அத்தியாயம் -25(2)
அன்றைய பகல் இப்படித்தான் விஷேஷ வேலைகளிலேயே ஓடி விட்டது. மாலையில் தங்கையை காண கிளம்பினாள் ஸ்ரீ. சரியாக அந்த நேரம் வீடு வந்த ஜெய் அவனே அழைத்து சென்றான்.
மஹதிக்கு மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தாள் தீபா, முடியும் நேரம். அம்மாவிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என கேட்டு விட்டு தங்கையின் அருகில் அமர்ந்தாள் ஸ்ரீ.
ஜெய் கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்ரீயையும் மெஹந்தி போட்டுக் கொள்ள சொன்னாள் தீபா, மஹதியும் வற்புறுத்த, “வீட்டுக்கு போய் வேலை இருக்கு, நாங்க கிளம்பணும்” என்றாள்.
“போட்டுக்கோயேன், என்ன பெரிய வேலை? நாளைக்கு ஈவ்னிங்தான் ஃபங்ஷன், எல்லாம் பார்த்துக்கலாம்” என்றான் ஜெய்.
“ஸாரே சொல்லிட்டார், கையை கொடுங்க” என்ற தீபா, ஸ்ரீயின் கையை பிடித்து கை வண்ணத்தை காட்ட ஆரம்பித்து விட்டாள். ஒரு கையில் மட்டும் போட்டுக் கொண்டாள் ஸ்ரீ.
இரவு சாப்பாடும் அங்கேயேதான். இரண்டு மகள்களுக்கும் ஊட்டி விட்டார் ஜோதி. ஜெய் அவர்களை தொந்தரவு செய்யாமல் முன்னரே சாப்பிட்டு பின் பக்கம் போய் அமர்ந்து கொண்டான்.
மெஹந்தியை அங்கேயே கழுவி விட்டாள். மஹதி காலை வரை வைத்திருக்க போவதாக சொன்னாள். தங்கையிடம் ஸ்ரீ கையை காட்டிக் கொண்டிருக்க ஜெய் வந்தான்.
“அக்காக்கு நல்லா செவக்கவே இல்லை மாமா” என்றாள் மஹதி.
எட்டிப் பார்த்தவன், “இதுக்கு மேல என்ன சிவக்கணும் அவளுக்கு, அவ நிறமே அப்படித்தானே அதான் உன் கண்ணுக்கு கை சிவப்பு டல்லா தெரியுது” என்றான்.
ஜெய் இப்படியெல்லாம் மஹதியிடம் பேசியதில்லை. இருவருக்குள்ளும் எல்லாம் சரியாகி விட்டது என மகிழ்ந்த மஹதி கொஞ்சம் போல அவர்களை ஓட்டினாள்.
“நீதான் புதுப் பொண்ணு ஆக போற, அவன் சகவாசம் இப்படி பேச வைக்குதா உன்னை” கிண்டலாக கேட்டுக் கொண்டே வெளியில சென்று விட்டான்.
இன்னும் கொஞ்ச நேரம் தங்கையோடு பேசியிருந்த ஸ்ரீ கணவனிடம் வந்தாள்.
“என்னை மறந்திட்டியோன்னு நினைச்சேன்” என கிண்டலாக சொன்னான்.
“ஆமாம், நினைச்சு நினைச்சு பார்த்த காலத்துல கூடவா இருந்தீங்க?” எனக் கேட்டாள்.
“நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசாத” என்றான்.
ஜோதி வெளியில் வர இருவரும் சாதாரணமாக தங்களை காட்டிக் கொண்டனர். இரவு உறங்க வீடு வந்து விட்டனர்.
அடுத்த நாள் மாலையில் விமரிசையாக நிச்சயம் நடந்து கொண்டிருந்தது. தாடி எடுத்து விட்டு பழைய படி கம்பீரமாக இருந்தான் ஜெய். வந்தவர்களை ஸ்ரீயும் ஜெய்யும் சேர்ந்து நின்றுதான் வரவேற்றனர்.
கணவன் மனைவிக்குள் ஏதோ பெரிய பிரச்சனை, ஸ்ரீ விட்டு சென்று விட்டாள் என்றெல்லாம் உறவுகளுக்குள் பேச்சு நிலவிக் கொண்டிருந்தது, அதற்கெல்லாம் இருவரும் சேர்ந்து நின்று முற்றுப்புள்ளி வைத்தனர்.
சைலேஷ் தன் மனைவியோடு வந்திருந்தான். ஸ்ரீ ஜெய்யுடன் இல்லாதது அவர்களுக்கு தெரியாது. தொழில் முறை நண்பர்களுக்காக அவன் பார்ட்டி கொடுக்க இருப்பதாகவும் அதற்கு இருவரும் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.
சியாமளன் அவனது பெற்றோரோடு வந்தான். ஸ்ரீ ஓடிச் சென்று வரவேற்றாள். ‘என்கிட்ட மட்டும்தான் தானா வர மாட்டா’ மனதில் பொறுமிக் கொண்டே நின்றான் ஜெய்.
