புதிய உதயம் -4
அத்தியாயம் -4(1)
ஜெய்யின் பெரிய மாமாவின் பெரிய பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற இருக்க அதற்காக குளித்தலை புறப்பட்டது அவனது குடும்பம்.
ஜெய்யின் இரண்டாவது மாமாவும் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருடைய மூத்த பெண் சுரேகா இந்த வருடம் படிப்பை முடித்து விட்டாள். பார்க்க நன்றாக இருப்பாள், நன்றாக பழகக் கூடியவளும் கூட.
துளசிக்கும் ராஜாம்பாளுக்கும் சுரேகாவை ஜெய்க்கு மணமுடிக்க ஆசை. சுரேகாவும் ஜெய்யை காணும் போதெல்லாம் ஈடுபாட்டோடு பேசுவாள். ஜெய் மனதில் என்ன இருக்கிறதென யாருக்கும் தெரியவில்லை.
நிச்சய விழா காலையில் முடிந்து விட்டது. மதிய உணவுக்கு பின் அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்த வேளையில் ராஜாம்பாள் சுரேகாவின் அம்மாவிடம் பேச்சு வாக்கில், “அடுத்து சுரேகாவுக்கு பார்க்கணும்தானே?” என்றார்.
“ஆமாம் பெரியம்மா, ஏதாவது நல்ல இடம் இருந்தா பார்த்து சொல்லுங்க” என்றார் சுரேகாவின் அம்மா.
“நம்ம ஜெய்யை மறந்திட்டியே” வாயெல்லாம் பல்லாக சொன்னார் ராஜாம்பாள்.
இப்போது ஏனிந்த பேச்சு என்பது போல் ஜெய் தன் பாட்டியை முறைத்தான். சுரேகா வெட்கம் சுமந்தவளாக எழுந்து போய் உள்ளறையில் ஆனால் அவர்கள் பேசிக் கொள்வது காதில் விழும் படி நின்று கொண்டாள்.
“ரெண்டு பேர் ராசிக்கும் ஒத்து வராது, வேற இடம் பார்த்து சொல்லுங்க பெரியம்மா” என சுரேகாவின் அம்மா சமாளிப்பாக சொன்னார்.
“ஏன் ஒத்து வராது, எல்லாம் சரியா வரும்” என்றார் பாட்டி.
அனைவரின் மத்தியிலும் பாட்டியை ஒன்றும் சொல்ல முடியாமல் கடுப்போடு அமர்ந்திருந்தான் ஜெய்.
“உங்க குடும்பத்துல எங்க வீட்டு பொண்ணை கட்டிக் கொடுத்து என்ன சிறப்பா வாழ்ந்திட்டான்னு திரும்பவும் எங்க வீட்டு பொண்ணை கேட்குறீங்க?” என சொல்லி விட்டார் சுரேகாவின் அப்பா.
“என்னடாப்பா பேச்சு இது? துளசிக்கு இப்படி ஆச்சுன்னா அவ விதி. என் பேரனை பத்தி தெரியாதா உனக்கு? அவனுக்கு பொண்ணு கொடுக்க நீ நான்னு போட்டி போடுவாங்க” என்றார் பாட்டி.
“அப்ப சரி, அப்படி போட்டி போடுறவங்கள்ல ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைங்க. நாங்க அந்த போட்டியில பங்கெடுத்துக்கல” என ஏளனமாக சொல்லி விட்டார் சுரேகாவின் அப்பா.
பெரிய அண்ணன் தனக்கு சாதகமாக ஏதும் பேச மாட்டானா என அவரின் முகத்தை பார்த்தார் துளசி.
“இந்த காலத்துல யாரு சொந்தத்துல கல்யாணம் பண்றா? நீ ஜெய் ஜாதகத்தை என்கிட்ட கொடு, அவனுக்கு நானே பொண்ணு பார்க்கிறேன். நீ டயர்டா இருக்கியே, உள்ள போய் படுத்துக்க” என்றார் துளசியின் பெரிய அண்ணன்.
இவருக்கும் இரண்டாவது பெண் இருக்கிறாள், அடுத்த வருடம் படிப்பை முடித்து விடுவாள்.
தனக்கு ஆதரவாக நிற்கும் சகோதரர்களே தங்கள் பெண்களை என் பையனுக்கு தர மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார் துளசி.
