புதிய உதயம் -7

அத்தியாயம் -7(1)

இப்போதெல்லாம் ஜெய்யிடம்தான் ரிப்போர்ட் செய்கிறாள் தன்யஸ்ரீ. அவளது பெயரை திரையில் கண்டாலே எரிச்சலோடுதான் அழைப்பை ஏற்பான்.

வேலையில் சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவையெல்லாம் அனுபவம் போதாமல் நடப்பவை, திட்டிக் கொண்டேதான் திருத்தங்கள் சொல்லித் தருவான்.

அந்த நேரமெல்லாம் எதிர்த்து எதுவும் பேசாமல் பொறுமையாகவே கேட்டுக் கொள்வாள். அதை மீறி வேறு ஏதாவது அவன் பேச ஆரம்பித்தால் விலுக் என நிமிர்ந்து பார்ப்பவளின் பார்வையில்அடங்கிப் போனான்.

 அவன் சொல்பவற்றை உடனுக்குடன் சரி செய்து விடுவாள். அந்த தவறு அடுத்து நிகழாமல் அத்தனை கவனமாகவும் இருந்தாள்.

அவளிடம் ஒப்படைக்க படும் வேலையை அத்தனை சிரத்தை எடுத்து நேர்த்தியாக செய்து முடிக்கிறாள். வாய் திறந்து பாராட்டத்தான் இவனுக்கு மனமிருக்காது.

ஸ்ரீ அவளுடைய வயதுக்கு மீறிய திறமைசாலிதான் என்பதை ஜெய் அவனுள் ஏற்றுக்கொண்டு விட்டான். ஆனால் ஒரு வார்த்தை நல்லதாக சொல்லி அவளை ஊக்கப் படுத்தியதில்லை.

அவளிடம் சிரித்து பழகாமல் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனத்தோடே இருந்தான்.

அன்று மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் நுழைந்த ஜெய் கண்டது வெள்ளி நிறத்தில் புடவை அணிந்து, நீளமான சடையை பின்னல் போட்டுக் கொண்டு அளவான பூ சூடிக் கொண்டு வந்திருந்த ஸ்ரீயைத்தான். வெளி வேலைகள் இல்லாததால் காலையில் கிளம்பி வந்த தோற்றம் அதிகம் கலையாமல் பளிச் என்றே இருந்தாள்.

ஏற்கனவே அழகிதான், இன்று மெருகு கூடித் தெரிந்தாள். அவனுக்கு மூச்சடைத்த நிலையானது.

 கண்ணுக்கு தெரியாத பசை போட்டு தரையிலேயே ஒட்டிக் கொண்டன அவளை கடந்து செல்ல விரும்பாத அவனது கால்கள். பார்வையோ அவளிடம் நிலை பெற்றிருந்தது. வினாடி நேரத்தில் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து உள்ளே வியாபித்து விட்ட பயத்தில் ஓடாத குறையாக அறைக்கு சென்று விட்டான்.

இருக்கையில் அமர்ந்தவன் பளீர் என தன் கன்னத்திலேயே அறை ஒன்றும் வைத்துக்கொண்டான். தண்ணீர் குடித்து அலைபாயும் தன் மனதை ஒரு நிலைப் படுத்த முயன்றான். அவளை ரசித்தவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை.

அன்று தன்யஸ்ரீயின் பிறந்தநாள், புடவையெல்லாம் அணிய முடியாது என்ற ஸ்ரீயின் பிடிவாதத்தை, தான் ஆசையாக வாங்கியது அணிந்துதான் ஆக வேண்டும் என்ற மஹதியின் வேண்டுகோள் முறியடித்திருக்க இப்படி வந்திருந்தாள்.

எப்படி… எப்படி இது நடந்தது? எப்படி அவளை போய் நான் பார்க்கலாம் தன்னையே நொந்து கண்களை இறுக மூடியவனின் விழிகளுக்குள்ளும் அவளின் பிம்பம் வந்து நின்றது.

உடனடியாக இமைகளை திறந்தவன் அடுத்து கண்களை அடைக்கவே பயந்து போனான்.

