புதிய உதயம் -12

அத்தியாயம் -12(1)

திருமணம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டன. ஸ்ரீயிடம் சரி வர பேசியிருக்கவே இல்லை ஜெய்.

அவளும் பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் கிளம்பி செல்பவன் மதிய உணவுக்கு வந்து உடனே சென்று விடுவான். பின் இரவுக்கு அவன் திரும்பும் போது ஸ்ரீ உறங்க சென்றிருப்பாள்.

துளசிதான் காத்திருந்து அவனுக்கு உணவு பரிமாறுவது. ஸ்ரீயிடம் அவனுக்காக காத்திரு என பாட்டியோ துளசியோ சொன்னால் கேட்டுக் கொள்வாள்தான். அவளின் மன நிலையை கருத்தில் கொண்டுதான் யாரும் அவளை நிர்பந்திக்கவில்லை.

திடீர் திருமணம் கொடுத்த அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருப்பவளுக்கு ஜெய்யின் பாராமுகம் ஒரு வித எரிச்சலை கொடுக்க, அவனுக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும் என எண்ணி நேரத்துக்கு படுக்க சென்று விடுகிறாள்.

அன்றைய இரவு உணவின் போது, “ரெண்டு நாளா நேரமே இல்லைனு காரணம் சொல்லிட்டே இருக்க ஜெய். நாளைக்கு ஸ்ரீ வீட்டுக்கு போயிட்டு வந்திடு” என கட்டளை போட்டு விட்டார் துளசி.

ஜெய் மறுப்பாக ஏதும் சொல்லாமல் உண்டு முடித்து அறைக்கு செல்ல, வழக்கம் போல படுக்கையில் சுவர் ஓரமாக சுருண்டு படுத்திருந்தாள் ஸ்ரீ.

‘காலேஜ்க்கு எத்தனை நாள் லீவ் போட்ருக்கா, எப்ப போவா?’ என்ற கேள்வி அவனுள் எழுந்தாலும், அவளே சொல்லவில்லை எனும் போது எனக்கென்ன வந்தது என நினைத்து ஆடை மாற்றிக் கொண்டு வந்து படுத்து விட்டான்.

அவன் நன்றாக உறங்கிய பிறகு கண் விழித்த ஸ்ரீ தலையணையை அவன் பக்கத்தில் வைத்தாள். சில நிமிடங்களில் அவள் எதிர்பார்த்தது போலவே அதை கட்டியணைத்துக் கொண்டான்.

‘தினம் இவனோட இந்த அக்கப்போர் வேற!’ உறங்குபவனை பார்த்து சத்தமில்லாமல் பழிப்பு காட்டிய ஸ்ரீ முன் போலவே படுத்து விட்டாள்.

 அடுத்த நாள் ஜோதியின் வீட்டுக்கு சென்ற போதும் காலை விருந்து முடித்த பத்து நிமிடங்களில் முக்கிய வேலை என சொல்லி சென்றவன் பின் மதிய சாப்பாட்டுக்குதான் வந்தான்.

வேகமாக சாப்பிட்டு கை கழுவிய கையோடு, “கிளம்பறப்போ மெசேஜ் பண்ணு, வர்றேன்” என ஸ்ரீயிடம் சொல்லி அப்போதும் புறப்பட பார்த்தான்.

அவளோ, “அவ்ளோ பிஸின்னா உங்க வேலைய பாருங்க, நானே வந்துக்கிறேன். எனக்குதான் வழி தெரியுமே” என எரிச்சலாக சொன்னாள்.

எதுவும் பேசாமல் சரியென்பது போல தலையாட்டிக் கொண்டு சென்றவனை ஒன்றும் சொல்ல இயலாமல் ஆ என அவள்தான் மனதுக்குள் அலறிக் கொண்டாள்.

கிராதகம் பிடித்தவன் சொன்னது போல அவளை அழைக்கவென வரவும் இல்லை, வருகிறாயா என கைப்பேசி வழியாக கேட்டுக் கொள்ளவும் இல்லை. கல்லூரிக்கு தேவையான அனைத்தும் எடுத்து வைத்துக் கொண்டவள் தங்கையிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

ஜெய் வரவில்லையா எப்படி செல்வாய் என கலக்கத்தோடு கேட்டார் ஜோதி.

