அத்தியாயம் -4(2)

“என்னடா நடந்து போச்சு இப்போ? அவளுக்கு கொடுத்து வைக்கல, கொடுத்து வச்ச மகராசி வேற எவளோ, அவளை எங்கேருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கிறேன்னா இல்லயா பாரு” என்றார் ராஜாம்பாள்.

“சும்மா சும்மா சவால் விடுற நீ, கம்முன்னு இரு அப்பயி” என ஜனா சொல்ல, “உன்னாலதான் அப்பயி எல்லாம், யாரு உன்னை இப்ப போய் இதை பேச சொன்னது?” எனக் கேட்டான் ஜெய்.

“இப்ப கூட அப்பயி பேசலைனா நீ தேவதாஸ் ஆகியிருப்ப, அமுக்கினி என்னமா ஆக்ட் கொடுத்திருக்கா, போயும் போயும் அவகிட்ட ஏமாந்து போயிருக்க நீ? ஹ்ம்ம்… ஒண்ணு செய், அவளை தூக்கிட்டு வந்து தாலி கட்டிடு, வச்சு செய்யணும் அவிய்ங்க குடும்பத்தை” கோவமாக பொரிந்தான் ஜனா.

காரை சாலையோரமாக நிறுத்திய ஜெய் தம்பியை ஏகத்துக்கும் முறைத்தான்.

“நீ என்ன திட்டினாலும் அடிச்சாலும் கூட ஐ டோண்ட் கேர். அவ தப்புதானே? உன்னை பார்க்கிறப்பலாம் சிக்னல் கொடுத்திருப்பாதானே? இல்லாமலா நீ இன்னிக்கு அவளை அந்த பார்வை பார்த்து வச்ச?” எனக் கேட்டான் ஜனா.

அசௌகர்யமாக உணர்ந்த ஜெய் பின்னால் திரும்பி பார்த்தான். துளசியின் முகம் வேதனையில் கசங்க, அப்படியா என்பது போல சிறிதாக வாய் பிளந்து பார்த்திருந்தார் பாட்டி.

“நீ ரொம்ப கண்ட. வீட்டுக்கு வர்றப்போ இந்த பேச்சையெல்லாம் எல்லாரும் மறந்து போயிருக்கணும் சொல்லிட்டேன்” என்ற ஜெய், தம்பியை அழுத்தமாக பார்த்து, “நீ பேசுறது நடக்கிறது எதுவும் சரியில்லை ஜனா. வேணாம்னு ஒருத்தி சொல்றது என்னடா அவ அப்படி நினைச்சாலே அவ நினைப்பை தலை முழுகிட்டு நம்ம வழிய பார்த்து போயிட்டே இருக்கனும். ரௌடி பய மாதிரி பேசாம ஒழுங்கா இரு” என்றான்.

“அப்ப நிஜமா உனக்கு ஃபீலிங்ஸ் இல்லயா ண்ணா?” எனக் கேட்ட தம்பியை கண்டனமாக பார்த்தான் ஜெய்.

“இந்த லுக்லாம் நமக்கு வேணாம். பதில சொல்லு” என்றான் ஜனா.

“அப்பயி நீயே பொண்ணு பாரு, உனக்கு ஓகேன்னா எனக்கு ஓகே. நிச்சயம் எப்ப வேணா வச்சுக்கலாம். ஆனா கல்யாணம் புது வீடு மாறினதும்தான்” என்றான் ஜெய்.

“அத விட வேற வேலை என்னடா எனக்கு?” என்றார் பாட்டி.

“உனக்கு ஓகேன்னா இவனுக்கு ஓகேவா இருக்கலாம், எனக்கு அப்படியில்ல. நான் ஓகே சொல்றவங்கதான் எனக்கு அண்ணி. இவனை மாதிரி முசுடா இல்லாம நல்ல சிரிச்ச முகமா ஜாலியான அண்ணிதான் வேணும்” என்றான் ஜனா.

“வச்சிருக்க அரியர்ஸ கிளியர் பண்ணுற வழிய பாரு” என ஜெய் சொல்ல, காரிலிருந்து இறங்கிய ஜனா, அம்மாவை முன் இருக்கைக்கு மாற்றி விட்டு பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

“நீ ஏன்டா இங்க வந்த, என்னைய அரைச்சு ஊதுவ, போ அங்கேயே” என்றார் பாட்டி.

