புதிய உதயம் -6
அத்தியாயம் -6(1)
தன் வேலைப் பளுவை குறைக்கதான் சில பொறியாளர்களை பணிக்கு வைத்திருக்கிறான் என்ற போதும் அவர்களையே முழுமையாக நம்பி விட மாட்டான். முன் அறிவிப்பு இல்லாமல் அவர்கள் இருக்கும் சைட்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் செல்வான்.
பெரிய ஒப்பந்தம் பிடிப்பதில் மெனெக்கெட்டு கொண்டிருப்பதாலும் அவனுடைய சொந்த வீடு கட்டும் பணியினாலும் கடந்த மாதம் முழுக்க அவனது நேரடி மேற்பார்வையில் இருக்கும் சைட்கள் தவிர மற்றவர்களின் சைட்கள் எங்கேயும் சென்றிருக்கவில்லை அவன்.
இன்று சென்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு இவன் கிளம்பிக் கொண்டிருக்க, பெரிய மாமாவும் அவரது மனைவியும் மகளின் திருமணத்துக்கு பத்திரிக்கை வைக்கவென வந்து விட்டனர்.
அப்படியே ஜெய்க்கு பொருத்தமான ஜாதகங்கள் மற்றும் அந்த பெண்களின் புகைப்படங்களையும் எடுத்து வந்திருந்தார்.
ஆலோசித்து விட்டு சொல்கிறோம் என்றார் பாட்டி.
“என்னமோ நாங்கல்லாம் கெட்டவங்க மாதிரியே நிச்சயம் அன்னிக்கு பேசிட்டு போயிட்டான் ஜனா பய. நீங்க கூட ஜெய் கல்யாண விஷயத்துல எதுவும் முன்னெடுத்திருக்க மாட்டீங்க, அக்கறை இருக்க போயிதான் எங்க பொண்ணு கல்யாண வேலைல கூட ஜெய்க்காக யோசிக்கிறோம்” என்றார் மாமி.
‘திருமண சீரவரிசை சாமான்கள் எனது பொறுப்பு என ஜெய் ஒத்துக் கொண்டிருக்கிறான், இப்போது உறவு சுமூகமாக இல்லாமல் போனால் எங்கே செய்ய மாட்டானோ என்ற பயத்தில்தான் இந்த அக்கறை’ என பதில் தரப் போன ஜனாவை பார்வையால் அடக்கி வைத்தான் ஜெய்.
பாட்டியும் பகைமை பாராட்டாமல் நல்ல விதமாகவே பேசிக் கொண்டிருந்தார். வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என விரைவாகவே கிளம்பி விட்டனர்.
சுரேகா பற்றிய பேச்சு எழுந்தது. ஜெய் ஆசை பட்டது நடக்க வில்லையே என புலம்பினார்கள் பாட்டியும் துளசியும்.
கோவம் கொண்ட ஜெய், “சும்மா இருங்களேன். இப்படித்தான் எப்பவோ நீங்க ரெண்டு பேரும் அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லாருக்கும்னு பேசிட்டு இருந்தீங்க. அது காதுல விழப் போய்தான் அவளை நிமிந்தே பார்த்தேன். நாங்க ஒழுங்கா பேசிகிட்டது கூட கிடையாது, சொல்லப் போனா பெருசா அவ கூட பழக்கமும் இல்ல. அவ ஃபோன் நம்பர் கூட என்கிட்ட கிடையாது. உலகத்துல அவ ஒருத்திதான் பொண்ணுங்கிற மாதிரி பேசிட்டு இருந்தீங்க, நடக்கிறதே வேற” என சத்தம் போட்டான்.
“சரி அவ பேச்சை விட்டுட்டோம். இந்தா இந்த பொண்ணுங்கள்ல யார புடிச்சிருக்குனு பார்த்து சொல்லு” என்ற பாட்டி வரன்களின் புகைப்படங்களை அவனிடம் நீட்டினார்.