ஏதோ விஷயமாக அவனது அறைக்குள் வந்தவளை என்ன ஏதென்று எதுவும் கேட்காமல், “எதுவா இருந்தாலும் அப்புறம் வா” என எரிந்து விழுந்தான்.

“இல்ல ஸார், சைட்ல ஆக்ஸிடென்ட் ஸார், லேபர் ரெண்டு பேருக்கு அடி பட்ருக்காம், நீங்க கால் அட்டெண்ட் பண்ணலைன்னு எனக்கு கூப்பிட்டு சொன்னார் சசி ஸார்” என்றாள்.

சசி அழைத்தான்தான், இவன்தான் இருந்த மன நிலையில் அழைப்பை ஏற்றிருக்கவில்லை.

“நீ போ நான் பேசிக்கிறேன்” அவளை துரத்துவதிலேயே குறியாக இருந்தான்.

‘சிடு மூஞ்சு சிடு மூஞ்சு!’ மனதுக்குள் அர்ச்சித்தவாறே வெளியேறினாள் ஸ்ரீ.

கூலியாட்கள் சுமையோடு படி ஏறுகையில் ஒருவன் இடறி படிகளில் உருள, பின்னால் வந்தவனும் விழுந்து விட்டான்.

மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என விவரம் தந்தான் சசி.

உடனடியாக ஜெய்யும் புறப்பட்டு விட்டான். ஒருவனுக்கு கையில் மாவுக் கட்டு போட்டனர், இன்னொருவனுக்கு தலையில் அடி, நல்ல இரத்த இழப்பு, அறுவை சிகிச்சை செய்தனர். இரத்தம் தேவைப்பட்டது.

அரிய வகை இரத்தப் பிரிவு என்பதால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

வழக்கமான டோனர் ஒருவர் கிடைத்து விட்டார். சில மணி நேரங்களில் இன்னொரு யூனிட் கொடுக்க வேண்டும் என்றனர்.

ஜெய்யும் சசியும் மருத்துவமனையில்தான் இருந்தனர். டோனர் ஏற்பாடு செய்ய மும்முரமாக முயன்று கொண்டிருந்தனர்.

முன் தினம் வெளியூர் சென்று வந்திருந்த சசிக்கு அவனை மீறி உறக்கமாக வந்தது. எப்படி அங்கு கிடந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்தான், எப்போது உறங்கினான் ஏதும் தெரியவில்லை.

நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம். ஜெய்யின் கைப்பேசிக்கு ஸ்ரீயிடமிருந்து அழைப்பு வந்தது. காரணமே இல்லாமல் எழுந்த எரிச்சலில் அழைப்பை துண்டித்தான். விடாமல் மீண்டும் அழைத்தாள்.

மூன்றாவது முறையில் அழைப்பை ஏற்றவன், “இந்த நேரம் எதுக்கு கால் பண்ற? மனுஷன் எந்த நிலைல இருக்கான்னு தெரியாம நொய் நொய்யுன்னு… என்ன… எதுவா இருந்தாலும் காலைல சொல்றதுக்கென்ன?” என கத்தினான்.

அவன் போட்ட சத்தத்தில் விழித்துக் கொண்ட சசி சுற்றம் பார்த்துக் கொண்டே ஜெய்யின் அருகில் ஓடி வந்து நின்றான்.

அடி பட்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டு சசிக்கு முன்னரே செய்தி அனுப்பியிருந்தாள் ஸ்ரீ. அவன் கவனிக்கவே இல்லை, இப்போது சற்று நேரத்துக்கு முன்னர்தான் இரத்தம் தேவை படுவதை செய்தியாக அனுப்பியிருந்தான். பின் உறங்கி விட்டான். கைப்பேசியும் எப்படியோ சைலன்ட் பயன்பாட்டிற்கு சென்று விட்டது.

அடிபட்டிருந்த ஆட்களை ஸ்ரீக்கு தெரியும், என்னவானதோ என அவளுக்கு உறக்கமே வரவில்லை. சசியின் செய்தி பார்த்து விட்டு அவனை தொடர்பு கொள்ள முயற்சிக்க அவன் அழைப்பை ஏற்றால்தானே? ஆகவேதான் ஜெய்யுக்கு அழைத்தாள்.

