புதிய உதயம் -27

அத்தியாயம் -27

விடிந்து வெகு நேரமாகியும் உறக்கத்தில்தான் இருந்தான் ஜெய். காலை உணவை ஸ்ரீ மற்றவர்களாடு சேர்ந்து சாப்பிடும் போதே அவனை பற்றிய கேள்வி எழுந்தது. 

“லேட் நைட்தான் தூங்க ஆரம்பிச்சார், தானா எழற வரை எழுப்ப வேணாம்னு சொல்லியிருக்கார்” என ஸ்ரீ சொல்லவும் மற்றவர்களும் சரியென விட்டு விட்டனர். 

உணவை எடுத்துக் கொண்டு அறைக்கே சென்று விட்டாள் ஸ்ரீ. பத்து மணிக்கு லேசாக புரண்டான் ஜெய். 

சில நிமிடங்கள் பிரயத்தனப் பட்டு அவனை  தட்டி எழுப்பி விட்டவள், “வெறும் வயித்தோட எவ்ளோ நேரம் தூங்கிட்டே இருப்பீங்க? ஒழுங்கா எந்திரிங்க” என அதட்டல் போட்டாள். 

இரவில் நடந்தது எதுவும் சரியாக நினைவில்லாதவன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தான்.

 ஸ்ரீ உணவை எடுத்து வைக்க, “நைட் பார்ட்டில என்னாச்சு எனக்கு? அந்த சசி எதையோ கொடுத்திட்டான் எனக்கு” என சொல்லிக் கொண்டே சசிக்கு அழைக்க போனான். 

“முதல்ல சாப்பிடுறீங்களா?” ஸ்ரீ அழுத்தமாக சொன்ன விதத்தில் கைப்பேசியை வைத்து விட்டு நல்ல பிள்ளையாக சாப்பிட்டு முடித்தான். 

மீண்டும் கைப்பேசியை கையில் எடுத்தவனை அவள் முறைக்கவும், “இப்போ என்னதான் செய்யணும் நான்?” எனக் கேட்டான். 

“சசி ஸார்கிட்ட எதுவும் கேட்க வேணாம். இன்னிக்கு மத்த வேலைங்க விஷயம் கூட அவரே பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கார். உங்களுக்கு நேரம் இருந்தா சொல்லுங்க, எனக்கு உங்ககிட்ட பேசணும்” என்றாள். 

“நேரம் இருந்தான்னா என்ன அர்த்தம்? என்கிட்ட பேச உனக்கு மனசு இருந்தா சரிதான்” என்றான். 

“இந்த குத்தல் பேச்செல்லாம் வேணாம். ஏற்கனவே நமக்குள்ள நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகியிருக்கு, பேசி சரி பண்ணிக்கலாம்” 

“சரி பண்ணிக்கலாம்… ஹ்ம்ம்… பேசு பேசு…  சரியாவுதா இல்லை இன்னும்  மோசம் ஆவுதா பார்க்கலாம்” என்றவனை கடுப்பாக பார்த்தவள் அங்கிருந்து வெளியேற எத்தனித்தாள். 

அவளின் கையை பிடித்துக்கொண்டவன், “நான் வாயே திறக்கல, பேசு” என்றான். 

“நான் உங்களை டிவோர்ஸ் பண்ணனுங்கிற ஐடியால இல்லை, புரிஞ்சுதா? அத முதல்ல உங்க மைண்ட்ல ஏத்துங்க, அப்போதான் நான் சொல்ற மத்தது ஒழுங்கா உங்க மண்டைல ஏறும்” என்றாள். 

அவன் நெற்றி சுருக்கிப் பார்த்தான். “நீங்க ஜனாகிட்ட என்ன பேசி வச்சீங்க தெரியலை, அவன் மஹதிகிட்ட ஏதோ சொல்லப் போய் அவ பதில் பேசி அதை நான் ஃபோன்ல கேட்டு… யார் மேலேயும் மிஸ்டேக் இல்லை. நான்… நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள். 

“என்ன… என்ன சொல்லி வச்சான் அந்த இடியட்? வீட்ல இருக்கானா இப்போ?” கோவமாக கேட்டுக் கொண்டே எழுந்தவன் அறையை விட்டு போக பார்த்தான். அவனை தன் பிடியால் தடுக்க முடியாதவள் சட்டென அணைத்துக் கொண்டாள். 

எதிர்பாராத மனைவியின் அணைப்பு. அவள் விட்டு சென்ற நாள் முதலாக அடி மனதில் அவனுக்கிருக்கும் ஏக்கம். அவளின் கழுத்து வளைவில் முகத்தை அழுத்திக் கொண்டான், கைகள் இரண்டும் பற்று கோலாக அவளை சுற்றிக் கொண்டன. நெகிழ்ந்து போனவனின் கலங்கிய கண்களை இமைகள் அடைத்திருந்தன. 