ஜெய்யை அவர்கள் நேரில் பார்த்தது இல்லை. மகன் மூலமாக ஸ்ரீ பற்றிய விஷயங்கள் ஓரளவு தெரியும். அவனை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் சியாமளன்.
“ரொம்ப கோவக்காரன்னு சியாம் சொன்னானே, பார்த்தா சாந்தமா தெரியுறப்பா. ஸ்ரீ எம்பொண்ணு மாதிரி, நல்லா பார்த்துக்கணும் அவளை” என்றார் சியாமளனின் அம்மா.
ஜெய் சிரித்துக் கொண்டே தலையாட்டினான்.
“ஆமாம் ரொம்ப சாந்த சொரூபன்!” ஸ்ரீயின் காதில் சொன்ன சியாமளன் கிண்டலாக பார்த்தான். அவள் கண்களால் அவனை அடக்கினாள்.
அவர்கள் உள்ளே சென்றதும், “அவனுக்கு நக்கல்தானே, வேணும்னே எம்முன்னால உன் காதுல ரகசியம் பேசுறான், என்ன சொன்னான் உன் பிரண்டு?” எனக் கேட்டான் ஜெய்.
“என்ன இப்போ அவன் கூட சண்டை போடணுமா? கூப்பிடவா அவனை?” என்றாள்.
“நாலு தட்டு தட்டதான் ஆசை, அவன் அம்மாக்காக விடுறேன்” என்றவனை கடிந்து கொள்ள ஸ்ரீயிடம் அவகாசம் இல்லை. அடுத்தடுத்து விருந்தினர்கள் வந்து கொண்டே இருந்தனர்.
பந்தி ஆரம்பித்த பிறகு ஜனாவையும் மஹதியையும் புகைப்படக்காரர்கள் கடத்திக் கொண்டு தனியறைக்கு சென்று விட்டனர்.
இப்படி நில்லுங்கள் அப்படி நில்லுங்கள் என அவர்கள் படுத்தி எடுத்ததில் மஹதிக்கு அழுகையே வந்து விடும் போலானது.
“பாஸ் பாஸ் போதும். என் பாஸ் கம்ஃ பர்ட்டபிளா இல்லை. விட்ருங்க” என்றான் ஜனா.
“இப்படிலாம் ஃபோட்டோஸ் எடுக்கலையேன்னு நாளைக்கு நீங்கதான் வருத்த படுவீங்க பாஸ்” என்றான் புகைப்படக்காரன்.
ஜனா மஹதியின் முகத்தை பார்க்க அவள் மறுப்பாக தலையசைத்தாள்.
“அப்படிலாம் வருத்த பட மாட்டாளாம் பாஸ், அதனால… நீங்க இன்னும் சாப்பிடலைதானே?” எனக் கேட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.
நெஞ்சில் கை வைத்து “ஹப்பா!” என்ற மஹதி, “நீங்களும் அவங்களோட சேர்ந்திட்டு என்னை கம்பெல் பண்ணுவீங்களோன்னு நினைச்சேன்” என்றாள்.
“மத்தவங்க முன்னாடி ஷை ஆகுறது ஓகே, ஏற்கனவே வேணுங்கிற அளவுக்கு நாம பழகியாச்சு. கல்யாணம் முடிஞ்சப்புறம் கொஞ்ச நாள் பொறு தலைவான்னுலாம் பாட்டு பாடி பழி வாங்க கூடாது. கல்யாண நாள் எப்படி நினைவுல இருக்கோ” என்றவன் அவளை நெருங்கி வந்து, ரகசியக் குரலில் “அன்னிக்கு நைட்டும் காலம் முழுக்க மறக்காத படி நினைவுல இருக்க படி மாத்திக்கணும் நம்ம” என்றான்.
இத்தனை நாட்களில் முதல் அந்தரங்க பேச்சு. அவனை பாவமாக பார்த்தவள், “இப்படிலாம் பேசாதீங்க, ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.
“ஐயையோ நீ இருக்க நிலைக்கு தினம் இப்படி பேசி டியூன் பண்ணனும் போலவே உன்னை” என்றான்.
அவள் சிணுங்கலாக, “போங்க நீங்க” என்றாள்.
யாருமில்லாத தனிமையும் அவளின் அழகும் ஜனாவை வெகுவாக கவர்ந்து மயக்க பட்டென அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விலகினான். அவள் திகைப்பாக பார்க்க, சிரித்தவன் அவளையும் தர சொல்லி வம்பு செய்தான்.
ஸ்ரீ அவர்களை தேடிக் கொண்டு வரும் போது மஹதி ஜனாவை நெருங்கியிருந்தாள். வந்த சுவடே தெரியாமல் ஸ்ரீ திரும்ப, அங்கு வந்து கொண்டிருந்த ஜெய் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.
வேகமாக ஓடிச் சென்று அவனது வாயை மூடியவள், “ஷ்… சத்தம் போடாதீங்க” என்றாள்.
