அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும் செங்கதிரோன். வெட்கத்தில் சிவந்து எட்டி வெளியே வரும் கிழக்கு முகத்தை ரசிக்கும் நேரத்தில்…….
அத்தெருவின் ஓர் வீட்டில் கந்த சஷ்டி கவச பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
“சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணியாட….”
சிவப்பு நிற பட்டு இதழ்கள் லேசாக அசையை, கண்மணிகள் கடவுளை பார்த்தவாறு பூஜை செய்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
இசை கேட்டவுடன் தாமரை ஓடி வந்து பார்த்து விட்டு, ஓர் அறைக்கு சென்று போர்த்தியிருந்த போர்வையை பிடித்து இழுத்தார்.
அடியேய், ஷரா எழுந்திரு….வைசு பூஜை செய்றா.
“ஒரு நாளாவது எழுந்து நீ கடவுளை வழிபட வர்றீயா?” வசை பாடிக் கொண்டே அக்சராவை விழிக்க வைக்க முயன்று கொண்டிருந்தார் தாமரைச்செல்வி.
“தாமர, இதோ நான் வந்துட்டேன்” குளியலறையிலிருந்து டாப்பை மட்டும் அணிந்து தலையில் துவாலையால் உச்சிக் கொண்டையிட்டு கண் சிமிட்டினாள் சுப்ரியா.
“என்னடி இது? இப்படி அரையும் குறையுமா வந்து நிக்குற?” அக்கா பூஜையை ஆரம்பிச்சுட்டா..
“ஆமா, இவ தான் உலகத்துல்லே பூஜை பண்றா பாரு. பேச முடியாதுன்னு காலங்காலத்துல்லே டேப்ரிக்கார்டரை போட்டு விட்டு ஆராத்தி காட்டியே உன்னை மயக்கி வச்சுருக்கா” அக்சரா சலிப்புடன் போர்வையை இழுத்து மேலும் போர்த்தினாள்.
அடியேய்….விரைந்து எழுந்து அக்சரா சுப்ரியாவை அடிக்க வந்தாள்.
“ஒரே வயித்துல்ல புறந்துட்டு என்னடி பேச்சு இது?” தாமரை அக்சரா தலையில் குட்டு வைத்தார்.
“தாமர, உனக்கு உன் மூத்த பிள்ளை மட்டும் தான கண்ணுக்கு தெரியுவா? வாய் பேச முடியாதுன்னு எப்பொழுதும் அவளுக்கும் தான் எல்லாமே!” சிடுசிடுப்புடன் வைஷ்ணவியை அர்ச்சித்துக் கொண்டே அக்சரா எழுந்து குளியலறை பக்கம் சென்றாள்.
“பேச முடியாதனால்ல அக்காவுக்கு இந்த பாசம், மரியாதை இல்லை. வைசு அக்கா எனக்கு இன்னொரு அம்மா. அதை உணர்ந்தவர்களுக்கு தான் புரியும்” சுப்ரியா வைஷ்ணவிக்கு ஆதரவாக பேசினாள்.
“போதும்….உன் அக்கா அம்மா புராணம்” அக்சரா சினமுடன் சொல்லி குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள விடு சுபா. நீ உன்னோட ஆடையை முடி. தயாராகி வா. அம்மா முன் போகிறேன்.
அம்மா, செடியில் உள்ள பூக்களை பறிச்சிட்டு போங்களேன். நான் சீக்கிரம் வந்துடுறேன்.
“சரிடி, சீக்கிரம் வந்துரு” அவர் சென்றார்.
பெருமூச்சுடன் குளியலறையை பார்த்து விட்டு, சுப்ரியா தன் ஆடையை அணிந்து தயாராகி பூஜை அறைக்கு சென்றாள்.
வைஷ்ணவி பூஜையை முடித்து ஆராத்தியை தாமரைக்கும், சுப்ரியாவிற்கும் காட்ட, தாமரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தாமர, போதும். உன் மகாலட்சுமியை அப்புறம் சைட் அடிக்கலாம்.
