புதிய உதயம் -5
அத்தியாயம் -5(1)
சைட்டில் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்ப இரண்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டும் ஸ்ரீ. முதல் பேருந்தில் பயணித்து ஒரு நிறுத்தத்தில் இறங்கியவளை வரவேற்றான் அசடு வலிய சிரித்துக் கொண்டிருந்த தீபன்.
கொஞ்ச நாட்களாகவே தன்னிடம் நெருங்கி வருகிறான் இவன் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்ரீ இன்றே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினாள்.
தன்னை நோக்கி வரும் ஸ்ரீயை விரிந்த சிரிப்பும் வெட்கமுமாக பார்த்திருந்தான் தீபன். அவளோ அருகில் இருந்த உணவகம் ஒன்றுக்கு வருமாறு சொல்லிவிட்டு முன்னே நடந்து சென்றாள்.
உணவகத்தில் மற்றவர்களின் கவனத்தை கவராதவாறு ஓரமாக இருந்த மேசையை தேர்ந்தெடுத்த ஸ்ரீ அங்கே போய் அமர்ந்து கொண்டாள். தான் இத்தனை நாட்கள் அவள் பின்னால் சுற்றுவதில் பலன் இல்லாமல் போய் விடவில்லை, என் வழிக்கு வந்துவிட்டால் என்ற ஆனந்த பெருக்கோடு அவளின் எதிரில் அமர்ந்தான் தீபன்.
இரண்டு காபிக்கு ஆர்டர் கொடுத்த ஸ்ரீ அவனை எரிச்சலோடு பார்த்தாள். வேறு ஏதாவது வேண்டுமா, சொல் என்று சர்க்கரை தடவிய அக்கறையோடு கேட்டான் தீபன்.
“ஓ தாராளமா சொல்லலாமே, இன்னைக்கு இதுக்கு முடிவு கட்டிடலாம்” என ஏளன சிரிப்போடு சொன்னாள் ஸ்ரீ.
அவன் மிகவும் உன்னிப்பாக அவளையே பார்த்திருந்தான்.
“எங்க அம்மாவுக்கு ஆபரேஷன் ஆனது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், அதுக்காக 5 லட்சம் செலவாச்சு, எல்லாம் கடன்தான். என் தங்கச்சி பிளஸ் ஒன் படிக்கிறான்னு தெரிஞ்சிருக்குமே, அவ ஸ்கூல் முடிச்சதும் மேல படிக்க வைக்கிறது என் பொறுப்புதான். அதுக்கும் பல லட்சம் செலவாகலாம். வாடகை வீட்லதான் இருக்கோம், மாசம் பொறந்தா வீட்டு வாடகை, மளிகை, காய்கறி, அது இதுன்னு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு பெரிய தொகை செலவாகுது. குண்டுமணி தங்கம் கூட கல்யாணத்துக்குன்னு சேர்த்து வைக்கல நாங்க. எதுவும் என்கிட்ட இருந்து எதிர்பார்க்கக் கூடாது, கல்யாண செலவு மொத்தமும் உங்களோடதுதான். கல்யாணத்துக்கு அப்புறம் என் வீட்டுல என் அம்மா தங்கச்சியோட தான் இருப்பேன். கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் வேலைக்கு எல்லாம் போய் நான் கஷ்டப்பட்டுகிட்டு? எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கோங்க. அப்புறம் ஏன் டிலே பண்ணனும் ஒரு நல்ல நாளா பார்த்து உங்க வீட்ல உள்ளவங்கள அழைச்சிட்டு வந்து பொண்ணு கேளுங்க” என்றாள் ஸ்ரீ.
அதிர்ந்து போனவன் “ஐயோ தனு! கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? ஒரு ரெண்டு வருஷம் போகட்டுமே” என்றான்.
“எப்படி… திருச்சியில ஒரு இண்டு இடுக்கு பாக்கி இல்லாம எல்லா இடத்தையும் இஞ்ச் டேப் இல்லாமலே நாம சேர்ந்து அளக்கணுமா? ஃபோன் கம்பெனிகாரனுக்கு காசு கட்டி ராத்திரி தூக்கத்தையும் கெடுத்து போதாததுக்கு காத அவிச்சுக்கணுமா? இல்ல உன் வயசு கோளாறுக்கு என்ன அங்க இங்க தொட்டு…” என்றவள் அடுத்த வார்த்தை பேசாமல் அனல் கக்க அவனை பார்த்தாள்.
