அத்தியாயம் -5(2)
ஜெய்யை எதிர்பார்க்காத சசி “என்ன சார் ஆஃபீஸ் வரமாட்டேன்னு சொல்லி இருந்தீங்களே?” என திணறலாக கேட்டான்.
“என்ன இப்போ வேணும்னா திரும்ப போயிடவா?” எரிச்சலாக கேட்டான் ஜெய்.
சசி அசடு வழிய சிரித்து வைக்க, அந்த நேரம் உள்ளே நுழைந்தாள் ஸ்ரீ.
தனக்கு காலை வணக்கம் சொன்னவளை பொருள் செய்யாமல் சசியைப் பார்த்து முறைத்தவன் பின் சுவர் கடிகாரத்தை பார்த்துவிட்டு மீண்டும் சசியை பார்த்து முறைத்தான்.
“ஒன் ஹவர் பர்மிஷன் போட்டு இருந்தாங்க சார்” என்றான் சசி.
அருகில் இருந்த அக்கௌன்ட்ஸ் பார்க்கும் பெண்ணிடம் “ஆஃபீஸ் டைம் என்ன?” என கேட்டான் ஜெய்.
“நைன்” என சின்ன குரலில் சொன்னாள் அவள்.
“ஒன் ஹவர் பர்மிஷன் முடிஞ்சி ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகுது, இத ஆஃப் அ டே லீவா கன்சிடர் பண்ணிடுங்க” என அக்கௌன்ட்ஸ் பார்க்கும் பெண்ணிடம் பணித்தான்.
தலையாட்டிக் கொண்ட அந்தப் பெண் ஸ்ரீயை பாவமாக பார்த்து வைத்தாள்.
தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை சொன்னாள் ஸ்ரீ.
“ஆமாம் சார், எனக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க” என அவளுக்கு பரிந்து வந்தான் சசி.
“உன்கிட்ட வழிஞ்சு இளிச்சி பேசினா காரியம் நடக்கும்னு இங்க எல்லாருக்கும் தெரியும். உன் போதைக்கு என் கம்பெனியோட ப்ரொடக்டிவிட்டி அஃபெக்ட் ஆகிறதை என்னால மன்னிக்க முடியாது. வெளியில யாரோ எக்கேடோ கெட்டுப் போங்க, ஐ டோன்ட் மைண்ட். இங்க டிஸிப்ளின் ரொம்ப முக்கியம்” பேச்சை முடிக்கும் போது ஸ்ரீயை அழுத்தமாகப் பார்த்தான்.
“எக்ஸ்கியூஸ் மீ சார், என்ன என்ன சொல்றீங்க, நீங்க தெளிவா சொல்லுங்க” அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டாள் ஸ்ரீ.
“ஹ்ம்ம்… நெஜமாவே புரியலையா? எனக்கு தெரியும் நான் என்ன சொல்றேன்னு உனக்கு நல்லா தெரியும்னு. எங்கிட்ட வேலை செய்றவங்க இங்க வேலையில இருக்கிற வரைக்குமாவது ஒழுக்கத்தை கடைப்பிடிக்கணும், ரொம்ப கஷ்டம் தான் உனக்கு. அதுக்காக நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாது. இஷ்டம் இல்லைனா போய்க்கிட்டே இருக்கலாம், யாரா இருந்தாலும்” விஷம் தோய்ந்த அம்புகளை போல வார்த்தைகளை விட்டவன் அவளின் பதில் மொழிக்கு காத்திராமல் அறைக்குள் நுழைந்து விட்டான்.
சூடு ஏறிய முகத்தோடு அவனது அறையை வெறித்துக் கொண்டு இருந்தாள் ஸ்ரீ.
“விடு ஸ்ரீ, வெளியில என்ன கோபமோ ஏதோ? நம்மகிட்ட காட்டிட்டு போறார், வா சீக்கிரம் இந்த பிளானை முடிச்சுடலாம், இல்லைனா அதுக்கும் சேர்த்து கத்துவார்” என்றான் சசி.
“லேட்டா வந்தேன்னா அதுக்காக அவர் திட்டட்டும். அதுக்கு என்ன ஆக்ஷன் எடுக்கணுமோ எடுக்கட்டும். என் கேரக்டர் பத்தி தப்பா பேச அவருக்கு எந்த உரிமையும் கிடையாது, அதை அப்படியே விட என்னாலேயும் முடியாது” என்றவள் அவனது அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே வந்தவளை எரிச்சல் உமிழ பார்த்தான் ஜெய்.
