அத்தியாயம் -5(3)
“அப்ப சின்ன பையன்ல்லக்கா நான்? பிசாத்து சாக்லேட்க்கு ஆசை பட்டு அவன் சொன்னதை செய்ய ஒத்துக்கிட்டேன். அதை இவர் பார்த்து கோவமா வாங்கிட்டு போயிட்டாரா, உங்ககிட்ட கொடுக்கலைன்னு என் முதுகுலேயே அடிச்சிட்டான் க்கா அவன்” என்றான்.
“எதையும் சரியா சொல்ல, செய்ய தெரியாதாடா உனக்கு?” சீறினான் ஜெய்.
“உன் தம்பி அந்த மனோகிட்ட அடி வாங்கிட்டானேங்கிற உன்னோட ஆதங்கம் எனக்கு புரியுது ண்ணா. நான் அப்படியே விட்டுட்டேன்னா நினைச்ச? நாலு நாள் கழிச்சு கிரவுண்ட்ல அவன் விளையாடிட்டு இருந்தப்போ சின்ன சின்ன கூழாங்கல்லா பொறுக்கி எடுத்து அவனை நோக்கி விட்டெறிஞ்சேன். நாலு கல்லு குறி தப்பினாலும், ஒண்ணு அவன் மண்டைல ஒண்ணு அவன் நெஞ்சுலன்னு சும்மா நச்சுன்னு விழுந்திடுச்சு. அப்பவே ரிவென்ஞ் எடுத்தாச்சு ண்ணா. நீ இப்ப போய் அவன்கிட்ட கலாட்டா செஞ்சிடாத. நீ இறங்கி போற அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை அவன்” நிலவரம் புரியாமல் ஜாலியாக பேசுவதாக நினைத்து நீளமாக ஜனா பேசியதில் ஜெய்க்கு மூச்சு வாங்கியது.
இன்னும் ஸ்ரீ ஒரு வார்த்தை பேசவில்லை, ஆனால் அவளது பார்வை ஜெய்யை சுட்டுக் கொண்டிருந்தது.
நினைவு வந்தவனாக, “ஹ்ஹான்… அன்னிக்கு ஓட்டல்ல எவனோடயோ இருந்தியே. நான் என் கண்ணாலேயே பார்த்தேன். அதுக்கும் போன வாரம் வேற எவனோடவோ இருந்ததா அங்க உள்ளவங்க பேசிகிட்டாங்க” என அவளை குற்றம் சொன்னான் ஜெய்.
ஸ்ரீ எதுவும் சொல்வதற்கு முன், “வாட் நான்சென்ஸ் ண்ணா?” என்றான் ஜனா.
ஜெய் வாய் திறக்கும் முன், “ஆமாம், யாரோடவோ நான் இருந்தேன். ஆயிரம் பேர் நம்மள சுத்தி இருந்தா தொள்ளாயிரம் பேர் பார்வை தப்பாதான் இருக்கும். ஒவ்வொருத்தர்கிட்டேயும் போய் நான் என்னை நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை” என்றாள் ஸ்ரீ.
“கூல் அக்கா, ஓட்டல்ல என்னக்கா நடந்தது, யாரும் பிரச்சனை பண்றாங்களாக்கா, யாருக்கா அது?” உண்மையான அக்கறையோடு கேட்ட ஜனாவை அவளால் அலட்சிய படுத்த முடியவில்லை.
தீபன் பற்றியும் அன்று அவள் என்ன பேசினால் என்பதையும் சொன்னாள். அவளது பேச்சு, பார்வை, உடல்மொழி அனைத்திலும் கள்ளம் என்பது துளியும் இல்லாததை உணர்ந்தே இருந்தான் ஜெய்.
“என்னக்கா நீங்க இப்படி தனியா அழைச்சிட்டு போய் வார்ன் பண்ணனுமா அவனை? ஏதாவது உங்களுக்கு ஆகியிருந்தா? அஜாக்கிரதையா நடந்திருக்கீங்க க்கா” என அக்கறையும் கவலையுமாக சொன்னான் ஜனா.
“எங்களுக்கு வேற யார் இருக்கா ஜனா? என்னன்னாலும் நாங்கதானே பார்த்தாகனும்?” எனக் கேட்டாள்.
