அத்தியாயம் -14(2)

வாடிக்கையாளருடனான சந்திப்பு கூட நல்ல விதமாக முடியவில்லை. இவன் சொல்லும் ஏதாவது அவரை திருப்தி படுத்தினால்தானே? அவனது மனம்தான் ஸ்ரீயின் பின்னாலேயே சென்று விட்டதே.

“ஸாரி ஸார், எனக்கு ஒத்த தலைவலி, இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என சொல்லி கிளம்பி விட்டான்.

அன்றைய இரவே அவளிடம் விஷயத்தை சொல்லி, “இனிமே அந்த சியாமளன் கூட நீ வரக்கூடாது” என்றான்.

“எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? எல்லார் கூடவும் பைக்ல சுத்துறவளா நான்? உங்களுக்கே தெரியும் அவன் ரொம்ப நல்லவன், நமக்கு தெரியாதவங்க ஏதோ சொல்லிட்டாங்கன்னு நீங்க சொல்றது சரி கிடையாது” என்றாள் ஸ்ரீ.

“இன்னிக்கு தெரியாதவங்க சொல்வாங்க, நாளைக்கு தெரிஞ்சவங்க சொல்வாங்க. எதுக்கு இதெல்லாம்? வேணாமே”

“யாரு எந்த தெரிஞ்சவங்க சொல்வாங்க? எனக்கு வேண்டிய பட்டவங்க பாட்டி, அத்தை, ஜனா அப்புறம் என் அம்மா, தங்கச்சி. இவங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும். எல்லாத்துக்கும் மேல நீங்க என்னை தப்பா நினைக்க போறது இல்லை, அது போதும் எனக்கு” என்றாள்.

மேலும் வாதிட்டால் எங்கே தவறாக நினைத்துக் கொள்வாளோ என்ற பயத்தில் அத்தோடு நிறுத்திக் கொண்டான். ஆனால் அதன் பின் பெரும்பாலும் அவளை அழைத்து செல்லும் நேரத்தில் அவனை ஃப்ரீயாக வைத்துக் கொண்டான்.

“முன்னெல்லாம் வேலைதான் ஃபர்ஸ்ட், இப்போ ஸ்ரீ மேடத்துக்கு அப்புறம்தான் எல்லாமே” என கேலியாக சொன்னான் சசி.

“ஏன் அதுல உனக்கெதுவும் பிரச்சனையா சசி?” எனக் கேட்டு அவனது வாயை மூடிக் கொள்ள செய்து விட்டான்.

அப்படியும் இரண்டொரு முறை சியாமளனோடு வந்தாள் ஸ்ரீ. அந்த நேரங்களில் “அவசரத்துக்கு அவைலபிலா இல்லாம என்ன…” சில நல்ல வார்த்தைகள் போட்டு நிரப்பி ஜனாவை வறுத்தெடுக்கவும் தவறவில்லை ஜெய்.

பல நாட்களுக்கு பின் மீண்டும் அதே நிலை.

கல்லூரி விடும் நேரத்திற்கு அழைத்தவன், “நான் வர அரை மணி நேரம் ஆகும், அதுவரை லைப்ரரில வெயிட் பண்ணு” என்றான்.

 “நான்தான் ஃப்ரண்ட்டோட வந்திடுறேன்னு சொன்னேன்ல?” எனக் கேட்டாள்.

“வேணாம், நான் வர்ற வரை வெயிட் பண்ண முடியாதுன்னா ஆட்டோ பிடிச்சுக்க” என உறுதியாக சொல்லி விட்டான்.

மனதிற்குள் அவனை தாளித்துக் கொண்டே நூலகத்தில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீ.

ஜெய்க்கு அவனது கட்டிட பணியில் பெரிய சிக்கல், அதை தீர்த்து வைக்கும் பதற்றத்தில் ஸ்ரீயை மறந்தே போயிருந்தான். கைப்பேசியையும் கையில் வைத்துக் கொள்ளாமல் வேறெங்கோ வைத்து விட்டான்.

ஒரு வழியாக சிக்கலை தீர்த்து தளர்வாக அவன் அமர்ந்த நேரத்தில் மின்னலென ஸ்ரீயின் நினைவு. இருள் கவிய ஆரம்பித்த நேரத்தில் கைப்பேசியை தேடி கையில் எடுத்தான். அவளது தவறிய அழைப்புகளின் எண்ணிக்கையில் பயந்து போனவனாக உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

கோவத்தில் அவள் எடுக்காமல் போக, ‘ஆர் யூ ஸேஃப்?’ எனக் கேட்டு செய்தி அனுப்பினான்.

