அத்தியாயம் -17(2)
ஸ்ரீக்கு நான்காவது மாதம் நடந்து கொண்டிருந்தது. அடுத்த மாதத்தில் மருந்து கொடுக்கும் விஷேஷம் வைக்க நாள் குறித்து ஜோதியிடமும் சொல்லியிருந்தார் பாட்டி.
மிக லேசாக ஸ்ரீக்கு வயிறு தெரிய ஆரம்பித்தது. அதனால் வயிறு தெரியாத படி ஆடைகள் வாங்க வேண்டுமென கணவனிடம் சொல்லியிருந்தாள்.
சைலேஷின் கடைதான் அங்கு பிரசித்தம். அந்த வார ஞாயிற்று கிழமையில் சைலேஷின் கடைக்கே சென்றிருந்தனர் இருவரும்.
அங்கு ஸ்ரீக்கு யாரோ தன்னை பார்த்துக் கொண்டே இருப்பது போன்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. சுற்றிலும் பார்த்தவளுக்கு அந்தக் கூட்டத்தில் யார் தன்னை கவனிக்கிறார்கள் என கண்டறிய முடியவில்லை.
“ட்ரெஸ் காட்டிட்டு இருக்காங்க, இங்க பாரு ஸ்ரீ” என்றான் ஜெய்.
ஆடைகளை பார்ப்பதில் கவனம் வைத்தாலும் மீண்டும் மீண்டும் சுற்றிலும் பார்த்தாள்.
“என்ன ஸ்ரீ?” எனக் கேட்டவனிடம் சின்ன குரலில் விஷயத்தை சொன்னாள். அவனும் சுற்றும் முற்றும் பார்த்தான். பின், “அப்படிலாம் எதுவும் இல்லை, நீ ட்ரெஸ் பாரு” என்றான்.
ஸ்ரீயால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. வந்து விட்டதற்காக இரண்டொரு ஆடைகள் மட்டும் எடுத்தவள் போகலாம் என சொல்லி விட்டாள்.
அங்கிருந்து நேராக வீட்டுக்கு செல்லாமல் இன்னொரு கடைக்கு அழைத்து சென்றான் ஜெய்.
“கூட்டமா உள்ள கடைக்கு சண்டே போனா இப்படித்தான் ரிலாக்ஸா எதுவும் வாங்க முடியாது. இங்க வாங்கிக்க, உனக்கு பிடிச்ச மாதிரி இல்லைனா அப்பறம் ஆன்லைன்ல வாங்கிக்கலாம்” என்றான்.
ஆனால் அதே கடையில் ஸ்ரீக்கு பிடித்தவாறு நிறைய இருந்தன. அவள் ட்ரை செய்து பார்த்தாள், அவளுக்கு மிகுந்த திருப்தி. ஆனால் ஜெய் அவள் தேர்ந்தெடுத்த அளவை விட சற்று பெரிதாக எடுக்க சொன்னான்.
“இன்னும் லூசா போட்டாதான், பாப்பாக்கு மூச்சு முட்டாது. நல்ல ஸ்பேஸ் வேணும் ஸ்ரீ” என்றவனை முறைத்து வைத்தாள். தான் எடுத்ததைதான் பில் போடுவேன் என அடமாக நின்றான் அவன்.
“உங்க புள்ள வயிதுக்குள்ள ஸேஃபாதான் இருக்கு. சும்மா ஓவர் அப்ஸெஸிவா இருக்காதீங்க”
“இது கேரிங்”
“ட்ரெஸ் நான்தான் போட்டுக்கணும். இவ்ளோ தொள தொளன்னு போட்டுட்டு போக முடியுமா நான்? கிண்டல் பண்ணுவாங்க எல்லாரும்”
“யார் என்ன சொல்வா? அப்படி யாரும் ஏதும் சொன்னா என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன்”
“மத்தவங்கள விடுங்க, எனக்கே ஒரு மாதிரி இருக்கும்”
“உனக்கு எந்த மாதிரியும் இருக்காது, ஏன்னா எது போட்டாலும் உனக்கு நல்லாதான் இருக்கும்”
அவர்களின் வாக்குவாதம் முடிவதாக இல்லை. வேடிக்கை பார்த்திருந்த கடையில் வேலை பார்க்கும் பெண், “எத பில் போட அனுப்ப?” எனக் கேட்டாள்.
ஜெய்யின் குணம் அறிந்து ஸ்ரீதான் இறங்கி வர வேண்டியிருந்தது.
