அத்தியாயம் -29(2)

“ஸ்டார்ட் பண்ணாத ண்ணா. நான் வர்ற வரை வீட்டையும் ராஜாம்பாவையும் ஒழுங்கா கவனிச்சுக்க ண்ணா. அண்ணி கூட டுக்கா விட்டு விளையாடுறத அடியோட நிறுத்திட்டு நல்லா… ஹ்ஹான்… இந்த அப்பாம்மா விளையாட்டு கூட்டாஞ்சோறு சமைச்சு விளையாடுறதுன்னு நல்ல பிள்ளையா இரு, வரும் போது உனக்கு கடலை பர்பி வாங்கிட்டு வந்து தர்றேன்” என ஜனா சொல்லவும் சிரித்து விட்டான் ஜெய்.

அன்பாக தன் அண்ணனை பார்த்திருந்த ஜனா அவனை அணைத்துக் கொண்டான்.

“மஹதிய நல்லா பார்த்திருக்கேன் ண்ணா, நீ ஹேப்பியா இரு ண்ணா” என்ற தம்பியின் முதுகில் பாசமாக தட்டிக் கொடுத்து விலகினான் ஜெய்.

பாட்டியிடமும் துளசியிடமும் விடைபெற்றுக் கொண்டவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பி வைப்பதற்காக உடன் சென்றனர் ஜெய்யும் ஸ்ரீயும். வரும் வழியில் ஜோதியை பார்த்து விட்டு அலுவல் சம்பந்தமாக வேறு இடம் சென்றனர்.

அடுத்த ப்ராஜக்ட்டிற்காக ஜெய் பார்த்திருக்கும் இடம். இனி ஸ்ரீயும் அலுவலகம் வருவதாக முன்னரே திட்டமிட்டிருந்ததுதான். அந்த இடம் ஸ்ரீக்கும் பிடித்திருந்தது.

வேலை சம்பந்தமாக பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். இரவில் பஞ்சமில்லாமல் அன்பை பரிமாறிக் கொண்டனர். இடையில் நேர்ந்து விட்ட பிரிவால் தவற விட்ட வருடங்களை ஈடு செய்ய முயன்றனர்.

அவர்களின் வாழ்க்கை சுமூகமாகி விட்டதற்காக பெரியவர்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி.

அடுத்து வந்த மாதத்தில் சுரேகா சியாமளன் இருவருக்கும் விமரிசையாக திருமணம் நடந்தேறியது. இருண்டு விட்டதாக அனைவருமே நினைத்திருந்த சுரேகாவின் வாழ்க்கையிலும் பிரகாசம் சியாமளன் ரூபத்தில் பற்றிக் கொண்டது.

யாருக்கும் பெரிதான கவலைகள் இன்றி நாட்கள் இயல்பாக கடந்தன.

ஒரு நாள் காலையில் கணவனின் காதில் ஏதோ செய்தி சொன்னாள் ஸ்ரீ. கலங்கி விட்ட கண்களோடு மனைவியின் முகத்தை பற்றிக் கொண்டு ஆழமாக பார்த்தான் ஜெய்.

“இந்த முறை ரொம்ப பத்திரமா உங்க பாப்பாவை உங்க கைல கொடுப்பேன்” அழுகையும் சிரிப்புமாக சொன்னாள் ஸ்ரீ.

அவளின் பார்வையில் பயமும் இருப்பதை உணர்ந்து கொண்டவன் அவளது நெற்றியில் நெற்றி மோதி, “உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்குவேன் ஸ்ரீ, நான் இருக்கேன், நம்ம பாப்பாவை நல்ல படியா பெத்துக்குவோம்” என்றான்.

“வலி எனக்குதான்” என்றாள்.

“அத மாத்த முடியாது, ஆனா அந்த வலிய நீ தாங்குற அளவுக்கு உன்னை தாங்கிக்குவேன், என்னை நம்புறியா?” எனக் கேட்டான்.

சம்மதமாக தலையாட்டியவளை அணைத்துக் கொண்டவன் அவளது வயிற்றை வருடிக் கொடுத்தான்.

சில நிமிடங்கள் சென்று கணவனின் கையை எடுத்து அதில் அழுத்தமாக முத்தமிட்டாள். அவனை பார்த்து நிறைவாக புன்னகை செய்து அவனது மார்பிலேயே தலை சாய்த்துக் கொண்டாள் தன்யஸ்ரீ.

இதம் தருவதை போல தன் அணைப்பின் இறுக்கத்தை கூட்டினான் ஜெயவர்தன்.

சில வருடங்களுக்கு பிறகு…

வீட்டின் பின்னாலிருக்கும் வசந்த மண்டபத்தில் இருக்கை ஒன்றில் அமர்ந்து சுந்தர காண்டம் படித்துக் கொண்டிருந்தார் பாட்டி.