பாட்டியின் கன்னத்தில் வலிக்க இடித்தவன், “ஆமாம் இவங்க பஞ்சு பொதி ஊதி விட்டதும் பறக்க, மங்கம்மா சபதம் கணக்கா பேரனுக்கு பொண்ணு பார்த்து காட்டுறேன்னு சபதம் போட்ருக்க, பைல்ஸ் வந்தவன் மாதிரியே மூஞ்சு வச்சிருக்க இவனுக்கு யார் பொண்ணு தருவா? நல்லா மாட்டிகிட்ட, அடுத்த முறை உன்னை பார்க்கும் போது உன் மருமக வீட்டு சொந்தமெல்லாம் ஏளனமா பேச போறாங்க. நீ பறக்க போறதில்லை, உன் மானம் மரியாதைதான் காத்துல பறக்க போகுது, தள்ளு” வேண்டுமென்றே பாட்டியை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“பேரன்னுதானே சொன்னேன், எந்த பேரன்னு சொல்லலையே. அவன் இருக்கட்டும் உனக்கு பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன்” என்றார் பாட்டி.

“உன் மண்ணாங்கட்டி மானமும் உன் மானாமருத… ச்சீ… மரியாதியும் என் கைல இருக்குன்னு சொல்ற. ஆனா டூ லேட் ராஜாம்பா. நான் ஏற்கனவே பொண்ணு பார்த்து வச்சிட்டேன்” என்றான் ஜனா.

“எனக்கு வேலை மிச்சம். எவன்னு சொல்லு நானே பார்த்த மாதிரி கட்டி வச்சிடுறேன்”

“ஐயையோ கண்ணாலமும் முடிஞ்சு போச்சே”

“ரெண்டாம் முறையா கட்டிக்கடா. இப்பலாம் நாலைஞ்சி முறை கட்டிக்கிறாங்க. அதான் ஃபேஷன்”

“ஒரே பொண்ணை நாலைஞ்சு தடவ கட்டுறதா, எதுக்கும் நாலைஞ்சு பொண்ணா பார்த்து வை, எல்லாத்தையும் கட்டிக்கிறேன்”

“எடு விளக்கமாத்த!” என்றார் பாட்டி.

“எதுக்கு நீ எடுக்கணும், அதான் எனக்கு நாலைஞ்சு பொண்டாட்டி இருப்பாளே, அவ கூட்டி பெருக்குவா, ஒருத்தி உன் பேச்சு கேட்கலைனா கூட பிச்சிடுவேன்”

“ஆமாம்டா, பொண்ணுங்க என்ன பொம்மையா உனக்கு. நீ இப்படியே தறுதலையா இருந்தா கல்யாணமே பண்ணி வைக்க மாட்டேன். நாலைஞ்சு பொண்ணு கட்டுவானாம். உன்னையெல்லாம் கொதிக்கிற எண்ணெய்ல் இறக்கணும்” அதுவரை அமைதி காத்திருந்த ஜெய் சீறினான்.

“ஆரம்பிச்சிட்டான் பார்த்தியா?” பாட்டியிடம் நீதி கேட்டான் ஜனா.

“விளையாட்டு பேச்சுதானேடா, அதுக்கு ஏன் இப்படி பேசுற?” சின்ன பேரனுக்கு பரிந்து பேசினார் பாட்டி.

“இந்த வாயடிக்கிறவன் டிஸ்டிங்ஷன் வாங்க வேணாம், பார்டர் மார்க் வாங்கியாவது பாஸ் ஆக வேணாமா? எப்ப பாரு, ஏதாவது வம்பு பிரச்சனைனு…” கடுப்படித்தான் ஜெய்.

“அதெல்லாம் பாஸ் பண்ணிடுவான். ஏன்டா கண்ணு?” சின்ன பேரனின் தாவாயை பிடித்துக்கொண்டு கேட்டார் பாட்டி.

நல்ல பிள்ளை போல, “நீ சொன்னா உன் சொல்லை மீறுவேனா அப்பயி?” என சொல்லிக் கொண்டே ‘மாட்டேன்’ என மறுப்பாக தலையசைத்தான் ஜனா.

பெரியவன் கவனத்தில் விழுந்து விடாமல் என சைகை செய்த பாட்டி ஜனாவின் தோளில் வலிக்க கிள்ளி வைத்தார்.

பின் பாட்டியும் பேரனும் சல சலத்துக் கொண்டு வந்ததில் முன் இருக்கையில் இருந்த இருவரின் மன இறுக்கமும் தளர்ந்து போனது.

இப்போது குடியிருக்கும் வாடகை வீட்டை வந்தடையும் போது நன்றாக இருட்டி விட்டது.

