புதிய உதயம் -17
அத்தியாயம் -17(1)
அறையில் குழப்பமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. அவளருகில் அமர்ந்திருந்த ஜெய் அவளை சங்கடமாக பார்த்திருந்தான்.
“எப்படிங்க ஆச்சு?” பத்தாவது முறையாக கேட்டாள்.
நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவன், “கவனக்குறைவு தான் ஸ்ரீ” என சொல்லி ஒரு வித பயத்தோடு அவளின் கைப்பற்றிக் கொண்டான். அவள் யோசனையாகி விட்டாள்.
“இன்னும் எட்டு மாசத்துல உன் படிப்பு முடிஞ்சிடும். நம்ம குழந்தைடா” என கெஞ்சலாக சொன்னான்.
அவனை திகைத்து பார்த்தவள், “என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இப்படி சொல்றீங்க நீங்க? கன்டினியூ பண்ண மாட்டேன்னு நினைச்சிட்டீங்களா? உங்களை…” என்றவள் அவனது முதுகில் வலிக்க அடிகள் வைத்தாள்.
அவளை தடுத்து அணைத்துக் கொண்டவனது சீரற்ற இதயத் துடிப்பு இப்போதுதான் சீரானது.
ஸ்ரீ கர்ப்பம் தரித்திருப்பது உறுதியாகியிருந்தது, அதை முன்னிட்டுதான் இந்த ஆலோசனை.
“பயந்திட்டேன் ஸ்ரீ, எங்க எதுவும் தப்பா சொல்லிடுவியோன்னு. என் புள்ள வரப் போறத கூட ஒழுங்கா கொண்டாட விடாம ரொம்ப டென்ஷன் பண்ணிட்ட நீ”
“எனக்குதான் டென்ஷன், இப்போ ஓகே, வயிறு பெரிசானதும் காலேஜ் போறத நினைச்சா வெட்கம் வெட்கமா வருது, எல்லாம் உங்களாலதான்” என்றவளின் பேச்சில் துள்ளல் தெரிந்தது.
அன்றே மருத்துவமனை அழைத்து சென்று விட்டான். வீட்டினருக்கு தெரியப்படுத்தவும் அனைவருமே மகிழ்ந்தார்கள். ஜனா உடனே புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி வந்து விட்டான். இரண்டு நாட்கள் கழித்துதான் மீண்டும் சென்றான்.
ஸ்கூட்டரை எடுக்க கூடாது என கண்டிப்போடு சொல்லி விட்டான் ஜெய். ஸ்ரீக்கும் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை. ஜெய்தான் அவளை காரில் அழைத்து சென்று கூட்டி வருகிறான். அவனால் முடியாத போது அவசரத்துக்கு ஒரு கார் டிரைவரையும் ஏற்பாடு செய்து விட்டான்.
சும்மா இல்லை, அந்த டிரைவர் பற்றிய பின் புலம் விசாரித்து, நன்றாக ஓட்டுகிறானா என அவனே டிரைவரின் காரில் பயணம் செய்து பார்த்து, ஸ்ரீயை அழைத்து செல்லும் போது எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது வரை அறிவுறுத்தி பின்தான் அவனை ஏற்பாடு செய்தான்.
எந்நேரமாக இருந்தாலும் ஸ்ரீ கூப்பிட்டால் உடனே வருவதாக அந்த டிரைவரும் உறுதி கூறியிருந்தான்.
அதிக கவனமெடுக்கிறேன் என அவளை கொஞ்சம் படுத்திதான் வைத்தான். வெளியில் சலித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனது அக்கறையை மெச்சித்தான் கொண்டாள் ஸ்ரீ.
அந்த ஒரு மாதம் நன்றாகவே சென்றது. அடுத்த மாதம் மசக்கை அவளை போட்டு படுத்தி விட்டது. கல்லூரிக்கு நிறைய விடுப்பு எடுக்க வேண்டிய நிலை. அந்த சமயமெல்லாம் ஜெய்யை வைத்து செய்து விட்டாள் எனதான் சொல்ல வேண்டும்.
அன்றும் அவளுக்கு மிகவும் முடியாமல் போனதில் கல்லூரிக்கு விடுமுறை. பாட்டியும் அம்மாவும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் ஜெய் வேலையை பார்க்க சென்று விட்டான்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு அழைத்து ஸ்ரீயை பற்றி கேட்டான்.
