்னான் ஜனா.

பாட்டி யோசனையானார். ஸ்ரீயை தன் வீட்டிற்கு கொண்டு வர இசைய மறுத்தது அவரின் மனம். ஆனால் பேரனுக்கு அவன் ஆசை படுவதை நடத்தாமல் விடுவதா என்ற ஆதங்கமும் எழுந்தது.

*****

அன்று சசி அரை நாள் விடுப்பு, முக்கிய அலுவலாக யாராவது பொறுப்பானவர் வங்கிக்கு செல்ல வேண்டும்.

திருச்சியில் பிரபல ஜவுளி நிறுவன கிளையின் கட்டிட பணியை பெற்றுக் கொள்ள முயன்று வருகிறான் இல்லையா, அதன் உரிமையாளரின் பெயர் ஷைலேஷ். இன்றுதான் இவனை சந்திக்க வர சொல்லியிருக்கிறான். ஆகவே ஜெய்யால் செல்ல முடியாத நிலை.

சசியும் வராத காரணத்தால் தான் செல்வதாக கூறினாள் ஸ்ரீ. அலுவலக பணியை பகிர்ந்து கொண்டால் அவனது வேலை தடங்கல் இல்லாமல் இருக்குமே என்ற எண்ணம்தானே தவிர அவளுக்கு வேறு நோக்கமில்லை.

“பல வருஷத்துக்கு முன்னாடியே உன் அப்பா நல்ல பாடம் கத்து கொடுத்திருக்கிறார். அந்த பட்டறிவே காலத்துக்கும் போதும், நீ வேற சொல்லித் தர பாடத்தை எல்லாம் கத்து தெளியற அளவுக்கு என்கிட்ட கெபாஸிடி இல்லை” என்றான் ஜெய்.

சில நாட்களாக ஒழுங்காக இருந்தவனின் இந்த திடீர் பேச்சில் திகைத்தவளுக்கு உடனடியாக பதிலடி தர முடியவில்லை.

அத்தோடு விடாதவன், “நல்ல பாம்பு கடிக்காம இருக்குங்கிறதுக்காக அதுகிட்ட விஷம் இல்லைனு அர்த்தம் ஆகிடாது. யாருக்கு எந்த வேலை கொடுக்கிறதுன்னு எனக்கு நல்லா தெரியும், என்ன சொல்றேனோ அந்த வேலையை மட்டும் நீ செஞ்சா போதும்” என்றான்.

அவனது அதி முக்கியமான வேலையை கருத்தில் கொண்ட ஸ்ரீ அந்த நேரம் எது சொல்லியும் அவனை டென்ஷன் செய்ய வேண்டாம் என தீர்மானித்து அமைதியாக அவனிடமிருந்து அகன்று விட்டாள்.

ஜெய் சென்ற பிறகு ஸ்ரீயும் சைட்டுக்கு புறப்பட்டு சென்றாள். வேதனையும் கவலையும் உள்ளமெங்கும் வியாபித்திருந்தது. தன் அப்பாவின் மீது கோவம் கோவமாக வந்தது, ஆனால் அவரிடம் சென்று காட்ட முடியாதே.

அன்றைய தினம் முழுவதுமே மிகவும் சோர்வாகத்தான் சென்றது அவளுக்கு.

ஷைலேஷ் ஜெய்யை மட்டும் வர சொல்லியிருக்கவில்லை. இன்னும் நான்கைந்து நபர்கள் வந்திருந்தனர். பெரிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என பார்த்தால் ஒருவர்தான், மற்றவர்கள் அனைவருமே இப்போதுதான் பிரபலம் ஆகிக் கொண்டிருப்பவர்கள்.

அனைவரையும் ஒன்றாக அமர வைத்துதான் பேசினான்.

ஷைலேஷ் இளைஞன் என்பதால் அவனுடைய எதிர்பார்ப்பு நவீனமாக இருந்தது. ஏழு தளங்களில் உருவாக போகும் கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என அனைவருக்கும் பொதுவாக விவரித்தான். அவர்களுடைய திட்ட வரைவை கொடுக்க பதினைந்து நாட்கள் காலக் கெடு வைத்தான்.

 அடுத்த வருடம் வரும் அவனுடைய தாத்தாவின் நினைவு நாளன்று கடையை திறக்க விரும்புவதாகவும், ஆகவே கால தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கராறாக கூறி விட்டான்.

வந்திருந்தவர்களில் யாருடைய திட்டம் அவனுக்கு திருப்தி தருகிறதோ, சமரசம் இன்றி அவர்களுக்கே வாய்ப்பு கொடுப்பேன் எனவும் சொல்லி விட்டான்.

சைலேஷ் கூறிய அனைத்துமே தனக்கு சாதகமாக இருப்பதாகவே நினைத்தான் ஜெய். தன் திறமையை நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய நூறு சதவீத உழைப்பையும் கொடுத்து விடுவதென முடிவெடுத்தவன் உற்சாகமாகவே அங்கிருந்து புறப்பட்டான்.

மாலையில் ஜெய்க்கு அழைத்து அன்றைய பணி விவரங்களை ஒப்பித்தாள் ஸ்ரீ. அவன் நல்ல மனநிலையில் இருந்ததால் அதிக கேள்விகள் கேட்காமல், “நாளையிலிருந்து டூ வீக்ஸ் பிஸி நான். அதனால சைட் பக்கம் வர மாட்டேன், கவனமா வேலைய பாரு” என மட்டும் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் அங்கு வந்த சசியின் மூலமாகத்தான் சைலேஷ் விஷயமெல்லாம் ஸ்ரீக்கு தெரிய வந்தது.

