அத்தியாயம் -17(3)

அங்கு தோற்றம் உருமாறி அழுக்காக நலிந்து போய் படுத்துக் கிடப்பது தன்னை பெற்றவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள் ஸ்ரீ. அங்கு வீசிய மருந்துகளின் நெடியில் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

உறங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் வெளியில் வந்து விட்டாள். குழறி பேசிக் கொண்டிருந்தவருக்கு நள்ளிரவிலிருந்து பேசவே வரவில்லை என கூறினான் அந்த ஊழியன்.

பறி போன பணம் பற்றி துரைசாமியிடம் விசாரித்து எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை புரிந்து கொண்டாள்.

“என்னம்மா உங்களுக்கு தெரிஞ்சவர்தானே? இவர் சொந்தக்காரங்க வந்தா பார்க்க சொல்லி டாக்டர் சொல்லியிருக்காராம். ரவுண்ட்ஸ் வர்ற நேரம்தான், பார்த்திடுங்க. ஆமாம்… இவர் ஏன் தெருல கிடந்தார்? உங்களுக்கு இவர் என்ன வேணும்மா?” கேள்விகளாக கேட்டான் அவன்.

“இவர் எனக்கு தெரிஞ்சவர்தான். ஆனா… ரொம்ப வருஷமா எங்கேயோ போயிட்டார்” என்ற ஸ்ரீக்கு மேலும் அவனிடம் என்ன விளக்குவது என தெரியவில்லை.

“அட்டெண்டர் இல்லாம அனாதையா கெடக்கார்மா. நீங்க…”

“இல்லண்ணா, இவர் அவ்ளோ முக்கிய பட்டவர் இல்லை எனக்கு. என் வீட்டுக்காரருக்கு இங்க வந்தது தெரிஞ்சாலே… ஹையோ!” நெஞ்சில் கை வைத்து பதறினாள்.

அந்த ஊழியன் குழப்பமும் வினோதமாகவும் அவளை பார்த்தான். ஸ்ரீயுமே குழப்பத்தில்தான் இருந்தாள்.

“நான் கிளம்பறேன் ண்ணா” என்றாள்.

“ம்மா… ம்மா! அவருக்கு யூரின் டியூப் லாம் போட்ருக்கு. நான்தான் சேவகம் செஞ்சிட்டு இருக்கேன். பார்த்தா பெரிய இடம் மாதிரி தெரியுறீங்களே, எதாவது கவனிச்சிட்டு போங்க” என்றான்.

கைப்பையிலிருந்து பணம் எடுத்தவள் எண்ணாமல் அப்படியே அவனது கையில் கொடுத்து விட்டாள்.

“இது அவரை கவனிச்சதுக்காகவோ இனி கவனிக்க போறதுக்காகவோ இல்லை. இங்க டாக்டர்ஸ் இல்லை வேற யாருகிட்டேயும் என்னை பத்தி சொல்லிடாம இருக்க. எனக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை புரிஞ்சுதா?” என்றாள்.

“யாரும்மா நீங்க இவருக்கு?” எனக் கேட்டான்.

“இவர் மூலமாதான் இந்த உலகத்துக்கு வந்தேன். என் அம்மாவை, என்னை கை விட்டுட்டு ஓடிப் போன மஹான் இவர். நான் இங்க வந்திருக்கவே கூடாது” என்றாள்.

“உங்கப்பாவா இவரு?” என அவன் கேட்டதற்கு அவள் ஆமென்றும் சொல்லவில்லை, மறுக்கவும் இல்லை.

“என்ன நடந்திருந்தாலும் இந்த நிலைல தனியா விடக்கூடாதும்மா, பெத்தவங்கள தவிக்க விடுறது பாவம்மா. உங்க நல்லதுக்கு சொல்றேன்மா, நீங்க… உங்களோட இந்த நிலைல பாவத்தை சேர்க்காதீங்கமா” என்றான்.

அனிச்சையாக அவளின் கை தன் சிசுவை அணைத்துக் கொண்டது.

“இவர் செஞ்சது பெரிய துரோகம், அத விட இவரால ஒரு உயிர் போயிருக்கு. இனி திரும்ப என்னை கூப்பிடாதீங்க. கூப்பிட்டாலும் நான் வர மாட்டேன்” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள்.

