புதிய உதயம் -13

அத்தியாயம் -13(1)

ஸ்ரீ தயாராகிக் கொண்டிருக்கும் அரவத்தில் கண் விழித்துக் கொண்டான் ஜெய். அவசரமாகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

நேரத்தை பார்த்தவன், “ஏன் லேட்டா எழுந்தியா?” எனக் கேட்டான்.

அவனது திடீர் கேள்வியில் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள், “இப்படியா பயப்படுத்தவீங்க?” என்றாள்.

“என்ன பயமுறுத்திட்டேன்? காலைலேயே கடுப்ப கிளப்பாத”

“ஒரே சைலண்டா இருக்கு ரூம், நீங்க தூங்கிட்டு இருக்கிறதா நினைச்சிட்டு இருக்கேன், திடீர்னு நீங்க பேசவும் நான்தான் பயந்திட்டேன், நீங்க கரெக்ட், நான்தான் மிஸ்டேக், ஓகேவா?”

“ஒத்துக்கிட்டா சரி, நீதானே மிஸ்டேக் பண்ணின? அதுக்கு தண்டனையா என்னோடவே வா” என்றான்.

“எங்க?”

“அம்மா தாயே! உன்னை நானே காலேஜ்ல ட்ராப் பண்றேன்னு சொன்னேன்” அமைதியாக சின்ன புன்னகையுடனே சொன்னான்.

‘என்னடா இது சிறுத்தை பூனையா பம்மது?’ என எண்ணியவள் மறுக்கத்தான் நினைத்தாள்.

அதற்குள் அவனாகவே, “மோஸ்ட்லி நானே ட்ராப் பண்ணிடுறேன், எனக்கு முடியாதப்போ ஜனா அழைச்சிட்டு போவான். பஸ்லாம் வேணாம், ஈவ்னிங் எனக்கு முடிஞ்சா நான் வருவேன், இல்லைனாலும் ஏதாவது அரேஞ் பண்ணிட்டு உனக்கு சொல்றேன்” என்றான்.

“பஸ்ஸே எனக்கு ஓகேதான், பாவம் உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். எனக்காக…”

“உனக்காக இல்ல” கடினமாக சொன்னான்.

‘இதோ சாந்த சொரூபன் சாத்தானா அவதாரம் எடுத்திட்டான்!’ மனதிற்குள்ளாகவே திட்டினாள்.

“இந்த கல்யாணத்தை, என்னை நீ எப்படி பார்க்கிறேன்னு எனக்கு தெரியாது, ஆனா நான் நடந்ததை ரொம்ப சீரியஸா மதிக்கிறேன். அதுக்குண்டான ரெஸ்பான்சிபிலிடிய ஒழுங்கா செய்யணும்னு நினைக்கிறேன். இப்படி லேட்டா போறாளே… அவசரத்துல பஸ்ஸ புடிச்சு ஏறினாளா இல்லை பஸ் இவ மேல ஏறிச்சான்னு எல்லாம் யோசிச்சு டென்ஷன் எடுத்துக்க நான் தயாரா இல்லை? ரெடி ஆகிட்டீனா சாப்பிட்டுட்டு இரு, வர்றேன்” என்றவன் குளியலறைக்கு சென்று விட்டான்.

“ஆத்தாடி! எவ்ளோ ஈஸியா எம்மேலயே பஸ்ஸ ஏத்திட்டார்” வாய் விட்டு சொல்லிக் கொண்டே தன் பையை எடுத்துக் கொண்டு கீழே சென்று விட்டாள்.

ஜெய்யும் தயாராகி வந்து சாப்பிட அமர அப்போதுதான் எழுந்திருந்த ஜனா காபி கேட்டுக் கொண்டு வந்தான்.

“என்னடா அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?” என ஆரம்பித்தான் ஜெய்.

“காலையிலேயேவா ண்ணா?” சலித்தான் ஜனா.

தம்பியை அழுத்தமாக பார்த்த ஜெய், “நீயும் இவளை மாதிரி மேல படி” என்றான்.