சற்று நேரம் கூட ஓய்வெடுக்காமல் தங்களின் வீடு கட்டும் இடத்திற்கு பைக்கில் சென்று விட்டான் ஜெய்.

மனதின் ஓரம் வேதனை இல்லாமல் இல்லை. அம்மா மற்றும் பாட்டியின் விருப்பம் அறிய நேர்ந்த பிறகுதான் சுரேகாவை ஏறெடுத்தே பார்த்தான். இல்லையென்றால் இவனாவது மனதை அலைபாய விடுவதாவது? இப்போதும் அவள் தனக்கில்லை என்ற வருத்தமெல்லாம் கிடையாது, அம்மா பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற கவலைதான்.

கோயிலுக்கு அழைத்து போக சொல்லி ஜனாவை துளைத்தெடுத்து கொண்டிருந்தார் பாட்டி.

“அவ்ளோ தூரம் டிராவல் பண்ணிட்டு வந்த அலுப்பு இல்லாம அலும்பு பண்ணாத” என்றான் ஜனா.

பாட்டிக்கு கோயில் சென்று கடவுளிடம் முறையிட்டால்தான் மனம் சமாதானம் ஆகும். ஆகவே பிடிவாதம் செய்தார்.

ஜனாவும் பாட்டியை காரில் அழைத்து சென்றான். வழக்கமாக அவர் செல்லும் கோயிலுக்கு செல்லாமல் எங்கோ காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

“எங்கடா போற நீ?” சத்தம் போட்டார் பாட்டி.

“எப்பவும் நீ போற கோயில் சாமி வேண்டினத நடத்தி வைக்கல, அவர்கிட்ட போயி சண்டை போடறதா முக்கியம், சாமிய மாத்தி பெட்டிஷன் கொடுப்போம் அப்பயி”

“சாமிய அப்படிலாம் சொல்லக்கூடாது, எப்ப என்ன நடத்தி வைக்கணும்னு அவருக்கு தெரியும். அந்த சுரேகா விட நல்ல பொண்ணு நம்ம ஜெய்க்கு வரணும்னு விதிச்சிட்டார்டா சாமி. நீ கன்னத்துல போட்டுக்க”

“கரெக்ட்தான், சுரேகா விட நல்ல பொண்ணு உன் முசுட்டு முட்டைகோசுக்கு கிடைக்கும். அந்த நல்ல பொண்ணு நிலைமைய நினைச்சு பார்த்தாதான்…”

“உன்னை கட்டிக்கிறவதான் அல்லாடனும், அவன் நல்லா வச்சுப்பான்”

“ஆமாம் உன் பேரன் பெரிய காதல் மஹாராசன்! சரியான கடுக்கா”

“கடுக்கால எவ்ளோ நல்லது இருக்கு தெரியுமா?” பெரிய பேரனை விட்டுக் கொடுக்காமல் பாட்டி பேச, ஜனாவும் அண்ணனை வாரிக் கொண்டே வந்தான்.

வழியில் இருந்த சிவன் கோயிலில் காரை நிறுத்தி பாட்டியை இறக்கி விட்டு அவரின் கை பிடித்து பொறுமையாக உள்ளே அழைத்து வந்தான்.

ஜனா ஏதோ பேசிக் கொண்டு வர பாட்டியின் கவனம் எங்கேயோ இருந்தது. பேச்சை நிறுத்தி விட்டு அங்கே பார்த்தவன், “என்ன ராஜாம்பா அங்க லுக்கு?” என்றான்.

“பார்க்க லட்சணமா நல்லா இருக்கால்லடா அந்த பொண்ணு? ஜெய்யிக்கு பொருத்தமா இருப்பா” என்றார்.

“அப்படியா சொல்ற, இரு கையோட கூட்டிட்டு வர்றேன்” என்ற பேரனை பாட்டி முறைக்க, அவனோ நேராக அந்த பெண்ணிடம் போய் நின்று விட்டான்.

நெஞ்சில் கை வைத்து பாட்டி பதற, அந்த பெண்ணின் கை பிடித்து அழைத்துக் கொண்டே வந்து விட்டான்.

பாட்டி என்ன சொல்வதென தெரியாமல் அசடு வழிய சிரித்தார். அந்த பெண்ணோ சங்கடமாக பார்த்துக் கொண்டே, “நல்லா இருக்கீங்களா பாட்டி?” என நலம் விசாரித்தாள்.