“நானே அவசர வேலையா கிளம்பிட்டு இருக்கேன், இப்ப போய். அதான் நீயே பாருன்னு சொல்லிட்டேன்தானே அப்பயி?” எரிந்து விழுந்தான் ஜெய்.
“கட்டிக்க போறது நீயா நானாடா?” பாட்டியும் கோவப்பட்டார்.
“ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு? நீயே யாரையாவது பாரு. எல்லாருக்கும் சரின்னா எனக்கும் சரிதான். இப்ப எரிச்சல் பண்ணாம ஆள விடு” என்ற ஜெய் கிளம்பி விட்டான்.
“நீ சொல்றது கரெக்ட்தான்டா, இவன் சரியான எண்ணெய்ல விழுந்த தண்ணி” சின்ன பேரனிடம் குறை படித்தார் பாட்டி.
“நீ தேவையில்லாம பேசிட்டு அண்ணனை சொல்லாத. இப்ப கூட நீங்க மனசு வச்சா அவருக்கு சூப்பர் பொண்ணு அமையும்” என்றான் ஜனா.
“என்னடா என்ன சங்கதி?” பாட்டி ஆர்வமாக கேட்க, துளசியும் மகனைத்தான் பார்த்தார்.
“இவருக்கு ஸ்ரீ அக்கா மேல ஒரு இது இருக்கு” என்றான்.
பாட்டி நம்பாமல் பார்க்க, துளசிக்கு ஸ்ரீ யாரென்ற நினைவு வரவில்லை. யாரென பாட்டி சொல்லவும், “அதெல்லாம் இருக்காது. அப்படியே இருந்தாலும் அந்த பொண்ணு எப்படி சரியா வரும்?” என முகம் சுளித்தார் துளசி.
“இல்லைனு நீங்களா சொல்வீங்களா? அக்கா மேல ஒரு ஃபீலிங்ஸும் இல்லாமதான் வேலைக்கு வச்சிருக்காரா? அக்கா யார் கூடவும் பேசக்கூடாதுன்னு ரூல்ஸ் போடுறார், யாராவது அக்காவை நெருங்கி வந்தா கோவ படுறார். இப்பன்னு இல்ல, ரொம்ப முன்னாடியே… ஸ்ரீ அக்கா நம்ம எதிர்த்த வீட்ல இருந்தப்பவே அண்ணனுக்கு பிடிக்கும் போல. உங்களுக்கு பிடிக்காதுன்னுதான் அவாய்ட் பண்ணியிருக்கார்” என தான் நம்பியதை வீட்டுப் பெண்களிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
இவர்களை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும் கொஞ்சம் கூட்டி குறைத்து கதை வைத்தான் ஜனா. பாட்டி குழம்பிய மன நிலையில் இருக்க, துளசியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று விட்டார்.
முதல் முயற்சியிலேயே நினைத்தது நடக்குமா என்ன, போக போக அண்ணனுக்காக மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஜனாவும் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றான்.
கீழே கிளினிக் மேலே வீடு என மருத்துவர் ஒருவருக்காக கட்டிடம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்த இடத்துக்கு வந்தான் ஜெய். தரையில் கால் வைத்த உடனே அவனது பார்வை கலவைக்குத்தான் சென்றது. திருப்தி இல்லாமல் வேலையாட்களை சத்தம் போட்டவன் அங்குள்ள பொறியாளரை எங்கே என கேட்டான்.
வேலையாள் தயங்கி கொண்டே உள்ளே கை காட்டினான்.
சசியை தவிர இன்னொரு பொறியாளர் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார்கள். படித்து முடித்த அனுபவம் இல்லாத ஆனால் சொன்னால் புரிந்து கொள்வான் சற்று சூட்டிகையானவன் என அனுமானிப்பவனை வேலைக்கு எடுத்துக் கொள்வான். அவர்களும் பெரிய நகரங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைத்தால் சென்று விடுவார்கள்.
