ஜனா மஹதி இருவரது திருமணமும் சமீபத்தில் இருந்தது. ஜெய்யும் ஸ்ரீயும் எல்லா வேலைகளையும் பொறுப்பாகவும் சிறப்பாகவும் பார்த்துக் கொண்டனர். இப்போது அழைப்பிதழ் கொடுப்பதில் இருவரும் பிஸி.
அலுவலகம் சென்றிருந்த ஜெய் மனைவியை அங்கு வர சொல்லியிருந்தான். அவனது வேலை முடிந்ததும் இருவரும் சேர்ந்து அவனது மாமக்கள் வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க செல்வதாக திட்டம்.
அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் ஸ்ரீயின் கண்களில் தென்பட்டான் சசி. சைலேஷ் கொடுத்த பார்ட்டிக்கு பிறகு இன்றுதான் இவனை சந்திக்கிறாள். பலமாக வரவேற்பு கொடுத்தவனை கோவமாக பார்த்தாள்.
“ஸாரே இன்கிரிமெண்ட் போட்டுக் கொடுத்திட்டாரு, நீங்க ஏன் முறைக்கிறீங்க?” எனக் கேட்டான்.
“இன்கிரிமெண்ட்டா?” வியப்பாக கேட்டாள்.
“எவ்ளோ நாளா சொல்லிட்டு இருக்கேன் போதையானா நிம்மதி தானா வரும்னு, எங்க கேட்டாரு? அன்னிக்கு தெரியாம நடந்த விஷயத்துலதான் நான் சொன்ன உண்மை அவருக்கு புரிஞ்சுது போல” என்றான்.
ஸ்ரீ வந்திருப்பதை கண்காணிப்பு கேமராவில் கண்டு விட்டு வெளியில் வந்த ஜெய்யின் காதிலும் சசி பேசியது கேட்டிருந்தது. சசிக்கும் பின்னால் நின்றிருந்த கணவனை முறைத்தாள் ஸ்ரீ.
முதுகை தடவி விட்டுக் கொண்டே, “எங்க ஸார் போக? சம்பளம் வேற ஏத்தி கொடுத்திருக்கீங்க, அதுக்கு தக்க நிறைய உழைக்கணும் ஸார் நான். உங்க நிழலா இருந்து வேலை பார்க்க போறேன்” என்றான் சசி.
ஸ்ரீக்கு சிரிப்பு வர, வாயை கையால் மறைத்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். ஜெய்க்கும் சிரிப்பு வந்தது.
“நீ இங்கேயே இருந்து வேர்வை சிந்துடா” என கிண்டலாக சொல்லி மனைவியோடு புறப்பட்டு விட்டான் ஜெய்.
மாலையில்தான் திருச்சிக்கு திரும்பினார்கள். திருமண வேலையாகவே சுற்றுகிறோமே, ஒரு மாறுதலுக்கு சினிமா செல்லலாம் என ஜெய்தான் கூறினான். ஸ்ரீயும் மறுக்கவில்லை.
திரையரங்கின் வாசலில் காத்திருந்தான் ஜனா. சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்த மஹதி, “வீட்ல பொய் சொல்லிட்டு வர ஒரு மாதிரி இருக்கு, இனிமேலாம் இப்படி கூப்பிடாதீங்க” என்றாள்.
“கல்யாணம் பண்ணிகிட்டு திருட்டுத்தனமா ஊர் சுத்த முடியுமா?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் சுத்தலாம்” என்றாள்.
“மக்கு! யாரு என்ன கேட்பா, அப்போலாம் ஜாலியா சுத்தலாம். இப்ப கிடைக்கிற ஜிவ்வு ஃபீல் அப்ப கிடைக்காது. வா வா…” அவளின் கையை பிடித்திழுத்துக் கொண்டு நடந்தான்.
திரையரங்கின் உள்ளே நுழையும் போதே, “டேய் ஜனா!” என அழைத்தான் ஜெய்.
ஜனாவின் கையை உதறி விட்டு ஜெய்யின் குரல் வந்த திசையை பயத்தோடு பார்த்தாள் மஹதி.
அவர்களிடம் வந்த ஜெய் நன்றாக கடிந்து கொண்டான். மஹதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஓய்வறை சென்று விட்டு வந்த ஸ்ரீ நடப்பதை புரிந்து கொண்டு கணவனின் கையை பிடித்து அவனை அடக்கினாள்.
