அத்தியாயம் 6 

“யார் போன்ல? என்ன பதட்டமாக இருக்க போல” மகனிடம் பொறுப்புகளை கொடுத்த பின் கம்பனியை பற்றி விசாரிக்காவிட்டாலும், மகனின் முகத்தை பார்த்தே எதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டு கண்டும் காணாதது போல் விசாரிப்பாள் சாந்தி தேவி.

கம்பனியில் பிரச்சினை என்றால் “சின்ன பிரச்சினை தான் நான் பார்த்துகிறேன்” என்பான் ஆளவந்தான்.

தந்தையின் வழிகாட்டலும் இல்லாமல் தனியாக போராடும் மகனை பார்க்கையில் அன்னையின் உள்ளத்தில் அன்பு பொங்கும்.  மகனின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்பது போல் உணவு தயாரிப்பவள், இரவில் வேலை பார்த்தாலோ, அலைபேசியில் உரையாடுவதை பார்த்தாலோ குழந்தையை அதட்டுவது போல் அதட்டி தூங்க சொல்வாள்.

“நான் என்ன குழந்தையா?” அன்னையை கடிந்தவாறு சொல்வதை செய்வான் ஆளவந்தான்.

விக்ரமின் அன்னை பிரிந்து சென்ற பிறகு ஆளவந்தான் உடைந்து தான் போனான். சாந்தி தேவியின் வாய் சத்தத்தால் தான் ஆளவந்தான் நடமாடிக் கொண்டிருக்கின்றான்.

இன்றும் வீட்டுக்கு வந்தவன் அலைபேசியில் கத்திக் கொண்டிருக்க, அதட்டலாகவே என்ன பிரச்சினை என்று கேட்டிருந்தாள் சாந்தி தேவி.

“எனக்கு பிரச்சினையே நான் பெத்துவச்சதுங்களாலத்தான். ஒருத்தன் என்னடான்னா உள்ளூருல இருந்துகிட்டு உசுர வாங்குறான். அவனையே என்னால சமாளிக்க முடியல. இதுல வெளிநாட்டுக்கு போனவ சொல்லாம கொள்ளாம ஊருக்கு வந்திருக்கா. வந்ததும் வராததுமாக அண்ணனை பார்க்க போய் இருக்கா. வீட்டுக்கு வரணும் என்ற எண்ணம் அவனுக்கும் இல்ல. இவளுக்கும் இல்ல” கோபமாக கத்தலானான்.

“உன் பொண்டாட்டி உன்ன விட்டுட்டு போனா… அவ போனான்னு அவளது தேடி நீ வீட்டை விட்டு போன. அப்பொறம் உன் பையன். இப்போ பொண்ணா? தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்று சும்மாவா சொன்னாங்க” விக்ரமை பேசினால் சாந்தி தேவிக்கு தான் கோபம் வருமே ஆளவந்தானுக்கு மேல் கத்தினாள்.

அன்னையின் சத்தம் கேட்டு கொஞ்சம் அடங்கிய ஆளவந்தான் “பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்காளா? அவன் தான் கம்பனியை பார்த்துக்க மாட்டேன் என்று சொல்லுறான்னா, இவளும் வந்த உடனே அவனைப் பார்க்க போய் இருக்கா. நீயாச்சும் அவளை அதட்டி வைக்க வேணாமா? பேரப்பசங்களை செல்லம் கொஞ்சு. என்ன அதட்டு” வயதான காலத்தில் தனக்கு மட்டும் ஏன் இந்த சோதனையென்று நொந்தவனாகத்தான் கூறினான்.  

“ஆமா மோகனா ஊருக்கு வந்தத உன்கிட்ட யார் சொன்னா?” பேத்தி என்கிட்ட கூட சொல்லையே என்ற ஆதங்கம் தான் சாந்தி தேவியின் குரலில் இருந்தது.

“எல்லாம் சொல்ல வேண்டியவங்க சொன்னாங்க” மென்று முழுங்கலானான்.

