அத்தியாயம் -24(2)
அத்தனை மோசமாக இல்லை, சொல்லப் போனால் அவனுக்கு பிடித்திருந்தது. குக்கரை காலி செய்து விட்டான்.
அளவாகத்தான் சாதம் வைத்திருந்தாள்.
“போதுமா, இல்லைனா அம்மா செஞ்சது இருக்கு” என்றாள்.
“ஆறிப் போனத நீயே சாப்பிடு, என் பொண்டாட்டி பொங்கின பொங்க சோறும் அவளே நேரா கடைக்கு போய் அவ கையாலேயே வாங்கிட்டு வந்த தயிரும் செம காம்பினேஷன்” என்றான்.
‘ஆஹா ரொம்பத்தான்!’ என பார்த்தவள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழுந்தாள்.
“நான் இப்போ ஓகே, தூங்க போறேன், உங்களுக்கும் நிறைய வேலை இருக்கும், அப்போ நீங்க…” என இழுத்தாள்.
அவளை சுள் என பார்த்தவன், “எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் மரியாதை இல்லாம நடந்துக்கிற” என்றான்.
“என்னமோ பண்ணிக்கோங்க” என்றவள் அறைக்கு சென்று விட்டாள்.
டிவியில் அடுத்த பழைய படம் துவங்கியிருந்தது.
“ப்ளீஸ்ங்க அதை ஆஃப் பண்ணுங்க” என அறையிலிருந்தே சொன்னாள்.
“நீ என் கூட இல்லாம போனதிலேருந்து நைட் டைம்ல இதான் எனக்கு துணை. விடிய விடிய சிவாஜி ஜெமினி சாவித்ரி இவங்கதான் எனக்கு கம்பெனி. பழகிட்டேன், சவுண்ட் வேணா குறைக்கிறேன்” என்றவன் டிவியை அணைக்கவில்லை.
அவனை பார்த்துக் கொண்டே அவள் மௌனமாக படுத்திருந்தாள்.
“உன்னை எதுவும் ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு தள்ளி இருந்தேன், பதிலுக்கு நீ என்ன பண்ணின? மொத்தமா என் மனசை நொறுக்கிட்டு முழுசா ரெண்டு வருஷம் என் கண் காணாத இடத்துக்கு போயிட்ட. எனக்கு அதிகப் படியான பனிஷ்மென்ட்தான், விரிசல் விழுந்திட கூடாதுன்னு பயந்து நான் விலகி நின்னா எவ்ளோ பெரிய பள்ளத்தை நமக்கிடையில தோண்டி விட்ருக்க?” என சொல்லிக் கொண்டே பெல்ட், சட்டையெல்லாம் கழற்றி வைத்து பாயை விரித்து படுத்து விட்டான்.
“என்ன நினைச்சி என்னை அவாய்ட் பண்ணுனீங்கன்னு உங்க மனசுக்குள்ள புகுந்து பார்த்து தெரிஞ்சிக்கிற அளவு சக்தி இல்லை எனக்கு. அப்ப என்ன அனுபவிச்சேங்கிறது எனக்குதான் தெரியும். என்ன காரணம் சொன்னாலும் அப்ப நீங்க நடந்துகிட்டத ஏத்துக்க முடியாது என்னால” என்றாள்.
“ஆமாம், அதான் டிவோர்ஸ் பத்தியெல்லாம் ரொம்ப ஈஸியா பேசுற?” என்றான்.
ஜனா, மஹதி பேசியதை தவறாக புரிந்து கொண்டதை சொன்னால் அவர்களை திட்டுவானோ என நினைத்தவள் அந்த விளக்கத்தை சொல்லவே இல்லை.
“இப்பவும் எம்மேலதான் தப்புங்கிற மாதிரி பேசுறீங்க பாருங்க… உங்ககிட்ட என்ன பேசியும் வேஸ்ட், எனக்கு தூங்கணும், வாய மூடிட்டு இருக்கிறதா இருந்தா இருங்க, இல்லைனா…”
அவளை முடிக்க விடாமல் வேகமாக எழுந்தமர்ந்தவன், “இல்லைனா… சொல்லு இல்லைனா… சொல்லி முடி ஸ்ரீ” என அழுத்தமாக கேட்டான்.