கல்லூரியின் அருகிலிருக்கும் நிறுத்தத்தில் காத்திருப்பதாக பதில் செய்தி அனுப்பி வைத்தாள்.

வேகமாக எழுந்து வெளியே ஓடியவனிடம், “என்ன ஸார், என்னாச்சு?” என சத்தமாக கேட்டான் சசி.

“வந்து சொல்றேன்” என்ற ஜெய் பைக்கில் பறந்திருந்தான்.

ஒரு மணி நேரமாக நூலகத்தில் காத்திருந்த ஸ்ரீ கணவனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தாள். அவன் எடுக்காமல் போனதால் ஆட்டோ பிடிக்க நினைத்தாள். அவளது நேரம் ஒரு காலி ஆட்டோ கூட தென்படவில்லை.

பேருந்தில் சென்று விடலாம் என நினைக்கும் போதுதான் சட்டென அவளுக்குள் ஒரு பிடிவாதம் எழுந்தது. இப்படி வா அப்படி வா என சொல்லத் தெரிகிறதுதானே, அதன் பின் இப்படியா அக்கறை இல்லாமல் இருப்பது? என்ற கோவம்.

பேருந்து நிறுத்தம் இரவு பதினோரு மணி வரையிலுமே ஆள் நடமாட்டத்தோடு இருக்கும். ஆகவே தைரியமாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.

ஜெய் அங்கு வந்து சேர்ந்த போது ஸ்ரீயின் மூச்சுக் காற்றில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது.

பொது இடத்தில் சண்டை போடாமல் அமைதியாக பைக்கில் ஏறி விட்டாள். வீட்டில் தனிமை கிட்டியதும் வீடு மேல் வீடு கட்ட ஆரம்பித்து விட்டாள்.

அவளை எப்படி குளிர்ச்சி படுத்துவது என சத்தியமாக அவனுக்கு தெரியவில்லை. அவன் விளக்கம் கொடுக்க கூட கேப் விடாமல் வெளுத்து வாங்கினாள்.

அவளை பிடித்து இழுத்து சென்று குளியலறையில் விட்டவன் ஷவரை திறந்து விட்டு விட்டான்.

திகைத்தவள் பேச்சை நிறுத்தியிருந்தாள். அந்த இடைவெளியை உபயோகித்து பணியிடத்தில் நடந்த பிரச்சனையை சொல்லி விட்டான் ஜெய்.

அவனது நிலைமையை புரிந்து கொண்டவள், “ஒரு கால் பண்ணி…” என ஆரம்பிக்க, கையெடுத்து கும்பிட்டு விட்டான்.

அவள் அமைதியடைய, “சட்டுனு இழுத்து கிஸ் அடிச்சாவது உன் வாய அடைக்கலாம்னு யோசிச்சேன். நீ ரொம்ப வயலன்ட்டா இருந்த, கடிச்சு வச்சா நாளைக்கு எந்த மூஞ்சோட வெளில போறதுங்கிற பயத்துலதான் இப்படி தண்ணிக்கு கீழ வந்து நிப்பாட்டினேன். கால் பண்ணியிருக்கணும், டென்ஷன்ல செய்யல, என் நேரம் சரியில்லாம மொபைலையும் எங்கேயோ வச்சு தொலைச்சிட்டேன். இத இத்தோட விடும்மா” என்றான்.

அவனை பார்க்க அவளுக்கும் பாவமாகி விட்டது. ஷவரிலிருந்து விலகி நின்றவள் முகத்திலிருந்த தண்ணீரை வழித்து விட்டாள்.

தன்னை குனிந்து பார்த்தான். அழுக்காக இருந்தவன் அரை குறையாகத்தான் நனைந்து போயிருந்தான். ஆகவே ஷவருக்கு அடியில் நின்றான். அவனது பார்வை முழுதாக நனைந்து போயிருந்தவளை மேய்ந்து கொண்டிருந்தது.

அவளது அறிவு அபாய சங்கை எடுத்து ஊத, சுதாரித்துக் கொண்டவள் வெளியேறி விட்டாள்.

அவள் ஆடை மாற்றி முடித்திருக்கும் சமயம் ஈரம் சொட்ட சொட்ட வெளியில் வந்தவன் பின்னாலிருந்து அவளை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அடங்கிப் போகும் ஆசையும் அவனிடமிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வும் ஒரே சமயத்தில் அவளுள் எழுந்து அவளை இம்சை செய்தன.

அவளது ஈரமான கார் கூந்தலும் சிவந்து போயிருந்த காது மடலுமே அவனை மயக்க போதுமானவையாக இருந்தன.