“என்ன வேவு பாக்குறியான்னு கேட்டுட்டு, நீ இருபத்தி நாலு மணிநேரமும் கண்கொத்திப் பாம்பா விக்ரம பார்த்துகிட்டு இருக்க” மகனை கிண்டல் செய்தவாறே முறைத்தாள்.

“ஆமா ஏதாவது தப்பா போச்சுன்னா, பசங்கள பார்க்க மாட்டியான்னு நீ என் தலையை இல்ல உருட்டுற?” கொஞ்சம் தணிந்தான் ஆளவந்தான்.

“ஆமா… நீ எனக்கு பயந்தவன் பாரு. எங்க உன் பொண்டாட்டி வந்து கேட்டா என்ன சொல்லுறதுன்னு பம்முற. சரியான பொண்டாட்டிதாசன். அவ எதுக்கு விட்டுட்டு போனா? ஏன் போனான்னு கூட தெரியல” மகனை திட்டியவாறே மோகனாவை அழைத்தாள் சாந்தி தேவி.

அன்னை மனைவியை பற்றி பேசும் பொழுதெல்லாம் நெஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.

சாந்தி ப்ரியா. பெயருக்கு ஏற்றது போல் அமைதியாகவும், அன்பாகவும் இருப்பாள். அதீத கடவுள் பக்தி கொண்டவள். யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதென்று யோசித்து யோசித்து பேசும் ரகம்.

தூரத்து சொந்தமான சாந்தி ப்ரியாவை பெண் பார்க்க சென்ற பொழுதே ஆளவந்தானுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

“அட உனக்கும் சாந்தி தான் பெயரா? என் பெயரும் சாந்தி தான்” மகனின் முகத்தில் இருக்கும் ஆனந்தத்தை பார்த்து தனது சம்மதத்தை சொல்வது எவ்வாறு என்று தெரியாமல் உளறி வைத்தாள் சாந்தி தேவி.

“உன் பெயர் இருந்தா மட்டும் போதும். உன்ன போல இல்லாம இருந்தாலே போதும்” அன்னையை பார்த்து குறும்பாக சிரித்தான் ஆளவந்தான்.

ஆளவந்தான் மற்றும் சாந்தி ப்ரியாவின் இல்லற வாழ்க்கை சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது. விக்ரம், மோகனா என்று இரண்டு குழந்தைகள். கணவன் குழந்தைகள் தான் அவள் உலகம். வீட்டை தாண்டினால் கோவில்.  இல்லத்தரசியாக ப்ரியா தொழிலில் எந்த தலையீடும் செய்ததே இல்லை.

கம்பனியில் ஏற்பட்ட பிரச்சினையால் பாரதியின் தந்தை இறந்து போனதால் பாரதியின் வாழ்க்கை மட்டும் தடம் மாறவில்லை. ஆளவந்தானின் வாழ்க்கையிலிருந்தே சாந்தி ப்ரியா விலகி சென்றிருந்தாள்.

பாரதியின் அன்னை சுப்பு லட்சுமி ஆளவந்தானின் கம்பனிக்கு முன் நின்று போராட்டம் செய்தவள் தனது கணவனின் மரணத்துக்கு நீதி கிடைக்காததால், ஆளவந்தானின் வீட்டுக்கு வந்து மண்ணை வாரி தூற்றி சாபமிட்டிருக்க அதை பார்த்து அதிர்ந்து நின்றாள் சாந்தி ப்ரியா.

கம்பனியில் எதோ பிரச்சினை நடக்கிறது என்று கணவனும், மாமியார் பேசும் பொழுது காதில் விழுந்தாலும் சாந்தி ப்ரியா அதில் தலையிடவுமில்லை. கணவனிடமோ, மாமியாரிடமோ எதையும் கேட்கவுமில்லை.