“அவர் சைட்ல இருக்காராம்மா, வர முடியாதுன்னு முன்னாடியே சொல்லிட்டுத்தான் போனார். ஒரே ஊர்தானே, என்ன இப்போ நானே போயிப்பேன்” என சாதாரணமாக சொன்னாள் ஸ்ரீ. அந்த பதிலில் திருப்தி கொள்ளாமல் மகளையே பார்த்திருந்தார் ஜோதி.

“என்னம்மா?” என்றாள் ஸ்ரீ.

மஹதியை படிக்கும் படி அனுப்பி வைத்த ஜோதி, “முத தடவ உன்னை பொண்ணு கேட்டு அவங்க வீட்லேருந்து வந்தப்போ ஜெய் தம்பிகிட்ட நீ என்ன பேசினேன்னு இப்போ வரை சொல்லவே இல்ல. ஆனா நல்ல விதமா பேசலன்னு மட்டும் எனக்கு தெரியும். அந்த கோவத்துலதான் ஜெய் தம்பியும் உன்னை வேணாம்னு சொல்லிட்டு போயிடுச்சு. அப்ப தப்பு உம்பேர்லதானே ஸ்ரீ? உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, யார் முதல்ல இறங்கி வர்றதுன்னு வீம்பு பார்க்காம, நல்ல விதமா நடந்துக்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாதானே எனக்கு நிம்மதி?” என பொறுமையாக சொன்னார்.

“நீ தேவையில்லாம பயப்படுற, அவர் குணமே அப்படித்தான், கொஞ்சம் மூடி டைப். மத்தபடி எங்களுக்குள்ள எல்லாம் ஓகேவாதான் இருக்கு” என சமாதானம் செய்தாள் ஸ்ரீ.

நம்பாத பார்வை பார்த்த ஜோதியின் முகத்தில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

அம்மாவை இப்படி கவலையோடு விட்டுச் செல்ல மனமில்லாமல் அவளாகவே அவனுக்கு அழைத்தாள்.

“ஒரு வழியா கூப்பிட மனசு வந்திடுச்சு போல, ரெடியா இருக்கியா, வரவா?” எனக் கேட்டான் ஜெய்.

சில நொடி நேரம் ஒன்றும் புரியாமல் விழித்தவள், இங்குதான் பக்கத்தில் இருக்கிறான், எவ்வளவு நேரமாக இருக்கிறானோ? என யோசித்துக் கொண்டே “வாங்க” என்றாள்.

ஐந்து நிமிடங்களுக்குள் வந்து விட்டான். அவளது பெரிய பெரிய புத்தகங்கள் இருந்த பைகளை எல்லாம் பார்த்தவன் ஜனாவுக்கு அழைத்து காரெடுத்துக் கொண்டு வர சொன்னான்.

ஜனா காரில் வரவும் அண்ணனுக்கு அழைத்து சொல்ல தன் பைக்கை அவனிடம் கொடுத்து காரை அங்கேயே நிறுத்திக் கொண்டான்.

“இவ்ளோ தூரம் வந்திட்டேன், அண்ணி அத்தையெல்லாம் பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு போறேன்” என்றான் ஜனா.

“நீ உள்ள வந்தா கோயில் தேர் கணக்காதான் புடிச்சு இழுத்திட்டு வரணும். கிளம்பு கிளம்பு…” என்ற ஜெய்யை முறைத்துக் கொண்டே புறப்பட்டான் ஜனா.

“சொல்லிக்காம கொள்ளாம திடீர் திடீர்னு காணாம போறதுக்கு வராமலேயே இருந்திருக்கலாம். இந்நேரம் வீடு போய் சேர்ந்திருப்பேன்” வாய் விட்டு ஸ்ரீ சொல்லிக் கொண்டிருக்க உள்ளே வந்து விட்டான் ஜெய்.

அவனை கண்ட பின்னும் அதிராமல் ‘உள்ளதைதானே சொன்னேன்?’ எனும் ரீதியில் சாதாரணமாகவே நின்றாள்.

“நீ என்கிட்ட எல்லாத்தையும் சொல்றியா நான் உன்கிட்ட சொல்ல?” என சின்ன குரலில் அவன் சீறும் போதே, அம்மாவின் காதில் விழுந்து விடப் போகிறதே என்ற பயத்தோடு அம்மா எங்கே எனதான் பார்த்தாள் ஸ்ரீ.