துளசியும் ஜோதியும் தங்கள் பேரப் பசங்களின் மீது கவனம் வைத்துக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தனர்.

ஆமாம் சென்ற வருடம்தான் இனியும் தனியாக இருக்கலாகாது என சொல்லி ஜோதியை வற்புறுத்தி தங்களோடு அழைத்து வந்திருந்தனர்.

சென்ற வாரம் சுரேகா சியாமளன் தம்பதியினரின் மகனுக்கு மூன்றாவது பிறந்தநாள் விழா நடந்திருந்தது. அங்கு நடந்த சுவாரஷ்ய சம்பவங்கள் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜெய்யின் நான்கு வயது மகன் விஸ்வாவும் ஜனாவின் இரண்டரை வயது மகள் ஷிவன்யாவும் பந்தை உருட்டி தரையில் உருண்டு என சுறு சுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். சற்று தள்ளி ஜனாவும் மஹதியும் ஷெட்டில் கார்க் விளையாடிக் கொண்டிருந்தனர்.

குழந்தைப்பேறுக்கு பின் மஹதிக்கு நன்றாக எடை கூடி விட்டது. ஜனாவுக்கு எப்படி இருந்தாலும் அவள்தான் பேரழகி. அவளுக்குதான் உடல் எடை நினைத்து நிறைய வருத்தம். ஆதலால் மனைவியின் கவலையை போக்க தினமும் மாலை ஐந்து மணிக்கு என்ன வேலையாக இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி விட்டு மனைவியோடு விளையாட வந்து விடுவான் ஜனா.

கடந்த ஐந்து மாதங்களாக சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மஹதிக்கும் ஆரோக்கியமான முறையில் எடை குறைந்து வருகிறது.

வியர்த்து விறு விறுத்து சோர்ந்து போனவளாக வெறும் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள் மஹதி. தண்ணீர் பாட்டிலோடு அவளருகில் வந்தவன் சில நிமிடங்கள் கழித்து அவளுக்கு பருக தண்ணீர் கொடுத்தான்.

“புஸு புஸுன்னு நீ இருக்கிறதுதான் எனக்கு வசதியா இருக்குன்னா எங்க கேட்குற நீ?” என்றான் ஜனா.

“சும்மா இருங்க, உங்க பொண்ணு பின்னாடி ஓடவே தனி தெம்பு வேணும். அடுத்த புள்ள வேணும்ல, அதுக்குள்ள பழைய படி ஆகணும் நான்” என்றாள் மஹதி.

“அடி மக்கு, அடுத்த புள்ள வர்றதுக்கு இப்படி கிரவுண்ட்ல விளையாடினா போதாது” கிண்டலாக சொன்னான் ஜனா.

“ஆமாம் பெட்ல ஒண்ணுமே செய்யாத மாதிரி பேச்சை பாரு!” என்றாள்.

“மஹதிமா… நம்ம விளையாட்டு ஜகஜோதியா நடக்கிறது ஓகே, ஆனாலும்…” என்றவன் அவளின் காதை நெருங்கி வந்து, “பாதுகாப்பு இல்லாம விளையாடணும்ல…” என்றான்.

குறும்பு பார்வையோடு அவனது காதை திருகினாள் அவள்.

“ஓ… ஓஹோ… நீ ரெடின்னு சொல்றியா பஞ்சுமிட்டாய்?” எனக் கேட்டவனின் முடியைப் பிடித்து செல்லமாக இழுத்துக் கொண்டே மேலும் கீழுமாக தலையாட்டினாள் மஹதி.

அவளிடம் மயங்குவது போல கண்களை சுழற்றிக் காட்டியவன் உதடுகள் குவித்து முத்தமொன்றை அவளை நோக்கி பறக்க விட்டான்.

பணி நடந்து கொண்டிருந்த சைட்டில் இருந்தாள் ஸ்ரீ. அவளை தேடிக் கொண்டு அவ்விடம் வந்த ஜெய் கண்டனமாக பார்த்துக் கொண்டே அவளை நெருங்கினான்.

“நீங்க எப்ப இங்க வந்தீங்க?” ஆச்சர்யமாக கேட்ட ஸ்ரீ, “யாரு சசி சொன்னாரா? அவரோட…” என சலித்துக் கொண்டாள்.

ஜெய் வேறு வேலையாக அரியலூர் வரை சென்றிருந்தான். ஐந்து மாத கர்ப்பணியாக இருக்கும் மனைவியை அலுவலக வேலைகள் தவிர வேறு வேலைகள் பார்க்க அனுமதிப்பதில்லை அவன். இந்த விஷயத்தில் ஸ்ரீயும் கணவனின் வார்த்தையை மீறுவதில்லைதான். இன்று சைட்டில் ஒரு பிரச்சனை, இவளோ ஜெய்யோ நேரில் செல்ல வேண்டிய கட்டாயம்.