அவளுக்குமே அவனது நிலைதான், ஆனால் அவனை போல உணர்ச்சிகளை மறைக்க முடியவில்லை, மறைக்க விரும்பவும் இல்லை. லேசாக விசும்பினாள். 

“ஸ்ரீ… ப்ளீஸ்…” கலங்கிய குரலில் சொன்னான். 

“என்கிட்ட ஏன் சொல்லலை? சொல்லிருக்கணும் நீங்க” என்றவளின் கூற்றில் சரிவர ஏதும் புரியாமல் குழம்பினான். 

“நல்லதோ கெட்டதோ சேர்ந்து அனுபவிக்கத்தான் வாழ்க்கை துணை. மகிழ்ச்சியான நேரம் விட கஷ்ட காலத்துலதானே துணை தேவை படும்?” என அவள் கேட்கவும் முகத்தை மட்டும் விலக்கி அவளை கூர்ந்து பார்த்தான். 

“நைட் உங்களை மறந்து எல்லாம்… எத என்கிட்ட சொல்லாம இருக்கணும்னு நினைச்சிருந்தீங்களோ அதை சொன்னீங்க” எனும் போதே அவளின் கண்ணில் ஈரம் பொங்கி வந்தது. 

அவளை விட்டு விலகிப் போய் படுக்கையின் ஓரம் அமர்ந்து கொண்டான். இரவில் ஸ்தம்பித்து போயிருந்தவள் இப்போது அழுது மனதை லேசாக்க முயன்றாள். ஸ்ரீயின் வேதனையை கூட்டி விட்டோமோ என அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. 

தன்னை விட அவனது மனக்காயம் பெரிது என்பதை புரிந்திருந்தவள் முகம் கழுவி உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து விட்டு அவனிடம் வந்து நின்றாள். 

“அங்கேயே ஸ்ட்ரக் ஆகாம கடந்து போகணும்தானேங்க, இழக்க கூடாததை இழந்தோம், அப்புறமும் தேவையில்லாம மூணு வருஷம் தனித்தனியா இருந்திட்டோம். நாம சரியாவும் புரிஞ்சுக்கல, இனிமேலாவது நம்மள புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவோம்” என்றாள். 

“என்ன புரிஞ்சுக்கல நாம? ஏன்… நான் என்ன எப்படின்னு உனக்கு தெரியாதா? தெரிஞ்சுக்கிட்டும் போயிட்டதானே…” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது வாயை பொத்தினாள். 

“மனசு விட்டு பேசுங்க, தேவை இல்லாதத பேசாதீங்க. உங்களை விட்டு ஒரேயடியா பிரியுற தைரியம் எப்பவுமே எனக்கு இருந்ததில்ல” என்றாள். 

அவளின் கையை எடுத்து விட்டவன் அப்படியே படுத்துக் கொண்டான். சற்று நேரம் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் கீழே செல்வதாக சொல்லி எழுந்தாள். 

“இங்கேயே இரேன்” என அவன் சொல்லவும் அவனருகில் படுத்து அவனது கை வளைவில் தலை வைத்துக்கொண்டாள். மேலே எதுவும் பேச இருவருக்குமே பிடிக்கவில்லை. வார்த்தைகள் இல்லாமலே ஒருவருக்கொருவர் ஆறுதலாக ஆதரவாக படுத்திருந்தனர். 

அவ்வப்போது அவளின் தோளை அழுத்திக் கொடுத்தான் அவன். அவளும் அவனது மார்பை வருடி விட்டாள். மேலும் மேலும் யார் தவறு சரி என விவாதம் செய்ய இருவருமே முனையவில்லை. அடுத்து என்ன என்பதை பார்க்க தங்களை தயார் படுத்திக் கொண்டனர். 

பச்சைக்காயம் தரும் வலியை வடு தருவதில்லை. இருவரது மனங்களிலும் இழப்பு  காயமாகவும் இல்லாமல் ஆறிப் போன வடுவாகவும் இல்லாமல் நடுப்பட்ட நிலையில் இருந்தது.  

அரை மணி நேரம் கடந்த நிலையில் அவன் மீண்டும் கண் அயர்ந்து விட்டான். தாமதமாக விழித்தும் மீண்டும் உறங்குகிறானே என கவலையாக அவனையே பார்த்தாள். அவனது முகம் கடினமாக அல்லாமல் தெளிவாக இருப்பது போலவே இருந்தது. நன்றாகத்தான் இருக்கிறான் என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள் கீழே சென்று விட்டாள். 