அதில் அமைதியடைந்து விட்ட ஜெய் அவளது பைகளை எடுத்துக் கொண்டு போய் காரில் வைத்தான். யு ஜி படித்த போது வைத்திருந்த புத்தகங்களையும் அவள் மூட்டை கட்டி வைத்திருக்க நிறைய இருந்தன.

அக்காவை வழியனுப்ப வந்தாள் மஹதி.

இறுதியாக இருந்த தோள் பையையும் ஜெய் கையில் எடுக்க, “ஹையோ மாமா அது என் ஸ்கூல் பேக்” எனக் கூறி சிரித்தாள் மஹதி.

திருமணத்துக்கு பின் அவனை முதல் தடவையாக முறை வைத்து அழைக்கிறாள். சங்கடமாக அவளை பார்த்துக் கொண்டே, “உன் மூட்டைக்கு உன் அக்காவோட மூட்டை பரவாயில்லை போல” என்றான்.

“ஆமாம் மாமா, ரெகார்டு நோட் எல்லாம் உள்ள இருக்கு மாமா, அதான் வெயிட்டா தெரியுது உங்களுக்கு” என்றாள்.

அவளின் இலகுத் தன்மையில் இவனும் சற்றே இலகுவாகி அவளது படிப்பை பற்றி விசாரித்தான். பதில் சொன்னவள், “உங்களை அங்கிள்னு கூப்பிட்டேன்னு முன்னாடி அப்செட் ஆகிட்டீங்கதானே? பாருங்க இப்போ அப்படித்தான் உறவு முறை ஆகிட்டீங்க மாமா” என்றாள்.

“உறவு முறைக்கு சரிம்மா, அதென்ன அங்கிள்? அப்படியா வயசானவன் லுக்ல இருக்கேன் நான்?” எனக் கேட்டான்.

“சேச்ச, ஆனா பெரியவங்கதானே நீங்க?” எனக் கேட்டவளுக்கு ‘எங்கே இன்னும் அங்கிள் அழைப்பில் கோவமோ?’ என பயம் எட்டிப் பார்த்தது.

“எதுக்கு பயப்படுற? நான் என்ன பேயா பூதமா? நார்மலாதான் கேட்டேன். நல்லா படி” என சொல்லி மஹதியுடனான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டான்.

தலையிடாமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ, “கிளம்புவோம்” எனவும் வாயில் பக்கம் இரண்டு அடிகள் எடுத்து வைத்தான்.

“அம்மாட்ட சொல்லிட்டு கிளம்புங்க” என சற்று அதட்டலாகவே சொன்னாள். அம்மாவை அழைக்க ஓடி சென்றாள் மஹதி.

நின்று திரும்பியவன் ஸ்ரீயை முறைத்து பார்த்தான்.

அவனருகில் வந்தவள், “உங்க வீட்லேருந்து வந்து என் அம்மாவை கன்வின்ஸ் பண்ணி அவங்க மூலமா என்னையும் கன்வின்ஸ் பண்ணி அப்படித்தான் நடந்தது இந்த கல்யாணம். என்னமோ நீங்க எங்களுக்கு சகாயம் செஞ்சிட்ட மாதிரி முறுக்கிட்டு போறீங்க, உடம்பு முடியாம யாரோட ஆதரவும் இல்லாம வாழறவங்க அம்மா, அட்லீஸ்ட் அவங்க நிம்மதிக்காகவாவது ஒழுங்கா நடங்க” என்றாள்.

“ரெண்டு நாளா அளந்து அளந்து பேசிட்டு இப்போ ரொம்ப பேசுற நீ, என்ன ஒழுங்கா நடக்கல நான்? ஏதோ யோசனைல போயிட்டேன், சொல்லிட்டு போங்கன்னு சொன்னதோட நிறுத்திக்க” என்ற ஜெய், சற்று சத்தமாகவே “அத்தை…” என அழைத்தான்.

மருமகனுக்காக சிற்றுண்டி தயார் செய்து முடித்திருந்தவர் தட்டுகளில் எடுத்து வைத்துக்கொண்டு வேகமாக வந்தார்.

ஜெய் எதுவும் சொல்வதற்கு முன், “என்னம்மா இது, நாந்தான் எதுவும் வேணாம்னு சொன்னேன்ல, இப்போ இத சாப்பிட்டா டின்னர் எப்ப முடிக்கிறது, சீக்கிரம் தூங்கினாதான் நான் நாளைக்கு கரெக்ட் டைமுக்கு காலேஜ் போக முடியும்” அலுத்தாள் ஸ்ரீ.

