புதிய உதயம் -11

அத்தியாயம் -11(1)

ஜெயவர்தனுக்கும் தன்யஸ்ரீக்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஜெய் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த இருவரின் முகங்களிலும் மலர்ச்சி என்பது துளியும் இல்லை.

ஜெய் இறுக்கத்தோடு இருக்க, ஸ்ரீ பயமும் பதட்டமுமாக இருந்தாள்.

ஜெய்க்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து அழைப்பிதழும் அச்சடித்தாகி ஊரெங்கும் வழங்க பட்டுக் கொண்டிருந்தன.

ஏழு நாட்களில் திருமணம் என இருந்த சமயத்தில்தான் ஜனாவின் நண்பன் ஒருவனின் உறவினரின் பையன் அந்த விஷயத்தை சொன்னான். அதாகப்பட்டது அந்த பெண் இரண்டரை வருடங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பதிவுத் திருமணம் செய்திருக்கிறாள், ஒரு மாதம் அவனுடன் குடும்பமும் செய்திருக்கிறாள்.

காதலிக்கும் போது கண்ணுக்கு தெரியாத அவனது வறுமை சூழல், வாழும் போதுதான் அவளுக்கு தெரிந்திருக்கிறது. தன் பிறந்த வீட்டினரோடு சமாதானமாக போய் விட்டால் அவர்கள் உதவுவார்கள் என எண்ணித்தான் மீண்டும் பெற்றோரிடம் வந்து நின்றாள்.

அவர்களோ ‘அவனை விட்டு வந்து விடு, வேறு நல்ல வாழ்க்கை அமைத்து தருகிறோம்’ என சொல்லியிருக்கின்றனர். அவள் மறுத்து பேசாமல் யோசனை செய்யவுமே மகள் காதலில் உறுதியில்லாமல் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட அவளின் பெற்றோர் சாதுர்யமாக காய் நகர்த்த ஆரம்பித்தனர்.

அந்த பையனுக்கு பெரிய தொகை கொடுத்து அவனை மகளின் வாழ்வில் இருந்து அப்புறப்படுத்தி மகளை தங்களோடு அழைத்துக் கொண்டனர்.

தங்களின் பணத்தை கொண்டு அப்படியொரு திருமணம் நடக்கவே இல்லை எனவும் செய்து விட்டனர். ஆனால் அவர்களிடம் வேலை செய்த சிலருக்கு இந்த உண்மை தெரியும். அவர்களை மீறி யாரும் அந்த உண்மையை வெளியிடாமலும் பார்த்துக் கொண்டனர்.

இதெல்லாம் நடந்த இரண்டே மாதங்களில் மகளை வெளிநாட்டுக்கு மேற்படிப்பு படிக்க அனுப்பி வைத்து விட்டனர். படிப்பை முடித்து வந்தவளுக்கு முதல் திருமணம் நடந்த விஷயத்தை சொல்லாமல் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கவும் வசமாக ஜெய் சிக்கிக் கொண்டான்.

நண்பன் சொன்ன விஷயத்தை உடனே நம்பாமல் இரண்டு நாட்கள் தீயாக வேலை செய்து உண்மையை அம்பல படுத்தி விட்டான் ஜனா.

பெண்ணின் பெற்றோர் ஏதேதோ சப்பை கட்டு கட்டி சமாதானம் செய்ய பார்த்தனர். ஜனா போட்ட சண்டையில் அவர்களாக பின் வாங்கி சென்று விட்டனர்.

ஆகவே அவசரமாக ஏற்பாடு செய்யப் பட்ட ஜெய்யின் திருமண ஏற்பாடுகள் அதே அவசர கோலத்தில் நின்றும் போய் விட்டது.

முதலில் சுரேகா, பின் கரூரில் பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்த சம்பவம், ஸ்ரீ ஜெய்யை மறுத்தது, இப்போது கல்யாணம் வரை வந்து நின்று போனது என எல்லாமே வீட்டினருக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது.

