புதிய உதயம் -16

அத்தியாயம் -16(1)

சைலேஷுக்காக ஜெய் கட்டித் தந்த அடுக்கு மாடி கடையின் திறப்பு விழா அன்று. ஸ்ரீயை கல்லூரிக்கு விடுப்பு எடுக்க வைத்து அவளையும் தன்னோடு அழைத்து சென்றிருந்தான் ஜெய்.

திருச்சி மாநகரில் இன்று இந்த கடை திறப்பு விழா பற்றிய பேச்சுதான். ஸ்ரீ இடையில் இரண்டு முறை வந்து பார்த்திருக்கிறாள், பணிகள் முழுதாக நிறைவடைந்த பின் வந்து பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.

மனதிற்குள் கணவனை நினைத்து அத்தனை பெருமையாக இருந்தது. இன்று காலையில் கூட, “நீயில்லன்னா இது எனக்கு அமைச்சிருக்காது ஸ்ரீ. நீ நினைச்சிருந்தா எம்மேல உள்ள கோவத்துல ப்ரெசெண்டேஷன் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கலாம், வஞ்சம் இல்லாத அந்த மனசு இருக்கே… அதனாலதான் ஜெய் உன்கிட்ட விழுந்திட்டான். தேங்க்ஸ்!” என சொல்லியிருந்தான்.

அவளுக்கு தெரியும் அவளின் பங்கு பெரிதாக எதுவுமில்லை, அவனது முதல் பெரும்பணி, குறித்த நேரத்துக்குள் சொல்லியிருந்த பட்ஜெட் தாண்டாமல் சைலேஷை திருப்தி கொள்ளும் படி இதை முடித்தது சாதாரண காரியமில்லை, முழுக்க அவனது உழைப்புதான்.

“உம்முனா மூஞ்சிகாரங்க மண்டைல கூடுதலா சரக்கு இருக்கும்னு நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மைதான் போல” கிண்டலாகவே புகழ்ந்தாள்.

“அழகா இருக்க பொண்ணு மண்டை காலியா இருக்கும்னு சொல்லிக்குவாங்களே அது?”

“சாட்டர்டே நைட் சொல்றேன்” அவனது காதில் கிசு கிசுத்தாள்.

“இது பழி வாங்கும் நடவடிக்கை” அவனும் சின்ன குரலில் சொன்னான்.

“இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் காத கடிச்சிட்டே இருந்தா நாங்களா ஏதாவது கதை கட்டி விட்ருவோம். வாங்க ஜெய் உங்களை என் அப்பாக்கு அறிமுக படுத்துறேன்” என சொல்லி ஜெய்யை அழைத்து சென்றாள் சைலேஷின் மனைவி.

பெரிய பெரிய ஆட்களாக இருந்தனர், அவர்களின் நடுவில் ஏதோ பேசிக் கொண்டும் அளவாக சிரித்துக் கொண்டும் நின்றிருந்தான் ஜெய். கணவனை அப்படி பார்க்க பார்க்க ஸ்ரீக்கு அப்படியொரு பூரிப்பு.

 வயதுப் பெண்களின் இன்றைய க்ரஷாக இருக்கும் இந்திய அளவில் பிரபலமான திரை நட்சத்திரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தான். அதற்காக வேறு தனிக் கூட்டம் கூடியிருந்தது.

ஜெய் மனைவியை தேடிக் கொண்டு வந்த போது அந்த ஹீரோவுடன் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

“நாமளும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம்ங்க” என்றாள் ஸ்ரீ.

“அதிலலாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல ஸ்ரீ”

“உங்களுக்கு இல்லைனா விடுங்க, நான் எடுத்துக்கிறேன், என் ஃபிரெண்ட் லீலா இவருக்கு பெரிய ஃபேன், அவகிட்ட காட்டினா ரொம்ப சந்தோஷ படுவா. படத்துல பார்க்கிற மாதிரியே நேர்லேயும் இருக்கார்ல?” என கூறிய ஸ்ரீயின் விழிகள் அந்த ஹீரோவை பார்த்திருந்தன.

ஜெய்யின் மனதில் காட்டுத் தீ என பொறாமை, ஆனால் வெளிக் காட்டிக் கொள்ள முடியவில்லை.

வேண்டுமென்றே ஸ்ரீயின் ஆசையை நிறைவேற்ற முயலவில்லை ஜெய். சைலேஷின் மனைவியை பிடித்து விட்டாள் ஸ்ரீ. அவள் ஸ்ரீயை கையோடு அந்த ஹீரோவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தாள்.

அந்த ஹீரோ அழகான ஸ்ரீயிடம் அதிகப் படியாகவே சிரித்து கை கொடுத்து தோளில் கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தான். தன் தோளில் கை போட்டதை ஸ்ரீயுமே ரசிக்கவில்லை, உடனே விலகி நின்று விட்டாள்.