“ஏற்கனவே நிறைய படிச்சிட்டேன், அதுல கிடைச்ச நாலேட்ஜ் வச்சுக்கிட்டே என்ன செய்யன்னு தெரியலை, இதுக்கு மேல அறிவு பெருகிப் போனா என்னை சுத்தி உள்ளவங்களுக்குத்தான் டேஞ்சர். படிப்பு, எக்ஸாம், உன் கல்யாணம்னு நிறைய உழைச்சிட்டேன், இப்போ கொஞ்ச நாள் ரிலாக்ஸ் மோட்ல இருக்கேன். அடுத்தது என்ன… அப்படிங்கிற கேள்விய எப்ப கேட்கலாம்னு நான் சொல்றேனோ அப்ப கேளு ண்ணா” என்றான் ஜனா.

ஸ்ரீ முன்னிலையில் எதுவும் அவனை திட்ட வேண்டாம் என அமைதியாகவே இருந்தான் ஜெய்.

துளசி காபி கொண்டு வந்து தர அதை பருகிக் கொண்டே, “என்ன ண்ணி காலேஜா? எப்படி போறீங்க? நான் ஃப்ரீதான் கொண்டு போய் விடவா?” எனக் கேட்டான் ஜனா.

ஜெய்க்கு புரையேறிக் கொண்டது. ஜனா அண்ணனை வேடிக்கை பார்த்திருக்க, அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள் ஸ்ரீ.

இப்போது மீண்டும் ஜனா அதே கேள்வியை ஸ்ரீயிடம் கேட்டான். ஜெய்யின் வாயிலேயே இருந்தது உணவு, கையும் உணவில் அலைந்து கொண்டிருந்தது, பார்வை ஸ்ரீயின் பக்கம் இல்லா விட்டாலும் அவளின் பதிலுக்காக செவி கூர்மையாக காத்திருந்தது.

எதுவும் ஜனாவின் கவனத்திலிருந்து தப்பவில்லை.

“உங்க அண்ணன் கொண்டு போய் விடுறதா சொன்னார் ஜனா” என்றாள் ஸ்ரீ.

“அப்படியா? அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை இருக்கும், எதுக்கு சிரம படுத்தனும்?” என்றான் ஜனா.

“இல்ல இன்னிக்கு ஃப்ரீயாதான் இருக்கார் போல” என்றாள் ஸ்ரீ.

“இருக்கட்டும் அண்ணி, பாருங்க ரொம்ப ஸ்லோவா சாப்பிடுறார், நான் காபி குடிச்சு முடிச்சு ரெடியா இருக்கேன். அவரோட பழைய பைக் விட என்னோட டேவிட்சன் சும்மா பறக்கும், வாங்க வாங்க…” ஸ்ரீயின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான் ஜனா.

“விடு விடு வர்றேன்” என்ற ஸ்ரீ, தள்ளி அமர்ந்திருந்த பாட்டியிடம் சொல்லிக் கொண்டு அத்தையிடம் சொல்லி விடுமாறு சொல்லி விட்டு ஜெய்யின் பக்கம் திரும்பினாள். அவனது கொடூரமாக இருந்த முகத்தை பார்த்து திகைத்தாள்.

“வாங்க அண்ணி!” ஜனா அவளை இழுக்க, “ஏய் விட்றா அவளை!” என அதட்டினான் ஜெய்.

“ஏன் ஏன் ஏன் விடணும்? அண்ணிக்கு லேட் ஆகுது” விடாமல் வம்பு செய்தான் ஜனா.

எதுவும் சொல்ல முடியாமல் பாட்டியை பார்த்தான் ஜெய். பார்வையால் என்னவென பேரனிடம் கேட்டாரோ ஒழிய அவனது உதவிக்கு வரவில்லை அவர்.

ஸ்ரீக்கு என்ன புரிந்ததோ, “நான் அவர் கூடவே போயிக்கிறேன் ஜனா” என சொல்லி கணவனின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

“ஹையோ அண்ணி டைம் இப்பவே…” ஜனா பேச ஆரம்பிக்க, “நான் அழைச்சிட்டு போறேன்டா, உள்ள போய் உன் தூக்கத்தை கன்டினியூ பண்ணு. போடா” என்றான் ஜெய்.

“ஹ்ஹான்… அப்படி வாய தொறந்து சொல்லு” என்ற ஜனா அண்ணனின் எதிரில் அமர்ந்து கொண்டு, “உனக்குள்ள இருக்க இன்னொரு சைடு ஆஃப் ஜெய்யை அண்ணிக்கு காட்டுண்ணா” என்றான்.

