அத்தியாயம் 4

என்னில் ஒரு

சடுகுடு சடுகுடு

காலை மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதக்களி

கதக்களி தூங்கும் போது

தொடர்கிறதே

அவள் இவள் என

எவள் எவள் என

மறைவினில் இருந்தவள்

குழப்புகிறாள்

அவளது முகம்

எவளையும் விட

அழகிலும் அழகென

உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல்

அவள் கலகம் செய்கிறாள்

யாரது யாரது

யாரது யாரது யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை

தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை

மூடிச் செல்வது

யாரது யாரது

யாரது யாரது

நெருங்காமல்

நெருங்கி வந்தது

விலகாமல் விலகி நிற்பது

வினையாக கேள்வி தந்தது

 தெளிவாக குழம்ப நினைப்பது

“என்ன ஒருநாளும் இல்லாம இன்னக்கி எழுந்ததுல இருந்தே என் கண் இமை ரெண்டும் மாறி மாறி துடிக்குது?” கண்ணை கசக்கிய ரகுராமுக்கு விக்ரம் சொன்னது ஞாபகத்தில் வந்தது. “ஐயையோ என்ன தேடி யாரு வரப்போறா?” உடல் சிலிர்த்தவன் விக்ரமை வசைபாடியவாறு குளிக்கச் சென்றான்.

குளித்து முடித்து வெளியே வந்த பின்னும் ரகுராமின் இமைகள் துடிப்பதை பார்த்து “நாசமா போறவன் சாபம் கொடுத்துட்டான். அவனுக்கு வந்தா எனக்கும் வரும் என்று சொன்னானே. முதல்ல நல்ல ஒரு கண் டாக்டரை பார்க்கணும்” விக்ரமை திட்டியவாறே கம்பனிக்கு சென்றான்.

புது விளம்பரத்திற்கான பேச்சு வார்த்தை தான் நடந்து கொண்டிருந்தது.

சாதாரண மாடல் என்றால் பணத்தை வாங்கிக் கொண்டு விளம்பரத்தில் நடித்துக் கொடுத்து விட்டு சென்றுவிடலாம். ஆனால் ரகுராம் V.A கம்பனியில் பங்குதாரர் என்பதால் எந்த மாதிரியான விளம்பரம் எடுக்க வேண்டும். எங்கே எடுக்கலாம், எந்த மாதிரி எடுக்கலாம். எந்த மாதிரியான ஆடை அணியலாம் என்று விக்ரமோடு கலந்தாலோசிப்பான்.

“எதுக்குடா என்ன இதுல இழுக்கிற? நீ டிசைட் பண்ணா நான் நடிச்சிக் கொடுக்கப் போறேன்”

“ஆமா உனக்கு பத்து பெர்செண்டேஜ் சேர்ஸ் கொடுத்து எதுக்கு இங்க உக்கார வச்சிருக்கேன் என்று நினைக்கிற?” விக்ரம் ரகுராமை முறைக்கலானான்.

தனக்கு இருக்கும் ஒரே நண்பனும், நம்பிக்கையான பாட்டனாரும் ரகுராம் மட்டும் தான். எந்த ஒரு விஷயத்தையும் அவனிடம் தான் கலந்தாலோசிப்பான். தன்னுடைய கருத்துக்களுக்கு ரகுராம் ஜால்றா தட்ட வேண்டும் என்று விக்ரம் எண்ணவில்லை. எதிர்க்கருத்து தெரிவித்தால் போதும் தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ளலாம் என்பது தான் விக்ரமின் எண்ணம்.

அது ரகுராமுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் விக்ரம் எடுக்கும் முடிவுகளில் இதுவரை அவன் எந்த தவறையும் கண்டதில்லை.

அதனால் விக்ரமை வெறுப்பேத்த “என் ஐடியாவ திருடத்தானே” என்று சத்தமாக சிரித்தான் ரகுராம்.

“ஆமா, ஆமா… களிமண்ணை வச்சி பான செய்யலாம்” ரகுராமன் மூளை களிமண் என்று சொல்லாமல் இவ்வாறு சொன்னான்.

“அடப்பாவி…” என்று நண்பனை முறைத்த ரகுராம் “ஆமா அத ஒரு களிமண் சொல்லுது” என்று பலிப்புக்காட்டினான்.

இருவரும் தனியாக இருந்தால் இவ்வாறான கேலி கிண்டல்கள் செய்வது வழக்கம் தான்.