என்னவென பார்வையால் கேட்டவனிடம், “ஜனாவும் மஹதியும் அங்க இருக்காங்க” என்றாள்.
அவளை முறைத்தவன், “கல்யாணம் ஆகுற வரை கண்காணிப்புல வை” என அவளை கடிந்து ஜனாவின் பெயரை சொல்லி சத்தமிட்டான்.
நல்ல பிள்ளைகளாக வெளியில் வந்தனர் ஜனா மஹதி இருவரும். தங்கையின் சிவந்த முகத்தை நிறைவாக பார்த்த ஸ்ரீ அவர்களை சாப்பிட அழைத்து சென்றாள்.
இருவரையும் சேர்ந்து உட்கார வைத்து ஜனாவின் அருகில் ஜெய்யும் மஹதியின் பக்கத்தில் ஸ்ரீயும் அமர்ந்திருந்தனர்.
மஹதியின் இலையிலிருந்து எதையாவது எடுப்பதும் அவள் சாப்பிட கையில் எடுத்ததை தான் வாயில் வாங்கிக் கொள்வதுமாக சேட்டை செய்தான் ஜனா.
“டேய் அந்த பொண்ண சாப்பிட விடுறியா நீ? ஏன் டா இப்படி பாடு படுத்தற?” தம்பியை கடிந்தான் ஜனா.
“ஹஹான் அண்ணா விவரம் இல்லைனா சும்மான்னு இரு, உன்னை… நீ முத எந்திரி…” என்றான் ஜனா.
“ஜனா!” அதட்டினாள் ஸ்ரீ.
“ஹையோ அண்ணி உங்களை மறந்திட்டேன். உங்க புருஷரை சாப்பிட விடாம செய்யல, இருங்க நான் எந்திரிக்கிறேன்” என்ற ஜனா ஸ்ரீயின் இடத்தில் மாறி அமர்ந்து, ஸ்ரீயை அவனிடத்தில் அமர வைத்தான்.
“பக்கத்துல இருக்க வேண்டிய ஆள் இருந்தாதானே அவர் கவனம் என்கிட்ட இருக்காது” பொதுவாக சொன்ன ஜனா, “நீ வேணும்னா அண்ணிக்கு ஊட்டு ண்ணா, நாங்களாம் டீசன்ட் ஃபெல்லோஸ், கண்டுக்கவே மாட்டோம்” என்றான்.
ஜெய் முறைக்க, “நீங்களும் ஓவரா பண்றீங்க, அவங்கள ஃப்ரீயா இருக்க விடுங்க. உங்க இலைய பார்த்து சாப்பிடுங்க” என கடிந்து கொண்டாள் ஸ்ரீ.
“எல்லாரும் வேடிக்கை பார்க்க மாட்டாங்க, அவனை ஒழுங்கா நடக்க சொல்லாம என்னைய சொல்றியா நீ?” அவனும் பதிலுக்கு அவளை கடிந்தான் இல்லையில்லை கடித்தான்.
“பார்த்தா பார்க்கிறாங்க, பேசாம சாப்பிடுங்க” என சொல்லி கணவனை சரி கட்டினாள்.
மண்டபத்தை காலி செய்து வீடு வந்து சேர பனிரெண்டாகி விட்டது. ஜனா கைப்பேசியில் மஹதியோடு ஐக்கியமாகியிருந்தான்.
“என்னத்ததான் பேசுவானோ? அந்த பொண்ணு பாவம்” மனைவியிடம் சொல்லிக் கொண்டே படி ஏறினான் ஜெய்.
“இந்த டைம்ல இதெல்லாம் இல்லாம என்ன பெரிய வாழ்க்கை? நம்ம கல்யாணத்தப்போ எனக்குதான் திக்கு திக்குன்னு இருந்திச்சு” என வாய் விட்டவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.
“ஆமாம் நீ பேய கட்டிகிட்ட பாரு, அப்ப அப்படித்தான் இருந்திருக்கும்” என்றான். அந்த சமயத்தில் அவள் அப்படியெல்லாம் நினைத்திருக்கிறாள்தானே, சிரித்து விட்டாள்.
ஏன் சிரிக்கிறாய் என விடாப் பிடியாக அவன் கேட்க, உண்மையை சொல்லவும் செய்தாள்.
“ஏன் ஸ்ரீ நம்ம லைஃப் போக போகவும் அதே எண்ணத்துலதான் இருந்தியா?” என விசாரணை செய்தான்.
“இல்லை, சொல்லப் போனா பிடிக்கவும் செஞ்சது”
“அப்படியா?”
“ஆமாம் இல்லாமதான் உங்க புள்ளைய சுமந்தேன்” சாதாரணமாகத்தான் சொன்னாள்.
இருவருக்குமே அடுத்து அந்த உரையாடலை மேற்கொண்டு எடுத்து செல்ல முடியவில்லை.
பல உணர்வுக் கொந்தளிப்பை தனக்குள் மறைத்து வைத்துக்கொண்ட அமைதி அவர்களை சுற்றி படர்ந்து போனது.