அத்தியாயம் -12(2)
“நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்தையெல்லாம் மறந்திட வேணாம். அதை அனுபவிச்சது நான்தான், எம்மேல நம்பிக்கை இல்லாம என்னெல்லாம் செஞ்சீங்க? கல்யாணம் பண்ணிக்கன்னு வந்து கேட்டா உடனே சரின்னு சொல்லிடணுமா?”
“பழசை திரும்ப திரும்ப பேசாத” என அவன் சொல்லவும், ‘அதை நீ சொல்கிறாயா?’ எனும் படி பார்த்தாள்.
“நான் பேசினேன்தான், அதை வச்சு உன்கிட்ட ஹார்ஷா நடந்துகிட்டேன்தான். அதுக்கான விளக்கத்தையெல்லாம் சொல்லி முடிச்சிட்டேன்”
“என்ன விளக்கம் சொன்னாலும் நான் பட்டது பட்டதுதானே? மனசுக்கு தோணினதை செஞ்சு பழக்க பட்டவ நான். அன்னிக்கு உங்களை ஹஸ்பண்ட்டா நினைச்சு பார்க்க முடியலை, உள்ளதை சொல்லிட்டேன். இன்னிக்கு நிலைமை வேற, பழசை மறக்காம அத வச்சு நீங்கதான் என்கிட்ட கோவ பட்டுட்டு இருக்கீங்க”
“இன்னிக்கு நிலைமை மாறிப் போயிடுச்சா? அப்படியா… மாறிடுச்சா?” என கேலியாக கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க, “சம்பிரதாயமா கல்யாணம் நடந்திருக்கு, மனசளவுல என்னை ஏத்துக்கிட்டியா என்ன, இல்லைதானே? எனக்கு வாழ்க்கை கொடுத்திட்டேன் ரேஞ்சுக்குத்தான் நீயும் இருக்க. நான் கோவமா இருக்கேன்னு சொல்ற… என்ன எப்ப என் கோவத்தை பார்த்த நீ? பார்த்தா தாங்க மாட்ட” என்றவனின் பார்வை சாலையில்தான் இருந்தது.
“ஹையோ இவ்ளோலாம் பயமுறுத்தாதீங்க, பாருங்க உடம்பெல்லாம் நடுங்குது” என நக்கலாக சொன்னாள் ஸ்ரீ.
“நடுங்கும் நடுங்கும், நிஜமா நடுங்கதான் போற நீ” என வேண்டுமென்றே மிரட்டினான்.
“என்ன… நைட் ஏசி டெம்ப்ரேச்சர் கம்மி பண்ணி வச்சிட்டு பிளாங்கட் கூட தராம வெறும் தரைல தள்ளி விட போறீங்களா என்னை? அப்ப உடம்பு நடுங்கும்தான்!”
அப்படியெல்லாம் எதையும் யோசித்திராதவன், அவளின் அதீத கிண்டலில் எரிச்சலுற்றான். அவளை எப்படியாவது வாயடைக்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், “அப்படி மட்டும்தான் நடுங்க வைக்க முடியுமா உன்னை? சைக்கோதனமா ஏதாவது பண்ணினா… ஹ்ம்ம்?” எனக் கேட்டான்.
அவளின் முகம் இறுகிப் போக, “என்ன மீன் பண்றீங்க?” எனக் கேட்டாள்.
“நிறைய கற்பனை ஓடுதுல்ல… எஸ் உன் கற்பனைல ஓடுறது ஓடாதது எல்லாத்தையும் செய்றவன்தான் சைக்கோ. என் வாயால வேற சொல்லணுமா? வேணாம், பயந்து போயிடுவ, பொழச்சு போ” என இளக்காரமாக சொன்னான்.
“நான் ஏன் பயந்து போகணும்? இப்படி பேசுறதுக்காக நீங்கதான் வெட்க படணும்” என்றாள்.
ஜெய் வெட்கித்தான் போனான். இந்த அதிகப் படியான பேச்சை அவனாலேயே சகிக்க முடியவில்லை. பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
வீடு வந்த பின் காரிலிருந்து அவளது புத்தக மூட்டைகளை எடுத்து வைக்க போனாள்.
“நீ உள்ள போ, நான் எடுத்திட்டு வர்றேன்” என்றான்.