தேவைப்படும் இரத்த பிரிவுதான் இவளுடையதும், அதை சொல்லத்தான் இந்த தொடர் அழைப்புகள்.

அவள் விஷயத்தை பகிரவும் அத்தனை நேர பதற்றம் குறைந்தவனாக, “உடனே கிளம்பி வா” என்றான்.

“ஸார் இந்த நேரம் எப்படி நான் வருவேன்? வழில சரியில்லாத ஏரியாலாம் இருக்கு, டிரான்ஸ்போர்ட் அரேஞ் பண்ணி தாங்க ஸார்” என்றாள்.

“உன் வீட்டு அட்ரஸ் அனுப்பி விடு” என்றவன், அவளது அழைப்பை ஏற்காத சசியை சுருக்கமாக என்றாலும் சூடு பறக்க திட்டினான்.

“தெரியாம தூங்கிட்டேன் ஸார், நான் உடனே போய் ஸ்ரீயை அழைச்சிட்டு வர்றேன்” என்றான் சசி.

சிவந்து போயிருந்த கண்களோடு இருந்த சசியை அனுப்ப ஜெய்க்கு பயமாக இருந்தது. அடி பட்ட ஆட்களின் உறவினர்கள், இன்னும் சில வேலையாட்கள் இருந்தாலும் இந்த நேரத்தில் ஒரு பெண்ணை அழைத்து வர அவர்களை நம்பி அனுப்பவும் யோசனையாக இருந்தது.

அதிக அவகாசம் இல்லாத காரணத்தால் அவனே கிளம்பினான்.

“நான் போறேன் ஸார், உங்களுக்கு ஏன் சிரமம்?” என்றான் சசி.

“வர்ற வழில நீயும் ரோட்ல விழுந்து வச்சு என்னை இன்னும் டென்ஷன் பண்றேன்னு சொல்றியா? ஒரு நாள் நைட் ஒழுங்கா கண்ணு முழிக்க முடியலை, உன்னையெல்லாம்… வந்து வச்சிக்கிறேன்” என்றவன் சென்று விட்டான்.

ஜெய் அவனுடையை இரு சக்கர வாகனத்தில்தான் இங்கு வந்திருந்தான். ஆகவே அதிலேயே ஸ்ரீயின் வீட்டுக்கு சென்றான்.

வீட்டுக்கு வெளியில் தயாராகி நின்றிருந்தாள் ஸ்ரீ, உடன் அவளது அம்மாவும். ஆள் அடையாளம் தெரியாமல் உழைப்பும் உடல் நலக் கேடும் அவரை உரு மாற்றியிருந்தன. வயது முதிர்ந்து காணப் பட்டார்.

மரியாதைக்காக கூட அவரிடம் ஒரு வார்த்தை பேசாமல் பைக்கின் இஞ்சினை அணைக்காமல் இருந்தான். அவன் தலைக்கவசம் அணிந்திருந்ததால் யாரென ஜோதிக்கு அடையாளம் தெரியவில்லை. ஸ்ரீயும் யாரென அம்மாவுக்கு சொல்லவில்லை.

அம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு பைக்கில் அமர்ந்து கொண்டாள் ஸ்ரீ. முதல் பத்து நிமிட பயணத்தில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை.

வேகத்தடையை கூட மதிக்காமல் பைக் சாலையில் பறந்து கொண்டிருக்க, அவள் பொறுமையிழந்து விட்டாள்.

“ஸார்… கொஞ்சம் பார்த்து போங்க ஸார்” என்றாள்.

“உன்னை ஒட்டி ஒரசனும்னு எவனுக்கும் ஆசை இல்லை. அர்ஜன்ஸி புரியாம பழங்காலத்து ஆயா மாதிரி பேசாத”

‘இவனுக்கு சாதாரணமாக பேசவே தெரியாதா?’ என நொந்து கொண்டவள், “நான் அதுக்காக சொல்லலை ஸார், விபத்து பகுதி கவனமா இருங்கன்னு போர்டே இருக்கு இங்க, இருட்டுல அடி பட்டு விழுந்தா காலைலதான் யாருக்கும் தெரியவே வரும். வேகத்திலேயும் நிதானம் இருக்கணும் ஸார்” என்றாள்.