புடவையில் மங்கலகரமாக நெற்றியில் விபூதி, பொட்டு வைத்து, கூந்தலை பின்னி அவள் சூடிய மல்லிகையில் அழகான மங்கையாக இருக்கும் வைஷ்ணவியால் பேச முடியாது. சமிஞ்சை மொழி தான். ஆனால் அதை கூறி யாரும் கேலி கூறினால் ஏதும் பேசாமல் அவர்களை கடந்து சென்று விடுவாள்.
பொறுமை, அழகு, அடக்கம், கள்ளம்கபடமில்லாத அழகு முகம். எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். படிப்பை முடித்து விட்டு வீட்டை கவனித்துக் கொள்கிறாள்.
சட்டை கால் சாராயத்துடன், தலையை விரித்து அழகான காந்த கண்ணில் மையிட்டு மேலும் சில ஒப்பனைகளுடன் இருக்கும் சுப்ரியா எப்போதும் “அக்கா..அக்கா..” என வைசு பின் குட்டிப் பூனை போல் சுற்றுவாள். வைசு தான் தாமரையை விட எப்போதும் சுபாவை கவனித்துக் கொள்வான். அதனால் அவளுக்கு வைசு தான் இரண்டாவது தாய்.
யார் வைசுவை பற்றி பேசினாலும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு சென்று விடுவாள். பதினொன்றாம் வகுப்பை முடித்து பன்னிரண்டில் காலடி எடுத்து வைக்க காத்திருக்கிறாள்.
மாடன் ஆடையில் எப்போதும் வலம் வரும் அக்சரா. வைசு, சுபாவிற்கு இடைப்பட்டவள். அவளுக்கு வைஷ்ணவியை சுத்தமாக பிடிக்காது. ஏனெனில் வைசுவின் மென்மையான குணமே அனைவரையும் கவர்ந்திழுக்கும். அதனால் அக்சராவை யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள்.
திமிறும் ஏளனமும் அவளுடைய பெரிய சொத்து. கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். நண்பர்கள் அதிகம். ஆனால் அவள் வீடு வரை வர விட மாட்டாள்.
சின்னவள் அவள் நண்பர்கள் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவாள். குறும்பும் தைரியமும் மிக்கவள். வெளிப்படையாக அனைத்தையும் பேசுபவள். வைசுவிற்காக தான் சின்ன அக்காவிடம் மரியாதையுடன் நடந்து கொள்வாள் இல்லை பல்லு எகிறி இருக்கும் வைசுவை பேசும் அக்சராவிற்கு.
தாமரைக்கு விபூதியை வைசு வைத்து விட, “என் அழகு ராசாத்தி” தாமரை வைஷ்ணவிக்கு முத்தமிட சென்றார்.
விரைந்து அவரை இழுத்த சுப்ரியா, “என்ன தைரியம் தாமர உனக்கு? என் முன்னாடி வச்சு என் அக்காவை கட்டிப்பிடிக்கிற?” வைஷ்ணவி முன் வந்து முகத்தை காட்டினாள். ஆராத்தி தீபத்தை வைசு தொட்டு சுப்ரியாவின் கண்ணில் ஒற்ற வைத்து, விபூதி குங்குமம் இட்டு அவளுக்கு இனிப்பை கொடுத்தாள்.
“அக்கா, இன்று எனக்கு ரிசெல்ட். நீயும் என்னோட பள்ளிக்கு வரணும்” சுப்ரியா வைஷ்ணவியை பள்ளிக்கு அழைத்தாள்.
“அம்மாவுடன் போ” அவளது சைன் மொழியில் வைசு சொல்ல, “கண்ணம்மா. இன்று கம்பெனியில ஓனர் விசிட் பண்ண வர்றார். என்னால போக முடியாது. என்னை டிராப் பண்ணீட்டு அவளோட போயிட்டு வா” தாமரை வைஷ்ணவியிடம் சொன்னார்.
“யாரு சீன் போடுறது? நீயா? அக்காவா?” எகிறிக் கொண்டு சென்றாள் சுப்ரியா.
