அத்தியாயம் -23(3)
கடையின் உள்ளிருந்து சின்ன குழந்தை ஒன்றோடு வந்தாள் ஒரு பெண். பேசிக் கொண்டதில் கடைக்காரனின் மனைவி மகன் என தெரிந்தது. உள்ளே மற்ற ஆட்களோடு சேர்ந்து இவளும் பூ கட்டுவாள் போல, குழந்தையை தன்னோடு அழைத்து வந்து விடுவாளாம்.
குழந்தையின் இடுப்பில் அரை நாண் கொடியோடு சின்ன கயிறு கட்டியிருக்க என்னவென விசாரித்தான் ஜெய்.
“ஒரு இடம் உட்காராம ஓடிட்டே இருக்கான் ண்ணா, அதான் இந்த கயிறை கட்டியிருக்கேன். நான் வேலையா இருக்கும் போது இந்த கயித்த உள்ள இருக்க கம்பு தூண்ல கட்டி விட்டா வெளில ஓடியாந்தர மாட்டான். நானும் பயமில்லாம பூ கட்டுவேன்” என்றாள் அந்தப் பெண்.
பச்சரிசி பற்களும் திராட்சை கண்களுமாக இருந்த குழந்தை அம்மாவிற்கு போக்கு காட்டி வந்து ஜெய்யின் கால்களை பிடித்துக்கொண்டு சிரித்தது. ஆசையாக தூக்கிக் கொண்டவன், “உங்க பேரென்ன?” எனக் கேட்டான்.
பதில் சொல்லாமல் அவனது தாடியை இழுத்து விளையாடி சிரித்தது குழந்தை.
அந்தப் பெண்தான் பெயர் இன்னதென சொன்னாள்.
“அதிசய குழந்தை, பூச்சாண்டின்னு பயந்து போய் அழாம சிரிக்க வேற செய்றான்” என நொடிப்பாக சொன்னாள் ஸ்ரீ.
மனைவியை கண்டு கொள்ளாமல் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு அதன் தாயிடம் கொடுத்தான் ஜெய்.
குழந்தையை கீழே விடாமல் இடுப்பில் வைத்துக்கொண்டே உணவூட்டினாள் அந்தப் பெண். ஜெய்யின் பார்வை அந்தக் குழந்தையிடம்தான் இருந்தது.
பூச்சரம் எவ்வளவு வேண்டுமென சொல்லி விலை கேட்டு பேரம் பேசிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.
“ஸார்… கட்டாதுங்க ஸார் தங்கச்சிகிட்ட எடுத்து சொல்லுங்க. வாங்கின விலைக்கே கொடுத்தா என் பையனை நல்ல ஸ்கூல்ல படிக்க வச்சு எப்படி ஆளாக்குவேன்?” என்றான் கடைக்காரன்.
“விடு ஸ்ரீ, இதெல்லாம் கணக்கு பார்க்காத” என ஜெய் சொல்ல, “நியாய விலைக்குதான் கேட்கிறேன்” என்றாள் ஸ்ரீ.
“அட இருக்கட்டும் விடு, விஷேஷத்துக்கு வாங்குறோம், இவங்க சந்தோஷமா கொடுத்தாதான் நல்லது” என்ற ஜெய், கடைக்காரன் சொன்ன விலைக்கே ஒத்துக் கொண்டான்.
“நல்ல மனசு ஸார் உங்களுக்கு” என்றான் கடைக்காரன்.
“எண்ணிப் பார்க்காம பணம் கொடுத்தா எல்லாரும் நல்லவங்கதான் ண்ணா உங்களுக்கு” என கிண்டலாக சொன்னாள் ஸ்ரீ.
டோர் டெலிவரி இல்லை என்றனர். விஷேஷ தினத்தன்று அதிகாலை மாலை பூ எல்லாம் மண்டபம் வந்து சேர வேண்டும் என்ற ஜெய் கூடுதலாக பணம் கொடுத்தான். பணத்தை எண்ணிப் பார்த்த கடைக்காரன், “நிஜமா பெரிய மனசு ஸார் உங்களுக்கு. கல்யாணத்துக்கும் இங்கதான் வாங்கணும், தெரிஞ்சவங்களுக்கும் சிபாரிசு பண்ணி விடணும்” என வேண்டுகோள் வைத்தான்.
சமீபத்தில் பணி முடித்து கிரஹ பிரவேஷத்துக்கு தயாராக இருக்கும் வீட்டு ஓனருக்கு இங்கு வந்து பூமாலைகள் வாங்கிக் கொள்ளும் படி கையோடு சிபாரிசு செய்தான் ஜெய். இனி நிறைய வாடிக்கையாளர்கள் இங்கு வருவார்கள் எனவும் சொன்னான்.
