புதிய உதயம் -15

அத்தியாயம் -15(1)

ஸ்ரீயின் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருந்தது.

ஜெய்யின் வீட்டில் பின் பக்க தோட்டத்தின் நடுவில் நான்கு பக்கங்களும் திறந்த நிலையில் சின்ன மண்டபம் போன்ற அமைப்பு இருக்கும். ஓய்வு நேரங்களில் குடும்பத்தோடு செலவிட ஜெய் நிர்மானித்த இடம் அது. இந்த மாலை வேளையில் அங்குதான் புத்தகமும் கையுமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ.

தேநீர், பஜ்ஜி வகைகளோடு பாட்டி, துளசி, ஜனா மூவரும் அங்கு வந்து விட்டனர்.

பாட்டி நாற்காலியிலும் மற்றவர்கள் தரையிலுமாக அமர்ந்திருந்தனர்.

“என்ன ண்ணி இத்தான் தண்டி புத்தகத்தை தூக்க முடியாம தூக்கி சுமந்துகிட்டு அதோட என்ன மல்லுக்கட்டிட்டு இருக்கீங்க? அதுவும் பரீட்சை முடிச்சிட்டு” எனக் கேட்டுக் கொண்டே ஸ்ரீயின் கையிலிருந்த புத்தகத்தை ஓரம் கட்டி வைத்த ஜனா அவளையும் அரட்டை கச்சேரியில் இணைத்து விட்டான்.

தம்பியின் எதிர்காலம் குறித்து பேச வேண்டுமென இரண்டு நாட்களாக முயல்கிறான் ஜெய். பிடி கொடுப்பேனா என இஷ்டத்திற்கு இருக்கிறான் ஜனா. அதை சுட்டிக் காட்டிய துளசி, “நீயாவது எடுத்து சொல்லு ஸ்ரீ” என மருமகளை உதவிக்கு அழைத்தார்.

“என்னன்னு முடிவு பண்ணு ஜனா” என ஸ்ரீ சொல்ல, அவன் சொன்ன விஷயத்தில் மூவருமே திகைப்பாக பார்த்தனர்.

பின்னே நண்பர்களோடு சேர்ந்து நிதி நிறுவனம் ஆரம்பிக்க போவதாக அதை பற்றிய அனுபவமே இல்லாத ஜனா சொன்னால் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும்?

“ஜெய் இதுக்கு ஒத்துக்கவே மாட்டான், ஏன் நானே சம்மதிக்க மாட்டேன்” என்றார் துளசி. அவருக்கு தன் கணவரின் நினைவுகள் சூழ்ந்து கொண்டன.

பாட்டியும் கலக்கமாக இருந்தார். ஸ்ரீதான் ஏன் எதற்கு என கேள்விகள் கேட்டாள்.

அவனது நண்பன் மாணிக்கவாசகனின் மாமா புதுக்கோட்டையில் ஃபைனான்ஸ் கம்பெனி வைத்திருக்கிறாராம். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கி இருபது வருடங்களாக அதையே திறம்பட நடத்தி இன்று அசைக்க முடியாத நபராக வளர்ந்து விட்டாராம். அவரிடம் சென்று சில மாதங்கள் வேலை செய்த பிறகு, இங்கு இவனும் நிதி நிறுவனம் ஆரம்பிக்க போவதாக சொன்னான்.

ஜனா விளையாட்டு பிள்ளைதான், ஆனால் இப்போதைய அவனது பேச்சில் தெளிவும் திட்டமிடுதலும் இருந்தது. அதை உணர்ந்த ஸ்ரீ மேலும் கேள்விகள் கேட்டாள். அனைத்துக்கும் பதில் வைத்திருந்தான் ஜனா.

இறுதியாக அண்ணனை இதற்கு சம்மதிக்க வைக்கும் பொறுப்பையும் ஸ்ரீயிடமே விட்டு விட்டான்.

“நான் சொல்லிட்டேனா அவர் கேட்டுப்பாரா? நீயே கன்வின்ஸ் பண்ணு” என்றாள் ஸ்ரீ.

