அத்தியாயம் 9
மாயா பேசிவிட்டு சென்றதை எண்ணி அபி அமர்ந்திருக்க மாயா கண்ணீருடன் சாஹியின் அருகில் அமர்ந்திருந்தாள். சாஹி எவ்வளவு கேட்டாலும் அவளிடம் பதிலில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள் அபியின் அறைக்கு செல்ல அவனும் அதேபோல் தான் அமர்ந்திருந்தான். அவள் வந்ததை கூட கவனியாது எங்கோ வெறித்துக்கொண்டிருந்தவனின் முன் சென்று அமர்ந்தவள் அவன் மேசைமேலிருந்த பைலை தட்டிவிட அந்த சத்தத்தில் திரும்பியவன் சாஹியை பார்த்து சிரிக்க முயற்சிக்க அதில் தோல்வியையே தழுவினான் அவன் ஹர்ஷா அல்லவே தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு இருப்பதற்கு.
அபியை கூர்மையாக நோக்கியவள் அவனிடம் “என்ன ஜி சண்டை உங்களுக்கும் மாயாக்கும்” என்று நேரடியாக கேட்டிட அவளிடம் மறைக்காமல் நடந்தவற்றை கூறினான். அவளுக்கு அவன் நிலையை கண்டு பாவமாக தான் இருந்தது என்னதான் மாயா வாய் திறந்து கூறவிட்டாலும் அவளுக்கு அபியின் மேல் விருப்பம் இருந்ததை இவள் அறியவாள் தானே. சாஹி “ஒரு உண்மையை சொல்லட்டுமா ஜி இப்போ தான் எனக்கும் இதை பத்தி தெரியும் தெரிஞ்ச உடனே நான் வீட்ல போன் போட்டு கத்திட்டு இருந்தேன் என் உலகம் ரொம்ப சின்னது ஆனா நீங்க அப்படி இல்லை எங்களுக்கும் உங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது அப்போ தான் அப்பா நீங்க இதை முன்னடியே சொன்னதா சொன்னாரு அப்போ கூட நான் அவர்கிட்ட இந்த சம்மந்தம் வேண்டாம்ன்னு தான் சொன்னேன் ஆனா அவங்க ஏதேதோ பேசி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க இது எதுக்கு நான் உங்ககிட்ட சொல்றேன்னா கல்யாணம் பிக்ஸ் பண்ண எனக்கே இப்டின்னா அவ அல்ரெடி பயந்த சுபாவம் இப்போ நீங்க இவ்ளோ பெரிய ஆளங்கனு தெரிஞ்ச உடனே அவ அப்படி ரியாக்ட் பண்ணிட்டா. கொஞ்ச நாள் பிரீயா விடுங்க எல்லாம் சரியாகிடும். ஆனா நீங்க இதுல ஸ்ட்ரோங்கா இருக்கணும்”
“இதெல்லாம் நடக்குமா”
“நடக்கும்” என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு சென்றாள்.
சமர் ஹர்ஷாவின் அறையில் வெடித்துக்கொண்டிருந்தான். சமர் “சார் அது எப்படி நீங்க ஒரு நோட்டீஸ் இல்லாம என்ன டிஸ்மிஸ் பண்ண முடியும். அதுவும் நீங்க ஒன்னு அனுப்புறீங்க நீங்க அனுப்புன டேன் மினிட்ஸ்ல உங்க தம்பி ஒன்னு அனுப்புறாரு” என்று அவன் கோபத்தை அடக்கிய குரலில் கூறிக்கொண்டிருக்க ஹர்ஷா எப்போதும் போல் அவன் கூறுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்த பின் “இங்க பாருங்க மிஸ்டர் சமர் உங்களோட கேரக்டர் சரியில்ல ஆன் தட் பேசிஸ் நான் உங்களை எந்த ஒரு நோட்டீஸ்ஸும் இல்லாம டிஸ்மிஸ் பண்ண முடியும்” என்றுவிட்டு கதவை நோக்கி கை காட்டினான். உள்ளுக்குள் அவனை கருவிக்கொண்டு அவன் செல்ல ஹர்ஷா தன் வேலைகளில் மூழ்கினான்.