ஸ்ரீயின் பார்வை ஜெய்யை தேடியது, அவன் இறுகிய முகத்தோடு சற்று தள்ளி நின்றிருந்தான். சென்று விடலாம் என ஸ்ரீ நினைக்கையில் அந்த ஹீரோ எதுவோ கேட்க, அவளும் பதில் சொல்லி கிளம்புவதாக சொன்னாள். அவன் லேசாக அணைத்து விடை கொடுத்தான். கேமராக்களின் ஃபிளாஷ் வெளிச்சம் மின்னிக் கொண்டே இருந்தது.

ஸ்ரீயே எதிர் பாராத தருணத்தில் நடந்து விட்டது. அந்த ஹீரோவும் தவறான எண்ணத்தோடு செய்யவில்லை, அவனது உலகில் அதெல்லாம் சாதாரணம், சொல்லப் போனால் அதுதான் மரியாதை.

ஜெய்யின் கை முஷ்டிகள் இரண்டும் இறுகிப் போயிருந்தன. ஜெய்யிடம் வாங்கப் போகும் திட்டுக்களை எதிர் கொள்ள தன்னை தயார் செய்து கொண்டே அவனிடம் வந்தாள் ஸ்ரீ.

அவனோ சுள் என பார்த்து விட்டு அவளை தவிர்த்து விலகிப் போய் நின்று விட்டான்.

வந்திருந்த வி ஐ பி களுக்கு மதிய விருந்து அருகிலிருந்த நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜெய்க்கும் அழைப்பு இருக்க, ஸ்ரீயோடு சென்றான்.

காரில் செல்லும் வேளையில், “நான் வெறும் ஃபோட்டோ எடுக்கத்தான் போனேன்…” என ஆரம்பித்தாள் ஸ்ரீ.

“இன்னிக்கு நல்லா போக வேண்டிய நாளை ஸ்பாயில் பண்ணி விட்டுட்ட, எதுவும் பேசாத” என கடினமாக சொன்னான்.

“நீங்க இவ்ளோ கோவப்படற அளவுக்கு பெரிய விஷயம் இல்லை, இப்படி கை போடுவார்னு நான்…”

“பேசாதன்னு சொன்னேன் உன்னை!” ஜெய் அதட்டலாக சொல்ல, அவளும் அமைதியடைந்து விட்டாள்.

விருந்து முடியவும் அவளை வீட்டில் விட்டவன் வெளியில் சென்று விட்டான். இரவில் அவன் வர தாமதமாக அவள் அழைப்பு விடுத்தாள். வேலை இருக்கிறது என சொல்லி விட்டான்.

ஸ்ரீக்கு அடுத்த நாள் கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் அதற்கு மேல் அவனுக்காக காத்திருக்காமல் படுத்து விட்டாள்.

காலையில் அவளருகில்தான் படுத்திருந்தான். ஆனால் அவள் தயாராகி முடித்த பிறகும் உறங்கிக் கொண்டுதான் இருந்தான்.

எப்போது வந்தான் என தெரியாமல் அவளும் அவனை எழுப்பி விட முயலவில்லை. வெளியேறும் முன் அவன் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள். உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த அழுத்தக்காரன் அவளின் முத்தத்திற்கும் அசைந்து கொடுக்காமல் கண்களை மூடியே இருந்தான்.

அன்றைய தினசரியின் முதல் பக்கத்தில் கடையின் விளம்பரம்தான், நான்காவது பக்கத்தில் கடைத் திறப்பு விழா பற்றிய செய்தியும் படங்களும் வந்திருத்தன. அந்த ஹீரோ ஸ்ரீயை அணைத்திருக்கும் படமும் அதில் ஒன்று. ஸ்ரீயின் முகம் தெரியவில்லை, ஹீரோவின் முகம்தான் தெரிந்திருந்தது. அந்தப் படத்தின் கீழே தமிழ் ரசிகையிடம் கனிவாக நடந்து கொண்ட ஹிந்தி ஸ்டார் என கேப்ஷன் எழுதப் பட்டிருந்தது.

அது ஸ்ரீதான் என மற்றவர்களுக்கு தெரியா விட்டாலும் ஜெய்க்கு கண்டிப்பாக தெரிந்து போகுமே. நேற்றைய நாள் தனக்கு சரியாக அமையவில்லை என நொந்து கொண்டவள் அந்த தினசரியை சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டு விட்டாள்.

வீட்டில் செய்தித் தாள் இல்லாமல் போனால் ஜெய்க்கு தெரியாமல் போய் விடுமா என்ன? அலுவலகம் சென்றதுமே சசி சகுனி வேலை பார்த்து விட்டான்.

அவனது கோவம் சாதாரண மீட்டரில் இருந்தாலே சுலபமாக இறங்கித் தொலையாது, இப்போது உச்ச பட்ச நிலையில் கொதிக்க ஆரம்பித்து விட்டான். தினசரியை கசக்கி குப்பைத் தொட்டியில் விட்டெறிந்தவன் சசி எப்போதோ சொதப்பிய விஷயங்களுக்காக அன்று பிடித்துக்கொண்டான்.

இரத்தக் கண்ணீர் விடாத குறையாகத்தான் ஜெய்யின் அறையிலிருந்து வெளி வந்தான் சசி.