மெல்ல வசமிழந்தான், அவனது கைகள் உணர்ந்ததையெல்லாம் கண்களும் உணரும் முன் விலகிக் கொண்டாள்.

“ஸ்ரீ…” தாபம் நிறைந்து போய் அழைத்தான்.

மேலாடையை சரிசெய்து கொண்டே, “இன்னிக்கு ஒண்ணும் சனிக்கிழமை இல்லை, அதை விட முக்கியம் நாளைக்கு எனக்கு முக்கியமான பிரசென்டேஷன் இருக்கு” என்றாள்.

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் கன்னங்களை வலிக்காமல் கடித்து, “போடி இந்த படிக்கிற பொண்ணை கட்ட கூடாது, அதிலேயும் இந்த ஓவர் படிப்ஸ் பொண்ணை கட்டவே கூடாது” என சொல்லி விடுவித்தான்.

அவள் அமைதியாக தலை துவட்ட ஆரம்பித்தாள். அவன் வேகமாக ஆடை மாற்றிக் கொண்டு வெளியேறப் போனான்.

“எங்க போறீங்க?” எனக் கேட்டாள்.

“எங்கேன்னு இன்னும் முடிவு பண்ணல, ஆனா உன் கூட இருக்கிறதா இல்லை” கண்கள் சிமிட்டி சொன்னவன் வெளியேறி விட்டான்.

அடுத்த நாள் காலையில் அவனது பைக்கில் அவளை கல்லூரியில் விட்டவன், மாலையில் அவளை அழைக்க புது ஸ்கூட்டரில் சென்றான்.

சாவியை அவளிடம் நீட்டி, “இனிமே நிறைய நான் பிஸியாகிடுவேன், எப்ப வர முடியும் முடியாதுன்னு சொல்ல முடியாது. எவன் கூடவும் பைக்ல நீ வந்தா பொறாமை பொங்கி வருது. வேணாம்னு நல்ல விதமா சொன்னா புரட்சிக்காரி மாதிரி பேசுவ, சிலிர்த்துக்கிட்டு நானும் ரொம்ப பேசவேன். ஸோ… வேணாம்னு சொல்லாம சாவியை வாங்கிட்டு என்னை நல்லவனாவே இருக்க வைம்மா பரதேவத!” என்றான்.

“ஹப்பா! எவ்ளோ பேச்சு!” செல்ல சலிப்புடன் சொன்னவள் மறுக்காமல் சாவியை வாங்கிக் கொண்டாள்.

அடிக்கடி அம்மா வீட்டுக்கு சென்று பார்த்து வருகிறாள் ஸ்ரீ. எப்போதாவது ஜெய் அவளை அழைக்க அங்கு செல்லும் போது மஹதிக்காக ஏதாவது வாங்கி வருகிறான். ஜோதியிடம் இயல்பாக பேசுகிறான். மகளின் வாழ்வை நினைத்து அவருக்கு மிகுந்த சந்தோசம்.

தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு விருந்து கொடுத்த போது ஸ்ரீயையும் அழைத்து சென்றிருந்தான். அந்த நேரத்திலும் சசியை அவள் தவிர்க்க, கவலையாக ஜெய்யிடம் சொன்னான் சசி.

“சில சமயத்துல யார் பேச்சையும் அவ கேட்க மாட்டா, விடு. உனக்கு பேச நிறைய பேர் இருக்காங்க, அவளுக்கு நான் இருக்கேன்” என்ற ஜெய்யை திகைப்பாக பார்த்தான் சசி.

“அவகிட்ட பேசி என்ன செய்ய போற? போ வேற வேலை இருந்தா போய் பாரு” என்ற ஜெய்யிடம், தலையாட்டிக் கொண்டே“அது சரி…” என சொல்லி நகர்ந்தான் சசி.

தன் கட்டிட பணி சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை செய்து கொள்வான், ஸ்ரீக்கும் தன் படிப்பில் ஏதாவது சந்தேகம் என்றால் ஜெய்யிடம் கேட்டுக் கொள்வாள். இருவருமே அந்த துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் அது சம்பந்தமாக பேச ஆரம்பித்தால் மணிக்கணக்காக நீளும் அந்த பேச்சு.

கை கோர்த்துக் கொள்வதும் தோளில் சாய்ந்து கொள்வதும் இயல்பாக அவர்களுக்குள் வந்தது. ஜெய்யின் ஒரு தலைக்காதல் இரு பக்க இசைவு காதலாக எப்போதோ மாறிப் போயிருந்தது.

வசதியாக திருமணத்தை முடித்துக் கொண்டு ஆசுவாசமாக காதலித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.