ஹர்ஷா தான் முதலாளி என்று தெரிந்தும் சாஹி அதை காட்டிக்கொள்ளவில்லை. ஹர்ஷாவை எப்போதும் போல் சார் என்றே அழைத்தாள் . அங்கு வருவது ப்ரொஜெக்ட் செய்வது என்று நாட்களும் அதன் போக்கில் நகர்ந்துகொண்டு இருந்தது.
இன்னும் ஐந்து நாட்களே மீதமிருக்க புடவை எடுக்க சென்றிருந்தனர். யசோ வலுக்கட்டாயமாக ஹர்ஷாவை இழுத்துக்கொண்டு வந்திருந்தார். யசோதா ரேணு மற்றும் விமலா பட்டு புடவை செக்ஷனில் புடவைகளை பார்த்துக்கொண்டிருக்க சாஹி ஹர்ஷாவின் அருகில் நின்றுகொண்டிருந்தாள். ஹர்ஷா யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்க சாஹி ஜானுவின் காதுகளில் எதையோ ஓதினாள். அவள் கூறியதும் ஜானு மாயாவை அழைத்துக்கொண்டு டிசைனர் புடவைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள் அங்கு புடவைகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜான்வியின் அலைபேசி அலற “மாயா அக்கா நீங்க பார்த்துட்டு இருங்க நான் போன் பேசிட்டு வரேன்” என்று சென்றாள். மாயா புடவைகளை பார்த்துக்கொண்டிருக்க அபி அவளை நெருங்கி நிற்க கடையில்
சிறு நடைதூரமும் உன்னோடு நான் வந்தேன்
சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன்
அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய் அய்யய்யோ அய்யோ நானும் என்ன செய்வேன்
ஹோ எவ்வளவுதூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என்கண்மணியே
உன் விரலோடுவிரல் கோர்த்து
நான் வரவேண்டும் துணையே
ஒரு நொடியில்கடந்தேன் அன்பே இவ்விரவை
என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை
நான் உனதானேன் என எப்படி சொல்வேன் என் அன்பாலே உன்னை வெல்வேன் வெல்வேன்
இந்த பாட்டு ஓட ஆரம்பித்தது. மாயா கண்கள் கலங்க அதை மறைத்துக்கொண்டு அபியிடம் “உங்களுக்கு ஒருவாட்டி சொன்னா புரியாத சார் ப்ளீஸ் என் பின்னாடி சுத்தி உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க” என்று பெரியவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றாள். அபி முகம் வாடி நிற்க அங்கு வந்த ஜான்வி “விடுங்க ப்ரோ நம்ம வேற பிளான் போடுவோம் அக்கா எங்க போய்ட போறாங்க” என்று அவனை தேற்றினாள்.
ஹர்ஷா பேசிமுடித்துவிட்டு அலைபேசியை அணைக்க சாஹி அவளிடம் “இன்னும் அஞ்சு நாள்ல கல்யாணம் இப்போ கூட போன் தானா எனக்கு சேரி எடுக்க ஹெல்ப் பண்ணலாம்ல”
“இங்க பாரு சாஹித்யா எனக்கு என்னிக்குமே கல்யாணத்துல இன்டெர்ஸ்ட் கிடையாது. ஊரை பொறுத்தவரை வேணா இது கல்யாணமா இருக்கலாம் ஆனா என்னை பொறுத்தவரை இட்ஸ் அ விக்டரி” , அவள் புரியாமல் அவனை பார்க்க ஹர்ஷா ” என் வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க யாரோ தெரியாதவங்களை பண்றதுக்கு பதில் தெரிஞ்சவங்கள பண்ணலாம்னு தோணுச்சு அதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒகே சொன்னேன் சோ ஓவரா அட்வான்ட்டேஜ் எடுத்துக்காத” , தான் கூறிய வார்த்தைகள் தனக்கே திரும்பும் என்று அறியாதவன் எப்போதும் போல் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் கூறிவிட்டு அகன்றான். அவன் பேசியதை கேட்டு சிலையென நின்றாள் பாவையவள்.