இன்று விக்ரமை எவ்வாறு கிண்டல் செய்யலாமென்று எண்ணியவாறே உள்ளே வந்த ரகுராம் அங்கு பாரதியை பார்த்து புருவங்களை உயர்த்தினான்.

“ஹாய் பாரதி…” என்றவாறு ரகுராம் அமர்ந்து விட

“ஹாய் ராம்…” பாரதி கையை அசைத்து கூறியதோடு கண்களையும் சிமிட்டினாள். 

இதை பார்த்த விக்ரமுக்கு காதில் புகை வராத குறை தான்.

நேற்று ரகுராமோடு பாரதியை பேசவிடாமல் அனுப்பி வைத்தவன் வேலை பார்த்தவாறே அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

பாரதிக்கு இருமல் வந்தது. தண்ணீர் குடிக்க பாட்டிலை எடுத்தவள் தண்ணீர் காலியானதை பார்த்து பாடிலை வைத்து விட்டு வேலையை பார்கலானாள்.

அதை பார்த்து துடித்தது விக்ரம் தான். அவனது அறையில் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் ஊழியர்களுக்கு பொதுவான சலுகை தான். தண்ணீர் பாட்டிலை நிரப்ப வெளியே செல்ல வேண்டும் என்று பாரதி தண்ணீர் கூட அருந்தாமல் வேலை பார்ப்பது விக்ரமின் மனதை குத்திக்கிழிக்க, இரண்டு பிரெஷ் ஜூஸ் குவளைகளோடு அவளை அணுகியவன் ஒன்றை அவளிடம் நீட்டியவாறே வேலை எவ்வாறு நடைபெறுகிறது என்று கேட்டான்.

“தங்க யு மிஸ்டர் விக்ரம்” என்று அதை வாங்கிக் கொண்டவள் அவனுக்கு விவரிக்கலானாள்.

 “மிஸ்டர் விக்ரம்” என்று அவள் அழைத்தது வலித்தாலும் புன்னகைத்தான்.

நேற்று வேலை முடிந்து செல்லும் பொழுது அவளோடு ஏதாவது பேசலாமென்று என்னினால் அவளோ ராமைக் கண்டு அவனோடு வெளியே கிளம்பி சென்றிருந்தாள்.

அதற்குள் இருவரும் நண்பர்களாகி விட்டார்களா? என்று கோபத்தில் ரகுராமை அலைபேசியில் அழைத்தால் அவனோ இவனது அழைப்பை ஏற்கவே இல்லை. 

ரகுராம் வீடு வரும் வரையில் விக்ரமுக்கு இருப்பு கொள்ளவில்லை.

உள்ளே வந்த ரகுராமின் சட்டையை பிடிக்காத குறையாக நிறுத்தி “எங்கடா போன?” எனக் கேட்க,

“நான் எங்க போறேன், வரேன்னு இதுநாள் வரைக்கும் நீ கேட்டதே இல்லையே. இன்னைக்கு என்ன அதிசயமா கேக்குற? குடிச்சியா? சுயநினைவோடத்தான் இருக்குறியா? கனவேதும் கண்டியா? இல்ல கனவுல நடந்துக்கிட்டே பேசுறியா?” விக்ரமின் கன்னங்களை தன் இரு கை கொண்டு பிடித்து ஆட்டலானான்.

“டேய்… விடுடா… என் பாரதியோட உனக்கென்ன பேச்சு?”

“உன் பாரதியா? சீல் எங்க வச்ச? அவ கன்னத்துலையா? இல்ல…” தன் இதழ்களை சுண்டிவிட்டவாறே நண்பனை சீண்டினான்.

“ரகு… பாரதி விசயத்துல விளையாடாதே” கோபத்தின் உச்சத்தில் கத்தினான் விக்ரம்.

பாரதியின் மேல் எவ்வளவு காதல் இருந்தால் உயிர் நண்பன் என்றும் பாராமல் கோபப்படுகிறான் என்று ரகுராமால் புரிந்துகொள்ள முடிந்தது.

“எத்தனை நாள் அண்ணனும், தங்கச்சியும் சம்பந்தமில்லாம பேசி என்ன வெறுப்பேத்தியிருக்குறீங்க? நான் விளையாடினா கோபம் வருதா?” சிரித்தவாறே “பாரதி ஊருக்கு புதுசு இல்ல. அதான் எது எங்க இருக்கு கொஞ்சம் சொல்ல முடியுமான்னு கேட்டா. அண்ட்… கம்பனி பத்தின டவ்ட்ஸ்சும் கேட்டா” பாரதியிடம் என்ன பேசினானென்று விக்ரமிடம் கூற முடியாததால் இவ்வாறு சமாளித்தான்.