ஜெய்க்கோ நடந்த அத்தனையிலும் ஸ்ரீ தன்னை நிராகரித்த விதம் மட்டுமே பூதாகரமாகவும் இந்த திருமணம் நின்றது ஒரு வகையில் நிம்மதியாகவும் இருந்தது. திருமணம் உறுதியான நாளிலிருந்து எப்படி இந்த மண வாழ்க்கையை எடுத்து செல்வேன் என அரித்துக் கொண்டே இருந்த கேள்விக்கு தானாக தீர்வு கிட்டியதை போலதான் உணர்ந்தான்.

அடுத்து இன்னொரு பெண் பாருங்கள் என சொல்லி எந்த முட்டாள்தனமும் செய்யாமல், இப்போதைக்கு திருமணமே வேண்டாம் என தீர்மானமாக சொல்லி விட்டவன் வேலையில் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டான்.

 நள்ளிரவில் உறங்கவென வீடு வருபவன் அதிகாலையில் கிளம்பி சென்று விடுகிறான். சசியையும் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் ஒரு பையனையும் பாடு படுத்துகிறான். முன்பெல்லாம் தவறு நடந்தால் சீறி விழுபவன் இப்போதெல்லாம் தவறு நடக்க வாய்ப்பு இருப்பதாக எண்ணினாலே பொங்கி எழுந்தான்.

“ஐயோ இந்தாளுக்கு கல்யாணம் நின்னு போனதால அரக்கனா மாறிட்டு வர்றார் போல” என அவனுக்கு பின்னால் பேசிக் கொண்டனர்.

  மகனை பற்றிய கவலையில் துளசிக்கு இரத்தக் கொதிப்பு உயர்ந்து விட்டது. சாதாரண பரிசோதனைக்கு சென்றவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு விட்டார்.

மகன் இறந்த போது எப்படி தன்னெழுச்சி கொண்டு குடும்பத்தை தாங்கினாரோ அதே நிலைக்கு வந்து விட்டார் ராஜாம்பாள் பாட்டி. இப்போது துணைக்கு சின்ன பேரனும் இருக்க, ஜெய்யின் திருமணத்தை குறித்த முகூர்த்ததில் முடித்துக் காட்டுகிறோம் என கங்கணம் கட்டிக் கொண்டனர்.

ஜோதியிடம் சென்று நிலைமையை விளக்கி ஸ்ரீயை மீண்டும் பெண் கேட்டனர். காணொளி அழைப்பின் மூலம் துளசியும் ஜோதியிடம் பேசினார். இந்த முறை ‘மகளின் விருப்பம்தான்’ என ஜோதியால் சொல்ல முடியவில்லை.

மகளை வற்புறுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து விட்டார் ஜோதி. செய்தியை உறுதி படுத்திக் கொண்ட கையோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தார் துளசி.

 ஜெய்யுடன் வாழ்க்கையில் இணைவதற்கு சம்மதித்த அடுத்த நொடியிலிருந்து எப்படி தான் சம்மதித்தோம் எனதான் மண்டையை உடைத்துக் கொள்கிறாள் ஸ்ரீ. ஏதாவது நடந்து அவனிடமிருந்து தான் தப்பித்து விட மாட்டேனா என நப்பாசை கொண்டிருந்தாள்.

ம்ஹும்… எங்கே? இதோ இறைவனால் நிர்ணயிக்க பட்டபடி ஜெய்யின் திருமதி ஆகி விட்டாள்.

ஸ்ரீ தன்னை மணக்க ஒத்துக் கொண்டாள் என அறிந்த பின் அப்படியொன்றும் மகிழ்ந்து போய் விடவில்லை ஜெய். அன்று அவளது வீட்டில் வைத்து அவள் பேசியதும் நடந்து கொண்டதும் மங்காமல் பசுமையாகவே அவனது நினைவிலிருக்க, “என்ன வாழ்க்கை தர்றாளாமா அவ? தேவையில்லை, எனக்கு கல்யாணம் வேணாம்னா விட்டுத் தொலைங்களேன்” எனதான் சத்தம் போட்டான்.

அன்று முழுதும் சரியாக சாப்பிடாமல் இருந்த துளசி லேசாக தடுமாற, அதை பயன்படுத்திக் கொண்டான் ஜனா.