அவன் தேர்ந்தெடுத்தவற்றையே வாங்கியவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து கிளம்பினாள்.
“நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு நம்ம குழந்தை நல்லதுக்குதான் செய்வேன் ஸ்ரீ. உர்ருன்னு இருக்காத, வீட்டுக்கு போக வேணாம், உனக்கு பிடிச்ச வேற எங்கேயாவது போலாம்” என சமாதான படலத்தில் இறங்கினான் ஜெய்.
ஆடைகளை இவனுக்கு தெரியாமல் அம்மாவிடம் கொடுத்து சரி செய்து கொள்ளலாம் என முடிவு செய்தவள் பிணக்கை வளர்க்க விரும்பாமல், ஐஸ்க்ரீம் சாப்பிட அழைத்து செல்ல கூறினாள்.
“ஐஸ்க்ரீமா? இந்த நேரத்துல சாப்பிட்டு சளி பிடிச்சா?” எனக் கேட்டான்.
“நான் நல்லாதானே இருக்கேன்? டார்ச்சர் பண்ணாதீங்க, நேரா வீட்டுக்கு போங்க” என்றவள் அடுத்து வாயே திறக்கவில்லை.
அவளை குளிரவிக்க ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுக்கத்தான் பிரியப் படுகிறான், ஆனால் உடம்புக்கு முடியாமல் படுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே அதிகமாக இருக்க, அவளின் கோவத்தையும் பொருட்படுத்தாமல் வீட்டுக்கே அழைத்து சென்று விட்டான்.
ஸ்ரீயால் அவனோடு பேசாமல் இருக்க முடியவில்லை. முறுக்கிக் கொண்டாவது பேசி விட்டாள். அவனும் சாதாரணமாக பேசினான்.
“எப்படியும் நான் பேசிடுவேங்கிற தைரியம்தானே? அதான் சமாதானம் செய்றது கூட கிடையாது. இப்படியே இருங்க மாறிடாதீங்க” என்றாள்.
“அக்கறையாலதான் கொஞ்சம் கண்டிப்பா நடக்குறேன், ப்ரெக்னென்ட் ஆனதிலேருந்து நீதான் பொறுப்பா இல்லாம சைலிடிஷா மாறிட்ட” என்றான்.
வாய் மீது கை வைத்து பொய்யாக அதிர்ந்தவள், “என்ன மாறிட்டேன் நான்? இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே இருக்கணும்னு சண்டை போடுறேனா? லாஸ்ட் ரெண்டு முறை ஹாஸ்பிடல் செக் அப்க்கு அத்தைய கூட்டிட்டு போனேன், நீங்க வரலைன்னு ரகளை பண்ணாம சமத்தா இருந்தேன். நீங்க பாம்பர் பண்ணனும்லாம் ஆசை படாம நானே நேரத்துக்கு சாப்பிட்டு நேரத்துக்கு தூங்கி என்னை நல்லா பார்த்துக்கிறேன். மூணு மாசம் முடிஞ்சும் தள்ளி இருக்கிற உங்களை மன்னிச்சு விட்ருக்கேன்” என்றாள்.
அவளின் கடைசி வாக்கியத்தில் சிரித்து விட்டவன், “டாக்டரே சொன்னாலும் ரிஸ்க் எடுக்க நான் ரெடி இல்லை. ஒரு வருஷம் கிட்ட வர மாட்டேன், கிட்டக்கன்னா அந்த கிட்டக்க… புரிஞ்சுதா?” என்றான்.
“குழந்தை பொறந்ததும் ஸேஃப்டி ஸேஃப்டின்னு சொல்லி என்ன பாடுபடுத்த போறீங்களோ!” என செல்லமாக சலித்துக் கொண்டாள்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவளுக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அரசு மருத்துவமனையிலிருந்து பேசுவதாக சொன்னவன் தன்னை அங்கு வேலை பார்க்கும் சுகாதார ஊழியன் எனவும் அறிமுக படுத்திக் கொண்டான்.
“வயசானவர் ஒருத்தர் வாதம் வந்து அட்மிட் ஆகியிருக்கார் மா, உங்க நம்பரைதான் குழறலா சொல்றார். உங்களுக்கு தெரிஞ்சவர் போலம்மா, யாரு என்னன்னு வந்து பாருங்கம்மா” என்றான்.
ஸ்ரீக்கு யாரென எதுவும் தோன்றவில்லை. அந்த பெரியவர் பற்றிய விவரங்களை கேட்டாள்.