இறுகிய முகத்தோடு ஜெய் லேசாக திரும்பி உள் அறையின் பக்கம் பார்த்தான். கலங்கிப் போன விழிகளுடன் இங்கே பார்த்திருந்த சுரேகா சங்கட முகத்தோடு தலையைத் திருப்பிக் கொண்டாள். மிக அழகாக பெற்றவரின் பேச்சுக்கு உடன் படுவதை அவனுக்கு சொல்லிக் காட்டி விட்டாள்.
எப்போதும் பெரியவர்களின் பேச்சில் ஜனா குறுக்கிடுவது கிடையாது. அண்ணன் என்றால் பயம் மரியாதை உண்டு, தன்னிடம் காட்டும் கெடுபிடியில் வெறுப்பு உண்டு. ஆனால் அதையெல்லாம் கடந்த அளவில் பெரிய பாசமுண்டு.
அப்பா இறந்த பிறகு தங்களை எப்படி பார்த்துக் கொண்டான், குறுகிய காலத்தில் அவனே சொந்தமாக தொழில் செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டான். பழைய வீட்டை விற்று விட்டு புதிய இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறான்.
தொழில் முறை வாங்கல் கொடுக்கல் தவிர இன்றைய தேதியில் கடன் என எதுவும் இல்லை. எல்லாம் யாரால் அவனால். இன்னும் பத்து வருடங்கள் கடந்தால் அண்ணனின் முன்னேற்றம் இவர்கள் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவில் இருக்கும் என்பது சத்தியம்.
அனைத்தையும் விட ஏதாவது ஒரு கெட்டப் பழக்கம் உண்டா? பெண்களிடம் எப்படி நடந்து கொள்வான்?
பலவித யோசனைகளில் இருந்த ஜனா அண்ணனுக்கும் சுரேகாவுக்கும் இடையில் நடந்த பார்வை பரிவர்த்தனையை கண்டு கொண்டான்.
‘இந்த மௌனசாமிக்கு அழுகுணி சுரேகா மேல ஒரு கண்ணுன்னு இப்ப இவன் பார்த்த பார்வையிலதான் எனக்கே தெரிஞ்சுது. அவ பெரிய அப்பாடக்கர் மாதிரி மூஞ்ச திருப்புறா? ஏய் என் அண்ணனுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா?’ வெகுண்டெழுந்து விட்டான் ஜனா.
“அப்பயி… எதுக்கு தேவையில்லாம பேசுற? நாந்தான் நல்லா பெரிய இடமா நம்ம அண்ணன் ரேஞ்சுக்கு ஏத்த பொண்ணா பார்க்கலாம்னு சொன்னேன்ல? அதிக பிரசங்கியா போயிட்ட நீ” என்றான் ஜனா.
“ஆமாம்டாப்பா, ஏதோ சொந்தம் விட்டு போயிடக் கூடாதுன்னு நாந்தான் அவசர பட்டுட்டேன். எண்ணி ஒரு வருஷத்துக்குள்ள எம்பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா எம்பேரு ராஜாம்பா இல்லை! டேய் ஜனா அந்த டாக்டர் பொண்ணு ஜாதகம் வந்துச்சே அதை பார்க்கலாமாடா?” சின்ன பேரன் அடித்து விட்டதற்கு சளைக்காமல் பாட்டியும் அடித்து விட்டார்.
“வேணாம் அப்பயி, அண்ணன் மாதிரியே இன்ஜினியரிங் படிச்ச பொண்ணு ஜாதகம் வந்திச்சே, அதை பார்க்கலாம். இன்னும் இங்க இருந்து டைம் வேஸ்ட் பண்ணனுமா? அண்ணனுக்கு சைட் போற வேலை இருக்கும், மத்தவங்க மாதிரி அடுத்தவங்ககிட்ட கை கட்டி வாய பொத்தி வேலை பார்க்கிறவனா? அவன் டைத்தை அட்டர் வேஸ்ட் பண்ணிட்ட போ” என்றான் ஜனா.
“அதான் ஜனா நாங்களும் சொல்றோம். அடுத்தவங்க கிட்ட கை கட்டிகிட்டு வேலை பார்த்தாலும் மாசம் பொறந்தா சம்பளம் வந்துடும். முதலாளி நொடிச்சு போனாலும் இன்னொரு வேலைய தேடிக்கிட்டு போயிடலாம். ஆனா சொந்த தொழில் இருக்கிறவனுக்கு நெதம் கண்டம்தான், எப்ப கப்பல் கவுரம்னு தெரியாது. கவுந்தாலும் நீந்த தெரிஞ்சா பரவாயில்லை, நானும் மூழ்குறேன்னு மூழ்கிட்டா?” என இளக்காரமாக பேசினார் ஜனாவின் பெரிய மாமி.
