ஜெய்யின் மனதில் அபாய அலாரம் அடித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமையல் பாத்திரங்களை திறந்து பார்த்து எதையோ எடுத்து சுவை பார்த்தான். என்ன பதார்த்தம் என அவனுக்கு தெரியவில்லை, ஓஹோவாக இல்லா விட்டாலும் சுமார் எனும் சொல்லும் அளவில் இருந்தது.
‘இது என்ன டிஷ்?’ என கேட்க நினைத்தவன் அவளின் ஆவலான பார்வையில் இளகிப் போனவனாக எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
“எல்லாரும் பசில உட்கார்ந்திருக்காங்க ஸ்ரீ, எடுத்து வந்து வை, பார்த்துக்கலாம்” என்றான் ஜெய்.
சில நிமிடங்களில் உணவு மேசைக்கு சாப்பாடு வந்து சேர்ந்தது.
யாரும் குறையாக ஏதும் சொல்லவில்லை, அவர்கள் சொல்லி விடுவார்களோ என ஜெய்யாக நினைத்துக்கொண்டான்.
“அந்த பீன்ஸ் எடு” பாட்டி சொல்லவும்தான் அது பீன்ஸ் பொரியல் என்றே ஜெய்க்கு தெரிய வந்தது.
முறைத்த பாட்டி, “பல்லு கட்டியிருக்கேன்டா” என சொல்லி ஈஈ என எல்லா பற்களையும் காட்டினார்.
“அதானே, நல்லி எலும்ப கடிக்கிறதுல ராஜ்கிரணுக்கே டஃப் கொடுக்கிற என் ராஜாம்பாவை பார்த்து என்ன சொல்றண்ணா நீ?” என்றான் ஜனா.
மெது வடையின் நடுவில் ஓட்டை இல்லை. “புது விதமா போண்டாவடை ட்ரை பண்ணிருக்கா” என்ற ஜெய்க்கு நல்ல பதில் கொடுக்க முனைந்தான்தான் ஜனா. துளசியின் கெஞ்சல் பார்வையில் அவரை முறைத்துக் கொண்டே எதுவும் சொல்லவில்லை.
“இந்த ரசம் பார்த்தீங்களா… செம டேஸ்ட்” என்ற ஜெய்யை பார்த்து ஸ்ரீயோடு சேர்ந்து அனைவருமே சிரித்தனர்.
“ஆமாண்டா, அது கன்சடன்சி சரியில்லாம பண்ணிட்டா” என்றார் பாட்டி.
“அப்பயி… அது கன்சிஸ்டென்ஸி” என்றான் ஜனா.
“ஏதோ ஒண்ணு, நான் சொன்னது புரிஞ்சுதுதானே உனக்கு. இப்போ எல்லாரும் செந்தமிழா பேசுறோம், வாய்க்கு வசதியா பேசல. தமிழ கொலை கொலைன்னு கொன்னுகிட்டு இங்கிலிஷ காவந்து பன்றாய்ங்களாம்” என பாட்டி சொல்ல, அதற்கு ஜனா ஏதோ சொல்ல என அவர்களின் பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.
சாம்பார் இருந்த பாத்திரத்தில் கரண்டியை விட்டு கலக்கி எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்த ஜெய், மனைவியின் காதுக்கருகில் ரகசியமாக, “அப்படியா ஸ்ரீ, நிஜமா இது சாம்பார்தானா?” என சந்தேகமாக கேட்டான்.
அவள் கண்களை உருட்டிக் கொண்டு முறைக்க, அசடு வழிய பார்த்தான் ஜெய்.
“அண்ணி, எதுக்கும் நீங்க செஞ்சு வச்சிருக்க எல்லா டிஷ் பேரையும் சொல்லிடுங்க, அவருக்கு குழப்பம் இல்லாம இருக்கும்” என்றான் ஜனா.
