அத்தியாயம் -6(2)

ஸ்ரீயின் மீதுள்ள வன்மத்தில் வேண்டுமென்றே எதுவும் தலையிடாமல் பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பை அவளின் தோளில் சுமத்தி விட்டு கைகளை கட்டிக் கொண்டு நின்றான் ஜெய்.

காலையில் போடப் பட்டிருந்த படிகளின் இடையில் சிறிய அளவில் சாய்தளம் அமைக்க சொன்னாள். வேறொரு சைட் சென்றிருந்த எலக்ட்ரிஷின்களை உடனடியாக வரவழைத்து திட்டினாள்.

“நான் என்ன மேடம் பண்றது? என்ன செய்யணும்னு இவன் சொன்னானோ அதைத்தான் செஞ்சேன்” வேறொரு வேலையாளை காட்டி சொன்னான் தலைமை எலக்ட்ரிஷியன்.

“உங்களுக்கு அவர்தான் ஹெட்டா? இந்த வேலை நாளைக்கு நடக்கிறதா தானே இருந்தது? யார் உங்களை இன்னிக்கே வர சொன்னது?” எனக் கேட்டாள்.

“அந்த சைட்ல வேலை இழுக்குது, அதான் சசி ஸார் இங்க வந்து வேலைய முடிக்க சொன்னாரு” என்றான் அவன்.

“அப்ப எனக்கு ஏன் இன்ஃபார்ம் பண்ணல?” எனக் கேட்டாள்.

“சசி ஸார் சொன்னதுக்குப்புறம் உங்ககிட்ட என்ன கேட்கிறதுன்னு…” என இழுத்தவன் ஜெய்க்கு பயந்து அவன் பக்கம் மட்டும் திரும்பவே இல்லை.

மோட்டார் சுவிட்ச் போர்டை மாற்றம் செய்வது பெரிய காரியமில்லை, நேரமும் வயரும் விரயம் ஆகும். பரவாயில்லை என உடனடியாக மாற்ற பணித்தாள்.

செப்டிக் டேங்க்கை பார்வையிட்டு வந்தவள் தரைப் பகுதியில் பூச்சை உடைக்கவும் உடனடியாக ஏற்பாடு செய்தாள். நல்ல வேளையாக இப்போதே தெரிந்து விட்டது, வீட்டில் ஆட்கள் வந்த பின் சில காலம் கழித்து தெரிய வந்திருந்தால் இன்னும் சிக்கலாகியிருக்கும்.

இதையெல்லாம் ஜெய்தான் கண்டுபிடித்தது. வேலையாட்களை சத்தம் போட்டு கொண்டிருக்கையில் ஓனரும் வந்துவிட்டார். அவர் வந்ததை பார்க்காமல் இவன் இவர்களை திட்டிக் கொண்டிருக்க அவருக்கும் விஷயம் தெரிந்து விட்டது.

சரி செய்து தருகிறேன் என அவன் சொன்னதை காதில் வாங்காமல் சண்டை போட ஆரம்பித்து விட்டார் அவர். அந்த நேரம்தான் ஸ்ரீ அங்கு வந்திருந்தாள்.

ஸ்ரீ அனைத்தையும் சரி செய்வதை ஓனர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார், ஆனாலும் நடந்தது தவறுதானே, அந்த அதிருப்தியில் இருந்தார். ஸ்ரீ அவரிடம் போய் சமாதானமாக பேசினாள். தேநீர் வரவழைத்து பருக வைத்தாள்.

என்னதான் பேசினாளோ சற்று நேரத்தில் கடு கடு என இருந்தவரின் முகம் இயல்பாகி விட்டது. சில நிமிடங்களில் புன்னகைக்கவும் செய்தார்.

சசிக்கு கைப்பேசியில் டோஸ் கொடுத்துக் கொண்டிருந்த ஜெய்யின் பார்வை இங்குதான் இருந்தது. சசி போல பதற்றமோ அவனை போல அதீத கோவமோ இல்லாமல் பிரச்சனையை இலகுவாக கையாளும் அவளின் திறனை கண் கூடாக பார்க்கிறான்தான், ஆனாலும் அவளின் திறமையை முழு மனதாக ஏற்றுக்கொள்ள முரண்டுகிறது உள்ளம்.

