அத்தியாயம் -11(2)
“நீங்க சொல்லுங்க” என்ற மஹதி, ஜெய்யின் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள்.
அவனது தலை மேலும் கீழுமாக ஆட, மஹதி வேறு ஏதோ சொல்லப் போனாள். அதற்கு இடம் தராமல் “அப்பயி… எங்க இருக்க நீ?” என கேட்டுக் கொண்டே அகன்று விட்டான் ஜெய்.
என் மீது கோவப்படட்டும், சின்ன பெண்ணிடம் இரண்டு வார்த்தை நல்ல மாதிரியாக பேசினால் குறைந்து போய் விடுவானா என மனதுக்குள் புதுக் கணவனை தாளித்தாள் ஸ்ரீ.
அனைவரிடமும் சொல்லிக் கொண்ட ஜோதி சின்ன மகளோடு புறப்பட்டு விட்டார்.
இரவு உணவு மணமக்கள் இருவரையும் சேர்த்து அமர வைத்து பரிமாறினார் துளசி. பாட்டியும் ஜனாவும் மேலே ஜெய்யின் அறையில் இருந்தனர்.
சிக்கனத்தை உயிர் மூச்சாக நினைப்பவளை போல வார்த்தைகளை செலவழித்தாள் ஸ்ரீ.
ஒரு வார்த்தை உதிர்த்தால் ஒரு லட்சம் செலவழியும் என கஞ்சன் ஒருவன் நினைத்தால் என்ன நடக்கும் என்பதை செயல் விளக்கமாக காட்டிக் கொண்டிருந்தான் ஜெய்.
இவர்களை இப்படி பார்த்த துளசிக்கு பயமாக இருந்தது. போக போக சரியாகும் என தனக்கு தானே சொல்லிக் கொண்டார்.
இருவரது பார்வைக்கும் கை சைகைக்கும் தானே ஒரு அர்த்தம் கண்டறிந்து பரிமாறினார் துளசி.
ரோஜா மலர்களின் இதழ்களை பிய்த்து படுக்கையில் போட்டார் பாட்டி.
“பார்த்து ராஜாம்பா முள் இருக்க போவுது, ஏற்கனவே உன் முசுட்டு பேரன் மூஞ்சுல முள்ளு இருக்குன்னு வெளில ஒரு பேச்சு உலா வருது” என்றான் ஜனா.
“யாருடா அப்படி சொல்றது?”
“வேற யாரு உன் பேரனோட தீவிர ரசிக பெருமக்கள்தான்!”
“இருக்கும் இருக்கும்”
“ஆமாம், அவர் அண்ணியை பார்வையாலேயே குத்தி கிழிக்கிறார், நீ உன் பங்குக்கு வேற வச்சு செய்யாத” என்றான் ஜனா.
“நீ சின்ன பையன் வராதன்னு சொன்னா கேட்காம உள்ள வந்து நின்னு அவனை திட்டாத, வெளில போ” என்றார் பாட்டி.
“மூட்டு வலிக்குது, கைத்தாங்கலா மேல அழைச்சிட்டு போன்னு சொல்லும் போது நான் சின்ன பையன்னு தெரியாதா உனக்கு?”
“சரிதான் போடா!” என பாட்டி சொல்ல வெளியேறி விட்டான்.
பெரிய பேரனின் மனநிலை பாட்டிக்கு புரிந்தே இருந்தது, இப்படி ஏதாவது அலங்காரம் செய்து வைத்தாலாவது இன்று என்ன நாள் என நினைவு வைத்து ஸ்ரீயிடம் சிடு சிடுவென எதுவும் பேசாமல் இருப்பான் எனும் எண்ணத்தில்தான் இதையெல்லாம் செய்கிறார்.
சாப்பிட்டு முடித்த ஜெய், இன்னும் உணவருந்திக் கொண்டிருக்கும் ஸ்ரீயை ஏறெடுத்தும் பாராமல் நேராக தன் அறைக்கு சென்றான். வெளி வராண்டாவில் தம்பி நிற்பதை கண்டு, கேள்வியாக அவனை பார்த்தான்.
“அப்பயி உள்ள இருக்கு” என ஜனா சொல்லவும், உள்ளே நுழைந்த ஜெய், “அப்பயி…” என பற்களை கடித்தான்.