அதனால் குறைந்தது ஒரு வருடம் பணியில் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுத்தான் வேலைக்கு எடுப்பான். அவனுக்கு திருப்தி இல்லையென்றால் பணி நீக்கம் செய்து விடுவான்.
சசி ஒரு ஆள்தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவனிடம் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
அங்கு இருந்த பொறியாளன் பூச்சி வேலைகள் முடிந்திருந்த அறை ஒன்றில் நாற்காலியில் அமர்ந்து அவனது காதலியோடு பேசிக் கொண்டிருந்தான்.
ஜெய் சென்று இரண்டு நிமிடங்கள் கழிந்தும் அவனது வரவை உணரவே இல்லாமல் கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருந்தான்.
ஜெய் அவனது பெயரை சொல்லி அழைக்க, திரும்பி பார்த்தவன் பதறினாலும், “இப்போதான் வந்தேன் ஸார், என் பாட்டிக்கு உடம்பு முடியலை, ஊர்ல ஹாஸ்பிடல்ல இருக்காங்க ஸார், விசாரிச்சிட்டு இருந்தேன்” என சமாளித்தான்.
ஜெய் அவனை வாங்கு வாங்கு என வாங்க, பொறுமை இழந்தவன் பதிலுக்கு கோவப்பட்டான். வேலையை விட்டு போ என அனுப்பி வைத்து விட்டான் ஜெய்.
அங்குள்ள மேஸ்திரியை அழைத்து, “நீங்கல்லாம் எத்தனை வருஷமா என் கூட இருக்கீங்க, கலவை எப்படி போடுறான்னு பார்க்க மாட்டீங்களா?” என கோவமாக கேட்டான்.
“ஐயையோ ஸார், நீங்க இருந்தாலும் இல்லாட்டாலும் வேலைல கரெக்ட்டா இருக்கிறவன்தானே ஸார் நான். இன்னிக்கு வீட்டம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் முடியலை, ஆஸ்பத்திரி போயிட்டு வந்ததே லேட், திரும்ப முடியலைனு போன். பக்கத்து வீட்டு அக்காவுக்கு சொல்லி அவங்கள துணைக்கு வரவச்சேன். அந்த டென்ஷன்ல நான் இருக்க இங்க கொஞ்சம் கவனம் பிசகி போச்சு” என்றார் மேஸ்திரி.
ஒழுங்காக வேலை பாருங்கள் என கண்டிப்போடு சொல்லி விட்டு கிளம்பிய ஜெய்க்கு மனநிலை சரியில்லை.
வழியில் பைக் நின்று விட்டது. மெக்கானிக் கடை ஒரு கிலோ மீட்டர் தள்ளியிருக்க, தள்ளிக் கொண்டே போய் சரி செய்தவன் அடுத்த சைட்டுக்கு சென்றான்.
ஜோதிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய நாள் என்பதால் அரை நாள் விடுப்பு எடுத்திருந்தாள் தன்யஸ்ரீ. மருத்துவமனை வீட்டிலிருந்து தொலைவு என்பதால் ஜோதி சோர்ந்து விட்டார். அம்மாவை வீட்டில் விட்டு மதியம் தையல் கடைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி விட்டு ஸ்கூட்டரிலேயே வேலைக்கு கிளம்பினாள் ஸ்ரீ.
அவள் சைட் சென்றடைந்த போது ஜெய்யும் அங்குதான் இருந்தான். வீட்டு ஓனருக்கும் அவனுக்கும் ஏதோ வாக்குவாதம். ஒன்றும் புரியாமல் அவர்களிடம் சென்றவள் ஜெய்க்கு வணக்கம் வைத்தாள்.
சுள் என அவன் அவளை பார்க்க, வீட்டு ஓனர், “இந்தம்மாதானே இங்க பார்த்திட்டு இருந்தாங்க” என கடுப்பாக கேட்டார்.
“என்னாச்சு ஸார்?” என விசாரித்தாள் அவள்.