“ஆமா, இவ தான் உங்களை மயக்கி வச்சிருக்காளே!”
“ச்சீ..அப்படி சொல்லாத. அப்படி என்ன மயக்கினாள்? நீ இந்த கருமாந்திர ஆடையில்லாம் யாரை மயக்க உடுத்துற?” காலையிலிருந்து பொறுமை காத்த தாமரைச்செல்வி சீறினார்.
“யாரும் என்னை பார்த்து மயங்கி இருந்தால் நான் எதுக்கு இதெல்லாம் அணியப் போறேன்?” முணுமுணுத்தாள்.
“என்னடி சொன்ன?” தாமரை அக்சரா கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
“நம்ம குடும்பத்து பொண்ணுங்க தெருவுல நடந்தா எல்லாரும் தெய்வமா கையெடுத்து கும்பிடுவாங்க. ஆனால் நீ ச்சே…மத்தவங்க உன்னை பார்க்க இப்படி கேவலமான ஆடையெல்லாம் அணியிறதா சொல்ற?” சீற்றமுடன் ஆராத்தி தட்டை பூஜையறைக்குள் வைத்தார்.
“குடும்பமாம் குடும்பம்? என்ன குடும்பம்? யார் குடும்பம்? நம் குடும்பத்தினர்கள் எத்தனை பேர்? யாரு..சொல்லு? அப்பா இல்லாதவன்னு சுற்றியுள்ளவர்கள் சொல்லும் போது உள்ளம் எப்படி வலிக்கும் தெரியுமா? உன்னோட பெயரை கூட நீ மாத்தி தான் குடுத்திருக்க? அம்மா..தாமரைச் செல்வின்னு எங்கேயும் இல்லை. நீ அம்மா தானா?” பட்டென வார்த்தை உதிர்த்தாள் அக்சரா.
மனமுடைந்து அமர்ந்தார் தாமரைச் செல்வி.
சினமுடன் வைஷ்ணவி அக்சராவிடம் வந்து விழிகளை விரித்து கைகளை அசைத்து “நம்ம அம்மா இவங்க தான். சூழ்நிலை நமக்கு சரியில்லாததால் இவங்க பெயரை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இவங்க இல்லைன்னா நாம இல்லை” கடுமையை முகத்தில் காட்டி விரலை நீட்டி எச்சரித்தாள்.
வைஷ்ணவி கன்னத்தில் கையை வைக்க, அக்சராவும் அவள் கன்னத்தில் கை வைத்து சினமுடன், “அவளுக்காக நீ என்னை அடிச்சிட்ட தாமர” அக்சரா வைஷ்ணவியை எறித்து விடுவது போல…..
“உன்னால எனக்கு இப்ப வரை எதுவும் கிடைக்கலை. உன்னிடமிருந்து ஒரு நாள் நான் எல்லாவற்றையும் பறிப்பேன்” ஆக்ரோசமுடன் டீப்பாயை ஓங்கி எத்தி தள்ளி விட்டு கல்லூரிக்கு சென்றாள் அக்சரா.
அக்சரா சென்ற பின் தான் பிடித்திருந்த சுப்ரியா கையை வைஷ்ணவி விட்டாள். அக்சரா வைசுவை அடிக்கும் போதே கொதித்த சுப்ரியா கையை இறுக பற்றி இருந்தாள் வைஷ்ணவி.
அக்சரா சென்ற பின் மூவரும் தயாராகி வந்தனர். காஃபி தொழிற்சாலை ஒன்றின் வெளியே வண்டியை வைசு நிறுத்த, தாமரை கீழே இறங்கினார். அவர்களை கடந்து சென்ற கார் நின்றது. அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
வைசு அவளது சைன் மொழியிலே தாமரையிடம் கையசைத்து பேசினாள். காரில் இருந்தவனின் இதழ்கள் விரிந்தது.
தாமரை கண்கலங்க, “என்னால தான கண்ணம்மா அவ உன்னை அடிச்சிட்டா?” வைசுவின் பட்டு கன்னத்தை வருடினார்.