“சும்மா இருடா, எல்லாம் எனக்கு தெரியும்” தம்பியிடம் அதட்டல் போட்ட ஜெய் அதன் பின் சாப்பிட மட்டும்தான் வாய் திறந்தான்.
மாலையில் ஸ்ரீயை அழைத்துக் கொண்டு வெளியில் புறப்பட்டான் ஜெய். எங்கு என்றெல்லாம் சொல்லவில்லை, அவளும் கேட்டுக் கொள்ளவில்லை.
புறநகர் பகுதியில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி அங்கு வரிசையாக கட்டப் பட்டிருக்கும் வீடுகளை காண்பித்தான். ஆறு மாதங்களுக்கு முன் அவன் கட்டி விற்ற வீடுகள். ஒரு வீடு மட்டும் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப் படவில்லை. சாவி அவனிடம்தான் இருந்தது.
அவளை அந்த வீட்டினுள் அழைத்து சென்று காட்டினான். இந்த ப்ராஜக்ட் முடிய கடன் பெற்றது அவன் சந்தித்த சவால்கள் என சொல்லிக் கொண்டிருந்தான். கணவனை பெருமை பொங்க அவள் பார்த்த பார்வையில் கொஞ்சமாக வெட்கப்பட்டான்.
“எனக்கு அவ்ளோ ஸீன்லாம் இல்லை ஸ்ரீ. நீயா இருந்திருந்தா இன்னும் நிறைய உருவாக்கியிருப்ப” என்றான்.
அவனது கையை பிடித்துக் கொண்டவள், “ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கலாம்” என கண்களை சிமிட்டி சொன்னாள்.
“எத?”
“எல்லாமே”
“மொட்டையா சொல்லாத, பர்ட்டிகுலரா எதுன்னு சொல்லு”
“போயா!” கிண்டல் அவளது குரலிலும் வெட்கம் முகத்திலும் குவிந்து போயின.
“நான் வேலை பத்திதான் பேசினேன், நீதான் வேற ஏதோ நினைக்கிற, என்ன நினைச்ச சொல்லு ஸ்ரீ” அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு இன்னுமின்னும் வெட்கம் வந்து தொலைத்தது. அவளின் திடீர் முகச் சிவப்பு, என்னவென தெரிந்து கொள்ளும் அவனது ஆர்வத்தை இன்னும் தூண்டியது.
தன் கை வளைவுக்குள் அவளை கொண்டு வந்தவன் ஆசையாக, “என்னன்னுதான் சொல்லேன் ஸ்ரீ” என்றான்.
“நிஜமா ஏதும் நினைக்கல, நான் ஏன் ஷை ஆகுறேன்னு எனக்கே தெரியலை. ஆனா எதுவா இருந்தாலும் நாம சேர்ந்து செய்யலாம்” என்றாள்.
அவளது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.
“அடுத்தவங்க வீட்ல வச்சு என்ன செய்றீங்க?” செல்லமாக கடிந்து கொண்டாள்.
“என்ன செஞ்சாங்க இப்போ?” ஒற்றை விரலால் அவளது இதழ்களை வருடி விட்டுக் கொண்டே கேட்டான்.
அரை நிமிடம் இருவருக்கும் ஒரு தவிப்பான சங்கடமான நிலை.
“போலாங்க” என சின்ன குரலில் அவள் சொல்லவும் அவளிடமிருந்து நன்றாக விலகியவன் அவளின் கையை மட்டும் பிடித்துக் கொண்டு வெளியேறினான்.
அப்படியே காரில் சின்னதாக ஒரு பயணம். குடில் போல இருந்த உணவகம் ஒன்றில் நட்சத்திரங்களையும் தங்கள் துணையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர். கொஞ்சமாக ஆள் நடமாட்டம் இருந்த ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு சற்று நேரம் நடந்தனர்.