தன் கைப்பையிலிருந்து சாக்லேட் எடுத்து குழந்தையிடம் கொடுத்தாள் ஸ்ரீ. குழந்தை விரிந்து சிரித்தது. கன்னம் கிள்ளி கொஞ்சியவள் அதன் இடுப்பில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்து அதன் அம்மாவிடம் கொடுத்தாள்.
“அதான் ஸார் நிறைய ஆர்டர் பிடிச்சு தர்றேன்னு சொல்லியிருக்காரே, பையன் ஸ்கூல் போற வரைக்கும் ஒழுங்கா புள்ளைய கவனிக்கணும். இந்த கயிறெல்லாம் வேணாம்” என்றாள். அந்தப் பெண் மகிழ்ச்சியோடு தலையாட்டிக் கொண்டாள்.
“புள்ள குட்டியோட நல்லா இருக்கணும் ஸார் நீங்க” மகிழ்ச்சியோடு சொன்னான் கடைக்காரன்.
ஜெய்யின் மனமும் முகமும் சுணங்கி விட்டது. ஒரு தலையாட்டுதலோடு அங்கிருந்து புறப்பட்டவன் மனைவியை விட்டு தள்ளி நடந்து கொண்டிருந்தான்.
ஸ்ரீக்குமே பழைய நினைவுகள். ஏதோ யோசனையில் வந்தவள் எதிரில் பூக்கூடையோடு வந்தவனை கவனிக்கவில்லை. அவனை அவள் இடித்து விட்டதில் பூக்கூடை தவறி விழுந்து விட்டது. பாதிக்கும் மேலான பூக்கள் அருகில் ஓடிக் கொண்டிருந்த சாக்கடையில் கொட்டி பாழாகி விட்டன.
ஸ்ரீ, “ஸாரி” சொல்ல, பூக்காரன் திட்ட ஆரம்பித்து விட்டான். பணம் தந்து விடுகிறேன் என ஸ்ரீ சொல்ல நினைக்க அவளை பேசவே விடவில்லை அவன்.
“யோவ் வேணும்னா பண்ணினாங்க, தெரியாம நடந்ததுக்கு இப்படி சத்தம் போடுற, அவ சொல்ல வர்றத கேட்க கூடாத அளவுக்கு ஐயா பிஸியா?” என இடையிட்டான் ஜெய்.
அவன் ஜெய்யிடமும் கத்த சட்டையின் கையை மடித்து விட்டான் ஜெய். கணவனின் கையை அழுந்தப் பிடித்து, “இதான் வம்ப வாங்குறது” என கண்டனமாக சொன்னாள்.
பூக்களுக்குரிய பணத்தை அவனிடம் கொடுத்து ஸ்ரீயின் கை பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றான் ஜெய்.
மார்க்கெட்டை கடந்து சற்று தூரம் நடந்தால்தான் கார் நிற்குமிடம் வரும். அவளின் கையை விடாமல் பிடித்துக்கொண்டே நடந்தான்.
“எனக்கு நடந்ததும் இப்படித்தான் தெரியாம… நம்ம குழந்தையும்…” என்றவளுக்கு அன்றைய துக்கம் இன்று தொண்டையை கவ்வியது.
நின்று விட்டவன் அவளின் கலங்கிய முகத்தை பார்த்து விட்டு, “பழசெல்லாம் பேச வேணாம்” என்றான்.
“எப்படி பேசாம இருக்க முடியும்? நீங்க கூட இதோ இப்ப கத்தினானே அவனை மாதிரிதான் என்னை அறியாம நடந்து போன விஷயத்துக்காக அதிகப்படியா நடந்துகிட்டீங்க” என குற்றம் சுமத்தினாள்.
“அதிகப்படியா நடந்தேனா? எதுவும் ரியாக்ட் பண்ணல நான். அந்த நேரம் உன்கிட்ட எப்படி நடந்திருப்பேன்னு எனக்கே தெரியலை ஸ்ரீ, கண்டிப்பா மூர்க்கமா நடந்திருப்பேன், என்னையவே என்னால மன்னிக்க முடியாத அளவுக்கு ஏதாவது பேசியிருப்பேன் உன்னை, பேசியே குத்தி கிழிச்சிருப்பேன். அப்படி ஏதும் நடந்திட கூடாதுன்னுதான் தள்ளி இருந்தேன்” என கடினக் குரலில் சொன்னான்.