ஜெய்யிடம் வந்த ஓனர், “தப்பா எடுத்துக்காதீங்க ஸார், யாரா இருந்தாலும் டென்ஷன் ஆவாங்கதானே, அதான் கோவ பட்டுட்டேன். ஸாரி” என்றார்.

“எங்க தப்புதான் ஸார், நாங்கதான் ஸாரி சொல்லணும்” என்றான் ஜெய்.

“வேலைன்னா கூட குறைச்ச நடக்கிறதுதானே, என் கோவத்துல ஸ்ரீ பாப்பா ரொம்ப ஃபீல் பண்ணி பேசிடுச்சு, ஸாரி ஸார்” மீண்டும் மன்னிப்பு கேட்டார்.

‘எது ஸ்ரீ பாப்…பா…வா!’ என விழி விரித்தவன் அவனை மீறி ஸ்ரீயின் பக்கம் பார்த்தான்.

இவர்களின் சண்டை சுமூகமாகி விட வேண்டுமே என்ற தவிப்போடு பார்த்திருந்தவள் அவனை ஈர்த்தாள், எல்லாம் நொடிக்கும் குறைவான நேரம்தான். ‘பீப்பா பாப்பான்னுட்டு!’ மனதில் எரிச்சல் கொண்டான். அவன் தன்னை காணவுமே அட்டென்ஷன் நிலைக்கு வந்திருந்தாள் ஸ்ரீ.

ஓனர் கிளம்பியதும் ஜெய்யிடம் வந்தவள், தன் நிலையை விளக்கினாள்.

காலையில் நடந்த தவறை ஏற்றுக்கொண்டவன், “எவ்ளோ நாளா வர்ற இங்க? செப்டிக் டேங்க் கவனிக்காம போனது தப்புதானே? தினம் இங்க வந்து சூடா டீயும் போண்டாவும் சாப்பிட்டு காத்து வாங்கிட்டு போறியா?” எனக் கேட்டான்.

வேலையாட்களின் பார்வை இவர்களிடம் இல்லையே தவிர, அவர்களின் காதில் கண்டிப்பாக விழுந்திருக்கும். அந்த அவமானத்தில் கன்றி சிவந்தது அவளின் முகம், கண்களும் கலங்கிப் போயின.

“அவ்ளோ திட்டு திட்டுறேன் சசிய, வாங்கிக்கிறான். பொண்ணுங்கன்னா அழுகைய ஆயுதமா யூஸ் பண்ணிடுவீங்களே!” என ஏளனமாக சொன்னான்.

“செப்டிக் டேங்க் கவனிக்காதது என் தப்புதான், ஸாரி ஸார்” குரல் உடைந்து விடாமல் சொன்னாள்.

“சில ஆயிரம்தான் எனக்கு லாஸ்னாலும் லாஸ் லாஸ்தானே? இன்னும் பத்து பதினைஞ்சு ஸாரி சொல்லு, போன பணம் திரும்ப வருதா பார்க்கிறேன்” என்றான்.

உதடுகளை இறுக்கிக் கொண்டு பார்வையை தாழ்த்திக் கொண்டு நின்றாள் ஸ்ரீ.

“அதுசரி, அடுத்தவன் காசுன்னா வெல்லக்கட்டிதானே உன் குடும்பத்துக்கு. உங்கிட்ட போய் இந்த நியாயம்லாம் சொல்லக்கூடாதுதான்” என்றான்.

அதுவரை அமைதியாக நின்றிருந்தவள், “லிமிட் தாண்டுறீங்க ஸார் நீங்க” என தைரியமான குரலில் சொன்னாள்.

“இல்லாதது சொன்னேனா நான்? உண்மையை சொன்னா பத்திகிட்டு வருதா? அப்ப அனுபவிச்சவனுக்கு எப்படி இருக்கும்?” ஜெய் நிதானம் இழந்து கொண்டிருந்தான்.

சுற்றிலும் பார்த்தவள் சின்ன குரலில், “அவர் செஞ்சதுக்கு நான் என்ன செய்வேன்? நாங்களும் பாதிக்க பட்டிருக்கோம்தானே, அது புரியலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“அந்தாளு இன்ஷியல்தானே போட்ருக்க, உன் செர்டிஃபிகேட்ஸ்ல அப்பன் பேருங்கிற இடத்துல அந்த நாதாரியோட பேரைதான போட்ருக்க?” ஜெய்யின் குரல் சத்தமாகவே ஒலித்தது.