“பரவாயில்லாம இருந்தா, அப்பறம் கார் புடிச்சுகிட்டு காலேஜ் போயிட்டா” என விவரம் சொன்னார் பாட்டி.
“என்கிட்ட சொல்லாம எதுக்கு அனுப்பின அப்பயி? ஒரு கால் பண்றதுக்கு என்ன?” என கோவம் கொண்டான் ஜெய்.
“அட போடா! மசக்கன்னா அப்படித்தான் இருக்கும். அதுக்காக எத்தன நாள் காலேஜ்க்கு லீவ் போடுவா, நல்லா இருக்கவும்தான் கிளம்பி போனா. எங்களுக்கு தெரியாதது இவனுக்கு தெரிஞ்சிடும்” என்ற பாட்டி அழைப்பை துண்டித்து விட்டார்.
கல்லூரி நேரம் என்றும் பாராது ஸ்ரீக்கு அழைப்பு விடுத்தான். அவளது கைப்பேசி சைலன்ட்டில் இருந்தது.
ஒருவித பதற்றத்தோடுதான் வேலைகளை கவனித்தான். மதியத்திற்கு மேல் ஸ்ரீக்கு முடியவில்லை, அழைத்து செல்லுங்கள் என கல்லூரியிலிருந்து செய்தி வந்தது.
காரெடுத்துக் கொண்டு ஜெய் சென்ற போது நடந்துதான் வந்தாள் ஸ்ரீ. பாடங்களை கவனிக்க முடியவில்லையாம், மயக்கம் வருகிறது என சொல்லி டெஸ்க் மீதே தலை சாய்த்து விட்டாளாம். ஓய்வெடுக்கும் படி அவளை வேறொரு அறைக்கு அனுப்பி விட்டு இவனுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
“உன் உடம்பு கண்டிஷன் என்னன்னு காலையிலேயே உனக்கு தெரியும்தானே? எதுக்கு கிளம்பி வந்த? என்னை போட்டு பாடா படுத்தினா பரவாயில்லை எதுக்கு குழந்தையை படுத்துற?” என கடிந்து கொண்டான் ஜெய்.
“சும்மா லீவ் போட்டுட்டே இருந்தா கிளாஸ் என்னத்த புரியும்? நல்லா இருக்கவும்தான் வந்தேன், திரும்பவும் முடியாம போனா நான் என்ன செய்வேன்? நான் போட்டு படுத்துறேனாம். உங்களாலதான் எனக்கு இந்த நிலைமை!” சோர்வாக இருந்தாலும் அவளும் பதிலுக்கு சத்தம் போட்டாள்.
எதுவும் அவளை சொல்ல முடியாமல் கார் எடுத்தான். பின்னிருக்கையில் படுத்து விட்டாள் ஸ்ரீ.
வீட்டில் கொண்டு வந்து விட்டவன் மீண்டும் புறப்பட, அவள் முறைத்தாள்.
“ரெஸ்ட் எடு, நைட் வந்து வச்சிக்கிறேன் உன்னை” என்றான்.
“உங்களை போலவேதான் உங்க புள்ளையும் இருக்கான். எல்லாம் நானே அனுபவிக்கனும், நீங்க மட்டும் ஜாலியா வெளில போயிடுவீங்க”
“பெத்து கைல கொடு, அப்புறம் நீ முழு நேர ஃப்ரீதான், இப்போ தயவுசெஞ்சி உன்னையும் புள்ளையையும் நல்லா பார்த்துக்க” என்றவன் வேகமாக அவளிடம் வந்து முகத்தை தன்னோடு அணைத்து தலையில் முத்தமிட்டு விட்டு வெளியேறினான்.
மாலையில் தெளிவாக இருந்தாள். சியாம் அன்றைய வகுப்புகளை காணொளி அழைப்பின் மூலமாக விளக்கி அவளுக்கு உதவி செய்தான். எடுத்த நோட்ஸ்களை அவளுக்கு வாட்ஸ் ஆப் செய்திருந்தான்.
ஜெய் வரும் போது சியாம் அனுப்பியிருந்ததை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.
“எதுக்கு கஷ்ட படுற, எல்லாம் பிரிண்ட் போட்டு கொடுத்திடுறேன், வா வந்து தூங்கு” என்றான் ஜெய்.
சியாமளன் நல்ல படிப்பாளி, ஆனால் மோசமான கையெழுத்து.அத்தோடு தன் கைப்பட தானே குறிப்புகளை எழுதி வைத்தால்தான் தேர்வுக்கு படிக்கும் போது வசதியாக இருக்குமென சொல்லி அவளே எழுதினாள்.