“அத அவ எதுக்கு உன்கிட்ட கேட்டா? என்கிட்ட கேட்க வேண்டியது தானே. உன்ன கூப்பிட்டா நீ கூட போய்டுவியா? என்கூட போக சொல்ல மாட்டியா? நீயே எனக்கு வில்லனா வந்துடுவ போலயே. நீயெல்லாம் நண்பன் என்று சொல்லாதே. அமைஞ்ச சந்தர்ப்பத்தை தட்டிப் பரிச்சிட்டியே” விக்ரம் ரகுராம் மீது வீசிய கோபமான வார்த்தைகளில் பாரதியின் மீதிருந்த காதல் மட்டும் அப்பட்டமாக தெறித்தது.

“நான் சொல்லாமலா இருப்பேன்… சொன்னேன் உன் கூட போறது கம்பட்டபல் இல்லனு சொன்னா”

“ஏனாம்? ஏனாம்?…” என்ற விக்ரமுக்கு காரணம் புரியவில்லை. ரகுராம் பேசும் முன் “டேய் அவ உன் பேன் என்று மட்டும் சொல்லாதே. கருமம்… கன்றாவி…”  வாந்தி வருவது போல் பாவலா செய்தான். 

“அட ஒருவேளை அப்படியும் இருக்கலாம்…” நண்பனை மேலும் வெறுப்பேற்ற “உன்ன பத்தி ஆபீஸ் ஸ்டாப் கிட்ட விசாரிச்சு இருப்பா. நீ ஒரு சிடுமூஞ்சி என்று சொல்லியிருப்பாங்க. அதான் அழகா, சிரிச்ச முகமா இருக்குற என் கிட்ட மட்டும் பேசுறா. நீ அவ முன்னாடி ஜாலியா பேசு. உன்ன பத்தின அபிப்ராயம் மாறுதானு பார்க்கலாம்” உசுப்பேத்தி விட்டு தூங்கப் சென்றான் ரகுராம்.

இதோ இன்றும் அவனை பார்த்ததும் “குட் மார்னிங் மிஸ்டர் விக்ரம்” என்றவள் ரகுராமை பார்த்ததும் “ஹாய் ராம்” என்று இனிமையாக புன்னகைத்தாள்.

ரகுராமிடம் உரிமையாக பேசுபவள் தன்னை மட்டும் ஏன் ஒதுக்கிறாள் என்று விக்ரமால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை அவளிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தான். 

இவன் யோசித்துக் கொண்டிருக்க “ஆமா பாரதி எதுக்காக மீட்டிங்க்ல உக்காந்து இருக்கா?” புரியாமல் விக்ரமை ஏறிட்டான் ரகுராம்.

“நாம எந்த மாதிரியான ஆட் எடுக்கிறோம் என்று மட்டும் கவனத்துல வைக்கிறோம். ஆனா ட்ரெஸ்ஸ பத்தி கவலை படுறதில்ல. ஒவ்வொரு க்ளைமேட்டுக்கு ஏத்தது போல டிரஸ் போடுறோம் இல்ல. அது போல ஆட்ல என்ன சேஞ்சஸ் கொண்டு வரலாம் என்று டிஸ்கஸ் பண்ணத்தான்”

அவளை அருகில் அமர்த்தி அவளை ரசிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரம் வேலையை காரணம் காட்டித்தானே அவளை வைத்துக்கொள்ள முடியும். அமைந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடுவானா?

“நாம இன்னும் எந்த மாதிரியான ஆட் எடுக்கிறோம் என்றே டிசைட் பண்ணல. அதுக்குள்ள காஸ்டியூம் பத்தி பேசணுமா” ரகுராம் தன் சந்தேகத்தை தான் கேட்டான்.

“என்ன இவன் என்ன பாரதிகிட்ட நெருங்க விடமாட்டான் போலயே” என்று ரகுராம் மீது எரிச்சலடைந்த விக்ரம். “ஒரு களிமண்ணை வச்சிக்கிட்டு இத்தனை நாளா வேலை பார்த்தேன் பாரதியாச்சும் எனக்கு உருப்படியான ஐடியா கொடுப்பாங்க என்ற நம்பிக்கைல தான் உக்கார வச்சிருக்கேன்” என்று ரகுராமை முறைக்கலானான்.