“சினிமா வந்தது தப்பில்ல, சொல்லிட்டு வர வேண்டியதுதானே? ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறதா ஸ்ரீகிட்ட சொல்ல வச்சிருக்க இவளை. சின்ன பொண்ணுக்கு பொய் பேச கத்து தர்றியா நீ?” என பிடித்துக்கொண்டான் ஜெய்.
அக்காவிடம் வந்து அவளை ஒன்றிக் கொண்டு நின்றாள் மஹதி. அவளை சட்டென தன்னனிடம் இழுத்து நிறுத்திக் கொண்ட ஜனா, “மூவி ஸ்டார்ட் ஆகிடுச்சு ண்ணா, முத பத்து நிமிஷம்தான் ஒர்த்னு சொல்லிக்கிறாங்க. திட்டுறதை படம் முடிஞ்சதும் கன்டினியூ பண்ணுவியாம்” என சொல்லி மஹதியோடு அவர்களின் இருக்கைக்கு சென்று விட்டான்.
ஜெய் தன் தம்பி சென்ற திசையை முறைத்துக் கொண்டிருந்தான். “ஹப்பா… சின்ன பசங்க என்ஜாய் பண்ணிட்டுத்தான் போகட்டுமே என்ன இப்போ? வாங்க” கணவனை இழுத்துக் கொண்டு அவர்களின் இருக்கைக்கு சென்றாள் ஸ்ரீ.
“நிச்சயம் முடிஞ்சா பாதி ஹஸ்பண்ட்னு என் ராஜாம்பா சொல்லிருக்கு. என் பெட் ரூம் தவிர மத்த எல்லா இடத்துக்கும் உன்னை தனியா அழைச்சிட்டு போற ரைட்ஸ் எனக்கு வந்திடுச்சு. அவர் பழைய படமா பார்த்து பார்த்து கற்காலத்துக்கே போயிட்டார். அவர் ஏதோ பேசுறார்னு கண்ணுல தண்ணி வுடுவியா நீ? சில்லி கேர்ள்!” என்ற ஜனா மஹதியின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான்.
“நான்தான் வேணாம்னு சொன்னேன்ல, மாமா என்னை தப்பா நினைச்சிருப்பாங்க” என்றாள் மஹதி.
“நீ இப்போ ஜாலி மூட்க்கு மாறலைன்னா சப் சப் சிப் சிப்னு கிஸ் கிஸ்ஸா அடிச்சிடுவேன்” என ஜனா மிரட்ட பயந்து விட்டாள். யாரும் கேட்டு விட்டார்களோ என அக்கம் பக்கம் பார்த்தவள் பவ்யமாக எழுந்து நின்றாள். மஹதியின் பார்வை சென்ற பக்கம் பார்த்தான் ஜனா.
ஜெய்யும் ஸ்ரீயும் இங்குதான் வந்தனர். இவர்களின் பக்கத்து இருக்கைகள்தான் அவர்களுக்கு.
“ஆண்டவா என்னப்பா ஏன் ஏன்… ஏன் இப்படி?” மேலே கையை காட்டி கடவுளிடம் பேசிய ஜனாவும் எழுந்து கொண்டான். “நாங்க விரக்தி அடைஞ்சு கிளம்பறோம்” என சொல்லி மஹதியின் கையை பிடித்தான்.
ஸ்ரீதான் சமாதானம் செய்து அவர்களை அமர வைத்தாள். மஹதி சுவர் ஓரமாக அமர, அவளுக்கு பக்கத்தில் ஜனா. அவனருகில் கணவனை விடாமல் தான் அமர்ந்து கொண்டாள் ஸ்ரீ.
“நெருப்பு மேல உட்கார மாதிரி உட்கார வச்சிட்டீங்களே அண்ணி!” என்றான் ஜனா.
“அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார், நீ ஃப்ரீயா இரு” என்றாள் ஸ்ரீ.
“ஹ ஹ… நான் என்னை சொல்லிக்கல, அண்ணனை அதான் ‘நம்பி கட்டினேன் நல்லாவே இல்லை… ச்சீ நன்றாக இருக்கிறேன்’ அப்படினு நீங்க சொல்லிக்கிற உங்க ஸ்டீல் கம்பியை சொன்னேன். பப்ளிக் பிளேஸ்ல இவளை என்ன பண்ணிடுவேன்னு என்னையவே எட்டி எட்டி பார்க்கிறத பாருங்க” என்றான்.