அந்த ஓனரின் மகன் வேறு மாநிலத்தில் உள்ளார். மகனின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் கொண்டு மூன்று தளங்கள் கொண்ட வீட்டை கட்டித் தர ஜெய்யிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே முக்கால்வாசி வேலைகள் முடிந்து விட்டன. அப்போதுதான் ஸ்ரீ வேலைக்கு சேர்ந்தாள், அப்போதிலிருந்து அவள்தான் இங்கு மேற்பார்வை செய்கிறாள்.
செப்டிக் டேங்க் நான்கு பகுதிகளிலும் சிமெண்ட் பூச்சி செய்து தரைப் பகுதியை அப்படியே விட வேண்டும். வேலையாட்கள் அங்கேயும் சிமெண்ட் போட்டிருந்தார்கள். இது ஸ்ரீ பணிக்கு வரும் முன்பே நடந்த தவறு.
வீடு கட்டப் பட்டதும் வாடகைக்கு விடத்தான் இருக்கிறார்கள். மோட்டார் போடும் ஸ்விட்ச் கீழ் வீட்டின் வராண்டாவில் வைத்து விட்டார்கள், கேட் மூடப் பட்டால் மேல் வீடுகளில் உள்ளவர்கள் அதை உபயோகிக்க முடியாது. கார் பார்க்கிங் பகுதி காரை ஏற்ற வசதியாக சாய்தளமாக இருந்தது.
இன்னொரு கேட் முன்பு படிகளை அமைத்து விட்டனர், அங்கும் சாய்தள அமைப்பு இருந்தால்தான் இரு சக்கர வாகனகங்கள் ஏற்ற முடியும். கார் பார்க்கிங் வெறுமனே இருந்தால் அங்கிருந்து பைக் போன்ற வாகனங்ளை மேலே ஏற்றலாம், ஒரு வேளை கார் உள்ளே இருந்தால் ஏற்ற முடியாது.
இந்த இரண்டு தவறுகளும் இன்று காலையில் நிகழ்ந்திருக்கின்றன. வயதான ஓனர் இடுப்பிலிருந்து இறங்கிய பேண்ட்டை ஏற்றி ஏற்றி விட்டுக் கொண்டு கோவமாக ஸ்ரீயிடம் சொன்னார்.
ஸ்ரீ ஜெய்யை பார்க்க, அவனோ இவளை குத்தவா வெட்டவா என பார்த்துக் கொண்டிருந்தான்.
காலையில் இவள் வந்திருந்தால் கண்டிப்பாக கவனித்திருப்பாள். இத்தனைக்கும் இங்குள்ள மேஸ்திரியிடமும் வேலையாள் ஒருவனிடமும் என்ன செய்ய வேண்டும் என விளக்கமாக சொல்லித்தான் இருந்தாள். அவர்கள் இருவருமே வேறு ஆட்களிடம் வேலை சொல்லி விட்டு சசி கூப்பிட்டான் என அவன் பார்த்துக் கொண்டிருக்கும் சைட் சென்று விட்டனர்.
செப்டிக் டேங்க் விஷயம் இவள் பணிக்கு சேரும் முன்பாக நடந்தது. வாடிக்கையாளர் முன்பு தன்னை நியாய படுத்திக் கொள்ள விழையாமல் ஜெய் என்ன சொல்கிறான் என அவன் முகத்தையே அடிக்கடி பார்த்தாள்.
“கேட்கிறார்ல பதில் சொல்லுங்க மேடம்” பற்களை கடித்துக் கொண்டு சொன்னான் ஜெய்.
கஷ்ட பட்டு சம்பாதித்த பணம், வங்கியில் இத்தனை சதவீத வட்டி, நம்பி ஏமாந்து போனேன் என ஏதேதோ புலம்பிக் கொண்டே தள்ளிப் போய் நின்று கொண்டார் உரிமையாளர்.
ஜெய்யிடம் இருந்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட வேலை செய்திருந்த ஆட்கள் அடுத்து வரப் போகும் கட்டளைக்காக காத்துக் கொண்டே நடப்பதை வேடிக்கை பார்த்திருந்தனர்.