“யாரை எங்க தட்டி அடிச்சு தூக்கணும்னு எனக்கு நல்லா தெரியும் அண்ணி, அந்த வீராசாமியை அசைச்சு பார்க்க முடிஞ்ச ஆயுதம் அண்ணி நீங்க” என்றான்.

“சும்மா ஏதாவது அடிச்சி விடாத…” என்றாள் ஸ்ரீ.

“அவரை வழிக்கு கொண்டு வர இன்னிக்கு தேதிக்கு உங்களை விட்டா வேறு ஆளே இல்லை அண்ணி”

“ஏதோ சொல்ற, உனக்காக பேசி பார்க்கிறேன்” என ஸ்ரீ சொல்ல, “அவன் ஏதோ சொல்றான்னு நீயும் அவனை என்கரேஜ் செய்யாத ஸ்ரீ” என்றார் துளசி.

“இதுவும் ஒரு தொழில்தானே, செய்யட்டுமே” என்றாள் ஸ்ரீ.

“அதெல்லாம் வேண்டவே வேண்டாம், இப்போ கொஞ்ச நாளாதான் ஏதோ நான் நிம்மதியா இருக்கேன், அதை கெடுத்துக்க விரும்பல. சரியா வரலைனா…” என யோசனையாக சொன்ன துளசி கண்களை இறுக மூடிக் கொண்டார்.

அவர் என்ன நினைத்து பயம் கொள்கிறார் என மற்றவர்களுக்கும் புரிந்துதான் இருந்தது.

“ம்மா… தேவையில்லாம பயப்படுற நீ. எதுவும் ஆகாது, அப்படியே ஆனாலும் நான் பயந்திட மாட்டேன், சமாளிச்சுப்பேன்” என்றான் ஜனா.

“நீ சின்ன பையன் என்னத்த சமாளிப்ப? என் உலகமே நீங்க ரெண்டு பேரும்தான்டா, ஜெய்கிட்ட சொன்னா அவனே உனக்கு ஏதாவது செஞ்சு தருவான்” என்றார் துளசி.

பாட்டி என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் மேலும் இந்த பேச்சை வளர விடாமல் பார்த்துக் கொண்டார். இரவு சமையல் பற்றி பேச்சு சென்றது. அப்படியே ஸ்ரீயின் கல்லூரி, ஜோதியின் தையல் வேலை என தொடர ஏதாவது விளையாடலாம் என்றான் ஜனா.

ஆடு புலி ஆட்டம் என அவனே யோசனையும் சொன்னான். துளசி நாட்டமில்லாமல் வீட்டுக்குள் சென்று விட்டார்.

ஜெய்க்கு அன்று பெரிதான வேலைகள் இல்லை. ஸ்ரீயின் நினைவு வந்து வாட்டி எடுக்க சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டான். அவள் பின்னால் இருப்பதாக துளசி சொல்லவும் அவனும் சென்றான்.

ஜனா குப்புற படுத்துக் கொண்டு கால்களை மடித்து உயர்த்தி ஆட்டிக் கொண்டே காய் நகர்த்திக் கொண்டிருந்தான். ஸ்ரீயும் தீவிரமாக விளையாட்டில் மூழ்கியிருந்தாள்.

பாட்டி நடுநிலைமையோடு விளையாட்டு செல்கிறதா என கண்காணித்து கொண்டிருந்தார்.

தன் பக்கத்தில் ஜெய் வந்து நின்றதை கவனிக்கவே இல்லை ஸ்ரீ. அவளருகில் அமர்ந்தவன் அவள் நகர்த்த போன காயை தடுத்து வேறு காயை நகர்த்த வைத்தான்.

“நீங்க என்ன சீக்கிரம் வந்திருக்கீங்க?” என விழி விரித்தாள்.

தேர்வுகளின் காரணமாக சில நாட்களாக இயல்பாகவே இல்லை ஸ்ரீ. ஜெய்யை கவனித்து பார்த்தே பல நாட்களாகி விட்டது போன்ற தோற்றம். இன்று அவளை மீறி சுற்றம் மறந்து அவனை பார்த்திருந்தாள்.

‘தனியா இருக்கப்பலாம் விட்ருவா, சுத்தி நாலு பேரு இருக்கப்பதான் ஆள முழுங்கித் தொலைப்பா!’ என எண்ணிக் கொண்டவன் அவளின் கவனத்தை தன்னிடமிருந்து திசை திருப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்து வாய் திறந்தான்.