ஸ்ரீ முறைக்கவும், “இப்போ பாருங்க” என்றவன் ஸ்ரீயை தன் இடத்தில் அமர வைத்து அவன் அண்ணன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“போடா ராஸ்கல். போ எல்லாருக்கும் பாப்கார்ன் வாங்கிட்டு வா” என ஏவினான் ஜெய்.
ஜனா முறைக்கவும், சிரித்த ஜெய், “சரி சரி அப்புறம் போ. இப்ப பழைய படி மாறி உட்காரு. எங்க போனாலும் சொல்லிட்டு போங்கடா, போ” என்றான்.
“நீ மட்டும் சொல்லிட்டா அண்ணிய அழைச்சிட்டு போற?” என முணு முணுத்துக் கொண்டேதான் இடம் மாறினான் ஜனா.
நல்ல திரைப்படம். ஸ்ரீயும் ஜனாவும் விழுந்து விழுந்து சிரித்ததில் அக்கம் பக்கத்தினர் கூட வேடிக்கை பார்த்தனர்.
படம் முடியவும் மஹதியை காரில் விடுவதாக சொன்னான் ஜெய். ஜனா தன் அண்ணியை பார்த்தான்.
“லேட் ஆகிடுச்சு ஜனா” என்றாள் ஸ்ரீ.
“வர்றப்ப கூட ஆட்டோல வந்தா ண்ணி, இந்த பாவமெல்லாம் உங்களை சும்மா விடாது சொல்லிட்டேன்!” கால்களை தரையில் உதைத்து புலம்பலாக சொன்னான் ஜனா.
மஹதியும் அக்காவை கெஞ்சலாக பார்க்க அவள் கணவனை பார்த்தாள். அவன் ஏதோ சொல்லப் போக அதற்கு முன், “ஓகே சொல்லிட்டார், கிளம்புங்க… கிளம்புங்க” என்ற ஸ்ரீ கணவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
“நான் பேசிக்கிறேன்” என அவள் சொல்லியும் காரில் வரும் போதெல்லாம் அனத்திக் கொண்டேதான் வந்தான். பாதி வழியில் அவனது கன்னத்தில் முத்தமிட்டு, “கப்சிப்!” என அதட்டினாள்.
திகைப்பும் மலர்ச்சியுமாக அவளை பார்த்தவன், “வீட்ல போய் பேசுவேன். கன்னத்துக்கு கொடுத்தா மட்டும் அடங்கிறது இல்லை ஜெய் வாய்” என உற்சாகமாக சொன்னான்.
“ஆசைய பாரு!” என அவள் சொன்ன விதமே சொன்னது ஜெய்யின் காட்டில் இல்லையில்லை அவனது இதழ்களுக்கு முத்தமழை என்பதை.
வீட்டு வாயிலில் மஹதியை இறக்கி விட்ட ஜனா அவளோடு சேர்ந்தே வீட்டுக்குள் சென்றான். தோழியை பார்த்து விட்டு வந்தவளை வழியில் பார்த்து அழைத்து வந்ததாக அத்தையிடம் சொன்னான்.
அவனுக்கு குடிக்க கொண்டு வருவதாக சொல்லி ஜோதி உள்ளே சென்ற வேளையில் மஹதியின் இதழ்களில் இனிய கவி எழுதி அவளை அதிர விட்டான்.
விடை கொடுக்கும் நேரத்தில் அவளிடம் சின்ன பரிசுப் பெட்டியை கொடுத்தான்.
“பன்னெண்டு மணிக்கு நேர்ல விஷ் பண்ணி என் கையால போட்டு விடணும்னுதான் ஆசை, இன்னிக்கு அது பிராக்டிகலா முடியாது. அடுத்த வருஷம் என் மடியில ரொம்ப நெருக்கமா உன்னை வச்சுகிட்டு என் கிஃப்ட் உன் கைல தருவேன். ஹேப்பி பர்த்டே பஞ்சு மிட்டாய்!” வசீகரமாக சொல்லி விட்டு கிளம்பினான்.