தாமரை கண்ணீரை துடைத்து விட்டு அவருக்கு முத்தமிட்ட வைஷ்ணவி, “நம்ம ஷரா தானம்மா. நீங்க வொர்க் முடியவும் கால் பண்ணுங்க வாரேன்” உதட்டையும் கையையும் அசைத்து பேசினாள்.
சுப்ரியா கீழிறங்கி வந்து அவர் காதை கடித்தார்.
“என்ன பேசுறீங்க?” விழிகளை சுருக்கி அழகாக வைஷ்ணவி கேட்க, அக்கா அது ரகசியம்..
ஓ! தலையை ஆட்டி உதட்டை தொங்க விட்டாள்.
“சோ..க்யூட் அக்கா” சுப்ரியா வைஷ்ணவிக்கு முத்தம் கொடுக்க வர அவள் உதட்டை தள்ளிய தாமரை..”கொஞ்சாம இருவரும் பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு பத்திரமா வீட்டுக்கு போங்க. எங்கேயும் சுத்தக் கூடாது. என்ன குட்டி புரியுதா?” வேண்டுமென்றே பேசினார்.
காலை தரையில் உதைத்து, “குட்டி சொல்லாத தாமர. எனக்கு பிடிக்காது” கொஞ்சி பேசிய தன் மகளை அணைத்து முத்தமிட்ட தாமரை, “அக்கா சொல்றதை கேட்டு நடந்துக்கோ. சேட்டை செய்யாத” பிரியா விடை கொடுப்பது போல பேச, “என்னாச்சு?” வைஷ்ணவி கையசைத்து கேட்க, தெரியலடா படபடன்னு இருக்கு..
“என்ன?” சுப்ரியா பதறினாள்.
ஒன்றுமில்லை. கவனமா இருங்க. ஏதோ தடுமாற்றம்..ஏதோ தோணுது..எனக்கு தெரியல..
வண்டியை நிறுத்தி அவரிடம் ஓடி வந்து வைஷ்ணவி அவரை அணைக்க, “நேரமாகுது. நீங்க கிளம்புங்கடா” இருவரிடமும் சொல்லி அவர் முன் செல்ல, சிந்தனையுடன் வைஷ்ணவி அவரை பார்த்தாள்.
“தாமர, டோன்ட் வெர்ரி. அந்த ஷராவை நாம சேர்ந்து கவனிச்சுக்கலாம்” கையை ஆட்டி கத்தினாள் சுப்ரியா. அவர் திரும்பாமல் தலையசைக்க, வைஷ்ணவி கை தட்ட தாமரை திரும்பி பார்த்தார்.
இதழ்களை குவித்து தன் இரு உள்ளங்கையிலும் முத்தம் வைத்த வைஷ்ணவி அதனை அள்ளி தெளித்தாள் தாமரைக்காக. அவர் வாங்கிக் கொண்டு திருப்பி தன் பிள்ளைகளுக்கு கொடுத்து சென்று விட்டார்.
ஆனால் காரில் இருந்தவன் பார்வை முழுவதும் வைசுவிடமே இருந்திருக்க, அவள் செய்கையில் அவன் நாவால் உதட்டை ஈரமாக்கினான்.
வைசுவும், சுப்ரியாவும் பள்ளி சென்று சுப்ரியாவின் நண்பர்களை சந்தித்து விட்டு, பள்ளியில் முதலாவதாக வந்த தன் தங்கையை எண்ணி பெருமையுடன் வைஷ்ணவி அவளை ஓர் ஹோட்டலுக்கு மதிய உணவுக்காக அழைத்து சென்றாள்.
இருவரும் சாப்பிட்டு வெளியே வந்தனர். வண்டியில் சென்று கொண்டிருந்த இவர்கள் முன் உடலில் பல இரத்தக்காயங்களுடன் மூச்சிறைக்க வந்து நின்றார் தாமரைச் செல்வி..
“அம்மா” இருவரும் பதற, அவர்கள் நடு வீதியில் நின்று கொண்டிருந்தனர்.