“உங்களைலாம் பலமா படைச்சது இப்படி ஹெல்ப் பண்றதுக்காக இருக்கலாம், எங்களை நடுங்க வைக்கிறதுக்காக இல்லை. அப்புறம் இந்த வெயிட் தூக்க முடியாத அளவுக்கு நான் பலஹீனமா இல்லை” என சொல்லி, ஒரு பையை தூக்க முடியாமல் தூக்கினாள்.
“என்னை சீண்டுற மாதிரி நீ பேசினதுக்கு நானும் ஏதோ சொல்லிட்டேன், உடனே பொம்பள பொறுக்கி ரேஞ்சுக்கு என்னை பேசக்கூடாது” என்றவன் அவளின் கையிலிருந்து பையை பிடுங்கிக் கொண்டான்.
“என் வேலைய நானே செஞ்சுக்குவேன், கொடுங்க” என்றாள்.
“இதைதான் சொன்னேன் நான், உனக்கு இன்னும் எதுவும் மனசுல பதியல, அப்புறம் நான் நார்மலா பேசல, கோவத்துல இருக்கேன்னு கதை கட்டி விடுறது” சிடு சிடுத்தவன் அந்த பையை அங்கேயே வைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்.
வீம்பாக அந்த பையை அவனிடமிருந்து வாங்க முற்பட்டவளுக்கு இப்போது மலைப்பாக இருந்தது. ஆயினும் யாரையும் உதவிக்கு அழைக்காமல் பையை எடுக்க போனாள். அதற்குள் ஜனா வந்து விட்டான்.
“ஹாய் அண்ணி! என்னை உங்க ஆத்துக்காரர் இங்க அடிச்சி துரத்தி விட்டுட்டார்” என்றவனை அவள் குழப்பமாக பார்த்தாள்.
“அவர் வைஃப்க்கு போர்ட்டர் வேலை பார்க்க அண்ணி” என்றவன் பைகளை எடுத்துக் கொண்டு சென்றான்.
மேல் வேலைக்கு ஒரு பெண்மணியும் தோட்ட வேலைக்கு ஒருவரும் என ஆட்கள் வருகிறார்கள்தான், எல்லா நேரமும் இருக்க மாட்டார்கள். பாட்டியும் துளசியும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றிருந்தனர்.
ஜெய் ஹாலில் அமர்ந்து டிவியில் மறு ஒளிபரப்பான கால் பந்தாட்டம் பார்த்துக் கொண்டிருந்தான்.
பைகளோடு மாடி ஏறப் போன தம்பியிடம், “என் ரூமுக்கு ஆப்போசிட் ரூம்ல வை” என பணித்தான்.
பின்னால் வந்த ஸ்ரீக்கு முகம் சுருங்கிப் போனது, தனியே தங்க சொல்கிறான் போல என நினைத்துக்கொண்டாள். அதில் அவளுக்கொன்றும் கஷ்டம் இல்லை. அந்த விஷயத்தை தன்னிடமே நேரில் சொல்லாமல் இப்படி ஜனா மூலமாக மறைமுகமாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“இன்னும் இருக்க பையையும் நாந்தான் சுமந்திட்டு போகணுமா ண்ணா? நீயும் எடுத்திட்டு வா” என்றான் ஜனா.
மனைவி அந்த இடத்தில் இருந்திருக்கா விட்டால் உதவியிருப்பானோ என்னவோ, இப்போது அவளின் முன்னிலையில வீராப்பாக நிமிர்ந்து அமர்ந்தவன், “ஏன் உன் ஃபேவரைட் அக்காதானே இங்க வந்திருக்காங்க, நீயே செய். எனக்கு வேற வேலை வெட்டி இருக்கு” என்றான் ஜெய்.
“வெட்டி வேலையை மாத்தி சொல்றியா ண்ணா?” எனக் கேட்டு அண்ணனின் முறைப்பை அசால்ட்டாக புறம் தள்ளி விட்டு நடந்தான் ஜனா.
அவனுக்கு உதவிட பையை தானும் பிடித்துக்கொண்டாள் ஸ்ரீ.
“விடுங்க ண்ணி, இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்” என்ற ஜனா, தலையில் ஒரு பையும் தோளில் ஒரு பையுமாக படிகளில் ஏறினான்.