“ஏன் க்கா நான் இல்லயா? என் நம்பர் உங்ககிட்ட இருக்குதானே? என் ஞாபகம் இல்லயா உங்களுக்கு?” உரிமையோடு கேட்டான் ஜனா.
“நீ இப்படி சொல்றதே சந்தோஷம் ஜனா. எனக்கு முடிக்க வேண்டிய முக்கியமான வேலை இருக்கு, நான் வர்றேன் ஜனா” என்றவள் வெளியேறி விட்டாள்.
தான் நினைத்தது நடக்க வில்லையே என்ற ஆதங்கமும் தவறு செய்யாதவளை ஏன் தவறாக நினைத்தேன் என்ற குற்ற உணர்வும் அவளை காயப்படுத்த ஏன் இப்படி துடிக்கிறேன் என்ற குழப்பமுமாக தளர்வாக இருக்கையில் அமர்ந்தான் ஜெய்.
“நீ ஏன் ண்ணா ஸ்ரீ அக்காவை போய் இப்படிலாம் பேசுற? நம்ம அம்மாவ எவ்ளோ நம்பறோமோ அவ்ளோ நம்பலாம் ஸ்ரீ அக்காவையும்” என ஜனா சொல்ல, விலுக் என அவனை நிமிர்ந்து பார்த்த ஜெய்யின் கண்களில் கோவக்கனல்.
ஜனா என்ன என கண்களால் கேட்க, “நம்ம அம்மாவும் இவளும் ஒண்ணாடா உனக்கு? பல்ல தட்டி கைல கொடுத்திடுவேன்டா தீவட்டி!” என உறுமினான் ஜெய்.
“ஏதோ அர்ஜண்ட்னு கூப்பிட்டியேன்னு காலேஜ்ல நடந்திட்டிருந்த முக்கியமான செஷனை கூட அட்டெண்ட் பண்ணாம ஓடோடி வந்த என்னை சொல்லணும்”
“நான் கேட்டப்பவோ சொல்றதுக்கென்ன? போ கிளம்பு இங்கேருந்து”
“ஆமாம், ஸ்ரீ அக்கா யாரோட தனியா பேசினா உனக்கென்ன? அக்காக்கு அந்த மனோ கார்ட் கொடுத்தா உனக்கு ஏன் வலிக்குது? நீ ஏன் அக்காட்ட இதை வச்சு சண்டை போடுற? என்ன ண்ணா என்ன… வாட் இஸ் த மேட்டர்?”
கடுப்பின் உச்சம் சென்ற ஜெய் கைக்கு அகப்பட்ட பேனாவை தூக்கி ஜனாவின் மீது வீசி எறிந்தான்.
தன்னை தாக்கி விடாமல் அந்த பேனாவை கையில் பிடித்துக்கொண்ட ஜனா, “ஓஹோ அப்படியா சங்கதி? அந்த க்ரீட்டிங் கார்ட் பார்த்த அன்னிக்கு என்கிட்ட நீ கோவப்பட்ட காரணம் இப்போதான் புரியுது. அப்போலேருந்தேவா? அப்ப இந்த அழுகுணி சுரேகா இடைல ஏன் வந்தா?” எனக் கேட்டான்.
ஜனாவின் பேச்சில் ஜெய் திகைக்க, “என்னை மாதிரி ஆர்ப்பாட்டமான பசங்களை நம்பலாம், உன்னை மாதிரி மௌனசாமியார்களை ஒரு போதும் நம்பவே கூடாதுன்னு மாணிக்கவாசகம் சொன்னப்போ நம்பல, இப்ப நம்புறேன்” என்றான் ஜனா.
“அடேய் மாணிக்கவாசகம் சொன்னாரா? ஏன் டா அவரையெல்லாம் இழுக்குற?” விட்டால் ஜெய்க்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.
“இத சொன்னது மஹான் மாணிக்கவாசகர் இல்ல ண்ணா. கட்டையா கருப்பா கன்னத்துல ஒரு மச்சத்தோட எப்பவும் என்கூடவே சுத்திட்டு இருப்பானே மாணிக், அவன் முழு பேர் மாணிக்க வாசகம் ண்ணா” என விளக்கம் சொன்னான் ஜனா.
தலையை தாங்கிப் பிடித்திருந்த ஜெய்க்கு நிஜமாகவே தம்பியின் பேச்சில் தலை வலிக்க ஆரம்பித்தது.