மீண்டும் கல்லூரிக்கு செல்லாமல் அம்மாவை காண சென்றாள். தன் மனதிற்குள் வைத்துக்கொள்ள இயலாமல் அம்மாவிடம் சொல்லி விட்டாள்.

ஜோதியிடம் பெரிதான அதிர்ச்சி இல்லை. உன்னை யார் அங்கு போக சொன்னது என மகளைதான் கடிந்து கொண்டார். அம்மாவை ஊன்றிப் பார்த்தாள் ஸ்ரீ.

 “ஆமாம்டி அந்தாளு முதல்ல என்னைத்தான் பார்க்க வந்தாரு. எல்லாத்தையும் இழந்திட்டு இரத்தம் சுண்டவும் நான் ஏத்துக்கிட்டு கஞ்சி ஊத்துவேன்னு பகல் கனவு கண்டுக்கிட்டு வந்தவரை தொரத்தி விட்டுட்டேன்” என அமைதியாக சொன்னார் ஜோதி.

துரைசாமியை அவருடைய பணத்தாசை நம்பியவர்களுக்கே துரோகம் செய்ய வைத்தது. மொழி தெரியாத மாநிலம் சென்று தன் அடையாளங்களை மாற்றிக் கொண்டு அங்கேயே சொகுசாக வாழ ஆரம்பித்திருக்கிறார். கட்டிய மனைவி மகள்கள் நினைவில்லாமல் வேறொரு பெண்ணை மணந்து கொண்டிருக்கிறார்.

அவர் ஆரம்பித்த தொழிலும் நன்றாகவே சென்றிருக்கிறது. உதவிக்கென வந்து அவருடன் இணைந்தானாம் இரண்டாவது மனைவியின் தம்பி. சில வருடங்களிலேயே அவரை செல்லாக்காசாக மாற்றி வீட்டு சிறையில் வைத்து எல்லாவற்றையும் அவனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து விட்டானாம். அந்த இரண்டாவது மனைவியும் இதற்கு உடந்தையாம்.

படுக்கையில் இருக்கிறார் என வெளியுலகத்துக்கு கதை கட்டி நான்கு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து விட்டானாம்.

இரத்த அழுத்தம் உயர்ந்து மயக்கமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கிருந்து தப்பி விட்டார்.

இனி அந்த பகுதியில் இருந்தால் நிச்சயம் தன்னை கொன்று விடுவார்கள் என தெரிந்ததால் முதல் மனைவியை தேடிக் கொண்டு வந்து கண்ணீரோடு கதை சொல்லியிருக்கிறார்.

“கடவுள் இருக்கார் ஸ்ரீ, அந்தாளு நிம்மதியா வாழலை, செஞ்ச பாவத்துக்கு நல்லா அனுபவிச்சிருக்கார். ஆனா எந்த நம்பிக்கைல என்னை தேடிக்கிட்டு வந்தாருன்னுதான் தெரியலை. குப்பையை தூக்கி போட்டுட்டு போய் உன் வேலைய பாரு” என்றார் ஜோதி.

மலைப்பாக அம்மாவை பார்த்திருந்தாள் ஸ்ரீ.

“உங்களுக்கெல்லாம் இத சொல்லி என்ன ஆக போகுது? ஜெய் தம்பிக்கும் தெரிய வேணாம், அந்த ஈன பிறவி எக்கேடோ கெட்டு போகட்டும். எப்பவும் யாருக்கும் அந்தாளு திரும்பி வந்த விஷயத்தை சொல்லவே சொல்லாத” என தீர்மானமாக சொல்லி விட்டார்.

ஸ்ரீக்கும் அம்மா சொல்வதே சரியென பட்டது. தெளிந்த மனதோடு கல்லூரிக்கு சென்றாள். வகுப்பறைக்கு செல்லாமல் நூலகம் சென்று விட்டாள். ஜெய் அவளை அழைக்க வரும் நேரத்துக்கு எப்போதும் போல வெளியே வந்தாள்.