சுப்பு லட்சுமியின் சோர்ந்த தோற்றம், மனம் நொந்து சாபமிட்டது என்று சாந்தி ப்ரியாவின் கண்ணுக்குள் வந்து இம்சிக்களானது.

என்றுமே தனது தேவைக்கு கூட கணவனிடம் அதிகம் பேசாதவள் முதன் முறையாக சுப்பு லட்சுமிக்காக பேசினாள். 

“இங்க பாரு சாந்தி உனக்கு கம்பனில நடக்குற விசயத்த பத்தி ஒரு மண்ணும் தெரியல. யாரோ ஒரு பொம்பள வந்து வீட்டு வாசல்ல கத்தினா… அடிச்சி துரத்தம்மா. அந்த பொம்பளைக்கு பாவம் பாக்குற” குரலை உயர்த்தினான் ஆளவந்தான்.

“ஏங்க ஒரு உயிர் போய் இருக்கு. என்ன பேசுறீங்க?” கண்கள் கலங்க விம்மினாள் ப்ரியா,

“ஆக்சிடன்ட் எல்லா இடத்திலையும் நடக்கும். இதுவும் ஒரு ஆக்சிடன்ட் தான். அது தெரியாம அந்தம்மா துள்ளுது என்றா. நீயும்….” சுப்பு லட்சுமி பணம் வாங்க மறுத்தது தெரிந்தும் “பணத்தை பார்த்தா அந்தம்மா வாய மூடிடும்” தனது தவறை மறைத்து வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“நீங்க என்ன சொன்னாலும் போன உயிர் வருமா?” சுப்பு லட்சுமியின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து, உள்ளம் உருகி கண்ணீரோடு கூறினாள் மென்மையான இதயம் கொண்ட ப்ரியா.

மனைவியின் மீது அதீத அன்பு வைத்தருந்தாலும், அவள் மனதை புரிந்துகொள்ளாமல் தான் தான் சரி என்று அவளிடம் வாதாட ஆரம்பித்தான் ஆளவந்தான்.

கணவனுக்கு சொல்லி புரிய வைக்க முயன்ற ப்ரியா கெஞ்சி கதறினாள். ஆனால் ஆளவந்தான் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.

சுப்பு லட்சுமியின் தோற்றமும், சாபமும் அடிக்கடி ஞாபகத்தில் வந்து உருகுலைந்தாள் ப்ரியா. குழந்தைகள் விளையாடும் பொழுது விழுந்தால் கூட சுப்பு லட்சுமியின் சாபம் என்று பினாத்தியவள் கடவுளிடம் தஞ்சமடைந்தாள்.

மனைவியின் மனநிலை அறியாமல் ஆளவந்தான் கம்பனியில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க ஓடிக்கொண்டிருந்தான்.

ரகுராமின் தந்தை ஆதியப்பன் சிறை சென்ற பின் ஆளவந்தானின் கம்பனிக்கு வந்த சுப்பு லட்சுமி ஆளவந்தானின் மேல் கல்லெறிந்து தன் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தாள்.

கல்லடிபட்டு வீடு வந்த கணவனை பார்த்து மிரண்ட சாந்தி ப்ரியாவின் கண்களுக்குள் சுப்பு லட்சுமி தான் வந்து நின்றாள்.

தன் குடும்பத்திற்கு அழிவு காலம் ஆரம்பித்து விட்டது என்று அச்சத்தோடு இருக்கும் பொழுது தான் ஏழு வயதான விக்ரம் கடத்தப்பட்டான்.

முற்றாக உடைந்து போன சாந்தி ப்ரியா கோவிலே கதியென்று ஆனதோடு சுப்பு லட்சுமியிடம் மனதார மன்னிப்பு கேட்கலானாள்.