தடுமாறினாலும் சமாளித்து நிற்க பார்த்தவரை தோளில் சாய்த்துக் கொண்டு, “ஐயோ அம்மா! உன் பேச்சு கேட்காம அடம் பிடிக்கிற இவரை போய் நினைச்சு மயக்கம் போடுறியே, உன் வார்த்தை மீறாத அப்புராணி… என்னை நினைச்சு பார்த்தியாமா?” என புலம்பினான் ஜனா.

ஜெய் அம்மாவை நெருங்குவதற்குள் பாட்டி இடையில் வந்து விட்டார். அம்மாவை தூக்கிக் கொண்டு அறையில் படுக்க வைத்த ஜனா, “உன் பையனுக்கு கல்யாணம் ஆவணும்னா ஒரு மணி நேரம் கண்ண தொறக்க கூடாது” என கட்டளை போட்டான்.

பின் பாட்டியும் ஜனாவும் துளசிக்கு ஜெய்யால்தான் முடியாமல் போகிறது என அவனை கலவரப்படுத்தி ஸ்ரீயுடனான திருமணத்திற்கு ஒப்புதல் பெற்று விட்டனர்.

புகுந்த வீட்டுக்குள் முதல் அடி எடுத்து வைத்த ஸ்ரீக்கு இனம் புரியாத கலக்கமாக இருந்தது. மாங்கல்யம் கட்டியதிலிருந்து மற்ற சடங்குகள் செய்த போதும் கூட ஜெய் ஒரு வார்த்தை இவளிடம் பேசியிருக்கவில்லை, இவளது கண்களை கூட சந்தித்திருக்கவில்லை.

அன்று தான் இவனை மறுத்து விட்டதில் கடுங்கோவத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் மீண்டும் பழைய படி வார்த்தைகளால் செயல்களால் துன்புறுத்துவானோ என அச்சம் கொண்டாள், அப்படி இவன் நடந்து கொண்டால் தான் என்ன செய்ய வேண்டும், எப்படி சமாளிப்பேன் என அவளுள் பல கேள்விகள்.

ஜெய் மாடியிலிருந்த அவனுடைய அறைக்கு சென்று விட, பாட்டியின் அறையில் இருந்தாள் ஸ்ரீ. மஹதி அவளுடன் துணைக்கு இருந்தாள்.

ஜெய்யின் சித்தப்பா பொறுப்பாக எல்லாம் செய்தார், துளசியின் அண்ணன் குடும்பத்தினர் பெயருக்கு விஷேஷத்தில் கலந்து கொண்டதோடு சரி, மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கூட வராமல் அங்கிருந்தே அவர்களின் ஊருக்கு கிளம்பி விட்டனர்.

சகோதரர்களின் செயலில் துளசிதான் கவலை கொண்டார்.

பாட்டி “ரொம்ப நல்லது, இங்க வந்து ஏதாவது பேசி யார் மனசையும் நோகடிக்கிறதுக்கு பதிலா பட்டுக்காம போனது எவ்வளவோ பரவாயில்லை” என சொல்லி மருமகளை தேற்றினார்.

மாலை போல ஜெய்யின் சித்தப்பா கூட அவரது குடும்பத்தோடு கிளம்பி விட்டார். மஹதியை அழைத்துக் கொண்டு புறப்பட்ட அம்மாவை பார்த்த ஸ்ரீக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அவரை அணைத்துக் கொண்டு அழுதாள். இப்படி தன் மகள் அழுது பார்த்தே இராத ஜோதிக்கும் அழுகை வந்தது.

அம்மாவையும் அக்காவையும் இப்படி கண்ட மஹதிக்கு எப்படி இருக்கும்? அவளும் தேம்பினாள். பாட்டியை தேடிக் கொண்டு வந்தான் ஜெய். அவனை கண்டு விட்ட ஜோதியும் ஸ்ரீயும் அழுகையை நிறுத்தி விட்டு இயல்பாக நின்றனர், மஹதியால் அப்படி சட்டென அழுகையை நிறுத்த முடியவில்லை.

ஜெய்யிடம் சென்றவள் தேம்பிக் கொண்டே, “அக்காவை நல்லா பார்த்துப்பீங்கதானே?” எனக் கேட்டாள்.

அவன் அமைதியாக நிற்க, “மஹதி இங்க வா” என அதட்டினார் ஜோதி.