“ஹாஸ்பிடல் போற வரைக்கும் வாய மூடிட்டு வா” என்றானே தவிர வேகத்தை குறைத்திருக்கவில்லை.

மருத்துவமனை வாசலை அவர்கள் அடைந்த போது அவளின் கை, கால்கள் குளிராலும் அவனது வேகம் தந்த பயத்தாலும் சில்லிட்டு போயிருந்தன.

அவன் மீதுள்ள கடுப்பில் அவன் பைக் நிறுத்தி விட்டு வரும் வரை கூட காத்திராமல் உள்ளே வரவேற்பு பகுதிக்கு சென்று விசாரித்து கொண்டிருந்தாள்.

முறைத்துக் கொண்டே அங்கே வந்து சேர்ந்தவன் எங்கு செல்ல வேண்டும் என கூறவும், அவன் பக்கம் திரும்பமலே இரத்த தானம் செய்ய சென்று விட்டாள் அவள்.

சசிதான், “பர்த்டே அதுவுமா நல்ல விஷயம் பண்றாங்க ஸ்ரீ” என ஜெய்யிடம் சொன்னான். இன்று போயா அவளை திட்டினேன் என உள்ளே துணுக்குற்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவன்.

சிறு வயதில் அவளின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதும் உற்சாகமும் துள்ளலுமாக அவள் வளைய வந்ததும் நினைவிலாடியது. அதே விழாவில் சிறப்பான பரிசு பொருளோடு நின்றிருந்த அவனுடைய அப்பாவும் பற்களை காட்டிக் கொண்டு நின்றிருந்த ஸ்ரீயின் அப்பாவும் சேர்ந்து நினைவுக்கு வர, இளக ஆரம்பித்த மனம் இறுகிப் போய் விட்டது.

இரத்தம் கொடுத்து விட்டு சோர்வும் தூக்க கலக்கமுமாக வந்தாள் ஸ்ரீ. அடிப்பட்டவரின் வீட்டினரிடம் ஆறுதலாக பேசினாள். பின் புறப்பட தயார் என்பது போல அவன் முன் வந்து நின்றாள்.

அமர்ந்தவாறே கால்களை நீட்டிக் கொண்டு வாய் பிளந்த வண்ணம் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான் சசி.

ஜெய் எழுந்து நிற்க, “இந்த நேரம் ஆட்டோலாம் கிடைக்கும் ஸார், நானே போயிக்குவேன்” என்றாள்.

“அழைச்சிட்டு வந்தது நான்தானே, திரும்ப கொண்டாந்து விடுவேங்கிற நம்பிக்கையோடதான என் கூட வந்த? உன் அம்மாவும் அப்படி நினைச்சுதானே அனுப்பி வச்சிருப்பாங்க? நம்பிக்கை உடை படும் போது அதோட விளைவுகள் எப்படி இருக்கும்னு பக்கத்துல இருந்து பார்த்து தெரிஞ்சுகிட்டவன், வா…” என சொல்லி நடந்தான்.

ஊசி துளைத்தது போல அவளுக்கு மனவலி உண்டாகியிருக்க முகமெங்கும் இரத்தம் சுண்டி வெளுத்து போய் விட்டது.

செல்கின்ற வழியில் பைக் கண்ணடியில் தெரிந்த அவளது பசையிழந்த முகம் அவனை பாதிக்கவே செய்தது. அவளாக முன் வந்து செய்த உதவி, இல்லையென்றால் இவன்தான் திண்டாடியிருக்க வேண்டும். எதற்காக அவளது அப்பாவோடு ஒப்பீடு செய்து அவளை காயப்படுத்தி கொண்டே இருக்கிறாய் என அவனது மனசாட்சி கண்டித்தது.

அவளின் வீடு வந்து விட்டது. இறங்கிக் கொண்டவள் எதுவும் பேசாமல் வீடு நோக்கி நடந்தாள்.