“இத சொல்றதுல எந்த பெருமையும் இல்லை. என்ன செஞ்சிருப்பீங்க… என்ன… அடிச்சிருப்பீங்களா என்னை? அத கூட தாங்கியிருப்பேன், ஆனா ரொம்ப மோசமா அனாதையா விட்டுட்டீங்க என்னை”
“என்ன அனாதையா விட்டேன், ஏன் அப்பயி அம்மா…”
அவனை முடிக்க விடாமல், “என் அம்மா கூட எனக்கு தேவை படல, உன்னைத்தான்… உன்னைத்தான் நான் தேடினேன். உங்கிட்ட கொட்ட வேண்டியதை யார்கிட்டேயும் சொல்ல முடியாம அந்த துக்கத்தை உள்ள வச்சு வச்சு… இப்போ வரை என் அடிவயிறு கலங்கி நிக்குது. உங்கிட்ட புலம்பி புலம்பி ஆற வைக்க நினைச்சு புண்ணு இன்னும் ஆறாம அப்படியே கெடக்கு” கண்ணீர் வழிய சொன்னவளின் கையை பிடித்தான்.
அவனது கையை உதறி விட்டவள், “பழச பேசாதவாம் பழச. எனக்கு பழசே ஆகல இன்னும். போயிடுச்சேங்கிற துக்கம் மட்டும்தான் உனக்கு, எனக்குள்ள பொத்தி வச்சிருந்தத நானே… நானே…” என்றவளுக்கு பேச்சு வரவில்லை.
மல்லுகட்டி அவளை தோளோடு அணைத்து அழைத்து வந்து காரில் ஏற்றினான். அவளால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. அவனை கட்டிக் கொண்டு அப்படியொரு அழுகை.
அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. “போதும் ஸ்ரீ” என கெஞ்சலாக சொன்னான்.
“தானா போறத விட தன்னால போச்சுங்கிற நினைப்பு எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா? வெளில சிரிச்சா உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்கேன்னு நினைப்பியா? என்னென்ன பேசின என்னை?” என ஆத்திரத்தோடு கேட்டவள் அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
“கோவத்துல…”
“பேசாத, என்ன பெரிய *** கோவம் உனக்கு? என்ன வேணா பேசுவியா? இதுல தப்பெல்லாம் எம்மேலன்னு மொத்த பழியையும் என் தலைல போட்டுட்ட” எனக் கேட்டுக் கொண்டே மூக்கை உறிந்து கொண்டாள்.
அவன் அவளை தன் வசப் படுத்த முயன்றான். அதற்கு அனுமதிக்காதவள், “வுட்டுட்டு ஓடிப் போன என்னை பெத்தவன் ஏன் திரும்பி வந்தான், அந்த சுயநலம் பிடிச்சவன் பண்ணினது தப்பு. பெரிய உத்தமனாட்டம் அவனை பார்க்கலைனா பாவம்னு என்னை குழப்பி என்னை அங்க வரவச்ச அந்த பாவி பண்ணினது தப்பு. சொன்ன உடனே வர்றேன்னு உங்கிட்ட ஒத்துக்கிட்ட கார் டிரைவர் எங்க போய் தொலைஞ்சான், அவன் அனுப்பி வச்சானே ஒருத்தனை… குடிச்சிட்டு கர்ப்பிணிய கார்ல அழைச்சிட்டு போனவன் எல்லாம் மனுஷ ஜென்மமா? ஆனா இவங்க யாருமே தப்பு இல்லை. நான்தான்… நான்தான் தப்பு!” வேகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஸ்ரீ அமைதியா இரு!” அதட்டினான் ஜெய்.
“சொல்லு எம்மேலதான தப்பு, சொல்லு!” சத்தம் போட்டாள்.
“இல்லை ஸ்ரீ”
“இல்லயா… இல்லை… எம்மேல தப்பு இல்லை?” ஏளனமாக சிரித்தாள். இவளை எப்படி சமாளிக்க என அவன் விழித்தான்.
“உன் வாயால நீதான் சொன்ன, நான்தான் தப்பு நான்தான் கொன்னுட்டேன்னு சொன்ன” என்றவள் அழுதாள்.
அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். முகத்தை மார்போடு பொத்திக் கொண்டான். அழுது அழுது சோர்ந்து போய் விட்டாள்.
“பழசை இத்தோட விடு ஸ்ரீ. நமக்கு நம்ம குழந்தை திரும்ப பொறக்கும்” என்றான்.
பட்டென அவனிடமிருந்து விலகியவள், “உன்னோட வாழவே பயமா இருக்கு. திரும்பல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது என்னால, போ” என்றாள்.
அவளின் குரலில் அத்தனை உறுதித் தன்மை இல்லை. அதனால் அதிகம் பயப்படாதவன் காரை அவளின் வீட்டிற்கு செலுத்தினான்.