அதற்கெல்லாம் பயந்து போகாமல், “என்னை பத்தி ஏன் தப்பா சொல்றீங்க ஸார்?” என கேள்வி கேட்டாள் ஸ்ரீ.
“என்ன… என்ன தப்பா சொல்லிட்டேன் நான் இப்போ? உன் மூஞ்ச பாக்கவே கூடாதுன்னுதான் அந்த சசிகிட்ட ரிப்போர்ட் பண்ணனும்னு சொல்லி இருந்தேன். நீ என்னடான்னா அவன் வீக்னஸ் புரிஞ்சுகிட்டு அவனை உன் கைக்குள்ள வச்சிருக்க. அவன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு நீ உன் இஷ்டத்துக்கு பர்மிஷன் போட்டுக்குவியா?” எனக் கேட்டான்.
“யாரோட வீக்னஸையும் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது. என்ன ஏதுன்னு விசாரிக்காம, நானா எடுத்து சொன்னாலும் அதை புரிஞ்சுக்காம நீங்களா ஒண்ணு நினைச்சுக்கிட்டு என்னை தப்பா பேசுவீங்களா?”
“நான் சரியாதான் நெனச்சிருக்கேன், ஏன் பத்தாம் கிளாஸ் படிக்கிறப்பவே கிரீட்டிங் கார்டுல கண்ணா பின்னான்னு கன்றாவியா ஏதேதோ கிறுக்கி எனக்கு கொடுக்கல நீ? பிஞ்சிலேயே அப்படின்னா இப்ப எப்படி இருப்பன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?” ஏளனமும் நக்கலும் அவனது பேச்சில் போட்டி போட்டது.
“ரொம்ப நல்லா இருக்கு உங்களோட கதை? போயும் போயும் உங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்தேனா நான்?”
“லெட்டர் இல்ல கிரீட்டிங் கார்டு”
“ரொம்ப முக்கியம் ஏதோ ஒண்ணு. நான் செய்யாத ஒண்ணை சொல்றதுக்காக கூட கோபம் இல்லை, ஆனா அதை உங்களுக்கு கொடுத்தேன்னு சொன்னீங்க பாருங்க…” கண்களில் வெறுப்பை கக்கிக் கொண்டே சொன்னாள் ஸ்ரீ.
“சத்தமா சொன்னா பொய் உண்மை ஆகிடாது”
“அதேதான் உங்களுக்கும் நான் சொல்றேன்”
“நீ செஞ்ச வேலையை ப்ரூவ் பண்ண முடியும் என்னால”
“முடிஞ்சா செய்ங்க”
“செய்றேன், ஆனா உண்மைனு நான் ப்ரூவ் பண்ணிட்டேனா இங்க இருந்து போய்க்கிட்டே இருக்கணும்” என்றவனை குழப்பமாக பார்த்தாள்.
கையோடு தன் தம்பிக்கு அழைத்தான் ஜெய். கல்லூரி வகுப்பை புறக்கணித்து விட்டு கேண்டினில் நண்பர்களோடு அமர்ந்து அரட்டைக் கச்சேரியில் ஈடுபட்டிருந்தான் ஜனா. அண்ணனின் அழைப்பு வரவும் நண்பர்களை அமைதி காக்கும்படி சைகை செய்துவிட்டு அழைப்பை ஏற்றான்.
“டேய் ஒரு ஹெல்ப், உடனே ஆஃபீஸ்க்கு வர முடியுமா உன்னால?” என கேட்டான் ஜெய்.
ஏதோ முக்கிய வேலை போல என நினைத்துக் கொண்ட ஜனாவும் சரி என்று சொல்லி உடனடியாக புறப்பட்டு விட்டான்.
“இதோ நான் சொன்னதுதான் உண்மைன்னு சம்பந்த பட்டவனே வந்து சொல்லுவான்” என்றான் ஜெய்.
“வரட்டும், அது பொய்னு முடிவாகிடுச்சுன்னா? எனக் கேட்டாள் ஸ்ரீ.
“அப்படி ஒண்ணு நடந்தாதானே?”
“ஒரு வேளை பொய்னு ஆயிடுச்சின்னா?”
“வெளியில மூனு பேரு முன்னாடி வெச்சு தானே உன்னை திட்டினேன்? எல்லார் முன்னாடியும் வச்சே மன்னிப்பு கேட்கிறேன்”
“பாவம் ஸாருக்கு யார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுல்லாம் பழக்கம் இருக்காது. எதுக்கும் ஸாரிங்கற வார்த்தையை சொல்லி சொல்லி ஒத்திகை பார்த்துக்கோங்க” என்றவள் அறையில் இருந்து வெளியேறி விட்டாள்.