நண்பனின் சிறுபிள்ளைதனமான கோபம் ரகுராமுக்கு குபீர் சிரிப்பை வர வைத்திருந்தது.

விக்ரமின் பேச்சு ரகுராமுக்கு மட்டுமல்ல, பாரதியின் முகத்திலும் புன்னகையை தோற்றுவித்திருந்தது. எப்பொழுதும் இவர்கள் இவ்வாறுதான் பேசிக்கொள்வதாக எண்ணியவளின் நினைவுகளில் கடந்த காலம் நிழலாய் ஓடிமறைய, அவள் முகத்திலிருந்த புன்னகை எங்கேயோ மறைந்து போனது.

நொடிக்கொரு தடவை அவள் மீது பார்வையை வீசிக் கொண்டிருந்த விக்ரம் அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்தான்.

“என்னாச்சு இவளுக்கு” என்று அவளை பார்த்தவன் “வேலை நேரத்தில் அனாவசியமாக சிரிக்கக் கூடாது என்று நினைக்கிறாளோ” என்று அவனாகவே நினைத்தவன் “ஓகே வேலையை பார்க்கலாம்” என்றான்.

“இவன் என் விக்ரமல்ல. பக்கா பிஸினெஸ்மேன்” பெருமூச்சோடு அவன் சொல்வதை கவனிக்கலானாள் பாரதி.

பேச்சு வார்த்தையை முடித்து கொண்டு அனைவரும் வெளியே வர விக்ரமின் பி.ஏ வந்து “சார் நீங்க சொன்ன வேலைய முடிச்சிட்டேன்” இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமா? என்பது போல் நின்றான்.

“எனக்குத் தெரியாம என்ன வேல?” புரியாமல் முழித்தான் ரகுராம்.

“ஏன் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்யணுமா?” ரகுராமை முறைத்தவாறே கூற, பாரதி பார்த்த பார்வையில் “எல்லாம் என் ஸ்டாப்புக்காகத்தான். அவங்க நால்லா இருந்தா தானே கம்பனி முன்னேறும். வாட்டர் பில்டர் தூரமா இருக்குறதால தண்ணி குடிக்கக் கூட நேரமில்லாம வேலை பாக்குறாங்க. அதான் எல்லா இடத்துலயும் வாட்டர் பில்டர் வைக்க சொன்னேன்” இன்முகமாக கூறினான் விக்ரம்.

விக்ரம் எல்லா ஸ்டாப்புக்கும் என்று கூறினாலும், அவன் பார்வை முழுவதும் பாரதியின் மேல் இருக்கவே அவன் யாருக்காக இதை செய்திருப்பான் என்று புரிந்து போக, பாரதியின் கண் மறைவில் பெருவிரல்களை தூக்கி நண்பனுக்கு வாழ்த்துக்கள் சொன்னான் ரகுராம்.

விக்ரம் அவளை கண்காணித்தது அவளுக்குத்தான் தெரியாதே. அங்கே என்ன நடக்கிறது என்று முழித்தவள் பாரதி மட்டும் தான்.   

“வா பாரதி வாட்டர் பில்டர் சரியான இடத்துல இருக்கா, நல்லா தண்ணி வருதா என்று பார்க்கலாம்” என்று அழைத்தான் ரகுராம். 

“டேய் வாட்டர் பில்டர் வச்சது நான்டா. நீ ஸ்கோர் பண்ணுறியா?” ரகுராமை வெளிப்படையாகவே முறைத்தான் விக்ரம்,

விக்ரமின் முகத்தை பார்க்கையில் ரகுராமுக்கு சிரிப்பாக இருந்தது. பாரதியை விக்ரமோடு போகச் சொன்னாலோ, பாரதியை அழைத்து செல்லுமாறு விக்ரமிடம் கூறினாலோ, விக்ரமையும் தன்னையும் கோர்த்து விட தான் முயற்சிப்பதாக பாரதி சந்தேகம் கொள்வாளென்று தான் அப்படி கூறியிருந்தான்.

இனி நண்பன் பார்த்துக் கொள்வானென்று “ஐயோ… ஷூட்டிங்கு டைம் ஆச்சு” இருவரினதும் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நழுவினான் ரகுராம்.

“அவன் கெடக்குறான். வாங்க பாரதி நான் காட்டுறேன்” என்று பாரதியை அழைத்துச் சென்றான் விக்ரம்.

“வாட்டர் பில்டர் என்ன மியூசியமாடா?” வாய்க்குள்ளையே அவனை வசைபாடியவாறு அவனோடு சென்றாள் பாரதி.