ஸ்ரீ வற்புறுத்தி கேட்டும் அவளிடம் தர மறுத்தவன் ஏதோ கடி ஜோக் சொல்ல, வாய் விட்டு சிரித்தாள் ஸ்ரீ. ஜனா விடாமல் அடுத்தும் ஏதோ ஜோக் சொல்ல, ஸ்ரீயின் சிரிப்பொலி வீட்டையே நிறைத்தது.
தன்னை அறியாமல் ஜெய்யின் இதழ்களின் ஓரத்திலும் குறுநகை மலர்ந்தது.
சற்று நேரத்தில் கீழே வந்த ஜனா உணவு மேசையில் ஸ்ரீ வைத்து விட்டு சென்றிருந்த பக்கோடா, கேசரி வகையறாக்களை பரிமாறிக் கொண்டு மாடிக்கு செல்ல நடந்தான்.
“இங்கேயே சாப்பிட்டு போ” என்றான் ஜெய்.
“நானும் அண்ணியும் பேசிக்கிட்டே சேர்ந்து சாப்பிட போறோம்” என சொல்லி சென்று விட்டான் ஜனா.
ஒரு மணி நேரம் சென்று காலி தட்டோடு ஜனா கீழே வந்த போது கோயிலுக்கு சென்றிருந்தவர்களும் வந்திருந்தனர்.
“அண்ணிக்கு வயிறு ஃபுல்லாம், தூங்க போறதா சொல்லிட்டாங்க” என அறிவித்த ஜனா, அண்ணனின் கையிலிருந்த ரிமோட்டை பறித்து ஏதோ ஆங்கில படம் வைத்துக்கொண்டான்.
தம்பியை முறைத்தாலும் அவன் விருப்ப படி விட்ட ஜெய் வேலை சம்பந்தமாக கைப்பேசி அழைப்புகளில் பிஸி ஆகி விட்டான்.
மேலும் ஒரு மணி நேரம் கடந்த பின்பு அம்மா பாட்டியோடு சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டான் ஜெய். ஜனா கொஞ்ச நேரம் கழித்து தானே சாப்பிட்டுக் கொள்வதாக சொல்லி விட்டான்.
ஜெய் அறைக்கு வந்த போது ஸ்ரீ அங்கே இல்லை. ஓய்வறையிலும் அவள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் யோசனையோடு எதிர் அறைக்கு வந்து பார்த்தான்.
அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. ஜீரோ வாட்ஸ் பல்பிலிருந்து கசிந்த வெளிச்சத்தில் அவள் மட்டும் பிரகாசமாக இருப்பது போல உணர்ந்தவன் அடுத்த நொடியே இவள் இங்கு வந்து படுத்திருப்பதை நினைத்து பார்த்து கடினமானான்.
இன்று பேசிய பேச்சு அதிகப்படிதான் என்ற போதும் அதற்கான விளக்கத்தை சொல்லியாகி விட்டது. என்ன வேண்டுமாம், மன்னிப்பு கேட்க வேண்டுமோ? அதுதான் தேவையென்றால் வாய் திறந்து சொல்லாமல் இதென்ன செய்கை? என யோசித்தவனுக்கு திடீரென தான் ஏதும் செய்து விடுவேன் என நினைத்து இப்படி செய்கிறாளோ என தோன்றியது.
சர் என கோவம் தலைக்கேற அவளை தட்டி எழுப்பி விட்டான். கண் விழித்தவளுக்கு உறக்கம் தெளியவில்லை.
கண்களை கசக்கிக் கொண்டு அவனை பார்த்தவள், “ஐயோ அம்மா!” என அலறினாள்.
“ஹேய் நாந்தான்” என அதட்டியவன் மின் விளக்கை போட்டு விட்டான்.
“என்னாச்சுங்க” எனக் கேட்டாள்.
“இதென்ன புதுப் பழக்கம்? அப்ப என்னை அயோக்கியன் பொறுக்கி சைக்கோன்னு முடிவு கட்டிட்ட என்ன?” எனக் கோவமாக கேட்டான்.
என்ன சொல்கிறான் இவன் என புரியாமல் தலையை சொறிந்து கொண்டே கொட்டாவி விட்டவள், “நாளைக்கு பேசலாமா? தூக்கமா வருது” என்றாள்.
“அங்க தூங்குறதுக்கு என்ன?” என அதட்டினான்.