ஐந்து நாட்கள் நொடியென நகர இதோ வந்துவிட்டது ஹர்ஷவர்தன் சாஹித்யாவின் திருமண நாள். நெருக்கமான உறவினர்கள் மட்டும் வந்திருக்க கம்பீரமாக வேஷ்டி சட்டையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக்கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். சிவப்பு நிற கூரை புடவையில் இடை வரை வளர்ந்திருந்த கூந்தலை தளர பின்னலிட்டு மல்லிகை சரத்தை சூடிக்கொண்டு துறு துறு விழிகளில் மையும் இயற்கையாக சிவந்திருந்த உதட்டில் உதட்டு சாயம் பூசி கழுத்தில் இரண்டே தங்க சங்கிலிகளும் காதில் காவியம் பேசும் ஜிமிக்கி கம்மலும் அணிந்து ஓவியப்பாவையாய் வந்தவளை பார்த்து தடுமாறி தான் போனான் ஆணவன்.
மத்தளம் கொட்ட நெருங்கிய உறவினர்களின் முன் பெண்ணவளின் கழுத்தில் மங்கள நாணை சூட்டி அவளை தன் வாழ்க்கை துணையாகிக்கொண்டான்.
பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி வங்கி கொண்டிருக்க அவர்களை குரூரமாக பார்த்துக்கொண்டிருந்தது இரு ஜோடி கண்கள்.
திருமணம் இனிதே முடிந்திட சாஹி வீட்டினர் மறுநாள் அவளை மறுவீட்டுக்கு அழைப்பதாக கூறிவிட்டு சென்றனர். மற்றவர் ஹர்ஷாவின் இல்லத்திற்கு சென்றனர். அவ்வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் செழுமை தெரிந்தது. ஹர்ஷாவின் உறவுமுறை பெண் ஒருவள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க ஹர்ஷா தன் அறைக்கு சென்றான். யசோதா சாஹியை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்கு சென்றார். அவளுக்கு மாற்று உடையை கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் உறங்கி ஓய்வெடுக்க சொல்லி சென்றார்.
உடையை மாற்றி கொன்டு வந்தவளுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் தாய் தந்தையின் ஆசைக்காக இதற்கு சம்மதித்தது தப்போ என்று அவள் தன்னை தானே நொந்துகொண்டாள். கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள்.
ஐந்தரை மணியளவில் கண்விழித்தவள் யசோதாவை தேடி செல்ல வரவேற்பறையில் தன் இளைய மகன் அபியுடன் பேசிக்கொண்டிருந்தார் (வாரிக்கொண்டிருந்தார்). அபி “அம்மா நம்பும்மா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்”
“நம்பிட்டேன் அடுத்த விஷயம்”
“மா என்ன கலாய்க்குரியா”
“அதுவே உனக்கு இப்போதான் தெரியுதா” என்று கூற சாஹி கிளுக்கென சிரித்தாள்.
யசோதா “வாடா” என்று தனக்கு பக்கத்தில் இருக்கையை காட்ட அதில் அமர்ந்தாள். யசோ “அபி கிச்சன்ல கமலா கிட்ட காபி போட சொன்னேன் போய் வாங்கிட்டு வா”
“நான் போறேன் ஆனா நான் லவ் பண்றேன் அதை நீங்க நம்பனும்”
“டேய் நம்புறேன் போட” என்று அவனை அனுப்பிவிட்டு சாஹியின் தலையை வருடிக்கொண்டே “சாஹித்யா ஹர்ஷா ரொம்ப நல்லவன் டா ஆனா கொஞ்சம் அழுத்தகாரான் அவனுக்கு பிடிச்சவங்களுக்காக உயிரையே கொடுப்பான்” என்று தன் மகனை பற்றி கூற தலையை ஆட்டி கேட்டுக்கொண்டிருந்தாள் இறுதியாக “சாஹி யாருக்காகவும் நீ பயப்பட வேண்டாம் சரியா” என்று அவர் கூறும்போதே அவள் கண்கள் கலங்கிவிட்டது. அவள் கண்களை துடைத்துவிட்டவர் அவளை அணைத்துக்கொண்டு சமாதானம் செய்தார்.