ஜோதி நிராகரித்து விட்ட பிறகு ஸ்ரீயை பற்றி அறிந்து அவளின் கல்லூரியில் விசாரித்து அவளது கைப்பேசி எண்ணை பெற்றிருக்கிறார் துரைசாமி. அவர்கள் திருச்சியை விட்டு போகாமல் இருந்ததால் அவருக்கு இவர்களை தேடி வருவதில் சிரமம் இல்லாமல் போய் விட்டது.

ஸ்ரீயிடம் பேசுவதற்கு முன் உடல் நலம் சீரற்று போய் மயக்கமாகி விட்டார். அவரை யாரோ சில நல் உள்ளங்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

ஸ்ரீயின் கைப்பேசி இலக்கம் வெகு எளிதாக மனதில் பதியும் வகையில் இருக்கவே துரை சாமிக்கு அந்த எண் மனப்பாடமாகி விட்டது. இது எதுவும் ஸ்ரீக்கு தெரியவில்லை.

துரைசாமியை பார்த்த விஷயத்தை தன் மனதிலிருந்தே அகற்றி விட வேண்டும் என முடிவு கட்டியிருந்தாள்.

இரவில் தன்னை விட்டு அகலமால் சுருண்டு கிடந்த மனைவியிடம் என்ன ஏதேன்று தோண்டி துருவத்தான் செய்தான் ஜெய். அவள் எதையும் சொன்னால்தானே. எதுவுமில்லை என்றே சமாளித்தாள்.

 பிரசவம் நினைத்து வரும் பயம் போல என அவனாகவே எண்ணி மனைவியை தாங்கிக் கொண்டான்.

 நாட்களை இயல்பாக கடக்க முற்பட்டாள் ஸ்ரீ. அந்த மருத்துவமனை ஊழியனிடமிருந்து அழைப்பு வந்த போது இனிமேல் அழைக்க வேண்டாம் என உறுதியாக சொல்லி அவனது எண்ணையும் பிளாக் செய்து விட்டாள்.

ஒரு வாரத்தில் வேறொரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இவள் ஏற்றுப் பேச அந்த ஊழியன்தான்.

துரைசாமி உயிர் போகும் இறுதி தருவாயில் இருப்பதாகவும் இழுத்துக் கொண்டிருக்கும் உயிரை அமைதி படுத்த இவள் வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான்.

அந்த ஊழியனுக்கு நல்லெண்ணம் என்பதெல்லாம் கிடையாது. போன முறை அவள் கொடுத்து சென்ற அதீத பணம் போல இந்த முறையும் ஏதாவது கிட்டலாம் என்ற நப்பாசை.

அவருக்கு என்ன நடந்தாலும் அங்கு என்ன செயல்முறையோ அதையே செய்து கொள்ளுங்கள் என சொல்லி விட்டாள் ஸ்ரீ.

அவன் விடுவதாக இல்லை. உலகை காணாத அவளது சிசுவை குறித்து பேசி அவளது மனதில் தேவையற்ற குற்ற உணர்வை உண்டாக்கினான்.

“அவர் என்ன வேணா செஞ்சிருக்கட்டும்ங்க, அதுக்கான தண்டனைய கடவுள் கொடுப்பாரு, உங்க கடமையை சரியா செய்யலைனா அந்த பாவம் உங்க புள்ள குட்டிக்குத்தான்ம்மா. உடம்பு முடியாதப்ப உங்க நம்பரைதான் நினைவு வச்சு சொன்னாரு, அப்ப உங்கள பார்க்கிற ஆசை இருந்திருக்கும்தானே? ஒரு முறை வந்திட்டு போனீங்கனா விஷயம் அத்தோடு முடிஞ்சு போகும்மா. இல்லைனா காலத்துக்கும் தீராத பாவமா சேர்ந்திடும்” என அவளை பயமுறுத்தும் படி பேசினான்.

ஸ்ரீ பதிலே பேசவில்லை. அழைப்பை துண்டிக்க போனாள். அவன் ஏதோ பேச ஆரம்பிக்க என்னவென கேட்டாள்.