“சைட்க்கு வந்து பார்த்திட்டு போன்னு நான் கேட்டுகிட்டதுக்கு இன்னிக்கு வீட்லேயே இருந்து ரிலாக்ஸ் பண்ண போறேன்னு சொல்லி மறுத்தியா? அதான் தூங்குற புள்ளைக்கு எல்லாம் வசதியா இருக்கான்னு பார்க்க வந்தேன்” என கிண்டலாக சொல்லிக் கொண்டே அவளின் கைக்கு அழுத்தம் கொடுத்தான் ஜெய். பின்னர்தான் அவனை பார்ப்பதை விடுத்து மீண்டும் விளையாட்டை கவனிக்கலானாள்.

“தூங்குறதுதான் ரிலாக்ஸ் பண்ணிக்கிறதா? இப்படி விளையாடவும் செய்யலாம்” என்ற ஜனா ஒரு காயை வெட்டி வெளியில் வைத்தான்.

“போங்க, அவன் டைவெர்ட் பண்ணி என்னை வெட்டிட்டான்” என கணவனிடம் நொடித்தாள் ஸ்ரீ.

“நீ கவனமா இல்லாம எம்பேரனை குறை சொல்லாதடீ” என்றார் பாட்டி.

“அப்பயி… என்ன நடந்தாலும் ஹஸ்பண்ட்தான் காரணம்னு சொல்லலைனா மனைவிங்கிற பதவிக்கு பவர் இல்லாம போயிடும்ல, அதான்” என்றான் ஜெய்.

“நல்லா கொடுக்கிற முட்டு! இந்தா இன்னொரு ஆட்ட வெட்டு!” என்ற ஜனா அடுத்த காயை வெட்டி விட்டு அண்ணனை மிதப்பாக பார்த்தான்.

ஸ்ரீ தன் கணவனை முறைக்க, “அங்க என்னடி முறைப்பு? அவன் பக்கத்துல வந்ததும் உனக்கு தானா கவனம் தப்புது” என்றார் பாட்டி.

“நல்லா சொல்லு அப்பயி, பரீட்சைல அவ படிச்ச கேள்வி வரலைனா கூட என்னைத்தான் வந்து மொறைக்கிறா” என கேலி செய்தான் ஜெய்.

“ஹையோ பாட்டி, என்ன… நீங்க உங்க பெரிய பேரன் ரெண்டு பேருமா சேர்ந்துகிட்டு ஜனாவை ஜெயிக்க வைக்க என்னை கிண்டல் பண்றீங்களா?” என்றாள் ஸ்ரீ.

“அதிசயமா இன்னிக்குத்தான் ராஜாம்பாவும் அது பேரனும் உண்மையை சொல்லிட்டு இருக்காங்க, கிண்டல்னு சொல்றீங்களே அண்ணி” என்ற ஜனாவின் பக்கமே இருந்தது விளையாட்டு.

முழங்கையால் கணவனின் விலாவில் இடித்து அவனை தன்னிடமிருந்து சற்றே தள்ளி அமர வைத்த ஸ்ரீ தன் கைகளை சூடு பறக்க தேய்த்து விட்டுக் கொண்டாள். அடுத்து எந்த காயை நகர்த்தினாலும் மாட்டிக் கொள்வது போலவே அவளுக்கு தோன்ற குழப்பமாக பார்த்திருந்தாள்.

“நான் ஹெல்ப் பண்றேன்” என்ற ஜெய் மீண்டும் அவளருகிலேயே அமர்ந்து கொண்டான்.

“அதெல்லாம் முடியாது, அண்ணிதான் விளையாடணும்” என்றான் ஜனா.

“நீ வேணா அப்பயியை சேர்த்துக்கடா” என்றான் ஜெய்.

சிறு வயதில் இந்த விளையாட்டை எல்லாம் கற்றுக் கொடுத்ததே பாட்டிதான், அந்த தைரியத்தில் சம்மதித்தான் ஜனா.

ஆனால் பாட்டி வேண்டுமென்றே ஸ்ரீக்காக ஜெய் வெற்றி பெற வழி வகுத்து விட்டார்.