அவளது அறைக்கு வந்த விக்ரம் வாட்டர் பில்டரை பற்றி பேசாமல் “உங்களுக்கு காபி இல்ல டீ சாப்பிடணும் போல இருந்தா இங்கயே போட்டுக்கலாம். டயடா இருக்கு கொஞ்சம் நேரம் தூங்கணும் போல இருந்தா, அதோ அந்த ரூம்ல ரெஸ்ட் எடுக்கலாம். சாப்பிடணும் போல இருந்தா என்கிட்ட சொல்லுங்க என்னவேனாலும் உங்க ரூமுக்கே வரவைக்கிறேன்” என்று புன்னகைத்தான்.

தண்ணீர் அருந்தாமல் வேலை பார்க்கின்றாளே என்று கவலை கொண்டவன் அவளுக்கு என்னென்ன தேவைகள் ஏற்படும்? அவளை சௌகரியமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரே நாளில் செய்து விட்டான்.

வேலைபார்ப்பவர்கள் நீர் அருந்த எல்லா இடத்திலையும் வாட்டர் பில்டர் வைத்தது கூட கண்துடைப்புதான். பாரதிக்கு மட்டும் பார்த்துப் பார்த்து செய்தால் அவள் தன்னை தவறாக எண்ணி விடக் கூடும். அது மட்டுமா? கம்பனியில் வீணான வதந்தி கூட பரவ நேரிடும் என்று எண்ணி எல்லா இடங்களிலும் வாட்டர் பில்டர் வைத்தவன் பாரதிக்கு மட்டும், அவளுக்காக வேண்டியே சில ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தான்.

“என்ன இவன் ஓவரா அக்கறைப்படுறான்” என்று அவனை கூர்ந்து பார்த்த பாரதி விக்ரமின் முகத்தில் இருந்த விரிந்த புன்னகையை பார்த்து “என்னமா வலை விரிக்கிறான். இதுக்கெல்லாம் நான் மயங்குவேனா?” என்று நினைத்தவள் “உங்க கம்பனில வேல பார்க்க வந்தேன் மிஸ்டர் விக்ரம். சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்க இல்ல” கோபமாக கூறினாள்.   

“நான் இவளுக்கு நல்லது தானே பண்ணேன். இவள் மீது எனக்கிருக்கும் அன்பை இப்படி தெரிவித்தால் கோபப்படுகிறாளே. இவள் மீதிருக்கும் என் அன்பை எவ்வாறு புரியவைப்பது” பாவமாய் முகத்தை வைத்தவாறு வெளியேறினான் விக்ரம்.

அவன் சோர்ந்த முகம் கண்டு பாரதிதான் உள்ளம் கூட சுருங்கத்தான் செய்தது. ஆனால் அவள் கோபம் அவன் மீது அனுதாப்படவிடவில்லை.

நிலவை உரசும் மேகம்

அந்த நிலவை நினைத்தே

உருகாதா

உயிரை பருகும் காதல்

அது ஒரு நாள் உனையும்

பருகாதா

நீ முடிந்த பூவில் ஒரு இதழாய்

வாழ்ந்து விட்டு போவதற்கு

நினைத்தேன்

நீ நடந்த மண்ணெடுத்து சிலநாள்

சந்தனத்தின் வாசம் அதில்

நுகர்ந்தேன்

நிழல் தீண்டும் போதிலும்

மனதோடு வேர்க்கிறேன்

காதல் என்ன

கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம்

பூச்சி கூட்டமா

கண்ணுக்குள்

பாரம்மா நீயின்றி

யாரம்மா

கோவங்கள்

இன்னும் இங்கு

ஏனம்மா

“டேய் புதுசா ஒரு பொண்ணு விக்ரம் கூட வேலை பார்க்க வந்திருக்கா. அவனுக்கு அவளை ஏற்கனவே தெரிஞ்சிருக்கு போல. பக்கத்து வீட்டுலையே குடி வச்சிருக்கான்” ஆளவந்தானிடம் ஓடாத குறையாக வந்து நின்ற சாந்தி தேவி கூறினாள்.

 “விக்ரமோட டைவர் சொன்னாரா. என்ன வேவு பார்க்காதேன்னு சொல்லிட்டு. நீ அவன் டைவரை விட்டு வேவு பாக்குறியா? உன்ன என்னனு சொல்ல” அன்னையை முறைத்தான் ஆளவந்தான்.