ஆமாம் ஸ்ரீதான் அந்த பெண். அன்னதான சுண்டல் வாங்கிக் கொண்டு அக்காவிடம் வந்து நின்று கொண்டாள் மஹதி.

யாரென சொன்னான் ஜனா. கண்களை விரித்து அந்த பெண்களை பார்த்தார் பாட்டி. அப்போதிலிருந்தே துரை மீதுள்ள கோவத்தை இவர்களிடம் காட்ட மாட்டார் பாட்டி. சொல்லப் போனால் யாருமில்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுடன் என்ன செய்வாளோ என ஜோதி மீது பாவம்தான் படுவார்.

அவர்களிடம் நன்றாக பேசினார். அவர்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொண்டார், ஜோதியின் நலனை விசாரித்தார். ஜெய்யின் நிறுவனத்தில்தான் வேலை செய்கிறாள் ஸ்ரீ என்ற கூடுதல் தகவலை சொன்னான் ஜனா. அப்படியா என வியப்பாக கேட்டுக் கொண்டார்.

மஹதிக்கு அன்று பிறந்தநாள், காலையில் டியூஷன், பள்ளி என நேரமில்லாத காரணத்தால் வேலை முடித்து வந்த பிறகு தங்கையை கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறாள் ஸ்ரீ.

மஹதிக்கு திருநீறு பூசி விட்ட பாட்டி சட்டென தன் கைப்பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்து ஏதாவது வாங்கிக் கொள் என்றார். மஹதி வாங்க மறுத்தாள், வற்புறுத்தி அவளின் கையில் திணித்து விட்டார்.

“ஹாப்பி பர்த்டே பஞ்சுமிட்டாய்!” வாழ்த்து சொன்னான் ஜனா.

நன்றி சொன்ன மஹதி மீண்டும் அவனது பக்கம் திரும்பவே இல்லை.

“அப்பயி எனக்கும் பர்த்டே இன்னிக்கு” என வம்பு செய்தான் ஜனா.

“போ போயி கோயிலை சுத்தி வா” என்றார்.

பாட்டியை ஒரு சுற்று சுற்றியவன், “நூறு சாமி இருந்தாலும் நீதானம்மா எனக்கு குலசாமி” என ராகமிழுத்தான். ஐம்பது ரூபாய் எடுத்து கொடுத்தவர் “போ பிரசாதம் வாங்கிட்டு வா” என அவனை அனுப்பி வைத்தார்.

பழைய அன்பு மாறாமல் பேசும் பாட்டி ஸ்ரீயின் மனதில் உயர்ந்து நின்றார். விடை பெற்றுக் கொள்ளலாம் என அவள் நினைக்க, அவர் விடவே இல்லை.

“விலைவாசி ஏறிப் போச்சு அப்பயி, எம்பது ரூபா நீதான் எனக்கு தரணும்” பிரசாதத்தோடு வந்த ஜனா கூறினான்.

“குல தெய்வம்னு பாட்டு பாடிட்டு காசுல கணக்கா இருக்கிறத பார்த்தியாம்மா? சரியான காரிய கார பய” ஸ்ரீயிடம் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு பிரசாதம் கொடுத்தார் பாட்டி. அவர்களும் கிளம்பி விட்டனர்.

“என்ன சுரேகா விட ஸ்ரீ அக்கா டென் தௌசன்ட் டைம்ஸ் பெட்டர்தானே?” எனக் கேட்டான் ஜனா.

“உளறாதடா மடையா? என்னவோ இந்த புள்ளைங்க அந்த துரோகி பண்ணினதுக்கு பொறுப்பில்லன்னாலும் அவன் பொண்ணுங்கங்கிறது மாறிடாது. கடவுள் இவங்களுக்கும் நல்ல வாழ்க்கையா அமைச்சு தருவார்” என பாட்டி சொல்ல, கோயிலில் மணியோசை கேட்டது.

கன்னத்தில் போட்டுக் கொண்டார் பாட்டி.

“ஹை சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா நிஜம்னு நினைப்பியா? உன் பேரனுக்கெல்லாம் ஸ்ரீ அக்கா ரொம்ப ரொம்ப அதிகம். அக்கா சிரிச்ச முகமா உள்ள யாரையாவது கட்டிகிட்டு அதுவும் சிரிச்ச முகமா நல்லா இருக்கட்டும். உன் பேரனுக்கு நல்ல சவுண்ட் கொடுக்கிற பொண்ணா பார்ப்போம்” என்றான் ஜனா.

ஜனாவின் தலையிலேயே ‘நங்’ என கொட்டி வைத்தார் பாட்டி.