வேலையாட்கள் ‘என்னடா இது?’ என்பது போல பார்த்தனர்.

“ஆமாம் போட்டுத்தான் இருக்கேன், ஒரு வேளை என் இடத்துல நீங்க இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?” என அவளும் சத்தமாக கேட்டாள்.

“ஹ்ம்ம்… குடும்பத்தோட நாண்டுக்கிட்டு செத்திருப்போம்” என அவன் சொல்ல கன்னம் தொட்டு விட்டது அவளின் கண்ணீர்.

ஜெய் கோவ மூச்சுகளோடும் ஆத்திரம் கக்கும் விழிகளோடும் அவளை பார்த்திருந்தான்.

“நாங்க தப்பு செய்யலைன்னு எங்க மனசாட்சிக்கு தெரியும், எங்க சாவால நீங்க இழந்ததை திருப்பி கொண்டு வர முடிஞ்சிருக்கும்னா கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருப்போம். ஆனா அப்படி கொண்டு வர முடியாதுல்ல? அதான் அதான்…” என்றவளுக்கு உணர்ச்சி மிகுதியில் பேச்சு வரவில்லை.

“திரும்ப டிராமா ஸ்டார்ட் ஆகிடுச்சு” சிடு சிடுத்தான்.

பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டை எடுத்து கண்களை ஒற்றி எடுத்தவள், குரலை செருமிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இனியும் உங்ககிட்ட வேலை செய்றது சரியா வரும்னு தோணலை. வர்றேன்” என சொல்லி திரும்பினாள்.

அவனாக வேலையை விட்டு அனுப்பினால் அது வேறு. அவளாக செல்வதை அவனது அகந்தை ஏற்க மறுத்தது.

இப்போது அவளை காயப்படுத்தியது வேறு அவனது பல நாள் பழி உணர்ச்சிக்கு தீனி போட்டிருக்க, அதனை தொடர அவள் இங்கு இருந்தாக வேண்டுமே. சொடக்கிட்டு அவளை அழைத்தான்.

அவள் அவன் பக்கமாக திரும்ப, “நீ நினைச்ச உடனே சேரவும் நினைச்ச உடனே கழண்டுகிட்டு ஓடவும் உன் முப்பாட்டன் கம்பெனில வேலை செய்யல நீ. வேலைக்கு சேர்ந்து அட்லீஸ்ட் ஒரு வருஷம் இங்கதான் வேலை பார்த்தாகனும். நீ போகணும்னா ஒண்ணு நானா வெளில அனுப்பனும் இல்லைனா…” என்றவன் குறிப்பிட்ட தொகையை சொல்லி அதை செலுத்தி விட்டுத்தான் போக வேண்டும் என்றான்.

வேலைக்கு சேரும் போது அப்படியொரு ஷரத்தை படித்ததாக அவளுக்கும் நினைவு வந்தது. ஆனாலும் அதிர்ந்து போகாமல், “ஜம்புலிங்கம் ஸார்கிட்ட போய் சொல்வேன்” என்றாள்.

ஜெய்யிடம் அதிர்வு உண்டானாலும் காட்டிக் கொள்ளவில்லை. திமிர் பிடித்தவள் என மனதிற்குள் வசை பாடினான்.

ஜம்புலிங்கத்திடம் போய் இவள் நின்றால் இவனுக்குத்தான் தலைகுனிவு.

“வேலைல தப்பு நடந்தா திட்டதான் செய்வாங்க, விட்டுட்டு போறேன்னு சொன்னா கடுப்பாகாதா? உன் பிராப்லத்தை ஃபேஸ் பண்ணனும், அதை விட்டுட்டு ஷார்ட் கட்ல போய் எஸ்கேப் ஆக கூடாது” என்றான்.

அவளிடம் தணிந்து போகவும் முடியாமல் எகிறவும் முடியாமல் இடைப்பட்ட நிலையில் தடுமாற்றமாகத்தான் பேசினான்.