அந்நேரம் வந்த கார் ஒன்று அவர்களை இடித்து தள்ளியது. வண்டியோட வைசுவும் சுப்ரியாவும் கீழே விழுந்தனர். தாமரைச் செல்வி இருவர் கண் முன்னும் தூக்கி எறியப்பட்டார்.
“அம்மா” சுப்ரியா கத்த, பேச முடியாத நம் வைஷ்ணவி கதறி துடித்தாள். இருவரும் தாமரையிடம் ஓடினார்கள்.
தலையில் இரத்தமுடன் தன் பிள்ளைகள் கையை பிடித்து, “யாருக்கு பயந்து நம்ம ஊருக்கு போகாமல் இருக்கோமோ? அவன் நம்மை பார்த்துட்டான். சீக்கிரம் ஷராவையும் அழிச்சிட்டு போயிருங்க” அவர் பேச, அங்கே வந்த நால்வர் பெண்களை கடத்தி சென்றனர்.
தாமரைச் செல்வியோ தன் பிள்ளைகளுக்கு ஆபத்து. “என்னுயிர் போகக் கூடாது உயிரை காப்பாற்ற யாரேனும் வருவார்களா?” காத்திருந்தார். ஆனால் அவருக்கான நேரம் குறைவாக இருந்தது.
கடத்திய இருவரையும் பெரிய அழகான பங்களாவிற்கு இழுத்து சென்றனர். இருவரும் அழுது கொண்டே இருந்தனர். வைசுவோ தன்னிலையை எண்ணாது எப்படியாவது சுப்ரியாவை காப்பாற்ற எண்ணினாள்.
அவர்கள் சென்ற இருட்டு அறையின் நடுவே வெளிச்சம் தெரிந்தது. ஏற்கனவே ஒரு பொண்ணையும் கட்டி வச்சிருந்தாங்க. இருவரும் அங்கே சுருண்டு வாயில் இரத்தமுடன் கிடந்த அக்சராவை பார்த்து அதிர்ந்தனர்.
அய்யோ அக்கா! பிடித்திருந்தவன் கையை கடித்து விட்டு அக்சராவிடம் ஓடினாள் சுப்ரியா.
“என்னடி நடக்குது?” அக்சரா உளறியவாறு அவ்விடத்தை கண்ணை திறந்து பார்த்தாள்.
அப்பொழுது எல்லாருக்கும் ஒரு குரல் கேட்டது.
“அழகு தேவதைகளா! உங்க அக்காவை இங்கே விட்டு போனால் நீங்க தப்பிக்கலாம். உங்களை ஏதும் யாரும் செய்ய மாட்டாங்க” ஆணின் குரல் கனீரென ஒலித்தது.
“முடியாது” சுப்ரியா கத்த, “நான் போறேன்” அக்சரா சொல்லவும் சுப்ரியா அவளை அடித்து, “உனக்கு என்ன பிரச்சனை? அவன் என்ன சொல்றான்? வைசு அக்காவை மொத்தமா அவனிடம் விட்டு போகச் சொல்றான். வீட்டுக்கு போக முடியாது. நம்ம தாமரையை இவன் கொன்னுட்டான்” வெறியுடன் கத்தினாள்.
“என்னடி சொல்ற?” அக்சராதிகைத்து சுப்ரியா தோள்ப்பட்டையை பிடித்து அழுத்தி கேட்க, கதறி அழுத சுப்ரியா.. “ஆமா, அம்மாவை கொன்னுட்டானுக. எங்க கண்ணு முன்னாடி அம்மா செத்துட்டாங்க. எவ்வளவு இரத்தம் தெரியுமா?” சுப்ரியா அவளது கையிலிருந்த இரத்தத்தை அக்சரா மீது தடவினாள்.
பதறி விலகி அவள் தடவிய இரத்தத்தை தொட்டு பார்த்து.. “அம்மா” வேதனையுடன் கத்தினாள் அக்சரா. மூவரும் அழுது கொண்டிருந்தனர்.
நிமிர்ந்த சுப்ரியா, “நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? என்னோட அம்மா எனக்கு வேணும்” சீற்றமுடன் கத்தினாள்.