இரவானதும் வீட்டுக்குதான் வந்தான் ஜெய், அவளோடுதான் உறங்கினான். ஆனால் ஸ்ரீயை முற்றிலுமாக தவிர்த்தான்.

மேலும் இரண்டு நாட்கள் இதே கண்ணாமூச்சி ஆட்டம்தான் நடந்தது. அன்று ஞாயிறு, அருகில் படுத்திருந்தவனை கிடுக்கு பிடி போட்டு அணைத்துக் கொண்டாள். அவன் அவளை விலக்கி விட, விலகாதவள் அவனது மார்பிலேயே கடித்து வைத்தாள்.

அலறாமல் பொறுத்துக் கொண்டவன் வலிந்து அவளை விலக்கி விட்டு அவளுக்கு முதுகு காண்பித்து படுத்தான்.

“ரொம்ப மோசமா நடந்துக்குறீங்க” கர கரத்த குரலில் குற்றம் சாட்டினாள்.

“அப்படியென்ன பெரிய தப்பை நான் பண்ணிட்டேன்னு இப்படி பிஹேவ் பண்றீங்க?” என்றவள் லேசாக விசும்பும் சத்தம் கேட்கவும் திரும்பியவன் அவளை அணைத்துக் கொண்டான்.

திமிறிக் கொண்டு அவனிடமிருந்து விடுபட்டவள், “ஐயா பேசலைன்னு ஒண்ணும் அழுகை வரலை, அப்படியென்ன இந்தாளுகிட்ட போய் கெஞ்சணும்னு எம்மேலயே எனக்கு கோவம், அதிக கோவத்துல தானா அழுகை வந்திடுச்சு. நாலு நாளா மூஞ்சு கொடுக்கலதானே நீங்க, போங்க பேசாதீங்க” என்றாள்.

“ஸ்ரீ…” அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, “எதுவும் பேசக்கூடாது, நான் கேட்க தயாரில்லை” என சொல்லி காதுகளை பொத்திக் கொண்டாள்.

இருவரும் பேசிக் கொள்ளவில்லை. முறைத்துக் கொண்டே அறைக்குள் நடமாடினார்கள். ஸ்ரீ கீழே போய் இருவருக்குமான காபி எடுத்து வந்தாள்.

“சமாதானம் ஆகிட்டேன்னு யாரும் நினைச்சுக்க வேணாம், எனக்கு மட்டும் எடுத்திட்டு வந்தா என்ன ஏதுன்னு அத்தை விசாரிப்பாங்க, அதனால சேர்த்து எடுத்திட்டு வந்தேன்” என சுவரை பார்த்துக் கொண்டு சொன்னாள்.

அவன் அவளின் கையை பிடிக்க முயல, தராதவள் பின்னால் நகர்ந்து கொண்டாள்.

“நீ செஞ்சது சாதாரண விஷயம்தான், என் கோவம்தான் அதிகப்படி போதுமா? கையை கொடு” என்றவன் அவளின் முன் கை நீட்டினான்.

“ஓ ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சிடுச்சு உங்களுக்கு, நானும் நாலு நாள் கழிச்சு கையை கொடுக்கிறேன்” என்றவள் அவனின் நீட்டியிருந்த கையில் ஒரு அடியை வைத்தாள்.

வலுக்கட்டாயமாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “கோவத்துல ஏதாவது வார்த்தையை விட்டு பெரிய சண்டையாகிடுமோன்னு பயமா இருந்தது. அதான் என் கோவம் குறையுற வரை, அட்லீஸ்ட் வாய் என் கண்ட்ரோலுக்கு வர்ற வரை உன்கிட்ட பேசாம இருக்கலாம்னு உங்கிட்ட வரலை. போதுமா?” என்றான்.

சமாதானம் கொள்ளாதவள், “விடுங்க” என்றாள்.

“என்னை மீறி வருது ஸ்ரீ கோவம், நான் என்ன பண்ணுவேன்? உன்னை ஹர்ட் பண்ணிட கூடாதுங்கிறதுதான் நோக்கம்”

இப்போதும் அவனிடமிருந்து விடுபட அவள் முயன்று கொண்டுதானிருந்தாள். ஆனால் முன்பிருந்த வீரியமில்லை.

“கழுதை கெட்டா குட்டிச்சுவருங்கிற மாதிரி ஜெய் கெட்டா பொண்டாட்டி, புரிஞ்சுதா?”

“ஸாரி, நான் லீலாக்காக சும்மா ஃபோட்டோ எடுக்க நினைச்சேன், நான் எக்ஸ்பெக்ட் பண்ணாத…”

“உன்கிட்ட எதுவும் கேட்கல நான்”

“நியூஸ் பேப்பர்ல வரும்னு நான் நினைக்கவே இல்லை, எனக்கொன்னும் அந்த ஹீரோவ…”

 “ஹேய்… எதுவும் சொல்லாத. இப்படி விளக்கம் சொல்லித்தான் உன்னை நான் தெரிஞ்சுக்கணுமா? அசிங்க படுத்தாத ஸ்ரீ என்னை”