“இவன் ஒருத்தன் எப்போ பார்த்தாலும் என்ன திட்டிகிட்டு. நான் ஒன்னும் அவனை வேவு பார்க்கல. டைவர் நமக்கு விசுவாசமான இருக்கோணும் என்று விக்ரம பத்தி தகவல் சொல்வான். அவ்வளவு தான்” மகனிடம் மாட்டிக் கொண்ட பின்னும் சமாளித்தாள்.

சாந்தி தேவியை போலவே ஆளவந்தானும் விக்ரமுக்கு எப்படியாவது திருமணம் நிகழ்ந்தால் போதும் என்று நினைப்பதால் மேற்கொண்டு அன்னையோடு வாதிடாமல் “விக்ரம் இல்லனா அந்த ரகுராம் தான் வீடு கூட பார்த்துக் கொடுத்திருப்பான்னு எனக்குத் தோணுது”

ஆளவந்தான் முடிக்கவில்லை. விக்ரம் விரும்பும் பெண் பாரதி தான் என்று முடிவே செய்து விட்டாள் சாந்தி தேவி.

“அப்ப வா நாம உடனே போய் பொண்ண பார்க்கலாம். உடனே அவங்க குடும்பத்தாரோடு கலந்தாலோசிச்சு கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம்” குதூகலத்தில் வாசல்வரை சென்று காலனியை அணியலானாள்.

அன்னையின் பின்னால் ஓடி வந்த ஆளவந்தான் “நான் இன்னும் பேசி முடிக்கல. அந்த பொண்ணு தனியாகத்தான் தங்கி இருக்கா. அவ குடும்பம் எங்க இருக்காங்க என்று தெரியல. அந்த பொண்ணு விக்ரம் ஆபீஸ்ல வேல பாக்க வந்த பொண்ணு. தெரிஞ்ச பொண்ணா இருப்பான்னு மட்டும் தான் சொன்னேன். மத்தபடி அவங்களுக்குள்ள என்ன உறவு இருக்கு என்று எனக்குத் தெரியாது. அவன் சொன்னாதான் உண்டு. கொஞ்சம் அவசரப்படாம, அடங்கி இருங்க”

மகன் அவசரக்குடுக்க என்று சொல்லாமல் சொன்னதும் “நீ ஒரு வேஸ்ட்டு. பையனுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணாத தெரியல. துப்புக்கெட்ட பய” மகனை சாட ஆரம்பித்தாள்.

“ஆமா… என்ன போல என் பையன் இருப்பான்னு நினைச்சியா? நீ சொன்ன உடனே நான் யோசிக்காம நீ பார்த்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவ அம்போன்னு விட்டுட்டு போய்ட்டா. அவனாச்சும் அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கட்டும்” கோபத்தில் சீறினான் ஆளவந்தான்.

தான் எடுத்த முடிவு தவறானது என்றதும் சாந்தி தேவியின் தன்மானம் சீண்டப்பட்டு “நீ வரிசையா விக்ரமுக்கு பொண்ணு பார்த்து அவன் ஆபீசுக்கே அனுப்புறது எனக்குத் தெரியாது என்று நினைச்சியா? அவனே பார்த்துப்பான்னா எதுக்கு நீ அனுப்புற?” சாந்தி தேவியும் பதிலுக்கு எகிறினாள்.

“ஆத்தா…. காளியாத்தா… இனிமே அனுப்பல” கையெடுத்து கும்பிட்டான்.

“சே… சே… இனிமே தான் அனுப்பனும். வாரத்துக்கு ரெண்டு பொண்ணு அனுப்பு. அப்போவாச்சும் விக்ரம் மனம் திறப்பானான்னு பார்க்கலாம்” தந்திரமாக திட்டம் தீட்டலானாள் சாந்தி தேவி.

அன்னை கூறியதை யோசித்தவனாக “விக்ரமுக்கு கல்யாணம் பண்ண கையோட மோகனாவுக்கு வேற பார்க்கணும். அதுவரைக்கும் அவ எங்க ஆபீஸ்ல என் கூட வந்து வேல பார்க்கட்டும்” என்றான் ஆளவந்தான்,

“ஆமா விக்ரம் தான் நம்ம குடும்ப பிஸினஸ பார்க்க மாட்டேன்னு சொல்லுறான். அவளாச்சும் பார்க்கட்டும்” என்றாள் சாந்தி தேவி.

விக்ரம் இவர்களின் இரத்த கொதிப்பை எகிற வைப்பது பத்தாதென்று மோகனா வேறு பதட்டத்தை கொடுக்க, கிளம்பி வந்திருந்தாள்.