வீட்டுக்கு புறப்படுகையில் ஸ்ரீ காரோட்டினாள். அவளது அமெரிக்கவாசம் பற்றி கேட்டறிந்து கொண்டான்.
“அமெரிக்காங்கிற வார்த்தை அலர்ஜி ஆகுற அளவுக்கு செஞ்சிட்ட நீ” விளையாட்டாக சொன்னான்.
“என்ன இப்படி சொல்றீங்க, ஒரு தடவ நாம ரெண்டு பேரும் சேர்ந்து அங்க போலாம்னு நினைச்சிட்டிருக்கேன்” என்றாள்.
“நான் வர மாட்டேன், உன்னையும் அனுப்புறதா இல்லை” என்ன முயன்றும் அவனிடமிருந்து கடினமாகத்தான் வார்த்தைகள் வந்தன.
“எனக்கு கண்டிஷன் போடாதீங்க, நான் போறதா இல்லியான்னு நான்தான் முடிவு பண்ணனும்” என்றாள்.
அவன் முகத்தை உர் என வைத்துக் கொண்டான்.
“என்ன நினைக்கிறீங்க, போயிடுவேன்னா?” சீண்டினாள்.
“உன்னை பத்தி, நீ செய்றத பத்தி எதுவும் நினைக்கிறதுக்கு இல்லை. இப்போ நான் என்ன சொன்னாலும் சண்டைல முடியும். பேசாம வா”
“சண்டை வரும் சண்டை வரும்னே யோசிச்சிக்கிட்டு என்கிட்ட எதையும் பேசாம இருப்பீங்களா? இனிமே நீங்க ‘ஹச்’னு தும்மினாலும் என்கிட்ட சொல்லிடனும். உள்ளேயே மறைச்சு வச்சு உங்களை அரிக்க விடாதீங்க” என தீவிரமான குரலில் சொன்னாள்.
அவன் அமைதியாக இருக்க அவளும் பேசவில்லை. வீடு வந்த பின்னரும் அந்த அமைதி தொடர்ந்தது.
அறைக்கு வந்து உறங்க செல்லும் போதுதான் அவளை அணைத்துக் கொண்டான்.
“எனக்கு சொல்ல தெரியலை ஸ்ரீ, நீ விட்டுட்டு போவன்னு கனவுல கூட நினைச்சது இல்லை. அங்க போக நீ ட்ரை பண்றேன்னு என் காதுக்கு விஷயம் வந்து கூட அலட்டிக்காமத்தான் இருந்தேன். உம்மேல அவ்ளோ நம்பிக்கை. உன்னை தப்பு சொல்லலை, நான்தான் உன்னை விட்டுட்டேன்” பெருமூச்செறிந்தான். பின் “நான் ரொம்ப பட்டுட்டேன்… நீ இல்லாம… ப்ச்.. போ… போடி!” என்றான்.
“ஸாரி சொன்னியே அதை சொன்னேன். சீரியஸா சொல்றேன் எப்பவும் எதுக்காகவும் நாம யு எஸ் போக வேணாம்” என அவன் சொன்னதில் பிடிவாதக் குழந்தையின் தொனி தெரிந்தது.
மேலும் அவனை சீண்டி விடாமல் சரி என சொல்லி விட்டாள். படுத்துக் கொண்டனர், அணைப்பில்தான் இருந்தனர், தேவையான தெளிவும் இருந்தது. ஆனாலும் வேறு விதமான நெருக்கத்துக்கு இருவருமே முயலவில்லை.
தடை தயக்கம் என்றெல்லாம் எதுவும் இல்லை, ஆசையும் இருக்கிறது. தானாக தங்களை மீறி நடக்கட்டும் என நினைத்து விட்டனரோ என்னவோ.
அவர்களின் சரீரங்களின் அன்பான அனுசரையான தழுவலோடு மூன்றாவதாக உறக்கமும் பஞ்சமில்லாமல் அவர்களின் இமைகளை தழுவிக் கொண்டது.