“என்னத்தை வெங்காய பக்கோடாவா? அதென்ன கேசரியா?” எனக் கேட்டுக் கொண்டே தட்டை கையில் வாங்கியவன் நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

“நல்லாருக்கா தம்பி, இன்னும் எடுத்திட்டு வர்றேன். வீட்ல கொண்டு போய் கொடுக்கவும் நிறையதான் மாவு கரைச்சேன், இவதான் பறக்கிறா” என சொல்லிக் கொண்டே சமையலறை சென்றார் ஜோதி.

“அப்படியா, அதெல்லாம் வேஸ்ட் ஆகிடாதா அப்போ? நீங்க பொறுமையா செஞ்சு பேக் பண்ணி கொடுங்க. நான் வெயிட் பண்றேன்” என ஸ்ரீயை நக்கலாக பார்த்துக் கொண்டே சொன்னான் ஜெய்.

ஜோதி பர பரப்பாக பக்கோடா செய்து கொண்டிருந்தார்.

“இதென்ன சின்ன புள்ள தனமான விளையாட்டு? அங்கேருந்து காலேஜ் போக இங்கேருந்து போறதை விட டைம் எடுக்கும், காலைல செவென் தேர்ட்டிக்கு பஸ்ல இருக்கணும் நான். எப்ப வீட்டுக்கு போய் எப்ப தூங்குறது நான்?” பட படத்தாள்.

“இப்போ இவ்ளோ பேசுறியே, நாளையிலேருந்து காலேஜ் போகணுங்கிற விஷயத்தை என்கிட்ட சொல்லணும்ங்கிற அறிவு இல்லியா உனக்கு?”

“என்ன ஏதுன்னு என்கிட்ட நீங்களா எதுவும் கேட்டீங்களா, நானா வந்து சொல்ல?”

அவன் தாடை இறுக அவளை பார்த்திருக்க, “ஆமாம், அன்னிக்கு…” என ஆரம்பித்தவள் அம்மா வருவதை உணர்ந்து அமைதியடைந்தாள்.

பக்கோடாவும் கேசரியும் இருந்த பாத்திரங்களை வாங்கிக் கொண்ட ஸ்ரீ தங்கையிடம் சொல்லிக் கொள்வதற்காக அவளை தேடிக் கொண்டு சென்றாள்.

“உடம்பை பார்த்துக்கோங்க அத்தை, நான் கார்ல இருக்கேன், அவளை வர சொல்லுங்க” என கொஞ்சம் நல்ல மாதிரியாகவே சொல்லி வெளியேறினான் ஜெய்.

மகள் வரும் வரை காத்திருந்து அவளோடு சேர்ந்து செல்லவில்லையே என ஜோதிக்கு ஆதங்கம்தான் என்றாலும் அவருக்கு சற்று முன்னரான அலைப்புறுதல் இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.

காரில் சென்று கொண்டிருக்கையில் அவளாகவே, “வீட்டுக்கு பக்கத்துலயா வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க?” எனக் கேட்டாள்.

லேசாக தலையாட்டினான், அவ்வளவே. வலிய பேசியும் முறுக்குபவனிடம் பேச்சு வைத்துக்கொள்ள வேண்டுமா என அவளுக்கு தோன்றி விட்டது.

ஆயினும் தங்கள் உறவு நிலையில் குறைந்த பட்சம் சரியான பேச்சு வார்த்தையாவது அவசியம், இல்லையென்றால் இரண்டு குடும்பங்களும் வருத்தம் கொள்வார்கள் என புரிந்து மீண்டும் அவளாகவே, “ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்ல?” என்றாள்.

“பண்ணியிருக்கலாம், உனக்குதான் நான்னா அலர்ஜி ஆச்சே. என்னை ஹஸ்பண்ட்டா நினைச்சு பார்க்கவே டாலரேட் செஞ்சுக்க முடியாது, கட்டாய படுத்தி என்கிட்டேயே உன்னை கோர்த்து விட்டுட்டாங்க. என்னை வேணாம்னு நினைக்கிற ஒருத்தி கூட வாழற பாக்கியம் எனக்கு. புதுசா முளைச்ச உறவ மாத்த முடியாது, அட்லீஸ்ட் தள்ளி இருந்தா உனக்கு வசதிதானே?” என்றான்.