அசதியாக இருந்தாலும் அவள் உறங்க வரும் வரை அவளுடனே அமர்ந்திருந்தான் ஜெய். அவனுக்காகவே சீக்கிரம் படுக்கைக்கு வந்து விட்டாள் ஸ்ரீ.
நல்ல வேளையாக சில நாட்களிலேயே மசக்கை பெரிதான தொல்லைகள் தராமல் ஸ்ரீயை இயல்பாக நடமாட அனுமதித்து விட்டது.
அந்த செமஸ்டர் தேர்வுகளை சிறப்பாகவே எழுதி முடித்து விட்டாள். விடுமுறையின் போது அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள். ஜெய்க்கும் அதுவே சரியென பட்டது. ஜோதியும் தையல்கடையில் அதிக நேரம் செலவு செய்யாமல் மகளை நன்றாக பார்த்துக் கொண்டார்.
திருச்சிக்கு வந்த ஜனா நண்பர்களோடு சேர்ந்து நிதி நிறுவனம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினான்.
தம்பியின் பங்கு பணத்தை ஜெய்யே தருவதாக சொல்லி விட்டான். அண்ணியை பார்ப்பதற்காக வந்திருந்த ஜனா இந்த விஷயத்தை ஸ்ரீயிடம் பகிர்ந்து கொண்டான்.
“உன் அண்ணனுக்கு உள்ளுக்குள்ள உம்மேல சின்ன டவுட் இருந்திட்டேதான் இருக்கு ஜனா, சீக்கிரம் அந்த சின்ன டவுட்டை கூட இல்லாம செய்திடனும் நீ” என்றாள் ஸ்ரீ.
“நான் என் வேலைய சரியா செய்திடுவேன் அண்ணி, உங்க வீட்டுக்காரர் டவுட்ஸ்லாம் தானாதான் போகணும்” என இவன் சொல்லிக் கொண்டிருந்தான். அன்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் மஹதி வீட்டில்தான் இருந்தாள்.
ஜனாவுக்கு அவள்தான் தேநீர் போட்டு எடுத்து வந்து தந்தாள். இளஞ்சிவப்பு வண்ண டாப் மற்றும் கிளிப் பச்சை வண்ண ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.
“ஜிங்குச்சா ஜிங்குச்சா…” என பாடி கலாய்த்தான் ஜனா.
மஹதியின் முகம் சுணங்கிக் கொள்ள, “பஞ்சு மிட்டாய் சீல கட்டி…” என மீண்டும் ரகளை செய்தான். அவளுக்கு அழுகை வந்து விட்டது. கண்களை துடைத்துக் கொண்டு உள்ளே ஓடி சென்று விட்டாள்.
ஜனா இதுவரை யாரையும் அழ வைக்கவென எதுவும் செய்தது இல்லை. மஹதியும் திருப்பி கலாய்ப்பாள் எனதான் எதிர் பார்த்திருந்தான். அவளின் அழுகை அவனை சங்கட படுத்தி விட்டது.
“அவ ரொம்ப சென்ஸிடிவ், நீயும் ஓவராதான் போற. இனிமே இந்த விளையாட்டு தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வை ஜனா” என்றாள் ஸ்ரீ.
“கூப்பிடுங்க அண்ணி, ஸாரி சொல்லிடுறேன்” என்றான் ஜனா.
ஜனாவும் வருந்துகிறான் என்பதை புரிந்து கொண்டவள், “ஸாரிலாம் வேணாம், நான் பார்த்துக்கிறேன். டீ ஆறுது பாரு, குடி” என்றாள்.
அதன் பின் இருவரும் வேறு ஏதோ பேசிக் கொண்டனர், ஆனாலும் மஹதியின் அழுகை மனதின் ஓரமாக அவனை அரித்துக் கொண்டே இருந்தது. அவன் கிளம்பும் வரையிலுமே அவனது கண்களில் படவில்லை அவள்.
அடுத்த முறை சந்திக்கும் போது கண்டிப்பாக மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என எண்ணிக் கொண்டே புறப்பட்டான் ஜனா. ஆனால் அவனது வேலை பரபரப்பில் அவளை மறந்தே போய் விட்டான்.
மீண்டும் கல்லூரி துவங்கிய போது ஸ்ரீ புகுந்த வீட்டுக்கே வந்து விட்டாள்.