வைஷ்ணவியை பிடித்திருந்தவர்கள் அவளை விட, அவள் ஓடிச் சென்று சுப்ரியா வாயை அடைத்து அவளது சைன் மொழியில் பேசினாள்.
இவங்க போயிடுவாங்க. நான் இங்கேயே இருக்கேன்..
“இல்ல..இல்ல..தாமரையை போல எங்களால உன்னையும் இழக்க முடியாது” சுப்ரியா சொல்ல, அக்சரா அங்கிருந்த சிசிடிவியை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பயங்கரமாக சிரித்தான்.
“இன்று விருந்துக்கு வைசு. நாளைக்கு நீங்க..” என்று அவன் கேசுவலாக சொல்ல, வைஷ்ணவி தன் தங்கைகளை இழுத்து வெளியே தள்ளினாள்.
இம்முறை அக்சரா உள்ளே சினமுடன் வந்து வைஷ்ணவியை முறைத்து, சிசிடிவியை பார்த்து “உடம்பு தான் வேணும்ன்னா எடுத்துக்கோ. முடிந்தவுடன் விட்ரு” என்றாள். வைசுவும் சுப்ரியாவும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.
“இல்லையே! உடம்பு மட்டும் வேணும்ன்னா வைசுவை நான் பார்த்த நிமிடமே தூக்கி இருப்பேனே! எனக்கு உங்களது உயிரும் வேண்டுமே! உங்க வீட்ல யாரும் உயிரோட இருக்கக் கூடாது. ஆனால் இருக்கீங்க.. முதல்ல உங்களை முடிக்கணும். பின் அவங்கள பார்த்துக்கிறேன்” அவன் கர்ஜித்தான்.
என்னோட படுக்கையை பகிர்ந்துக்கோ. நான் எல்லாவற்றையும் சொல்கிறேன்.
“நான் வாரேன். ஒன்று விடாமல் சொல்லு” அக்சரா சொல்ல, “சரா சும்மா இரு” வைஷ்ணவி அவளை மறித்து முன் நின்றாள்.
எனக்கு நீ வேண்டாம். வைசு தான் வேணும்..
“வைசு…வைசு…வைசு..உனக்கு கூட அவளை பிடிச்சிருக்கா?” அக்சரா கத்தினாள்.
அவன் சிரிப்பு பெரியதானது.
“நீ அந்த குடும்பத்துல்ல தவறி புறந்துட்டன்னு நினைக்கிறேன். வைசுவை உடன் பிறந்தவளுக்கே பிடிக்கலை என்பது ஆச்சர்யமா இருக்கு” அவன் மேலும் சிரித்தான்.
“என்ன செய்யப் போறீங்க? வைசுவை விட்டு போகப் போறீங்களா இல்லை நீங்களும் இருக்கப் போறீங்களா?” அவன் கேட்க, சுப்ரியா பக்கமிருந்த மது பாட்டில் ஒன்றை சிசிடிவி கேமிராவில் தூக்கி எறிந்தாள்.
“டேமிட்” அவன் கத்த, அங்கிருந்தவர்களுடன் போராடி பெண்கள் வெளியே வந்து ஓரிடத்தில் மறைந்திருந்தனர். அக்சரா, சுப்ரியா கராத்தே போட்டியில் முதன்மை வகித்தவர்கள். தாமரை வைசுவின் பாதுகாப்பிற்காகவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் கற்க வைத்திருந்தார்.
அங்கே வந்த காரிலிருந்து ஒருவன் இறங்கி உள்ளே சென்றான்.
“இது தான் சரியான நேரம்” என்று மூவரும் தப்பி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரவர்களுக்கு தேவையான ஆடை, உணவை மட்டும் எடுத்து பத்தே நிமிடத்தில் சென்று விட்டனர்.
அவன் ஆட்கள் அவர்கள் வீட்டிற்கு வந்தும் பெண்களை கண்டறிய முடியவில்லை. அவனோ சீற்றமுடன் “ஐ அம் கில்லிங்” அவ்விடமே அதிரும் வண்ணம் கர்ஜித்தான்.