தீபனின் வீட்டை பற்றி ஸ்ரீக்கு நன்றாகவே தெரியும். அவனுடைய அம்மாவின் பெயரை கேட்டாலே அங்குள்ளோர் அலறுவார்கள். காதல் என்று இவன் போய் சொன்னாலே பிய்ந்து போன செருப்பால் நன்றாக அடிப்பார். ஸ்ரீ சொல்வதை எல்லாம் சொல்லி அவளை பெண் கேட்கும் படி கூறினால் அவனை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்.
தன்யஸ்ரீயை திருமணம் செய்து கொண்டு அவளது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து அவளோடு உண்மையோடு வாழ வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனிடம் கிடையாது. அழகான ஸ்ரீயை கண்டவுடன் ஆசை பிறந்து விட்டது. தன் வாலிபத்துக்கு தீனி போடவே விரும்பினான்.
இப்போது ஸ்ரீ பேசியதை கேட்டு பேய் அறைந்தார் போல அவளை பார்த்திருந்தான்.
“என் பின்னாடி நீ சுத்த ஆரம்பிச்சப்பவே வராதன்னு நல்ல விதமா தான் உன்கிட்ட சொன்னேன். நீ கேட்கிற மாதிரி இல்ல. நம்ம போற இடமெல்லாம் தெரு நாய் சுத்தி சுத்தி வந்தா அதை பொருட்டா நினைக்காமல் போய்க்கிட்டே இருக்கிறதுதான் என் வழக்கம். அது என்னோட கிட்ட வந்து கடிக்க பார்க்குது. இப்பவும் சும்மா போக நான் என்ன முட்டாளா?” என அவள் கேட்க அவனிடம் மறுவார்த்தை இல்லை.
“இனிமே என் திசை பக்கம் கூட நீ வந்து நின்னா நேரா உன் அம்மாகிட்ட தான் போய் நிப்பேன். பொண்ணுதானே எங்க சொன்னதை செய்யப் போறா அப்படின்னு ஈஸியா மட்டும் நினைச்சுடாத. நீ என் பின்னாடி சுத்துறத பார்த்த சில நல்லவங்க இருக்காங்க. உன்னை அப்படியெல்லாம் அவமானம் செய்ய வேணாம்னு நினைக்கிறேன்” என்றாள்.
“பாரு மூஞ்ச பாத்தா பச்ச புள்ள, நல்ல பொண்ணுன்னு எல்லாரும் நினைப்பாங்க. போன வாரம்தான் இதே இடத்துல ஒருத்தவனோட இவள பார்த்தேன். அவன்கிட்ட இவ இளிச்சி இளிச்சி பேசினதும் நெருக்கமா அவனோட உட்கார்ந்து இருந்ததும்… சரி ஏதோ லவ்னு நினைச்சேன்… இப்ப இந்த வாரம் இன்னொருத்தன் இருக்கான். இவன் கூடவும் அதே மாதிரி நெருக்கமா இருக்கா” என்றார் ஒரு பெண்மணி.
“இந்த காலத்துல யாரையும் நம்ப முடியறதே கிடையாது. அதுவும் இது மாதிரி அமைதியா இருக்கிறவங்க தான் எல்லா தப்பையும் பண்றது” என்றார் உடன் இருந்த இன்னொரு பெண்மணி.
தொழில் நிமித்தமாக ஒருவரை சந்திக்க வந்திருந்த ஜெய் அந்த உணவகத்தில்தான் அவருக்காக காத்திருந்தான். அந்த நேரத்தில்தான் இந்த பெண்களின் உரையாடல் அவன் செவிகளை சென்றடைந்தது.
அசுவவாரஷ்யமாகத்தான் அந்த பெண்மணிகள் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர்ப்புறம் இருந்த மேசையை பார்த்தான். அவர்கள் பேசிக் கொண்டதோ வேறொரு பெண்ணை பற்றி. ஜெய் பார்த்ததோ ஸ்ரீயையும் தீபனையும்.