அவனிடம் சொன்னால் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு வருவானோ என இவளுக்கு பயம். ஆகவே இவளே நேரில் வந்து விட்டாள்.

பிரச்சனை பெரிதாகி பெரும் நஷ்டம் ஏற்பட்டால் கூட சும்மா விட்டு விடுவான், ஸ்ரீக்கு அங்கு சின்ன கீறல் என்றால் கூட தன்னை தலை கீழாக கட்டித் தொங்க போட்டு விடுவான் என சசிக்கு பயம். ஆகவே ஸ்ரீயின் எச்சரிக்கையையும் மீறி ஜெய்க்கு தகவல் தந்து விட்டான்.

பிரச்சனையை சரி செய்திருந்த ஸ்ரீ அங்கிருந்து கிளம்பும் தருவாயில்தான் இருந்தாள். என்ன நடந்தது என எவ்வித விசாரணையும் இன்றி, “அதெப்படிடி என் பேச்சை கேட்கவே கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கியா?” எனக் கோவப்பட்டான் ஜெய்.

முன்னரெல்லாம் ஸ்ரீயும் பதிலுக்கு பதில் கோவம் கொள்வாள், நன்றாக திருப்பித் தருவாள். இப்போது கணவனின் குணம் அவளுக்கு அத்துப்படி, அவன் உஷ்ணமாக இருக்கும் வேளைகளில் மௌனம்தான் அவளின் கேடயம்.

சற்று நேரம் சென்றுதான் அவனிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வாள். ஜெய்யும் தன் கோவ இயல்பை மாற்றிக் கொள்ள அவனால் இயன்ற அளவு மெனெக்கெடுகிறான். ஆனாலும் ஒரேயடியாக அவனால் மாறிக் கொள்ள முடியவில்லை.

அமைதியாக அவ்விடம் விட்டு சென்றவள் காரில் ஏறிக் கொண்டாள். என்னவென விளக்க வந்த சசியிடம், “ரொம்ப முக்கியம், அவளே சரி பண்ணிட்டாத்தானே? விவரத்தை அப்புறம் விளக்கி சொல்லு, இங்க நீ இருந்து பார்த்துக்க” என சொல்லி ஜெய்யும் காருக்கு வந்தான்.

அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் காரை நிதானமாக வீடு நோக்கி விட்டான்.

அறைக்கு சென்றால் சண்டை போடுவான் என்பதால் நேராக வசந்த மண்டபம் சென்று விட்டாள். அவனும் அவளை பின் தொடர்ந்து அங்கு வந்தான். ஸ்ரீயை கண்டதும் பிள்ளைகள் இருவரும் அவளிடம் ஓடி வந்தனர்.

விஸ்வாவின் தலையை கோதி விட்டவள் ஷிவன்யாவை தூக்கிக் கொஞ்சினாள். வேகமாக அவளிடம் வந்தவன் ஷிவன்யாவை தான் வாங்கிக் கொண்டு, “என்ன ஸ்ரீ இது?” என கெஞ்சலும் கண்டனமும் கலந்து கேட்டான்.

“இதுலலாம் பயப்பட ஒண்ணுமில்லங்க, குழந்தை ஆசையா வரும் போது எப்படி தூக்க மாட்டேன்னு சொல்ல?” என்றாள் ஸ்ரீ.

தம்பியின் மகளிடம், “பாப்பு குட்டி பெரிம்மா வயித்துல குட்டி பாப்பு இருக்கு, இனிமே தூக்க சொல்லக்கூடாது. எவ்ளோ நேரம் வேணும்னாலும் பெரிப்பா தூக்கிப்பேனாம்” என்றான்.

தலையாட்டிக் கொண்ட ஷிவன்யா இறக்கி விட சொல்லி மீண்டும் விஸ்வாவோடு விளையாட ஆரம்பித்து விட்டாள்.

ஸ்ரீ தன் மாமியார் மற்றும் அம்மாவோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள். குழந்தைகளுக்கு இணையாக தரையில் புரளத் துவங்கியிருந்தான் ஜெய். எப்போதும் அவன்தான் பிள்ளைகளின் ஃபேவரைட்.

வெறும் தரையில் அவனை தள்ளி மார்பில் அமர்ந்திருந்தான் விஸ்வா, பெரியப்பாவின் கன்னத்தில் ஒட்டியிருந்த மண் துகள்களை தன் பிஞ்சுக் கரங்கள் கொண்டு தட்டி விட்டுக் கொண்டிருந்தாள் ஷிவன்யா.