“எப்ப பார்த்தாலும் சும்மா இப்படி கொதி தண்ணி கணக்காவே இருக்க கூடாது, ஸ்ரீகிட்ட நல்ல மாதிரி நடக்கணும். அந்த பொண்ணு நம்ம வீட்டு பொண்ணு, அதை ஞாபகம் வச்சுக்க சொல்லிட்டேன்” என எச்சரித்த பாட்டி, அவனது கோவ முகத்தை பொருட்படுத்தாமல் வெளியே சென்று விட்டார்.
ஜனாவும் உண்டு உறங்க சென்று விட்டான். பட்டுப் புடவையெல்லாம் அவசியமில்லை, இரவில் என்ன அணிவாயோ அணிந்து கொள் என ஸ்ரீயிடம் முன்னரே சொல்லியிருந்தார் பாட்டி.
ஆகவே அப்போது வரை அணிந்திருந்த சுடிதாரை கலைந்து விட்டு இரவில் அணியும் பேண்ட் சட்டைக்கு மாறியிருந்தாள் ஸ்ரீ.
துளசி உறங்க செல்வதாக மருமகளிடம் அறிவித்து விட்டு சென்று விட்டார்.
அடுத்து என்ன என்பது போல பாட்டியை பார்த்தாள் ஸ்ரீ.
ஜெய்யின் அறை எதுவென சொன்னவர், “அங்கேயே ஃபிளாஸ்க்ல பால் இருக்கு, அவனுக்கும் கொடுத்திட்டு நீயும் சாப்பிடு. காலைல நிதானமா எழுந்து வா” என கூறி அவளை அனுப்பி வைத்தார்.
ஸ்ரீ மேலே வரும் போது அறைக்கு வெளியில் இருந்த வராண்டாவில் நின்றிருந்தான் ஜெய். அவனது பார்வை வேறெங்கோ இருந்த போதும் அவளின் வருகையை உணர்ந்துதான் இருந்தான்.
உள்ளே செல்லலாமா கூடாதா எனும் குழப்பத்தில் அறை வாயிலிலேயே நின்று விட்டாள் ஸ்ரீ. சாவகாசமாக அவள் பக்கம் திரும்பியவன், “பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் உள்ள போய்தான் ஆகணும் நீ” என்றான்.
நேராக நிமிர்ந்து நின்றவள் அவன் பக்கம் திரும்பாமல் வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
மலர் அலங்காரத்தை கலைக்காமல் படுக்கையின் ஓரம் சுருண்டு படுத்து விட்டாள். கால் மணி நேரம் கழித்து அவன் உள்ளே வரும் அரவம் உணர்ந்தும் திரும்பவில்லை அவள்.
விளக்கை அணைத்தவன் அவளின் பக்கத்திலேயே அவளை தீண்டாமல் படுத்துக் கொண்டான்.
நடு இரவில் அவளுக்கு விழிப்பு தட்டியது. கழுத்தில் சூடான அவனது மூச்சுக் காற்றையும் இடுப்பில் ஏதோ தொடுகையையும் உணர்ந்தவளுக்கு நெஞ்சம் திக் என்றானது.
இதற்கெல்லாம் இன்னும் அவள் தயாரே இல்லையே, அவன் அவளை அணைக்க அவளது கற்பனை எங்கெங்கோ செல்கிறது. மறுப்பு சொல்வதற்காக பயத்துடனே அவன் பக்கமாக திரும்ப நினைக்கிறாள், அவளின் உடம்பே அவளுக்கு பாரமாகிப் போனது.
அவனது கை சற்றே இடம் மாறவும் அதனை மனதார ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுகை வருகிறது, கண்களை மூடி சகித்து கொள்கிறாள், சில நொடிகளில் முடியாது என கண்டிப்பாக சொல்லி விட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவனது கையை விலக்கி விட்டு பக்கமாக திரும்புகிறாள்.
அவனை காணவில்லை, அறையெங்கும் ஒரே இருட்டு. ஆனால் அவனது அருகாண்மையை உணர்கிறாள்.