அவளைப் பற்றி தவறாகவே நினைத்திருந்த ஜெய்யின் உள்ளத்தில் இன்னும் தவறாக பதிந்து போனாள் ஸ்ரீ.
குணம் கெட்ட இவள் என்னிடம் வேலை செய்கிறாளா என்று அவனுக்கு கோவமாக வந்தது. ஜம்புலிங்கத்தின் சிபாரிசின் பெயரில் சேர்ந்தவள் ஆகிற்றே, ஆதலால் அவனால் அவளை வெளியில் அனுப்ப முடியாத நிலை.
எந்த சாக்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்தி ஜம்புலிங்கம் சாரிடமே அவளைப் பற்றி எடுத்துச் சொல்லி தன் அலுவலகத்தில் இருந்து துரத்தி விட வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டான்.
ஸ்ரீயின் பேச்சில் கோபம், அவமானம், பயம் அனைத்தும் கலந்த உணர்வோடு எழுந்து நின்றான் தீபன். இனி உன் வழியில் வரமாட்டேன் என சொல்லத்தான் நினைக்கிறான், உலர்ந்த நாக்கு ஒரு சொல்லையும் உதிர்க்க மறுக்கிறது.
‘போ’ என கையை அசைத்து ஸ்ரீ சொல்லவும் விட்டால் போதுமென ஓடிச் சென்று விட்டான் தீபன்.
ஜெய்யின் எண்ணத்தைப் பற்றி எதுவும் அறியாமல் ‘இனி தீபனின் தொல்லை இல்லை’ என்ற நிம்மதியோடு அங்கிருந்து புறப்பட்டு சென்றாள் ஸ்ரீ.
*****
மஹதியின் பள்ளியில் அன்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. முக்கிய வேலையாக தையலகம் செல்ல வேண்டி இருந்ததால் பெரிய மகளை பள்ளிக்குச் சென்று வருமாறு கூறியிருந்தார் ஜோதி.
சசியிடம் ஒரு மணி நேரம் முன் அனுமதி பெற்றுக் கொண்டவள் பள்ளிக்குச் சென்றாள். அங்கே தாமதமாகி விட்டது. கட்டிட ப்ளான் ஒன்று அன்றே முடிக்க வேண்டியது இருந்தது. ஸ்ரீ தயார் செய்ததுதான் அது, சில திருத்தங்கள் சொல்லியிருந்தான் ஜெய். அதையெல்லாம் ஸ்ரீதான் மாற்றம் செய்ய வேண்டும்.
அதற்காக நேராக அலுவலகமே வந்து விடும்படி கூறியிருந்தான் சசி.
நேரம் ஆகிவிட்டதால் பணம் போனாலும் பரவாயில்லை என எண்ணி ஆட்டோ ஒன்றை பிடித்துக் கொண்டு புறப்பட்டாள் ஸ்ரீ. அவளது கெட்ட நேரம் அன்று மிகுந்த போக்குவரத்து நெரிசல். வழியிலேயே சசிக்கு அழைத்து விவரத்தை சொன்னாள்.
ஜெய் அன்று அலுவலகம் வரவில்லை, வெளி வேலை என முன்பே சசியிடம் சொல்லி இருந்தான்.
அவன் இல்லாத தைரியத்தில் தாராள மனதோடு “அதுக்கு என்ன ஸ்ரீ, எப்பவாவது இப்படி ஆகிறது தானே? நீ பொறுமையா வா, நான் பார்த்துக்கிறேன். ஈவினிங் ஜெய் சார் வீட்டுக்கு போய் பிளான் காட்டினா போதும்” என சொல்லிவிட்டான் சசி.
அதற்காக சலுகை எல்லாம் எடுத்துக் கொள்ளாமல் முடிந்தவரை ஆட்டோ ஓட்டுநரை வேகமாக போக சொல்லி அறிவுறுத்தி அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஸ்ரீ.
நினைத்தபடி ஜெய்யின் வெளி வேலை நடக்கவில்லை ஆகவே அவனும் அலுவலகம் வந்துவிட்டான். தாமதமாக வந்த ஸ்ரீயை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.