ஸ்ரீ வெற்றிக் களிப்பில் ஜனாவை கிண்டல் செய்தாள். அவன் பாட்டியை முறைத்து, “என்ன செய்யணுமோ நல்லா செஞ்சிட்ட ராஜாம்பா!” என்றான்.

“சரி வா எனக்கு கால்ல வலிக்குது, என்னை கொண்டு போய் வீட்ல விடு” என்றார் பாட்டி.

“ஏன் இங்க வர்றப்போ துள்ளி குதிக்காத குறையா வந்ததானே? நான் ஜெயிக்காம வர மாட்டேன்” என்ற ஜனா மீண்டும் விளையாட தயாரானான்.

“ச்சீ வாடா!” பாட்டி அதட்ட, அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்புகிறார் என்பதை புரிந்து எழுந்தான் ஜனா.

“அப்பயிய விட்டுட்டு வாடா விளையாடலாம்” என்றான் ஜெய்.

பாட்டியை கேலியாக பார்த்த ஜனா, “உன் பேரனை வச்சுகிட்டு இந்த இடத்தை வசந்த மண்டபமா மாத்த திட்டம் போடுறியே ராஜாம்பா? இவருக்கு விளையாட நான் வரணுமாம், இந்த லட்சணத்துல எம்பாட்டன் மாதிரின்னு வேற இவரை சொல்லிக்கிற, ராத்திரி கனவுல வந்து உன் கண்ணை நோண்டுறாரா இல்லயா பாரு அந்த மனுஷன்” என்றான்.

“நோண்டுவாரு நோண்டுவாரு… அவரை நான் பார்த்துக்கிறேன்” என்ற பாட்டி ஜெய்யை பார்த்து, “அவளுக்கு படிப்புல ஏதாவது டவுட் இருக்கும் சொல்லிக் கொடுடா. நாங்க போறோம்” என்றார்.

“அப்பயி… அண்ணன் வெறும் யு ஜி தான். அண்ணிக்கு என்னத்த சொல்லி தருவார்? அதை விட அவங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சு போச்சு” என்றான் ஜனா.

“இல்லை ஜனா, நிறைய டவுட்ஸ் இவர்கிட்டேயும் கேட்டுப்பேன். எக்ஸாம் முடிஞ்சா கேட்க கூடாதுன்னு இல்லையே” என்றாள் ஸ்ரீ.

 “அரே அப்ரசண்டிகளா! உங்களை தனியா பேசிக்க சொல்லுது ராஜாம்பா, இதுக்கு மேல வாய தொறந்தா அப்பயி கடுப்பாகி கம்பாலேயே நாலு போடும்” என்ற ஜனா, ஸ்ரீயின் புத்தகத்தை தூரமாக தள்ளி வைத்து விட்டு பாட்டியோடு சென்று விட்டான்.

“இவன் வாய்க்கொழுப்பு மட்டும் குறையவே குறையாது. சும்மா ஊர சுத்திகிட்டு வர்றான், இன்னிக்கு நைட்டாவது இவன்கிட்ட பேசணும்” என்றான் ஜெய்.

ஜனாவின் எண்ணத்தை சொன்னாள் ஸ்ரீ. தன் அம்மாவை போல ஜெய்க்கு பயமில்லை, ஆனால் ஜனாவுக்கு திறமை போதாது என கருதினான்.

“அதை நீங்க எப்படி முடிவு பண்ணலாம்? நல்ல பிளானிங்கோடதான் இருக்கான். சான்ஸ் கொடுங்க” என்றாள்.

ஜெய் மறுப்பாகவே சொல்ல ஜனாவுக்கு ஆதரவாக பேசினாள் ஸ்ரீ. மனைவியின் பேச்சில் ஜெய்யும் ஓரளவு தம்பியின் விருப்பத்துக்கு விட்டு பார்ப்போமோ என்ற நிலைப்பாட்டுக்கு வந்தான். ஆனாலும் சில தயக்கங்கள் இருந்தன.

ஆடு புலி ஆட்டத்திற்காக வரையப் பட்டிருந்த கட்டங்களில் காய்களை நகர்த்திக் கொண்டே யோசனையாக இருந்தான்.