அலுவலகம் வந்த ஜனா ஸ்ரீயை பார்த்துவிட்டு கையசைப்பு மூலம் முகமன் செய்து கொண்டே அண்ணனின் அறைக்குள் நுழைந்தான்.
என்ன நடக்கிறது என கேட்ட சசிக்கு தெரியவில்லை என்று கூறினாள் ஸ்ரீ. வேலையைத் தாண்டி எதுவும் அவனுடன் பேச்சு வைத்துக் கொள்வதில்லை அவள்.
ஜெய்க்கு வேலை எதுவும் ஓடவே இல்லை. தம்பி வந்து உண்மையை உள்ளபடி சொன்னதும் ஸ்ரீயை என்ன சொல்லி அவமானம் செய்யலாம் என்பதிலேயே அவனது யோசனை இருந்தது.
துரையின் மூலமாக பேரிழப்பை அடைந்தவனுக்கு அவரது மகளை வதைப்பது சொல்லொனா மகிழ்ச்சியைத் தந்தது.
தம்பியை கண்டதும் எழுந்து சென்று அவனது கையை பிடித்துக் கொண்ட ஜெய், “டேய் ஜனா, அந்த ஸ்ரீ கார்ட் கொடுத்தால்லடா, அதை இப்போ சொல்லணும் நீ” என படபடத்தான்.
“என்ன கார்ட் அண்ணா? டெபிட் கார்டா, கிரெடிட் கார்டா?” எனக் கேட்ட தம்பியை பார்த்து பற்களை நெறித்தான்.
எதுவும் திட்டி அவன் முறுக்கிக் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது? ஆகவே, தன்னைத்தானே நிதான படுத்திக் கொண்டவன் சில வருடங்களுக்கு முன் நடந்த வாழ்த்து அட்டை கதையை நினைவு படுத்தினான்.
“ஆஆன்… அதுக்கு என்ன ண்ணா இப்போ?”
“அது ஒரு பிரச்சனை, யார் யாருக்கு கார்ட் கொடுத்தாங்ககிறதை யாருக்கும் பாவம் பார்க்காம சொல்லு, அது போதும்” என்ற ஜெய், உடனடியாக ஸ்ரீயை அறைக்கு வரவழைத்தான்.
ஏதோ கட்டிட மாடல் ஒன்று மேசையில் இருக்க அதை கையில் எடுத்துக் கொண்ட ஜனா அதையே உன்னிப்பாக பார்த்திருந்தான்.
ஸ்ரீ கதவை திறந்து கொண்டு வர, தம்பியின் தோளில் தட்டிய ஜெய், ஸ்ரீயை சுட்டிக்காட்டி “அங்க சொல்லு” என்றான்.
“ஹாய் அக்கா, செம ஷோகேஸ் பீஸ் க்கா இது, பர்மா பஜாரா டி நகரா எங்கக்கா கிடைக்கும் இது? என் கிளாஸ் மேட் ஒருத்திக்கு பர்த்டே வருது, இது கிஃப்ட் பண்ணினா நல்லாருக்கும்னு நினைக்கிறேன். இதையே கொடுக்கலாமேன்னு நீங்க சொல்ல வர்றது புரியுது, இதோ உங்க முதலாளி பிகு பண்ணுவார். சொந்த காசுல நானே வாங்கிக்கிறேன். எங்கக்கா வாங்கலாம்?” என்றான் ஜனா.
“ஜனா…” உறுமினான் ஜெய்.
“நாந்தான் இது வேணாம்னு சொல்லிட்டேனே, டென்ஷன் ஆகாத ண்ணா” என்ற ஜனா, அண்ணனின் முறைப்பில் அமைதி அடைந்தான்.
“அந்த கார்ட் விஷயம் சொன்னேனே?” என்றான் ஜெய்.
“எஸ் எஸ்…” என்ற ஜனா, “என்னக்கா… அந்த மனோ திரும்ப பிரச்சனை பன்றானா? யார்கிட்ட எங்க வந்து அவன் அப்பவே உங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்தான்னு மாட்டிக் கொடுக்கணும்? அவன் வீட்லயா இல்லை போலீஸ் ஸ்டேஷன்லயா?” எனக் கேட்டான்.
ஜெய்யின் முகம் காற்று போன பலூன் போலாக, அவனை கடினமான முகத்தோடு பார்த்திருந்தாள் ஸ்ரீ.