விக்ரம் வீடு வந்த பின் கணவனிடம் வந்தவள் “நீங்க அந்த பொண்ணுக்கு செஞ்ச பாவத்தால உங்களால உங்களுக்கும், நம்ம பசங்களும் ஆபத்து வந்துகிட்டே இருக்கு”

“ஏய் என்ன உளறுற?” இப்பொழுது தான் எல்லா பிரச்சினையும் ஓய்ந்து அமர்ந்திருந்தான் ஆளவந்தான். மனைவி இப்படி பேசியதும் அடித்து விட்டான்.

சுப்பு லட்சுமியின் சாபத்தால் தான் தன்னிடம் அன்பாக இருந்த கணவன் கோபம் கொள்கிறான் என்று நினைத்து “ஒரு பொண்ணு சாபம் விட்டதுக்கே நமக்கு இந்த நிலமையென்றால் நீங்க இன்னும் என்னென்ன பாவம் செஞ்சிருக்குறீங்களோ தெரியல. நீங்க பண்ண பாவத்துக்கு நம்ம பசங்க அனுபவிக்கணுமா? நான் பிராயச்சித்தம் தேடுறேன்” என்று வீட்டை விட்டு வெளியேறினாள். 

அன்று சென்றவள் எங்கே இருக்கின்றாள். என்ன செய்கின்றாள் என்று தெரியாமல் மனைவியை தேடிப்பார்த்து சோர்ந்து விட்டான் ஆளவந்தான். 

சுப்பு லட்சுமி வீடு வந்து சாபம் கொடுத்த அன்று சாந்தி தேவி கோவிலுக்கு சென்றிருந்ததாள். வேலையாட்கள் சாந்தி தேவியின் காதில் நடந்த சம்பவத்தை போட்டிருக்க, மகன் வந்தவுடன் கேட்டாள், வழக்கம்போல் “கம்பெனி பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றதும்

“கம்பனி பிரச்சனைய கம்பனியிலேயே பார்த்துக்க வீடு வரைக்கும் கொண்டு வராதே” என்றதோடு  விட்டு விட்டாள்.

சுப்பு லட்சுமி வந்து, சென்ற பின் சாந்தி ப்ரியா, பூஜையறையை கதி என்றிருந்தாலும், மருமகள் அதீத கடவுள் பக்தி கொண்டவள். கம்பனியில் நடக்கும் பிரச்சினையால் எங்கே மகனுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பூஜை செய்கிறாள் என்று எண்ணினாளே ஒழிய சுப்பு லட்சுமி கொடுத்த சாபத்தை எண்ணி மருகுவதாக நினைக்கவில்லை.

மருமகள் வீட்டை விட்டு செல்லும் அளவுக்கு மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் என்ன பிரச்சினை நடந்தது சாந்தி தேவிக்கு புரியவில்லை. மகனிடம் கேட்டுப் பார்த்தும் பதிலில்லை. மகன் மருமகளை தேடிக் கொண்டிருக்கின்றான் என்றமையால் பேரக் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை சாந்தி தேவி ஏற்றுக் கொண்டிருந்தாள்.

குழந்தைகள் வளர்ந்தும் மருமகள் வீடு வந்த பாடில்லை. மகன் தேடுவதை நிறுத்தவுமில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறிந்துகொள்ளவே இவ்வாறு பேசி வைக்கிறாள் சாந்தி தேவி.

“என்ன இவ என் போன எடுக்காம இருக்கா?”  மோகனா அலைபேசி அழைப்பை ஏற்காததால் சாந்தி தேவி அலைபேசியை முறைத்துக் கொண்டிருக்க,

“இதோ நான் வந்துட்டேன்” என்றவாறே உள்ளே நுழைந்தாள் மோகனா.

“நீ சொல்லாம கொள்ளாம வந்த பஞ்சாயத்து தான் ஓடுது” முகத்தை திருப்பினாள் அப்பத்தா.

சாந்தி தேவியை கட்டிக் கொண்டு மோகனா செல்லம் கொஞ்சியவாறே “படிப்பு முடிஞ்சிருச்சு. அதான் வந்தேன். பேசாம நான் அங்கேயே வேல பார்த்திருக்கணுமோ? ம்ம்ம்ம்ம்…. ஒரு வெள்ளைக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணி அங்கேயே செட்டிலாகி இருக்கணும்.