“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க மாமி” சத்தமாக சொன்னான் ஜனா.
“தெரிஞ்சுதான் சொல்றேன், ஏன் உன் அப்பா செய்யல, அப்பா மாதிரிதானேடா நீங்களும் இருப்பீங்க? எங்க வீட்டு பொண்ணுங்க வசதியா வாழாட்டாலும் புருஷனோட கண்ணுக்கு நிறைவா வாழ்ந்தா போதும். உன் அம்மாவை நினைச்சு நினைச்சு உன் மாமா எவ்வளோ ஃபீல் பண்ணுவாருன்னு உனக்கென்ன தெரியும்? இனியும் அப்படிலாம் வேதனை பட நாங்க தயாரா இல்லை” பெரிய மாமி பேசிக் கொண்டே போனார்.
ஜனா அடுத்து என்ன பேசியிருப்பானோ, “ஜனா…” என்ற தன் அண்ணனின் அழுத்தக் குரலில் அமைதியாக ஜெய்யை பார்த்தான்.
“அம்மாவை அழைச்சிட்டு வா” என கட்டளையிட்ட ஜெய், பாட்டியின் கைப்பற்றி அவரை எழுப்பி விட்டான்.
“இருந்திட்டு போடா ஜெய்” என்ற பெரிய மாமா, மற்றவர்களிடம் பொதுவாக, “தேவையில்லாம பேசாம வேற வேலை இருந்தா பாருங்க” என்றார்.
“இல்ல மாமா, வேலையிருக்கு. இப்ப கிளம்பினாதான் சரியா இருக்கும். கல்யாணத்துக்கு வந்திடுறோம்” என சாதாரணம் போலவே சொல்லிக் கொண்ட ஜெய், மற்றவர்களுக்கு பொதுவாக, “போயிட்டு வர்றோம்” என சொல்லி பாட்டியோடு வெளியேறி விட்டான்.
அம்மாவை அழைத்துக் கொண்டு வந்த ஜனா யாரிடமும் விடை பெற்றுக் கொள்ளவில்லை. துளசி ஒவ்வொரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டார்.
சின்ன மாமா தன் மகள் சுரேகாவை அழைத்தார். அவளின் கன்னம் வருடி அவளிடமும் விடைபெற்றார் துளசி. மளுக் என கண்ணீர் விட்டாள் சுரேகா.
“போதும் போதும், ஏன் இப்ப அழுகுற? இப்பவே எங்க கூட வர்றியா என் அண்ணனை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” கோவமாக கேட்டான் ஜனா.
“டேய் என்னடா பேசுற?” என ஆளாளுக்கு அவனை அதட்ட, சுரேகாவின் பதில் வேண்டி அவளையே பார்த்திருந்தான் ஜனா.
சட்டென நடந்த சுரேகா அவளின் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு அழுகையை நிறுத்தி விட்டு வெற்றுப் பார்வை பார்த்தாள்.
“குட், இப்படியே இரு. இதை பொறுத்துக்குவேன், இன்னொரு வாட்டி என் அண்ணன் முன்னாடி ஜைனாக்காரி மாதிரி கண்ண சுருக்கி சுருக்கி பார்க்கிறது மிட்டாய் சாப்புடுற சின்ன பப்பா மாதிரி கண்ண கசக்கி கசக்கி அழுது வடியுறதுன்னு நின்ன… சின்ன வயசுல எப்ப என்ன விளையாடினாலும் அழுகுணி ஆட்டம் ஆடி ஜெயிப்ப, குணத்தை மாத்தாம என் அண்ணன்கிட்டேயும் அழுகுணி ஆட்டம் ஆடிட்டீல்ல? ஒரு நாள் இதுக்காக நீ ஃபீல் பண்ணல… பண்ண வைக்கிறேன்” ஒரு விரல் காட்டி மிரட்டினான்.
“டேய் ரெண்டு போட்டேனா தெரியும், சின்ன பையன் மாதிரி பேசுடா” அதட்டினார் பெரிய மாமா.
சின்ன மாமாவும் அவர் பங்குக்கு திட்டினார். துளசி மகனின் கையை பிடித்து இழுத்தார்.
“யாரு நான் சின்ன புள்ளையா? ஸ்கூல் படிக்கும் போதே குடும்பத்தை தாங்கினவனோட தம்பி நான். நல்லது கெட்டது எனக்கும் தெரியும். என் அண்ணியா வரல்லாம் சில தகுதி வேணும். இப்படி எதுக்கெடுத்தாலும் கண்ணுல தண்ணி வைக்கிற பொண்ணு வந்தா என் அண்ணன் விளங்கின மாதிரிதான். நீங்க என்ன என் அண்ணனை வேணாம்னு சொல்றது, நான் சொல்றேன் என் அண்ணனுக்கு இந்த அழுகுணி அழுகாட்சி பொண்ணு வேணாம்” சத்தமாக சொன்னான் ஜனா.