இவன் விட மாட்டான் என புரிந்து எழுந்து நின்று உறக்கத்தை விரட்டி அடித்தவள், “நிஜமா நீங்க சைக்கோதான், இல்லைனா இந்த ரூம்ல நான் இருக்கணும்னு இன்டைரக்ட்டா சொல்லிட்டு, நல்லா தூங்கிட்டு இருக்கும் போது கேள்வி கேட்டுட்டு நிப்பீங்களா?” எனக் கேட்டாள்.
“உளராத, போ மூஞ்சு கழுவிட்டு வந்து பேசு. சம்பந்தமே இல்லாம ஏதோ கதை சொல்லிக்கிட்டு”
“ஏது மூஞ்சு கழுவனுமா? ஏன் குளிச்சிட்டு வந்து பேசுறேனே”
“அது உன் இஷ்டம்”
“தூங்குறதுதான் என் இஷ்டம் இப்போ, போங்க… நீங்க உங்க ஏரியாவுக்கு போங்க. இது என் ஏரியா. அந்த ரூம்ல இருக்க என் திங்ஸ் கூட நாளைக்கு இங்க மாத்திக்கிறேன்” என்றாள்.
விஷயம் இப்போதுதான் அவனுக்கு விளங்கியது. தலையில் தட்டிக் கொண்டவன் அங்கிருந்த ஒரு கப்போர்ட் திறந்து காட்டினான். உள்ளே நிறைய புத்தகங்கள் இருந்தன.
“எல்லாம் என்னோடது, அது பெட் ரூம், அங்க எப்படி ஃப்ரீயா உன்னால படிக்க முடியும்? நீ லைட் போட்டுக்கிட்டு விடிய விடிய படிச்சா என்னால எப்படி தூங்க முடியும்? இது உனக்கு ஸ்டடி ரூம்” என்றான்.
சில நொடிகள் யோசித்தவள், “ஓ நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் இதுதான் விஷயம்னு தெளிவா சொல்றதுக்கென்ன? நமக்குள்ள சண்டையா… அதுல கோவமாகி என்னை தனியா தங்க சொல்றீங்கன்னு நினைச்சிட்டேன்” என்றாள்.
“நீதானே… நீ என்ன வேணா நினைப்ப? ஏற்கனவே அப்பயி அம்மாலாம் நமக்குள்ள ஒத்து போகலைனு கவலைல இருக்காங்க. வீட்ல இருக்கவங்களுக்காகவாவது ஒழுங்கா அங்க வா” என்றான்.
“இன்னிக்கு ஒரு நாள் விடுங்க, அங்க வரை நடந்து வர்றதுல தூக்கம் சுத்தமா கலைஞ்சு போயிடும்” என்றவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான் ஜெய்.
அவனது இழுப்புக்கு சென்றவள் அறைக்குள் வரவும், “இன்னிக்கு சிவராத்திரிதான் எனக்கு!” சலிப்பாக சொல்லிக் கொண்டே படுத்துக் கொண்டாள்.
“நான் வேணா தாலாட்டு பாடவா?” எரிச்சலோடு கேட்டான்.
கையெடுத்துக் கும்பிட்டவள், “வெயிட் பண்ணி தலையணை வைக்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல. இந்தாங்க இதை நீங்களே கட்டிகிட்டு தூங்கிடுங்க” என சொல்லி தலையணை ஒன்றை எடுத்து வைத்தாள்.
அவன் கேள்வியாக பார்க்க, “லைட் ஆஃப் பண்ணிடுங்க ப்ளீஸ்” என சொல்லி கண்களை மூடி விட்டாள்.
தலையணையையும் அவளையும் மாறிப் மாறிப் பார்த்தவனுக்கு விஷயம் விளங்கிப் போக தன் தலையிலேயே தட்டிக் கொண்டான்.
‘என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா ஹையோ!’ வெட்கமும் சங்கடமும் சூழ்ந்து கொண்டன அவனை.
எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்ற எண்ணத்துடனே ஆடை மாற்றிக் கொண்டு அவன் படுக்க வரும் போது உறங்கிப் போயிருந்தாள் ஸ்ரீ.
இடையில் கிடந்த தலையணையை முறைத்துக் கொண்டே படுத்தான் ஜெய்.