“ஐயா சாமி! உங்களை ஒண்ணும் வெளில போக சொல்லி அசிங்க படுத்திடல, நான் போறேன்னு சொல்ல வந்தேன், மஹதியோட ஷாப்ல உள்ள குட்டியா ரூம் இருக்கும், அங்க போய் படுத்துக்கிறேன்” என சொல்லி எழுந்தாள்.
“படு படு” தணிவாக சொன்னவன் படுத்து விட்டான். இருவருமே உறங்கி விட்டனர்.
மாலையில் வீடு வந்த ஜோதி கதவை தட்டவும்தான் எழுந்தான் ஜெய். அவளும் எழுந்து கொண்டாள். ஜெய் கதவை திறக்க போக, “போங்க, ரூம் போய் ஷர்ட் போடுங்க” என்றாள்.
அவளை முறைத்துக் கொண்டே அறைக்கு சென்று விட்டான். ஸ்ரீ கதவை திறக்கவும், “தம்பி செருப்பு மாதிரி இருக்கே, வந்திருக்காங்களா?” என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் ஜோதி.
ஸ்ரீ தலையாட்டவும் மருமகனை உபசரிக்க பர பரப்பாகி விட்டார் அவர். ஹால் வந்த ஜெய் ஸ்ரீயை அழைத்துக் கொண்டு உடனே கிளம்புவதாக மாமியாரிடம் சொன்னான்.
அவள் திகைப்பாக பார்க்க, “இன்னும் ஒரு நாள்தான் இருக்கு எங்கேஜ்மெண்ட்க்கு, பெரிய லிஸ்ட் வச்சிருக்கியாமே திங்ஸ் வாங்க, நாலு நாள் கழிச்சு வாங்குவியா?” எனக் கேட்டான்.
அவள் மறக்கவில்லை, தானே சென்று கொள்ளலாம் என இருந்தாள். அவள் பேசவே அனுமதிக்காதவன் “ரெடியாகு” என கட்டளை போல சொல்லி பின் பக்கம் சென்று விட்டான்.
அலுத்துக் கொண்டே ஸ்ரீ தயாராக, மாப்பிள்ளை வந்ததை ஏன் சொல்லவில்லை, அவருக்கு வெறும் தயிர் சாதம் போட்டாயா? எனக் கேட்டு திட்ட ஆரம்பித்து விட்டார் ஜோதி.
“நான்தான் அத்த தயிர் சாப்பாடு கேட்டேன், அவளை ரெடியாக விடுங்க” என சொல்லி காப்பாற்றி விட்டான் முகம் கழுவி வந்த ஜெய்.
ஜோதி தயாரித்த தேநீரை பருகியவர்கள் கால் மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டனர். அவள் சொன்ன இடங்களுக்கெல்லாம் பொறுமையாக அழைத்து சென்றான்.
தாம்பூல பை பிரிண்ட் செய்ய கொடுத்திருந்த இடத்தில் தாமதம் செய்து விட்டனர். நாளை வரலாம் என்றாள்.
“சும்மா சும்மா அலைய முடியாது” என அவன் சொல்லவும் அங்கேயே காத்திருந்தனர். பைகள் கிடைக்கவும் அவளை கேள்வியாக பார்த்தான். ஜனா மஹதி இருவரின் பெயர்களுக்கும் இனிஷியல் போடப் படவில்லை.
வாசுதேவன் பெயர் போட்டு நல்லாசிகளுடன் என அச்சிட்டு மணமக்கள் பெயர்கள் போட்டு நல்வரவுக்கு கீழ் மற்றவர்களின் பெயர்கள் இருந்தன.
ஜெய்யின் திருமணம் போது பெண் மாறியதால் ஸ்ரீயின் பெயர் போட்டு அழைப்பிதழ் அச்சு செய்யப்படவே இல்லை. ஜனாவின் நிச்சயத்திற்கும் விசேஷம்தான் பெரிதாக செய்கிறார்களே தவிர அழைப்பிதழ் கிடையாது, அனைவருக்கும் வாய் மொழி அழைப்புதான்.