“சீச்சீ… இந்த பழம் புளிக்கும்னு சொன்ன நரியோட கதை பத்தி நல்லாவே தெரியும்டா” என்றார் பெரிய மாமி.
“மாமி உன்னை ரூம்ல வச்சி பூட்டின எனக்கு உன் வாயை பூட்ட தெரியாதுன்னு நினைச்சிட்டியா?” அம்மாவின் கையை உதறி விட்டு மாமியை நோக்கி நடந்தான் ஜனா.
“அவன்தான் சின்ன பையன் விவரம் இல்லாம ஏதோ பேசுறான்னா… நீ சும்மா இரேன்டி!” மனைவியை கடிந்த பெரிய மாமா, “உனக்கு மட்டுமரியாதையே தெரிய மாட்டேங்குது. அப்பா இல்லாம வளர்ந்தவன் இப்படித்தான் இருப்பான்னு உன்னை மத்தவங்க பேசுறது சரின்னு காட்டாதே. நீ கிளம்பு” என ஜனாவிடம் சொன்னார்.
“அப்பா இல்லாம என்ன நான் கேட்டு போயிட்டேன்?” கோவப்பட்டான் ஜனா.
“நல்லா பேசுவடா, அன்னிக்கு உங்கப்பா பட்ட கடனை எல்லாம் உன் மாமாங்க இல்லைனா அடைச்சிருக்க முடியாது” சொல்லிக் காட்டினார் பெரிய மாமி.
“அப்ப ஏதோ உதவி செஞ்சீங்கன்னா என்ன வேணும்னாலும் பேசலாம்னு இல்லை மாமா, உங்க பொண்ணுக்கு சடங்குன்னு பத்து சவரன்ல போட்டானே என் அண்ணன், எந்த கணக்கு? சின்ன மாமா வீடு கட்டும் போது அவன்தான் நின்னு கட்டி கொடுத்தான், ஒத்த பைசா வாங்கிகிட்டானா? அது எந்த கணக்கு?” ஜனாவுக்கு ஆத்திரத்தில் கழுத்து நரம்புகள் புடைத்துக் கொண்டன.
“சொல்லி காட்டுறியாடா?” சீறினார் சின்ன மாமா.
“உங்க அண்ணி பேசினப்போ கேட்டுட்டு நின்னீங்கல்ல? இப்ப என்னை மட்டும் கேள்வி கேட்குறீங்களா மாமா?” கேள்வி கேட்டான் ஜனா.
பெரிய மாமா சமாதானம் பேச முயல அவரிடமும் அடங்கிப் போகவில்லை ஜனா.
உங்களையே எதிர்த்து பேசுகிறான் பாருங்கள் என பெரிய மாமாவின் மனைவி அவரை தூண்டி விட, ஜனா அவனது மாமியை பேச, அவனை அடிக்க கை ஓங்கி விட்டார் பெரிய மாமா.
“அடிச்சிடுவீங்களா… எங்க அடிங்க அடிங்க பார்ப்போம்” சட்டையின் கையை ஏற்றி விட்டுக் கொண்டு மாமாவை நோக்கி வந்தான் ஜனா.
அம்மாவையும் தம்பியையும் இன்னும் காணாமல் அங்கு வந்த ஜெய், வேகமாக ஓடிப் போய் தம்பியை தடுத்து நிறுத்தினான்.
அண்ணனின் கையையும் உதறிய ஜனா, “என்ன உங்களுக்கெல்லாம் பெரிய டான்’னு நெனப்பா? வாங்க எத்தனை பேர் அடிக்கணும் என்னை, வாங்க…” என்றான்.
அடுத்து சப் என்ற சத்தம் அனைவரையும் அமைதி படுத்தியது.
ஜெய் தன் தம்பியின் கன்னத்தில் அடித்திருந்தான்.
*****
காருக்குள் அமைதி நீடித்தது. ஜெய்தான் காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்திருந்த ஜனா தன் அண்ணனின் மீது கடுங்கோவத்தில் இருந்தான். துளசி அழுகை வற்றி விட்ட விழிகளோடு பார்வையை எங்கோ வைத்திருந்தார்.
பாட்டிக்கு இந்த சூழல் பிடிக்கவில்லை.