பதில் எதுவும் சொல்லாமல் இறுக்கமான முகத்தோடு இருந்த ஸ்ரீயை நோண்டி நோண்டி கேள்வி கேட்டான் சசி. அவள் எதுவும் சொல்லாமலே இருக்க, “உனக்கும் ஜெய் ஸாருக்கும் என்ன பிரச்சனை ஸ்ரீ? உங்கப்பா பேரெல்லாம் இழுத்து பேசினதா கேள்வி பட்டேன்” என்றான் சசி.

சைட்டில் வைத்து ஜெய்யுடன் நடந்த பிரச்சனை இவனுக்கு தெரிய வந்திருக்கிறது என ஊகித்தவள், “ஒண்ணுமில்ல ஸார்” என்றாள்.

“சொல்ல பிரிய படலைன்னு சொல்லு. ஆனா நான் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்” என்றான் சசி.

இந்த பேச்சு பிடிக்கவில்லை எனும் விதமாக முகத்தை காட்டியவள், புறப்பட தயாரானாள்.

“அதுல உன் தப்பென்ன? ஜெய் அவனை பெரிய புத்திசாலின்னு நினைச்சிட்டு இருக்கான், ஆத்திர காரனுக்கு அறிவு மட்டுனு கேள்வி பட்டிருக்கியா? அவனும் அப்படித்தான்” என்றான்.

“நீங்க ஸாரை மரியாதை குறைவா பேசுறீங்க, வேணாமே” என்றாள்.

“போதும் போதும் அவன் கொடுக்கிற சம்பளத்துக்கும் மத்தவங்க முன்னாடி போடுற ஸீனுக்கும் இந்த மரியாதை போதும். ஆமாம்… இந்த சைலேஷ் பில்டிங் கான்ட்ராக்ட் இவனுக்கு கிடைக்கும்னு நினைக்கிற?”

“வேலை பார்க்கிற இடத்துல உண்மையா இருக்க முடியும்னா மட்டும்தான் அங்க இருக்கணும், இல்லை இருக்க முடியாதுன்னு தோணினா செகண்ட் தாட்ஸ் இல்லாம அங்கேருந்து போயிடணும். அத விட்டுட்டு…” நேரடியாக சொல்லி விட்டாள் ஸ்ரீ.

“ஜெய்க்கு இந்த கான்ட்ராக்ட் கிடைக்காம **** அந்த கன்ஸ்ட்ரக்ஷனுக்கு கிடைக்க நாம ஹெல்ப் பண்ணினோம்னா அங்கேயே நமக்கு வேலை கிடைக்கும் ஸ்ரீ, நல்ல பேக்கேஜோட” ஆசை காட்டி பேசினான்.

“ஸார்!” அதிர்ச்சி அடைந்தாள் ஸ்ரீ.

“நல்லா யோசிச்சு சொல்லு ஸ்ரீ” என அவன் கூற, உடனடியாக இவனை பற்றிய உண்மையை ஜெய்யிடம் சொல்வதற்காக விரைந்தாள் ஸ்ரீ.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜெய்யின் முன்பு இருந்தாள். சசியை பற்றி சொல்லி எச்சரிக்கை செய்தாள்.

அலட்டிக் கொள்ளாமல் சிரித்தவன், “இத்தனை வருஷ அனுபவத்துல நல்லவன் கெட்டவனை அடையாளம் தெரிஞ்சிக்க தெரியாமலா இருப்பேன். யாரையும் நம்புறது இல்ல நான், தப்பு செய்யாதவங்களே என் சந்தேக பார்வைலேருந்து தப்பிக்க முடியாது. அப்போ தப்பு செய்றவன்… ஹ்ம்ம்?” எனக் கேட்டான்.

அவள் புரியாமல் பார்த்தாள்.

“இப்ப என் கேரியர் அடுத்த கட்டத்தை நோக்கி போயிக்கிட்டு இருக்கு. யாரையும் நம்பி ரிஸ்க் எடுக்க தயாரா இல்லை. சந்தேகத்தோடயே உன்னை கூட வச்சுக்க முடியாதே. அதனால் நான் என்ன சொன்னேனோ அதைத்தான் சசி செஞ்சான்” என்றான் ஜெய்.

கண்களை இடுக்கிக் கொண்டு அவனை பார்த்தாள் ஸ்ரீ.

“வெல்… எனக்கு என் கம்பெனிக்கு நீ உண்மையாவும் நேர்மையாவும் இருக்கியான்னு தெரிஞ்சிக்க வேண்டியது இருந்தது. ஸோ ஒரு டெஸ்ட்…” என்றவன் தோள்களை குலுக்கி, “சசி உன்னை நம்பலாம்னு சொல்லிட்டான். நீ போலாம்” என்றான்.

ஸ்ரீக்கு மனம் விட்டுப் போனது.

‘உங்களிடம் வேலை பார்க்க வேண்டுமென்றால் தன்மானம் என்ற ஒன்று இருக்கவே கூடாது, மாறாக அது என்னிடம் தேவையான அளவில் இருப்பதால் உங்களிடம் வேலை பார்க்கும் தகுதியை இழந்து விட்டேன். ஆகவே வேலையிலிருந்து விடு பட்டுக் கொள்கிறேன்’ என ஆங்கிலத்தில் அவனுக்கு மெயில் அனுப்பியவள், அவனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் அலுவலகத்திலிருந்து வெளியேறி விட்டாள்.

இனி யார் மன்றாடி கேட்டாலும் சரி, இவனிடம் வேலை செய்யா விட்டால் பூமி இரண்டாக பிளந்து போகும் என்ற நிலை வந்தாலும் சரி இவனிடம் வரவே கூடாது என்ற வைராக்கியத்தை வரித்துக் கொண்டு வீடு நோக்கி சென்றாள் தன்யஸ்ரீ.