“வாய் குழறி குழறித்தான் பேசுறார்மா. என்ன பேருன்னு அவர் சொல்றத சரியா புரிஞ்சுக்க முடியலை. கேஷ் ஷீட்ல சாமின்னு எழுதிருக்காங்க மா” என்றான்.
சட்டென ஸ்ரீக்கு தன் தந்தையின் நினைவு வந்தது. உடல் மொத்தமும் அவளுக்கு வியர்த்து விட்டது.
“ம்மா லைன்ல இருக்கீங்களா மா? ஒரு எட்டு வந்து பார்த்திட்டு போங்க. எல்லா மருந்தும் இங்க கிடைக்குமா? ஆள் வச்சு பார்த்தாலே செத்து போறாங்க. ஓட ஓடியாற கூட ஆள் இல்லை. பிரைவேட்க்கு அழைச்சிட்டு போங்க, இல்லாட்டி கூட இருக்க ஆள் ஏற்பாடு பண்ணுங்க” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.
ஸ்ரீக்கு தலை சுற்றுவது போலானது. இத்தனை வருடங்கள் கழித்து இங்கு எதற்காக வந்தார், முதலில் அவர்தானா அது? என் கைப்பேசி எண் எவ்வாறு கிடைத்தது என பல கேள்விகள் அவளுள்.
சற்று தெளிவான பிறகு ஜெய்யிடம் சொல்ல நினைத்து அவனுடைய எண்ணுக்கும் அழைத்து விட்டாள். இந்த விஷயத்தால் மொத்தமாக அனைவரின் நிம்மதியும் கெட்டுப் போகுமோ என அஞ்சியவள் அவன் அழைப்பை ஏற்பதற்குள் அழைப்பை துண்டித்து விட்டாள்.
ஜெய்யிடமிருந்து அழைப்பு வந்தது. ஏன் அழைத்தாய் என கேட்டவனிடம் தவறுதலாக அவனுக்கு அழைத்து விட்டதாக பொய்யுரைத்து விட்டாள்.
அவளால் இதை அப்படியே விடவும் முடியவில்லை. ஏமாற்றி எடுத்து சென்ற பணம் திரும்ப கிடைக்க வழி இருக்குமானால் அந்த ஆளை சந்தித்தால்தான் என்ன என அவளுக்கு தோன்றியது.
அதற்கடுத்த நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்க முடியாமல் தவித்தாள் ஸ்ரீ. இரவில் வீடு வந்த உடனே மனைவியை கவனித்து விட்டு என்னவென விசாரிக்க தவறவில்லை ஜெய்.
எந்த வகையிலும் துரைசாமியின் பெயரை எடுப்பதில் ஜெய்க்கு ஒவ்வாமை உண்டே. அந்த ஆள் துரைசாமியாக இல்லாமல் கூட போகலாம், அவராகவே இருந்தாலும் பணம் திரும்ப வருவதற்கான வழி அடைப்பட்டிருக்கலாம். ஜெய்யிடம் இதை சொல்வதால் என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது என சிந்தித்தவள், “டயர்டா இருக்கு” என்றாள்.
மனைவியை ஆதூரமாக பார்த்தவன், அவளின் தலையை வருடிக் கொடுத்தான்.
“ஆறே மாசம் ஸ்ரீ, ஓடிப் போயிடும். காலேஜ் அட்டனென்ஸ் கூட விஷயமில்லை, சரி பண்ணிக்கலாம். எக்ஸாம்ஸ் மட்டும் அப்பியர் ஆகிக்கிற மாதிரி செய்யவா?” எனக் கேட்டான்.
“ஏன் எக்ஸாம் கூட என்னோட டூப் அரேஞ் பண்ணி எழுத வைங்களேன்”
“செய்யலாம்தான், நீ எழுதினா டிஸ்டிங்ஷன் வாங்குவ, டூப் போய் எழுதினா பாஸ் ஆகுறதே கஷ்டம்தான்”
“வாய வைக்காதீங்க” என்றாள்.
பின் அவளை வற்புறுத்தி படுக்க வைத்தவன் உறங்கவும் வைத்தான்.
அடுத்த நாள் கல்லூரியில் அவளை விட்ட ஜெய் அங்கிருந்து கிளம்பவும் ஆட்டோ பிடித்துக்கொண்டு மருத்துவமனை சென்று விட்டாள்.
முன்தினம் அவளுக்கு அழைத்து பேசிய ஊழியனுக்கு அழைத்தாள். அவனே வந்து அவளை அந்த வார்டுக்கு அழைத்து சென்றான்.