“ஹையோ தம்பிய என்ன பாடு படுத்துதுங்க பாரேன், போடி அவரை எழுப்பி விடு, குடிக்க ஏதாவது கொடுத்து கவனி” என மகளிடம் சொன்னார் ஜோதி.

“அவர் எனர்ஜியே இந்த பசங்கதாம்மா, இருக்கட்டும் விடு, நான் ரூம் போறேன்” என சொல்லி சென்று விட்டாள் ஸ்ரீ.

குழந்தைகளுடன் நன்றாக நேரம் செலவிட்டு விட்டுத்தான் அறைக்கு வந்தான் ஜெய். பிள்ளைகள் இப்போது ஜனாவின் சக்தியை வடிய வைத்துக் கொண்டிருந்தனர்.

“கோவம் குறைஞ்சுதா?” கணவனிடம் கேட்டாள் ஸ்ரீ.

“கோவமா? நிறைய டென்ஷன் பண்ற என்னை” என்றான்.

“அங்க அடிதடியா நடந்திட்டு இருந்துச்சு? அப்ரூவல் இல்லைனு அத்தாரிட்டீஸ் விசாரிக்க வந்திருக்காங்க, நாம யாராவது போகணும்தானே? அங்க எல்லாரும் நம்ம ஆளுங்க, என்ன பயம்? அதான் நானே போனேன்” என விளக்கம் சொன்னாள்.

“இருந்தாலும் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நடக்கிற இடத்துக்கு போவக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்தானே, அப்படி என்ன பண்ணிட போறாங்க, நாளைக்கு நான் வந்து சால்வ் பண்ணிருப்பேன்” என்றான்.

“இன்னிக்கு வேலை ஸ்டாப் ஆகியிருக்கும், லாஸ்தானே நமக்கு? நான் கவனமாதான் இருக்கேன்” சமாதானமாக சொன்னாள்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டே தங்களை சுத்தம் செய்து கொண்டு இலகுவான ஆடைக்கு மாறியிருந்தனர். ஜெய்யும் இயல்புக்கு திரும்பியிருந்தான்.

அவளுக்கும் தனக்கும் பருக பழச்சாறு வரச் செய்தான் ஜெய். வயிறு நிறைந்ததும் கால்கள் நீட்டி படுக்கையில் அமர்ந்து கொண்டவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

அவனது அமைதியில் கடுப்பானவள் அவனை தன்னை நோக்கி மேலே எழுப்பினாள். அவளை அதிகம் நோக செய்யாமல் தானே எழுந்து அவளின் முகத்தை நெருக்கமாக பார்த்தான்.

அவள் புருவங்களை கேள்வியாக உயர்த்தவும், “நீதான் சொல்லணும்” என்றான்.

“நீங்களே ஏதாவது சொல்லுங்க” என குறும்பாக சொன்னாள்.

ஒரு பக்கம் உதடுகள் வளைந்த கிண்டல் சிரிப்புடன் அவளின் முகத்தை இடைவெளி இல்லாத அளவுக்கு நெருங்கினான். இதழ்கள் தொட்டுக் கொண்டாலும் முத்தமிடவில்லை அவன்.

அவனது பிடரி முடியை வலிக்க பிடித்து இழுத்தவள், “நீங்கதான் எனக்கு நிறைய கடன் பாக்கி வச்சிருக்கீங்க, போங்க… நான் மாட்டேன்” என்றாள்.

“வட்டியோட அப்புறமா திருப்பி தருவேன். மனசு வச்சு இந்த ஏழைய வாழ வைங்க முதலாளியம்மா!” என்றான்.

“ம்ம்ம்… வட்டியும் முதலுமா நல்லா தந்தீங்க…” இடது கையால் தன் வயிற்றை தடவிக் கொண்டவள் வலது கையின் பிடியிலிருந்த அவனது தலையை தன் முகத்தை நோக்கி இழுத்தாள்.

இத்தனை நேரமாக ஜெய் பட்ட கோவத்திற்காக முத்தம் வழியே பதில் சொன்னவள் திருப்தி அடைந்தவளாக விலகினாள்.

“ராட்சசி!” செல்லமாக திட்டியவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் அவளின் மடி சாய்ந்து கொண்டான்.

அவனது கன்னத்தை பிய்க்காத குறையாக பிய்த்து முத்தம் கொஞ்சினாள்.

“சும்மா இரு ஸ்ரீ” என்றவன் அவளின் கையைப் பற்றி தன் நெஞ்சில் வைத்து அழுந்தப் பிடித்துக் கொண்டான்.

இனிதாக தொடரட்டும் அவர்களின் இல்லறம்!

நிறைவுற்றது!