“இப்ப உனக்கும் ஸ்ரீ அக்காக்கும் என்ன பிரச்சனை? பொஸஸிவ் ஆகுறியா ண்ணா நீ?”
“அறிவுகெட்ட…” கெட்ட வார்த்தை சொல்லி திட்டினான் ஜெய்.
அதெல்லாம் ஜனாவுக்கு பழக்கம்தான் என்பதால் பெரிதாக எடுக்காமல், “வீட்ல சொல்ல மாட்டேன் பயப்படாத” என்றான்.
“டேய்… பைத்தியமாடா நீ? ஏன் டா ஏன்?” நொந்து விட்டான் ஜெய்.
“ஒரு காதல் என்பது… உன் நெஞ்சில் உள்ளது…” என ஜனா பாட, கை வலிக்கும் வரை தம்பியின் உடலை பதம் பார்த்து விட வேண்டும் என்ற ஆங்காரத்தோடு அவனை நோக்கி வந்தான் ஜெய்.
“உன் நெஞ்சில் உள்ளது… அடே அண்ணா உன் நெஞ்சில் உள்ளது… உன் கண்ணில் தெரியுது ண்ணா…” அண்ணனின் கைகளில் சிக்காமல் அதி வேகமாக வெளியேறி விட்டான் ஜனா.
ஏதோ பாடலை முணு முணுத்துக் கொண்டே வரும் ஜனாவை பார்த்து சிரித்தாள் அக்கவுண்ட்ஸ் பார்க்கும் பெண்.
ஹாய் என்பது போல கையசைத்து அவனும் விரிந்து சிரித்தான். ஸ்ரீயை கடக்கையில் நெஞ்சில் கை வைத்து தான் பார்த்துக் கொள்வதாக சைகை சொன்னான்.
என்ன என அவள் குழப்பமாக பார்த்ததை கவனியாமல் அவளுக்கு டாடா காட்டி விட்டு ஒரு காதல் என்பது பாடலின் டியூனை சீட்டி அடித்துக் கொண்டே வெளியே சென்றான்.
“என்ன ஸ்ரீ?” எனக் கேட்ட சசியிடம் ஒன்றுமில்லை என்றவள் நிறைவடைந்திருந்த கட்டிட பிளானை எடுத்துக் கொண்டு ஜெய்யின் அறைக்கு சென்றாள்.
எல்லார் முன்பும் ஸாரி கேட்க சொல்வாளோ என உள்ளுக்குள் பதட்டமும் திணறுலுமாக இருந்தான் ஜெய். இப்படியொரு தர்ம சங்கட நிலை அவனுக்கு ஏற்பட்டதே இல்லை எனலாம்.
ஸ்ரீ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தன் வேலையை மட்டும் செய்தாள். அவள் சொன்னவற்றில் பாதி அவனது கவனத்தில் பதிய மறுக்க, அவள் இறுதியாக கேட்ட “ஓகேவா ஸார்?” என்றதற்கு தலையாட்டி வைத்தான்.
கிளம்ப போனவள் அவனை கூர்ந்து பார்த்து, “உணர்ந்தாலே போதும், உங்க ஸாரி வேணாம் எனக்கு. இனிமே யாரை பத்தியும் விரல் நீட்டி பேசுறதுக்கு முன்னாடி தீர விசாரிங்க ஸார். மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்லதான் நீங்க இப்படி பேசிட்டீங்கன்னு நம்புறேன். அதனாலதான் வேலைல இன்னும் நீடிக்கிறேன்” என சொல்லி சென்றாள்.
ஒரு நிலையில் இல்லாத அவனது மனதினை வெளிப் படுத்தும் விதமாக அவனது கால்கள் தரையில் தட்டிக் கொண்டிருந்தன, கை விரல்கள் மேசையில் இலக்கின்றி அலை பாய்ந்தன.
தன்யஸ்ரீ தரத்தில் பத்திரை மாற்று தங்கம் என இப்போது விளங்கினாலும் அவளை நல்ல விதமாக ஏற்றுக்கொள்ள மறுத்தான். அவளின் இருப்பு தன்னை தொல்லை செய்வதாக உணர்ந்தவன் விரைவாக அவளை இங்கிருந்து வெளியேற்றியே ஆக வேண்டுமெனதான் இப்போதும் நினைத்தான்.