“வாங்கமா. வந்து ஒரு முறை பார்த்திட்டு போயிடுங்க, அவர் உயிர் போனப்புறம் அடக்கம் செய்றதெல்லாம் நானே பார்த்துக்கிறேன்” என அவன் சொல்ல உடனே அழைப்பை துண்டித்து விட்டாள்.

ஸ்ரீயால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை. ஜெய்யிடம் சொல்லும் தைரியம் அறவே இல்லை, அவன் எப்படி எதிர் வினை ஆற்றுவான் என அவளால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

அம்மாவிடம் சொன்னால் கண்டு கொள்ளாமல் விடு எனதான் சொல்வார் என்பதால் அவரிடமும் பகிரவில்லை.

நிஜத்தில் மன்னிப்பு வேண்ட நினைக்கிறாரோ, மன்னிக்க கூடிய தவறா அவர் செய்தது? ஆனால் மரணப் படுக்கையில் ஒருவர் கிடக்கும் போது அப்படி அவரை விடுவது சரியா? அந்த அண்ணா சொன்னது போல அது பாவமா? என் குழந்தையை அது பாதிக்குமா என பலவித யோசனைகள் அவளுள்.

மனதின் ஒரு பக்கம் அங்கு செல் எனவும் இன்னொரு பக்கம் செல்லாதே எனவும் கட்டளைகள் போட்டுக் கொண்டிருந்தன. இரு தலைக்கொல்லி எறும்பாக தவித்தாள்.

தான் இன்னும் கையில் ஏந்தாத தன் குழந்தைக்கு எந்த எதிர்மறை ஆற்றலும் வந்து சேரக் கூடாது என முடிவெடுத்தவள் அங்கு செல்வது என முடிவெடுத்து விட்டாள்.

அவசரத்துக்கு என ஜெய் ஏற்பாடு செய்திருந்த டிரைவருக்கு அழைத்தாள். அவன் வேறொரு சவாரியில் இருப்பதாக சொன்னான். வேறு யாரையாவது ஏற்பாடு செய்து தரும் படி கேட்டுக் கொண்டாள்.

பாட்டியிடமும் அத்தையிடமும் கல்லூரி நூலகத்துக்கு செல்வதாக சொன்னாள். சனிக்கிழமைகளில் கல்லூரி நூலகம் திறந்தே இருக்கும், சில முறை அவள் அப்படி சென்றும் இருக்கிறாள். ஆகவே அவர்கள் தடை சொல்லவில்லை.

மருத்துவமனை சென்றாள் ஸ்ரீ. தான் செய்வது சரியா சரியா என மீண்டும் மீண்டும் குழம்பிக் கொண்டே இருந்தாள். வாயிலில் அவளுக்காக காத்திருந்த ஊழியன் சற்று முன்தான் துரைசாமி இறந்து விட்டதாக விவரம் சொன்னான்.

இறுதி சடங்கை எல்லாம் அவனே பார்த்துக் கொள்வதாகவும் கொஞ்சம் பணம் தரும் படியும் கேட்டான். பணத்தை கொடுத்தவள் மேலும் ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் உடனே புறப்பட்டு விட்டாள்.

வருகின்ற வழியில் கார் விபத்துக்குள்ளானது. டிரைவர் ஸ்ரீ இருவருக்குமே அடி.

 தன் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கையாளும் ஆடிட்டர் வீட்டுக்கு சென்றிருந்தான் ஜெய். அவருடன் ஆலோசித்துக் கொண்டிருந்த போது தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க ஏற்று பேசினான்.

கேட்ட செய்தியில் உறைந்து விட்டான்.

ஸ்ரீயையும் டிரைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர் காவல் அதிகாரிகள் .

ஸ்ரீயின் உறவினர் யாருக்காகவோதான் காத்திருந்தனர் மருத்துவர்கள். ஜெய் செல்லவுமே, ஸ்ரீயின் இரத்தப் போக்கை நிறுத்த உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கம் அழைத்து செல்ல வேண்டுமென கூறினார்கள்.

புரியாமல், “ஏன் என்னாச்சு அவளுக்கு?” நடுங்கிப் போன குரலில் கேட்டான் ஜெய்.

மருத்துவர் சொன்ன தகவலில் உயிர் பிரிந்த வலியை உணர்ந்தான் ஜெய்.