அவன் எதுவும் செய்யும் முன் “வேணாம்” என குழறலாக சொல்கிறாள். அவனிடமிருந்து பதிலும் இல்லை, அவளை அவன் தொடவும் இல்லை.
கண்களை நன்றாக திறந்து வைத்தவள் அந்த இருளுக்கு பார்வையை பழக்கிய பின் அவனை உற்று கவனிக்கிறாள்.
அவளை நெருங்கி படுத்திருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தான். நடந்தவை அனைத்தும் அவனை மறந்த நிலையில் எதேச்சையாக நிகழ்ந்திருக்கிறது.
“ஹப்பாடா!” என பெருமூச்சு விட்டாள்.
அவனை தாண்டிக் கொண்டு படுக்கையிலிருந்து இறங்கி தண்ணீர் பருகினாள். அவளுக்கு ஓய்வறை செல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்த அறையில் ஓய்வறை எங்கே என தெரியவில்லை. வெளியில் செல்லலாம் என்றால் அறையை பூட்டியிருந்தான் ஜெய்.
இலக்கங்களின் சேர்க்கை கொண்டுதான் தாள் திறக்க முடியும். அறையை முடிந்த வரை சுற்றி வந்தவள் வேறு வழியின்றி அவனை எழுப்பி விட்டாள்.
பதறிக் கொண்டு எழுந்தவன், “என்ன?” என அதட்டலாக கேட்டான்.
“டாய்லட் எங்க இருக்கு இங்க? கதவையும் லாக் பண்ணி வச்சிருக்கீங்க?” என்றாள்.
மின் விளக்கை போட்டவன் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களின் படம் வரைந்திருந்த கதவை திறந்து விட்டான். அதற்குள் ஓய்வறையின் கதவு தெரிந்தது. அவள் கப்போர்ட் எனதான் அதை நினைத்திருந்தாள்.
“நல்ல கிரியேட்டிவிடி!” முணு முணுத்தவள் உள்ளே சென்று விட்டு திரும்பி வரும் போது அறைக் கதவு திறந்திருந்தது.
அவள் படுக்க செல்ல, நான்கு இலக்க எண் சொன்னவன், “இந்த நம்பர் காம்பினேஷன்தான், நீயே லாக் பண்ணிட்டு போய் படு” என்றான்.
அவளும் அவ்வாறே செய்து விட்டு மீண்டும் படுக்க செல்ல “வெயிட்” என்றான்.
அவளும் அவனை கவனிக்க ஒரு பக்க சுவரில் வரையப் பட்டிருந்த இயற்கை காட்சியை காட்டினான். அதில் வரையப் பட்டிருந்த பெயர் தெரியாத பூ ஒன்றை தொட்டு திருகினான். கதவு போல திறந்து கொண்டது. அதுதான் காப்போர்டாம்.
“உன் திங்ஸ் இங்கதான் இருக்கு, காலைல அதுக்கு வேற எழுப்பி விடாத, எனக்கு நல்லா தூங்கணும்” என்றான்.
இன்னும் வேறு என்னென்ன இருக்கிறது இங்கே என அவள் ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். அது புரிந்தாலும் மேலும் ஏதும் சொல்லாமல் படுத்து விட்டான் ஜெய்.
படுத்துக் கொண்ட ஸ்ரீக்கு உறக்கமே வரவில்லை. என்னவோ அந்த அறை, அருகிலிருக்கும் ஜெய் எல்லாமே அமானுஷ்யமாக தெரிந்தது.
பழைய படம் ஒன்றில் கதாநாயகியை அவளது கணவனே வீட்டு சுவருக்குள் உயிரோடு வைத்து சிமெண்ட் பூசுவது நினைவில் வர அவளது உள்ளத்தில் திகில் பரவியது.
சட்டென அவளது வயிற்றின் மீது தன் கனமான கையை போட்டான் ஜெய், இதுவும் உறக்கத்தில்தான். ஆஆ… என அலற இருந்தவள் வாயில் கை வைத்து மூடி கண்களையும் இறுக மூடிக் கொண்டாள்.
‘பேய்க்கு வாக்கப்பட்டா பயந்துதானே ஆகணும்?’ என்பதாக இருந்தது அவளின் மைண்ட் வாய்ஸ்.