ஜெய்க்கு முன், “ஜனா…” என அதட்டினாள் ஸ்ரீ.

“உங்களை இவரே கூட்டிட்டு போகணும்னு இவருக்கு ஆசை, சும்மா அழைச்சிட்டு போனா கடமைனு நினைச்சிட மாட்டீங்களா நீங்க? எதையும் வார்த்தையால சொன்னாதானே?” என்ற ஜனா என்னவோ ஜெய்க்குள் பெரிய ‘காதல் வாத்தியார்’ ஒளிந்திருக்கும் அளவிற்கு அள்ளி விட்டு கொண்டிருந்தான்.

வயிறு நிறையா விட்டாலும் இவனிடமிருந்து தப்பித்து சென்றால் போதும் என எண்ணி பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டான் ஜெய்.

“ஹையோ சாப்பிடுங்க” என்றாள் ஸ்ரீ.

“போதும்” என்றவன் கை கழுவ சென்று விட்டான்.

“சாப்பிடும் போது என்னடா அவன்கிட்ட வம்பிழுத்து விட்ட?” இப்போதுதான் வாய் திறந்தார் பாட்டி.

“அவர் எனக்கு பயந்து எஸ் ஆக பார்க்கிறார் அப்பயி” என ஜனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களை கடந்து வெளியில் சென்று விட்டான் ஜெய்.

ஸ்ரீ எழுந்து நிற்க, “மறந்திட்டு போகல அண்ணி, அவருக்கு ஒரே ஷை ஷையா வருதாம். கோச்சுக்காம போங்க அண்ணி. வெளில உங்களுக்காக வானத்து மேல கண்ண வச்சிட்டே காத்திட்டு இருப்பார்” என்றான் ஜனா.

“டேய் வழி மேல விழி வைக்கிறதுடா” திருத்தினார் பாட்டி.

“அண்ணி அண்ணனோட ஏஞ்சல் அப்பயி, ஏஞ்சல்ஸ் எல்லாம் வானத்திலேருந்துதானே வருவாங்க? ஸோ… கூட்டி கழிச்சு பாரு நான் சொல்றது சரியா இருக்கும்” என்ற ஜனாவின் தோளில் செல்லமாக அடித்தாள் ஸ்ரீ.

“ஹையோ ஏஞ்சல்னு சொல்லவும் அண்ணிக்கு பெருமையை பாரு!” என ஜனா சொல்லிக் கொண்டிருக்க, “ஸ்ரீ… இன்னும் வராம என்ன பண்ற நீ?” உள்ளே எட்டிப் பார்த்து கத்தி விட்டு சென்றான் ஜெய்.

“ஹயையய்யோ! அண்ணன் எம்புட்டு ஆசையா உங்களை கூப்பிடுறார் பாருங்களேன், போகாதீங்க, இன்னும் அண்ணனோட ஆசை முகத்தை பார்க்கலாம் நாம” வம்பு செய்தான் ஜனா.

“சும்மான்னு இரு ஜனா, காலையிலேயே எனக்கு திட்டு வாங்கி கொடுக்க பார்க்கிற” என்ற ஸ்ரீ வேகமாக வெளியே சென்றாள்.

“அவங்க புருஷன் பொண்டாட்டியா தனியா இருக்கட்டும், நீ போய் உன் மூக்க மூக்க நுழைக்காத” என்றார் பாட்டி.

“அப்படியா? அப்போ யாரும் மூக்க நுழைக்க முடியாத படிக்கு அவங்க நடுவுல கேப் விழாம உன் பேரனை பார்த்துக்க சொல்லு” என்றான் ஜனா.

“எல்லாம் அவன் பார்த்துப்பான். அவனை யாருன்னு நினைச்ச அப்படியே அவன் தாத்தா மாதிரி…”

“ஹையோ ராஜாம்பா உன் கன்னத்துல நாலு ரோசாப்பூ பூத்து குலுங்குதே! எங்க என் பாட்டன் கதையை கொஞ்சம் எடுத்து வுடு. இன்னிக்கு பொழுத ஓட்டிடுறேன்” என சொல்லிக் கொண்டே பாட்டியின் அருகில் அமர்ந்து அவருடன் வம்பு செய்ய ஆரம்பித்து விட்டான்.

பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, “மெதுவா போங்க” என்றாள் ஸ்ரீ.

“அறுபதுலதான் போறேன், பயப்படாம வா. நீ கூட இருக்கும் போதெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டேன்” என்றான் ஜெய்.

“தனியா போகும் போதும் ரிஸ்க் எடுக்க வேணாம்” என்றாள்.

“பாருடா அக்கறையை!”

“உங்களுக்கே எம்மேல அக்கறை இருக்கும் போது எனக்கு இருக்க கூடாதா?”

“அதென்ன உங்களுக்கே…” என அவன் கேட்டதற்கு அவள் பதில் தரவில்லை.

சில நொடிகள் சென்று, “பழச விடவே மாட்டியா நீ?” எனக் கேட்டான்.

அதற்கும் அமைதிதான். வேண்டுமென்றா நினைக்கிறாள்? எத்தனை குத்தல் பேச்சுக்கள், அவமானங்கள்?

கல்லூரி வரும் வரை பேச்சுக்கள் நின்று போயிருந்தன. மாலையும் தானே வர முயற்சி செய்கிறேன் என சொல்லி கிளம்பி விட்டான்.

அவளை கூப்பிட செல்லும் நேரம் நெருங்கும் போது வேறு வேலையாகத்தான் இருந்தான். இருப்பினும் சசியை கவனித்துக் கொள்ள சொல்லி விட்டு அவனே கிளம்பி சென்றான்.

பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்தவனின் களைத்த தோற்றத்தை பார்த்தவள், “உங்களுக்கு முடியலைன்னா சொல்லியிருக்கலாமே?” என்றாள்.

தலையை கோதி சரி செய்து கொண்டு ஹெல்மெட்டை அணிந்தவன், “நான் வர்றது பிடிக்கலியா?” எனக் கேட்டான்.

“அதில்ல…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “உனக்கு பிடிக்கலைன்னாலும் இதுதான் நிஜம், ஏத்துக்கிட்டுதான் ஆகணும் நீ, ஏறு” என்றான்.

“எத ஏத்துக்கணும் நான்?” ஏறாமல் கேட்டாள்.

“ஹ்ம்ம்… நான்தான் உன் ஹஸ்பண்ட்னு”

“ம்ம்… அத ஏத்துக்காமதான் உங்க பெட்ல தூங்கிட்டு இருக்கேன்னு நினைக்குறீங்களா? தெரியாமதான் கேட்கிறேன், என்கிட்ட மட்டும்தான் இப்படியா இல்ல எல்லார்கிட்டேயும் இப்படித்தானா?”

“என்ன?”

“இப்படி பேசத் தெரியாம பேசுறது”

‘அரக்க பறக்க ஓடி வந்தும் பிரயோஜனம் இல்லாமல் செய்து விட்டதே இந்த வாய்’ என தன்னை நொந்து கொண்டவன், “ம்ம்… குறைச்சுக்கிறேன்” என்றான்.

அவள் முகத்தை சுருக்கிக் கொண்டு பார்க்க, “பேச்சை… எம் பேச்சை சொன்னேன்” என்றான்.

“ஹையோ நல்லா குறைப்பீங்க, ரெண்டு வார்த்தைல கூட எப்படி நோகடிக்கலாம்னு உங்ககிட்டதான் கத்துக்கணும். நிறைய பேசுறது பிரச்சனை இல்ல, சரியா பேசுங்க” என்றாள்.

“இதோ பாரு, யோசிச்சு பிளான் பண்ணிலாம் பேசிட்டு இருக்க முடியாது, எல்லாத்துக்கும் குத்தம் கண்டுபிடிக்காத நீ” என்றவன் பைக்கை எடுக்க அவளும் அமர்ந்து கொண்டாள்.

அவளை வீட்டில் விட்டவன் மீண்டும் சைட் சென்று விட்டான். இரவு அவன் வரும் போது அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.

அவன் வியப்பாக பார்த்தான்.

“வயசானவங்கலாம் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுவாங்க? அதான்…” என்றாள்.

“பரவாயில்லை, காலேஜ்ல ட்ராப் பண்றதுக்கு பதில் இதை செய்றேன்னு சொல்லாம போனியே”