காலையிலிருந்து கீழேயே வராத ஜெய்யை நினைத்து துளசியும் பாட்டியும் கவலை கொண்டனர். உடம்புக்கு என்னவோ அல்லது இருவருக்கும் சண்டையோ என்றெல்லாம் யோசித்தனர். ஸ்ரீயிடம் வாய் விட்டும் கேட்கவும் சங்கடமாக இருந்தது. அவளது அழுத முகம் வேறு அவர்களின் மனக்கிலேசத்தை கலவரமாக்க முயன்றது. 

பாட்டிக்கு நிலை கொள்ளவே இல்லை. மாடியேறப் போனவரை தடுத்த ஸ்ரீ, “அப்படி ஒண்ணும் உங்க பேரனை கொடுமை படுத்திடல நான், அவரே வருவார், கல்யாண நேரத்துல முட்டி வலின்னு படுத்துக்காம ஒழுங்கா இங்கேயே இருங்க” என்றாள். 

பாட்டி அவளை முறைத்தார். “நாங்க மனசு விட்டு பேசிகிட்டோம் பாட்டி, அதுல ரிலாக்ஸ் ஆகி தூங்குறார். சண்டை போட்டு அழல நான், முன்ன அவர்கிட்ட அழ முடியாததை இப்போ…” என்றவள் குரலை செருமி, தெளிவான குரலில் “பயப்பட எதுவும் இல்லை” என்றாள். 

பாட்டியின் முகம் மலர்ந்து போனது. சற்று தள்ளி நின்றிருந்த துளசி சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஜனா, சுரேகா இவர்களின் காதிலும் இந்த செய்தி விழுந்தது. 

ஜனாவுக்கு மனம் லேசாகி விட, “இப்படி உட்கார்ந்து பேசுறத விட்டுட்டு அண்ணி கடல் கிராஸ் பண்ணி போனாங்க, இவரு கிராஸ் மாதிரி தாடி வளர்த்தார், இதுல என்ன கிரேஸ்னா ஜனா பையனுக்கு பொண்ணு அமைஞ்சதுதான்” என்றான். 

“ஆமாமாம், இப்படி எதையோ சொல்லித்தான் மஹதிய கரெக்ட் பண்ணிட்ட, இல்லைனா உனக்கெல்லாம் யாரும் ஓகே சொல்ல மாட்டாங்க” என வம்பு செய்தாள் சுரேகா. 

“ஹலோ ஹல்லலோ… இன்னிக்கு தேதிக்கு இந்த திருச்சி சிட்டில மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் நான்தான் தெரியுமா?” 

“நீயே சொல்லிக்கிவியா?” 

“சரி, அப்ப நீ சொல்லு” 

“ஒர்ஸ்ட் ஃபெலோ நீ, மஹதி பாவம்!” வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றிய சுரேகா அவனது அடியிலிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிச் சென்று விட்டாள். 

ஸ்ரீக்கும் மனதை வேறு எதிலாவது செலுத்தினால் நன்றாக இருக்கும் போலிருந்தது. தானே சமைக்கிறேன் என போய் நின்று கொண்டாள். உதவி செய்கிறேன் என்ற துளசியையும் விடவில்லை. 

துளசிக்கு அவளை நம்பி விட பயம். சமையலே தெரியாதவள் இல்லைதான், அம்மா வீட்டில் கூட நிறைய நேரம் இவள்தான் சமைப்பாள். ஆனால் கைப்பக்குவம் போதாது, மோசம் என சொல்லி விட முடியாதபடி ஏதோ சாப்பிடும் அளவுக்கு ஒப்பேற்ற தெரியும், அவ்வளவுதான். 

“நீயே செய், நான் சும்மா ஓரமா நிக்கிறேன்” என்றார் துளசி. 

“யாராவது நல்லா இருக்குன்னா நீங்க கிரெடிட் எடுத்துக்கலாம்னு நினைச்சீங்களா? அதெல்லாம் விட முடியாது” ஸ்ரீ செல்லமாக பிடிவாதம் செய்யவும் அவர் சென்று விட்டார். 

ஜெய் கீழே வந்த போது இன்னும் உணவு மேசைக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை சாப்பாடு. 

அவன் கேள்வியாக தம்பியை பார்க்க, “அண்ணிக்கு என்ன கோவமோ, நம்மள நல்லா வச்சு செய்றதுன்னு முடிவோடு இருக்காங்க” சமையலறையை சுட்டிக் காண்பித்து சொன்னான் ஜனா. 

“ஏன் டா, அதெல்லாம் அவ நல்லா சமைப்பா” மனைவியை விட்டுக் கொடுக்காமல் சொன்ன ஜெய், ஸ்ரீயை தேடிக் கொண்டு சென்றான். 

சமையலுக்கு உதவிக்கு இருக்கும் பெண் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.