அப்போ என்ன பார்க்க முடியலையே. கொள்ளுப் பேரப்பசங்களை பார்க்க முடியலையே என்று அழுது கரைஞ்சிருப்ப. உனக்குத்தான் பிளைட்டுல போறதென்றா எமன் கூட போறது போல என்று சொல்லுவியே. என்ன நான் இப்போவே கிளம்பவா?” செல்லமாக மிரட்டினாள்.

“நான் ஒன்னும் சொல்லையே உங்கப்பாதான் குதிக்கிறான்”

அங்கே ஆளவந்தான் என்ற ஒரு மனிதன் இருக்கிறான் என்பதை கண்டு கொள்ளாமல் “அவருக்குத்தான் கால் நீளமா இருக்கே அவர் குதிக்கட்டும். எனக்கு பசிக்குது” “அப்பா” என்று அழைக்காமல். “அவர்” என்று அந்நியப்படுத்தியவாறே சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.

பாசமே காட்டாத தந்தை என்ற ஒருவரை பார்த்திருக்கின்றாள். அருகில் செல்ல கூட அஞ்சியவாறு அப்பத்தாவின் முந்தானையில் தொங்கியவாறே அப்பாவை பார்ப்பவள் அருகில் வந்தாள் அலறுவாள்.

மனைவி விட்டுச் சென்ற கவலையில் இருந்த ஆளவந்தானுக்கு பெற்ற மகள் தன்னை பார்த்து அலறுகின்றாளே என்று தூக்கிக் கொஞ்சவோ, சமாதானம் செய்யும் மனநிலையில் இல்லாமல் இருக்க, தந்தையை விட்டு மனதளவில் தூரமானவள், எது கேட்டாலும், அப்பத்தாவிடம். எது பேசினாலும் அண்ணனிடம் என்று தந்தையை ஒதுக்கி வைக்கலானாள் மோகனா.

ஒரு வயதும் சில மாதங்களுமான நிலையில் அன்னை விட்டுச் சென்றாள். இன்றுவரை அன்னையை புகைப்படத்தில் மட்டும் பார்ப்பவள். அன்னை விட்டுச் சென்றதற்கான காரணத்தைக் அண்ணனிடமும், அப்பத்தாவிடமும் கேட்டுப் பார்த்தும் பதில் கிடைக்கவில்லையென்று தந்தையிடம் போய் நிற்கவில்லை. ஒரு தடவை அன்னை விட்டுச் செல்ல காரணமே தந்தை தான் என்று சாந்தி தேவி உளறியிருக்க, ஏற்கனவே ஆளவந்தாரின் மேல் கோபமாக இருந்தவள், வெறுப்பையும் வளர்த்துக் கொண்டாள்.

தந்தையை வெறுப்பேத்த எது வேண்டுமானாலும் செய்யத் துணிபவள் மோகனா. கிளப்புக்கு சென்று மினி ட்ரெஸ்ஸில் டான்ஸ் ஆடி போட்டோ எடுத்துக் போடலாமா? இல்ல பாருக்கு சென்று சரக்கடிச்சி மட்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் பஞ்சாயத்துப் பண்ணி இந்தாள் மானத்த வாங்கலாமா? என்றெல்லாம் யோசிப்பவள் அவ்வாறு செய்தால் சாந்தி தேவி கவலை கொள்வாளே என்ற ஒரே காரணத்துக்காக அவ்வாறு செய்யவில்லை.

ஆளவந்தான் எது “செய்” என்கின்றானோ அதை செய்ய மாட்டாள்.  இதை செய்யாதே என்றால் உடனே செய்து விடுவாள் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வந்தது மாத்திரமன்றி, வீட்டுக்கு வராமல்  அண்ணனை காணச் சென்றால் தந்தை கோபப்படுவார் என்றறிந்தே விக்ரமின் கம்பனிக்கு சென்றாள். விக்ரமின் கம்பனிக்கு சென்றது ரகுராமை பார்க்க என்பது அவள் மனமறிந்து ரகசியம். 