“ஜனாவுக்கு இனிஷியல் போட்டு மஹதிக்கு போடலைன்னா ஆக்வர்டா இருக்கும்ல, அதான் இப்படி” என விளக்கம் சொன்னவள், “மேரேஜ் இன்விடேஷன் கூட இப்படியே பிரிண்ட் செய்யலாம்” என்றாள்.
“அத்தை என்ன சொன்னாங்க, என்னை பத்தி யோசிக்காத, அவங்க சொல்ற படி செய், யாரும் ஹர்ட் ஆகிட வேணாம்” என்றான் ஜெய்.
“அந்தாளு விட்டுட்டு போனப்புறம் அம்மா தாலி கழட்டலைனா அது அவங்க பாதுகாப்புக்காகத்தான். இப்ப அத கழட்டிட்டாங்கன்னா அந்தாள் ஞாபகம் எப்படியும் வேணாம்னுதான். மத்த படி அவரை யாரும் நினைச்சிட்டு இல்ல, யாரும் ஹர்ட் ஆகுற மாதிரி எதுவும் நடக்கல” என்றாள்.
தலையாட்டிக் கொண்டான். இன்னும் வரவில்லையா என மகளுக்கு அழைத்து கேட்டார் ஜோதி. தான் வாங்கிப் பேசிய ஜெய், “வர லேட் ஆகும், வெளில சாப்பிட்டுக்கிறோம் அத்தை” என சொல்லி விட்டான்.
அவள் கண்டனமாக பார்க்க, அவன் கண்டு கொள்ளவில்லை. இந்நேரம் திறந்திருக்கும் உணவகங்களில் தரமானதை தேடிப் பிடித்து அங்கு அழைத்து சென்றான்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், “காலைல ஏதோ சொன்னியே, உன்னை கன்ஃப்யூஸ் பண்ணி ஹாஸ்பிடல் வரவச்சான்னு, என்ன விஷயம்?” எனக் கேட்டான்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க, ஏன் தெரியாதா உங்களுக்கு?” என்றாள்.
ஜெய்யை தவிர மற்றவர்களுக்கு அது தெரியும்தான், அவன் சொன்னால் இவள் ஏன் சென்றாள் எனதான் பெரியவர்கள் நினைத்தனர். ஜெய்யிடமும் ஸ்ரீ சொல்லியிருப்பாள் என்றே எண்ணிக் கொண்டனர். பழைய விஷயங்கள் பற்றி பேசவும்தான் யாரையும் இவன் அனுமதித்திருக்கவில்லையே.
ஸ்ரீ அமெரிக்கா சென்று விடவும் அந்த விபத்து குறித்து யாரும் கலந்தாலோசித்துக் கொள்வதில்லை.
இப்போதும் அதை பற்றி பேச ஸ்ரீக்கு விருப்பமில்லை, அவன் சொல்லியே ஆக வேண்டும் என்பது போல கேட்டான்.
மருத்துவமனை ஊழியனின் பயமுறுத்தலையும் அந்த நேர தன் மன நிலையையும் சொன்னவள், “என் முன்னோர் என்ன பாவம் செஞ்சாங்களோ போன ஜென்மம் என்ன பண்ணி தொலைச்சேனோ இப்படி புள்ளைங்களோட கஷ்ட படுறேனேன்னு அம்மா அடிக்கடி புலம்பி கேட்ருக்கேன். அப்புறம் அவங்க பேரெண்ட்ஸ் எதிர்த்துதானே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க, அவங்கள கஷ்ட பட வச்சதுக்குதான் தான் கஷ்ட படறதா சொல்வாங்க. அதனால அவன் சொன்னதுல எனக்கும் பயம் வந்திடுச்சு, எனக்கு யார்கிட்ட கேட்கன்னு தெரியலை, உங்ககிட்ட சொல்லவும் பயமா இருந்தது. நம்ம பாப்பாக்கு…” என்றவள் நீர் எடுத்து பருகினாள்.