“வேலைல தப்புன்னா அதை மட்டும்தான் பேசணும். பெர்சனல் அட்டாக் பண்ணினா பொறுத்துக்கிட்டு போக தண்டுவடம் இல்லாதவ இல்லை நான்” என்றவளிடம் கொஞ்சமும் பயமோ தடுமாற்றமோ இல்லை.

இவள் இங்கிருந்து செல்வதும் இவன் பேசியதும் ஜம்புலிங்கத்தின் காதுக்கு சென்றால் அவர் முகத்தில் எப்படி விழிப்பது என கற்பனை செய்து பார்த்தான். அந்த காட்சி அவனை மருக செய்ய, “இனியாவது வேலைய ஒழுங்கா கவனி, இனிமே சசிகிட்ட இல்லை என்கிட்டேயே ரிப்போர்ட் பண்ணு” என சொல்லி அங்கிருந்து நழுவப் பார்த்தான்.

“நான் இங்க வேலையை கன்டினியூ செய்றேன்னு உங்ககிட்ட சொல்லவே இல்லையே” என்றாள்.

இப்போது ஜெய் சுற்றியுள்ள வேலையாட்களை சங்கடமாக பார்த்தான்.

கன்னத்தை தடவி கால்களை தரையிலிருந்து எடுத்து வைத்து தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், “ஜம்பு ஸார் சொல்லித்தான் உன்னை வேலைக்கு எடுத்தேன். இடைல நீ போனா நம்ம ரெண்டு பேருமே அவருக்கு ஆன்சர் பண்ணனும். வீம்பு பிடிக்காம வேலைய பாரு” என்றான்.

“இனிமே பர்சனல் அட்டாக் பண்ண மாட்டேன்னு உத்தரவாதம் தாங்க, இருக்கேன்” என நிபந்தனை விதித்தாள்.

கண்களை இறுக மூடித் திறந்தவன் சரி என்பதாக தலையாட்டினான். முகமோ சுட்ட களி மண் போல இறுகிக் கிடந்தது.

அவளும் இங்கே இருக்கிறேன் என்பதை வாய் மொழியாக அல்லாமல் தலையசைத்தே சொன்னாள்.

டன் டன் ஆக வெறுப்பை பார்வையாலேயே அவளை நோக்கி உமிழ்ந்தவன் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

தவறிழைத்தால் தங்களை ஒரு கை பார்க்கும் ஜெய்யின் முன்பு பயந்து போகாமல் அவனையே இறங்கி வர செய்தவளை அங்கிருந்தவர்கள் மிரட்சியோடு பார்த்தனர்.

எலக்ட்ரிஷியன் அவளிடம் வந்து, “உங்ககிட்ட கேட்காம வேலை செஞ்சது தப்புதான், ஸாரி மேடம். இனிமே இப்படி நடக்காது மேடம்” என பணிவாக சொல்லி விட்டே வேலையை தொடர்ந்தான்.

சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த சசி தன் கவனமின்மையால் அவளுக்கு சிரமமாகி விட்டது என வருத்தப் பட்டான்.

“நீங்களும் இனிமே என் பொறுப்புள்ள இடத்துல ஏதாவதுன்னா எனக்கு ஒரு வார்த்தை சொல்லிடுங்க, ப்ளீஸ் ஸார்” என்றாள்.

தலையாட்டிக் கொண்ட சசி, “என்ன அந்தாளு ரொம்ப டோஸ் விட்டானா? பயந்து போயிட்டியா?” எனக் கேட்டான்.

சசியின் மரியாதையற்ற பேச்சில் திகைத்தவள் இல்லை என தலையாட்டினாள்.

“அவனுக்கு பெரிய மேதைன்னு நினைப்பு, டேக் இட் ஈஸி” என்றவன் அடுத்து அசடு வழிய பேசத் தொடங்கினான்.

அவனை தவிர்த்து விட்டு வேலையாட்களை நெருங்கி வந்து நின்று அவர்களிடம் ஏதோ கேட்டு அப்படியே தள்ளி சென்று விட்டாள் ஸ்ரீ.

சசியை வர சொல்லி ஜெய்யிடமிருந்து அழைப்பு வர, அவன் அங்கிருந்து சென்று விட்டான்.

சசியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென மனதில் குறித்துக் கொண்டாள் ஸ்ரீ.