“பாட்டி நான் அண்ணன் கம்பனியிலேயே வேலை செய்யலாம் என்று முடிவு பண்ணிட்டேன்” ஊருக்கு வரும் முன்னே எடுத்த முடிவு தான். இப்பொழுதுதான் தெரிவிக்கின்றாள்.

“அதெல்லாம் முடியாது நீ நம்ம கம்பனியில் தான் வேலை பார்க்கணும். அவன்தான் பொறுப்பில்லாமல் இருக்கான்னா, நீயும் சொல் பேச்சு கேட்காம ஆடுறியா?” ஆளவந்தானின் வார்த்தைகள் தடித்து வெளிவர

பட்டென்று எழுந்த மோகனா “நானும் அண்ணனைப் போல வீட்டை விட்டு போகணுமா பாட்டி?” குரலை உயர்த்தாமல் மிரட்டிய மோகனா தான் ஆளவந்தானின் மகள் என்று  நிரூபித்ததோடு ஆளவந்தானோடு பேச பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாக தெரிவித்து விட்டாள்.

“என்ன மிரட்டுற? பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டியா” ஆளவந்தான் கோபமாக,

“எதுக்கு இப்போ கத்துற?” மகனை அடக்கிய சாந்தி தேவி “நீ படிச்சதுக்கும் பாக்க போற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே” பேத்தியிடம் அமைதியாக கேட்டாள்.

ரகுராம் மாடல் துறையை தேர்ந்தெடுத்ததும், தானும் அதே துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று தந்தை சொன்னதை படிக்காமல் அவனுக்காக படித்தாள் மோகனா. அதை சொல்லத்தான் முடியுமா? சொன்னால் மட்டும் ரகுராமை திருமணம் செய்து வைத்து விடுவார்களா என்ன?

“இவர் சொன்னத என்னால படிக்க முடியாது. நான் எனக்கு என்ன விருப்பமோ அதைத்தான் படிச்சேன். அது என் அண்ணனுக்கு உதவும் என்ற உதவிடப் போறேன்” திமிராக பதில் சொன்னாள் மோகனா.  

“சாரி உன் விருப்பம். ஆனா கல்யாணமாகும் வரைக்கும் மட்டும்தான். அதற்குப் பிறகு உன் இஷ்டத்துக்கு ஆடாதே” பேத்தியின் மனதில் என்ன இருக்கிறது என்று அறியாமலேயே சம்மதம் தெரிவித்திருந்தாள் சாந்தி தேவி.

“அம்மா… என்னம்மா இது?”

“அமைதியாக இரு” மருமகள் சென்ற பின் மகன் இருந்த மனநிலையை பேத்திக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. ஒரு தந்தையாக ஆளவந்தான் மோகனாவிடம் அன்பை காட்டாமல், அவள் அன்பை பெற முடியாமல் தவிப்பது அன்னையான சாந்தி தேவிக்கு நன்கு புரியாத்தான் செய்தது, வளர்ந்த பிள்ளைகளை அதட்டி, கோபப்பட்டு பேசி காரியம் சாதிக்க முடியாது. அவர்களை அவர்களின் போக்கிலையே விட்டுப் பிடிக்க வேண்டும் என்று மகனிடம் அடிக்கடி கூறுவது தான். இன்றும் மகனை அடக்கியது விட்டுப் பிடிக்கலாம் என்பதினால் தான். 

ரகுராமை தான் திருமணம் செய்வேன் என்று மோகனா அடம்பிடிப்பாள் என்று அறிந்திருந்தால் ஆளவந்தான் அன்னை சொன்னதற்கு சம்மதம் சொல்லி இருக்கவே மாட்டான்.