“சரி தப்பு பகுத்து பார்க்கிற அளவுக்கு தெளிஞ்ச நிலைல இல்லை நான். ஏதாவது வகைல பாப்பாக்கு பாவம் சேர்த்து வைக்க கூடாதுன்னுதான் அங்க போனேன். இப்ப யோசிச்சா என்கிட்ட பணம் வாங்கதான் அவன் என் எமோஷன்ஷோட விளையாடியிருக்கான்னு தோணுது” என்றாள்.
ஜெய் கீழே தரையை வெறித்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீக்கு சாப்பிட பிடிக்கவில்லை. பாதி மட்டுமே சாப்பிட்டிருந்த அவனும் அவளை முழுதாக சாப்பிடும்படி வற்புறுத்தவில்லை.
அவளை வீட்டில் விடுவதற்காக காரை செலுத்திக் கொண்டிருந்தவன் திடீரென, “அந்த நாதாரி பேரென்ன சொன்ன?” எனக் கேட்டான்.
“பேர் சொல்லவே இல்லையே நான்?” என்றவள் நெற்றி சுருக்கிக் கொண்டு அவனது முகத்தைப் பார்த்தாள்.
அவனது கண்களில் தெரிந்த வெறியில் அவளது உள்ளங்கை சில்லிட்டது.
“ம்ம்… பரவாயில்லை இப்ப சொல்லு” என்றான் ஜெய்.
மறுப்பாக தலையாட்டினாள்.
ஒரு பக்கம் உதடுகள் வளைய சிரித்தவன், “என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? எவ்ளோ பெரிய அநியாயம் பண்ணினவனை காப்பாத்த நினைக்கிற… ஹ்ம்ம்?” எனக் கேட்டான்.
“அரக்கன் மாதிரி மூஞ்ச வச்சுக்காதீங்க, நாளன்னிக்கு ஜனா மஹதி எங்கேஜ்மெண்ட். ஒழுங்கா வீடு போய் தூங்குங்க” என்றாள்.
அவன் அமைதி காக்க, “அந்த டிரைவர் எங்க இருக்கான் இப்போ, அவனை ஏதாவது செஞ்சீங்களா?” எனக் கேட்டாள்.
பதில் தராமல் இறுகிய முகத்தோடு ஸ்டியரிங்கை வளைத்தான்.
“பதில் சொல்லுங்க!” என அதட்டினாள்.
காரை வேகமாக செலுத்தியவன் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவளது அம்மா வீட்டை வந்தடைந்திருந்தான்.
உறங்காமல் காத்திருந்த ஜோதி காரின் சத்தம் கேட்டு கதவை திறந்து கொண்டு வந்தார்.
“இறங்கிக்க, போய் நிம்மதியா தூங்கு” என்றான் ஜெய்.
என்ன செய்யப் போகிறானோ என அவளுக்கு பயந்து வந்தது. அவனது கோவத்தின் வீரியத்தின் அளவை உணர்ந்து வைத்திருந்தவள் காரின் அருகில் வந்து விட்ட அம்மாவிடம், “நான் இவரோட கிளம்புறேன் மா, நாளைக்கு ஃபோன்ல பேசுறேன். நீ உள்ள போம்மா” என்றாள்.
ஜோதிக்கு மகிழ்ச்சியும் குழப்பமும் போட்டி போட்டுக் கொண்டு பீறிட்டது. ஜெய் ஒருவித திகைப்போடு ஸ்ரீயை பார்த்திருந்தான்.
எங்கே மகள் மனம் மாறி விடப் போகிறாளோ என்ற பயத்தில், “நல்ல படியா போயிட்டு வாங்க” என்ற ஜோதி வீட்டுக்குள் விரைந்து விட்டார்.
ஸ்ரீக்கு அவனோடு செல்ல அறவே விருப்பமில்லை என்ற போதும் அவனை தனியாக விட்டு அந்த ஊழியனை தேடிச் சென்று பிரச்சனை செய்வானோ, அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ எனவும் பயமாக இருந்தது.
ஜெய் காரை எடுக்காமல் அவளையே பார்த்திருந்தான்.
“கிளம்புறீங்களா?” எரிச்சலாக கேட்டவள் நெற்றிப் பொட்டில் கையை வைத்து அழுத்திக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள்.